"சொந்த முகங்களை இழந்து... - புலம் பெயர் அரசியல்" சொல்ல அவசரப்படாதீர்கள்!
"சொந்த முகங்களை இழந்து.. – புலம்பெயர் அரசியல் "நாவலன் கட்டுரை தொடர்பாக எனது புரிதல்.இது குறித்து மிக விரிவாக எழுதியாகவேண்டும்.எனினும்,இப்போதைக்கு கொஞ்சம் பேசலாம்."புலம் பெயர் மக்கள்"இந்த வார்த்தையே மிக விரிவாகப் பகுத்தாய்ந்து முடியவில்லை.உலகம் பெரு வெளியில் மனிதத்தைத் தொலைத்த கதை இதற்குள்...நாம்,மேலே போவோம்.
நாவலன்,"சொந்த முகங்களை இழந்து... - புலம் பெயர் அரசியல்" சொல்ல அவசரப்படாதீர்கள்! இப்படிச் சொல்வதற்கு எனக்கு நிறையக் காரணங்கள் உண்டு!
நான்,உங்களது இக்கட்டுரைக்கு ஓடிவந்து நறுக்குப் பதிலுரைக்கும்வாசகர்கள் போன்று கருத்துச் சொல்லமாட்டேன்.
இதற்கான காரணங்களை நமது மக்களதும்-புலம் பெயர் மானுடர்தம் சமூக உளவியல்சார் தொடர்பாடலோடும், அதன் தளத்தில் அவர்களது சமூக அசைவியக்கத்தோடும் பொருத்தியே நான் எழுத முற்பட்டிருப்பேன். உங்களது கட்டுரை இவற்றையெல்லாம் பார்க்கமால் வெறும் முன்தீர்ப்பு மொழிவுகளோடு அவசரக் குடுக்கைத் தனமாக எழுதப்பட்ட அறிதலை எமக்கு வழங்குகிறது.
அவசரப்படாதீர்கள்-ஆத்திரப்படாதீர்கள்!
நான்,நேரடியாக விஷயத்துக்கு வருவேன் :
[ //இன்று இலங்கையில் கூட அருகிப் போய்விட்ட பூப்புனித நீராட்டு விழா, மரபு சார்ந்த திருமணச் சடங்குகள் போன்றவற்றை மிகுந்த பொருட்செலவில் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்கிறார்கள்.//
//30 வருடங்களின் முன்னிருந்த “யாழ்ப்பாணத்தை” ஐரோப்பாவில் மட்டும்தான் காணமுடியும்.//
//ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் புலிகளுக்குக் கிடைத்த உணர்வு பூர்வமான ஆதரவு என்பது 90 களின் பின்னர் இலங்கையின் வட கிழக்கில் அவர்களுக்குக் கிடைத்ததில்லை. மேற்கின் சீரழிந்த கலாச்சாரத்திலிருந்து தமது சந்ததியைப் பாதுகாக்கின்ற குறியீடாக விடுதலைப் புலிகள் அமைப்பை “மேற்குத் தமிழர்கள்” நோக்கினார்கள் என்பதே இதன் அடிப்படையாகும்.// ]
இப்படியுரைக்கிறீர்கள்.ஒரு மார்க்சிஸ்ட்டு இத்தகைய முடிவுக்கு வருவதில் பல சிக்கல்கள் இருக்கிறது-உங்களுக்கு இந்தச் சிக்கல் முன் தோன்றவில்லையா?
சரி,நான் சொல்கிறேன்!மனிதர்கள் கூட்டாகவும்,தாம்சார்ந்த மொழி நிலைப்பட்ட குழுவாழ்வுக்குள் தம்மை இணைத்து உறவாடியபோது,அவர்கள் ஒரு பொது மொழிக்கு இணைவாகவும்-சிந்தனை பூர்வமாகவும் ஆத்மீகரீதியான ஆற்றலோடு இசைந்து உயிர்த்திருக்க முனைந்தனர்.இலங்கை அரசு,இந்த வாழ் சூழலை இல்லாதாக்கிச் சமூக நிலையைச் சிதைத்தபோது, புலப்பெயர்வு-இடப்பெயர்வு ஆரம்பமாகிறது.இங்கு,ஒரு "ஒழுங்குக்கு" உட்பட்ட உறவு-வாழ்நிலை உடைவுறுகிறது.புலம்பெயர்ந்த தேசம் புதிய சூழலோடு-புதியபாணி ஒடுக்குமுறையோடு புலம்பெயர் தமிழர்களை-மனிதர்களை வரவேற்கிறது.புலம் பெயர்ந்தவர்கள் முன் எல்லாம் வெறுமை!அம் மனிதர்கள் அனைத்திலும் வறுமையோடு இப் புலப் பெயர்வை எதிர்கொள்கின்றனர். வரலாற்றில் கட்டியமைக்கப்பட்ட"ஈஸ்ற்-வெஸ்ற்"[East-West]கருதுகோள் மேற்கு மனிதர்கள் மூலம் அறிமுகமாகிறது.
அந்தோ பரிதாபம்!ஆச்சி காலமுக்க-அப்பு,கைப்பிடித்து குரும்பட்டி பொறுக்கி விளையாட்டுக்காட்ட வளர்ந்த நாம்,அனைத்தையும் இழந்து, பெட்டி வீட்டுக்குள் புறாக்கூடு கட்டிவைத்து எமது குழந்தைகளை வளர்க்கும் போது, இந்த நெருக்கடியைத் தவிர்த்து சமூக இசைவாக்காத்தோடு மேற்குடன் கலக்கப் போராடித் தோற்போம்!அங்கே,அனைத்தையும் சொல்லும் தடையாக,நாசமாப்போன வாழ்நிலை சிதறி மனிதர்களைத் துவசம் செய்கிறது.
"குங்குமம்"ஐரோப்பியர்களுக்கு ஒரு நிறம் மட்டுமே.தமிழ்மொழிக் காரருக்கு ஒரு வாழ்வு அநுபவம்!"ஆர்பைட் மார்க் பிறாய்"[Arbeit macht Frei] தமிழர்களுக்கு ஒரு சுதந்திரம் குறித்த வார்த்தை.ஆனால் ஜேர்மனியனுக்கு ஒரு ஒடுக்குமுறையின் திசைவழி சொல்வது.இதைத் தாண்டுவோமா?
தான்சார்ந்து,தன் சுற்றங்கொண்ட சிலாகித்த வாழ்வு தொலையும்போது, வந்த தேசத்தில் குழுமமாக வாழ மொழி தடையாகிறது-நிறம் தடையாகிறது-கல்வி தடையாகிறது-செயற்றிறன் தடையாகிறது.என்ன செய்வார்கள்?
புலம்பெயர்ந்தோரை,அங்கொன்றும் இங்கொன்றுமாய் வாழப் பணித்த ஐரோப்பிய நிர்வாகம்,அவர்களது இணைவைத் திட்டமிட்டுப் பறித்தெடுத்தது.இதன் புரிதலில்,தான்சார்ந்த சமூகத்தோடு அசைவுறும் வழியென்னவெனப் பாமர மனிதன் சிந்திக்க முனைதல் சாத்தியமில்லையா?; தான் வாழ்ந்து மடிந்த ஏதோவொரு கனவில் தன்னிருப்புக்கு நெருக்கடியேற்படுவதில் அதைக் காக்கவும்-கண்டடையவும் தன் வேர்களைக் காணமுனைவது சாத்தியமாகிறது.
எனக்குப் பண்பாடுண்டா,எனக்கு உணவுக் கலாச்சாரம் உண்டா,எனக்கெனவொரு மொழி-தேசம் உண்டா?இது கேள்வியாகவும்,உள நெருக்கடியாகவும் புலம்பெயர்ந்த எம்மைத் தக்குகிறது!
எமக்கு முன் துருக்கியர்கள் கூட்டாகவும்,கொடிபித்தும் வாழ்ந்து பார்க்கின்றனர்.இத்தாலியர்கள் தமது தேசக்கொடியை முத்தமிட்டு மிடுக்குக்காட்டும்போது,புலம்பெயர் தேசத்துக் குடிமகனோ தனது தாய்ப் பூமியை தரிசித்து எம்மை ஏசுகிறார்கள்.நாம்,மீளவுஞ் சிதைகிறோம்.எமக்கானவொரு "கொடி-தேசம்,மொழி-பண்பாடு" நம்மைத் தவிக்க வைக்கிறது.இலங்கையிலிருந்தபோது இந்தப் பஞ்சம் ஏற்பட்டதில்லை.அங்கு தேசமாகவும்-நகரமாகவும்,கிராமமாகவும் வாழ்ந்ததைவிட ஒரு சுற்றமாக வாழ்ந்தோம்.எமக்கு அந்நிய நெருக்கடி தெரியவில்லை.பெரிதாகத் தெரிந்தது மாமி வீடும்-சித்தியின் வீடும்.மிச்சம் சந்தித் தெருவில் உலகம் விரிவதாகவிருந்து, நாகமணியின் தேனீர்க்கடையில்பருப்பு வடையும்-பிளேன் ரீயும் குடித்துக் "கமல்-ரஜனி வாழ்வு" பேசியது.இது,ஒரு சமூக வாழ்நிலையில் உறுதியான சமூக அசைவாக்கம் விரித்துப் பார்த்திருக்கிறது.
இவை இழந்தபோது,எனது உறவுகள்,புலம் பெயர் தேசத்தில் பொய்யுரைத்த புலிக்கொடிக்கு அர்த்தங்கண்டது-தமிழீழத்தைத் தனது தேசமாகக் கண்டடையக் புறக் காரணிகள்வழி வகுத்தன.பண்பாட்டுத் தாகமாகவும்,வாழ்ந்தனுபத்தின் முன்னைய கருத்தியலைத் தகவமைக்க விரும்பியது.அங்கே,"சாமத்திய-கல்யாண-பிறந்ததின"க் கொண்டாட்டங்கள் தனது சுற்றத்தோடு தன்னை இணைத்துக் கோலம் போட விரும்பிய அக விருப்புக்கு வடி காலாகிறது.
புலிக்கொடிக்கு எந்தவுந்துதல் காரணமோ அதே காரணம் அனைத்துக்குமான காரணத்தின் திறவுகோலை எமக்கு வழக்குகிறது.இது,சமூக நெருக்கடியின் தற்காலிகத் தேவையாக புலம் பெயர் மக்கள் ஒவ்வொருவரையும் அண்மிக்கிறது.இது,தமிழர்களுக்குமட்டுமல்ல அனைத்து இனப் புலப்பெயர்வுக்கும் பொருந்துகிறது.இதை வெறுமனமே சப்ப முடியாது!
சமூக-மானுடவியற் புரிதலின்வழி சிந்திக்க வேண்டும்.
முப்பது வருடத்துக்கு முன்பிருந்த யாழ்ப்பாணத்தை இன்றைய யாழ்ப்பாணத்தில் காணமுடியாதுதாம்.அதுதூம்சமூக வளர்ச்சியின் பரிணாமம்.அவர்களும்,அவர்தம் இன்றைய சுற்றஞ் சூழப் "பில்லி-சூனியமெல்லாஞ் " செய்து சுகமாய் வாழ்வதாகக் கனவுகொள் மனமும்,யுத்தத்தில் மையங்கொண்ட மனிதத்தைக் குழிதோண்டிப் புதைத்து நல்லூர்த் திருவிழாச் செய்து, தம்மை நிரூபித்தார்கள்! இது,ஒரு குழுமம வாழ்வுக்குச் சாத்தியம்.புலம் பெயர் மண்ணில் நாம் சமூகவாழ்வோடு இசைந்து ஒரு மொழிக் குட்பட்ட "ஒழுங்குக்குள்" வாழ முடியுமா? இது இல்லாதவரை,இருந்த அன்றைய சூழலை மையப்படுத்தி அடையாளமாக வாழ்ந்து காட்டுவது மனித நடத்தைக்குப் புதிதாகுமா?
