அப்பட்டமான பொய்மை வலைகளை முதலில் நாம் அறுத்தெறிய வேண்டாமா?
சேது சமுத்திரத் திட்டத்தால் தமிழகத்தின் ெபாருளாதாரம் பெரும் நன்மை பெறும் என்ற வாதத்தை முன்வைத்து, அத்திட்டத்தைத் தொடருவதற்கு ஆதரவாகப் பலவேறு தி.மு.க. தோழமைக் கட்சிகள் குரல் கொடுத்துள்ளன. அத்திட்டத்தால் ஒட்டுமொத்தமான பொருளாதார நன்மை உண்டா என்பது இன்னமும் ஐயத்துக்குரியது. ஆயினும், அதன் மூலம் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நோக்கங்கள், குறிப்பாக இலங்கை தொடர்பானவை, நிறைவேறும் வாய்ப்புக்கள் அதிகம். இவ்விடயத்தில் அகில இந்திய அரசியல் தளத்தில் கருத்து முரண்பாடுகள் வெடித்துள்ளன.
எனினும், அதிகமாகப் பேசப்படாத சில உண்மைகள் முக்கியமானவை. இத்திட்டத்தால் நிச்சயமாகத் தி.மு.க.வினர் சிலரதும் தி.மு.க. தலைமையில் உள்ள குடும்பத்தினதும் செல்வம் பெருகும். இங்கே மேல் கொத்மலைத் திட்டத்தின் மூலம் எத்தனை பேர் சம்பாதிக்கப் போகிறார்கள். எந்த மலையகக் கட்சிகளது தலைமைகள் தங்கள் துரோகத்திற்காகப் பலவாறான சன்மானங்களைப் பெற்றுள்ளனர் என்று தெரியுமானால், தமிழகத்தில் எவ்வளவு காசு கைமாறும் என்று ஊகிப்பது கடினமானதல்ல. இது தங்கப் புதையல் என்றால் அது தங்கச் சுரங்கம் - அள்ளப் போகிறவர்கட்கு.
சிங்களத் தீவினுக்கோர் பாலமமைக்கிற யோசனை ஏழு ஆண்டுகள் முன்பு எழுந்து பிறகு ஏனோ தானாகவே கைவிடப்பட்டது. பாலம் அமைப்பதானாலும் பள்ளந் தோண்டுவதானாலும் அவற்றுக்கான இராணுவ மேலாதிக்க நோக்கம் ஒன்றே. அது பற்றி எவரும் பேசப்போவதில்லை. ஆனாலும், எதையெதையோ பற்றியெல்லாம் விவாதங்கள் நடக்கின்றன. பொதுவாக அவற்றில் நேர்மையில்லை. அது இந்திய, தமிழக தேர்தல் அரசியலின் அடையாளம். இன்று இன்னொருமுறை ராமாயணமும் சேது சமுத்திரத்தால் அரசியலாகிவிட்டது.
ராமாயணம் வரலாறல்ல. அதற்கு வரலாறு கூறும் நோக்கம் இருந்ததுமில்லை யாரும் ரகுவம்சத்துக்கு வாரிசு உரிமை கோரியதுமில்லை. ராமாயணம் எல்லா இடத்தும் ஒரே விதமாகச் சொல்லப்பட்ட கதையுமல்ல. ராமாயணத்தின் மீது, அது எங்கு எப்போது கூறப்பட்டது என்பதைப் பொறுத்து, ஒரு அதிகார வர்க்க நலன் சார்ந்த பார்வை திணிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய சமூகத்தின் ஆதிக்கச் சிந்தனையும் அற விழுமியங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன. முரண்பாடுகள் கூர்மைபெற்ற சூழல்களில் அது ஒரு தரப்பின் நியாயத்தை எடுத்துரைக்கவும் பயன்பட்டுள்ளது. மகாபாரதத்தை விட அதிகமாகவே ஆணாதிக்கமும் சாதியமும் ராமாயணத்தில் நியாயப்படுத்தப்பட்டுள்ளன எனவுங் கூறலாம். தமிழுக்கு வந்த ராமாயணம் ஒரு பெண்ணை அயலவன் தொட்டாலே கற்பிற்குக் கேடு என்கிற கருத்தை வற்புறுத்துமளவுக்கு இராவணன் சீதையைத் தரையோடு பெயர்த்துக் கொண்டு சென்றதாக கூறுகிறது. ராமாயணம் ஒவ்வொன்றிலும் வருகிற பல விடயங்கள் பகுத்தறிவுக்கு முரணானவை மட்டுமல்ல. விஞ்ஞான அடிப்படையில் நோக்கினால் உண்மை சாராதவை. எனினும், இராமாயணம் தென்னாசியாவுக்கும் அப்பால் இந்தோனீசியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் வரை மக்களின் கவனத்தைப் பல நூற்றாண்டுகளாக ஈர்த்த ஒரு காவியம். அது கூறுகிற விழுமியங்களுடன் ஏதோ வகையில் அவர்கள் உடன்பாடு காணுகின்றனர். அந்தளவில் அதை நாம் மதிக்க வேண்டும்.
ராமாயணத்திற்கு அடிப்படையாக அமைந்திருக்கக்கூடிய ஒரு நிகழ்வு இருந்திருக்கலாம். ஆனால், அது கூறும் இடங்கள் எல்லாம் இன்று நாங்கள் அடையாளப்படுத்துகிற இடங்களல்ல.
அவையெல்லாம் ராமாயணத்துடன் தொடர்புடையன என்றால் புற்பக விமானத்தையும் அதனுடன் கடல் தாண்டப் பறந்ததையும் மட்டுமன்றி ராவணனுக்குப் பத்துத் தலைகள் என்பதையும் நாம் நம்பலாம். இலங்கைக்கும் ராமாயணத்துக்கும் கட்டப்பட்ட முடிச்சு, காலத்தாற் பிற்பட்டது. இராமாயணம் இந்தியாவின் தென்புறம் வந்த பின்பே இந்தத் தீவு இராமாயணங் கூறுகிற லங்காவுடன் தொடர்புபடுத்தப்பட்டது. ஆனாலும், தென்னாசியப் பண்பாட்டில் புராணப் புனைவுகட்கும் வரலாற்று உண்மைகட்குமிடையே தெளிவான வேறுபடுத்தல் கிடையாது. இது நிலவுடைமைச் சமுதாயச் சிந்தனைகள் சில நம் மீது இன்னமும் கொண்டுள்ள அழுங்குப்பிடி இது நெகிழக் காலமெடுக்கும். அதேவேளை, நவீன விஞ்ஞானத்தை ஆதாரங்காட்டி, மூட நம்பிக்கைகளை நியாயப்படுத்துமளவுக்கு நம்மிடையே சிந்தனையில் நேர்மைக் குறைபாடுள்ளது. கடவுளின் பேரால், மரபின் பேரால் ஆன்மிகவாதிகள் எனப்படுகிற பலர் மனமறியப் பொய்யுரைக்கிறார்கள். நம்புகிறதாகப் பாசாங்கு செய்கிறவர்களும் அதற்கு உடந்தையாகிறார்கள். எதை நம்புவது சிலருக்கு வசதியானதோ அதை நம்புமாறு பலரும் வற்புறுத்தப்படுகிறோம். சில சமயம் அவ்வாறு நம்புவது நமக்கும் வசதியாகிறது.
இவ்வாறான பொய்களின் விளைவுகளாக எத்தனை வழிபாட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன? எத்தனை இனக்கலவரங்கள் தூண்டிவிடப்பட்டுள்ளன? எத்தனை போர்கள் நடந்துள்ளன?
எதுவிதமான விஞ்ஞான ஆதாரமும் இல்லாமல் நமது வரலாறு நூற்றாண்டுகளால் மட்டுமல்ல, பல ஆயிரமாண்டுகளாலும் பின் நகர்த்தப்படுகிறது. புனைவுகளை ஆதாரமாகக் கொண்டு புதிய புனைவுகள் உருவாக்கப்படுகின்றன. வெட்கமில்லாமல் எழுதப்படுகிற பொய்களை அதைவிட வெட்கக் கேடாக நமது ஏடுகள் பிரசுரிக்கின்றன.
ராமர் பாலம் ஒரு அற்புதமான கற்பனை. அணிற் பிள்ளை கூட ஒரு கல்லை எடுத்துப் போட்ட கதை சுவையான கற்பனை. ஆனால், அவை உண்மைகளல்ல. அவை பற்றி நாம் விவாதிப்பதே வெட்கக் கேடானது. அதைவிடப் பூமி தட்டையா, உருண்டையா என்று விவாதிக்கலாம். அல்லது பூமியைச் சூரியன் சுற்றுகிறதா, சூரியன் பூமியைச் சுற்றுகிறதா என்று விவாதிக்கலாம். அவையே பயனற்றுப் போன விவாதங்கள். ஆனால், ஒரு கால்வாயை வெட்டுவது தேவையா இல்லையா என்பதை விவாதிக்க நமக்கு வேறு நல்ல நியாயங்களே இல்லையா?
கருணாநிதிக்குப் பகுத்தறிவு திரும்பியிருப்பது பற்றிச் சிலர் மகிழ்ச்சியடையலாம். பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்கிற விதமான ஞானம் இது. தேர்தல் அரசியலுக்காகத் தி.மு.க. எப்போதோ கைகழுவிவிட்ட விடயத்தை ஏன் இப்போது பேச வேண்டும்? ராமாயணம் என நாமறிந்த எந்தக் கதையுமே அப்படியே நடந்ததல்ல என்பதை இந்தியாவின் வரலாற்றாசிரியர்கள் மட்டுமன்றி இந்து அரசியலை முன்னெடுத்த பிரபல அரசியல் தலைவர்கள் பலரும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், ராமன் இருக்கவில்லை என்று எப்படி எவராலும் உறுதியாகக் கூற முடியும்? கம்பரதோ வால்மீகியினதோ துளசிதாசரதோ ராமன் இல்லாதிருக்கலாம். இன்று இருக்கிற ஒவ்வொரு ராமனும் ஒரு புனைவாக இருக்கலாம். ஆனால், அவற்றுக்கு ஏதோ ஒரு அடிப்படை இருந்தது. ஒவ்வொரு இராமனையும் ஏற்பவர்களது மனதைப் புண்படுத்தாமல் கருணாநிதியாற் பேசியிருக்க இயலும். ஆனாலும், அவரது பேராசை அவரை அவசரப்படுத்திவிட்டது.
ஆரிய - திராவிடப் பகை பற்றிப் பேசித் தமிழகத்தில் அரசியல் நடத்த இயலாமற் போனதற்கு எந்தப் பார்ப்பனச் சதியும் காரணமில்லை. திராவிட இயக்கத்தில் ஏற்பட்ட சீரழிவே அதற்குக் காரணம். இந்தியாவில், தலித்துக்கள், பழங்குடியினர், ஒடுக்குமுறைக்குட்பட்ட சிறிய தேசிய இனங்கள், நிலமற்ற விவசாயிகள் போன்றோருக்காகக் குரல்கொடுக்கிற விதமாகத் திராவிட இயக்கம் விரிவுபடுத்தப்படவில்லை. அது தமிழரிடையே சில சாதிப் பிரிவுகட்குரிய வசதி படைத்த பகுதியினரது நலன்களையே சார்ந்து இயங்கியது. எனவே, தான் சமூகத்தின் அடிநிலையிலிருந்த மக்களைப்பற்றி அதனாற் பேச முடியவில்லை. ஈ.வெ.ரா. பேசினார். ஆனால், அவரது பார்ப்பன எதிர்ப்பு அரசியல் காரணமாக, அவர் தமிழகத்தின் பிற சமூக ஒடுக்குமுறைகள் பற்றிக் காட்டியிருக்கக் கூடியளவு கவனத்தைக் காட்டத் தவறிவிட்டார். அவரது ராமாயண எதிர்ப்பு இயக்கமும் நீண்டகாலத்திற்குத் தொடரப்படவில்லை.
அவருக்கு ஒரு குறிப்பிட்ட காலத்தின் அரசியலின் தேவை, பிள்ளையார் சிலை உடைப்புக் கூட அப்படித்தான். அவருடைய வாரிசுகளாக வளர்ந்து பிரிந்து போன `கண்ணீர்த் துளிகளின்' கதை வேறு. அவர்கள் பூரணமான அரசியல் வணிகர்கள். எனவே, தான் அவர்களது விவாதங்கள் மக்கள் நலன் சாராத விடயங்களிற் கவனங்காட்டுகின்றன. அவர்கள் எக்கேடாயினும் கெடட்டும்.
சேது சமுத்திரம் நமது சுற்றுச் சூழலுக்கு எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றி நமது அறிஞர்களால் எழுத முடியாதா? தங்களுக்கு விளங்காத வரலாற்றையும் புவியியலையும் விஞ்ஞானத்தையும் பற்றிச் சில பேர் பக்கம் பக்கமாக விவாதிக்க நமது ஏடுகளின் கொட்டை எழுத்துத் தலைப்புக்களுட் வாராவாரம் இடமொதுக்கப்பட்டுள்ள அளவு சேது சமுத்திரத்தின் அரசியல் பற்றி ஆராய ஏன் எல்லோரும் பின் நிற்கிறார்கள்?
மக்களுடைய அறியாமையையே ஆதாரமாகக் கொண்டுதான் மதவாத, தேசிய வாத அரசியல் முன்னெடுக்கப்படுகிறது. நமக்குள் கேடான தேசியவாத, மதவாத அரசியலைக் கண்டிக்க நமக்கு இயலும். நமக்குச் சாதகமாக அமைகிறபோது நமக்கு அதைக் கண்டிக்க இயலாது. நாம் இவ்வாறான அவலத்தினின்று விடுபட வேண்டும்.
சரி பிழைகள் பற்றி நமக்கு நேர்மையான பார்வை வேண்டும். நமது நம்பிக்கைகளை நாம் மீளவும் மீளவும் கேள்விக்குட்படுத்துவதன் மூலமும் நேர்மையாகவும் பகுத்தறிவு சார்ந்தும் சிந்திப்பதன் மூலமுமே நாமும் நமது சமூகமும் உய்வும் உயர்வும் அடைய இயலும். நம்மைப் பிணித்துள்ள அப்பட்டமான பொய்மை வலைகளை முதலில் நாம் அறுத்தெறிய வேண்டாமா?
மறுபக்கம்
கோகர்ணன்
தினக்குரல், நன்றி.
No comments:
Post a Comment