Sunday, January 30, 2011

தமிழக மீனவர்கள்-சிங்களப்படைத்தாக்குதல் :

தமிழக மீனவர்கள்-சிங்களப்படைத்தாக்குதல் : புரிதலும்,உரிமைகளும்!

நாம் பிரதிகளது தன்னிலைகள் குறித்தும், அதன்மீதான சுயதம்பட்டச் சீரலைச் சிதறல்களிலும் மாட்டுண்டுபோனோம்!உயிர்நிலைக் களன்களில் குதறப்படும் ஏதோவொருகணம் நோக்கிய தன்னிலைக் கோரல்களிலும் எந்தத் தோதானவொரு பொருத்தப்பாடுடைய தேடுதலைத்தானும் பகிர்ந்துகொள்ளத்தானும் எவருக்குமே துப்பில்லை.இருந்தும், பெருங்கதையாடற் புலமையும்,அதன் உள்ளார்ந்த நுட்பநோக்கும் பெருகக்பெற்றதான சுய புலம்பலே சினங்கொள்ளதக்கது.

மனித எச்சங்கள் மீது ஏறி நின்று, நோக்கப்படும் புதியதை நோக்கிய கட்டமைப்புகள் யாவுமே, வாழ்பவர்களக்கும் மண்ணோடு அள்ளுப்பட்டவருக்குமான தொடர்ந்த போராட்டமாகவே நிலைகொள்ளும் புதிய பொருளாதார ஆர்வத்தின்மீதான பொருத்தப்பாட்டைச் சுட்டுவதற்கு மேலாக, இந்த மீனவர் பிரச்சனையானது சாதராணச் சராசரி மீன்பிடி உழைப்பவர்தம் வயிற்றுப்பாட்டுக்கும்,சம்மாட்டி வடிவமாகப் புரிந்து,உணரப்பட்ட பெரு தொழில் வணிகக் கட்டமைப்புடைய தொழில்முறை ஜந்திரப்படகு கட்டும் "பெரு" வணிகத்துக்குமான வர்க்க உழைப்பு நிலைக் களன்கள் பிரத்தியேகமாகவேனும் புரிந்துணரப்படுவேண்டும்.

சாதாரணத்துக்கும்,அசாதாரணத்துக்குமிடையிலான வித்தியாசங்களை இவர்களது உழைப்பின்மீதான"பலம்-பலவீனம்"என்பதை பொருள் வளம்-வறுமைப்பட்ட ஏழை மீனவர்கள் எனும் தளத்தில்வைத்து, அணுகுவதற்கானவொரு புள்ளியைச் சுட்டியிருக்கிறான் மயூரன்.இது பரவலாக உணரப்பட்டதாகினும் அதைப் பேசுவதற்கான சூழல் மறுக்கப்பட்டிருந்த தேசியவாதக் கோரிக்கைகளது தார்ப்பாரில் எல்லாம் பூச்சியமாகக்"கருவாடு கரைந்து ஆணத்துக்க"என வாசிக்கப்பட்டது.



இப்போது, இதன் ஆணிவேரைத் தொட முனைதல் வரவேற்கத் தக்கது.கடலுக்குச் செல்பவர்கள்மீதான அத்துமீறிய மறுப்பைக்கொண்டியக்கிய தமிழ்க் கொழும்புசார் வர்த்தகமானது இராணுவத்துக்குக் கப்பஞ்செலுத்தியபடி ஜப்பானிலிருந்து ரின் மீன் இறக்கிக்கொள்ளையடித்த தேசியவிடுதலைப்போர்ச் சூழலொன்றும் பலரால் புரிந்துகொள்ளப்பட்டதே.

பெரு வணிகமானது கப்பல் கட்டி,ஏழை மீனவனது வலையறுத்துக் கடற்கொள்ளையிடுவதைத்"தமிழ் மீனவன்"என்ற பொதுப் பதத்துள் உள்ளிழுத்து விவாதிக்கக் கூடியதாக மாற்றிய அரசியலையும் உடைத்துப்பார்க்க வேண்டும்.

எந்தத் துவித-துருவ எதிர்மறைகளிலுமேனும் இதைவைத்த சொற்பப் புரிதப்படானது குதறப்படும் நலிந்த-விளிம்பு நிலைகளை நோக்கிய பலம்தேடும்,பலமளிக்கும் வரைவுகளைத் தந்துவிடுவதான தேடுதலும்,ஒத்திசைவும் அந்தக் கோரிக்கைகளுக்குள் ஊசாலாடும் வயிற்றுத் தேவைமீதான அடிப்படை உரிமைப் பிரச்சனையாக ஏற்றுக்கொள்ளும் நிலையுள்,கொல்லப்படும் சாதரண தமிழ்நாட்டு மீன்பிடித் தொழிலாளியையும் இந்த அத்துமீறிய வர்த்தகக் காழ்புணர்ச்சி கொல்வதைத்தானும் தட்டிக் கழித்துவிட முடியுமா?

தென் கிழக்காசிய மீன் பிடித் தொழில்மீதான ஜந்திரப்படகு-ரோலர் வைத்துழைக்கும் பெரு மீன்பிடித்தொழிலுக்கும்,சிற்றுழைப்பு வடிவிலான மரபுசார் மீன்பிடித் தோணிக்குமான முரண்பாடுகள்,"வசதிபடைத்த அரசியற் செல்வாக்கு-மாபியாக் கட்டமைப்பு" என்ற தளங்களை அண்மித்துப் பார்க்காத எந்தத் தீர்ப்பும் சாதாரண மீன்பிடித் தொழிலாளிக்கு எதையும் விட்டுவைக்காது.

கடலில் சாகும் தமிழ்நாட்டு மீனவன்,பெரு வணிக-சம்மாட்டிக்குக் கீழ் பணிசெய்பவனாகினும் அந்தச் சாவைப் பெருவணிக ஆதிக்கத்துள் வைத்து அணுகுவதானது அத்தகைய நலிந்த உழைப்பாளியது இருப்பை மறுப்பதில் முடியும்.இந்தச் சிக்கலைப் புரிதலென்பது,இலங்கை-இந்தியக் கடல் எல்லை-உரிமைப் பிரச்சனையுள் வைத்து அரசியலாக்கஞ் செய்வதிலும் பார்க்க, மீன்பிடித் தொழிலுள் ஆதிக்கஞ் செய்யும் பெருவணிக-ரோலர்களது அத்துமீறிய கொள்ளை-மாபியாத் தனம் என வரைந்துகொண்டு,சாதாரண மீனவன் அதுள் தொழிலாளியாக-அடிமையாகப் பணிபுரியும் களத்தை அங்கீகரித்தால்"சாவு"சாதாரண-நலிந்த வர்க்கத்துக்கே நேர்கிறது.இதை மறுத்து ஒதுக்க எந்தத் துவித எதிர்மறைப்(சிங்கள இனவாதம்-தமிழன் இத்தயாதி புரிதல்வகையறா) புரிதலும் கைகொடுக்காது.

சம்மாட்டிகளதும்,அவர்களது எல்லைகடந்த வணிக வட்டத்தினதும்கடல்வளக் கொள்ளைக்கும்,சாதரணக் கரையோர மக்களது அடிப்படை உழைப்பின்மீதான ஆதிக்கத்துக்கும் இடையிலுள்ள இந்தச் சிக்கலானது, சிங்களக் கடற்படையினது மரபுசார்ந்த புரிதலுள்(பங்கு-கமிசன்)ஏற்படும் சிக்கலெனவும் விரிவதை எவரும் புரிந்திருக்க முடியுமாவெனவும் சந்தேகமே!

எனவே,தமிழக மீனவர்களது கொலைகளது அரசியலூக்கம் வெறும் இனவாரியான புரிதலையுந்தாண்டி வர்த்தக நலன்கள்-உழைப்புச் சந்தை,எனவிரியும் முனைகளில் புரிந்துணரப்பட்டுத் தீர்க்க வேண்டிய தேவையைப் பரந்துபட்ட மக்கள் தாம்சார் வலயத்துள் முன்மாதிரியாக அணுகுவதென்பது, அரசியல் கட்சிகளை விலத்திவைத்துப் பெருவணிகத்தின் மாபியாத் தனங்களைப் புரியந்தருணங்களே.அங்ஙனம் செயற்படும்போது இதுள் அரசுக்கும் பெருவணிக-சம்மாட்டி முறைகளுக்கும் உள்ள நீண்ட தொடர்புகள் அந்நியப்படுத்தப்பட்டுப் புரிய வாய்புகளுண்டு.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
30.01.11

Friday, January 28, 2011

பெற்றோலிய டொலர்க் கொள்ளை!

துனிசியா,எகிப்த்து: இன்னும்பல தேசத் தலைகள் உருளும்!

ரபு தேசங்களில் நடப்பது மக்கள் புரட்சியின் பெயரால் பெற்றோலிய டொலர்க் கொள்ளை!இப்படி ஒரே வார்த்தையில் போட்டுடைக்கும் தீர்ப்புக்கு,விரிவாக எழுதப்படும் ஒரு நீண்ட புலம்பாதிக்கக் குஞ்சம், சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தனது துணிவுகொண்டு...

இந்த உலகம் மிகக் கெடுதியாவும்,சடுதியாகவும் கருத்தைப் புனைவதில்லை!அது மிகத் தந்திரமாக புரட்சி,ஜனநாயகம்-நல்ல வேஷமிட்டு,மக்களைக் காப்பதாகவும்,அவர்களின் நலனில் அக்கறையுள்ளதாகவுமே கருத்துக்களைக் கொட்டுகிறார்கள்.இலக்கியம்,புனரமைப்பு,அபிவிருத்தியென்றெல்லாம் "சந்திப்புகள்"படு அமர்க்களமாக மாதந்தோறும் அரங்கேறுகிறது.

இலக்கியத்துக்கான நிகழ்வுகள்,உலகப் புகழ்பூத்த எழுத்தாளர்களது தயவோடு நடக்கின்றன.

எழுத்தின் மீதான பார்வைகள் மக்களுக்கான விடுதலை-ஜனநாயமெனும் மொழியாடல்களதுவழியிலேயே உருவகப்படுத்தப்படுகின்றன.

ஆக்க இலக்கியமென்பதை மனிதவாழ்வின் இரண்டாவது இயற்கையெனச் சொல்லப்பட்டபின் அதன் வர்க்கச்சாரம் புரியப்படலானது.நிலைத்திருக்கும் எழுத்து முனைப்புக்குள் நிறுவனப்பட்டியங்கும் அதிகாரங்கள்,அதுசார்ந்த கருத்தியற் பேணுகை உடைப்பட்டுப் புரிந்தும் போனது.எப்போதும்போலவே இந்தப் புரிதலிலும் ஒரு எல்லையிடப்பட்டது.கலைவடிவங்கள் கலையெனப்பேணப்பட்ட இயக்கப்போக்கின் விருத்தி மிக நேர்த்தியான கதைசொல்லிகளை வளர்த்தெடுத்திருந்தபோது அந்தக் கதைசொல்லிகள் பண்டமாக மாற்றப்பட்டபோது மிக முன்னேறிய தேசத்து இலக்கியவாதிகள் எல்லோருஞ் சந்தைப்படுத்தப்பட்டார்கள்.அவர்களே,இப்போது மக்கள் அனைவருக்குமான குரலுமாக ஒலிக்கத் தொடங்கினர்.அதிகாரம் இவர்களை ஊடகமாக்கியபின் படைப்பிலக்கியத்தின் போலித்தனம் அருவருக்கத் தக்கதாகியது.அது,மார்ட்டின் வல்சரையோ அல்லது குன்ரர் கிரசையோ மேல் நோக்கிய மனிதர்கள் என்பதை ஒரு நொடியில் நொருக்கி எறிந்துபோடுகிறது.



என்றபோதும்,எத்தனையோ படைப்பாளிகளை அவர்களது மனித நோக்குக்காக நாம் மதிக்கிறோம்.அவர்கள் தாம் வாழும் உலகத்தில் கால்பதித்துச் சிறந்தபடைப்புகளைச் சொல்லியிருக்கிறார்கள்.அவர்களில் எனக்கு அதிகமாகப் பிடித்தவர்கள் டோல்ராய் (Tolstoi: Anna Karenina)அனா கறினினா,டோஸ்ரோஜேவிஸ்க்கி (Dostojewskij: Der Idiot)முட்டாள்,மற்றும்அலெக்ஸ்சாண்டர் புஷ்கின் (Alexander S.Puschkin:Erzaelungen) கதைகள்.இத்தகைய படைப்பாளிகளுக்கு நிகராக எழுதிவந்தவர் அல்பேர்ட் காம்யு(Albert Camus:Die Pest,Der Mythos des Sisyphos,Der Fremde...).

"மீண்டு வரும் பொழுதொன்றில்
பொய் முகம் முறித்தெறியும்
தெருவொன்று துன்பத்துள்
திருப்பத்தில் எகிறும் எலும்புத் துண்டம்

மொய்த்திருக்கும் இலையான்களின்
குருதி நினைந்த கால்களில்
இந்த மிருகத்தின் தடமொன்று சிக்கியது
எரிந்த சாம்பலையும் அவை விட்டபாடில்லை!

கனத்த மிதப்பொன்றில்
கடுகுகளுக்குக் கால் முளைத்து
வளத்தின்மீதான பெரு விருப்பாய்
வன் பொழுதொன்றில் வர்ணமிடும் பொழிவுகள்
அமெரிக்க மாமாக்களின் நா நுனியில்."

இவர்களது தடத்தைப் புரியமுனையும்போது சாதாரணமான பரிசீலனைக்குப் போவதென்பது ஆகக் குறைந்த புரிதலென்பதையுந்தாண்டி என்ன-ஏதாகிறது எழுத்தெனுங் கேள்விக்கு விடைதேடுவதாக மாறகிறதெனக்கொண்டு மேலுள்ள வரிகளை எழுதிப் பார்த்தால் உடனே அமெரிக்கா வருகிறது.

என்னவெனச் சொல்!நீ,சொல்லமாட்டாய்.சொல்வதில்-புரிவதில் சிக்கல் இல்லை!வர்க்க உணர்வில்த்தாம் சிக்கல்.எனக்குப் புரிந்ததைச் சொல்வதில் சிக்கலெழ முடியவில்லை.என் வர்க்கவுணர்வானது எனது வாழ்நிலையால் தீர்மானிக்கப்பட்டது.


சரி.அப்படியே இருக்கட்டும்!

இங்கே, சமூகவுணர்வென்பது ஆன்மீக வாழ்க்கையில் செயற்படுகின்ற அமைப்புதானே?

சமூகவுணர்வுக்கும் தனிப்பட்டவுணர்க்கும் இடைப்பட்ட செயல்,சமூகப் பிரிவுகளுக்கும் வர்க்கங்களுக்கும் இடையில் சித்தாந்தப் போராட்டம்.கருத்துக்கள்,சிந்தனைகள்,தத்துவங்களின் பரிவர்த்தனை,அவற்றின் தோற்றம்,வளர்ச்சி,பெருந்திராளான மக்களின் மீது அது தாக்கஞ் செய்யும்.இவைகள்தானே நாம் உணரும் சமூக உணர்வு?

கொஞ்சம் அண்மிக்கிறேனா? சரி!


அல்ஜீரியனான Camus தன் "கொள்ளை நோய்"என்ற நாவூலாடாக முகமின்றி அலைகிறானே!அப்படியொரு அலைச்சல் எனக்கும் உருவாகிறது.அல்ஜீரியனாகவும் அல்லாமல் பிரஞ்சுக்காரனாகவுமல்லாமல் மனிதானக இருக்க முடியாது, அடையாளம் எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது.

இவ்வளவும் எதற்கு?:

மாறிவரும் அரேபிய உலகின் சமீபத்திய போராட்டம் என்ன?துனிசியாவினதும்,அதைத் தொடர்ந்து ஜெமேன்,எகிப்த்துவெனத் தொடரும்"ஜனநாயகபத்தியத்தின்" [democratic imperialism]போராட்டம் எதுவரை?இதற்கும்[ Global Revolution(...) ]மரபுசார்ந்த மக்கள் போராட்டத்துக்கும்[Revolution] எந்தவழிகளில் மாறுபாடுகள் இருக்கிறது?அல்லது இது மக்கள் போராட்டமாகிறதா?வர்க்கப் போராட்டத்துள் எந்த வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றும்?உழைப்பாளர்களது அதிகாரத்தை இங்கே எதிர்வுகூறமுடியுமா?

பரவலாக துனிசியாவிலோ ,எகிப்திலோ எந்தவொரு பகுதியிலும் ஆண்களே போராட்டத்துள் அதிகமாக ஈடுபடுவதும் இந்தத்திசையில் அரேபிய பெண்களது பாத்திரம் என்ன?மக்கள் போராட்டத்துள் பெண்ணின் பாத்திரம் புறகணிக்கப்பாட்டதொரு சூழலை நினைத்தே பார்க்க முடியாதிருக்கும்.ஆனால்,அரேபிய தேசத்தில் அதுவே உண்மையாகிறது.

தொடர்ந்து சமூகவுணர்வு-சமூகவாழ்வே உணர்வைத் தீர்மானிப்பதென்ற வாய்ப்பாடுகளைத்தாண்டி இந்த அரேபிய உலகத்தை உற்று நோக்கும்போது அவர்களது சமூகப் போராட்டத்தைப் புரிவதில் பலசிக்கல்கள் இருந்தன.நேற்றுவரை இதுவே எனக்குள்ள பிரச்சனையாக இருந்தது.இதை மேற்குலகங்கள் கூறுவதுபோன்று மக்கள் போராட்டமெனக்கொள்வதில் எனக்குச் சிக்கல்கள் இருக்கிறது.கிழக்கு ஐரோப்பியச்"சோசலிசச் சரிவு" போன்று இதுவும் அரோபியச் சர்வதிகாரிகளது சரிவு எனச் சொல்லும் மேற்குலகச் சிந்தனையாளர்களைத் தொடர்ந்து செல்ல முடியவில்லை!அவர்கள் தேசத்து அரசுகளும்,தலைவர்களும் போராடும் அரேபிய மக்களது போராட்டத்து ஆதரவு தெரிவிக்கின்றனர்.மக்களது போராட்டம் எனவும் பேரிகை கொட்டுவதில் அமெரிக்க வெளிவிவகார மந்திரியும்,அஞ்கேலா மேர்கலும்(ஜேர்மனிய அதிபர்) முந்திக்கொள்கின்றனர்.கூடவே,அரேபியத் தேசத்துச் சர்வதிகாரிகளுக்குக் கோரிக்கையும்விட்டு,"அமைதிவழிப் போராட்டத்துக்குக் குறுக்கே நிற்கவேண்டாம்"என ஆலோசனைகளும் வழங்கியுள்ளனர்.

எகித்துக்கு எதிர்க்கட்சித் தலைவராக அறிமுகமாகும் எல் பாறடாய் [Mohamed ElBaradei]அணுக் கண்காணிப்புக்குழுவுக்குத் தலைவராகவிருந்து ஈரான் பற்றித் துப்புத் துலக்கி அமெரிக்காவுக்கு வக்காலத்துவேண்டிய கடந்தகாலம் என் கண்களில் பட்டுத் தெறிக்கிறது! இன்றைய அவரது வருகையில் எகித்தியப் போராட்டம்,துனிசியா போன்றவற்றின் தொடரில் அரேபிய மாபியாக்கள் பலரது தலைகள் மறைந்து போகலாம்-தத்தம் தேசங்களைவிட்டு ஓடலாம்.ஆனாலும் இது மக்களுக்கான,அவர்களது அதிகாரத்துக்கான போராட்டமாக எடுக்கமுடியுமா?-என்னால் முடியவில்லை!



துனிசியவை விட்டு வெளியேறிய அதன் தலைவர் பென் அலியை இதுவரை ஜனநாயகத் தலைவராகக் கொண்டாடிய மேர்குலகக் கட்சித் தலைவர்கள் இப்போது அவனை சர்வதிகாரியெனச் சொல்லியும்,எழுதியும் வருகிறார்கள்.பென் அலியின் வெளிநாட்டுச் சொத்துக்கள் மற்றும் வெளியலுக வங்கிக் கணக்கு-பணம் முடக்கப்படுகிறது.இதன் தொடராகச் சிலவற்றைக் குறித்துப் பேசமுடியும்.

1: அரேபிய உலகத்தில் நடப்பது மக்கள் போராட்டம் அல்ல,

2: இப்போராட்டத்தினது சூத்திரதாரிகள் ஏகாதிபத்திய உலகத்தவர்கள்,

3: அரேபிய உலகத்திலுள்ள தேசங்களது "அரசுகள்-தலைவர்கள்"கவிழும்போது அதன் இடத்தில் புதிய மேற்குலகச் சார்பு அரசுகளே மீளவும் வரமுடியும்,

4: தேசங்களைவிட்டுச் செல்லும் சர்வதிகாரிகளது வெளிநாட்டுச் சொத்துடமை-செல்வம்-முலதனம் முடகத்துக்குள் வந்துவிடும்.


ஓடுகின்ற அரோபியச் சர்வதிகாரிகள் ஏலவே "மக்கள் புரட்சிக்கு"தயாராகின்ற தேசங்கள்(சவுதி அரேபியா,குவைத்,கட்டார்) நோக்கியே ஓடுகின்றனர்.மேற்கில் அவர்களுக்கு இடமளிக்கப்படவில்லை.

வழமையாக உலகச்சர்வதிகாரிகளுக்கு உறைவிடமான அமெரிக்கா இதில் கடுகளவும் இடம்கொடுக்காது ஜனநாயக வேடங்கொண்டும் உள்ளது.இதன் அச்சொட்டான அரசியல் என்னவாக இருக்க முடியுமென்பதற்காக மேலே சொன்னவற்றை மீளச் சிந்திப்பதில் கவனமெடுத்தால் நிச்சியம் இந்தப் போராட்டத்தின் திசைவழியைப் புரிந்துகொள்ள முடியும்.

குறிப்பாக அரேபியத் தேசங்களது இன்றைய போராட்டமானது "சமூக இணையத் தொடர்பாடலது அழுத்தமான பங்களிப்புடனே"யேதாம் அரேபியத் தேசத்துள் "மக்கள் எழிச்சி" எழுந்துள்ளதாகவும்,ரிவிட்டர்,பேஷ்புக்-புளக்கர் போன்ற இணையவழி ஊடகங்களே இதைச் சாத்தியமாக்கப் பெரும் பங்கு செய்ததாகவும் பலர் குரலிட முனைகின்றனர்.மக்கள் எழிச்சிக்குள்ளாகும் சமூகப் புறநிலை எப்போதுமே இஸ்லாமிய மத அழுத்தங்களால் இல்லாதாக்கப்பட்டபோதும், அரேபியவுலகத்துள் சமூகவுணர்வானது வயிற்றுப்பாட்டின் வீச்சில் ஆவேசமாகும் என்பது ஏலவே அறியப்பட்டதே. இதை என் எகிப்தியப் பிரயாணங்களில் அதிகம் நேரடியாகக் கண்டும் இருக்கிறேன்.

இத்தாலிய மாபியாக்களது "மாபியாப் பொருளாதாரம்"உலக வணிகத்துள் நாற்பது வீதம் சுழல்கிறது என்கிறார் "மாபியா டொச்சுலாந்து"என்ற நூலின் ஆசிரியர் இயூர்கன் இரொத் .மேற்குலகில் வீழ்த்தப்படும் மாபியாக்களது இறுதியிடமானது அரேபிய-ஆசியக்கடற்கரைகளாக இருக்கின்றவென்பதை நான் சார்மல் சைக் நகரத்தில் கண்டேன்.அரேபிய-ஆசியக் கடற்கரைகளில் நிறுவப்படும் பல நட்ஷத்திர ஓட்டல்களும்,உல்லாசப் பிரயாணத்துறையையும் இந்த இத்தாலிய-உலக மாப்பியாக்களே கைப்பற்றியுள்ளனர்.இவர்களால் மொய்க்கப்பட்ட அரேபிய உலகக் கடற்கரைகளது பரந்தவெளிகள் மேற்குலகத்துக்கு நல்ல வருமானந்தரும் வியாபாரமாக இருக்கிறது.என்றபோதும் இந்த அரேபியப் போராட்டத்தால் இப் பொருளாதாரத் துறை நொருங்கிவருகிறது.இதை அனுமதிக்கும் மேற்குலகம் இந்த மாபியாக்களாலேயேதாம் ஆளப்படுகிறது.என்றபோதும் ஏன் இந்தப் போராட்டங்கள் இவர்களுக்கு உவப்பாக இருக்கு?வரவேற்று,வாழ்த்துவதன் நோக்கமென்ன?

எண்ணை டொலர்[Petrodollar] :

இன்றைய மேற்குலகத்தின் இதுகாலவரையான இயக்கத்துக்கு-இருப்பு பக்கப்பலமாக இருப்பவை உலக நாணய நிதியம்,உலக வங்கி என்பது ஒருவகையான உண்மை.இந்த வங்கிகளது வாடிக்கையாளர்கள் அதிகமாக மூன்றமுலகம் எனப்படும் தேசங்களே.கடன் கொடுத்தல் வட்டியறவிடுதல் என்பதையுந்தாண்டி இவ் வங்கிகள்-நிதியங்கள் சம்பந்தப்பட்ட தேசங்களது அனைத்து இயக்கத்தையும் கட்டுப்படுத்துபவை.

இந்த உலக வங்கி,நாணய நிதியங்களுக்கு எவர்களது நிதி வந்துசேர்கிறது-எப்படி வந்து சேர்கிறதெனப் பலருக்கு புரியும்.அதிகமான வளர்ச்சியடைந்த தேசத்து அரசுகளது நிதிமூலதனமே இவற்றுக்கூடாக நகர்வதாக நாம் அறிவோமா?ஆனால்,அது கடுகளவும் உண்மையில்லை!




இன்றைய நவலிபரல் பொருளாதார நகர்வில் ஊகவணிகம் அனைத்தையுமே கட்டுப்படுத்தி விடுகிறது.உணவுப் பொருட்களையே ஊகவணிகம் விட்டுவிடவில்லை.பொருளாதாரச் சழற்சி நொடிவதும்,தேங்குவதும்,துண்டு விழுவதும்,கருப்பு மூலதனம் பணவீக்கத்தைச் செயற்கையாகப் பின்னுவதும் தொடர்கதையே.மேற்குத் தேசங்களே திவாலாகும் இன்றைய சூழலில் அமெரிக்கா கடன் பளுவிலும் 500 மில்லியன்கள் டொலருக்கு அவ்கானிஸ்தானில் தூதுவராலயம் அமைக்கிறது.தேசங்கள்,மக்கள் துவண்டுபோகும்போதும் அதிகார வர்க்கம்-ஆதிக்க வர்க்கம் தமது கைகளில் கடிக்கும் நிதிப் பளுவை மக்களது தலையிற்சுமத்துவதை ஐரோப்பியக் கூட்டமைப்பினது யூரோ நாணயத்தைக் காக்கும் நிதியீடுகளுக்குள் காணமுடியும்.அதை செவிவழி Doves G-20 பொருளாதாரக் கூட்டினது [Weltwirtschaftsforum in Davos] சந்திப்புக்குள் கேட்டக முடியும்.

பொருளாதாரம் பொறியும்போது,உலக வங்கி,நாணய நிதியம் தனது கையிருப்புத் தங்கத் தைச் சீனாவுக்கு விற்றுக் கொண்டதென்பதும் வரலாறு.

செல்வம் எங்கே?சேந்த நிதி எங்கே?உலக வங் கிகளது கையிருப்பில் இருக்கும் ரிசேர்வ்த் தங்கம்,பெற்றோலிய டொலர்களது புண்ணியம்.அதென்ன பெற்றேலாலிய டொலர்?
லருக்குப் புரியும்.எண்ணை விலை உயர்ந்தபோதும்,உயரும்போதும் குவியும் உபரிச் செல்வமானது அரேபிய மாபியாக்களது(தேசத்துத் தலைவர் எனக்கொள்க)கைகளில் குவியும்.அதை அவர்கள் மேற்குலக வங்ககளில் குவித்துவைத்துக் கனவு காண்பர்.அப்படிக் குவிக்கப்பட்ட பணம் பெற்றோலிய டொலர்கள் என்பது வரலாறு.இதன் பெறுமதி அண்ணளவாக 15 றில்லியன்கள் எனக் கொள்ள முடியும்.எனினும்,சட்டபூர்வமாக அது 6 றில்யன்கள் எனச் சொல்கிறார்கள்.இந்த பெற்றோலிய டொலர்கள் சமீபத்துப் பொருளாதாரப் பொறிவில் 25 வீதம் மூன்றே மாதத்துள் சாம்பலாகியது.அப்படியிருந்தும் இன்னும் 75 % வீதம் அமெரிக்க-ஐரோப்பிய வங் கிகளுக்குள் சுழ ல்கிறது.

இந்தப் பணம் யாருடையது?:

அரோபிய தேசங்களது தலைவர்கள்,அமைச்சர்கள்,அரேபியச் சேக்குகளது.அரோபியாவுக்கு"ஜனநாயக ஏகாதிபத்தியம்"மக்கள் புரட்சியெவெடிக்கும்போது ஒரு பென் அலி தனது பெற்றோலிய டொலர்ச் சேமிப்பை இழந்தார்.அதன் பெறுமதி 8 பில்லியன் டொலரென மதிப்பிடப்படுகிறது.

இத்தகைய பெற்றோலிய டொலர் உரைமையாளர்கள் ஒவ்வொன்றாகச் சரிவார்கள்.இது திட்டமிடப்பட்ட,நவீனத் தட்டிப்பறிப்பு.அதற்கு மக்களது ஆவேசம்,வர்க்கப் போராட்டமே பலியாகி ஒவ்வொரு அரேபிய தேசத்துக்கும் புதிய மேற்குலக எடுபிடிகள் பதவிக்கு வருவார்கள்.

அவர்கள் ஜனநாயகம் அதிகமாகப் பேசுவார்கள்.

பழைய பெற்றோலிய டொலர் உரிமையாளர்கள் தலை தப்பினால் போதுமென ஒதுங்க அவர்களது மக்கள் விரோதத்தின் அரசியல்-உரிமைப் பிரச்சனையுள் இந்தப் பெற்றோலிய டொலர்கள் மாயமாக மறைந்துவிடும்.அரேபியத் தேசங்களுக்கு புதிதாய் வரும் அரசுகள் இந்தப் பெற்றோலிய டொலர்களை மீளப் பெற முனையுமா?

அப்படிப் பெற முடியாதவாறேதாம் இன்றைய துரோக அரசியல் அரேபிய தேசத்துள் 80களின் பின் பகுதி கிழக்கு ஐரோப்பிய-இருஷ்சிய வீழ்ச்சிகளை ஞாபகமூட்டுகிறது.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
28.01.11

Friday, January 07, 2011

நாவலன்: சொந்த முகங்களை இழந்து...

"சொந்த முகங்களை இழந்து... - புலம் பெயர் அரசியல்" சொல்ல அவசரப்படாதீர்கள்!

"சொந்த முகங்களை இழந்து.. – புலம்பெயர் அரசியல் "நாவலன் கட்டுரை தொடர்பாக எனது புரிதல்.இது குறித்து மிக விரிவாக எழுதியாகவேண்டும்.எனினும்,இப்போதைக்கு கொஞ்சம் பேசலாம்."புலம் பெயர் மக்கள்"இந்த வார்த்தையே மிக விரிவாகப் பகுத்தாய்ந்து முடியவில்லை.உலகம் பெரு வெளியில் மனிதத்தைத் தொலைத்த கதை இதற்குள்...நாம்,மேலே போவோம்.

நாவலன்,"சொந்த முகங்களை இழந்து... - புலம் பெயர் அரசியல்" சொல்ல அவசரப்படாதீர்கள்! இப்படிச் சொல்வதற்கு எனக்கு நிறையக் காரணங்கள் உண்டு!

நான்,உங்களது இக்கட்டுரைக்கு ஓடிவந்து நறுக்குப் பதிலுரைக்கும்வாசகர்கள் போன்று கருத்துச் சொல்லமாட்டேன்.

இதற்கான காரணங்களை நமது மக்களதும்-புலம் பெயர் மானுடர்தம் சமூக உளவியல்சார் தொடர்பாடலோடும், அதன் தளத்தில் அவர்களது சமூக அசைவியக்கத்தோடும் பொருத்தியே நான் எழுத முற்பட்டிருப்பேன். உங்களது கட்டுரை இவற்றையெல்லாம் பார்க்கமால் வெறும் முன்தீர்ப்பு மொழிவுகளோடு அவசரக் குடுக்கைத் தனமாக எழுதப்பட்ட அறிதலை எமக்கு வழங்குகிறது.

அவசரப்படாதீர்கள்-ஆத்திரப்படாதீர்கள்!



நான்,நேரடியாக விஷயத்துக்கு வருவேன் :

[ //இன்று இலங்கையில் கூட அருகிப் போய்விட்ட பூப்புனித நீராட்டு விழா, மரபு சார்ந்த திருமணச் சடங்குகள் போன்றவற்றை மிகுந்த பொருட்செலவில் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்கிறார்கள்.//

//30 வருடங்களின் முன்னிருந்த “யாழ்ப்பாணத்தை” ஐரோப்பாவில் மட்டும்தான் காணமுடியும்.//

//ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் புலிகளுக்குக் கிடைத்த உணர்வு பூர்வமான ஆதரவு என்பது 90 களின் பின்னர் இலங்கையின் வட கிழக்கில் அவர்களுக்குக் கிடைத்ததில்லை. மேற்கின் சீரழிந்த கலாச்சாரத்திலிருந்து தமது சந்ததியைப் பாதுகாக்கின்ற குறியீடாக விடுதலைப் புலிகள் அமைப்பை “மேற்குத் தமிழர்கள்” நோக்கினார்கள் என்பதே இதன் அடிப்படையாகும்.// ]

இப்படியுரைக்கிறீர்கள்.ஒரு மார்க்சிஸ்ட்டு இத்தகைய முடிவுக்கு வருவதில் பல சிக்கல்கள் இருக்கிறது-உங்களுக்கு இந்தச் சிக்கல் முன் தோன்றவில்லையா?

சரி,நான் சொல்கிறேன்!மனிதர்கள் கூட்டாகவும்,தாம்சார்ந்த மொழி நிலைப்பட்ட குழுவாழ்வுக்குள் தம்மை இணைத்து உறவாடியபோது,அவர்கள் ஒரு பொது மொழிக்கு இணைவாகவும்-சிந்தனை பூர்வமாகவும் ஆத்மீகரீதியான ஆற்றலோடு இசைந்து உயிர்த்திருக்க முனைந்தனர்.இலங்கை அரசு,இந்த வாழ் சூழலை இல்லாதாக்கிச் சமூக நிலையைச் சிதைத்தபோது, புலப்பெயர்வு-இடப்பெயர்வு ஆரம்பமாகிறது.இங்கு,ஒரு "ஒழுங்குக்கு" உட்பட்ட உறவு-வாழ்நிலை உடைவுறுகிறது.புலம்பெயர்ந்த தேசம் புதிய சூழலோடு-புதியபாணி ஒடுக்குமுறையோடு புலம்பெயர் தமிழர்களை-மனிதர்களை வரவேற்கிறது.புலம் பெயர்ந்தவர்கள் முன் எல்லாம் வெறுமை!அம் மனிதர்கள் அனைத்திலும் வறுமையோடு இப் புலப் பெயர்வை எதிர்கொள்கின்றனர். வரலாற்றில் கட்டியமைக்கப்பட்ட"ஈஸ்ற்-வெஸ்ற்"[East-West]கருதுகோள் மேற்கு மனிதர்கள் மூலம் அறிமுகமாகிறது.

அந்தோ பரிதாபம்!ஆச்சி காலமுக்க-அப்பு,கைப்பிடித்து குரும்பட்டி பொறுக்கி விளையாட்டுக்காட்ட வளர்ந்த நாம்,அனைத்தையும் இழந்து, பெட்டி வீட்டுக்குள் புறாக்கூடு கட்டிவைத்து எமது குழந்தைகளை வளர்க்கும் போது, இந்த நெருக்கடியைத் தவிர்த்து சமூக இசைவாக்காத்தோடு மேற்குடன் கலக்கப் போராடித் தோற்போம்!அங்கே,அனைத்தையும் சொல்லும் தடையாக,நாசமாப்போன வாழ்நிலை சிதறி மனிதர்களைத் துவசம் செய்கிறது.

"குங்குமம்"ஐரோப்பியர்களுக்கு ஒரு நிறம் மட்டுமே.தமிழ்மொழிக் காரருக்கு ஒரு வாழ்வு அநுபவம்!"ஆர்பைட் மார்க் பிறாய்"[Arbeit macht Frei] தமிழர்களுக்கு ஒரு சுதந்திரம் குறித்த வார்த்தை.ஆனால் ஜேர்மனியனுக்கு ஒரு ஒடுக்குமுறையின் திசைவழி சொல்வது.இதைத் தாண்டுவோமா?

தான்சார்ந்து,தன் சுற்றங்கொண்ட சிலாகித்த வாழ்வு தொலையும்போது, வந்த தேசத்தில் குழுமமாக வாழ மொழி தடையாகிறது-நிறம் தடையாகிறது-கல்வி தடையாகிறது-செயற்றிறன் தடையாகிறது.என்ன செய்வார்கள்?

புலம்பெயர்ந்தோரை,அங்கொன்றும் இங்கொன்றுமாய் வாழப் பணித்த ஐரோப்பிய நிர்வாகம்,அவர்களது இணைவைத் திட்டமிட்டுப் பறித்தெடுத்தது.இதன் புரிதலில்,தான்சார்ந்த சமூகத்தோடு அசைவுறும் வழியென்னவெனப் பாமர மனிதன் சிந்திக்க முனைதல் சாத்தியமில்லையா?; தான் வாழ்ந்து மடிந்த ஏதோவொரு கனவில் தன்னிருப்புக்கு நெருக்கடியேற்படுவதில் அதைக் காக்கவும்-கண்டடையவும் தன் வேர்களைக் காணமுனைவது சாத்தியமாகிறது.

எனக்குப் பண்பாடுண்டா,எனக்கு உணவுக் கலாச்சாரம் உண்டா,எனக்கெனவொரு மொழி-தேசம் உண்டா?இது கேள்வியாகவும்,உள நெருக்கடியாகவும் புலம்பெயர்ந்த எம்மைத் தக்குகிறது!

எமக்கு முன் துருக்கியர்கள் கூட்டாகவும்,கொடிபித்தும் வாழ்ந்து பார்க்கின்றனர்.இத்தாலியர்கள் தமது தேசக்கொடியை முத்தமிட்டு மிடுக்குக்காட்டும்போது,புலம்பெயர் தேசத்துக் குடிமகனோ தனது தாய்ப் பூமியை தரிசித்து எம்மை ஏசுகிறார்கள்.நாம்,மீளவுஞ் சிதைகிறோம்.எமக்கானவொரு "கொடி-தேசம்,மொழி-பண்பாடு" நம்மைத் தவிக்க வைக்கிறது.இலங்கையிலிருந்தபோது இந்தப் பஞ்சம் ஏற்பட்டதில்லை.அங்கு தேசமாகவும்-நகரமாகவும்,கிராமமாகவும் வாழ்ந்ததைவிட ஒரு சுற்றமாக வாழ்ந்தோம்.எமக்கு அந்நிய நெருக்கடி தெரியவில்லை.பெரிதாகத் தெரிந்தது மாமி வீடும்-சித்தியின் வீடும்.மிச்சம் சந்தித் தெருவில் உலகம் விரிவதாகவிருந்து, நாகமணியின் தேனீர்க்கடையில்பருப்பு வடையும்-பிளேன் ரீயும் குடித்துக் "கமல்-ரஜனி வாழ்வு" பேசியது.இது,ஒரு சமூக வாழ்நிலையில் உறுதியான சமூக அசைவாக்கம் விரித்துப் பார்த்திருக்கிறது.



