பொட்டிட்டு மாலையணிவித்த பூசாரி கொலை.
கொலையும்,அதன் பின்னான கருத்துக் கட்டல்களும் மனிதரைத் துச்சமாக மதிக்கும் இழி நிலையாக...
நியாயப்படுத்தல் -பழியை மற்றவர்கள் மீது தூக்கி வாரி எறிவதும் ஒழிக!
கொலையுண்ட மனிதர்களை, அவர்கள் குடும்பத்தின் வலியை உணரத்தக்கவொரு காலம் எழுக.எத்தனை கொலைகள் "துரோகி" அரசியலில் நடந்துவிட்டன!
இந்தக் கொலைகளின் பின்பு அரசியல் நடத்துபவர்கள்,கொலைகளையே கூலிக்குச் செய்பவர்கள் என்றபடி இலங்கை மண்ணில் கொலை மொழியைப் புரிந்து கொள்ள முடியாதளவு அது கடினமான மொழியாக இருக்கிறது.இது மனித மொழிகளுக்கு அப்பாற்பட்ட பணமொழியோடு உறவாடுவது.இங்கே அதைப் புரிவதற்கு இலங்கைக் கொலைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்தே புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கையில் நிலவுகின்ற இரு வேறு அரச ஜந்திரங்கள் தத்தமது இருப்புக்கும்,போட்டி அரசியலுக்கும் அப்பாவி மக்களைப் பலியெடுப்பது நாள்தோறும் நடை பெறும் அற்ப விசயமாகப் போய்விட்டது.ஒன்று ஈழத்துக்கானது மற்றது தேச ஒருமைப்பாட்டுக்கானது என்ற பரப்புரைகளோடு நாளொரு வண்ணம் மேனியொரு பொழுதாய் வளரும் கொலை அரசியல் இலங்கையெங்கும் மனிதத் தலைகளை உருட்டியபடி...
அரசியலில் ஊக்கம் பெறும் நலன்கள்மீதான அதீத அக்கறை தமது இருப்பின் நிச்சியமற்ற உணர்வில் அழிக்க முனையும் இலக்கு மனித உயிர், உடமையாக இருக்கிறது.நடப்பது மக்களின் நலனுக்கான-விடுதலைக்கான யுத்தமாக இலங்கையின் இருவேறு இராணுவ ஜந்திரங்களும் சொல்கின்றன.ஆனால் விடுதலையென்பதை நிசத்தில் அவர்களுணருவது தமது ஆளுமையை மட்டுமேயாகும்.இத்தகைய நோக்கு நிலையிலிருந்து முன் தள்ளப்படும் இன முரண்பாடுகள் முற்றிலும் மக்கள் நலனிலிருந்து அன்னியப்பட்டவொரு அரசியலை முன் மொழிகின்ற இன்றைய சூழல், மனிதக் கொலைகளின் பின்னே தனது வக்கிரமான அதிகார வெறியை மறைத்துத் துரோகியாகக் கொலையுண்டவரின் பிணத்தின் மீதேறி அரசியல் செய்கிறது.
பச்சைப் பாலகன் துரோகி,
கற்பிணித் தாய் துரோகி,
பல்லுப் போன பாட்டன் துரோகி,
ஏர் பிடிப்பவன் துரோகி,
போராடுபவன்(ள்) துரோகி,
அவன் துரோகி-இவள் துரோகி
துரோகி,துரோகி...
கொலையுண்டோரே! என்ன சொல்ல?
இதுவரை கொலையாகாத நாங்கள் உங்கள் மறைவுக்குச் சடங்கு செய்ய முனையவில்லை.மாறாக நீங்கள் கொல்லப்பட்டதற்கான காரணங்களைத் தேடுகிறோம், இனியும் இன்னொரு கொலையாகாத அரசியலைக் கோருவதற்காக.
போராட்ட அரசியலானது இன்று எந்தவொரு மனிதரையும் துரோகியாக்கியோ அல்லது எதன் பெயராலோ கொல்லுகிறது.
4 comments:
மொத்தத்தில் ஈழத்தில் இன்று மனித உயிருக்கு மதிப்பில்லை!
வெட்கம்!
கவலைதரும் சேதி.
என்ன நடக்குது அங்க?
//மொத்தத்தில் ஈழத்தில் இன்று மனித உயிருக்கு மதிப்பில்லை//
எஸ்.கே. இலங்கையில் இன்றுமட்டுமல்ல என்றுமே மனிதவுயிருக்கு மதிப்பே கிடையாது.அவ்வளவொரு காட்டு மிராண்டியரசியல் அங்கு இடம் பெறுகிறது.ஆயுதம் தூக்கிய ஐந்து வயதுப் பயலையும்"ஐயா,அண்ணே " என்றுதான் அழைக்க வேண்டும்!இல்லையேல் அவ்வளவுதான்.
//கவலைதரும் சேதி.
என்ன நடக்குது அங்க?//
அங்கே கொலை நடக்கிறது!:-((((((
விடுதலையின் பெயரால்-தேசவொருமைப்பாட்டின் பெயரால் சுத்தியபடி-ரீல் விட்டபடி.குறி பணம் திரட்டல் மட்டுமே.
சிறில் அலெக்ஸ் கருத்துக்கு நன்றி.
இருவரின் வருகைக்கும்,கருத்துக்கும் மெத்த நன்றி.
http://news.bbc.co.uk/2/hi/south_asia/6345129.stm
மொத்தத்தில் இந்தியாவில் இன்று மனித உயிருக்கு மதிப்பில்லை!
வெட்கம்!
Post a Comment