Friday, February 21, 2014

ஏழு பேர்களையும் விடுதலை செய்வது குறித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின்

ஏழு பேர்களையும் விடுதலை செய்வது குறித்த தமிழக முதல்வர் செயலலிதாவின் திடீர் அறிவிப்பு மிகப் பெருஞ் சதிக்குட்பட்டது.

23 ஆண்டுகளாகச் சிறையிலுள்ள ஏழு பேர்களையும் விடுதலை செய்வது குறித்த தமிழக  முதல்வர் செயலலிதாவின் திடீர் அறிவிப்பு மிகப் பெருஞ் சதிக்குட்பட்டது.இது பார்ப்பனச் சோவினது இராச தந்திரமாகும். இது குறித்துச் சில விடையங்களை நோக்குவோம்.அப்போதுதாம் இவர்களது இரட்டை முகம் புரியத்தக்கதாக மாறும்.

    "ராஜீவ் கொலையாளிகள் விடுதலை’’ என்றலறும் ஊடகங்களும்  "தேசியவாதிகளும்" அவர்கள் பின்னாலுள்ள இந்திய ஆளும் வர்க்க நலன்களும் புரிந்துக்கொள்ளத்தக்கவுண்மைகளை மறைக்கின்றன!இராஜீவ் படுகொலை என்பது திட்டமிடப்பட்ட இந்திய ரோவின் [Research and Analysis Wing  ]சதியாகும்.இது வொரு "புலியைப் பயன்படுத்தும் " தந்திரமாக RAW வால் நிகழ்த்தப்பட்டது.அதாவது இந்திய ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவுக்கு காந்திக் குடும்ப அரசியல் ஒவ்வாது.அந்தப் பிரிவுக்குக் கணிசமான அளவுக்கு இந்திய ரோவுக்குள் ஆதரவுண்டு.அஃதுதாம் இப்போது தேர்தலில் வெற்றி சூடுமெனக் கருதப்படும் மோடிக்குப் பின்னால் நிற்கும் ஆளும் வர்க்கம்.ராசீவ் கொலையின்வழி இந்திய ஆளும் வர்க்கம் ஒரே கல்லிலிருந்து 3 மாங்காய்களைப் பறித்தது!

    1: தமிழகத்திலிருந்து ராசீவ் படுகொலை செய்யப்பட்டதன்வழி தமிழ்நாடு ஈழத்துக்காகக் கெம்பி எழுவதைத் தடுத்தது.

    2.புலிகளையும் தமிழகத்து மக்களையும் உணர்வுரீதியாகப் பிளந்து அப்புறப்படுத்தியது.

    3:இந்திய ஆளும் வர்க்கம் தன்னால் படுகொலை செய்யப்பட்ட மாகத்மா காந்தி;சய்சேய்காந்தி;இந்திரா காந்தி போன்றவர்களது வரலாற்றுப்பழியிலிருந்து விடுபட்டு ராசீவ் காந்தியின் கொலைக்குள் முழு இந்தியர்களையும் திணித்தது.

     இதைத் திட்டமிட்டு மறைக்கும் ஆளும்வர்க்கத்தின் வினையான தொகையில்:

 "ஈழத்தில் இந்திய இராணுவம் படுகொலைகள்-அட்டூழியம் புரியவில்லை,அதை நாங்கள் நம்பத் தயாரில்லை".எனப் பார்பன ஊடகங்கள்,

 "இவையெல்லாம் நடந்தது, உங்கள் பார்வையிற் பிழையுள்ளது" -பாதிக்கப்பட்ட நமது குரல்.

 1): குஜராத்தில் 3000  இந்தியர்களை-இஸ்லாமிய மக்களை  நரோந்திர மோடி என்ற பாசிஸ்டு கொன்று குவிக்கும்போது, இந்திய ஆளும் வர்க்க ஊதுகுழல் ஊடகங்கள் தமது எஜமானர்களின் கூற்றுக்களை அப்படியே வாந்தியெடுக்கும்போது:"ஓரிரு அசம்பாவிதம் நடந்தது,அதுவும் அப்பாவி இந்துகள்தாம் பலியாகியுள்ளார்கள்,இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் இந்துக்கள் தமது உயிரை-உடமைகளைப் பறிகொடுக்கிறார்கள்".என்றதும்,

 2):காஷ்மீரில் பாகிஸ்தான் இந்தியாவுக்கெதிராக அவர்களைத்தூண்டி இந்தியாவைத் துண்டாட முனைகிறது, நமது படைகள் காஷ்மீரில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து நமது நாட்டிற்காகச் சாகிறது. என்றும்,

 3): சங்கர மடத்தில் நடந்தது கொலையே அல்ல, அது தற்கொலை. பெரியவாளைப் பிடிக்காத சில கிரிமனல்களின் இச் செயலால் சங்கரமடத்துக்கு ஆபத்து! என்றும்,செய்திகள் பின்னும் ஆளும் பார்ப்பனிய-பனியாச் சாதிகளின் பாரததேச ஊடகங்களால் செய்திகோர்க்கும்  ஒருவர், அதைச் சார்ந்து எது உண்மை ,எது பொய்யெனத் தீர்மானிப்பதால் "ஒரு உண்மை பொய்யாகவும்,பொய் உண்மையாகவும்" மாற்றப் படுதல் அவரது உலகத்தில் மட்டுமே சாத்தியம்!அதை அவர் நம்பும் தளமும் முற்றுமுழுதாக அவரது அறிவுத் தளத்தைச் சார்ந்தேயிருக்கிறது.இத்தகைய மனிதர்களைப் பார்த்துப் பரிதாபப் படத்தாம் முடியுமா அல்லது மாற்றுச் செயற்பாடுகளுண்டா? ஆம் உண்டு! ஆனால் அது மானுடநேசிப்பால் மட்டுமேதாம் முடியும்.அதன்வழி ஏன்-எதற்கு- எப்படி என்ற கல்வியினாற்றாம் முடியும்.24 மணிநேரம் சினிமாவுக்குள்ளும்,குமுதம்-ஆனந்தவிகடன்,இந்தியா டுடே-நியூஸ்வீக் மற்றும் இந்தியத் தேசிய மாயைக்குள்ளிருப்போரால் இது சாத்தியப் படாது! ஈழத்தில் இயக்கவாத மாயைக்குள்ளிருக்கும் ஒருவர் தாம் சார்ந்த இயகத்துக்கு வக்காலத்து வேண்டுவதுபோற்றாம் இதுவும் ஒரு உளவியல் மயக்கம்-வெறி.இந்தக் கேடுகெட்ட மயக்கத்தையேற்படுத்தும் பாரிய பரப்புரைக் கட்டுமானும் அதிகார வர்க்கத்திடம் மட்டுமேயுண்டு. இதிலிருந்து விடுபடுதல் அவ்வளவு இலகுவாக இருக்காது! எனவே, இந்த உண்மையான "இந்தியர்களும்,தமிழர்களும்"  நம் மத்தியில் மலினமாகக் காணப்படுவார்கள்.இவர்கள் எப்போது மானுடராவாரென்றால் தத்தமது வீடுகளில் குண்டுகள் வந்து கொலைகளைச் செயயும்போதா??இல்லை.மாறாக மாற்றுக் கருத்துகளுக்குச் செவி சாய்ப்பதாலும்,விவாதிப்பதாலும் மட்டுமே முடியும்.

 எனவே இன்னும் மேலே செல்வோம்.இன்றைய சந்தைப் பொருளாதாரம் மக்களை இனங்களுக்கூடாக-மதங்களுக்கூடாக-மொழிக்கூடாகக் கோடு கிழிப்பதைத் திவிர்க்க முனைகிறது,கூடவே ஒரே மொழி,மத,பண்பாட்டை வலியுறுத்தித் தனது இருப்பை உறுதிசெய்யமுனையும் பல் தேசியச் சந்தைப் பொருளாதார மூலதனச் சுற்றோட்டம் பற்பல வர்ணக் கனவுகளை இளைஞ(ஞி)ர்களிடம் கொட்டி வரும் சூழலில்இந்தியத் துணைக்கண்டம் போன்ற குறைவிருத்திச் சமுதாயங்களில் பழைய பூர்சுவாக்கருத்தாக்கங்களும்-படிமங்களும் இன்னும் மலினப்பட்டுக் கிடப்பது இங்கெல்லாம் வெறும் குறுந்தேசிய வெறிகளும்,கிட்லர் பாணியிலான இனவாத (பாரதீய ஜனதா மற்றும் ஆர்.ஏஸ்.எஸ் கும்பலை விழிகள் முன் கொணர்க) அரசியற்போக்கினதும் திட்டவட்டமான அரசியற் சூழலின் வெளிப்பாடே.இது அன்றைய மேற்குலக மூலதனத் திரட்சியின் தொடர்ச்சியாகவெழுந்த மதிப்பீடுகளினது வடிவமே.இங்குதாம் நிலம் சார்ந்த-மொழிசார்ந்த-மதம் சார்ந்த புனைவுகளாற் மனிதவுடல்கள் இனம் காணப்பட்டதும்,பயிற்றுவிக்கப்பட்டததும் நடந்தேறியது.அது மானுடர்தம் வாழ்வை பொருள் சார்ந்த குவிப்புறுதியூக்கத்துக் கேற்வாறு  மீள் மதிப்பீடுகளைக் காலாகாலம் ஏற்படுத்தித் தீர்மானகரமானவொரு உளவியற்றளத்தை வியூகமாக்ககொண்டு முதலாளிய நலன்களைக் காத்துக்கொண்டது-கொள்கிறது!

இன்று பல்தேசிய உற்பத்தி-நுகர்வுக் கொள்கையானது தேசங்கடந்த பெருமூலதனத்தின் நலனின் பொருட்டு பற்பல மதிப்பீடுகளை மீளுருவாக்கஞ் செய்கிற இன்றைய நிலையில்-பல்தேசியக் கம்பனிகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நடுத்தர முதலாளி வர்க்கம் வெறுமையோடு,விரக்திக்குள்ளாகித் தனது இருப்புக்கான ஜீவமரணப் போராட்டத்தை குறுந்தேசிய வெறியாகவும்-தேசப் பாதுகாப்பு,தேச நலன் எனும் மாய்மாலக் கருத்துகளாலும் மக்களைக் கோடுகிழித்துத் தனது சந்தைவாய்பைத் தொடர்ந்து பாதுகாக்க முனையும்போது இத்தகைய கெட்டிதட்டிய உடலரசியலும்,உள தேசபக்தத் நெறிமுறைமைகளும் மனிதவுடல்களைக் காவுகொள்கிறது.எனறுமில்லாதவாறு இனவாதிகள் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கட்டில் ஏறுவது மேற்குலகில்கூட தொடர்கதையாக இருக்கிறுது.இந்தியாவில் பாரதிய ஜனதாவுக்குக் கிடைத்த கிடைக்கும் வெற்றி தோல்விகள் இத்தகைய ஊசாலாட்ட ஊஞ்சற் உளவியலே தீர்மானிக்கிறது.

 இதன் அப்பட்டமான நோயே "உண்மையான இந்தியன்-பார்ப்பான் -திராவிடன் ", தமிழன் போக்குகள்.என்றபோதும் பெருந்தேசிய-ஆளுமையுள்ள இனமாகவிருக்கும்  மக்களுக்குள் நிலவும் குட்டி-தரகு முதலாளிய முரண்பாடுகள் தத்தம் நாடுகளுக்குள் நிலவுகின்ற பொருளியற்போக்குக்கேற்றவாறு வன்முறைசார்ந்தும் வன்முறைசாராததுமான ஒடுக்குமுறைகளால் சில தீர்வுகளுக்கு வருவதை தேசத்தின் நலனின் பெயர் மூலம் சித்தரிக்கின்றனர்.இந்தச் சிக்கல் சந்தைவாய்பின் இருப்புக்காக மாற்று மொழிபேசும் மானுடர்களையும் தமது சொத்தாகப் பயன் படுத்த முனையும் போதும்- பாரிய நிலம் வலிதுருவாக்கப் பட்டு அதை ஆயுதம் தரித்த வன்முறை ஜந்திரத்தால் காக்க முனையும்போது அந்த அரசும் நாடும் குறிப்பிட்ட மாற்று மொழிமக்களுக்குச் சிறைக்கூடாமாகி விடுகிறது.இந்த நிலையில் இந்தியா என்ற செயற்கைத் தேசமும் இதற்கு விதிவிலக்கற்று "மாற்றுத் தேசிய இனங்களுக்குச் சிறைக்கூடம்" தாம்!இந்தத் தேசம் நிச்சியமாக உடைந்து சிதறக் காத்திருக்கிறது.

இத்தகைய நிலை தோன்றும்போது ஆளும் வர்க்கம்"வன்முறைசார-வன்முறைசார்ந்த ஒடுக்குமுறைகளைக் கொண்டு மக்களையடக்க முனைகிறது. இதுதாம் ஈழத்திலும் இந்திய ஆளும் வர்க்க நலன் மேற்கொண்டது.இன்று நாகலாந்து,மிசோரம் மற்றும் காஷ்மீரி மக்களை இந்த அழிவு அரசியல் படுத்தும் பாட்டைப் புரியாத இந்த நடுத்தர வர்க்கம் ஈழமக்களின் அழிவைக்காணுமெனக் கனவு கண்டால் அது தப்பானது.தற்போதைய நிலையில் இராசீவ் படுகொலையில் குற்றஞ் சாட்டப்பட்டவர்களது தூக்குத்தண்டனை இரத்து -விடுதலையென்ற அரசியலுள் ,கட்சி அரசியல் செய்யும் சதி நிரம்பிய அரசியலானது தமிழ்நாட்டுப் பார்ப்பனச் சாதிய நலன்களோடு பின்னப்பட்ட அதிகாரத்துக்கான வியூகமாக மாற்றப்படுகிறது.

 இது ,மகாபாரதச் சகுனியினது பாத்திரத்தை செயலலிதாவின் அரசியல் பாத்திரத்தில் இனங்காணத்தக்கதாகவே இருக்கிறது.தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளிவிடும் இராச தந்திரத்தைச் சோவின் தொட்டிலில் கற்றுக்கொண்ட தமிழ்நாட்டு முதல்வரோ தனது கெடுதியான அரசியலை 23 ஆண்டுகள் சிறையில் வாழும் மனிதர்களது உளவியலோடு விளையாடுவது ( தூக்குத்தண்டனை இரத்துவென உச்ச நீதிமன்றம் அறிவித்தவுடனேயே அவர்களைத் தமிழ்நாடு விடுதலை செய்யுமெனப் "போட்டுக்கொடுத்து" க் காங்கிரசுக் கயவர்களை எழுச்சிகொள்ள வைத்ததும்; அதன் விளைவால் அவர்களது விடுதலையைத் தட்டிக்கழிக்க வைக்கும் முயற்சி) மனித நாகரீகமற்றது.

இந்த மனித நாகரீகத்தை ஒரு போதும் பார்ப்பனர்களிடம் காணமுடியாது.

     ஏனெனில் ,இந்தியாவில் 230 மில்லியன்கள் மனிதர்களைத் தீண்டத்தகாதவர்களென ஒதுக்கி -ஒடுக்கும் இந்தச் சனாதனவாதிகளிடம் எந்த மனிதாபிமானமும் கிடையாதென்பதற்கு இந்தத் தீண்டாமைச் சூத்திரமே போதுமான ஆதாரம்.இவர்களிடமிருந்து எந்த ஜனநாயக விழுமியத்தையும் நாம் எதிர்பார்ப்பது மடமையானது.

 ப.வி.ஶ்ரீரங்கன்
21.02.2014