இவை இழந்தபோது,எனது உறவுகள்,புலம் பெயர் தேசத்தில் பொய்யுரைத்த புலிக்கொடிக்கு அர்த்தங்கண்டது-தமிழீழத்தைத் தனது தேசமாகக் கண்டடையக் புறக் காரணிகள்வழி வகுத்தன.பண்பாட்டுத் தாகமாகவும்,வாழ்ந்தனுபத்தின் முன்னைய கருத்தியலைத் தகவமைக்க விரும்பியது.அங்கே,"சாமத்திய-கல்யாண-பிறந்ததின"க் கொண்டாட்டங்கள் தனது சுற்றத்தோடு தன்னை இணைத்துக் கோலம் போட விரும்பிய அக விருப்புக்கு வடி காலாகிறது.

புலிக்கொடிக்கு எந்தவுந்துதல் காரணமோ அதே காரணம் அனைத்துக்குமான காரணத்தின் திறவுகோலை எமக்கு வழக்குகிறது.இது,சமூக நெருக்கடியின் தற்காலிகத் தேவையாக புலம் பெயர் மக்கள் ஒவ்வொருவரையும் அண்மிக்கிறது.இது,தமிழர்களுக்குமட்டுமல்ல அனைத்து இனப் புலப்பெயர்வுக்கும் பொருந்துகிறது.இதை வெறுமனமே சப்ப முடியாது!
சமூக-மானுடவியற் புரிதலின்வழி சிந்திக்க வேண்டும்.

முப்பது வருடத்துக்கு முன்பிருந்த யாழ்ப்பாணத்தை இன்றைய யாழ்ப்பாணத்தில் காணமுடியாதுதாம்.அதுதூம்சமூக வளர்ச்சியின் பரிணாமம்.அவர்களும்,அவர்தம் இன்றைய சுற்றஞ் சூழப் "பில்லி-சூனியமெல்லாஞ் " செய்து சுகமாய் வாழ்வதாகக் கனவுகொள் மனமும்,யுத்தத்தில் மையங்கொண்ட மனிதத்தைக் குழிதோண்டிப் புதைத்து நல்லூர்த் திருவிழாச் செய்து, தம்மை நிரூபித்தார்கள்! இது,ஒரு குழுமம வாழ்வுக்குச் சாத்தியம்.புலம் பெயர் மண்ணில் நாம் சமூகவாழ்வோடு இசைந்து ஒரு மொழிக் குட்பட்ட "ஒழுங்குக்குள்" வாழ முடியுமா? இது இல்லாதவரை,இருந்த அன்றைய சூழலை மையப்படுத்தி அடையாளமாக வாழ்ந்து காட்டுவது மனித நடத்தைக்குப் புதிதாகுமா?

[ //ஆக, மூன்றாம் உலக நாடுகளின் குடியேற்ர வாசிகள் தமது அடையாளத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக மிகவும் “விசித்திரமான” சிந்தனைத் தளத்தில் போராடுகின்றார்கள். இந்தச் சிந்தனை அவர்களிடையே ஒரு வகையான ஒருங்கிணைவை ஏற்படுத்துகிறது.// ]

நாவலன்,இது அபத்தமாகத் தெரியவில்லையா?விசித்திரமோ-சாத்திரமோ இங்கு கிடையாது.மனிதர்கள் எப்போது சமூகவுணர்வோடு"ஒரு ஒழுங்குக்குள்"வாழ நேர்ந்தார்களோ,அந்த ஒழுங்கினது வாழ்நிலைக்கிசைவான"அடையாள"நெருக்கடி உருவாவதை எவரும் விரும்புவதில்லை!வாழ் சூழல் பாதிப்படைந்து தன் சூழலைவிட்டு அந்நியமானவொரு சூழலை எதிர்கொண்டபோது,அதைத் தமதாக்க முடியாத மனிதர்கள் அதற்குப் பிரதியீடாக இன்னொரு முறைமையைத் தமக்கேற்ற புரிதலோடு இணைத்து வாழ முற்படுதல்தாம் அவர்களை உயிர்த்திருக்க வைப்பது.இதை மறுத்து வாழ முற்படுதலென்பது எப்போதும் சாத்தியமாக முடியாது.விசித்திரம் என்பது எதைவைத்து-எதர்க்கு நிகராக அணுகிச் சொல்ல முடிகிறது.

தனக்குள் பொருத்தப்பாடும்-பொருந்தாதத் தன்மைகளுடனும் புலம்பெயர் இளைய தலைமுறை வாழும் இந்தப் புலம் பெயர் வாழ்வில் சமூகவாண்மை என்பது தனக்குட்பட்ட அரசியல் வாழ்வைத் தகவமைக்கும் போராட்டமாக இருக்கும்போது,ஒரு பொருளாதார வாழ்வுக்குட்டபட்ட"வாழ்நிலை"இவர்களுக்குக் கைகூடிவிட்டதா?ஏதோ,சொல்வதால்-சொல்லிச் செல்லும் கட்டுரை மொழி வேண்டாம்!

[ //உதாரணமாக இ தனது பெண்பிள்ளை ஒரு கறுப்பினத்தவரைத் திருமணம் செய்துகொண்டிவிடக் கூடாது என்பதில் அவர்களிடையே ஏற்படுகின்ற ஒருங்கிணைவுஇ திருமணத்திற்கு முன்னர் பெண்பிள்ளை உடலுறவு வைத்துதுக்கொள்ளக் கூடாது என்பதில் அவர்களிடையே ஏற்படும் ஒருங்கிணைவு என்பனவெல்லாம் பண்பாட்டுத் தளத்தில் ஒருங்கிணைகின்றன. அவை பண்பாட்டு நிகழ்வுகளாகவும்,கலாச்சார வைபவங்களாகவும், மத வழிபாடுகளாகவும் வெளிப்படுகின்றன.// ]

"கருப்பு-வெள்ளை"-திருமணப் பந்தம்-எதிர்காலம்."கற்பு"-பதிவுத்திருமணத்துக்கு முன் "உடலறுவு"ஒரு வாசிப்புக்காகச் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது.எமது நினைவிலி மனதில் தமிழ்மொழிவழி சிந்தனைத் தேட்டம் அழியாதவரம் பெற்றிருக்கிறது.இளமையிற் கற்றல்(வாழ்நிலை)சிலையில் எழுத்து"சரி.இன்று,தமிழ் வானொலிகளில் தமக்கு அந்நியப்பட்ட,தமது நிறத்தைக் கேலி பேசும் தமது சமூகத்துக்கு உட்பட்ட உணர்வானது தமது பண்டத்தை விற்கவே வெள்ளைமேனிப் பெண்ணை முன்னிறுத்தி விளம்பரஞ் செய்கிறதா?எது,அரிய பொருளாக இருக்கோ-அதற்கு மவுசுதாம்!நாம் இயல்பாகக் கருப்பர்களா?நமது சமூகத்தில் மேற்குலகச் சிந்தனைக்குட்பட்ட-கலப்படைந்த மக்கள் வெண்மையாக-"அழகாக"இருக்கிறார்களா?எமது சமுதாயத்தின்பெண்கள்-ஆண்கள்"கருப்பு-அவலட்சணம்"கண்டு கேலி பேசுகிறார்களா?கலப்படைந்து"வெள்ளையாக"இருக்கும் நபருக்கு இருக்கும்"செருக்கு"எத்தகைய சமூக-அகவொடுக்குமுறையை"கருமையாக"இருக்கும் மனிதருக்கு வழங்கியது? இந்த அனுபவம் தன் பெண்ணுக்குத் தொடர்ந்து"கருமையுடைய"பிள்ளை பிறப்பதை நம்மில் எத்தனைபேர் விரும்பினோம்?"கருப்பு-வெள்ளை"கருத்தியலைச் செய்த "மேற்கு,கிழக்கு"க் கருதுகோள் நம்மைக் கோவணத்தோடு-கும்மப் பூவோடு அலையவிட்டது மட்டுமல்ல-நம்மையே,நாம் அங்கீகரிக்க-மதிப்பளிக்க மறுத்து நிற்கிறது.

இன்றைய புலப்பெயர்வு வாழ்வில் பாலியல் நடாத்தையென்பது பொறுப்போட நடைபெறவில்லை."அநுபவித்தில்-தட்டிக்கழித்தல்" வரை முறையற்ற பாலியல் நடாத்தையெனப் பல பாலகர்களைத் துவசம் செய்து நடுத்தெருவில் அலையவிடும்போது,இப்போது மேற்குப் பெற்றோரே தமது பிள்ளைகள் குறித்துக் கவலையடையும்போது,நீங்கள் இதைக் குறித்து மேலோட்டமான வார்த்தைகொண்டு மெலினமாகவுரையாடுகிறீர்கள்.இது,முழுமொத்த மனித சமூகத்தையே இன்று பல உள நெருக்கடிக்குள் கொணர்ந்திருக்கும்போது அதை நமது மக்களிடம்-புலம்பெயர்ந்தவர்களிடம் மட்டும் குறிப்பாக நிகழ்வதாக ஒரு மார்க்சியன் கருத்துக் கூறுவதாகவிருந்தால் நான் உங்கள் மார்க்சியம் குறித்துக் கவலையடைகிறேன்.மனிதர்களை அவர்களது வாழ்நிலையோடு புரிதலைவிட்டுப் பெயர்த்தெடுத்து விமர்சிப்பது நியாயமாகாது.எமது வாழ்நிலை பாதிப்படைந்து நாம் அங்குமிங்குமாக அலைகிறோம்.

