Saturday, March 31, 2012

கூடங்குள அணுவுலை மின்சாரத் திட்டத் தேவையும்-தவிர்க்கக்கூடியதா?

"இந்தியாபோன்ற தேசத்தின் சுயவளர்ச்சியானது அதன் சுயாதிபத்திய சக்தி வளத்திலேயேதாம் தங்கியிருக்கிறது."

ந்தியத் துணைக்கண்டப் பாதுகாப்பும் கூடங்குள அணுவுலை மின்சாரத் திட்டத் தேவையும்-தவிர்க்கக்கூடியதா?

இந்தியாவானது அடுத்த பத்தாண்டுகளில் இன்னும் பலபத்து அணுமின்னாலைகளை நிறுவிவிடும்.அதன் வளர்ச்சியும்,பொருளுற்பத்தியும் சீனாவுக்கு நிகராக உயரும் சாத்தியமுண்டு.

இந்தத் தேவையின் பொருட்டு வளர்ந்துவரும் இந்தியாவானது எந்த நிலையிலும் சூழற் பாதுகாப்புணர்வுடன் நடந்துகொள்ள வாய்ப்பில்லை.அதன் பொருளாதாரச் சார்பானது அமெரிக்க ஆதிக்கத்தின் பக்கம் இருக்கும்போது இந்தச் சூழலியற்றேவைகளை ஒருபோதும் இந்தியா மதிக்காது.பண்டைய வாழ்வு அதற்கினிக் கைகூடாது.

இந்தியத் துணைக்கண்டத்தின் அணுமின்சாரத்திட்டமானது மிகவும்அவசியமான சக்திவளத்தைக் குறிவைத்தே இயங்குகிறது.இந்தியா வளர்ந்து வரும் தேசம். 110 கோடிகள் மக்கள் தொகைக்கேற்ப அது வளர்ந்தே தீரவேண்டும்.

ஐரோப்பாவானது மிகவும் வளர்ந்து, ஒரளவு சம நிலையை நகரத்துக்கும் கிராமத்துக்கும் பேணும் நிலையில் இந்தியா அத்தகைய வளர்ச்சியைக் கண்டடையும் உற்பத்தியையும்,அதுசார்ந்த கட்டுமானத்தையும் கொண்டியங்குவதாக இருந்தால் பல கூடங்குளங்கள் தோன்றவே செய்யும்.அதைத் தடுத்திடவே முடியாது.

இந்தியாவானது தனது உள் நாட்டுச் சந்தையைப் பூர்த்திசெய்யும் சுய படைப்பில் தன்னை நிலை நிறுத்த முனையும் இந்தச் சந்தர்ப்பத்தில் அதன் சக்தி வளத்தேவையானது முன்னைய காலத்தையும்விட 50 வீதத்தால் அதிகரித்திருக்கிறது.அதைப் பூர்த்தி செய்யும் தகுதி அணுமின்சாரத் தொழில் நுட்பத்துக்கே உண்டு.எனினும்,அணுமின்சாரமானதும்,அதுசார்ந்த மனவொப்புதலும்சிறுபிள்ளைத்தனமானது! இதற்குச் சில உதாரணங்களைப் பார்ப்போம்.

  • 1):வளர்ந்துவரும் சூழலியல் விஞ்ஞானமானது நமது உயிர்வாழ்வின் அவசியத்துக்கு இப் புவிப்பரப்பானது அணுமின்சாரத்தை நிராகரித்த உற்பத்தித் திறனோடு எதிர்காலத்தை எதிர்கொள்வதே சாலச் சிறந்ததாகக் காண்கிறது.இதன் பொருட்டுப் பற்பல மேற்குலக நாடுகள் 2030 ஆண்டுகளுக்குள் தமது அனைத்து அணுமின் நிலையங்களையும் படிப்படியாக மூடிவிடும் திட்டத்தோடு மாற்று வழிகளைக்காணும்போது இந்தியாவோ அணுமின் திட்டத்தை வலுவாகச் செயற்படுத்தத் தயாராகிறது!.
  • 2):இந்தியா அணுமூலமாகத் தயாரிக்கும் மின்சாரத்தை மிகவும் இலாபகரமாகப் பெறமுடியாது.இதற்கான தகுதி அதற்குக் கிடையாது.அதாவது அமெரிக்காவுடன் அதன் ஒப்பந்தம் இத்தகுதியை அதனிடமிருந்து பறித்துவிடும்.மின்சாரம் போதியளவு பெற்றுவிடலாம்.ஆனால் அணுக் கழிவுகளே மிகப் பெரும் செலவை இந்தியாவுக்கு வழங்கி அதன் உட்கட்டமைப்பைச் சிதறிடிக்கும்.இது மிகவும் நிதானமான அமெரிக்காவின் சதிவலை.இந்திய ஆளும் வர்க்கமானது தமது வருவாயை மட்டுமல்ல அந்நிய சக்திகளோடிணைந்து இந்தியக் கனிவளங்களையும் சூறையாடிப் பெருவங்கிகளில் பதுக்குவதற்குத் தயாராகிறார்கள்.இதன்படி அந்த வர்க்கம் எந்த முன் நிபந்தனையுமின்றி அமெரிக்காவோடு கூட்டிணைவதில் மும்மரமாகச் செயற்படுவார்கள்.

இவை மிகமுக்கியமான உதாரணங்களாகும் இந்தியத் தரகு முதலாளிய ஆட்சியாளர்களின் ஈனத்தனத்தை அறிவதற்கு.

ஏனெனில், அணுமின்சாரமானது மிகவும் ஆபத்தானது.

அது புவிப்பரப்பு எதிரானது!

ஏன் உயிரினங்கள் அனைத்துக்குமே எதிரானது.

இதை எங்ஙனம் நிறுத்தமுடியுமென மானுவர்க்கஞ் சிந்தித்து அதற்காகப் போராடி வரும்போது இந்தியாவோ தொடர்ந்து அணுமின்சார ஆலைகளை உருவாக்கவேண்டிய தேவையில் இருக்கிறது.அதன் உற்பத்திக்கேற்ற வலுவுள்ள ஆலைகள் இனிவரும் ஆண்டுகளில் நிறுவப்படும்-நிறுவியே தீரவேண்டும்.

ஐரோப்பாவானது தனது ஜந்திரத்துக்கு மாற்று மின்சாரவூக்கிகளைக் கண்டடைந்திருப்பினும்,அவைகளைப் பெறுவதற்கான படைப்புச் சக்திகளை ஏலேவே அணுமின் துணைகொண்டுபெற்ற வளங்களது அடைப்படையிலிருந்தே பெற்றுக்கொண்டன.வளர்ச்சியுறும் தேசங்களைப்பார்த்து" சூழலியற் பாதுகாப்பு" எனக் கோசமிடும் தேசங்கள் தமக்கும்,தமது தொழிற்சாலைகளுக்குத் தீனிபோடவும்,தாமே தொடர்ந்தும் உலகத்துக்கு உற்பத்தியாளராகவும் இருக்கவே ஆசை கொள்கின்றனர்.வளரும் தேசத்து மக்களை வெறும் நுகர்வோராக்கும் சதியும் இதற்குள் ஒளிந்தே இருக்கிறதெனக் கருதவேண்டும்.

அரசியல் வாதிகள்எவ்வளவுதாம் கூச்சலிட்டாலும் அவர்களது எஜமானர்களுக்கு அவசியமான திசையிலேயேதாம் அவர்கள் காரியஞ் செய்தாகவேண்டும்.இந்தியாவினது நடுத்தரவர்க்கத்தின் உயர்வானது ஓரளவு நுகர்வுச் சக்தியை அதிகரிக்கிறது.அந்தச் சக்திக்கேற்ப தீனிபோடும் உள்நாட்டுவுற்பத்தி இயங்காதுபோனால் இந்தியாபோன்ற தேசம் முழுமையாக நவகாலனித்துவத்தின் கடைக்கோடியில் அமர்ந்திருக்கும் அபாயமுண்டாகிறது.

அணுக் கழிவுகளைத் தேட்டமாக்கியபடிதாம் ஒரு தேசம் இனிமேல் வளரவேண்டிய தேவையுண்டாகிறது.அதுவும் இந்தியாபோன்ற தேசத்தின் சுயவளர்ச்சியானது அதன் சுயாதிபத்திய சக்தி வளத்திலேயேதாம் தங்கியிருக்கிறது.இதை எத்தனைபேர்கள் விளங்கியுள்னர்?இந்தியாவின் சயாதிபத்தியம் என்பது அதன் தேசியவுற்பத்தியாளரது உற்பத்திச் சக்திகளென யாரும் புரிந்துகொண்டால் அது தப்பானது.எனவே,ஒரு தேசமானது சுயவுற்பத்தியைத் தனது மக்களுக்கேற்பவும்,அவர்களது தேவைக்கேற்பவும் கட்டிக்கொள்வது அவசியமானதென்பதைப் புரியும்போது,அணுமின்சாரத்தின் அவசியமும்உணரத்தக்கதாகவே இருக்கமுடியும்.ஆனாற் கழிவுகளை என்ன செய்வது?

அணுமின்சாரத்தின் இறுதிக்கழிவு வடிவமானது புளோட்டோனியமாகும்.இந்தப் புளோட்டோனியத்துக்கு பலவகைத் தரப்படுத்தற் காலமுண்டு.அந்தவகையில் அதன் அரைதரக் காலமானாது 24.000.வருடங்களாகும்.இதன் அர்த்தம் என்னதென்றால்முதற்பகுதி24.000 ஆண்டுகளுக்;கு நடைபெறும் கதிர்வீச்சு பின்பும்24.000.ஆண்டுகளுக்கு கதிரியக்கமாக நடக்கும்- அடுத்த அரைக் காலத்திலும் கதிரியக்கம் நடைபெறும்,அதன்பின்பு இதே தொடர்கதையென்று கதிரியக்கம் பற்றிய அறிவு குறித்துரைக்கிறது. இந்தக் கேடுவிளையும் அபாயமான சாமான் மிகவும் பாதுகாப்பாகச் சேமித்து வைத்திருக்கவேண்டும்.இந்தியாவல் இது சாத்தியமில்லை.அதாவது என்னென்ன வடிவங்களில் இது காக்கப்படுவேண்டுமென்றால்:

  1. கதிர்வீச்சை தடுப்பதற்கான முறைமைகளைத் தவிர்காதிருக்கவேண்டும்.
  2. யுத்தத்தால் பாதிப்படைவதைத் தடுத்தாகவேண்டும்.
  3. வெள்ளப் பெருக்கிடமிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.
  4. பயங்கரவாதத் தாக்குதிலிலிருந்து பாதுகாக்கப்படுவேண்டும்.
  5. பலாத்தகாரத்துக்குள்ளாகப்படுவதைத் தடுத்தாகவேண்டும்.
  6. ஊழலிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.
  7. கீழ்தரமாகப் பயன்படுத்தலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.
  8. நிர்வாகக் கவனக்குறையிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.
  9. ஞாபக மறதியிலிருந்து தவறேற்படுவதைத் தடுத்தாகவேண்டும்.

இப்படிப் பல்வகைக் கடப்பாடோடு இந்த உயிர்கொல்லியைப் பாதுகாத்தாகவேண்டும்.அதாவது கண்ணுக்குள் எண்ணையை ஊற்றிக்கொண்டே பாதுகாத்தாகவேண்டும்.இந்த வகைப் பாதுகாப்போடு எந்த நாட்டிலுமுள்ள பகுதிகளும் இல்லை!வளர்ச்சியடைந்த நாடுகளே திண்டாடும்போது இந்தியாபற்றிச் சொல்லவே தேவையில்லை!இந்த நேரக்குண்டானதையெங்குமே பாதுகாத்துவிட முடியாது.இதன் கதிரியகத்தை எந்த விஞ்ஞானமும் கட்டுப்படுத்திட முடியாது.இலட்சம் ஆண்டுகளுக்குப் பாதுகாக்கப்பட வேண்டியதை,எந்தக் கொம்பரும் மலிவாகச் செய்துவிட முடியாது.பலகோடிக்கணக்கான செல்வத்தை இது வேட்டையாடிவிடுகிறது.

இதைப் பாதுகாக்கப் பயன்படும் செலவானது அந்த நாட்டின் மொத்தவுற்பத்தியில் பல பங்கைச் சூறையாடும்.இந்தப் புளோட்டோனியம் நமது புவியையும், உயிர்களையும் கொன்று இல்லாதாக்கி வருகிறது.இன்றைய உற்பத்தி முறைமையின் சக்திவளாதாரம் எங்ஙனம் மனிதவலத்தை ஏற்படுத்துகிறது?-இதையும் சற்று நோக்குவோம்.

இன்றைய சக்திவள ஆதாரத்தில் மனித வாழ்வு:

  • -ஒவ்வொரு செக்கனுக்கும் ஒருவர் பட்டுணி கிடக்கிறார்.
  • - ஒவ்வொரு நிமிடத்துக்கும் 30 கெக்டர் காடு அழிக்கப்படுகிறது
  • -நாளொன்றுக்கு 80 வகைத் தாவரங்கள் அழிந்தே போகிறது.
  • -ஒவ்வொரு கிழமையும் 50 கோடித் தொன்கள் கரியமில வாயுவை நமது வளிமண்டலத்தில் கொட்டுகிறோம்.
  • -ஒவ்வொரு மாதமும் பாலைவனத்தில் 5 இலட்சம் கெக்டரை விஸ்தரித்துப் பெருக்கிவிடுகிறோம்.
  • -ஒவ்வொராண்டும் ஓசான் பாதுகாப்புறையில் 1 வீதம் மெலிதாக்கி வருகிறோம்.

இந்த மனித வாழ்வு எங்கே செல்கிறது?

எதை நோக்கி முதலாளியம் மனித வாழ்வை நகர்த்துகிறது?

நாம் பிறக்கிறோம்,கற்கிறோம் வேலைக்குச்செல்கிறோம்,மணமுடித்துக் குழந்தைகள் பெறுகிறோம்!எங்களில் எத்தனை பேர்கள் நமது சூழலின் தூய்மை-மாசு பற்றிய உணர்வோடு வாழ்கிறோம்?எத்தனை பேர்கள் தத்தம் நாட்டின் அரசியல் பொருளாதாரச் சூழல் நெருக்கடியை உணர்வுப+ர்வமாக உள்வாங்கி அதை நிவர்த்தி செய்வதற்கான அழுத்தங்களை முன்வைக்கின்றோம்?

இன்றைய சூழலியல் நெருக்கடியானது மிக உண்மையானது.கடுமையானது!இந்த நெருக்கடியை தீர்த்தாகவேண்டும்.அங்ஙனம் தீர்க்கப்படாதுபோனால் புவிப்பரப்பில் இன்னும் ஓரிரு நூற்றாண்டில் உயர் வாழ்தல் சாத்தியமின்றிப்போவது உண்மையாகும்.நச்சுக் கிருமிகளினதும்,விஷச்செடிகளினதும் இருப்பே சாத்தியப்படலாம்.இத்தகைய எதிர்காலத்தை எதிர்கொள்ளவா நாம் மாடாய் உழைக்கிறோம்,குழந்தைகளைப் பெறுகின்றோம்?

எமது உற்பத்தி முறைகளுக்கும்,சக்திவள நுகர்வுக்கும் எந்தப் பொறுப்பும் சுமத்தாமால் வெறுமனவே இலாப வேட்கையுடன் தொடர்ந்தாற்றும் மனித இடைச்செயலானது, நம் தலைமுறையையே நோய்வாய்ப்படுத்தியுள்ளதை எத்துணை மதிப்பீடுகளுக்குள் நாம் உட்படுத்தி ஆய்ந்திருக்கிறோம்?சமுதாயத்தின் முழுமொத்த மக்களும் ஆரோக்கியமற்ற மனிதர்களாகவும்,ஏதோவொரு குறைபாடுடைய சிசுவாகக் கருவில் உருவாகும் புதிய மனிவுயிருக்கு யார் பொறுப்பாளிகள்?நமது வாழ்கை முழுதும் பெரும் குற்றவாளிகளாக மாறிவரும் இந்தப் பொருளாதாரத்தைக் கொண்டு நடாத்தும் "நம் கூட்டுழைப்பு" நம்மையடிமைப்படுத்தும் இன்றைய காலத்தில் வாழ்வின் அர்த்தம் என்ன?

இன்றைய யுரேனியத்தின் இருப்புக்கு எல்லையுண்டு!

யுரேனியத்தின் கச்சாவிருப்பு இன்னுமொரு தலைமுறைக்குச் செல்லமுடியாது.ஆகக்கூடிய அதன் வளம் இன்னும் எண்பது அல்லது நூறு வருஷங்களே

என்னைப் பொருத்தவரை நமது பொருளாதாரமானத்து சூழலிருந்து திருடுவதை நிறுத்தாதவரை மனிதவினத்துக்கு எந்த விமோசனமுமில்லை.

அவுஸ்ரேலியாவிலும்,தென் ஆஜென்டீனாவிலும் பெற்றோர்கள் தமது குழந்தைகளை 13 நிமிடங்களே வெய்யிற் காலத்தில் வெளியில் அனுமதிப்பது நடக்கின்றது.இதற்கு மிஞ்சினால் தோற் புற்று நோயை அந்தக் குழந்தைகள் எதிர்கொள்வதில் முடியும்.புவியின் தென்துருவத்தில் மெலிதாகிப்போன ஓசான் பாதுகாப்பு உறை இன்று புற்று நோயைப் பரிசாக வழங்குகிறது!இன்னும் சில வருடங்களில் புவியின் வடதுருவத்திலும் ஓசான் ஓட்டை பெரிதாகி எல்லோருக்கும் இதைப் பொதுவாக்கிவிடும்.வருடமொன்றிக்கு அவுஸ்ரோலியாவில் 140.000. பேர்கள் தோற் புற்று நோய்க்கு உள்ளாகி வருகிறார்கள்.சுவாசப்பை மற்றும் கண்,தொண்டை,மூக்குப் பகுதிகளில் கண்ட கண்ட நோய்கள் வந்து தொலைக்கிறது.

200 வருடங்களுக்கு முன் இமானுவேல் கன்ட்[Immanuel Kant (* 22. April 1724 in Königsberg; † 12. Februar 1804 ebenda] எனும் தத்துவவாதி சொன்னார்:"இயற்கைச் சீற்றமென்பது கடவுளின் தண்டனையல்ல மாறக மனிதர்களின் குற்றமே"அதாவது மனிதரின் இடைச் செயலே என்றான்

என்றபோதும்,இந்தியத் தேசத்தினது அணுசக்தித்திட்டமானது அரைகுறையான வளர்ச்சிக்கட்டத்துக்குள் இருக்கும் இந்தச் சூழலில் ஐரோப்பிய"சூழலியக் கோசத்தை"சட்டை செய்யாது.செய்வும் முடியாதது.ஐரோப்பா தன்னைக் காப்பதற்கானவொரு ஆயுதமாகவே சூழற்பாதுகாப்பை ஒரு ஆயுதமாகவும் பயன்படுத்துகிறது.அது,மாற்றுத் தேசங்களும்-மக்களும் தமக்கான உற்பத்தித் திறனைக்கொண்டியங்குவதைத் தடுப்பதிலேயேதாம் ஐரோப்பியாவின் பொருளாதாரத்தின் ஏற்றமுண்டு என்பதனைத் தெரிந்தே வைத்திருக்கிறது!

இருளுக்குள் இருப்பவர்கள் ஒளிவருமுன்னமே அந்த வழியைத் தடுப்பதில் உயிர் வாழ்ந்துதாம் என்ன-வாழாவிட்டாற்றாமென்ன?மனிதத் தேவைக்கேற்ப அனைத்தும் வந்தே தீரும்-மாறியே தீரும்!இன்றில்லாவிட்டாலும் எப்போதொரு பொழுதில் லிட்டில் போயும்[ Little Boy_was the codename for the atomic bomb dropped on Hiroshima on August 6, 1945 by the Boeing B-29 Superfortress Enola Gay, piloted by Colonel Paul Tibbets of the 393rd Bombardment Squadron, Heavy, of the United States Army Air Forces ] -பெற் மானும் [Fat Man_ is the codename for the atomic bomb that was detonated over Nagasaki, Japan, by the United States on August 9, 1945. ]இந்தவுலகத்தைப் பூண்டோடு பொசுக்கத்தாம் போகிறது.அதைச் செய்து காட்டிய கீரோசீமா-நாகசாகியை மறந்திட முடியாதல்லவா?பிறகென்ன?கூடங் குளமிருந்தாலென்ன-இல்லாது போனலென்ன?

ஸ்ரீரங்கன்
31.03.2012

No comments: