Wednesday, November 30, 2011

தாய்மண் விடுதலை நோக்கி பயணிப்பவர்கள்...

மணிவண்ணன் ஏகாம்பரம் போன்ற மடக் கொழுந்துகளுக்கு...

//விடுதலைப் புலிகள்.... தூய்மையானவர்கள்... மது ..புகை , பாலியல் ஆசை என்னும் போதைக்கு அடிமை ஆகாத கொள்கை மாறாது அன்றுமுதல் இன்று வரை தாய்மண் விடுதலை நோக்கி பயணிப்பவர்கள்.//

இரமணியின் முக வாயில் : -Manivannan Ehambaram


தற்போது வன்னியில் முடித்து வைக்கப்பட்ட ஆயுதப் புலிகளது அழிப்போடு சம்பந்தப்பட்ட கயவர்கள் புலிகளுக்குள் தானே முளைவிட்டனர்?கருணாவும்,பிள்ளையானும் மட்டுமல்ல கே.பி.யும் இன்னும் பல புலிகளும்தானே தமிழ் மக்களைக் காட்டிக்கொடுத்த கயவர்கள்?இவர்களை அம்மானென்றும்,கே.பி.என்றும் செல்லமாக அழைத்த தமிழ்த் தேசியப் பால்குடிகள் மற்றவர்களைத் துரொகியென இப்பவும் வகுப்பெடுப்பதும்,தனிநபர்கள்மீது தப்பான நடாத்தைகளைக் கற்பிக்கவும் முனைகின்றனர்.இது சாபக்கேடா அல்லது புலித்தனமா?மணிவண்ணன் ஏகாம்பரம் போன்ற மடக் கொழுந்துகளுக்கு இது புரியாது போனது ?;புலிகளுக்கு ஆலவட்டம் கட்டும் கொடிய மனதானது யுத்தத்தால் இழந்த இலட்சம் உயிரையும் ஒரு நொடியில் கேவலப்படுத்தி விடுகிறது.


„தலைவர் வல்லவர்;

தலைவர் அனைத்தையுஞ் செய்து தமிழீழம் காண்பார்;

தலைவர் கரத்தைப் பலப்படுத்தினால் போதும்;

தலைவர் காலத்தில் தமிழீழம் கிடைக்கும்-நம்புங்கள்!.“


தலைவருக்கு அனைத்தையும் ஒப்புக்கொடுத்த ஒரு இனம், தனக்குள்ளேயே உள்ளக ஒடுக்குமுறையை மட்டும் „துரோகத்தின்“பெயரில் நடாத்தி முடித்தது.

நமது போராட்டவாழ்வில்,கடந்த 25 ஆண்டுகளாக நமது சமுதாயம் தனது ஆற்றலை,சமூக இருப்பை,படைப்பாற்றலை,மனித வளத்தைப் பரவலாக இழந்துவிட்டது.போராட்டத்தாலான சமூகச் சிதைவு மனித சீவியத்தைத் தொலைத்துப் பூர்வீக வாழ்விடத்திலிருந்தே தமிழ்பேசும் மக்களைத் துரத்தியடித்துவிட்டுள்ளது.இயக்க-அரச ஆதிக்கத்தின் விளைவாக நிகழ்ந்த இவ் நடாத்தைகள் ஏலவே இலட்சம் முஸ்லீம்களில் ஆரம்பிக்கப்பட்டு இன்று, அந்த மக்களை விரட்டியடித்த பொதுமைப்பட்ட சமூகவுளவியலுக்குச் சொந்தக்காரர்களான தமிழ்பேசும் மக்களையுமே மெல்ல வாழ்விடங்களைவிட்டுத் துரத்தியடித்துள்ளது.தமிழீழம் என்ற அரசியல் சூதாட்டம் எத்தனை ஆயிரம் தலைகளை உருட்டியும் தனது தவறைக்குறித்து மிதப்பாகவே பதிலளிக்கிறது.இதன் பின்னாலிருந்து மீளவும் அரசியல் செய்யமுனையும் தமிழ் தேசியத்தின் போலி முகங்கள் தமது வர்க்கத்தின் நலனைப் பிரதானப்படுத்தித் தமிழ்பேசும் மக்களைக் குறித்தான எல்லாவகை நியாயங்களையும் தமிழ் தேசத்தின் விடுதலை என்ற பதத்துக்குள் விளக்க முனைகிறது.இது, கடந்தகாலத்துத் தவறுகளின் அறுவடையாக நிகழ்த்தப்படும் இன்றைய யுத்த அழிப்பைக்குறித்துப் பொத்தாம் பொதுவாகத் தீர்ப்புக் கூறுகிறது:


// புலி எதிப்பாளர்களை நான் நன்றாக அறிவேன் . அவர்களின் குணம் செய்கை என்பவற்றை வைத்து சில கணிப்புகள்

என்னிடம் இருக்கின்றது இது எனது சொந்த அனுபவம் ....நான் சந்தித்த பலரிடம் இருந்து அறிந்தவை....

1 ) வேற்று இயக்கத்தில் இருந்து பிரிந்தவர்கள் தங்களை இன்னும் விடுதலை விருமிபிகள் என்று சொல்லவதும் ஆனால் புலிகளின் பாதை சரி இல்லை என்றும் ( ஆடத்தெரியாதவன் அரங்கம் பிழை என்று சொல்வது) புலிகள் தங்களை போராட விடவில்லை என்றும் சந்தர்ப்பவாதம் பேசுபவர்கள்.

2 ) சுயநல அரசியல் நடத்தும் அரசியல் வாதிகளின் நிழலில் இருப்பவர்கள்.

3 ) விடுதலை போராட்டத்தை எதிரிகளின் காலடியில் போட்டுவிட்டு கொள்கை மாறி சுகபோகம் அனுபவிக்கும்
கூட்டம்

4 ) ரகசிய மது மாது போன்ற எல்லா பழக்கத்துக்கும் அடிமைப்பட்ட சிலர் தங்களை புத்திஜீவிகள் என்று சமுதாய அரங்கில் தங்களை ஆய்வாளர்களாகவும் விடுதலை விரும்பிகளாகவும் காட்டுபவர்...

5 ) எதையும் செய்யாது வீராப்பு பேச்சில் காலம் கழிக்கும் ஒரு சிலர்

6 ) தேசத்துக்கும் பிறமக்கள் துயருக்கும் உதவ மனம் இல்லாதவர்கள் .

7 ) தங்களை விட சிறந்த கல்விமான்கள் இல்லை என்றும் தங்களிடம் இருக்கும் திறமைகளை தாங்களே
புகழும் கூட்டம்.

8 ) பதவி ஆசையும் தன்னலத்துக்காக எதையும் செய்ய துணியும் கூட்டம்....

9 ) எதிரிகளின் கைகூலிகள் , தன தவறை மறைத்து பிறர் மீது குற்றங்களை சுமத்தும் குணம்.