[ //இவ்வாறு புலத்திலிருந்து தொலை தூரத்தில் உருவாகின்ற தேசிய உணர்வானது “கலாச்சாரப் பய” உணர்வின் அடிப்படையிலிருந்து மேலெழுகிறது. இத் தொலை தூரத் தேசிய உணர்வு சொந்த நாட்டின் அரசியலில் கணிசமான தாக்கதைச் செலுத்துகிறது.// ]

தூரத்தே உருவாகும்"தூரத்தேசியவுண்ர்வு"என்பதெல்லாம் அடிப்படையில் அறிவியல் பூர்வமற்றது.ஒரு இனக் குழும மக்கள் இடம்பெயர்ந்து,சிதறிச் சமூகக்கூட்டின்றியும், எந்தப் பொருளாதார-நில-நினைவிலித் தளமும் இன்றியவொரு புலம்பெயர் தளத்தில் இத்தகையவுரையாடலானது அந்த மக்கள் துண்டிக்கப்பட்டவொரு மனிதக் கூட்டாக வாழ நேர்ந்த வலியயை மறுதலிப்பதாகும்.இது,புலம்பெயர் தேசத்துப் பொருளாதார-இனத்துவ அடையாள அரசியலது ஈனத் தனத்தை மறுமுனையில் வைத்து மறைக்கும் கயமைத்தனமாகும்.புலம் பெயர் மக்களைத் தொடர்ந்து அச்சத்துக்குட்படுத்தி,அவர்களது மனவலிமையை-ஆற்றலை முடக்கி நிராகரித்துத் தமது சமுதாயத்துக்கு புறம்பாக வாழ நிர்பந்தித்த வெள்ளைத் தேசமும்-வேற்று அரசவுரிமையுடைய தேசத்துச் சமுதாயங்களும் தொடர்ந்து புலம்பெயர்ந்த-குடியேறியவர்களைத் திட்டமிட்ட உளவியலொடுக்குமுறைக்குட்படுத்தும்போது அங்கே, தமது அடையாள நெருக்கடிக்குள் வந்துவிட்ட வாழ்நிலைகண்டு அச்சங்கொள்வதும்,தாம் வாழ்ந்த வரலாற்று மண் நோக்கிய அவாவுறுதலும் மனிதர்கள் அனைவருக்குமான பொதுப் பண்பாக மாறுவது இயல்பு.இதுவே,புலம்பெயர் வாழ்வில் ஒவ்வொரு அகதியும் சந்திக்கும் மிகப் பெரிய சோகம்.இதுள்,இவர்கள்"துராத் தேசியவுணர்வடைகிறார்கள்"என்பது தப்பான கற்பித்தலாகும்.

இன்றுவரை,இந்த உணர்வைத் தமது அயலுறுவு-நலன் நோக்கிய அரசியற் காரணங்களுக்காகத் தட்டையாக உருவாக்கி அசைபோட்டுவரும் மேற்குலகம், இத்தகைய புலம்பெயர் மக்களைக்கொண்டு, அவர்கள் சார்ந்த தேசத்து அரசியலை அழுத்தப்படுத்தித் தமது தேவைகளைப் பூர்த்தி செய்ததை நாம் ஈரானியர்கள்-ஈராக்கியர்கள்,குத்தீஸ் புலம்பெயர் மக்கள் வழி புரிகிறோம்.இந்த வகையிற்றாம் புலிகளது தேவையோடு,அவை மிக நெருக்கமான வினையாற்றலைக்கொண்டியங்கியது. இது குறித்துச் சிந்தியுங்கள்.

இவர்களது கொச்சையான-மொட்டையான இந்தக் கருத்தை ஜேர்மனியக் கவிஞன் ஹன்ஸ்-ஹேர்பேர்ட்திறைஸ்கே [ Hans-Herbert Dreiske] இப்படிக் கேலி பேசிய ஆண்டு 1985. :

"இங்கே அந்நியராய் இருந்தோம்
அங்கே அந்நியராக்கப்பட்டோம்
எனினும்,
நாம் ஒரு வனாந்திரத்தைத் தேடி
ஒரு நாட்டை உருவாக்குவோம்
எங்கெங்கு
எப்படியெப்படியோ அந்நியர்களாகிய
அனைவருக்குமாக."


[ Hier

fremd geblieben

dort

fremd geworden

Vielleicht

sollten wir

ein land suchen

einen Staat gruenden

fuer alle

die irgenwo

irgenwie

Fremde sind.]

-Hans-Herbert Dreiske, Dueseldorf,im August 1984


[ //குஜராத்யர்கள் செறிவாக வாழும் பிரித்தானியாவின் நகரமான லெஸ்டரில் சாரி சாரியாக 30 ஆயிரம் பேர்வரை கலந்துகொண்ட கூட்டம் பாரதீய ஜனதா கட்சியின் அத்வானி கலந்துகொண்ட பொதுக்கூட்டமாகும். விஸ்வ இந்து பரிசத் என்ற இந்து அடிப்படை வாதக் குழுவிற்கு பிரித்தானியாவிலிருந்து ஒவ்வொரு இந்தியரும் உணர்வு பூர்வமாக வழங்கும் பணம் புலிகள் இயக்கத்திற்குத் தமிழர்கள் “கண்ணை மூடிக்கொண்டு” வழங்கிய பணத்தைப் போன்றதாகும்.// ]

புலிகளுக்கு நிதி கொடுத்த சமூகவுணர்வை-உளநிலையை மிகவும் தப்பாக உரைப்பதற்குப் பலர் முனைகிறார்கள் நாவலன்.நீங்கள் இந்த வரிசையில் ஒருபோதும் உரைத்திருக்கப்படாது.இது,தப்பானது.எமது மக்கள் முன் சில தீர்வுகள் இருந்திருக்கிறது.இந்த நிதியுதவி மனத்துள்.இவர்கள் எவரும் கண்ணை மூடிககொண்டு புலிக்கு நிதிகொடுக்கவில்லை!

"கண்ணை மூடிக் கொடுத்ததுபோல்" நடாகங்காட்டியது புலிப்பினாமிகள்.அது,மக்களது நிதியைக் கறக்க அவர்களது பணத்தில் புலி தன் பொண்டிலுக்குத் தாலிகட்டி பின் அதை மக்கள் முன் களற்றிப் போட்டு நாடகம் ஆடியது.இதுவொரு வியூகம்.

ஆனால்,எமது மக்கள் தமது உழைப்பில் சிறு தொகையை மாதாந்தங்கொடுக்கும்படி உருவாகிய சூழல் மிக முக்கியமாகத் தவறவிடப்படுதல் சாபக்கேடானது!


1:"ஊரிலுள்ள உறவுகளை புலிவேட்டையிலிருந்து காத்தல்"

2;"தாம் தேசம்-தாயகம் திரும்பும்போது புலி வேட்டையின் முன் முகங்கொடுத்தல்"

3:"தமது சமுதாயத்தின் அழிவைக்கண்டும்-தாம் தப்பிய குற்றவுணர்விலிருந்து விடுதலையடையவும்"

4:சிங்கள அரசின் அத்துமீறிய இனவழிப்புக்கு விடிவு தேடிய பாமரவுணர்வுகொண்ட நம்பிக்கை"

ஆகிய காரணிகளது வழியிலேயே புலிக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.இதைவிட்டு,"கண்மூடி-கண்திறப்பு" வார்த்தைகள் மோசமான பார்வைகளைக்கொண்டது.

நாம்,எமது மக்களது சமூக உளவியலைப் புரிய முனைதலும்,மனித சமுதாயத்தை மிக முன்னேறிய புரிதல்களைக்கொண்டு ஆய்வு செய்யவும் கடமைப்பட்டுள்ளோம்.புலம்பெயர் சமூகங் குறித்து எவரும் போகடிபோக்காக வரலாறு எழுதலாம்.ஆனால்,அவையெல்லாம் குப்பைக் கூடைக்குள் ஒரு நாள் செல்லும்.மார்க்சியம் புரிந்த உங்களிடமிருந்து இத்தகையவொரு கட்டுரை"புலம்பெயர் மக்கள்"குறித்து வந்ததில் நான் மிகவும் வருந்துகிறேன்.மையமான புள்ளிகளைத் தொட்டு ஆய்வு மனத்தோடு எழுதப்படவேண்டிய கட்டுரையை வெறும் மனவுணர்வுக்குள் உந்தப்பட்டெழுத முற்படுதல் மார்க்சிய ஆய்வாகாது!

[ //இந்த நூற்றாண்டின் தெற்காசியாவின் மிகப்பெரிய மனித அவலத்தைச் சந்தித்திருக்கும் தமிழ்ப் பேசும் மக்களின் “புலம் பெயர் அரசியல்” தொலைதூரத் தேசிய உணர்விலிருந்து விடுதலை செய்யப்பட்டு மனித நேயம் மிக்க அரசியலாக மாற்றமடையே வேண்டும். ஆப்கானிஸ்தானிலும்இ காஷ்மீரிலும் மனிதர்கள் கொல்லப்படும் போது அதன் வலியையும் நாம் உணர வேண்டும்.// ]

ஏன்,எமது மக்கள்மீது குறைப்படுகிறீர்கள்?,எங்கள் மக்களுக்கு இந்த வலிகளைச் சொல்லும் எத்தனையூடகங்கள் நமக்குள் உண்டு?தொடர்ந்து தமிழ் ஊடகங்களில் புலிக்கு வக்காலத்து அல்லது, தமிழ்நாட்டுச் சீரழிவு நாடாகம்-சினிமா!இதைவிட எமது சமூகத்துக்கு என்ன சமூகப் புரிதலை காட்சியூடகம் வாயிலாகச் சொன்னோம்.எமது மக்களது சிந்தனையைக் காயடிக்கும் இன்றைய ஆளும் வர்கங்கள்தாம் எமது மக்களது சிந்தனையைத் தகவமைத்தபோது,நாம் அவ்கானை-ஈராக்கை-காஸ்மீரைக் காணது பேசுவதாகக் குறைப்படுதல் நியாயமாகாது.புரிதற்பாடென்பது அந்தச் சமுதாயத்தின் ஊடகங்கட்கு வெளியில் வெறும் கல்வியல் மட்டுமே தங்கும்.பொதுத்தளத்தில் உலக மக்களது வாழ்வுஞ் சாவும் ஊடகங்களின் வழியே சமூக ஆவேசம்-உணர்வு கொள் திசைவழியைத் தகவமைக்கும்.எமது ஊடகங்களது நயவஞ்சமான வர்த்தக நோக்கு இதுள் மையமாகத் தவிர்க்கப்பட முடியுமா?


[ //தவறுகளைத் தர்க்கரீதியான ஆய்விற்கும் விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உட்படுத்துவதனூடாக தேசிய வாதத்தின் முற்போக்குக் கூறுகளை வளர்த்தெடுக்க முடியும். இலங்கைப் பேரினவாதப் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் மக்கள் சார்ந்த புலம்பெயர் தமிழ்ப் பேசும் மக்களின் பங்களிப்பு குறைந்தபட்சம் மக்கள் போராட்டத்திற்கான ஜனநாயகச் சூழலை இலங்கையில் உருவாக்குமாயின் போராடத்தின் புதிய திசைவழியில் ஒரு மைற்கல்.// ]


இலங்கையில் ஜனநாயகச் சூழலை உருவாக்கப் புலம் பெயர்ந்த மக்கள் பங்களிப்பதென்பதன் அர்த்தம் வெறும் பேச்சுக்கானதான ஒரு பரிவர்த்தனைதாம்.இலங்கையில் மட்டுமா "ஜனநாயகம்"செத்துப் போனது? இந்தப் புலத்து வாழ்வில் வாழுகின்ற ஒவ்வொரு அகதிக்கும் தனது வாழ் நிலையில் புரிந்த ஒருவுண்மையானது "ஜனநாயகம்"என்பது என்னவென்று புரியாததுதாம்.தனக்கான வாழ்வு-தேசம்,மொழி,பொருள் முன்னேற்றம்.இதைவிட்டகலாவொரு அரசைக் குறித்த மிக அருகிய புரிதல்.இதைவிடப் புலப்பெயர் வாழ்வில் முன்னேறும் போராட்டம் இலங்கையிலொரு ஜனநாயகச் சூழலைத் தீர்மானிக்கும் பகுதிச் சக்தியென்பதுகூட மிக நெருங்கிப்பார்த்தறியும் புரிதலுக்கு எதிரானது.தனது வாழ்நிலையில் ஒரு கூட்டாக-குழுமமாக வாழ முற்படும் அரும்பு நிலையுள் தவிக்கும் புலம்பெயர்ந்த மக்கள் கூட்டாகக் கோவிந்தாபோட்டு ஓய்ந்த சூழலில் அவர்களது நிதியுதவியைத் தொடர்ந்து பெறுவதற்கும்,இலங்கையில் "ஜனநாயக"ச் சூழலை மீட்பதென்பதற்குமான புரிதலது எல்லை, இலங்கைக்கு வெளியில் அநாதவராகக் கிடக்கிறது.


இலங்கையுள் வாழும் மக்களுக்கு முடியாதவை எதுவும், அந்தத் தேசத்துக்கு வெளியிலிருந்து இறக்கு மதியாகும் எந்தவொரு சக்திக்கும் அவர்கள் நியாயமாக-விசுவாசமாக நடக்க முடியாது.இலங்கைத் தேசத்து ஒடுக்கப்படும் மக்களே தமது தலைவிதியைத் தீர்மானிப்பதைத் தவிர புலம்பெயர் மக்களுக்கு எந்தப் பொறுப்புஞ் சுமத்த முடியாது.புலமானது தனது தளத்திலுள்ள மக்களது வலியை வெளியுலகுக்குச் சொல்வதைத்தவிர வேறெதுவையுஞ் செய்துகொள்ள முடியாது.இவர்கள் தமது வாழ்வுக்கான போராட்டத்தையே செய்துகொள்ள முடியாது திசையில் இலங்கை நோக்கி...(?...)

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
07.01.2011

Tuesday, January 04, 2011

புலத்து"இடதுசாரிகள்",போதும்-போதும்!

புலத்து"இடதுசாரிகள்",போதும்-போதும்!

லங்கைச் சிறுபான்மை இனங்களின்தேசியத் தன்மைகளைக் குலைக்க முனையும் அரசு-ஆளும்சக்திகள் எமது மக்களில் ஒருசாரர்களை,அவர்களது வர்க்க நலன்களுக்கிணங்கப் பயன்படுத்துகிறது.தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை-தேசிய அபிலாசைகளை தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைகளை அழிப்பதற்கெதிராகப் போராட முனையும் பரந்துபட்ட மக்களது அமைப்பாண்மையைச் சிதைப்பதில் நமது எதிரிகள்பலவடிவில் கூடுகிறார்கள்.நான் இதுவரை புலம்பெயர் சூழலுக்குள் இனங்காணும் அரசிலானது பற்பல கோணத்தில் மிகத் தந்திரமாக இயங்குகிறது. தம்மைத்தாமே உண்மையான மக்கள்சார் அமைப்பாக-குழுவாக முன்னிறுத்திவரும் புலம்பெயர் "இடதுசாரிகள்"அனைவரும் ஏதோவொரு ஆதிக்க நலனுக்குப் பலியாகிவிட்டு மீளவும், நமது மக்களுக்குத் தம்மைத்தாமே மேய்ப்பர்களாக-மக்கள் "விடுதலை" அமைப்பாக இனம் காட்டுவதில் கவனங் குவிக்கின்றனர்.தமது இருப்புக்கும்,தொடர் எஜமான விசுவாசத்துக்காவும் தாம் "அம்பலப்பட்டபோதும்" அதை மறந்து-மறுத்து மக்கள் சார் அரசியலைத் தாம் பேசுவதாக ஏமாற்றுகின்றனர்.


இன்றைய மிகக் கெடுதியான அரசியல் நடாத்தைக்கு இந்தக் குழுக்களே காரணமானவர்கள்!இவர்கள், ஒருபோதுமே ஓய்ந்துபோக விரும்பாதவர்கள்.தமது எஜமானர்களது படியளப்புக்கு விசுவாசமாக இவர்கள் இயங்க முனையும் தளம் பாதிக்கப்பட்ட-யுத்தத்தால் அழிவுக்குட்ட-அரச இனவொடுக்குமுறையால் சிதைந்துபோன தமிழ்பேசும் மக்களது எதிர்காலமாக இருக்கிறது! புலம்பெயர் தளத்தில் இடதுசாரிகள்-முற்போக்குவாதிகள் எனும் போர்வையில் எந்தக் குழுவுரையாட முனைகிறதோ அதைச் செருப்பால் அடித்தாகவேண்டும்.இந்தக் கயவர்கள் தமது குழு நலனுக்கான நிபந்தனையாகத் தொடர்ந்து நமது மக்களது எதிர்கால அரசியலை இல்லாதாக்கப் பல முனை வேடமணிகிறார்கள். இதுள்" இடதுசாரிய" வேடம் இவர்களுக்கெப்பவும் கைகொடுப்பதால் அதையே தொடர்ந்து அணிந்தபடி எல்லாவற்றும் "தீர்ப்பு"எழுதுவதில் தம்மை முற்போக்காளர்களாக்கி, அந்நிய ஆளும் வர்க்கங்களுக்கு நமது மக்களைக் காட்டிக்கொடுக்கிறார்கள்.இந்த "இடதுசாரிய"அராஜகவாதிகள் மிகக்கெடுதியான பிற்போக்கு முகாங்களது தயவிலேயே வாழ்வதென்பது உண்மையானது.எந்தவொரு புலம்பெயர் "இடதுசாரிகளும்-தேசிய,புலி-எலி வாதிகளும்"நம்பிக்கையற்ற கபட மனிதர்கள் என்பதே எனது அறுதியான நம்பிக்கை!இந்த நம்பிக்கையானது இவர்கள்மீது நம்பி ஏமாந்த எனது அநுபவத்தின்வழி ஏற்பட்டதல்ல.மாறாக இவர்களது அரசியற் பாத்திரத்தின்மீதான விமர்சனத்தின் வழி பெறப்பட்டதே!இவர்கள் அனைவரும் நாசகாரச் சக்திகள் என்பதே எனது துணிபு!இவர்களை நம்பி எந்தவொரு அரசியலும் செய்வதென்பது தம்மைத்தாமே தொலைப்பதற்கு ஏதுவானது.

இந்நிலையில், நமக்குள் பற்பல முரண்பாடுகளை அவ்வப்போது செயற்கையாக உருவாக்கி நமது இறைமையைச் சிதைப்பதில் தமிழ் மக்களின் எதிரிகளான இந்தப் புலம்பெயர்"இடதுசாரிகள்" விழிப்பாகவே இருக்கிறார்கள். இத்தகைய எதிரிகளை நாம் வலுவாக முறியடித்தாகவேண்டும்.அதற்கு நம்மிடமிருக்கும் அனைத்து வளங்களையும் நமது புலத்து மக்கள் பயன்படுத்தி,அதை அனைத்துச் சிறுபான்மை இன மக்களுக்குமான விடுதலையைத் தோற்றும் அரசியல் நகர்வாக முன்னெடுப்பதும் காலத்தின் அவசியமாகும்.


நம்மை,நமது வாழ்வைக் கேவலமாக்கும் கும்பல்களாக்க முனையுமிந்த அரசியல் பொறுக்கிகள், அற்ப சலுகைகளுக்காக நமது ஜனநாயக உரிமைகளை-வாழ்வாதார அடிப்படையுரிமைகளை, அந்நிய நாடுகளின் அரசியல்-பொருளியல் நலன்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் பொறிமுறைகளை "புரட்சிகர"கட்சிகள்-அமைப்புகள்,ஜனநாயகமெனும்போர்வையில் செய்து முடிக்கத் தயாராகியபடி. இவர்களே தனிநபர் துதிபாடி,கேவலமான பாசிஷ்டுக்களை(...) தமிழரின் பிரமுகர்களாகவும்- தலைவர்களாகவும்,மகாமேதைகளாகவும் ஒளிவட்டம் கட்டுகிறார்கள். இந்த வேலையில் தமிழரங்க வாசக வட்டமென்ற போர்வையில் இரஜாகரனது தளத்தில் கீறும் "அவர்களது" கைகளே"எங்கப்பன் குதிருக்குள் இல்லை"என்று அம்பலப்பட்டுப்போகிறது!

இவர்கள் எவருமே மக்களின் நலனுக்கான ஜனநாயக விழுமியத்துக்காகக் குரலிடவுமில்லை,போராடவுமில்லை.இவர்களிடம் பணப்பலமுண்டு.இதன்மூலம் நம்மைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வெறும் கொத்தடிமைகளாக்கும் அரசியலை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள். இவர்கள் கூறும் ஜனநாயம்-பாசிசத்துக்கு எதிரான"சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு ஆதரவு" என்பதெல்லாம் வெறும் ப+ச்சுற்றலாகும்.

ஒன்றுக்கொன்று மாறுபட்ட குதர்க்க அரசியல் மோடி வித்தையை "இராஜாகரன்"பெயரில் எழுதும் பல முகமூடி மர்ம மனிதர்கள் செய்துவருகின்றனர்.இதேபோன்ற இன்னொரு முகமாக,ஏலவே அம்பலப்பட்டுப்போன ஞானம்-தலித்துவ அமைப்புத் தேவதாசன்குழு,இலங்கை ஜனநாயகவொன்றிய இராகவன் குழு,சோபா சக்தி வட்டமென எல்லாவிதமான சர்ச்சைக் குரிய நபர்களும் மக்களது அரசியலைக் கையிலெடுத்துத் தமது இருப்பு நோக்கிக் கூடுகிறார்கள். இரஜாகரனுக்கோ "எதிரியின் எதிரி நண்பனென" எவரையும்-எதற்காவும் "ஆதரிக்கவும்-எதிர்க்கவும்" முடிகிறது. இப்படியொரு இழி அரசியலைச் செய்வதைவிடத் தூக்குப்போட்டுத் தொங்குவது மேலாக இருக்கும் என்று எப்பவுஞ் சொல்வேன்!

புலத்திலுள்ள மக்களைச் சுயவெழிச்சுக்குள் தள்ளி, அவர்களால் போராட்டத்தை முன்னெடுக்கத் தடையாகவுள்ள ஒவ்வொரு நாளியும் நமக்கு ஆபத்தே!புலத்து மக்கள் சுயமாகச் சிந்திக்க விடாது தடுத்துவருபவர்கள் மக்களின் விரோதிகள் என்பது எனது நிலைப்பாடாகவே இருக்கிறது.

இன்றோ இந்தக் கேடுகெட்ட"போலி இடதுசாரிய"மாபியாக்களிடமும்,ஓட்டுக்கட்சிப் பாராளுமன்றப் பாசிஸ்டுக்களிடமும் மாட்டப்பட்டிருக்கும் தமிழ்,முஸ்லீம் மக்களின் அரசியல் எதிர்காலமானது தத் தமது அரசியல்-பொருளியல் அபிலாசைகளோடு தனித்துவமான தேசிய முன்மொழிவுகளைக் கோரிக் கொண்டே இருக்கப் போகிறது. எனினும்,இந்த முன் மொழிவுகள் இனத்துவ அடையாளத்தை மையப்படுத்திய பேரெழிச்சியாக மாறாத வகையில் இலங்கை-இந்திய,சீனச் சதி அரசியல் நிலவரம் செறிவேற்றப்படுகிறது. இந்தச் செறிவேற்றலைச் செய்து முடிக்கும் இனவொடுக்குமுறையானது அப்பாவி மக்களை அழித்துத் துவசம் செய்யும்போது அங்கே அவர்களின் அத்துமீறிய வன்முறைகளை இந்தப் "போலி இடதுசாரிய" மற்றும் ஓட்டுக்கட்சிப் பாராளுமன்றப் பாசிஸ்டுகள் தமக்கேற்றபடி தகவமைத்து மக்களுக்குள் பரிசீலீத்துவருகிறார்கள்.சமீபத்தில் யாழ்மாவட்டத்தில் இடம்பெறும் இத்தகைய தாக்குதல்கள் ஒரு பரீட்சார்த்தமாகும்.

பண்டுதொட்டுத் தமிழ்பேசும்மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள்.ஆயுத முனையிலும்,கருத்தியல் முனையிலும் அவர்களின் உரிமைகள் ஏலம் விடப்படுகிறது.இந்த ஈனத்தனத்தை எல்லாக் குழுக்களும்-தனிநபர் பயங்கரவாதிகளும் திறம்படச் செய்துமுடிக்கிறார்கள்.இந்த மோசமான சூழலில் இத்தகைய மனிதவிரோதிகள் யாவருமே மக்கள் நலன்சார்ந்தவர்களாகத் தம்மை முன்நிறுத்தியபடி மக்களை வேட்டையாடுவதே பெரும் பயரகமானதாக இருக்கிறது.ஒரு இனவாதப் பாசிச அரசு இதன் மூலம் காப்பாற்றப்பட்டு, அது மக்கள் நல ஜனநாயக அரசெனும் படியை முன்னகர்த்திச் செல்வதே இதன்மூலம் சாத்தியமாகி வருகிறது.இது, சாதுரியமாக புலம்-நிலமென விரிகிறது.

தமிழரங்கமோ அல்லது மற்றைய அரச அனுதாபிகளோ"சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு"ஆதரவாகப் பைத்தியகாரத்தனமாகக் கருத்தாடி, நம்மக்களைக் கேவலமாகச் சுரண்டிக்கொள்ள முனைதல், மிகக் கேவலமானதாகும். தமிழரின் குருதியில் கும்மாளமடித்த காலங்களையெல்லாம் மறந்து- அவர்தம் கொஞ்சநஞ்ச அரசியல்-வாழ்வாதாரவலுவையும் தங்கள் தேவைக்கேற்றவாறு "அரசியல்"ஆக்கி,அதுள் தமது இருப்புகளைக் காக்க முனைதலென்பது மிகக் கெடுதியானது.இவர்களை இனங்காணுதலென்பது "நான் சொல்லியோ-எழுதியோ" அல்ல.மாறாக, இவர்களது அரசியல் நடாத்தையையும்,இவர்தம் செயற்பாட்டையும் இதுவரையான காலவோட்டுத்துள் சீர் தூக்கிப் பார்த்தும்,இதுள் எந்தப் பொழுதில் எவரை "எதிர்த்து-ஆதரித்து" இவர்கள் அரசியல் செய்வதென்பதை நோக்கியே இதைச் செய்தாகவேண்டும்-இனம் காணவேண்டுமெனச் சொல்வேன்!

எமது மக்களது வாழ்வு, பலவகைகளிலும் நாசமாக்கப்பட்டு,மனிதவுரிமைகளற்ற காட்டுமிராண்டித்தனமான சூழலிலெமது மக்களின்று வாழும்போது, அன்று,சிங்கள அரசின் அத்துமீறிய யுத்தங்கள் கிழக்கிலும் வடக்கிலும் அவர்களைக் காவுகொண்டு-அவர்தம் சமூகவாழ்வையே சின்னாபின்னாமாக்கியது.இந்த இருள்சூழ்ந்த அவலத்தை மறைத்து, இத்தகைய யுத்தம் புலிகளை-புலிகளின் பயங்கரவாதத்துக்கெதிரானதாகக் காட்டி உலகத்தை ஏய்த புலம்பெயர் தமிழ்குழுக்கள்-கட்சிகள் இந்தியாவின் எலும்புத்துண்டுக்காக நமது மக்களின் எதிர்காலத்தோடு தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காகப் பொறுக்கித்தனமாக அரசியல் செய்யும் இன்றைய சூழலாக இந்த "சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு" எமக்கு முன் விரிகிறது!இதைப் பாசிசத்துக்கு எதிரான நகர்வாகச் சொல்லும் இராஜகரனது அரசியல் இருப்பே இன்று இந்தப் போலிகளை "ஜனநாயகத்துக்கான செயற்பாட்டாளர்களாக்கி" ஆதரிப்பதால்மட்டும் சாத்தியமாகிறது! மாநாட்டை ஆதரிப்பதென்பது புலி எதிர்ப்பாகிறதாம்!புலியோ செத்துச் சிதைந்து எங்கோவொரு மூலையில் வர்த்தகஞ் செய்கிறபோதும் புலியே இவர்களுக்குப் பெரிய சக்தியாகவும்-முரண்பாடாகவும் இருக்கு!

ஈழப் போராட்டம்- போராட்டத்துக்குப் பின்பான அரசியல் மக்களின் இருப்பிடங்களை விட்டுத்துரத்தியடித்தபோது,அவர்களின் வாழ்வாதாரத்தச் சொத்தைத் திருடிக் குவித்துள்ள செல்வங்களும் அதிகாரங்களும் அதனூடாகப் பெறப்பட்ட-பெறப்படும் பதவிகளும் புலியெதிர்ப்பு முகாமெனக் கூறப்படும் சிங்கள அரசின் அடிவருடிகளிடம் பாரிய அதிகாரச் சுவையை நாக்கில் வீணியூறும் படியாக ஆசையாக்கி விட்டுள்ளது.இதன்வாயிலாகவெழும் அற்ப விருப்புகள் மக்களின் உரிமைகளையே பாசிச அதிகார மையங்களுக்கு அடகு வைத்துத் தமது நலனை அடைவதில் குறியாகவுள்ளது.இத்தகைய சூழலில்தாம் இன்று பற்பல புலம் பெயர் "இடதுசாரி-ஜனநாயக"மாபியாக்கள்இந்தச் சூழலில் தமது பங்கைக் குறித்து இயங்குகிறார்கள்.இவர்கள் போடும் பாசிசத்துக்கு எதிரான எழுத்தாளர் இயக்கம்-ஊக்கம் என்பதெல்லாம் தமது அம்பலப்பட்டுப்போன திசைவழியைத் தட்டிவைத்து மறைத்துக்கட்டி மக்களை ஏமாற்றிப் பிழைப்பதே!


இந்த இழி அரசியல்சூழலுக்குள் சிக்குண்ட புலத்து-நிலத்து மக்கள் தம் எதிர்காலத்தை இராணுவப் பாசிசவொடுக்குமுறைக்கு,ஆயுதக் குழக்களின் அராஜகத்துக்கு இரையாக்கி வருகிறார்கள். மக்களின் உயிருடன் விளையாடும் அதிகாரத்துவத்துக்கான போராட்டங்களால் ஆளும் வர்க்கங்கள் தத்தமது நலனைக்காத்துவரும் இந்த "மக்கள் விரோத அரசியலை" எங்ஙனம் முறியடிப்பது?


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
04.01.2011