ஞானி.
அன்பு வாசகர்களே!உங்களுக்கு நானொரு கதை சொல்லப் போகிறேன்.ஒரு ஊரில ஒரு ராசா இருந்தாரம்...
என்ன புண்ணாக்குக் கதை? என்ர ஆச்சியில இருந்து அம்மாவரை இந்தக் கோதாரிக்கதையைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள்... இப்ப நானும் இதையே தொடர்ந்தால்...
வேண்டாம்!கதை சொல்லுதல் வேண்டாம்,இப்படிக் கதை சொல்ல வெளிக்கிட்டால் இந்தத் தமிழர்கள் இதைக் கதையெண்டுவிட்டு தங்கட சோலியைப் பார்த்துப்போடுவினம்.பிறகு அந்த மேட்டர் அப்பிடியே வளர்ந்து தங்கட மூஞ்சியில உதைக்கிற வரையும் அவை நம்பப் போறதில்லை.
ஆகையினால் இது கதையில்லை.என்ர ஊரிலுள்ள ஒரு ராசாவின் உண்மைக் கதை.அவர் முன்னொரு காலத்தில் ஏறாவ+ர் செங்கலடியெல்லாம் பேர் போன ராசா.மட்டக்களப்பு மான்மியத்தின் மகத்தான கதா நாயகனே அவருதான்.இந்தக் கதையைத் தொடக்கிற போக்கில நானும் அவரைப் பற்றி அறியிறமாதிரித்தான் ஏதோ சொல்லுவமெண்டு யோசிக்கிறன்.
அது வந்து பாருங்க நம்மட சனங்களுக்கு ஒண்டிருக்க இன்னொன்றுக்க கால் வைக்காட்டிச் சரிப்பட்டுவராது.இது எனக்கும் சரியாகப் பொருந்துமெண்டு பலபேர் யோசிக்கினம்.ஆக மொத்தமாக இந்தக் கதைக்கூடாகவாவது நம்மட சனங்களைக் கண்ணைப்பொத்தியடிக்கும் ராசாவைக் காட்டுவதாக ஆச்சி அடிக்கடி சொல்லுவா.இந்த ஆச்சியின்ர புருஷன் அதுதான் என்ர அப்பு ரொம்பக் கெட்டிக்காரன்!ஆருக்கும் பொடி வைச்சுப் பேசுறதே அந்தக் கிழத்துக்கு வேலை.அப்படிப்பட்ட சீமானுக்குப் பேரானாகப் பிறந்த இந்தச் சீவனுக்கு எதுவும் கைவராதிருக்கு!அந்த வடுவைப் போக்கிற மாதிரியொரு கதை சொல்ல வெளிகிடுவமெண்டால் ஆச்சி சொன்ன ராசாக் கதைதான் மனதுக்குள்ள கிடந்து பிராண்டுது.
மட்டக்களப்புக்கு யாழ்பாணத்தில இருந்து எங்கட "அம்மா மாமா" (அன்னையின் தாய்மாமன்) வருவார்.அடிக்கடி அந்த மனுஷன் வாறபோதெல்லாம் அம்மாவின்ர மூஞ்சியல மகாவலி ஆறுபோல தெளிந்த மாதிரியும் தெளியாத மாதிரியும் சரியான "றீ ஆக்சன்" வந்து துலையும்.ஆனால் அப்பருக்குச் சந்தோசம்.அம்மா விதம் விதமாகச் சமைச்சுப் பரிமாறுவாள் தன்ர மாமனுக்கு.அடிகடி தொட்டுப் பேசுவாள்.தன்ர தாய்மாமன் எண்டு அவள் மனாதாரச் சொல்லுவாள்.அம்மாவுக்கு மட்டுமல்ல அப்பருக்கு,எங்களுக்கு எல்லாருக்கும் புது உடுப்புகள் கொண்டுவருவார் அம்மா மாமா.அவரு பெரிய முதலாளி.புடவைக்கடையள் வைச்சிருகிற மனுஷன்.
தமிழ்நாட்டுக்குப் போய் பிடவைகள் அள்ளிக் கொண்டு வருகிறவராம்.அதை ஊர்ச்சனங்கள் கள்ளக் கடத்தல் எண்டு சொல்லுகிறவை.தோணியில போய் எல்லாத்தையும் அள்ளி வருகிற எங்கட மாமாவுக்கும் இந்த ராசாக் கதை சரியான விருப்பம்.என்ர அம்மம்மா அவரையும் இருத்தி வைச்சு அவிட்டுவிடுவா.அம்மா மாமா சாரயத்தைக் குடிச்சுக் கொண்டு அம்மாவின்ர தோளில கைப்போட்டுக் கொண்டு அம்மம்மாவின் கதைகளைக் கேட்டு ரிசிப்பார்.அப்பரும் குசுனிக்குள்ள எதையோ பண்ணிக் கொண்டு இறைச்சி சமைப்பார்.அம்மா மாமனுக்கான ஸ்பெஷல் அயிட்டம் எப்பவும் காட்டுப்பண்டிதான். அதைச் சமைப்பதில் அப்பன் கெட்டிக்காரன். அம்மா சுத்த சைவம்.எதையும் சமைப்பா,ஆனால் வாயிக்குப் போகாது இந்த மச்சச்(மச்சம் என்றால் புலால் கறி) சாப்பாடுகள்.
அம்மாவின்ர குடும்பம் கோயில் அர்சகர்களாக இருக்கிற குடும்பமாம்.அதால இந்த மச்சமெல்லாம் சமைக்கிறதில்லை.ஆனால் அம்மாமன் எல்லாத்தையும் பழகிப் போட்டான்!எல்லாமெண்டால்...எல்லாம்தான். அப்பன் அடிக்கடி கோயிலுக்குப் போறபோது அம்மாவைத் தூக்கினவராம்.மட்டக்களப்பிலிருந்து கஜுக் கொட்டை கொண்டுபோய் கொடுத்துக்கொடுத்து அம்மாவை வழிபண்ணினதாகச் சொல்லுவா அம்மா.
இப்பிடியான நல்ல பொழுதுகளிலதான் நானும் இந்த ராசாக் கதையைக் கேட்டனான்.இப்பயிருக்கிற இந்தப் பொழுதில் நம்மட ராசா நிசமான ஆள்தானோ எண்ட கேள்விகள் உங்களுக்கு வரும்.அது எனக்குத் தெரியாது.நீங்களே முடிவைப் பண்ணுங்கோ.
இனிக் கதைக்குள்ள போவம்:
ஒரு ஊரில ஒரு ராசா இருந்தாரம்.அவருக்குப் பெரும் செல்வம் குவிந்து கொண்டே இருந்தது.ஊர்ச்சனங்களிடம் அவர் வரி அறவிடுவாரம்.ஏனென்று கேட்டால் ராசா கோபித்துவிடுவாராம்.பின்பு கேட்டவரின் தலை கழுமரத்தில் தொங்க விடப்பட்டு"தேசத் துரோகி-எட்டப்பன் கூட்டம்" என்ற அட்டை தொங்குமாம் பிணத்தில்!அப்படியொரு பொழுதுகளை ஊர்ச்சனம் விரும்புவதில்லை.அந்த ராசாவுக்கு அயல் நாட்டு ராசாவின் மகளோடு ஒரு இதுவாம்!அதனால அந்த ராணியின்ர கடைக்கண் பார்வைக்காக தன்ர நாட்டில ஏதாவது புதிய வித்தியாசமான அறிவுப்புகளைச் செய்வார்.அந்த அறிவுப்பு அதி புத்திசாலித்தனமாக இருக்குமாம்.உடனே அயல் நாட்டு இளவரசி தன்ர மகிழ்ச்சியை ஓலை கொடுத்துப் பகிர்வாளாம்.
இப்படியான ஒரு சூழலில் ராசாவின் இந்த அறிவுப்பு வந்தது:
"மகா சனங்களே!இந்த அடங்காத் தமிழின் ராச பரம்பரைக்கு எவராவது வந்து பொய்யுரைக்கும் பட்சத்தில்,அதையும் பொய்யென எமது மாமன்னன் நம்பும் பட்சத்தில்-உங்களுக்கு பதினாயிரம் பொற்காசுகள் அன்பளிப்பாக வழங்கப் படும்"- அழைப்பு ஊரெல்லாம் பறையடிச்சுச் சொல்லப்பட்டது.
ஊரிலிருந்த மகா பொய்யர்கள் எல்லாம் உசாராகினார்கள்.நாளும் பொழுதும் பொய்யுரைக்கும் கவிஞர்களுக்கு இது கொண்டாட்டமாக இருந்தது.அவர்கள் ராசாவை அப்பப்ப பொய்யினால் குளிப்பாட்டினும்,இவ்வளவு பெரிய தொகையை ராசா கொடுப்பதில்லை.ராசாவுக்கு இந்தப் பொய்க் கவிஞர்களை,கதாசிரியர்களை,மந்திரிகளை மடக்கிற திட்டம்.தன்னைவிடப் பொய்யுரைக்கும் இந்தக் கூட்டத்தைத் தானும் மடக்கவேண்டுமென்ற ஆதங்கமும்,தன்ர மூளையைப் பாராட்டி அயல் நாட்டு இளவரசி ஓலை அனுப்ப வேண்டுமென்ற எதிர் பார்ப்பும் ராசாவைப் படாது பாடு படுத்தியது.
அரண்மனையில் காவலர்கள் உசாரானார்கள்.அரண்மனையை முற்றுகையிட்ட பொய்யுரைப்பாளர்களை ஒவ்வொருவராக மன்னனிடம் அனுப்பி வைத்தனர் மெய்ப்பாதுகாவலர்கள்.
என்ன கவிஞரே பொய்யுடன் வந்தீரோ?மன்னன் நட்புடன் வரவேற்றான்.
அதிலென்ன மன்னா சந்தேகம்?இதுதானே நமது தொழில் புதிதாகக் கேட்பதின் அர்த்தம்...-கவிஞர் சண்டித்துரை மிதமான துணிவோடு கேள்வி தொடுத்தார்.
அர்த்தமும் பொத்தமும்!பொய்யைச் சொல்லும் புண்ணாக்கரே!!-மன்னன் கோபமானான்.
மன்னா!நீங்கள் மக்களிடம் வரி அறவிடப்போவதில்லை.-கவிஞர்.
அது சாத்தியம்,நீர் போகலாம்;-மன்னர்
மன்னா! அடுத்த பொய்யர்.
என்ன பொய்யைக் கூறும்!-மன்னர்
நீங்கள் இன்றிலிருந்து யுத்தம் செய்ய மாட்டீர்கள்.அயல் நாட்டோடு சமாதானமாப் போவீர்கள்.
அதுவும் சாத்தியமே!நீரும் போகலாம்.-மன்னருக்குத் தன்ர பொய்மீது அளவு கடந்த நம்பிக்கை வந்தது.
இன்னொரு பத்திரிக்கை ஆசிரியரும் தன்பங்குக்கு இப்படிப் பொய்யுரைத்தார்: மன்னா நீங்கள் உங்கள் பதவியைத் துறந்து,முடியிழந்து,துறவியாகி விடுவீர்கள்.இது நாளைய உங்கள் திட்டம்.
ஓ அப்படியா?இது நடக்கும்,நடக்கும்.நீங்களும் போகலாம்.மன்னன் பொற் காசுகளைத் தொட்டுப்பார்த்தான்.அதை எவருமே பெறமுடியாது என்று கற்பனையில் அங்குமிங்குமாக நடந்தான்.
இப்படியாக ஆனானப்பட்ட பொய்யர்கள் எல்லோரும் முயற்சித்துத் தோல்வியைத் தழுவினர்.
காவலாளிகளுக்குச் சீ எண்ட கதை.எல்லாப் பொய்யர்களும் மௌனமாக வீடு திரும்பிய போது,ஊரிலுள்ள ஒரு வயோதிபர்-வாழ்ந்து கெட்ட கிழம்,ஊரெல்லாம் தன்ர அனுபவத்தால் ஞானி என்றழைக்கப்படுபவர்,ஊத்தை உடுப்போடு தோளில் இரு அட்டாக்களைக் காவியபடி மன்னனின் அரண்மனையை அண்மித்தான்.
