இரும்புப் பிடிக்குள் யாழ்ப்பாணம் மட்டுமா?
இல்லை!
யுத்தம் நடக்கும் அனைத்துத் தமிழ்ப் பகுதிகளுக்கும் இதுவே தலைவிதி.
இதிலிருந்து மீளக்கூடிய எந்த அரசியல் முன்னெடுப்பும் தமிழ் பேசும் மக்களுக்குச் சாத்தியமில்லை.தமிழ்பேசும் மக்களின் அனைத்து வளங்களையும் சிதைத்துச் சின்னாபின்னமாக்கிய இந்த யுத்தம் மக்களின் சமூக சீவியத்தைத் தகர்த்து அவர்களை நாதியற்றவர்களாக்கிய கையோடு,இந்த மக்களின் அனைத்து உரிமைகளையும் மட்டுப்படுத்தி, இலங்கை அரசின் நோக்கங்களை நிறைவேற்றும் அரசியலை முன்னெடுக்கிறது.
புலிகள் ஒவ்வொரு முறையும் யுத்தத்தின் வெற்றி தோல்விகளில் கவனத்தைக் குவித்துத் தமது இருப்புக்கான போராட்டத்தையே குறிவைத்திருக்கிறார்கள்.
என்ன செய்ய?
மக்களின் போராட்டமென்றால,; "மக்களை ஆயுதம் தூக்கிப் பயிற்சியெடுக்க வைத்துப் படம் காட்டுவதென்று புரிந்துள்ள" இந்த அரசியலை கேள்வி கேட்டு,விமர்சித்துக் கொள்ளும் அந்தப் பண்பும் மக்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
ஒரு நிறுவனத்தை இயக்கும் இயக்குனர் தனது முடிவுகளால் அந்த நிறுவனம் பின் தங்கும் பட்சத்தில்"ஏன்-எதற்கு,எப்படி,எதற்காக"என்று காரணங்களைத் தேடி அதன் முடிவுகள் தனது தவறாக இருக்கும்போது,தனது பதவியையே துறந்து புதியவருக்கு-திறமையுள்ளவருக்கு வழி விடுகிறார்.
நம்மிடம் தவறிருக்கிறது.
நமது போராட்டத்தில் சரியான செல் நெறியில்லை.
எமது முடிவுகள்,உறவுகள் தப்பானவை.
எமது எதிர்காலத்துக்கு உதவாத அரசியலை உந்தித் தள்ளும் தலைமையாகப் பிரபாகரன் தலைமை கையாலாகாத தலைமையாக இருக்கிறது.இந்தத் தலைமை தன்னை விமர்சனம்,சுய விமர்சனம் செய்து,தகமுடையவர்களைத் தலைமைக்கு அமர்த்துகிற பண்பின்றிச் சீரழிகிறது.அந்நியர்களுக்கு நம்மை அடகு வைக்கிறது.
எந்தப் பொழுதிலும் தகுதியுடையவர்கள் தமிழ் பேசும் மக்களின் அரசியலை முன்னெடுக்கவில்லை!
இராமநாதன்,அருணாச்சலம் முதல் இன்றைய பிரபாகரன்வரைத் தமிழ்பேசும் மக்களின் உண்மையான உரிமைகளுக்காகப் போராடவில்லை.இங்கே இவர்களிடத்தில் தமிழ்பேசும் மக்களின் உண்மையான உரிமைகளை அவர்கள் சார்ந்து முன்வைக்க முடியாதபடி அந்நிய நட்புகள் கட்டிப் போட்டுள்ளன.
பிரபாகரன் என்பவரால் எந்த முரண்பாட்டையும் சரிவர ஆய்ந்து எமது மக்களின் நலனுக்கேற்ற வகையில் போராடக்கூடிய ஆற்றலில்லை.அவரால் இழக்கப்போவது நமது சுயநிர்ணய உரிமை மட்டுமல்ல,உயிh வாழும் அனைத்து வளங்களுமே!இதற்கு யாழ்ப்பாணம் நல்ல உதாரணம் என்பதற்குக் கீழ்வரும் கட்டுரை சான்று சொல்லும்.
இன்றைய நமது வாழ் சூழல் ஏனிப்படி உருவாகியது?
இதற்கான காரணிகள் எப்படித் தோற்றம் பெற்றன?
நம்மால் இத்தகைய விளைவுகளைத் தடுத்துக்கொள்ள முடியாதுபோனதற்கான காரணம் யாது?
கிழக்கில் கருணா பிளவு ஏன்-எப்படி, நிகழ்ந்தது?
இத்தகைய பிளவுகளை நம்மால் தடுத்திருக்க முடியாதா?
இவற்றைச் செய்யத் தக்க தகமை ஏன் இல்லாதிருக்கிறது?
இவை கேள்விகள்.
எமது தலைமையிடம் எந்த வக்கும் இல்லை.
இவர்கள் செய்யும் போராட்டச் செல் நெறி இன்னும் பல இழப்புகளைத் தமிழருக்கு வழங்கப் போவது நிச்சியம்.நாம் அடிமையாவது அந்நிய சக்திகளால் மட்டுமல்ல-நம்மாலும்தான்.
இதைத் தவிர்த்து, எப்படி நமது உரிமைகளை மீட்பது?
பிராபாகரன்மீதான தான்தோன்றித்தனமான மிகை மதிப்பீடுகள் உதவாதவை.அவரால் தமிழரின் இந்த இழி நிலையைப் போக்க முடியாது.அவரால் மக்களின் போராட்டத்தைச் செய்ய முடியாது.அதற்கான ஆற்றலும்,அறிவும் பிரபாகரனுக்கு இல்லை என்பதைக் கடந்த கால் நூற்றாண்டாகப் புலிகள் நிரூபித்து வருகிறார்கள்.
அதற்கு இந்த யாழ்ப்பாணம் நல்ல சான்று!
இனியும் பிராபாகரனை நம்பி,நமது போராளிகள் அடங்கிப் போகலாமா?
இல்லை!
புதிய தலைமை,புரட்சிகரத் தலைமையாக,புரட்சிகரமான கட்சியாகப் புலிப்படை மலர்ந்தாக வேண்டும்.இந்தத் தேசபக்த இளைஞர்கள் தமது கட்சியைப் புரட்சிகரமான வேலைத் திட்டத்தோடு நகர்த்த வேண்டும்.இவர்கள் தமது இன்றைய தலைமையைக் கேள்விக்குட்படுத்தியாக வேண்டும்.
கருணாநந்தன் பரமுவேலன்.
இரும்புப் பிடிக்குள் யாழ்ப்பாணம்
2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் திகதி யாழ். குடாநாட்டில் ஏற்பட்ட மோதலை அடுத்து அங்குள்ள சுமார் 6 இலட்சம் மக்களும் இரும்புப் பிடிக்குள் இறுக்கப்பட்டு அவர்களின் அடிப்படைச் சுதந்திரங்கள் முற்றாக மறுக்கப்பட்டுள்ளன.
அரசியல், இராணுவ, பொருளாதார நலன்களுக்காக யாழ்ப்பாண மக்கள் திறந்த வெளிச்சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
உணவு , உடை , உறையுள், மருத்துவம் , விவசாயம் , மீன்பிடி, கல்வி , பாதுகாப்பு, சமய வழிபாடு , போக்குவரத்து உட்பட சாதாரண ஒரு மனிதனுக்கு கிடைக்கவேண்டிய அடிப்படைச் சுதந்திரங்கள் அனைத்து யாழ். மக்களுக்கு அறவே மறுக்கப்பட்டுள்ளன. கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதோடு, அச்சு ஊடகங்களும் முழுமையாக செயலிழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
அனைத்துக்குமே பிறரிடம் கையேந்தும் அடிமைத்தனம் ,அவல வாழ்வு, வெளிப்படையாக எதையும் பேச முடியாத நிலை, இன்னும் சொல்லப்போனால் ஒரு வேளை உணவுக்கு கூட கையேந்த வேண்டிய பிச்சைக்கார வாழ்வு என இன்றைய குடாநாட்டு மக்களின் வாழ்வு ஏதோ நகருகின்றது.
குடாநாட்டு மக்கள் ஒவ்வொரு துறையிலும் அனுபவித்து வரும் துன்பங்கள் தான் என்ன?
உயிர் வாழும் உரிமை :
யாழ். மக்கள் உட்பட வடக்கு, கிழக்கு வாழ் மக்களின் உயிர்வாழும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்டு காணாமல் போதல் , படுகொலை என்பன தொடர்கின்றன. அச்சம் சூழ்ந்த அவல நிலையே எங்கும் வியாபித்துள்ளது.
குடாநாட்டை விட வட, கிழக்கின் ஏனைய பகுதிகளில் விமானத்தாக்குதல்கள், எறிகணைத்தாக்குதல்களால் சதா மக்கள் கொல்லப்படுகின்றார்கள்.
உணவு போதியளவு அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பெறமுடியாத சூழ்நிலையில் நாட்கணக்கில் ,மணிக்கணக்கில் வீதிகளில் உணவுக்காக காத்திருக்க வேண்டிய அவலநிலை. 2006 ஆகஸ்ட் 11 இன் பின்னர் எந்தவொரு பொருட்களையுமே போதியளவு பெறமுடியாதுள்ளது. அரிசி, பருப்பு , சீனி முதல் சவர்க்காரம், சம்போ வரை தேடி அலைய வேண்டிய நிலை.
இருப்பிடம் வலிகாமம் , தென்மராட்சி பகுதிகளிலிருந்து ஏற்கனவே இலட்சக் கணக்கானோர் துரத்தியடிக்கப்பட்ட நிலையில் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் ஆகஸ்டின் பின்னர் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். உயர் பாதுகாப்பு வலயம் மேலும் விஸ்தரிக்கப்பட்டுவருகின்றது.
நடமாடும் சுதந்திரம்:
ஆகஸ்டில் ஆரம்பமான மோதலைத்தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 4 மாதங்கள் கடந்த நிலையிலும் தொடர்கின்றது. நடமாடும் சுதந்திரம் மறுக்கப்பட்டு வருகிறது.
ஊடக சுதந்திரம் :
குடாநாட்டு பத்திரிகைகளுக்கான அச்சிடும் தாள்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் எடுத்து வரமுடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் இன்றுவரை இப்பொருட்களை எடுத்துவர அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அனைத்துப் பத்திரிகைகளும் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இவற்றை விட...
இராணுவ முகாம்களின் முன்பாகவும் மக்களை திரளச் செய்து அடிமை உணர்வை வளர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. பசிக் கொடுமையால் பல்லாயிரம் மக்கள் இங்கெல்லாம் நாளாந்தம் கையேந்தி நிற்கின்றனர்.
* எரிபொருள் தட்டுப்பாட்டால் நம்பிக்கையோடு பயிர்ச்செய்கையை ஆரம்பித்த விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். பயிர்கள் வாடிவதங்குகின்றன. மண்ணெண்ணெய் விலை 160 ரூபா, உரம் 6 ஆயிரம் ரூபா என விலை உயர்ந்துள்ளன.
* சுமார் 10 வீத மீன்பிடிக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. அதற்கும் திடீர் திடீரென வேட்டுவைக்கப்படுகிறது. மீனவக் குடும்பங்கள் யாவும் அக்கினிப் பெருமூச்சு விடுகின்றனர்.
* கைத்தொழில்கள் பலவற்றுக்கு வேண்டிய மூலப்பொருட்கள் தென்னிலங்கையிலிருந்து வர வேண்டும். அனைத்தும் தடைப்பட்டுள்ளதால் அத் தொழிலகங்கள் பல மூடப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
* வணிக நிலையங்களில் விற்பனைப்பண்டங்கள் இல்லாமையால் ஊழியர் குறைப்பு மிகுந்து வருகின்றது.
* சீமெந்து மருந்து போல் கிடைக்கிறது. ரூபா 1500-2000 வரை விற்பனையாகிறது. இதனால் கட்டுமான வேலைகள் அனைத்தும் ஸ்தம்பித்து விட்டன. இதனால் பல்லாயிரக்கணக்கான கட்டிடத் தொழிலாளிகள் வேலையிழந்துள்ளனர்.
* கட்டுமான வேலைகள் நின்றதால் தச்சுத் தொழில் ,கல்லுடைக்கும் தொழில் போன்றனவும் ஸ்தம்பித்துவிட்டன.
* பாடப்புத்தகங்கள் , கற்றல் உபகரணங்கள் இன்மையால் பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் படுகுழியில் தள்ளப்படுகின்றன.
மாணவர்கள் குளிக்கவோ, சீருடைகளைத் துவைக்கவோ, சவர்க்காரம் இன்மையால் மன விரக்தி கொண்டுள்ளனர்.சில அதிபர்கள் வர்ண உடைகளை அணிய அனுமதி வழங்க முற்பட்டுள்ளனர்.
* பல்கலைக்கழகம் திறக்கப்படாமையால் உயர்கல்வி பிரச்சினைக்குள்ளாகியுள்ளது. பல்கலைக்கழக மாணவர்களும் பல்கலைக்கழகம் புக இருக்கும் மாணவர்களும் மனம் வெறுத்தும் பிந்திய நிலையில் அங்கலாய்க்கின்றனர்.
* சமய வழிபாடுகளுக்குச் சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெய்,கற்பூரம் முதலான பூசைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு.
அன்னதானத்துக்கான பொருள்கள் இன்மையால் பிள்ளையார் கதை, திருவெம்பாவையை ஒட்டி நடக்கும் உபயங்கள் மிகப் பெரும்பான்மையான கோயில்களில் நடைபெறுவதில்லை.
* மக்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்படும் முக்கிய இடங்களாக மருத்துவ மனைகள் அமைந்துள்ளன. சுமார் 75 ஆயிரம் மக்கள் வரை சிக்குன் குனியாவால் பீடிக்கப்பட்டுள்ளனர். இதனால் சத்துணவு இல்லாத நிலையிலுள்ளோர் மரணிக்கின்றனர்.
* அரச மருந்தகங்களில் போதிய மருந்து வழங்கப்படுவதில்லை. வெளிக்கடைகளில் தட்டுப்பாடு. ஆதலால் உச்சவிலை. பனடோல் ஒன்று ரூபா 5 முதல் 8 வரை செல்கிறது.
-யாழின்மைந்தன்
நன்றி:
தினக்குரல்
3 comments:
புதிய தலைமை,புரட்சிகரத் தலைமையாக,புரட்சிகரமான கட்சியாகப் புலிப்படை மலர்ந்தாக வேண்டும்.இந்தத் தேசபக்த இளைஞர்கள் தமது கட்சியைப் புரட்சிகரமான வேலைத் திட்டத்தோடு நகர்த்த வேண்டும்.இவர்கள் தமது இன்றைய தலைமையைக் கேள்விக்குட்படுத்தியாக வேண்டும்.
என்னய்யா புலிகளில் இருந்து ஒரு புதிய தலைமை பிரிந்தாலும் அதை தடுத்திருக்க வேண்டுமென்கிறீர்கள்.
பிறகு பதிய தலைமை வேண்டுமென்கிறீர்கள்.
புலிகள் முழுயுத்தத்தில் தோல்வியடைந்த பிறகாவது உங்கள் எழுத்துக்களில் இருந்து எமக்கு விடுதலை கிடைக்கும் என நம்புகிறேன்.
எனக்கு தினம் வரும் தொலைபேசி அழைப்புகளும் இதனையே பிரதிபலிகின்றன.
//என்னய்யா புலிகளில் இருந்து ஒரு புதிய தலைமை பிரிந்தாலும் அதை தடுத்திருக்க வேண்டுமென்கிறீர்கள்.
பிறகு பதிய தலைமை வேண்டுமென்கிறீர்கள்.//
"விடிய,விடிய இராமர் காதை.விடிந்தால் இராமருக்குச் சீதை என்ன வேணும்?"என்பதுபோல்தான் கொழுவியின் கேள்வி.கருணா புதிய தலைமை?என்ன செய்ய உம்மை?
சோமி கருத்துக்கு நன்றி.யாழ்ப்பாணச் செய்திகள் நீங்கள் கூறுவதுமாதிரித்தான் எல்லோருக்கும் வந்து சேருகிறது.
Post a Comment