[ //ஆக, மூன்றாம் உலக நாடுகளின் குடியேற்ர வாசிகள் தமது அடையாளத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக மிகவும் “விசித்திரமான” சிந்தனைத் தளத்தில் போராடுகின்றார்கள். இந்தச் சிந்தனை அவர்களிடையே ஒரு வகையான ஒருங்கிணைவை ஏற்படுத்துகிறது.// ]
நாவலன்,இது அபத்தமாகத் தெரியவில்லையா?விசித்திரமோ-சாத்திரமோ இங்கு கிடையாது.மனிதர்கள் எப்போது சமூகவுணர்வோடு"ஒரு ஒழுங்குக்குள்"வாழ நேர்ந்தார்களோ,அந்த ஒழுங்கினது வாழ்நிலைக்கிசைவான"அடையாள"நெருக்கடி உருவாவதை எவரும் விரும்புவதில்லை!வாழ் சூழல் பாதிப்படைந்து தன் சூழலைவிட்டு அந்நியமானவொரு சூழலை எதிர்கொண்டபோது,அதைத் தமதாக்க முடியாத மனிதர்கள் அதற்குப் பிரதியீடாக இன்னொரு முறைமையைத் தமக்கேற்ற புரிதலோடு இணைத்து வாழ முற்படுதல்தாம் அவர்களை உயிர்த்திருக்க வைப்பது.இதை மறுத்து வாழ முற்படுதலென்பது எப்போதும் சாத்தியமாக முடியாது.விசித்திரம் என்பது எதைவைத்து-எதர்க்கு நிகராக அணுகிச் சொல்ல முடிகிறது.
தனக்குள் பொருத்தப்பாடும்-பொருந்தாதத் தன்மைகளுடனும் புலம்பெயர் இளைய தலைமுறை வாழும் இந்தப் புலம் பெயர் வாழ்வில் சமூகவாண்மை என்பது தனக்குட்பட்ட அரசியல் வாழ்வைத் தகவமைக்கும் போராட்டமாக இருக்கும்போது,ஒரு பொருளாதார வாழ்வுக்குட்டபட்ட"வாழ்நிலை"இவர்களுக்குக் கைகூடிவிட்டதா?ஏதோ,சொல்வதால்-சொல்லிச் செல்லும் கட்டுரை மொழி வேண்டாம்!
[ //உதாரணமாக இ தனது பெண்பிள்ளை ஒரு கறுப்பினத்தவரைத் திருமணம் செய்துகொண்டிவிடக் கூடாது என்பதில் அவர்களிடையே ஏற்படுகின்ற ஒருங்கிணைவுஇ திருமணத்திற்கு முன்னர் பெண்பிள்ளை உடலுறவு வைத்துதுக்கொள்ளக் கூடாது என்பதில் அவர்களிடையே ஏற்படும் ஒருங்கிணைவு என்பனவெல்லாம் பண்பாட்டுத் தளத்தில் ஒருங்கிணைகின்றன. அவை பண்பாட்டு நிகழ்வுகளாகவும்,கலாச்சார வைபவங்களாகவும், மத வழிபாடுகளாகவும் வெளிப்படுகின்றன.// ]
"கருப்பு-வெள்ளை"-திருமணப் பந்தம்-எதிர்காலம்."கற்பு"-பதிவுத்திருமணத்துக்கு முன் "உடலறுவு"ஒரு வாசிப்புக்காகச் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது.எமது நினைவிலி மனதில் தமிழ்மொழிவழி சிந்தனைத் தேட்டம் அழியாதவரம் பெற்றிருக்கிறது.இளமையிற் கற்றல்(வாழ்நிலை)சிலையில் எழுத்து"சரி.இன்று,தமிழ் வானொலிகளில் தமக்கு அந்நியப்பட்ட,தமது நிறத்தைக் கேலி பேசும் தமது சமூகத்துக்கு உட்பட்ட உணர்வானது தமது பண்டத்தை விற்கவே வெள்ளைமேனிப் பெண்ணை முன்னிறுத்தி விளம்பரஞ் செய்கிறதா?எது,அரிய பொருளாக இருக்கோ-அதற்கு மவுசுதாம்!நாம் இயல்பாகக் கருப்பர்களா?நமது சமூகத்தில் மேற்குலகச் சிந்தனைக்குட்பட்ட-கலப்படைந்த மக்கள் வெண்மையாக-"அழகாக"இருக்கிறார்களா?எமது சமுதாயத்தின்பெண்கள்-ஆண்கள்"கருப்பு-அவலட்சணம்"கண்டு கேலி பேசுகிறார்களா?கலப்படைந்து"வெள்ளையாக"இருக்கும் நபருக்கு இருக்கும்"செருக்கு"எத்தகைய சமூக-அகவொடுக்குமுறையை"கருமையாக"இருக்கும் மனிதருக்கு வழங்கியது? இந்த அனுபவம் தன் பெண்ணுக்குத் தொடர்ந்து"கருமையுடைய"பிள்ளை பிறப்பதை நம்மில் எத்தனைபேர் விரும்பினோம்?"கருப்பு-வெள்ளை"கருத்தியலைச் செய்த "மேற்கு,கிழக்கு"க் கருதுகோள் நம்மைக் கோவணத்தோடு-கும்மப் பூவோடு அலையவிட்டது மட்டுமல்ல-நம்மையே,நாம் அங்கீகரிக்க-மதிப்பளிக்க மறுத்து நிற்கிறது.
இன்றைய புலப்பெயர்வு வாழ்வில் பாலியல் நடாத்தையென்பது பொறுப்போட நடைபெறவில்லை."அநுபவித்தில்-தட்டிக்கழித்தல்" வரை முறையற்ற பாலியல் நடாத்தையெனப் பல பாலகர்களைத் துவசம் செய்து நடுத்தெருவில் அலையவிடும்போது,இப்போது மேற்குப் பெற்றோரே தமது பிள்ளைகள் குறித்துக் கவலையடையும்போது,நீங்கள் இதைக் குறித்து மேலோட்டமான வார்த்தைகொண்டு மெலினமாகவுரையாடுகிறீர்கள்.இது,முழுமொத்த மனித சமூகத்தையே இன்று பல உள நெருக்கடிக்குள் கொணர்ந்திருக்கும்போது அதை நமது மக்களிடம்-புலம்பெயர்ந்தவர்களிடம் மட்டும் குறிப்பாக நிகழ்வதாக ஒரு மார்க்சியன் கருத்துக் கூறுவதாகவிருந்தால் நான் உங்கள் மார்க்சியம் குறித்துக் கவலையடைகிறேன்.மனிதர்களை அவர்களது வாழ்நிலையோடு புரிதலைவிட்டுப் பெயர்த்தெடுத்து விமர்சிப்பது நியாயமாகாது.எமது வாழ்நிலை பாதிப்படைந்து நாம் அங்குமிங்குமாக அலைகிறோம்.
[ //இவ்வாறு புலத்திலிருந்து தொலை தூரத்தில் உருவாகின்ற தேசிய உணர்வானது “கலாச்சாரப் பய” உணர்வின் அடிப்படையிலிருந்து மேலெழுகிறது. இத் தொலை தூரத் தேசிய உணர்வு சொந்த நாட்டின் அரசியலில் கணிசமான தாக்கதைச் செலுத்துகிறது.// ]
தூரத்தே உருவாகும்"தூரத்தேசியவுண்ர்வு"என்பதெல்லாம் அடிப்படையில் அறிவியல் பூர்வமற்றது.ஒரு இனக் குழும மக்கள் இடம்பெயர்ந்து,சிதறிச் சமூகக்கூட்டின்றியும், எந்தப் பொருளாதார-நில-நினைவிலித் தளமும் இன்றியவொரு புலம்பெயர் தளத்தில் இத்தகையவுரையாடலானது அந்த மக்கள் துண்டிக்கப்பட்டவொரு மனிதக் கூட்டாக வாழ நேர்ந்த வலியயை மறுதலிப்பதாகும்.இது,புலம்பெயர் தேசத்துப் பொருளாதார-இனத்துவ அடையாள அரசியலது ஈனத் தனத்தை மறுமுனையில் வைத்து மறைக்கும் கயமைத்தனமாகும்.புலம் பெயர் மக்களைத் தொடர்ந்து அச்சத்துக்குட்படுத்தி,அவர்களது மனவலிமையை-ஆற்றலை முடக்கி நிராகரித்துத் தமது சமுதாயத்துக்கு புறம்பாக வாழ நிர்பந்தித்த வெள்ளைத் தேசமும்-வேற்று அரசவுரிமையுடைய தேசத்துச் சமுதாயங்களும் தொடர்ந்து புலம்பெயர்ந்த-குடியேறியவர்களைத் திட்டமிட்ட உளவியலொடுக்குமுறைக்குட்படுத்தும்போது அங்கே, தமது அடையாள நெருக்கடிக்குள் வந்துவிட்ட வாழ்நிலைகண்டு அச்சங்கொள்வதும்,தாம் வாழ்ந்த வரலாற்று மண் நோக்கிய அவாவுறுதலும் மனிதர்கள் அனைவருக்குமான பொதுப் பண்பாக மாறுவது இயல்பு.இதுவே,புலம்பெயர் வாழ்வில் ஒவ்வொரு அகதியும் சந்திக்கும் மிகப் பெரிய சோகம்.இதுள்,இவர்கள்"துராத் தேசியவுணர்வடைகிறார்கள்"என்பது தப்பான கற்பித்தலாகும்.
இன்றுவரை,இந்த உணர்வைத் தமது அயலுறுவு-நலன் நோக்கிய அரசியற் காரணங்களுக்காகத் தட்டையாக உருவாக்கி அசைபோட்டுவரும் மேற்குலகம், இத்தகைய புலம்பெயர் மக்களைக்கொண்டு, அவர்கள் சார்ந்த தேசத்து அரசியலை அழுத்தப்படுத்தித் தமது தேவைகளைப் பூர்த்தி செய்ததை நாம் ஈரானியர்கள்-ஈராக்கியர்கள்,குத்தீஸ் புலம்பெயர் மக்கள் வழி புரிகிறோம்.இந்த வகையிற்றாம் புலிகளது தேவையோடு,அவை மிக நெருக்கமான வினையாற்றலைக்கொண்டியங்கியது. இது குறித்துச் சிந்தியுங்கள்.
இவர்களது கொச்சையான-மொட்டையான இந்தக் கருத்தை ஜேர்மனியக் கவிஞன் ஹன்ஸ்-ஹேர்பேர்ட்திறைஸ்கே [ Hans-Herbert Dreiske] இப்படிக் கேலி பேசிய ஆண்டு 1985. :
"இங்கே அந்நியராய் இருந்தோம்
அங்கே அந்நியராக்கப்பட்டோம்
எனினும்,
நாம் ஒரு வனாந்திரத்தைத் தேடி
ஒரு நாட்டை உருவாக்குவோம்
எங்கெங்கு
எப்படியெப்படியோ அந்நியர்களாகிய
அனைவருக்குமாக."
[ Hier
fremd geblieben
dort
fremd geworden
Vielleicht
sollten wir
ein land suchen
einen Staat gruenden
fuer alle
die irgenwo
irgenwie
Fremde sind.]
-Hans-Herbert Dreiske, Dueseldorf,im August 1984
[ //குஜராத்யர்கள் செறிவாக வாழும் பிரித்தானியாவின் நகரமான லெஸ்டரில் சாரி சாரியாக 30 ஆயிரம் பேர்வரை கலந்துகொண்ட கூட்டம் பாரதீய ஜனதா கட்சியின் அத்வானி கலந்துகொண்ட பொதுக்கூட்டமாகும். விஸ்வ இந்து பரிசத் என்ற இந்து அடிப்படை வாதக் குழுவிற்கு பிரித்தானியாவிலிருந்து ஒவ்வொரு இந்தியரும் உணர்வு பூர்வமாக வழங்கும் பணம் புலிகள் இயக்கத்திற்குத் தமிழர்கள் “கண்ணை மூடிக்கொண்டு” வழங்கிய பணத்தைப் போன்றதாகும்.// ]
புலிகளுக்கு நிதி கொடுத்த சமூகவுணர்வை-உளநிலையை மிகவும் தப்பாக உரைப்பதற்குப் பலர் முனைகிறார்கள் நாவலன்.நீங்கள் இந்த வரிசையில் ஒருபோதும் உரைத்திருக்கப்படாது.இது,தப்பானது.எமது மக்கள் முன் சில தீர்வுகள் இருந்திருக்கிறது.இந்த நிதியுதவி மனத்துள்.இவர்கள் எவரும் கண்ணை மூடிககொண்டு புலிக்கு நிதிகொடுக்கவில்லை!
"கண்ணை மூடிக் கொடுத்ததுபோல்" நடாகங்காட்டியது புலிப்பினாமிகள்.அது,மக்களது நிதியைக் கறக்க அவர்களது பணத்தில் புலி தன் பொண்டிலுக்குத் தாலிகட்டி பின் அதை மக்கள் முன் களற்றிப் போட்டு நாடகம் ஆடியது.இதுவொரு வியூகம்.
ஆனால்,எமது மக்கள் தமது உழைப்பில் சிறு தொகையை மாதாந்தங்கொடுக்கும்படி உருவாகிய சூழல் மிக முக்கியமாகத் தவறவிடப்படுதல் சாபக்கேடானது!
1:"ஊரிலுள்ள உறவுகளை புலிவேட்டையிலிருந்து காத்தல்"
2;"தாம் தேசம்-தாயகம் திரும்பும்போது புலி வேட்டையின் முன் முகங்கொடுத்தல்"
3:"தமது சமுதாயத்தின் அழிவைக்கண்டும்-தாம் தப்பிய குற்றவுணர்விலிருந்து விடுதலையடையவும்"
4:சிங்கள அரசின் அத்துமீறிய இனவழிப்புக்கு விடிவு தேடிய பாமரவுணர்வுகொண்ட நம்பிக்கை"
ஆகிய காரணிகளது வழியிலேயே புலிக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.இதைவிட்டு,"கண்மூடி-கண்திறப்பு" வார்த்தைகள் மோசமான பார்வைகளைக்கொண்டது.
நாம்,எமது மக்களது சமூக உளவியலைப் புரிய முனைதலும்,மனித சமுதாயத்தை மிக முன்னேறிய புரிதல்களைக்கொண்டு ஆய்வு செய்யவும் கடமைப்பட்டுள்ளோம்.புலம்பெயர் சமூகங் குறித்து எவரும் போகடிபோக்காக வரலாறு எழுதலாம்.ஆனால்,அவையெல்லாம் குப்பைக் கூடைக்குள் ஒரு நாள் செல்லும்.மார்க்சியம் புரிந்த உங்களிடமிருந்து இத்தகையவொரு கட்டுரை"புலம்பெயர் மக்கள்"குறித்து வந்ததில் நான் மிகவும் வருந்துகிறேன்.மையமான புள்ளிகளைத் தொட்டு ஆய்வு மனத்தோடு எழுதப்படவேண்டிய கட்டுரையை வெறும் மனவுணர்வுக்குள் உந்தப்பட்டெழுத முற்படுதல் மார்க்சிய ஆய்வாகாது!
[ //இந்த நூற்றாண்டின் தெற்காசியாவின் மிகப்பெரிய மனித அவலத்தைச் சந்தித்திருக்கும் தமிழ்ப் பேசும் மக்களின் “புலம் பெயர் அரசியல்” தொலைதூரத் தேசிய உணர்விலிருந்து விடுதலை செய்யப்பட்டு மனித நேயம் மிக்க அரசியலாக மாற்றமடையே வேண்டும். ஆப்கானிஸ்தானிலும்இ காஷ்மீரிலும் மனிதர்கள் கொல்லப்படும் போது அதன் வலியையும் நாம் உணர வேண்டும்.// ]
ஏன்,எமது மக்கள்மீது குறைப்படுகிறீர்கள்?,எங்கள் மக்களுக்கு இந்த வலிகளைச் சொல்லும் எத்தனையூடகங்கள் நமக்குள் உண்டு?தொடர்ந்து தமிழ் ஊடகங்களில் புலிக்கு வக்காலத்து அல்லது, தமிழ்நாட்டுச் சீரழிவு நாடாகம்-சினிமா!இதைவிட எமது சமூகத்துக்கு என்ன சமூகப் புரிதலை காட்சியூடகம் வாயிலாகச் சொன்னோம்.எமது மக்களது சிந்தனையைக் காயடிக்கும் இன்றைய ஆளும் வர்கங்கள்தாம் எமது மக்களது சிந்தனையைத் தகவமைத்தபோது,நாம் அவ்கானை-ஈராக்கை-காஸ்மீரைக் காணது பேசுவதாகக் குறைப்படுதல் நியாயமாகாது.புரிதற்பாடென்பது அந்தச் சமுதாயத்தின் ஊடகங்கட்கு வெளியில் வெறும் கல்வியல் மட்டுமே தங்கும்.பொதுத்தளத்தில் உலக மக்களது வாழ்வுஞ் சாவும் ஊடகங்களின் வழியே சமூக ஆவேசம்-உணர்வு கொள் திசைவழியைத் தகவமைக்கும்.எமது ஊடகங்களது நயவஞ்சமான வர்த்தக நோக்கு இதுள் மையமாகத் தவிர்க்கப்பட முடியுமா?
[ //தவறுகளைத் தர்க்கரீதியான ஆய்விற்கும் விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உட்படுத்துவதனூடாக தேசிய வாதத்தின் முற்போக்குக் கூறுகளை வளர்த்தெடுக்க முடியும். இலங்கைப் பேரினவாதப் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் மக்கள் சார்ந்த புலம்பெயர் தமிழ்ப் பேசும் மக்களின் பங்களிப்பு குறைந்தபட்சம் மக்கள் போராட்டத்திற்கான ஜனநாயகச் சூழலை இலங்கையில் உருவாக்குமாயின் போராடத்தின் புதிய திசைவழியில் ஒரு மைற்கல்.// ]
இலங்கையில் ஜனநாயகச் சூழலை உருவாக்கப் புலம் பெயர்ந்த மக்கள் பங்களிப்பதென்பதன் அர்த்தம் வெறும் பேச்சுக்கானதான ஒரு பரிவர்த்தனைதாம்.இலங்கையில் மட்டுமா "ஜனநாயகம்"செத்துப் போனது? இந்தப் புலத்து வாழ்வில் வாழுகின்ற ஒவ்வொரு அகதிக்கும் தனது வாழ் நிலையில் புரிந்த ஒருவுண்மையானது "ஜனநாயகம்"என்பது என்னவென்று புரியாததுதாம்.தனக்கான வாழ்வு-தேசம்,மொழி,பொருள் முன்னேற்றம்.இதைவிட்டகலாவொரு அரசைக் குறித்த மிக அருகிய புரிதல்.இதைவிடப் புலப்பெயர் வாழ்வில் முன்னேறும் போராட்டம் இலங்கையிலொரு ஜனநாயகச் சூழலைத் தீர்மானிக்கும் பகுதிச் சக்தியென்பதுகூட மிக நெருங்கிப்பார்த்தறியும் புரிதலுக்கு எதிரானது.தனது வாழ்நிலையில் ஒரு கூட்டாக-குழுமமாக வாழ முற்படும் அரும்பு நிலையுள் தவிக்கும் புலம்பெயர்ந்த மக்கள் கூட்டாகக் கோவிந்தாபோட்டு ஓய்ந்த சூழலில் அவர்களது நிதியுதவியைத் தொடர்ந்து பெறுவதற்கும்,இலங்கையில் "ஜனநாயக"ச் சூழலை மீட்பதென்பதற்குமான புரிதலது எல்லை, இலங்கைக்கு வெளியில் அநாதவராகக் கிடக்கிறது.
இலங்கையுள் வாழும் மக்களுக்கு முடியாதவை எதுவும், அந்தத் தேசத்துக்கு வெளியிலிருந்து இறக்கு மதியாகும் எந்தவொரு சக்திக்கும் அவர்கள் நியாயமாக-விசுவாசமாக நடக்க முடியாது.இலங்கைத் தேசத்து ஒடுக்கப்படும் மக்களே தமது தலைவிதியைத் தீர்மானிப்பதைத் தவிர புலம்பெயர் மக்களுக்கு எந்தப் பொறுப்புஞ் சுமத்த முடியாது.புலமானது தனது தளத்திலுள்ள மக்களது வலியை வெளியுலகுக்குச் சொல்வதைத்தவிர வேறெதுவையுஞ் செய்துகொள்ள முடியாது.இவர்கள் தமது வாழ்வுக்கான போராட்டத்தையே செய்துகொள்ள முடியாது திசையில் இலங்கை நோக்கி...(?...)
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
07.01.2011
No comments:
Post a Comment