கிழத்தைக் கண்ணுற்று காவலாளிகள் தமது ஆயுதத்தை எடுத்து உசாராகினார்கள்."என்ன பெரியவரே,ஏது இவ்வளவு தூரம்?இதென்ன அண்டாக்களோடு வேறு...?காவலாளிகளிலொருவன் கேட்டுக்கொண்டே கிழவரைத் தடுத்தான்.
ஐயா ராசாமாரே ஊரெல்லாம் பஞ்சம்.மன்னரின் வரியால பிழைப்புமில்லை,சாப்பிட வழியுமில்லை... என்றிழுத்தார் கிழவர்.
அதெல்லாம் எங்களுக்குத் தெரியம்.இது என்ன புதிசா பெரியவரே?ஆனானப்பட்ட கவிஞர்களே பொற்காசுகளைப் பெறமுடியவில்லை!நீரோ மன்னனிடம் பொய் சொல்லி...அதையும் அவர் நம்பி....போ,போ! என்ற காவலாளியின் கால்களில் கிழவர் வீழ்ந்தபோது மன்னரிடம் கிழவர் அனுப்பப்பட்டார்.
யாரது பெரியவரே?என்ன இரண்டு அண்டாக்களோடு வந்துள்ளீர்?ஆச்சரியத்துடன் மன்னன் தனது மந்திரிகளைப் பார்த்துச் சிரித்தான்.
கிழவன் மிகவும் அடக்கமாக"மன்னா என் நிலைமையைப் பார்த்தீர்களா?நான் இப்படியானதற்கு யாரு காரணம் தெரியுமா?உங்களது கொள்ளுப்பாட்டன்தான் காரணம்.அவர் என்னிடம் பத்து இலட்சம் பொற்காசுகளை வேண்டினார்.வேண்டியபின் இறந்துவிட்டார்.அவரது கடனை உங்கள் பாட்டன் தருவதாகக்கூறினார்.எனினும் அவரும் தராது இறந்து போனார்.அவருக்குப்பின் உங்கள் தந்தை தருவதாக் உறுதிகூறினார்.அவரும் தராமல் யுத்தத்தில் இறந்துபோனார்.இப்போது எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால் இருபது இலட்சம் பொற்காசுகளை நீங்கள் தரவேண்டும்.ஒரு அண்டாவின் கழுத்துவரை பத்து இலட்சம் போடமுடியும்,மற்றைய பத்து இலட்சம் பொற்காசுகள் வட்டியாக உங்களிடம் எதிர்பார்க்கிறேன்...எனவே இரு அண்டாக்களும் நிறைவதற்கான எனது பொற்காசுகளைத் தந்துவிடுங்கள்.உங்களிடம் போட்டிகள் வைக்குமளவுக்கு இப்போது பணம் உண்டு எனவே எனது பணத்தைத் தந்து உங்கள் நீதியை நிலைப்படுத்தவும் மன்னா".
பொய்!பொய்!!மன்னன் குரலெடுத்துப் பேசினான்.
கிழவரும்"ஆமா மன்னா,இது பொய்தான்!உங்கள் அறிவுப்புப்படி நான் வென்றுள்ளேன்.தங்கள் கைகளால் பொற்காசுகளைத் தந்துவிடவும்.உங்கள் வரிச் சுமையால் ஊருக்குள் எதுவும் விளையவில்லை.இந்தக் காசுகள் ஊருக்கு இனியுதவுமென்றார்.
ஊருக்கோ?உலக்கை...உதவாக்கரை!!யார் அங்கே?மன்னன் உறுமினான்.உடனே கிழவரின் நெத்தியில் "பொட்டு" வைக்கப்பட்டு,கழுமரத்தில் "தேசத் துரோகி"என்ற அட்டையுடன் பிணமானார் அந்த ஞானி.
அம்மம்மாவுக்கு நன்றி.
முற்றும்.
No comments:
Post a Comment