Wednesday, November 08, 2006

கண்ணீர் அஞ்சலி!

கண்ணீர் அஞ்சலி!








22.07.1954 – 30.10.2006



தமிழ்த் தேசிய விடுதலையின் ஆயுதப்போராட்ட ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரும் புரட்சிகர சிந்தனையாளருமான ~மாஉ| என்றழைக்கப்படும் மகாலிங்கம் உத்தமன் அவர்கள் 30.10.2006 அன்று காலமானார் என்ற செய்தியை மிகுந்த மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.


யார் இந்த உத்தமன்!


தமிழ் மக்களாகிய நம்மில் பலரும் அறிந்திராத மனிதர் இவர். ஆனாலும் போராட்ட வரலாற்றிலிருந்து அகற்றப்படமுடியாதவர். மறக்கமுடியாதவர். உரும்பிராயை பிறப்பிடமாகக் கொண்ட மகா உத்தமன் அந்த மண்ணின் மைந்தர்களான பொன்.சிவகுமாரன் சத்தியசீலன் போன்றவர்களுடன் இணைந்து “தமிழ் மாணவர் பேரவை“ அமைப்பை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர். இந்த அமைப்பே முதன் முதலில் மாணவர்களையும் இளைஞர்ளையும் எழுச்சியுடன் அணிதிரட்டிய அமைப்பாகும். தமிழர்களுக்கென தனியரசு தேவை என்பதை வலியுறுத்தியதோடு அதற்கான ஆயுதப் போராட்டத்துக்கும் தமிழ்மாணவர் பேரவை அறைகூவல் விடுத்ததோடு செயலிலும் இறங்கியது. இதன் அடுத்துவந்த செயல்பாடுகளில் சிவகுமாரன் -அரச படைகளிடம் சிக்காமல்- தற்கொலை செய்துகொள்ளவும் ஏனையவர்கள் தலைமறைவாகவும் அந்த அமைப்பு தேக்கத்திற்குள்ளானது.


சென்யோன்ü கல்லூரி மாணவனான உத்தமன் கல்விகற்பதற்காக லண்டன் பயணமானார். கல்விகற்பதற்காக லண்டன் சென்ற உத்தமனின் அரசியல் வாழ்வு இன்னும் தீவிரமடைந்தது. அவரது உலகப்பார்வையும் சிந்தனையும் விசாலமடைந்தது. சர்வதேச முற்போக்கு புரட்சிகர இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டதுடன் அவற்றின் போராட்டங்களிலும் பங்கெடுத்துக்கொண்டார். இவற்றின் பலாபலன்களை ஈழவிடுதலைப் போரட்டத்தில் சுவறச்செய்தார். இவர் ஊட்டிவளர்த்த விடுதலை இயக்கம் (புளொட்) சீரழிவுக்குள்ளானபோது அதிலிருந்து வெளியேறிய புரட்சிகர சக்திகளுடன் (தீப்பொறிக் குழுவுடன்) கைகோர்த்துக் கொண்டதோடு, தமிழீழ மக்கள் கட்சியினை உருவாக்குவதிலும் அதனை வளர்த்தெடுப்பதிலும் உந்து சக்தியாக விளங்கினார்.


சமூக விஞ்ஞானத்துறையில் கற்றுத்தேர்ந்தவரான தோழர் உத்தமன் தத்துவ கோட்பாட்டுத் துறையிலும் பெரும்பங்களிப்பை வழங்கியவராவார். தமிழ்த் தேசியம் குறித்த கோட்பாட்டு விவாதங்களில் பின்புலமாக விளங்கியதோடு முரண்பட்டு நின்ற பலரையும் அதன்பால் வென்றெடுத்தார். உயிர்ப்பு கோட்பாட்டு சஞ்சிகையில் உத்தமனின் பங்களிப்பு மிக முக்கியமானதொன்றாகும். ஈழப்போரட்டம் ஈடாட்டம் கண்ட வேளையில் அதனை கருத்துரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் தூக்கிநிறுத்தவதில் சளைக்காமல் செயல்பட்டார். புரட்சிகர அமைப்பின்றேல் புரட்சியில்லை என்பதற்கேற்ப அமைப்பு உருவாக்கத்தில் காலத்தைச் செலவுசெய்தார். உத்தமன் கோட்பாட்டு ரீதியில் தனது எழுத்தியக்கத்தை மேற்கொள்ளக்கூடிய ஆற்றல் இருந்தும் அவர் அதை நூல்வடிவில் மேற்கொள்ளவில்லை. அமைப்புச் செயற்பாட்டினுள் அவர் கவனம் செலுத்தினார். இருப்பினும் அவர் எழுதிய “சார்புநிலைப் பொருளாதாரம்“ எனும் நூல் அவரது தத்துவ ஆளுமைக்குச் சான்று பகரும்.


““அதிகாரம் புகழ் குடும்பம் மற்றும் வசதி ஆகிய அனைத்தையும் கொன்ட ஒரு மனிதர் எந்தவித கோபமோ தயக்கமோ இன்றி ஒரு இலட்சியத்துக்காக அனைத்தையும் துறக்கத் தயாரக இருக்கும் மனோநிலை அசாதாரணமானது.““


ஆனாலும் இப்படிச் சொல்வது அவருக்குப் பிடிக்காது என்பது அவருடன் பழகியவர்களுக்குத் தெரியும். புரட்சிகர போராட்டவாழ்வில் அவருடன் பயணித்த சகபயணிகள் இடையில் இறங்கிச்சென்றபோதும் அவரது பயணம் மட்டும் நிற்கவில்லை . சலிக்காமல் - உடல் தளர்சியடைந்த போதும் - தொடர்சியாக பயணம் செய்ய வேண்டும் என்ற அவரது அவா தனது முன்னாள் சகபயணி சிவகுமாரனை நினைத்துக் கொண்டு மண்ணுக்கு சென்றபோது அங்கேயே முற்றுப்பெறுமென யார் கண்டது.



““ஒரு கலைஞனுக்குரிய கவனத்துடன் நான் உரமேற்றியருக்கும் என் மன வலிமை என்னுடைய பலவீனமான கால்களையும் களைத்துப்போன நுரையீரலையும் சுமந்து செல்லும்.““ - சே குவேரா



இந்தப் போராளிக்கு எமது அஞ்சலிகள் !


- சுவிü நண்பர்கள்

No comments: