குழந்தை ஒருகட்சிக்குத் தலைவராகி...
பாகிஸ்தான்.தென்கிழக்காசியாப் பிராந்தியத்தில் அரசியல் ஸ்த்திரமற்ற சூழலுக்கான திறவுகோலாக இருத்திவைக்கப்பட்ட தேசம்.மேற்குலக மற்றும் அமெரிக்காவின் நம்பத்தகு ஏஜன்டுக்களால் நிர்வாகிக்கப்பட்ட இராணுவச் சர்வதிகாரத் தேசம்! இன்று, தடல்புடலான மாற்றங்களை வேண்டிப் படுகொலை அரசியலை மீண்டும் உள்வாங்கியுள்ளது.இது பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றில் புதிதில்லை.
ஆளும் வர்க்கங்கள் தமது வலியை தேசத்தின் பெரும்பகுதி மக்களின் வலியாக்குவதற்குத் திட்டமிட்டுப் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுத் தமது ஆர்வங்களை-நலன்களை அறுவடை செய்வதொன்றும் புதிதில்லை.இப்போது, இதுவே பாகிஸ்த்தானிலும் நடைபெறுகிறது.
அமெரிக்கப் புலனாய்வுத்துறையின் குரல்தரவல்ல அதிகாரியான ஸ்ரெபான் கொடேக் கூறுகிறார்:The United States offered FBI assistance in investigating Bhutto's assassination, but Pakistan has not yet made a request என்றும், அமெரிக்க ஸ்ரேற் டிப்பாட்மென் குரல்தரவல்ல அதிகாரி ரொம் கேசி சொல்கிறார்We don't know who is responsible for this attack. ... But it is clear that whoever is responsible is someone who opposes peaceful, democratic development and change in Pakistan." :என்றும்.
ஆகப் பாகிஸ்தானில் இதுவரை ஜனநாயகம் ஒன்று இல்லாததை ஒத்துக்கொண்டவர்கள்,இப்போது, பெனாசிரைக் கொல்பவர்கள் அதற்குத் தடையாக இருப்பதாகவும் குரல்கொடுப்பதும் நிகழ்ந்து வருகிறது.சமாதனம்,ஜனநாயகம்,அபிவிருத்தி மாற்றங்கள் என்பதன் பின்னால் ஒழிந்திருக்கும் மேற்குலக-அமெரிக்க நலன்கள் இன்றைய பாகிஸ்த்தான் அதிபர் முஸ்ராப்பிடம் இவற்றைக் கோரமுடியாதிருப்பது உண்மாயானதா?பெனாசீர் இவற்றையெல்லாம் பாகிஸ்த்தானில் செய்து முடித்து மக்களுக்கான செழுமையான முதலாளித்துவ ஜனநாயகத்தைப் படைத்துவிடுவாதாகவும் இவர்கள் சொல்லும் தரணங்களை எப்படி நாம் எடுத்துக்கொள்வது?
இன்றைய தென்கிழக்காசியாவின் எந்த நாட்டிலும்(இந்தியா உட்பட)பெயரளவிலான ஜனநாயகப் பண்புகூடக் கிடையாது.குடும்ப அரசியலில் கட்சிகளைக் குடும்பச் சொத்தாக்கித் தத்தமது குடும்ப அதிகாரங்களை நாட்டின் இராணுவ-பொலிஸ் பலத்துடன் தேசமக்களின்மீது கொடுமையாகச் செலுத்தும் அரை இராணுவத் தன்மையிலான இராணுவச் சர்வதிகாரத்தைப் பிரயோகிக்கும் இத்தகைய அரசியலில், மக்களுக்கான அடிமை விலங்கை மிகக் கபடத்தனமாகப் பூட்டும் இவர்களை, மக்களின் நலன்களை உறுதிப்படுத்தும் தலைவர்களாகக் காட்டும் இன்றைய உலக ஆர்வங்களுக்குள் புதிதாக முளைவிட்ட நெருக்குவாரங்கள் இத்தகைய தேசங்களுக்குப் புதியவை அல்ல.
பாகிஸ்தான்,இந்தியாபோன்ற நாடுகளில் மிகக் கொடுமையான குடும்பச் சர்வதிகாரமானது மேற்குலக எஜமானர்களின் அதீத ஒப்புதலோடே நடந்தேறுகிறது.பாகிஸ்தானுக்கு அணுக்குண்டைச் செய்வதற்கு அன்றைய மேற்கு ஜேர்மனியும் அதன் தலைமையில் இன்னுஞ் சில நாடுகளும் உதவி புரிந்தன.இது இந்திய-சோவியத்யூனிய நட்பைக் குறித்த வியூகத்தின் மறுவிளைவாக அன்று நடந்தேறியது.இப்போது, இத்தகைய தேசங்களில் அமெரிக்க-மேற்குலகத் தேசங்களின் நிதிமூலதனம் மிக வேகமாக விரைந்து பாய்கிறது.இதன் தொடர்ச்சியில் பாகிஸ்தானின் இன்றைய முஸ்ராப் பாணியிலான ஆட்சியமைப்பு மேற்குலகத்தின் தேவைகளைப் பூரணமாக நிறைவேற்றவில்லையென்று வெளிப்படையாகத் திட்டும் மேற்குலகம் பெனாசீரைப் பகடைக்காயாக்கிக் கொன்றுள்ளது.
தற்போதைய நிலையில் முஸ்ராப்பை வெளிப்படையாகச் சாடும் மேற்குலகம்,அன்றைய முஸ்ராப்பின் பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்கக் கூட்டானது தன்னைக் காப்பதற்கென்றே சாடுகின்றன.சாரம்சத்தில் முஸ்ராப் மிகத் தந்திரமான இராணுவ அதிகாரியாக இருக்கமுடியுமா?அவரது இருப்பானது அன்றைய இராணுவப் புரட்சிக்குப் பின்பும் முன்பும் அமெரிக்க-மேற்குலக ஒப்புதலோடும்,உதவிகளோடுமே சாத்தியமானது.எனினும்,முஸ்ரப்மீதான நம்பிக்கையீனம் எங்ஙனம் தோற்றம் காணுகிறது.பாகிஸ்தானின் வளங்கள் பற்றிய மதிப்பீட்டில் அதன் இரும்பு,எரிவாயு,செம்பு போன்ற வளங்களையும் தாண்டி மேற்குலக நிதிமூலதனத்தின் சுயமான இயக்கத்துக்கு எதிரான முஸ்லீம் அடிப்படைவாதத்தின் இருப்பிடமாக உணர்ந்த வர்த்தக நிபுணர்களின் அறிவுறுத்தல்களின் அதீத-மிகை மதிப்பீடுகளுக்குள் சிக்குண்ட மேற்குலக-அமெரிக்கப் புலனாய்வுத் துறைகளின் ஏவற்காரணங்கள் அதைமறுத்து வற்புறத்தித் தமது வேலையைச் சுயாதீனமாக ஆற்றமுடியாத நிலையில், தமக்கு நம்பகமான எடுபிடியாகப் பெனாசீர் பூட்டோவை இந்த அரங்கத்துக்கு அழைத்து வந்து முஸ்ராப்பைத் தலைவெட்ட எடுத்த முடிவுகளின் விளைவுகள் இன்றைய பாகிஸ்த்தானின் அரசியல் சூழலாக மாறுகிறது.
பெனாசீர் மரித்துவிட்டபின்பும் இந்த ஆர்வங்கள் மடியாதென்பதற்கு பெனாசீரின் வாரீசான 19 வயது பைலாவல் (Bilawal ) பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக முடிசூட்டிய வரலாறு சாட்சி பகிரும்.குஞ்சாமணிபிடித்து மூத்திரம் அடிக்கத்தெரியாத குழந்தை ஒருகட்சிக்குத் தலைவராகித் தென்கிழக்காசியாவின் அறிவின் நிலையைக் கேலிப்படுத்தும்போது, நாம் தலைகுனிகிறோம்.ஒக்ஸ்பேர்ட்டில் சட்டம் படித்தாற்போல் அவருக்குத் தலைமைதாங்கும் பெரு நிலை உருவாகவில்லை.ஆங்கிலம் பேசத் தெரிந்தவனெல்லாம் தென்கிழக்காசிய மக்களுக்குப் படித்தவன்,அறிஞன் என்ற பொதுப் புத்தி இந்தப் பயலையும் தலைவராக்கும் மேற்குலகத்துக்கு ஒத்திசைவாக இருக்கும்.வாரீசு அதிகாரச் சேட்டை மிக்க இத்தகைய பிரதேசத்தில் இது புதுமையில்லை.
கார்டியன் பத்திரிகை எழுதுகிறது: பாகிஸ்த்தான் மக்கள் கட்சி மக்களின் நலன்களைத் தக்கவைக்கும் கட்சியாகத் தன்னைப் புனரமைக்க வேண்டுமாம்.
நியூயோர்க் ரைம்ஸ் எழுதுகிறது: அமெரிக்காவானது முஸ்ராப்புக்கான உதவிகள் குறித்து மீள்மதிப்பீடு,வியூகம் செய்தாகவேண்டுமாம்.அமெரிக்காவால் முஸ்ராப் பெற்று வரும் கோடிக்கணக்கான நிதி பயங்கரவாத்தத்துக்கெதிரான பாகிஸ்தானின் செயற்பாட்டிற்காக வழங்கப்படினும் அது வேறான வகையில் பயன்படுவதாகக் குற்றஞ் சுமத்திவிடுகிறது.
இத்தகைய சூழலில் தேசம் நெற்றில் அன்பர் திரு.சேனன் பாகிஸ்தான் குறித்தொரு கட்டுரை எழுதியிருக்கிறார்.தமிழ்ச் சூழலில் பாகிஸ்தான் குறித்துச் சில கோணப் பார்வையை இது முன் வைக்கிறது.எனினும்,இக்கட்டுரை மேற்காணும் தரவுகளோடு இணைத்துப் படிப்பதற்கானதாகவே இருக்கிறது.ஏனெனில்,இன்றைய பாகிஸ்தான் பற்றிய பலகோணப் பார்வைகளை இது முன் வைக்கவில்லை.பாகிஸ்தான் மக்களுக்குள் எந்தொரு கட்சிக்குமான ஒருமித்து ஆன்மீக ஒத்துழைப்புக்கிடையாது.பாகிஸ்த்தானில் மக்களினங்கள் பல்வேறு பிரிவுகளாகப் பிளவுபட்டுக்கிடக்கும்போது அவர்களை இணைத்துப் போராடி ஜனநாயகத்தைப் பெறுவதான அவரது பார்வையில் தவறிருக்கிறது.பாகிஸ்தானானது பல்வேறு உலக நலன்களின் மிகப் பெரும் வேட்டைக் காடாகும்.அங்கு மக்கள் புரட்சியென்பது திடீரென வெடிப்பதற்கில்லை.மக்களின் ஒருமித்த போராட்ட உணர்வை வேண்டி நிற்கும் ஒரு தேசியக் கட்சியும் அங்கில்லை.இது குறித்த வாசகர்களின் கருத்துக்கள் எதிர்பார்க்கப் படுகிறது.
கீழ்க்காணும் சேனின் கட்டுரையை தேசம் நெற்றிலிருந்து நன்றியோடு பதிவிடுகிறோம்.
தோழமையோடு,
பரமுவேலன் கருணாநந்தன்
30.12.2007
பெனாசிர் பூட்டோ: மேற்குலகும் அது கூறும் ஜனநாயகமும் :சேனன்
கடந்த 27ம் திகதி ராவல்பின்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பெனாசிர் (Benazir Bhutto) சுட்டுக் கொல்லப்பட்டார். பெனாசிரை சுட்ட கையுடன் கொலையாளி ஏற்படுத்திய தற்கொலை குண்டு வெடிப்பில் 20க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். முசராப்பின் அரசாங்கம் அல்கைடாவின் பைதுள்ளா முஸ்சுத்தை குற்றம்சாட்ட, அனைத்து மேற்கத்தேய ஊடகங்களும் மீண்டும் ஒரு ரவுன்ட் அல்கைடா வசைபாடி ஓய்ந்துள்ளன. பாக்கிஸ்தான் அல்கைடாவின் பேச்சாளர் இக்கொலையை தாம் செய்ததாக அறிவித்திருந்தாலும், இக்கொலைக்கு பின்னால் இருக்கும் அரசின் பங்கை மூடி மறைக்க முடியவில்லை. குண்டுவெடிப்பின் அதிர்வில் பெனாசிரின் தலை வாகனத்தில் மோதியதாலேயே அவர் இறந்தார் என்று அவர் ஏதோ தற்கொலை செய்து கொண்டதுபோல் அரசு செய்திகள் வெளியிடுகிறது.
பாக்கிஸ்தான் மக்கள் கட்சியின் ; (PPP- Pakistan Peoples Party) தலைவியான அவரை பாக்கிஸ்தானுக்கு திரும்பி போகும்படி தூண்டியதில் இங்கிலாந்து அரசாங்கத்துக்கு முக்கிய பங்குண்டு. பெனாசிர் திரும்பி சென்று, தேர்தலில் நின்று வெற்றி பெற்று, தமக்கு தேவையான அனைத்து சலுகைகளையும் வழங்குவதை, பாக்கிஸ்தானுக்கு ஜனநாயகம் கொண்டுவருவதாக பார்த்தனர் மேற்கத்தேய அரசுகள்.
முசராப்பின் அரசு தமது செல்வாக்கை மக்கள் மத்தியில் இழந்ததும், பெனாசிர் முசராப்புக்கும் மேலாக அதிக சலுகைகளை மேற்குலக நாடுகளுக்கு வழங்க முன்வந்ததுமே ஆதிக்க சக்திகளுக்கு பெனாசிர் மேலான கரிசனை ஏற்பட முக்கிய காரணம். இதுவரை காலமாக இராணுவ ஆட்சி செய்து பெரும் ஜனநாயக மறுப்புகள் செய்து வந்த முசராபை தமது முதுகில் தூக்கித் திரிந்த மேற்கத்தேய அரசுகள் உடனடியாக அவரை கீழே தள்ளிவிட விரும்பவில்லை. மக்கள் அண்மையில் கிளர்ந்து எழுந்து போராடியிருக்;கா விட்டால் அவர்கள் தொடர்ந்தும் முசராபுக்கு ஆதரவை வழங்கியிருப்பார்கள் என்பதில் ஜயமில்லை. வழக்கறிஞர்கள், நீதிபதிகள், டாக்டர்கள் முதற்கொண்டு தொழிற் சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பு மக்களும் தெருவில் இறங்கி போராட தயாரானது ஆதிக்க சக்திகளுக்கு கிலி ஏற்படுத்தியது ஆச்சரியமானதல்ல.
போதாக்குறைக்கு வளர்ந்து வரும் இஸ்லாமிய அடிப்படைவாதம் - குறிப்பாக அணுஆயுத பலம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கையில் போய்விடுமோ என்ற பயம் இவர்களை தொடர்ந்து ஆட்டி வருகிறது. இந்த நிலையில் முசராபை கேள்விகேட்க இவர்கள் தயாராக இல்லை. அதே தருணம் தமது இராணுவத்தை பாக்கிஸ்தானில் நிலைநாட்ட தொடர்ந்து முயற்சித்து வரும் அமெரிக்காவுக்கு முசராப் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருந்து வந்துள்ளார். அதற்கு தான் அனைத்து சலுகைகளையும் வழங்குவதாக பெனாசிர் அறிவித்தது அவரை அமெரிக்காவின் முதல்தர நண்பராக்கியதும் அல்கைடாவின் முதல்தர எதிரியாக்கினதும் ஆச்சரியமான விசயமில்லை.
முசராபின் அரசு தன்னை கொலை செய்யும் முயற்சியில் இருப்பதாக பெனாசிர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்துள்ளார். 150க்கும் மேலான உயிர்களை பலிகொண்ட கடந்த அக்டோபர் 18 தற்கொலை தாக்குதலில் இருந்து தப்பிய கையுடன் அவர் அரசாங்கத்தையே குற்றம்சாட்டி இருந்தார். அவரது வீட்டை இராணுவம் முற்றுகையிட்டு காவலில் வைத்திருந்த பொழுது பெனாசிர் பி பி சி ரேடியோவுக்கு வழங்கிய பேட்டியில் அரசை கடுமையாக சாடியிருந்தார். அதே நிகழ்ச்சியில் பெனாசிருடன் பங்கேற்ற இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலபான்ட் முசராபுக்கு தமது முழு எதிர்பையும் தர மறுத்துவிட்டார். முசராப் உடனடியாக அரச பொறுப்பில் இருந்து விலத்;த வேன்டும் என்று பெனாசிரும் நிகழ்ச்சி நிருபரும் மீண்டும் மீண்டும் கேட்டும் பதில்தர மறுத்துவிட்டார் மிலபான்ட். ஜோர்ஜ் புஸ் முசராப் தமது உடை மாற்ற வேன்டும் என்று கோர முஸரப் உடை மாற்றிய கதை எமக்கு தெரியும். பாக்கிஸ்தானுக்கு ஜனநாயகம் கொண்டுவரும் இவர்தம் அக்கறையான நடவடிக்கைகள் இவை.
இன்று பாக்கிஸ்தான் இராணுவத்தின் ஆதரவின்றி பாக்கிஸ்தானில் யாரும் அரசமைப்பது என்பது நடக்ககூடிய காரியமாக தெரியவில்லை. பாக்கிஸ்தான் உருவான காலம் தொட்டு இந்நாடு இராணுவ ஆட்சியில் இருந்த காலமே அதிகம். இராணுவத்துக்குள் பல்வேறு கிளைகள் பல்வேறு அரசியல் நோக்கில் செயல்படுகின்றன. இருப்பினும் முழு பாக்கிஸ்தானும் இராணுவத்தினதோ அரசினதோ கட்டுப்பாட்டில் இல்லை. உதாரணமாக வடக்கு பிரதேசத்தில் இஸ்லாமிய அடிப்படை வாத குழுக்கள் பல்வேறு பகுதிகளை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். போதாக்குறைக்கு அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சுகள் தனித்து இயங்குகின்றன. ஒன்றோடு ஒன்று தொடர்புபடாத வகையில் தனிப்பட்ட அரசியல் நோக்கோடு வௌ;வேறு அரச அமைப்புக்கள் தங்களது சொந்த நலன்சார் அரசியலுடன் இயங்குகின்றன. ஊழலும் சுரண்டலும் உச்சக் கட்டத்தில் இருக்கும் பாக்கிஸ்தானில் மக்கள் வறுமையில் வாடுவது பற்றி எந்த ஆதிக்க சக்திகளும் கவலைப்படவில்லை. இராணுவத்தின் அரசியல் பலத்தை குறைத்து குறைந்தபட்ச ஜனநாயகத்தையாவது கொண்டுவருவதற்கு யாரும் தயாராக இல்லை.
பெனாசிருக்கோ PPPக்கோ இராணுவத்தின் முழு ஆதரவு ஒருபோதும் இருக்கவில்லை. மேற்குலக அரசுகளும் பெனாசிரை நம்பும் அளவுக்கு PPPஜ நம்ப தயாரில்லை. 60 களில் ஏற்பட்ட இடதுசாரி எழுச்சியின் விளைவாக உருவாகிய இக்கட்சிக்குள் இன்றும் பல்வேறு இடதுசாரி போக்குகள் உண்டு. இந்நிலையில் பெனாசிரின் இறப்பு பலத்த சிக்கல்களை தோற்றுவித்துள்ளது.
பெனாசிருக்கோ அல்லது அவரது குடும்பத்துக்கோ பெரும்பான்மை மக்கள் ஆதரவு இன்று இல்லை. அவர்கள் அரசாட்சியில் இருந்தபோது செய்த அநியாயங்களை மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை. பெனாசிரின் கணவர் 10வீதக்காரர் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர். 10வீதம் லஞ்சம் வாங்கிக்கொண்டு எல்லாவித ஊழல்களையும் அனுமதித்தவர் அவர். இருப்பினும் பெனாசிரின் குடும்ப உறுப்பினர் ஒருவரையே இக்கட்சிக்கு தலைவராக்க முயற்சி நடக்கும் என்று நாம் நம்பலாம். பூட்டோவின் பெயரை வைத்து அரசியல் செய்ய விரும்பும் PPPயின் முன்னனி தலைவர்கள் மக்களின் அதிருப்தி பற்றி அவர்களின் போராட்டம் பற்றி எந்த அக்கறையும் அற்றவர்களாகவே இருக்கிறார்கள். PPPஜ ஆரம்பித்த பெனாசிரின் தந்தை அலி பூட்டோ 1979ல் தூக்கில் இடப்பட்டதை தொடர்ந்து இக்குடும்பம் சந்திக்கும் நாலாவது கொலை இது. இதன்முலம் ஏற்படும் அனுதாப அலையை பாவிக்க – வரும் தேர்தலில் உபயோகிக்க - கட்சி முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு இன்னுமொரு பூட்டோவை கட்சிக்கு தலைமையாக்குவதில் முன்னனி உறுப்பினர்கள் முன்நிற்பர். இதில் மக்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை.
வரும் ஜனவரி 8ல் நடக்க இருக்கும் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்காது என்பதும், கள்ள வாக்குகளும் ஊழலும் நிரம்பி வழியும் இத்தேர்தலின் பின் பாக்கிஸ்தானுக்கு ஜனநாயகம் வந்துவிட்டதாக மேற்குலக ஊடகங்கள் கூவப்போவதும் எமக்கு தெரிந்ததே. இது பாக்கிஸ்தானுக்கு எந்த மாற்றத்தையும் கொண்டுவர போவதில்லை.
சிந்து பிரதேசம் உட்பட பாக்கிஸ்தான் எங்கும் இன்று கிளர்ந்தெழுந்துள்ள மக்களை ஒன்று திரட்டி தற்காப்பு கமிட்டிகளை உருவாக்கி ஒரு மக்கள் அமைப்பை கட்டி எழுப்புவதன் மூலம்தான் இராணுவத்தையும் இஸ்லாமிய அடிப்படை வாதத்தையும் எதிர்கொள்ள முடியும். இதன்மூலம் தான் பாக்கிஸ்தானுக்கு நியாயமான ஜனநாயகத்தை கொண்டுவர முடியும்.
1 comment:
:(=0
Post a Comment