Sunday, March 30, 2008

மாகாணசபைத் தேர்தல்...

கிழக்கில் சனநாயகமான முறையில்
தேர்தலை நடத்த இயலாது என்று சொல்லிக் கொண்டே
தேர்தலில் பங்குபற்றுவது;

`கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை!



மட்டக்களப்பு உள்ளூராட்சித் தேர்தல்களைப் பகிஷ்கரித்த யூ.என்.பி.இப்போது மாகாண சபைத் தேர்தலில் பங்குபற்றுவது பற்றிப் பேசுகிறது. மாகாண சபைத் தேர்தலில் பங்குபற்றுவதை ஊக்குவிக்கும் படியாக மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெற்றனவா?


தேர்தல் முடிவுகளை வைத்து முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தனக்கு முஸ்லிம்களிடையே உள்ள ஆதரவுத்தளம் மிகவும் வலுவாக உள்ளது என்று கூறியுள்ளது. ஆனால், வாக்காளர்களில் எத்தனை வீதமானோர் சுயவிருப்பின் அடிப்படையில் வாக்களிக்கச் சென்றனர் என்பதும் எத்தனை சதவீதமானவர்கள் சுயவிருப்பின் அடிப்படையில் வாக்களித்தனர் என்பதையும் ஆராய்ந்தால், தேர்தலுக்கு முன்பு தெரிவிக்கப்பட்ட கவலைகள் நியாயமானவையா இல்லையா என்று விளங்கும். மட்டக்களப்பு மாவட்டத்தில் மிரட்டலுக்குப் பணிந்து வாக்களித்தோர் தமிழர் மட்டுமே என்று யூ.என்.பி.யின் தலைமை கருதுகிறதா? அப்படியானால், சிங்கள, முஸ்லிம் வாக்காளர்களது பங்கு பற்றலும் வாக்களிப்பும் எவ்விதமான குறுக்கீடும் இல்லாமல் நடைபெறும் என்பது அவர்களது எதிர்பார்ப்பா?


தேர்தல் முறைகேடுகள் பற்றி அறியாத ஒரு அரசியற்கட்சியும் இந்த நாட்டில் இல்லை. 1980 கள் முதலாக அவை தொடர்பான குற்றங்களுக்கு அப்பாற்பட்டு இந்த நாட்டை ஆண்ட ஒரு கட்சியும் இல்லை. தேர்தல்களில் நடந்த முறை கேடுகள் மட்டுமன்றித் தேர்தல் பகிஷ்கரிப்புக்களும் சனநாயகத்தின் மறுப்பாகவே அமைந்திருந்தன. விடுதலைப் புலிகள் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி அழைப்பு விடுத்தனர். அந்த அழைப்பு இறுதி நேரத்திலேயே விடுக்கப்பட்ட போது, மக்கள் வாக்களிப்பில் பங்குபற்றாது கட்டாயப்படுத்தப்பட்டனர் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. பின்னர் ராஜபக்ஷவின் சார்பில் விடுதலைப் புலிகளின் முகவர்கள் இலஞ்சம் பெற்று மக்களை வாக்களியாமல் மறித்தனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதை எழுப்பியவர் இன்று உயிருடன் இல்லை. அது பற்றி இப்போது பேசப்படுவதும் இல்லை.


தமிழ் மக்களிடையே தேர்தல் பகிஷ்கரிப்பு என்ற கருத்து மிகவும் பழையது. டொனமூர் ஆணைக்குழுவின் முடிவுகளை ஏற்காமல் யாழ்ப்பாணத்தில் அரச சபைத் தேர்தல் பகிஷ்கரிக்கப்பட்டது. ஆனால், தென்னிலங்கை அரசியல் தலைமைகள் தடுமாற்றத்துக்குட்பட்டுத் தங்களது முடிவை மாற்றிக் கொண்டன. 1977 க்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் வேகமாக வளர்ச்சி கண்ட வன்முறை அரசியல் கலாசாரத்தின் தொடக்கங்கள் தமிழர் விடுதலைக்கூட்டணிக்குள்ளேயே இருந்தன. அரசியற் படுகொலைகளையும் தமிழ் ஈழப் பிரிவினையை ஏற்காதோரை மிரட்டுவதையும் தமிழர் விடுதலைக் கூட்டணி மௌனமாக அங்கீகரித்தது. யார் யாருக்கெல்லாம் இயற்கையான சாவு வராது அல்லது வரக்கூடாது என்றெல்லாம் பொது மேடைகளிற் பேசப்பட்டது. எனினும் `சிங்கள இரத்தங் குடிக்கிறதாக" மேடையேறி முழங்கியவர்களின் கண்முன்னாற் குடிக்கப்பட்டது. "தமிழ் இரத்தமே". அது தங்களவர்களது இரத்தமாகும் வரை அதிலே பிழை காணமாட்டாதவர்களாகவே தமிழ்த் தலைவர்கள் எனப்பட்டோர் இருந்து வந்தனர். 1983 இல் பொதுத் தேர்தலைத் தவிர்ப்பதற்காக 1982 ஆம் ஆண்டு நடந்த கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பின் நோக்கங்களை விளங்காமல் (அல்லது சரியாகவே விளங்கிக் கொண்டதால்) தமிழர் விடுதலைக் கூட்டணி அதில் பங்குபற்ற மறுத்து நின்றது.


இளைஞர்களும் முதலில் அதிற் பங்கு பற்ற வேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுத்தனர். பின்னர், மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தின் விளைவாக இந்த நிலைப்பாடு மாறியது.


1989 சனாதிபதி தேர்தலில் பிரேமதாஸாவிற்கு எதிராக போட்டியிட்ட ஷ்ரீமா பண்டாரநாயக்காவுக்கு வெற்றிவாய்ப்பை மறுக்கிற விதமாக வடக்கில் ஒருவிதமான முயற்சியும் தெற்கில் வேறொரு விதமான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டன. வடக்கின் தமிழர்கள் யாரையும் ஆதரிக்கக்கூடாது என்ற அடிப்படையில் ஷ்ரீமா பண்டாரநாயக்காவுக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் மீது கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இடதுசாரி வேட்பாளரை ஆதரித்த அண்ணாமலை சுட்டுக்கொல்லப்பட்டார். சிலர் தமது உயிரை காப்பாற்றிக் கொள்ள குடாநாட்டைவிட்டு வெளியேற நேர்ந்தது. தென்மாகாணத்தின் ஜே.வி.தனது மிரட்டல் அரசியலையும் பிரசார இயந்திரத்தையும் தேர்தல் பகிஷ்கரிப்பு என்ற திசையில் முடுக்கிவிட்டது. யூ.என்.பி.க்கு எதிரான உணர்வுகள் வலுவாக இருந்த இரண்டு பகுதிகளில் பகிஷ்கரிப்பு என்பது யூ.என்.பி.க்குச் சாதகமாக அமையுமென அறிந்து கொண்டே அது பிரசாரமாக முன்னெடுக்கப்பட்டது. வடக்கில் சிறிமா ஆட்சிக்காலத்தில் நன்மை கண்ட விவசாயிகளின் ஆதரவும் வலுவாக இருந்ததால் சிறிமாவுக்கு அங்கே பெரும்பான்மையான வாக்குகள் கிட்டின. தென்மாகாணம் பகிஷ்கரிப்பால் யூ.என்.பி.ஆதரவாளர்களை மறிக்க இயலவில்லை.


எனவே ஜே.வி.பி.யின் பகிஷ்கரிப்பு யூ.என்.பி.எதிர்ப்பு வாக்காளர்களையே பங்குபற்றாமல் தடுத்தது. அதன் விளைவுகளை பிரேமதாஷா ஆட்சிப்பொறுப்பை ஏற்று சில மாதங்களிலேயே ஜே.வி.பி.அனுபவித்தது.


தேர்தல்களில் பங்குபற்றாமையும் யாருக்கும் வாக்களிக்க மறுப்பதும் மிகவும் சனநாயகமான அரசியல் நடவடிக்கைகள். ஆனால், அவற்றை எவ்வாறு முன்னெடுப்பது என்கிறதே, அவற்றின் சனநாயகத் தன்மையைத் தீர்மானிக்கின்றது. மிரட்டல் மூலமும் குழப்ப நிலைகளைத் தோற்றுவிப்பதன் மூலமும் வாக்களிக்கும் வாய்ப்பை மக்களுக்கு மறுத்து மேற்கொள்ளப்படுகிற எந்தப் பகிஷ்கரிப்பும் தனது சனநாயக இலக்கை இழந்துவிடுவதோடு தனது நோக்கத்திற் கூட முடிவில் ஏமாற்றமடையலாம் என்பதையே இலங்கையின் பகிஷ்கரிப்பு அனுபவங்கள் உணர்த்துகின்றன.


கள்ள வாக்குகள் பதிவு செய்யப்படக்கூடிய ஒரு சூழ்நிலையில் வாக்குப் பெட்டிகள் `அடையப்படுகிற' ஒரு சூழ்நிலையில் பகிஷ்கரிப்பின் வெற்றி வெளிப்படையாகத் தெரிய இயலாது. எனவே, மக்கள் தமது வாக்குப் பகிஷ்கரிப்பை வாக்களிப்பில் பங்கு பற்றி வாக்குச்சீட்டுகளைப் பழுதாக்குவதன் மூலம் அறியத்தரலாம். இவ்வாறான பகிஷ்கரிப்பில் எல்லா வாக்குகளும் குறிப்பிட்ட ஒரு வகையில் பழுதாக்கப்பட்டிருப்பின் பழுதான வாக்குகள் பலமான ஒரு செய்தியைக் கூறுவனவாகும். அத்துடன் மக்கள் மறிக்கப்பட்டனர் என்ற குற்றச்சாட்டுக்கு இடமே இராது. இவ்வாறான பகிஷ்கரிப்பை இயலுமாக்க அதை முன்னெடுக்கிற அரசியல் அமைப்புகள் மக்களின் பெருவாரியான ஆதரவை உடையனவாகவும் மக்கள் மீது முழுமையான நம்பிக்கையுடையனவாயும் இருக்க வேண்டும்.


அதற்கு ஒரு முக்கியமான முன் நிபந்தனையாக மக்கள் அரசியல்மயப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதற்கான அரசியல் நாமறிந்த தேர்தல் அரசியலிருந்தும் மாறுபட்டது.


கிழக்கில் அமைதியற்ற ஒரு சூழலில் மக்களிற் கணிசமான பகுதியினர் இடம்பெயர்ந்தும் இயல்பு வாழ்வுக்கு மீளாமலும் அகதி முகாம்களிலும் அரசாங்கத்தினதும் என்.ஜீ.ஓ.க்களதும் ஊழல் மிக்க நிருவாகங்களின் தயவில் வாழ்கின்றனர். அவர்களுக்கெதிரான உயிர் மிரட்டல் வலுவானது. மக்களின் போராட்ட உணர்வை விட உயிரச்சம் அதிகமாயுள்ள சூழலில் மேற்குறிப்பிட்ட விதமான சனநாயக முறையிலான பகிஷ்கரிப்பு இயலுமானதல்ல.


ஜே.வி.பி. கிழக்கில் த.ம.வி.பு. அமைப்பிடமிருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்கிறது. அது சரியானது; ஆனால், அது போதுமானதல்ல. கிழக்கு முழுவதும் அரசாங்கத்தின் ஆயுதப் படைகளின் ஆதிக்கத்தின் கீழ் உள்ள சூழ் நிலையில் ஜே.வி.பி. தனக்குச் சாதகமான ஒரு ஆயுதக் களைவைக் கோருகிறது. மக்கள் எந்த விதமான ஆயுத மிரட்டலுக்கும் உட்படாமல் இயல்பு வாழ்வு வாழுகிற ஒரு நிலையிலன்றி எந்தத் தேர்தலும் நம்பகமானதாக அமைய முடியாது.


கிழக்கில் சனநாயகமான முறையில் தேர்தலை நடத்த இயலாது என்று சொல்லிக் கொண்டே தேர்தலில் பங்குபற்றுவது; `கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை', என்கிற விதமான அரசியல் கிழக்கின் சனநாயகம் தமிழருக்கு முழுமையாகவும் முஸ்லிம்கட்கு அரை குறையாகவும் சிங்களவர்கட்கு மிகக் குறைவாகவுமே மறுக்கப்படுகிறது என்பது எவரதும் மதிப்பீடானால் அதை வெளிவெளியாகவே சொல்லிவிட்டுத் தேர்தலில் பங்குபற்றுவது பொருந்தும்.


எதிர்க்கட்சிகள் உண்மையிலேயே கிழக்கில் தேர்தல்களை நடத்துவது பற்றியும் அங்கு நிலவும் சனநாயக மறுப்புச் சூழல் பற்றியும் கவலையுடையவர்களானால் அனைத்து எதிர்க்கட்சியினரும் ஒன்றுபட்டு ஒரு பொது முடிவுக்கு வரலாம்.

அந்தப் பொது முடிவு பகிஷ்கரிப்பாக அமையுமாயின் அது உத்தமமானது. அவ்வாறான பகிஷ்கரிப்பு வாக்குச் சீட்டுகளைப் பழுதாக்குவதாக அமையுமாயின் அது நல்ல பலனளிக்கக்கூடும். அம் முயற்சியின் மூலம் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை காலில் ஒன்றுக்கும் கீழாகக் குறையும் என்றால் அது ஒரு மாபெரும் வெற்றியாகும்.


எனினும், இனவாத அரசியல் ஆதிக்கம் செய்கிற ஒரு சூழலில் இன அடையாளத்தை வைத்தே அரசியற் கட்சிகள் செயற்படுகின்றபோது இனவாதக் கணிப்புகள் சனநாயக அரசியலுக்கான தேவையை மேவி விடலாம். இனவாத அரசியலால் வளர்ந்தும் வாழ்ந்தும் வருகிற கட்சிகளால் இனவாத அணுகுமுறையைக் கைவிடும்படி மக்களைக் கேட்க முடியாது.


மாகாணசபைத் தேர்தலில் பங்குபற்றுவதாக முடிவெடுத்ததன் மூலம் எதிர்க்கட்சிகள் தமது அரசியல் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளன. அது அரசாங்கத்தின் வெற்றியாகிவிடாது. அது சனநாயகமற்ற அடக்குமுறை ஆட்சியை நோக்கிய நகர்வுகளுக்குக் கிடைத்துள்ள ஒரு வெற்றியாகும்.


மறுபக்கஞ் சொல்பவர்:கோகர்ணன்

நன்றி தினக்குரல்.

No comments: