Saturday, June 14, 2008

தேசம் நெற்றும் சபா நாவலனும்

தேசம் நெற்றும் சபா நாவலனும்:ஒட்டும் முடிச்சுகள்

-சில குறிப்புகள்:சிந்திப்பதற்கு.


அன்பு வாசகர்களே,

தேசம் இணையவிதழில் திரு.சபா நாவலன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

"பின்னூட்டம் மக்கள் ஊடகவியலின் புதியபரிமாணம்."என்று எழுதத்தொடங்கிய அந்தக்கட்டுரையானது இணைய ஊடகத்தளத்தில் "தேசம்நெற்"எனும் வலைஞ்சிகையைத் தூக்கி நிறுத்தும் முயற்சியாகவே நாவலனால் மேற்கொள்ளப்பட்டது.இன்றைய எதிர்க்கருத்தாடலுக்கும்,மாற்றுக்கருத்துக்குமான திறந்தவெளி விவாதத்தளத்தை மிக உயரிய நோக்கில் தேசம் செய்துவருவதாக அவரது கட்டுரை பறையடித்துக்கூறுகிறது.இத்தகைய பாதையில் தேசம்நெற்றே முதன்மையாகப் பின்னூட்ட முறைமையையும்,வாசகர்களின் கருத்தை உடனடியாக வெளிப்படுத்தும் உத்தியை மக்களின் நலனினது அடியொற்றி மாற்றுக் கருத்தாடலுக்கு வழி திறந்ததாகவும் கூறுகின்ற அபாண்டமான மிகைப்படுத்தலை, கேள்விக்குள்ளாக்கின்றார் சுவிஸ் மனிதம் ரவி.

ரவியினது பின்னூட்ட எதிர்வினையானது மிகவும் பொறுப்புணர்வோடு நம்முன் நியாயம் உரைக்கிறது-உண்மை பேசுகிறது.

இலங்கைத்தமிழர்கள் புகலிடம்தேடிப் புலம்பெயர்ந்துவாழும் ஐரோப்பியக்கண்ட நாடுகளில் அவர்கள் முகங்கொடுத்த பிரச்சனைகளில் முக்கியமானவொன்று இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்த அதீத அராஜகக் காடைத்தனமாகும்.இது புலம்பெயர்ந்த தமிழ்பேசும் மக்களைத் தொடர்ந்தும் புலி இயக்கவாத மாயைக்கு அடிபணியவைக்கவெடுத்த முயற்சிகளோ அடி,தடி,வெட்டுக் குத்துக் கொலையெனத் தொடர்ந்தது.இத்தகையவொரு அவலச் சூழலில் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்த எமது அரசியல்காரணிகளை மாற்றுக்கருத்தாளர்கள் விவாதித்து,ஈழக்கோசத்தின் பின்னே சதிராடும் இயக்கச் சர்வதிகாரத்தையும்,சிங்கள அரசின் தமிழர்கள்மீதான இனவொடுக்குதலையும் நிறுத்துவதற்கான கருத்துகளையும்,முன்னெடுப்புகளையும் செய்துகொண்டோம்.இதற்காகப் புலம்பெயர்ந்த மக்கள்பட்ட துன்பங் கணக்கிலடங்காதவை.இதை சுவிஸ் இரவி அவர்கள் மிகவும் வருத்தத்தோடு வெளிக்கொணர்கிறார்-இதற்கான விலையாகக் கொடுக்கப்பட்ட உயிர்ப்பலிகளைச் சுட்டிக்காட்டுகிறார்.

புலிகளினது மிகக்கெடுதியான கொலை அரசியலிலிருந்து விடுபடுவதற்கான மாற்றுக்கருத்தாளர்களின் போராட்டம், 1985 இல் இருந்து ஆரம்பமாகிறதென்பது வரலாற்றுண்மையாகும்.இத்தகைய சூழலைமிக இலகுவாக நாவலன் மறைத்துக்கொண்டு,தேசம் இணையத்தின் இருப்புக்கு உரம்போடுவதற்காகவே முழுவுண்மையையும் திட்டமிட்டுச் சிதைக்கின்றார்.இன்றைக்கும் புலிகளை எதிர்த்துத் துணிகரமாகக் கருத்தாடும் பல தோழர்களைப் புலிகளின் அராஜக அரசியலும்,அதுசார்ந்த வன்முறையும் படாதபாடுபடுத்துகிறது.திட்டமிட்டுப் புலி ஆதரவாளர்களும்,புலி உளவுப்படையும் பற்பல மனோவியல் யுத்தத்தை நடாத்தியபடி மாற்றுக் கருத்தாளர்களைத் "துரோகிகளாக்கி"த் துப்பாக்கிக்கு இரையாக்கியது-இரையாக்கிறது!


தமது ஏகப்பிரதிநித்துவத்துக்கு எதிரான மக்கள் அணித்திரட்சியடைந்து,ஜனநாயகத்தைக்கோரும் தருணத்திலெல்லாம் இத்தகைய கோரிக்கைகளை அடியோடு சாய்ப்பதற்காகப் புலிகள் இப்போது"பொங்கு தமிழ்"எனும் வடிவத்தோடு இனவாத்தைத் தூண்டித் தமது இருப்பை உறுதிப்படுத்த எடுக்கும் முயற்சியின் ஆழத்தைப் பார்க்கும் ஒருவருக்கு அன்றைய புலிப்பாசிசக் கொலைகளை இத்தகைய நிகழ்வின்விருத்தியோடு பொருத்திப்பார்க்கும் நிலை தானாகவே தோன்றும்.

ஏகப்பிரதிநிதிகள் புலிகள் எனும் வாத்தையைத் தொடர்ந்து நிலைப்படுத்தப் புலிகள் செய்த-செய்யும் கொலைகள்,ஆட்கடத்தல்,அச்சுறுத்தல்,தாக்குதல்கள் எல்லாம் இன்றுவரையும் தொடர்கதையாகவே இருக்கிறது.இதைக்கடந்தும் மாற்றுக்குரல்கள் ஓலிகின்றதென்றால் அது மக்களின் நலன்சார்ந்து ஆற்றும் அரசியலோடு சம்பந்தப்பட்டு மக்களை நம்பிய முன்னெடுப்பாகவேமட்டும் இருக்கமுடியும்.

மக்களைத் தொடர்ந்து அடக்கி,அவர்களின் அழிவைத் தத்தமது இயக்க-கட்சி நலன்களுக்காகப் பயன்படுத்துபவர்கள் என்றைக்கும் தமது உண்மை முகத்தை மக்களிடமிருந்து மறைத்தே வருகிறார்கள்.இதற்காகவே"துரோகி"என்று மிலேச்சத்தனமான முறையில் கணிசமான மக்களைப் போட்டுத் தள்ளுகிறார்கள்.அந்தவுண்மையான முகமானது மிகமிகப் பாசிசத்தனமான அடக்குமுறையென்பதை மாற்றுக் குரல்களே அம்பலப்படுத்தி வந்திருக்கிறது.இதற்கு இன்றுவரை உயிர்கொடுத்தவர்கள்பலர்,உதைப்பட்டவர்கள்-படுபவர்கள் பலர்.

இத்தகையவொரு யதார்த்தச் சூழலை முழுமையாகத் தேசத்துக்குத்தாரவார்த்துக் கெளரவிக்கும் அரசியல் மிகவும் கபடத்தனமானது.தேசத்தின் ஊடாகக் காரியமாற்ற முனையும் மக்கள் விரோத தளமொன்று இங்ஙனம் செயற்படுவதை நாவலனின் கட்டுரையிலிருந்து நாம் விபரமாக உள்வாங்க முடியும்.இத்தகைய விபரத்தை ஓரளவேனும் பூர்த்தி செய்கிறது திரு.இரவியின் எதிர்வினையாகும்.

படித்துப்பாருங்கள்,பட்ட துன்பங்கள் யாவும் அராஜகத்தைத் தோற்கடிக்கவே என்று புரியும்.

இதை மறுத்து தேசம்போன்ற ஊடகங்களை மேல் நிலைக்கு எடுத்துவந்து"இதுதான் மாற்றுக் கருத்துக்கு முன்னோடி" என்பவர்கள்,இலக்கியச் சந்திப்பை ஆரம்பித்தகர்த்தா பரா மாஸ்டர் என்பதைப்போன்றதே.இது, காகம் இருக்கப் பனம் பழம் விழுந்த கதைமாதிரித்தான்.

இன்றைக்குப் புலம்பெயர்ந்த தமிழ்பேசும் மக்களிடத்தில் மிக அராஜகமாக இனவாதத்தையும் அதுசார்ந்து குறுந்தேசிய வாதத்தையும் விதைத்துப் புலிகள் தமது இயக்க நலனைப் பேணுவதற்கெடுக்கும் முயற்சியானது"பொங்கு தமிழ் மட்டுமல்ல.மாறாக, இன்னும் பல கொலைகளில் முடியப்போகிறது.இதன் ஒரு சுற்று நடைபெற்று இறுதிக்கட்டம் வந்தடையும் நிலையில், அடுத்த சுற்றுக்கு அடியெடுத்துக்கொடுக்கும் அரசியல் சூழ்ச்சியைத் தேசம் இணையத்தினூடாக மக்கள் விரோதிகள் செய்வதற்குத் தேசம் உடந்தையான செயல்களில் ஈடுபடுகிறது.

எங்கே மக்கள் கூடுகிறார்களோ அங்கே குண்டு வைக்கும் புலிகளின் அரசியலுக்கு மிகவும் வசதியான தளமாகப் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்குள் முன்தள்ளப்படும் தேசம் இணையம் என்பதே நமது கருத்தாகும்.இதைவிட்டுத் தேசத்தின் அரசியல் மக்களைச் சார்ந்தியவதாக எவராவது கதை புனைவாராகின் அங்கே, வேட்டைக்கான மிருகங்களைத் தேடியலையும் ஒருகூட்டம் முகாமிட்டிருப்பதாகவே நாம் அடித்துக்கூறுவோம்!

இதைக் கவனத்திலெடுத்து இரவியின் எதிர்வினையை உங்கள் முன் வைக்கின்றோம்.

நன்றி,வணக்கம்.

அன்புடன்,

கருணாநந்தன் பரமுவேலன்.
15.06.2008

------------------------



புகலிட தொடர்பு ஊடகங்களினதும் ,
மாற்றுக் கருத்துகளினதும் எனது சார்பிலான
ஒரு சிறு வரலாற்றுப் பதிவுதான் இது.


சபாலிங்கம் கொலைசெய்யப்பட்டபோது அவர்வீட்டு கொல்லைப்புறத்தில்கூட அஞ்சலி எழுத அச்சமடைந்து இருந்தவர்கள் பலர் என்று நாவலன் எழுதுகிறார். அன்று தேசம் நெற் இருந்திருந்தால் முகமிலிகளாக அஞ்சலியைப் பதிவுசெய்திருக்கும் என்று பின்நோக்கிய ஆரூடம் கொடுத்திருக்கிறார். திரும்பத்திரும்ப இந்த இரு வசனங்களையும் வாசித்துப் பார்த்தால் இதற்குள்ளேயே விடையும் இருப்பதை காணுவீர்கள்.
இதைவிட முக்கியமாக சொல்லப்பட வேண்டிய விடயமாக ஒன்று இருக்கிறது. சபாலிங்கம் கொலைசெய்யப்பட்ட காலகட்டம் பற்றிய நிலைமையை மறந்து தண்ணிபாய்ச்சுவது ஒரு ஆய்வுமுறையே அல்ல. 80 களின் நடுப்பகுதியில் புலிகளின் அடாவடித்தனம் உச்சத்தில் இருந்ததை (அனுபவித்த) சிறுபத்திரிகைக்காரர்கள் அறிவர்… புலிதவிர்ந்த -சிலமணிநேர- வானொலி ஒலிபரப்பைக்கூட நடத்த முற்பட்டவர் அறிவர். இயக்கக் கூட்டங்களுக்குள் புகுந்தடித்தனர். புதிய வெகுஜன அமைப்புகளிலிருந்து சிறுபத்திரிகைக்காரர்களின் ஒன்றுகூடல்கள்வரை கண்காணித்தபடி இருந்தனர்.. செய்திப் பத்திரிகைகளை தடைசெய்தனர் அல்லது கடைகளில் விற்கவிடாது பயமுறுத்தினர்… குகநாதன் ஆரம்பித்த தமிழ்த் தொலைக்காட்சியை அபகரித்தனர்…இப்படிப் பல. இந்த அடாவடித்தன சூழல் சபாலிங்கத்தின் கொலையுடன் ஒரு புதிய வடிவம் (கொலைவடிவம்) எடுத்திருப்பதாக அவர்கள் கருதினர். இது தமது பாதுகாப்புப் பற்றிய கேள்விகளை இந்த வட்டத்துள் எழுப்பியதும், தாம் அனுபவித்துக்கொண்டிருந்த அராஜகத்தின் வளர்ச்சிப்பாதையாக இந்தக் கொலையைக் கண்டதையும், அதனால் அமைப்புவடிவமற்ற வட்டங்கள்; அதிர்ச்சியடைந்ததையும் புரிந்துகொள்ள முடியாத ஆய்வுகள் வரட்சிமிக்கது.


காசு தராவிட்டால் ஊரிலை பார்த்துக் கொள்ளுறம் எண்டு மிரட்டிச் சாதித்த காலம் அது. மற்றைய இயக்கங்களிலிருந்து அகதிகளாய் வந்தவர்கள் வடிகால் தேடினர். இந்த நிலைமைகளுக்குள்ளால்தான் 40க்கு மேற்பட்ட சிறுபத்திரிகைகள் அரும்பி பிறிதானதொரு குரலுக்கான வெளியை இந்த அடாவடித்தனங்களுக்கூடாகவும் மெல்ல மெல்ல உருவாக்கின. அந்த வெளி சிறுபத்திரிகைகளாலும் சந்திப்புகளாலும் மெல்ல அகண்டு இன்று வானொலி இணையத்தளங்கள்வரை வந்ததே வரலாறு. சிறுபத்திரிகைக்காரர் மீதான தாக்குதல்கள், தேடகம் எரிப்பு, மனிதம் சஞ்சிகையை சட்டவிரோதமாக ரயில்நிலையங்களில் விற்றதாக சுவிஸ்பொலிசிடம் காட்டிக் கொடுத்தது… என புலிகள் இடறிக்கொண்டுதான் இருந்தார்கள். இதை ஒன்றும் மேற்கூறிய வட்டத்துக்குள் மட்டுமன்றி புலியரசியலோடு முரண்பட்ட தனிநபர்களின் திராணியோடும் சேர்த்துப் பார்க்கவேண்டும். காசுதரமாட்டம் செய்யிறதைச் செய் என்று முரண்டுபிடித்தும், எதிர்ப்பு அரசியல் (அல்லது நியாயம்) பேசியும் இந்த உதிர்pகள் செய்த செயற்பாடுகளையும் யாரும் புறக்கணித்துவிட முடியாது. இவ்வாறெல்லாம் அடையப்பட்ட இன்றைய நிலைமைகளின் மீதேறி நின்று கொண்டு ரிபிசி தேனீ பாணியில் இன்று தேசத்தையும் மாற்றுக் கருத்துக்கான களத்தை உருவாக்கிவிட்டவர்களாக அல்லது வடிகால் வெட்டிவிட்டவர்களாக சித்தரிக்க முனைவது ஒரு புகலிடவரலாற்று மோசடி.


சபாலிங்கம் கொலைசெய்யப்பட்டபோது அதை கண்டித்தும் அஞ்சலி செலுத்தியும் தமிழிலும் ஆங்கிலத்திலும் கூட்டாகப் பிரசுரத்தைத் தயாரித்து விட்டது சிறுபத்திரிகை வட்டம். அதை அவர்கள் வெளியில், ரயில்நிலையங்களில் நின்றெல்லாம் விநியோகித்த செயற்பாடுகளும் உண்டு. அதைவிட பாரிசில் இதே இலக்கியவட்டக்காரர்கள் அஞ்சலி கூட்டம் நடாத்தினார்கள். இந்தக் கொலையின் நினைவாக தோற்றுத்தான் போவோமா என்ற தொகுப்பும் புஸ்பராசாவின் உழைப்பில் வெளிவந்திருந்தது. இவற்றையெல்லாம் மறைத்து அல்லது மறந்து நாவலனால் கொல்லைப்புறக் கதையெல்லாம் எழுத எப்படி முடிந்ததோ தெரியவில்லை. அந்த நேரம் தேசம் நெற் இருந்திருந்தால் அதைப் பதிவுசெய்திருக்கும் என்று எழுதுவது கொஞ்சம் கோமாளித்தனமாக இல்லை?.

85 களின் மத்தியிலிருந்து 90களின் மத்திவரை மேற்கூறிய நிலைமைகளுக்கூடாக (கையெழுத்துப் பிரதியாகக்கூட) வந்துகொண்டிருந்த சிறுபத்திரிகைகளைப் புறந்தள்ளி, அந்நிய தேசத்தில் அகதிகளாய் வந்த சமூகத்தின் உணர்வுகள் வடிகாலற்றிருந்த காலத்தில் தேசம்நெற் உருவாகியதாகப் பதிகிறார் நாவலன். தோழர் சொல்லித்தான் எமக்கெல்லாம் இது தெரியவருகிறது. (1997 இல் தேசம் சஞ்சிகையாகவும் 2007 இல் தேசம் நெற் ஆகவும் பரிணமித்ததாக சேனன் தனது தரவுகளை பதிந்திருக்கிறார்).

பின்னூட்ட முறைமைகள் தமிழ் இணையத்தளப் பரம்பல் பற்றியெல்லாம் மாற்றுக்கருத்துகளுக்கு வெளியிலும் நாம் போய்ப் பேசியே ஆகவேண்டும். நாமறிய யாழ் இணையத்தளம் தேசம் நெற்றுக்கு முந்தியது. அதன் கருத்துக்களம்தான் (படிப்பு, தேடல் சாராத) பொதுப்புத்திப் பின்னூட்டக் கலாச்சாரத்தைத் தோற்றுவித்தது என்பது என் கணிப்பு. பதிவுகள் இணையத்தள (காத்திரமான) விவாதக்களம் தேசம் நெற்றுக்கு முந்தியது. தேசம் நெற்றில் பின்னூட்ட முறைமை சென்ற ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதெல்லாம் ஒப்பீடு செய்து தேசம் நெற்றை இடைமறிப்பதற்கல்ல. புகலிட தொடர்பு ஊடகங்களினதும் மாற்றுக் கருத்துகளினதும் எனது சார்பிலான ஒரு சிறு வரலாற்றுப் பதிவுதான் இது.

தேசம் நெற் பற்றிய பார்வையை தனிநபர்களை மண்டைக்குள் வைத்துக்கொண்டு செய்தால் அது விமர்சனமாய்ப் பரிணமிக்காது. சான்றிதழ்தான் அச்சாகும். இதே சான்றிதழின் பின்பக்கங்கள் சேறடிப்புகளாய் ஊறிக்கொண்டுதான் இருக்கும்.


-ரவி






பின்னூட்டம் மக்கள் ஊடகவியலின் புதிய பரிமாணம் : சபா நாவலன்


ஜனநாயகக் கடவுளைச் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு புலியெதிர்பென்ற புதிய சிம்மசனத்தில் சப்பாணி கொட்டி அமர்ந்து கொண்டு சட்டம்பிகளாயும், சக்கரவர்த்திகளாயும் சாம்ராஜ்யக் கனவில் மிதந்தவர்களுக்கு மட்டுமல்ல அதே ஜனநாயகத்தை ஒரு கைபார்த்து வைத்த புலம்பெயர் புலிகளுக்கும் கூட ‘தண்ணி காட்டியிருக்கிறது’ புதிய மக்கள் ஊடகவியலின் வளர்ச்சி. பரிஸில் நடந்து முடிந்தது இதை விலாவாரியாகத் தெளிவுபடுத்துகிறது.

80 களில் அரசியல் என்பது அறப்படித்த சிலரின் தொப்புள் கொடியில் தொங்கியே பிறந்தததாக வெகுஜனத்திற்கு மறைக்கப்பட்டிருந்தது. ‘கொலைகாரச் சிங்களவனை’ சிதைப்பதற்கு இதோ திசை சொல்கிறேன்’ என இரத்த வெறிக்கு உரம் கொடுத்தவர்களை எதிர்ப்பதற்கு சந்தியிலும் சாலைத் திருப்பங்களிலும் மரணித்தவர்கள் பலர். சுந்தரம் ஒபரோய் தேவன் மனோ மஸ்டர் என அறியப்பட்டவர்களும் ஆயிரக்கணக்கான முகமறியாதவர்களும் கண்முன்னால் செத்துப் போனதைக் கண்டு காயப்பட்ட வடுக்களோடு வாழும் சமூகம் தான் இந்தப் புலம் பெயர் சூழலில் ஜனநாயகத்திற்காக ஏங்கும் நாமெல்லாம்! கொன்று போடப்படவர்கள் மீதும் குற்றுயிராக்கப்பட்டவர்கள் மீதும் இடறிவிழுந்து அன்னிய தேசத்தில் அகதியாக வந்த சமூகத்தின் உணர்வுகள் வடிகாலற்றிருந்த சூழலில் தான் தேசம்நெற் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது.
சபாலிங்கம் சாகடிக்கப்பட்ட போது அவர் வீட்டுக் கொல்லைபுறச் சுவரில் அஞ்சலி எழுதுவதற்குக் கூட அச்சமடைந்து இருந்தவர்கள் பலர். இலத்திரனியல் இன்னும் இன்று போல் வளராத காலமது. தேசம்நெற் இருந்திருந்தால் முகமிலிகளாய் அஞ்சலி பதிந்திருப்போம். ஒன்றரைத் தசாப்த்தம் கடந்து போனபிறகு அஞ்சலியென்ன அதை மறுத்தவர்களையே விமர்சிக்கும், மனித விழுமியங்களையே மறு விசாரணை செய்யும் வெளியைத் தேசம்நெற் திறந்து வைத்திருக்கிறது.


நமது சமூகத்தின் விஷ வேர்களையெல்லம் ஆழச்சென்று விசாரிப்பதற்கு வடுக்களைச் சுமந்த சமூகத்தின் உணர்வுகள் மடைதிறந்த வெள்ளம் போல் பாய்ந்த தருணத்தில் தேசம்நெற் திசை பிறழவில்லையாயினும் தவறுகளுக்கு சுயவிமர்சனம் செய்து கொண்டே அதனோடு நட்பு பாராட்டிக் கொண்டவர்களோடு கலந்துரையாடியது.


இதன் பின்னதான தேசம்நேற் இணையட்தின் புதிய பரிணாமம் என்பது பல புதிய அரசியல் விவாதங்களையும் சமூக விசாரணைகளையும் நடத்தியது. தனி நபர் விமர்சனங்கள் நின்றுபோக நபர்களின் அரசியல் மீதான விமர்சனமாக தேசம்நெற்றின் பின்னூட்டங்கள் பரிமாணம் பெற்றன.
புதிய இலத்திரனியல் இணையங்கள் உருவாக்கிய கருத்துச் சுதந்திரம் இன்னொரு விமர்சனக் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியது. பழமைப் பற்றுக்கொண்ட அடிப்படை வாதக் கருத்தோட்டமுள்ள அதிகரம் இந்த விமர்சன முறையை ஏற்றுக் கொள்வதாயில்ல்லை. கருத்துரிமையின் சொந்தக்காரர்களாய் பெருமிதம் கொண்டிருந்வர்களும் அதிகாரத்தின் கர்த்தாக்களாய் அகங்காரமடைந்து இருந்தவர்களும் திகைத்துப் போகிற அளவிற்கு புதிய தொழில் நுட்பம் அறிமுகஞ்செய்த விமர்சனக் கலாச்சாரம் அமைந்திருந்தது.


எகிப்தில் பிரசித்தி பெற்றிறுந்த அப்துல் முகமட் என்பவரின் இணையத்தை அரசாங்கத்திற்கு எதிராக அவதூறு செய்ததற்காகவும் இஸ்லாத்தை அவதூறு செய்ததற்காகவும் தடைசெய்த எகிப்து அரசாங்கம் மொகம்டட்டையும் சிறையில் பூட்டி இரண்டு மாதங்கள் கூட முழுமையாகாத நிலையில் ஜெயபாலனை ‘ஜனநாயகச்’ சிறையில் அடைத்து வைக்க பென்னாம் பெரிய பூட்டோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள் நமது படித்த பயில்வான்கள்.
ஒருவரின் நாளாந்த வாழ் நிலையை விமர்சிப்பதற்கு நமது வாழ்க்கை ஒன்றும் முழுநேர அரசியலல்ல. எனது அலுவலக மேசை ஒழுங்கற்றுக் கிடக்கிறது என்று சுட்டுவிரல் காட்ட நான் எனது கட்சி அலுவலகத்தில் வேலை பார்க்கவில்லை. ஆனால் மாற்றுக் கருத்தாளியைக் கொன்று போட்டுவிட்டு ஜனநாயகம் பேச தெருவுக்கு வரும் போது, ஒவ்வொரு மாற்றுக் கருத்துக் கொண்டவனும் விசாரணை செய்ய வருவான். அதுவும் வடுக்களோடு வாழும் சமுதாயத்திலிருந்து மௌனிகளாயிருக்கும் ஞானிகளை எதிர்பார்ப்பது கடைந்தெடுத்த முட்டாள்தனம்.

நிர்மலா இராஜசிங்கம் சுசீந்திரன் எம்.ஆர். ஸ்டாலின் ராகவன் மற்றும் தலித் மேம்பாட்டு முன்னணி, SLDF மீது முன்வைக்கப்பட்ட விமர்சங்களையே உதாரணமாக புதிய நேர்பரிமாற்ற விமர்சனக் கலாச்சாரப் பின்னணியிலிருந்து பார்ப்போமானால், இதற்கான எல்லைகளை வரைவுக்கு உட்படுத்தலாம். இந்த இவர்கள் சார்ந்த அமைப்பு சர்வதேச அர்சு சாரா நிறுவங்களிடமிருந்து பணம் பெறுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது இவர்களது தனிநபர் இயல்பு சார்ந்த விமர்சனமோ அன்றி அவர்களின் நாளாந்த நடவடிக்கை சார்ந்த விமர்சனமோ அல்ல. அவர்கள் முன்வைக்கும் அரசியல் அதன் பின்னணி சார்ந்த விசாரணை. இவ்வாறான விமர்சங்களை கிசு கிசு போல இவர்கள் அறியாமலே இவ்ர்களின் முதுகுக்குப் பின்னால் நின்று குற்றச்சாட்டுக்களாக வளர்ப்ப்தை விடுத்து, ஒரு பொதுசன ஊடகத்தில் பதிந்த போது அதைப் பதிந்தவரின் சமூக உணர்வு வெளிப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பான தெளிவுபடுத்தலை பதிவாளர் எதிர்பார்ப்பது தெரியப்படுத்தப் படுகிறது. இந்த விமர்சனத்திற்கு தெளிவான பதில் வழங்கப்படும் பட்சத்தில் அது விமர்சகருக்கும் விமர்சிக்கப்படுபவருக்குமான புரிந்துணர்வாக வளர்ந்திருக்கும். வெளிப்படைத் தன்மையின் முதற்புள்ளியாக அமைந்திருக்கும்.

ஆனால் நடந்ததோ வேறு. விமர்சனமே தவறு என்று குற்றஞ்சாட்டப்பட்டு பரிஸ் வரை சென்று தணிக்கைக் கோரிக்கை எழுப்ப்பப்பட்டுள்ளது. இவ்வாறான சந்தேகங்கள் எழுவதற்கு ஆயிரம் அறியப்படாத காரணங்கள் இருக்கலாம். இன்று அரசியலற்ற அமைப்புகளுக்குப் பின்னால் இயங்கும் ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரல் அதிர்வுகளைத் தருகின்றன. என்.ஜீ.ஓ களின் மறுகாலனியாக்கம் பற்றி சமூகத்தைப் பற்றிச் சிந்திப்பவர்கள் பேசுகிறார்கள்.

இந்த வகையான சந்தேகங்கள் முன்னெழுதல் என்பது தவறன்று. அவற்றைத் தெளிவுபடுத்த வேண்டியது சம்பந்தப் பட்டவர்களின் சமூகக் கடமை. தேசம்நெற் கிளர்த்தியிருந்த விவாதங்களூடாக இந்தத் தெளிவுபடுத்தலை முன்வைப்பதற்குப் பதிலாக ரெஸ்ரோரண்டிலிருந்து விமர்சன முறையை இறக்குமதி செய்ய முனைந்திருக்கிறார் சுகன்.

சுகன் முன்வைக்கும் அரசியல் மீது அவர்மீதான தனி நபர் தாக்குதல்களை யெல்லம் கடந்து தேசம் கிளர்த்தியிருந்த விவாதத் தளத்தை எதிர்மறையாகக் ஏற்றுக்கொண்டு சில வரிகளில் முரண்பட்டவர்களை நட்புடன் தெளிவுபடுத்தியிருந்தால் பகைக்குப் பதில் கருத்து வளர்ந்திருக்கும். கருத்துக்கள் மீதான விமர்சனப் பார்வைகளை எதிர்கொள்ள முடியாமல் சுகன் இயைபுற்றிருக்கும் கூட்டணி நகைப்புக்குரியதாகவே தெரிகிறது. மலையைக் கிளப்பும் மகத்துவமிருந்தும் எலிவேட்டைக்காக இணைப்பேற்படுத்தும் பின் தங்கிய நிலப்பிரபுத்துவ மனோபாவத்தின் இவ்வகையான மூடிய தன்மையென்பதை நாமெல்லோருமே சுமந்தபடிதான் உலாவருகின்றோம் எனினும், புதிய தொழில் நுட்பம் ஏற்படுத்தியிருக்கும் வெளிப்படையான வெளியை தேசம்நெற் போன்ற இணையத்தளங்கள் ஏற்படுத்த முற்படும் போது அவற்றைக் கற்றுக்கொள்ள முனைவோம்.
வெளிப்படை நிலை என்பது தான் ஜனநாயகத்தின் முதற்படி. தவிர வினாக்களுக்கு விசனமடைவதென்பது புலி முன்வைக்கும் விமர்சனக் கலாச்சராமாகும்.

நேர்பரிமாற்றத் தொழில்நுட்பம் என்பது ஊடகவியலில் ஏற்படுத்திய பாதிப்பு என்பது நாமெல்லம் கவனத்தில் கொள்ளவேண்டியதொன்று.1. மாதக்கணக்கில் அடுத்த வெளியீட்டுக்காகக் காத்திராமல் உடனுக்குடன் கருத்துக்க்களைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.2. புதிய கருத்துக்களை முன்வைப்பது என்பது உயிரைப் பணயமாக்குவது என்றாகிவிட்ட சூழலில் அடையாளத்தை மறைத்துக் கொண்டு கருத்தை வெளிப்படுத்தும் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
3. பணபலத்தோடு மட்டுமே நாளிதழ்கள் வகையான ஊடகங்களை வெளியிடும் என்ற சூழல் மாறிப் போய் சாமான்யன் கள் கூட ஊடகவியற் துறையில் நுளைந்து விடலாம் என்ற நிலையை ஏற்பட்த்திக் கொடுத்திருக்கிறது.
4. மாதக் கணக்கில் கருத்துக்கணிப்புக்கள் காத்திருப்புகளுகிடையில் நடத்தப்படும் நிலை மாறி சில மணித்திலாங்களே போதுமானது என்ற நிலை உருவாகியுள்ளது.

இவற்றையெல்லாம் தமிழ் ஊடகவியற் துறையில் முதல் முதலாகப் பிரயோகித்த ஒரே இணைய ஊடகம் தேசம்நெற் மட்டும் தான். தேசம்நெற்றின் வெற்றி என்பது பல ஜனநாயக நிகழ்வுகளுக்குக் கூட வழிகோலியிருக்கிறது. ராஜேஸ் பாலவின் அரசியில் கருத்துக்கள் மீது எனக்குக் கிஞ்சித்தும் உடன்பாடில்லை. ஆனால அவர் மகேஸ்வரி வேலாயுதத்திற்கு அஞ்சலிக் கூட்டம் நடத்த முனைந்தபோது அவர் சந்திக்க நேர்ந்த எதிர்ப்புக்கள் புலம்பெயர் ஜனனாயகச் சூழலைக் கேள்விக்குறியாக்கியது. இந்தச் சூழ்நிலையை எதிகொண்ட தேசம் வாசகர்கள் வழங்கிய ஆதரவும் கருத்தூட்டங்களும் கூட்டம் போடும் அடிப்படைச் சுதந்திரத்தை அவருக்கு மறுபடி பெற்றுக்கொடுத்தது.

அது மட்டுமல்ல ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு சத்தம் சந்தடி இல்லாமல் வந்து போன ஜனாதிபதிக்கு அதேபோல் கொமன்வெல்த் கூட்டத்திற்கு வந்து போக முடியவில்லை. இனி லண்டன் வருவதானால் இரண்டுமுறை சிந்தித்துத்தான் முடிவெடுக்க வேண்டிய நிலைக்கான முதற் பொறியை தட்டியது தேசம்நெற். 200,000 தமிழர்கள் வாழும் லண்டனுக்கு அவர்களின் சக உறவுகளை அழிக்கும் படையின் தளபதி எப்படி உல்லாசமாக வந்துபோக முடியும் என்ற கேள்வியை முதலில் எழுப்பியது தேசம்நெற்.

இவை தேசம்நெற்றின் ஊடக பலத்திற்குக் கிடைத்த வெற்றியாகும்.


நீங்கள் தமிழ் மக்களின் பெயரில் அரசியல் செய்தால் அவர்களுக்காக எழுத விரும்பினால் அவர்களுக்காக படைக்க முற்பட்டால் அதனை வெளிப்படையாகச் செய்யுங்கள். விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருங்கள். தமிழ் மக்களின் பெயரில் செய்யவும் வேணும் ஆனால் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளவும் ஏலாது என்றால் தயவுசெய்து தேசம்நெற் பின்னூட்டகாரர்களின் கண்களில் பட்டுவிடாதீர்கள். அவர்களுக்கு புலியும் ஒன்று தான் பூனையும் ஒன்றுதான். கட்டுரையாளனாகிய நானும் தேசம்நெற்றின் ஆசிரியராகிய ஜெயபாலனும் அதற்கு விதிவிலக்கு அல்ல.
இந்த யதார்த்த நிலையைப் புரிந்து கொண்டு உண்மையிலேயே ஜனநாயகம் விரும்பும் சமூக உணர்வு கொண்டவர்கள் சலிப்படையாமல் தேசம்நெற்றை வளர்த்தெடுப்போம்.

நன்றி:தேசத்துக்கு.

No comments: