Thursday, December 05, 2013

புலத்து இடதுசாரிகள்தாம் புரட்சியாளர்கள்!

ந்தச் சூழலுள்  தமிழ்பேசும் மக்களாகிய நமது  அரசியல் வாழ்வு குறித்து யோசித்தோமானால்,"நாம் எப்படித் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறோம்?இந்த ஏமாற்று வேலையை எமக்குள் இருந்து மிகக் கச்சிதமாக நடாத்தி முடிப்பவர்கள் எவர்கள்?" என்று கேள்விகள் தொடர்கின்றன!


நாம் எங்ஙனம் ஏமாற்றப்பட்டோம்?


 "தமிழீழ" விடுதலை,சுதந்திரம்-சுய நிர்ணயமென்றதெல்லாம் எப்படிப் போயுள்ளது?


புலம் பெயர் புலிகளதும்-மாற்றுக் குழுக்களதும் நாணயம் எந்த வகையானது?


இவர்களது அரசியலது தெரிவில் மலிந்துலாவும் நலங்கள் என்ன-தமிழ் "இடதுசாரி"யர்களாகத் தம்மை வலிந்து நிறுவும் குழுவாத மனிதர்கள் எமது மக்களுக்கெதை வழங்க முடியும்?


இவர்கள் ஒருதரையொருவர் கழுத்துவெட்டக் கங்கணம் கட்டிச் செய்யும் சதி வலைகள் எத்தகையவை?


இவைகள் குறித்தான குறைந்தபட்சப் புரிதாலாவது ஒரு பொதுவெண்ணவோட்டமாக உருவாகாதா?புலத்துப் "புரட்சி-இடதுசாரிய" மாபியாக்கள்  பாணியிலான சூழ்ச்சி அரசியலைப் பின்னப் பற் பலக் குள்ள நரி "இடது போலிகள்"ஒவ்வொரு திசையிலும் நமது மக்களது நலன்கள் குறித்து வகுப்பெடுக்கின்றன.இத்தகைய மனித விரோதிகளது தெரிவுக்கு "எது-எப்படி" ப்  பலியாகிறதென்றவுண்மை "மக்கள்" நலன் எனும் முகமூடியோடு சதா நம்மை எட்டுகின்றன.
பார்க்கும் இடமெங்கும் போலி "இடது சாரிகளது" கை மேலோங்கியிருக்கிறது. அவர்கள், புலிகளது பினாமிகளாக இருந்த அன்றைய அதே, அரசியலோடின்றும் பொதுத் தளத்தில் மயிர் பிடுங்கும் விவாதமெனத் தள்ளும் எழுத்துக் குப்பைகள் அற்பத் தனமாக மக்களை ஏமாற்றுவதென்பதையெவருமிலகுவில்  அறிய முடியாதபடி தகவமைக்கப்படுகிறது "புரட்சி வேடம்" தாங்கும் காலம்!.


முன்னிலைச் சோசலிசக்கட்சியினதும் அதன் லொபிக் குழுவான சமவுரிமை இயக்கத்தினதும் பெயரால் தொடர்ந்து, ஏமாற்றப்படும் இளைஞர்களைப் புது வகையாக மொட்டையடிக்குமொரு  ஒடுக்குமுறைச் சூழலைப் புரிந்துகொள்வதென்பது , இதற்கு மாற்றான வழியொன்றைத் தேடுவதென்று நம்பவேண்டாம்.குறைந்த பட்சம் போலிகளது வலையிற் சிக்காதிருக்க விழிப்படைதலென்றே பொருள்!இதுவரை,தமிழையும்-,ஈழத்தையும் சொல்லிக் கொல்லப்பட்ட மக்களது உடல்களின் மீதேறித் தமது செல்வத்தைத் தக்கவைக்க முனையும் சமூக விரோதிகளை இனங்கண்டாக வேண்டும்.


புலம் பெயர் மண்ணிலிருந்தபடி "புரட்சி" பேசும் இந்தப் போலிகள் தாம் வாழும் நாட்டு இடதுசாரியப் பாரம்பரியத்தோடு துளியளவும் தொடர்பற்ற போலிகள்-பொய்யர்கள்!இவர்களது எஜமானர்கள் நிலத்தில் முன்னெடுக்கும் "பின் ஈழப்போராட்ட ஆயுதக் கலாச்சாரமானது" மீளவும்,கொலையைக் குறித்தே இயங்குகிறது.இதைச் சாத்தியப்படுத்திவிடப் புலத்திலிருந்தபடியே கை காட்டும் இந்த ";இடதுசாரி-மாற்றுக் கருத்து" மாபியாக்கள், எப்பயெப்படியோ "எவரையும்"  போட்டுத் தாக்கித் தம்மை நிலைப்படுத்துவதில் பல பக்கப் "புரட்சிகர"  வர்ண ஜாலக் கட்டுரைகளோடு கடந்த 25 ஆண்டுகளாக நம்மையெல்லாம் ஏமாற்றும்போது இவர்களது வரும்படியும்-இந்த எதிர்ப் புரட்சிகரப் பாத்திரமும் தொடர்ந்து இயங்கிக்கொண்டேயிருக்கிறது.


தாம் வாழும் நாட்டின் எந்தப் போராட்டத்திலும் தம்மை இணைக்காத இந்தக் கூட்டம் தமக்கும் புரட்சிக்கும் வரலாறிருப்பதாக ஏப்பம் விடுகிறது.இதை, நம்பும்படி மக்களை வற்புறுத்துகிறது-மற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்க முனைகிறது.முன்னிலைச் சோசலிசக் கட்சியின் உடைவை மறைத்து மீளவும், மக்களை முட்டாளாக்கித் தமது தொடர் சேவையைச் செவ்வனவே செய்ய மற்றவர்களைக் கொச்சைப்படுத்துகிறது, இந்தப் புலத்து இடதுசாரி மாபியாக் கூட்டம்.


இத்தகைய ஏமாற்று அரசியலுக்குப் புலத்து-நிலத்துத் தமிழ் இளைஞர்கள் எங்ஙனம் பலியாகினார்கள்?


இன்றைய நமது போராட்டத்தின் வீழ்ச்சிக்குப் புலிகள்தான் காரணம் என்ற ஒற்றைப் பதில் நியாயமாகத் தெரியவில்லை.எனவே,புலிகளை முன்னே தள்ளியபடி அவர்களின் பின்னே, மறைந்திருக்கும் சக்தி எது-ஏன் எம்மைப் புலிகளினூடாகத் தோற்கடித்தார்கள்-கொன்றொழித்தார்கள்?


இந்த அழிப்புக்கும் மேற்காணும் புலம்பெயர் போலி "இடது-வலதுகளுக்கும்" எத்தகைய தொடர்புகள் இருந்தன-இருக்கின்றன?
ஆனால்,அதைவிட,இன்றைக்கு அனைவரும் சுயமாகப் பதில்களைத் தேடி இந்த மாபியாக்களது எதிர்ப் புரட்சிப்  போராட்டம்குறித்து மீள் மதிப்பீடுகள் செய்வது அவசியம்.

நம்மைப் புலிகளும், ஏனைய ஆயுதக் குழுக்களும் ஏமாற்றிவிட்டார்கள்.

இவர்களை வைத்து நம்மை வேரோடு மொட்டையடித்த அந்நியச் சக்திகள் இன்று தமது நலன்களை இலங்கையில் எட்ட முனைகின்றன.

அந்த முயற்சிக்குப் பங்கம் ஏற்படாத முறையில் அவர்களது  சேவர்கள்"இடது-புலம்பெயர் புரட்சிகர அணிகள்-மாற்றுக் கருத்தாளர்கள்"எனும் போர்வையில் தமக்குள் முட்டிமோதுகின்றன.

இந்தப் போலிகளில் எவரும், மக்களது நலனை முதன்மைப் படுத்தும் எந்தவொரு அமைப்பையும் நிறுவ முடியும்.அதன் வழியாக நமது மக்களது சுயவெழிச்சியை வேட்டையாட முடியும்.இது,மிக ஆபத்தான காலம்.ஒரு முன்னிலைச் சோசலிசக் கட்சி விழுந்தால், இன்னொரு போலி அணியை முன் தள்ளும் அனைத்துப் பலமும் இலங்கை-இந்திய ஆளும் வர்க்கங்களுக்குண்டு.அந்தப் பலத்தோடு புலத்தில் "புரட்சி" வேடங் கட்டப் பல நூறு இரயாகரன்களும் உண்டு-உண்டு!!!

எல்லாமே, மக்களது நலன்வழியானதென இத்தகைய எச்சில் பேய்கள் கூக் குரலிடுகின்றன.இதுள், முன்னணியில் எவருள்ளார்கள் என்பதிற்கூடப் பல போட்டிகள்.

தமிழ்பேசும் மக்களை மட்டுமல்ல முழுமொத்த மனித சமுதாயத்துகே எதிரான போக்கில் இந்தக் குழுக்கள் இயங்குகின்றனவென்ற சிறியவுண்மைகூடப் பகிரங்கமாகப் பேசப்படுவதில் பல சிக்கல்கள்!இவர்களால் முன் தள்ளப்படும் சந்திப்புகளும்,வெளியிடப்படும் தொகுப்புகளும்-பகிரங்கவுரையாடல்களும் ஒடுக்குமுறையாளர்களது தயவிலும்-நிகழ்சிக்குட்பட்டுமே இயக்கப்படுகிறதென்றவுண்மையைப் பரவலாகப் பேசப்பட வேண்டும்.

இதன் வழிகொண்டு, " புரட்சி-விடுதலை "  என்ற மோசடி மாய்மாலங்களை புரிந்தோமானால் வருங்காலத்திலாவது  "குறைந்த பட்சமாவது மனிதர்களாய் வாழ்வதற்குத் தமிழ்பேசும் ஈழ மக்களுக்கு"  இப் புவிப்பரப்பில்  உரித்துண்டாகலாம்!

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
05.12.2013