சரியான தகவல் தெரியாது பிறரின் சொல்கேட்டு தவறான கருத்துக்களை கொண்டிருப்பவர்கள்...
பிழையான போதனைகளில் வேறு இயக்க அல்லது எதிரி வழியில் செல்பவர்கள்...
அரசியல் சுயநலம் , அரசியல் கட்சிகளின் செல்வாக்கு. இப்படியாக பல குணம் இருக்கும்

அனால் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் எந்நிலையிலும் .........தமிழ் உணர்வு உள்ளவர்கள். தாய்மண் விடுதலை நோக்கி பயணிப்பவர்கள்



விடுதலைப் புலிகள்.... தூய்மையானவர்கள்... மது ..புகை , பாலியல் ஆசை என்னும் போதைக்கு அடிமை ஆகாத கொள்கை மாறாது அன்றுமுதல் இன்று வரை தாய்மண் விடுதலை நோக்கி பயணிப்பவர்கள்.
ஈழ விடுதலைக்கு எதிராக சொந்த தாய் தாய் உடன்பிறந்தவர் செயல்பட்டாலும் அவரை தேச விரோதிகளாக கணித்து கொல்லும்கொள்ள்கை வெறி அவர்களிடம் இருக்கும். தாய் மண்ணுக்காக வாழும் அனைவரும் விடுதலைப்புலிகள்.....// -Manivannan Ehambaram
http://www.facebook.com/profile.php?id=100000789360672&sk=wall


அது, பெரும்பாலும் அரசியல் தவறென்பதை“எட்டப்பன்,துரோகி,காக்கை வன்னியன்“எனும் ஆதிக்க வர்க்கத்தின் திமிர்த்தனமான கருத்தியற் பாசிசத்துடன் மெல்லத் தமது நலன்களையும், அதுசார்ந்த அழிவு அரசியலையும் நியாயப்படுத்துவதில் மற்றவர்களைச் சொல்லித் தப்பிக்கிறது.

இதைக் குறித்துக் கேள்விகளைக் கேட்டாக வேண்டும்:

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் மொழியப்பட்ட வெறும் வாய் வீச்சுத்“தமிழீழக் கோசம்“எங்ஙனம் போராட்டத்துக்கான காரணமாக மாறியது?

இத்தகையவொரு கோசத்தக்குள் மறைந்திருந்த அரசியலின் தெரிவு என்ன?

இதை முன்னெடுத்த அரசியல் தலைமையின் பின்னால் இருந்த அரசியலின் தொடர்ச்சி எது?

தமிழீழம் என்ற கோசத்துக்கு ஏதுவான பொருளாதாரச் சூழல் தமிழ்பேசும் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த நிலப்பரப்பில் நிலவியதா-நிலவுகிறதா,இது சார்ந்த சுயநிர்ணயம் சாத்தியப்படுமா?

சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களுக்குள் தமது பொருளாதார இலக்குகளைக் கண்டடைந்தவொரு வர்க்கம் அவ்வண்ணமே சிங்கள அரச பீடத்தில் தமது சேவைத் துறைசார் அதிகாரத்தைக் கையகப்படுத்தியபடி எங்ஙனம் தமிழீழஞ் சொல்ல முனைந்தது?

இத்தகைய „தமிழீழ“க்கோசத்தை முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களது அபிலாசையாக்குவதில் எத்தகைய சக்திகள் உடந்தையாக இருந்தன,அவை இலங்கைக்குள் மட்டும் தமது இருப்பைக்கொண்டவையா அல்லது இலங்கைக்கு வெளியில் இருந்தும் வெளிப்பட்டவையா?

இக் கேள்விகளது அடுத்த நிலையில், சிந்தப்பட்ட குருதிக்குக் காரணமான அரசியலுக்குத் தார்மீகக் காரணம் ஏதாவது உண்டா?

அது, தமிழ் பேசும் முழுமொத்த மக்களையும் இவ்வளவு பாதிப்புக்குள் உட்படுத்தித் தனது மூர்க்கமான அழிவு யுத்தத்தைத் தமிழினது பெயராலும் அது நிலவும் நிலப்பரப்புக்கடந்தும் நடாத்துவதில் எத்தகைய அரசியல் முதன்மையுறுகிறது?

இது,தமிழ்பேசும் மக்களது விடுதலையைத் தமிழீழத்தின் திசைவழியில் வென்றுவிட முடியுமென்று ஊக்கப்படுத்திய „மாவீரர்கள்“பட்டியலின் தெரிவில் எவரது நலன்கள் முதன்மையுற்றுக் கொலைக் களத்துக்குச் சிறுவர்களைப் பிடித்தனுப்பியது?

தற்போது வன்னியில் முடித்து வைக்கப்பட்ட ஆயுதப் புலிகளது அழிப்போடு சம்பந்தப்பட்ட கயவர்கள் புலிகளுக்குள் தானே முளைவிட்டனர்?கருணாவும்,பிள்ளையானும் மட்டுமல்ல கே.பி.யும் இன்னும் பல புலிகளும்தானே தமிழ் மக்களைக் காட்டிக்கொடுத்த கயவர்கள்?இவர்களை அம்மானென்றும்,கே.பி.என்றும் செல்லமாக அழைத்த தமிழ்த் தேசியப் பால்குடிகள் மற்றவர்களைத் துரொகியென இப்பவும் வகுப்பெடுப்பதும்,தனிநபர்கள்மீது தப்பான நடாத்தைகளைக் கற்பிக்கவும் முனைகின்றனர்.இது சாபக்கேடா அல்லது புலித்தனமா?மணிவண்ணன் ஏகாம்பரம் போன்ற மடக் கொழுந்துகளுக்கு இது புரியாது போனது ?;புலிகளுக்கு ஆலவட்டம் கட்டும் கொடிய மனதானது யுத்தத்தால் இழந்த இலட்சம் உயிரையும் ஒரு நொடியில் கேவலப்படுத்தி விடுகிறது.

இது, குறித்த கேள்விகளோடு,கொல்லப்பட்ட மக்களுக்கு எத்தகைய அரசியல் நடாத்தைகள் சிங்கள-தமிழ் ஆளும் வர்கத்தின் தரப்பிலிருந்து இப்போது முன்வைக்கப்படுகிறது?

இவை மிக அவசியமாகக் கேட்கப்பட்டு விடைகாணவேண்டிய மிகச் சாதாரணக் கேள்விகள்.

மக்களது இன்றைய இழி நிலைக்கு மேலும் „தமிழீழத் தாயகம்“ எனும் சமூகவுளவியல் அனைத்தையும் மொழியினதும்,தேசத்தினதும் பெயரால் சமமப்படுத்தி,தலைவரது தியாகத்துக்கு முன் குறுக்கிவிடமுடியாது.

தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பு இலங்கையில் கேள்விக்குள்ளான அரசியலில் புலிகளினது போராட்டச் செல்நெறி-அரசியற்பாதை மற்றும் அதன் பாத்திரம் குறித்து நாம் நிறையக் கேட்டாக வேண்டும்.இது,அடுத்தகட்டத்தைத் தகவமைப்பதற்கும் நமது சமுதாயத்தைத் திடகாத்திரமான சமுதாயமாக்குவதற்கும் இது அவசியமான ஆரம்பக்கட்டம்.இதை எவரும் மறுத்தொதுக்கிவிட்டுத் தமிழீழம் என மீளவும் கூட்டாகக் கோசமிடமுடியாது.

புலிகளைச் சுற்றிக்கட்டியமைத்த பிரமைகள் நீர் குமிழி போன்றதென்பதைப் முள்ளி வாய்க்காலும்,கே.பி.யும்,கருணாவும் தெளிவுப்படுத்தி விட்டனர்.புலிகளது அரசியலைத் தொடர்ந்து தாங்கிப்பிடித்து,அதில் தொங்க முனைவது நம்மை ஒடுக்கும் சிங்களப் பேரினவாதத்துக்கு இன்னும் சாதகமான அரசியல் ஊக்கத்தை வழங்குவதாகவே இருக்கும்.

நாம்,எமது அரசியல் தலைமைகள் குறித்து ஆய்வுகளைச் செய்தாகவேண்டும்.

இதுள், அவர்களது அனைத்து மூலங்களையும் கண்டடையவேண்டும்.

இங்கே,தலைவர்-தேசியத் தலைவருக்குப் புகழ் மாலை போட்டது போதும்.அவர் தமிழ்பேசும் மக்களது அரசியலில் அரிச்சுவடியைக்கூடப் புரிந்துகொண்டவரல்ல.ஆதலாற்றாம் ஆதிக்க வர்க்கத்தால் ஆட்டிவைக்கப்படக் கொலை அரசியலைத் தொடர்ந்தார்.இதன் சாதகத்தைப் பலமாகக் கருதிய சிங்கள இனவாத அரசு, தமிழ்பேசும் மக்களது இருப்புக்கே இப்போது வேட்டுவைத்து வருகிறது.இதற்கான அரசியல் தெரிவைப் புலிகளதும் அவர்களது முன்னோர்களும் போட்டதாகக் கொண்டோமானால், இதை வலுப்படுத்தித் துரோக அரசியலுக்குக் களம் அமைத்த சக்திகள் எவை?

இதன் வழி நாம் சிந்திப்போமா?


ப.வி.ஸ்ரீரங்கன்.

Monday, November 21, 2011

நந்திக் கடற்கரையில் நவம்பர்: 27

"மாவீரர்கள்" : பணத்தைக் குவிப்பதற்கான பந்தையக் குதிரைகளாக...

நவம்பர்: 27,நெருங்க-நெருங்க,


நந்திக் கடற்கரையில் பிரபா உச்சி பிளந்து காட்டிய துட்டக்கைமுனு நமது மக்களது அடிமை சாசனத்தை உறுதிப்படுத்தும் சிங்கள உளவியலாக அன்று வெளிபட்டது.இது, ஒரு வரலாற்றுத் தரிசனமாகவே உள்வாங்கப்படவேண்டும்.இத்தகையவொரு உளவியலைச் சமுதாய மனநிலையாக மாற்றிய இலங்கையின் இனவாதத்தத் தொடர்சியுள்ள உண்மைகளை வெறுமனவே இனவாதக் கருத்தாக ஒதுக்கிவிட முடியாது.
 
என்றபோதும், எங்கும்,பொய்யும் அது சார்ந்து கருத்தியில் போரும் தொடர்கிறது!புலம்பெயர் மக்கள் மத்தியில் மிகக் கணிசமான வீதத்தில் இத்தகைய பொய்யுரைப்புகள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்படுகிறது.
 
ஒரு இயக்கத் தலைவனது சரணடைவுக்குப்பின்,அவனைக் கொலை செய்து மகிழ்ந்த அரசியல் இலங்கைக்குச் சொந்தமெனினும்,அதையே மறைத்து இன்னும் தமிழீழக் கனவு வீசும் கயமைமிகு புலம்பெயர் தமிழ் அரசியலானது ஆபத்தானது.


இஃது, ஒரு சமுதாயத்தையே சதிராடிச் சீரழித்தபின் மீளவும், பணம் பறிக்கும் வியாபார உத்தியோடு, அரசியல் செய்வதுதாம் எமக்குரிய பாரிய வெறுப்பாக அமைகிறது.கடந்த முப்பதாண்டுப் புலி அரசியல்-போராட்ட முறைமைகளால் தமிழ்பேசும் மக்கள் பெரும்பாலும் இனவாதம் ஊட்டப்பட்ட பொம்மைகளாகவே இருத்தி வைக்கப்பட்டார்கள்.இந்தப் பொம்மை விளையாட்டில் பலிகொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் மண்ணோடு போக,எஞ்சியிருப்பவர்கள், தமது வாழ்வுக்கான புதிய மதிப்பீடுகளைப் புலியழிப்புக்குப் பின்பான இலங்கை அரசியலில், கண்டடைய முனையும் இன்றைய தருணத்தில்தாம் இனிவரும் நவம்பர் 27 கொலையையும்-சதியையும்,சரணாகதி அரசியலையும் புனிதப்படுத்தியபடி போர்க்கதை சொல்லப் போகிறது.
 
மக்களை ஒட்ட மொட்டையடித்து,அநாதைகளாக்குவதில் தொடரும் அரசியல் என்னவென்பதைப் புரிந்துகொண்டாக வேண்டும்!
 
இது,மற்றவர்களை ஏமாற்றிப்பிழைப்பதில் காலாகாலமாகப் பழக்கப்பட்டவொரு சமுதாயத்தின் அகவிருப்பாகவே இனங்கண்டாக வேண்டும்."ஊரை அடித்து உலையில் போடும்" ,யாழ்ப்பாணிய அரசியலுக்கு, அழிவு இன்னும் இல்லை என்பதை அழகாகக இனங்காணும் அரசியலை இப்போது பணப்புலி நெடியவன் குழுவுக்குள்ளும்,காடுகடந்த "தமிழீழ அரசின் " தலைமையில் இன்னொரு பிளவுக்குள் தவிக்கும் இலண்டன் தலைமைக்ககுள்ளும் காணமுடியும்.வெறும் மன விருப்புகளைத் தமிழின்-தமிழரின் பெயரால் கணக்குக் கூட்டித் தீர்மானிக்கும் அரசியல் அபிலாசை நம்மைப் படு குழியில் தள்ளிய வரலாறாக விரிந்துகொண்டே செல்லுகிறது.

" குண்டடிபட்ட மனிதக் குழந்தை
குருதியுள் அமிழ்ந்து கருவாடாகியபோது
கம்பி வேலிக்குள் அதன் எச்சம் அடக்கப்பட்டது
இத்தனைக்கும் மத்தியில் மீள உண்டியலோடு
உருப்படாத பணப்புலி..."

தமிழ்பேசும் மக்கள் இவ்வளவு தூரம் அழிவுக்குள் உட்பட்டுவரும் இந்தத் தருணத்திலும்,எவரெவரோ அந்த மக்களின் நலன்களைச் சொல்லியே அவர்களை அழித்தும்,அவர்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடியும், தத்தமது வாழ்வை மெருக்கூட்டியுள்ளார்கள்-மெருக்கூட்ட முனைகிறார்கள்.
 
ஆயுதப் போராட்டம் எமது மக்களிடமும்,போராடும் போராளிகளிடமும் அந்நியப்பட்டுக்கொண்டே சென்று,இறுதியில் சிங்கள இராணுவத்திடம் படுதோல்வியடைந்து , தமிழ்பேசும் மக்களை ஒட்டவொடுக்கும் சிங்கள மற்றும் உலக முலதனத்திடம் காட்டிக்கொடுத்தது.
 
அது, எமை அனைத்துக்கும் அடிமையாக்கிச் சென்றுள்ளது.
 
இந்த அடிமை வாழ்வை மேலும் தீவிரப்படுத்த முனையும் புலம் பெயர் எச்ச சொச்சங்கள் போடும் திரை மறைவு அரசியல், தமிழ்பேசும் மக்களுக்கு "உரிமை"குறித்துப் பேசுகிறது.அதே பழைய பாணியில் கருத்தாடும் நபர்கள், கடந்த காலத்தில் அழியுண்டுபோன போராளிகளை மிக மலினப்படுத்திப் பூசிப்பதால் ,அவர்களது கொலைகளை தேசத்துக்கான தியாகமாக்கிவிட முடியாது.
 
நவம்பர் இருபத்தியேழுக்கான ஒத்திகைச் செய்துவரும் பாசிசப் பணப் புலிகள்,இதுவரையான எல்லாவிதப் போராட்ட முறைகளும் செய்து பார்த்த இவர்களது போராட்டத் தலைமையோ, இவர்களாலேயேதாம் காட்டிக்கொடுக்கப்பட்டு[இறுதியில் சரணடைந்து] செத்த ஈனத்தனத்தை,இவர்கள் தியாகமாக்குவதில் மேலுஞ் சில்லறைகளைக் கவ்வுவதற்கேற்ப அரசியல் பேசுவது தமிழ் மக்களது ஞபகசக்தியோடு விளையாடுவதே.மாவீரரை நினைவு கூரும் தகமை இந்தப் பணப் புலிப்பினாமிகளுக்கு உண்டா?

அந்தத் தகமையானது உண்மையான-நியாயமான அறங்களால் கட்டியமைக்கப்படுவது. மக்கள்சார்ந்த துளியளவு வெளிப்படையான அரசியலும் செய்ய முடியாத இந்த மாபியாக்கள்தாம் ,இனிவரும் கார்த்திகைத் தீபம் ஏந்தக் காத்துக்கிடக்கின்றனர்.தம்மால் பலியிடப்பட்ட அப்பாவிப் போராளிகளை வைத்து ,மீளவும் பணந் திரட்டம் இந்தக் கேடுகெட்ட புலிகளுக்கு வக்காலத்து வேண்டும் அறிவுகெட்ட தேசியப் பாலகர்களை எந்தப் பொழுதிலும் ஜீரணிக்கவே முடியவில்லை!தமது சொந்தத் தலைவனுக்கு என்ன நடந்ததென்றதையே மறைத்தொதுக்கும் களவாணிக்கூட்டம்,செத்த போராளிகளுக்த் தீபம் ஏற்றுவதற்கு இலாயக்கானவர்களா?

அதிகார வர்க்கத்தோடிணைந்து தமிழ்மக்களை மொட்டையடிக்கும் குவிப்பூக்க விருப்புறுதியானது ,தமக்கு எதிரான எந்தப் புறநிலை மாற்றத்தையும் இரகசியமானமுறையில் வேவுபார்த்துச் சிதைப்பதில் முன்நிலை வகிக்கிறது!இதைப் புதிய புலிக்காவடிகளும்,அதை ஆட்டுவிப்பவர்களும் தொடர்தே வருகிறார்கள்.தத்தமது இடத்தைத் தக்கவைப்பதில் மிகவும் நிதானமாகவே இந்தக்கூட்டு இருக்கிறது.இதற்கான உறுதியான அத்திவாரமாக இந்தப் பலிகொடுக்கப்பட்ட பாலகர்களது முகங்களைக்காட்டி ,மீளமீளப் பணம்புரட்டும் வியாபாரக் கூட்டமாக மாறியுள்ள புலம்பெயர் புலிப்பினாமிகளை அவர்களது குணவியல்புக்கமைய அவர்களே வெளிப்படையாகக் "குத்துவெட்டில் "இறங்கிக் காட்டிக்கொண்டாலும் ,செத்த போராளிகளது முகங்களைக் காணும் எந்த மனிததரும் இரங்கவே செய்வார்கள்.

இந்தப் பலவீனத்தைக் காசாக்குவதில் அதீத கவனஞ் செலுத்தும் பணப் புலிகள்,தம்மால் அநாதவராக விடப்பட்ட போராளிகளையோ அல்லது தம்மால் கட்டாயமாகப் பிடித்துக் கொலைக்கு அனுப்பப்பட்ட போராளிக் குழந்தைகளது பெற்றோருக்கோ இதுவரை எந்தக் காரியமும் செய்யவே இல்லை!எனினும்,கார்த்திகை இருபத்தியேழு என்பதில் காசு காணும் மனோபாவமானது,ஒரு இனத்தின் உரிமையையே வியாபாரமாக்கிய கையோடு ,செத்த போராளிகளது ஆன்மாவையே வைத்துக் கடைவிரிப்பதில் தமது "ஆன்மாவென்பது பணம் புரட்டும் ஸ்த்தானத்திலேயேதாம் புரட்டிப் போடப்பட்டதென" நிரூபிக்கின்றனர்!
 
இலங்கையில் தமிழ்பேசும் மக்கள்படும் தொடர் துன்பங்கள், பசி,பட்டுணி, சாவு, பொருளிழப்பு,வாழ்விடங்களைவிட்டு ஒதுங்குதல்,அகதி வாழ்வு,இத்தகைய சமூகச் சீர் குலைவு மக்களிடத்தில் ஆத்மீகப் பலவீனத்தையும்,அது சார்ந்த மதிப்பீடுகளையும் வேறொரு பாணியில் உருவாக்கி விட்டுள்ளது! இப்போது ,விடுதலை,சுதந்திரம் என்பதெல்லாம் மக்களின் வாழ்வோடு சம்பந்தப்படாத விஷயமாக மக்களே உணரத்தலைப்படும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.இதை இனம் கண்டவர்கள் எமது மக்களின் எதிரிகளே!நம்மைச் சுற்றி மதில்களை உருவாக்கிய விடுதலை இயக்கங்கள், நமது மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து கிஞ்சித்தும் கவலை கொள்ளாது அவர்களையே ஆயுதப் பலாத்தகாரத்தால் ஒடுக்கித் தமது ஆதிக்கத்தை நிலைப்படுத்த முனைந்த இந்தக் கேடுகெட்ட அரசியலுக்குப் புலிகளையோ அல்லது மற்றைய இயக்கங்களையோ காரணம்காட்டிப் பேசுவதைவிட,நமது மக்களின் அரசியல் அறிவு நிலை சார்ந்து சிந்திப்பதே சாலச் சிறந்தது.
 
இன்றோ, புலிகளது தோல்வியிலிருந்து பாடங்கற்க வேண்டியவொரு ஒடுக்குமுறைக்குள்ளாகும் இனமாக நாம் இருந்தும்... அது, குறித்து மேம்போக்கான மனநிலையோடு மிகக் கெடுதியாக வீராப்புப் பேசுகிறோம்!

புலம்பெயர்ந்த மண்ணிலோ,தமிழ்மக்களை ஒட்ட மொட்டையடித்து,அரசியல் அநாதைகளாக்குவதற்கென்றொரு கூட்டம்"நாடு கடந்த தமிழீழம்-நாடு கடந்த நாடாளுமன்றம்-நெடியவன்-கொடியவன் குழுவென "பணப் பிசாசுகளாக வலவந்து ,மக்களை ஏமாற்றிக்கொள்ள மீண்டும் செத்த போராளிகளது பெயரால் பணவேட்டைக்காகக் கார்த்திகைத் தீபம்,மாவீரர் முகந்தாங்கி உண்டியல் கிலுக்குமானால் ,தமிழ்பேசும் மக்கள் அடுத்த நூற்டில் ஆட்டு மந்தைகளாகவே அடுத்தவர் தயவில் வாழக் கற்றுக்கொள்வர்.இதைத் தடுத்து நிறுத்துவதற்கு நாம் முனைந்து,இவர்களது மோசடி வித்தைகளை அம்பலப்படுத்தியாகவேண்டும்.இது எந்தவடிவிலுஞ் செய்து முடிக்கவேண்டிய அவசியப்பணி.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,ஜேர்மனி
21.11.2011

Saturday, August 20, 2011

இந்தக் கிரீஸ் குழு...

அரச ஆதிக்கம்-அரச ஜந்திரம்...

ஆதி ஆதித்யன் :
" இது சம்மந்தமான குறிப்பில் கலையரசன் என்பவர் அதிகளவில் கொக்கரித்துக் கொண்டிருந்தார். யாருக்கு எப்படியான ஆபத்து இருக்கிறது என்பதற்கப்பால் இந்த பிசாசுகளின் பின்னணியில் சிங்கள ராணுவம் இருக்கிறது என்பதை அடியோடு மறுத்து வந்த கலையரசன் என்பவர் சிறிலங்கா அரசின் முகவர் என்பது பின்புதான் தெரியவந்தது. அவர் நீண்டகாலமாக அந்த வேலைதிட்டத்தில் ஈடுபட்டுவருவதாக சிலர் உறுதிப்படுத்தியுள்ளனர். ... ......"

Parani Krishnarajani முக நூற்றட்டியில்

பரணி, அரச ஆதிக்கம்,அரச ஜந்திரம்,அதன்வழி மக்கள் விரோதங்கள் குறித்து நிறையப் பலர் எழுத முடியும்.இனவழிப்பில் அதீத தேவையை வற்புறுத்தும் சிங்கள ஆளும் வர்க்கத்தினது நலன்களின்வழி அரச ஆதிக்கமானது பெரும்பகுதிச் சிங்களப் பாமரர்களைத் தொடர்ந்து கட்டிப் போடுவதில் பல காரியங்களைச் செய்வதை நாம் சமீப காலமாகப் பார்த்து வருகிறோம்.இது பாராளுமன்ற ஆட்சியின்மீதான கவனத்தைத் திசை திருப்புவதில் பண்டுதொட்டியங்கிய வியூகத்தின் இன்னொரு வகைமாதிரியானது.

எழுத்தில் அந்ததந்தக் காலத்து அரசியல் அராஜகங்கள்-போக்குகள் குறித்துப் பதிவது அவசியம்.

நீங்கள் பதிந்ததும் அவசியம்.

ஆனால்,அதை வெட்டிக் கருத்தாடுபவர்களை அப்படியே விட்டுவிட வேண்டியதுதாம்.

கருத்துகளைக் காலம் தீர்மானித்துக்கொள்ளும்.

புலிவழி "தமிழீழம்"சாத்தியமென்றும்,காரிகாலன் அதைச் செய்து காட்டுவான் என்பதும் தமிழர்களின் 95 வீதமானவர்களின் புலம்பலாக-அவாவாக இருந்தது.இதுள் , பெயருக்குப் பின்னால்-முன்னால் பல பட்டங்களைச் சுமப்பவர்களே பெரிதும் புலம்பிக்கொண்டனர்.

அப்போது,நாம் புலிகள் பூண்டோடு அழிக்கப்படுவர்களெனச் சொன்னோம்.அவ் வேளைகளில் நம்மைக் கடித்துக் குதறிய பெரும் பல்கலைக் கழகப் பேராசிரியர்களையும் நாம் பார்த்திருந்தோம்.

இது,வரலாற்று இயங்கியலைப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்துடன் பார்க்காத தொழில்முறைக் கல்வியாளர்களது வினையாக இருந்தது.அவர்களுக்குப் பின்னே ஒருபெரும் வால் கூட்டம் தொடர்ந்து அணிவகுத்துக்கொண்டது.இப்போது,இந்த உதரிவர்க்க "அறிஞர்"குழாம் இருந்த இடம் தெரியாது உதிர்ந்தே போய்விட்டது.

என்றபோதும்,உண்மைகள் முகத்தில் ஓங்கி அறையும்போது,அவர்கள் பெரும் மௌனத்துள் தியானிப்பதும்,அடையாள நெருக்கடி ஏற்படும்போது உரையாடுவதிலும் கவனம் கொள்கின்றனர்.மீளவும்,கருத்தியல்வழியாகச் சிந்திப்பதில் தமது இயலாமைகளை முற்போக்குவாதிகளிடம் கொட்டுவதில் காலத்தைப் போக்குகின்றனர்.

இன்றைய இலங்கையில் நிகழும் அராஜகங்களுக்கு நேரடியாக அரசுமட்டுமே காரணமில்லை.

அரசினது ஆதிக்கத்தை விரிவாக்கும் அந்த அரசினது ரீபிரசென்சுகள்[Representative] நமக்குள்,கிராமத் தலைவர்களாகவும்,எம்.பி. அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள்.அத்தோடு இராணுவத் தளபதிகளாகவும்.இவர்கள் தத்தமது பதவிகளைக் காப்பதிலும்,தமக்கு எதிராக ஓட்டளித்துத் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்த தமிழ்பேசும் மக்களை ஏதோவொரு வகையில் பழிவாங்கப் பல தளங்களில் இயங்குகின்றனர்.

புலிகளைப் பூண்டோடு அழித்த யுத்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் நகர்ந்தும் இலங்கை இராணுவத்தில் எந்த மாற்றமுமின்றி அது யுத்தக் காலத்துக் கட்டமைப்போடு இருக்கிறது.

இராணுவத் தளபதிகளுக்குப் தமது பதவியின் இருப்பு நிலைப்பட்டாக வேண்டும்.அமைச்சர்களுக்கு(டக்ளஸ் போன்றவர்கள்)த் தம்மை ஏமாற்றிய மக்களைப் பழிவாங்க வேண்டும்.கிராமத் தலைவர்கள் தமது பதவிகளை இராணுவத் தளபதிகளோடிணைந்து காப்பதில் காரியவாதிகளாக இருக்கின்றனர்.

சமூகத்தில் குடிசார் அமைப்புகளது தோற்றம் அவர்களை அச்சப்படுத்தும்போது தமது நிலைகளைக் காப்பதில் கிரிஸ் குழு அது-இதுவென அராஜகம் மேலெழுகிறது.

அரசுக்கு இது தெரிந்தும் அது இராணுவ ஆட்சியைத் திணிப்பதில் கவனஞ் செலுத்துவதும்,கூடவே தமிழ்ப் பிரதேசமெங்கும் வாழும் தாழ்த்தப்பட்ட(தலித்துகள்)மக்களை வென்றெடுத்துத் தனது ஆதிக்கத்தை நிலப்படுத்த விரும்புகிறது.

இவைகளின் கூட்டுவடிவமான இந்த நிகழ்வுப்போக்கை,புலியெதிர்ப்பு அரசசார்ப்புக் கூட்டத்தால் சகிக்க முடியாதுதாம்.அவர்களது எஜமானர்களே அவர்களது அனைத்து நடவடிக்கைகளையும் தீர்மானிக்கும்போது,இவை குறித்துப் பெரிதாக விவாதிக்க வேண்டியதில்லை!

ஆனால்,அவர்களது நடிவடிக்கையின் பின்னே உந்தப்படும் அரச ஆதிக்கத்தின் கண்ணிகளை விவாதிப்பதில் கவனமெடுக்கலாம்.அரச ஆதிக்கத்துக்கும்,அரச ஜந்திரத்துக்குமான இருவேறு தளங்களை மிக விரிவாக விளங்கியாக வேண்டும்.

இந்த இரு தளமும் ஒன்றையொன்று காப்பதில் தமது இருப்பையிட்டுப் பாரிய மனிதவிரோதத்தைக் கட்டமைக்கின்றன.அதிலொன்றே இந்தக் கிரீஸ் குழு.

நட்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
20.08.11

Tuesday, August 02, 2011

வேளாள முள்ளி வாய்க்கால்,கரையான் முள்ளி வாய்க்கால்....

இலங்கையைவிட்டுப் புலம் பெயர்ந்தவர்களது தலித்துவக் கோரிக்கைகள்.

"Ours is a battle not for wealth or for power. It is a battle for freedom. It is a battle for the reclamation of human personality" By Dr. B.R. Ambedkar

இலங்கை அரசு கடற் கண்காணிப்பு வலையத்த்தின் வழி சாதிரீதியகச் சில வகைமாதிரித்தாக்குதலைச் செய்கிறது.அது ஒரு பக்கத் தாக்குலாக வரியும்போது,மறு வார்ப்பாகப் பிற்போக்குத் தேசியத்தின்தோல்வியில் வர்க்க முரண்பாட்டைக்குறித்து இலங்கை அரசு,சிங்கள-தமிழ் மீன்பிடியாளர்களைப் பிளவுப்படுத்துவதில் சில தர்க்கால வெற்றியையும்,தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணயவுரிமைக்கு ஆப்பு வைப்பதில் இத்தகையத் துண்டு உரையாடலிலுமாக ஒரு பிரச்சனையுள் பல காய்கள் நகர்த்தப்படுகிறது.




இன்று,இலங்கை பூராகவும் நிலவும்(ஏன் இந்தியா பூராகவும்)சாதியமைப்பு, நடைமுறையிலுள்ள சமூக அமைப்பின் உருவாக்கமல்ல. நிலவும் நவகாலனித்துவ அமைப்பு தனது முழுமை பெறாத முதலாளித்துவ வளர்ச்சிக்கொப்பச் சீர்படுத்திக்கொண்ட(தடுத்தாட்கொண்ட)அல்லது திருத்தி அமைத்துக்கொண்ட இலங்கையின்-இந்தியாவின்கடந்தகால நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பின் ஒரு ஊக்கமாகவே இந்தச் சாதிய அமைப்பு முறை மேலெழுகிறது.

இதைக் குறுக்கி வாசிக்கத் தெரிந்த நீங்களெல்லோரும்,அதையே தனிப்பட்ட வகைமாதிரிக்குள் மொன்னைத் தனமாக விளக்குவதும்,அதையே ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்குக் குறுக்கே நின்று கல்லெறியும் வினையாக மாற்றுகிறீர்கள்.சாதியமைப்பின் நிலைகளையும்,இன்றைய நிலைக்கான காரணத்தையும் ஆய்வதென்பது கடந்த 200 ஆண்டு வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டிய தேவையைப் பின் தள்ளிவிட்டு, சமீப வரலாற்றில் 60 ஆண்டு அரச முதலாளியத்தின் கடைக்கோடியில் தமிழ்பேசும் சமுதாயத்தைக் கழுமரத்தில் ஏற்றுவது நியாயமான அறிவுப்போக்கல்ல.

பிற்போக்குத் தமிழ்த் தேசியத்தின் தோல்வியோடு தாழ்த்தப்பட்ட மக்களது கழுத்துக்கு வரயிருந்த கயிறு இற்று அறுந்துபோய்விட்ட பின்பும்,சரியான திசையில் இந்த ஆய்வுகளை-கோரிக்கைகளை நகர்த்தமுடியாத நீங்கள், இத்தகைய அரைவேக்காட்டு நறுக்கோடு தமிழ்பேசும் முழுமொத்த மக்களது விடுதலைக்கு வேட்டுவைப்பதில் காலத்தைக் கடத்துவது சாதியத்தை அகற்றும் போராட்டமாகப் படவில்லை!

தமிழ்ச் சமுதாயத்தின் யாழ் மையவாதத்துக்குட்பட்ட தமிழ் மத்தியதரவர்க்கத்தின் இயற்கையான பலவீனத்தினதும்,முன் அநுபவமற்ற உலகியிற் கண்ணோட்டத்தாலும்,இன்னுஞ்சில விஷேக் குணாம்சங்களினது விளைவாலும் இந்த மத்தியதர வர்க்கம் நிலப்பிரபுத்தவப் பிற்போக்குத் தேசிய வாதத்துடன் தமிழீழம் காணப் புறப்பட்டு, புரட்சிகரக் குணாம்சத்தையே எட்டமுடியாது சிக்குப்பட்ட இன்றைய சூழலில் இந்த வகைக் குறுங் கதையாடல் எதையும் சாதிக்காது.இது மேலும்மக்களைப் பிளவுபடுத்தி அதே பிற்போக்குத் தேசிய வாதத்தை வளர்ப்பதிலேயேதாம் முடியப்போகிறது.

இந்தச் சூழலை விளங்கிக் கொள்ள ஒவ்வொரு தொழிற்பிரிவையும் இலங்கை-இந்தியச் சூழலில் புரியும்போது, அங்கே வர்க்க ஒடுக்குமுறையானது சாதியவொடுக்குமுறையாக விரிவதை இனங்காண முடியும்.இதைக் கவனத்தில் எடுப்பதை மறுப்பதென்பது நிலப்பிரபுத்துவ எச்சசொச்சத்தின் இருப்பைத் தொடர்ந்து நிலைப்படுத்துவதைவிட வேறென்னவாக இருக்க முடியும்?


ஸ்ரீரங்கன்

02.08.11

Saturday, June 25, 2011

"சாதியம்-தீண்டமை" என்ன தமிழர்களின் தனிக் கூறுகளா?

தமிழ் பேசுவதால் தமிழர்களா?;
"சாதியம்-தீண்டமை" என்ன தமிழர்களின் தனிக் கூறுகளா?



" தென்னாசியச் சமுதாயங்கள் சார்ந்தெழுந்த கருத்து நிலைகள் வெறும் கருத்துக்களால் நிலை நிறுத்தப்படவில்லை.அவை குறிப்பிட்ட அதிகாரத்தின் மைய ஆளுமையை நிலைப்படுத்துவதற்கான சிந்தனைத் தளத்தைக் கொண்டிருப்பதற்காகக் கட்டபட்ட ஒரு பெரும் நிறுவனமான இந்துத்துவப் பார்ப்பன நிறுவனத்தின் நீட்சியாகும்."


ஈழத் தமிழர்களின் வரலாறென்பது அவர்களது தொடர்ச்சியான குடிப்பரம்பலாலும்,மானுட வர்க்கப் போராட்டங்களாலும் மிக யதார்த்தமாகப் பதியப்பட்டிருக்கவேண்டும்.ஆனால்,ஈழத் தமிழர்கள் பொத்தாம் பொதுவாகத் தமிழ்ச் சமுதாயமென்றழைக்கும் தகுதியைத் தமது இழி நிலைகளால் இழந்தர்ர்கள்.இது ஒரு மொழி பேசும் மக்கள் தொகுதிக்குள் இயல்பானதாக இருக்கவில்லை.ஒத்த மக்கள்தம்மை ஒருவகையொடுக்குமுறைக்குள் வற்புறுத்தி வெற்றி கொண்டது பொருள் சார்ந்த நலன்களை அவர்களோடு பங்கீடு செய்யாதிருப்பதற்காகவென்பதை, நாம் வெறும் பொருளாதார நலன்களுக்குள்மட்டும் குறுக்கிவிடமுடியாது.


அங்கே , "பண்பாட்டுத் தளத்தில் பாரிய பார்ப்பன நெருக்குதல் மனிதப் பண்பையே சாகடித்திருக்கிறது.அரியரெத்தினத்தை அரியம் என்பதும்,கந்தசாமியை கந்தன் என்ற பதிவுகளும்-கந்தன் தோட்டஞ் செய்தான் என்று பாடத்தில் எழுவாய் பயனிலை கற்பிக்கப்பட்டதும்" நாம் அறிந்ததுதாம்.


வரலாற்றைச் செம்மையாகக் குறித்துவிட முடியாது.ஆனால் , அங்ஙனம் முனையும்போது மிகத் தெளிவாகச் சில வரையறைகளையும் நாம் செய்து கொள்வது அவசியமாகிவிடும்.ஏனெனில், மனிதர்கள் வர்க்கமாக பொருள்களைக் கவர்ந்து தமது வாழ்வைக் கட்டிவைத்திருக்கும் தருணத்தில் ஒவ்வொரு வர்க்கமும் தத்தமது வர்க்கத் தளத்திலிருந்து மற்றையத் தளத்திற்குக் கல் வீசுவது இதுவரை நாம் காணும் தொடர்ச்சிதாம்.



இக்கட்டுரையே,தீபம் தொலைக்காட்சி"கேள்வி நேரம்"உரையாடலில் கீரன் முன்வைக்கும் அல்லது அவர் குரலூடாக முன் தள்ளப்படும் ஒரு வரலாற்றுப் பழி குறித்தான பார்வையை எப்படிப் புரிவதென்ற முயற்சியின் நறுக்கே!


"சாதியம்-தீண்டாமை" எனும் கருத்துப் பிரிப்பில்(சமூக உளவியல்) இயக்கப்பாட்டை மனோவியற்றளத்தில் பண்பாட்டு ரீதியாகப் புரிய வற்புறுத்துகிறார்.அவ்வளவு இலகுவாக இதைப் புரிவது கஷ்டமான காரியம்.எனினும்,முழுமொத்தமிழ்பேசும் மக்கள் மீதான இனவாத ஒடுக்குமுறை நிகழும் ஒரு நாட்டில் இதை எதிர்கொள்வது எப்படி?என்ற சிக்கலை எல்லோரும்தட்டிக்கழித்துப் புரட்சி பேசுகிறோம்.பண்பாட்டு இடைவெளிகள் பூர்ஷ்சுவாக் கருத்தாக்களது வழியுள் அவர்களது நலன்களைத் தக்கவைக்கும் முயற்சியில் அது நிலைபெறத் தொடங்கும்போது எஞ்சியது பூர்ஷ்சுவாப் பண்பாட்டு ஒடுக்குமுறைதானே?


ஈழத் தமிழ்ச் சமுதாயத்தை-குறிப்பாக யாழ்பாணச் சமூக அமைப்பின் அரசியல் தன்மை இயல்பு,வர்க்கப் பிளவுகள்,முதலியவற்றை ஒருவர் தனக்குக் கிடைக்கக்கூடிய தரவுகளைக் கொண்டு ஆய்வு செய்ய முனைதல் இதுவரை சாத்தியமாகி வருகிறது.இது மிக ஆபத்தானது.இந்த முயற்சி நம்மை நடுத்தெருவில் நிறுத்தியிருப்பது இன்றைய மெய்ப்பாடு.ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தைப் பற்றிக் கற்றுக் கொள்வோரையும்,அவர்கள் மத்தியில் அரசியல் வேலைகளைச் செய்பவர்களையும் உண்மையை அறியுமாறு இன்றுவரை தூண்டும் ஒரு அரசியல் சமூக விஞ்ஞானத் தூண்டலில் இத்தகைய கீரன் போன்றவரது கருத்துக்கள் எப்பவுமே தட்டிக்கழிக்க முடியாதவை.ஆனால்,இக் கருத்துக்களின்வழி கீரன் நிலைநாட்ட விரும் பேரினவாதத்துக்கு துணைபோகும் அரசியல் அனைத்தையும்விடப் பயக்கரமானது-ஆபத்தானது!அதைக் கீரன் திட்டமிட்டே செய்வதால் கீரன் முன்வைக்கும் சாதியப் பிரச்சனைகள் அவ்வளவு இலகுவாக நீர்த்துப் போக முடியாதவை என்றே நான் கருதுகிறேன்.


தனித் தமிழ்அரசு-ஆளுதல்:


"ஆண்ட பரம்பரை ஆளத் துடிக்குது"


இந்தச் சமூக உளவியலையுடைத்துப் புரியும்போது சில நூற்றாண்டாக மூன்றாம் உலகத்தில் நிலவிய காலனித்துவக் கட்டத்தைக் குறித்துச் சில புரிதலுக்கு வந்தாக வேண்டும்.காலனித்துவ வாதிகளது கருத்தாளுமையானது
தமிழ்ச் சமுதாயம் தன்னைத்தான் ஆளுவதற்குத் தகுதியற்றதென்ற தந்திரோபாயத்தோடு-அந்நியர்களால்- இதுவரை வரலாறுற்று ரீதியாக ஒடுக்கப்பட்டு,தனக்குள்ளேயே அது உள்ளியல்புக் காலனித்துவப் பண்புகளை கொண்டிருக்கிறது.இத்தைய உள்ளகக் காலனியத் தொடர்ச்சியின் வழியாகவாவது தமிழ் மேட்டுக் குடியின் ஆளும் மனவிருப்புப் "பூர்த்தியாகும் மனநிறைவு" தொடர்ந்து தனக்குள் மெலியவர்களைக் கொத்தடிமையாக்குவதில் ஒருவித ஆளுமை வெளிப்பாடாக உருப் பெற்றிருக்க வாய்ப்புகள் வரலாற்றில் அதிகமாகவே தென்படுகிறது.இதைத் திட்டமிடப்பட்ட ஆய்வுகளின் வழி நிறுவது கடினமாயினும்,மனோவியற் புரிதலில் வெட்ட வெளிச்சமாக வகுத்துக்கொள்ள முடியும்.


தனியுடமைச்சமுதாயத்ததுள்,நிலவுகின்ற பொருளாதார அமைப்புக்கேற்ற நலன்களும்,அதையொட்டிய ஒடுக்கு முறைகளும் அரசியல் அதிகாரம் என்பதற்கு ஒரு அவசியமான தேவையாகும்.அதன் தொடர்ச்சியுள்தாம் வரலாற்றைத் தொடர்ச்சியாகப் பதிவதும்,கூடியவரை-சாத்தியமானவரை விஞ்ஞானபூ ர்வமாகப் புரிவதும் நேரிடும்.ஆனால், அந்த அதிகாரத்தை மக்கள் தொகுதியிலுள்ள எந்த வர்க்கம் கைப்பற்றுகிறதென்ற போக்கில்தாம் அது உண்மையாகத் திரிவின்றியுள்ளதாவென்று தீர்மானிக்க முடியும்.நமது சாபக்கேடு நாம் அதிகாரத்தை வெறும் மொழிசார்ந்த மதிப்பீடுகளால் போட்டுக் குழப்பி எமது மக்களை இணைக்க விரும்புகிறோம்.அங்கே, தமிழ் மக்களைச் சாகடித்து,அவர்கள்தம் வரலாற்றையே தாம் விரும்பும்போக்கில் சிதைத்தவர்கள் நமது வீரதீரத் தலைமைகளும் அவர்கள் வழி சிந்தித்த புத்திசீவிகளும்தாம்.



காலனித்துவத்துக்குப் பின்பான நவ காலனித்துவ-பல் தேசிய மயக் காலகட்டத்து இந்த அமைப்பைத் தூக்கி நிறுத்தும் கருத்தியல் தளத்தை முன்னெடுக்கும் நிறுவனங்கள், மிகப் பெரும் பலம் பொருந்திய தளத்தை நமக்குள் பண்பாட்டு ரீதியாகவும்,அறிவியல் ரீதியாகவும்,சமூகவுளவியற்றளத்திலும் மிக ஆழமாக வூன்ற வைத்துள்ளன. இவற்றைக் கடந்து நாம் இந்தப் பாழ் வரலாற்றை விடுவிப்பது என்பதைவிட புதிய பாட்டாளிய வர்க்கப்பண்பாட்டை,பன்மைத்துவ சிறு அடையாளங்களை,பொருந்தாத் தன்மையிலான சிறு சமூக அமுக்கக் குழுமங்களாக உருவுறும் வேறுபாடுகளை இணைக்கும் பண்பாட்டைப் படைப்பவர்களாக ஒருமைப்பட வேண்டும்.ஏனெனில் , வரலாற்றைப்படைப்பவர்கள் உழைக்கின்ற மக்கள் கூட்டம்தாம்.அவர்கள் இந்தியப் பார்ப்பனப் பண்பாட்டு ஒடுக்குமுறைக்குப் பலியாகும் சாதிய வேறுபாடுகளால் பிளவுண்டு போகமுடியாது.கீரன் இத்தகைய பிளவை மிக வன்மமாக வற் புறுத்துகிறார்.இதற்குப் "பாகிஸ்த்தானைப் பிரித்தது ஜின்னாதாமென"ப் புலம்பித் தனது அரசியல் ஞானத்தை வெளிப்படுத்துகிறார்.அகண்ட பாரதம்,ஆபத்தானதெனக்கொள்ளும் நவ காலனித்துவம் இப்படி, காந்தி-ஜின்னா வழியூடாக வேறு வரலாற்றைச் சொல்ல வைத்திருக்கிறது.அதை,வாந்தியெடுப்பது அனைவருக்குமான விடுதலையைத் தந்துவிடப் போவதில்லை!


பாண்பாட்டு ஒடுக்குமுறை வரலாறு:



வரலாறென்பதைத் தனிநபர் திருத்தலாக்கிவிட முடியாது இல்லையா கீரன்?


அங்ஙனஞ் செய்யப்பட்ட சிங்கள வரலாற்றுப் புனைவுகளின் இன்றைய இழி நிலையை நாம் ஆளும் வர்க்கத்தின் குருதி தோய்ந்து பற்களினூடாகப் பல்லிளிப்பதைக் காணமுடியும்.எனவே, புனைவுகள்,புரட்டல்களைப் பண்டுதொட்டுச் செய்த வரலாற்றுக் காரணங்கள்,தேவைகள் இன்றும் நிலவுவதை இனம் காண்பதே சாலச் சிறந்தது.அதையொட்டியே பாரிய அறிவுத் தேடலையும்,குறிப்புகளையும் சமூகப் பொறுப்போடு செய்யவேண்டும்.சாதியத்தை வேரறுப்பதற்கான முதற்படி இங்கிருந்துதாம் தொடங்க முடியும்(இதைவிட்டு இனவாதத்துக்கு எதிரான எழிச்சியைப் போராட்டத்தைக் கூறுபோடுவது அல்ல என்பதையும் இதில் புரிந்தாகவேண்டும்!).


அங்ஙனம் செய்யாத நிலையை எய்வதற்காக தமிழ்ச் சமூகத்தின்உரிமைகளைச் சிதைக்கும் காரியத்தில் புலம்பெயர் தலித்துவக் குறுக்கல் வாதம் தொடர்ந்து தன்னை விருத்திக்கிட்டுச் செல்கிறது.இதைக் கீரன்போன்ற இலங்கைச் சிங்கள அரசுக்குப் பலிபோன கடாக்களது வழி புரியும்போது,இவர்கள் குறுக்கே நின்று தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணய உரிமை மீது கல்லெறிவதைக் குறித்து விவாதிக்க முடியுமேயொழிய இவர்களிடமிருந்து உழைக்கும் மக்களது வரலாற்றை விடுவிப்பதென்பது மிகை மதிப்பீடு.


ஒவ்வொரு அரசியல் முன்னெடுப்பிலும்-போராட்டப் பாதையிலும் முதலில் புரியப்பட வேண்டிய அரசியலறிவானது நாம் யார்?எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.இங்கே வர்க்க ஒடுக்குமுறை எந்தத் தளத்தில்,எப்படி நிகழ்வதென்பதே!


இதைக்கடந்த எந்த உறவுகளும் மானுட சமூகத்துள் நிலவ முடியாதென்பதற்கு இன்றைய பெரு மூலதன நகர்வில் ஐரோப்பிய அரசுகள் செய்யும் லிபியா மீதான அழிவு யுத்தம் நல்ல உதாரணமாக முடியும்.இதையுங் கடந்து "கிரேக்க அரசுமீது சுமத்தும் அழுத்தம், கிரேக்க உழைக்கும் வர்க்கத்தின் மீதான அதீத ஒடுக்குமுறையை ஜேர்மனிய டொச்சு வங்கி பிரேரிக்கும்போது" அந்தப் பிரேரணையை ஜேர்மனிய அரசு தனது நிகழ்ச்சி நிரலுக்குள் உள்ளடக்கிறது.இவையெல்லாம் வர்க்கங் கடந்த அரசியலை வற்புறத்தவில்லை.இதைக்கடந்து தலித்துவ அரசியலைப் புரிந்து கொள்வதில் வரலாற்று ஒடுக்குமுறையென்பதை முன் நிறுத்துவதில் தமிழ்ச் சமுதாயத்தில் சமூக வளர்ச்சி-சிதைவுகுறித்த புரிதல் கவனித்தில் இருத்தப்படாது தட்டிக் கழிக்கப்படுவதன் உள் நோக்கம் என்னவாக்க இருக்கமுடியும்?


தீபத்தின் கேள்வி-நேரம் உரையாடலில் கீரன் முன் வைக்கும் சாதியப் பிரச்சனை,அது குறித்து"ஆய்வு"ரீதியான உரையாடலுள்"சாதியம் இருக்கிறது-தீண்டாமை விலகுகிறது"என்ற புள்ளியில் மீளவும் தமிழ்ச் சமுதாயத்திள் மொத்த சமூக வளர்ச்சிக் கட்டங்கள் குறித்துச் சரியான புரிதலை மறுப்பதில் முழுமொத்த இந்தியத் துணைக்கண்டத்தில் நிலவும் சாதியவொடுக்குமுறையைத் தமிழ் மக்களது விடுதலைக்குக் குறுக்கே நிறுத்துகிறார்.யாழ்ப்பாணம் என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பிரிதியீடாகும் ஒரு குறு நிலப்பரப்பு.அதைத் தாண்டிய சாதியவொடுக்குமுறை முழுமொத்தத் தென்னாசிய இனக் குழுமங்களுக்குள்-தேசிய இனங்களுக்குள் தொடர்ந்து நிலைப்படுத்தப்படும் பண்பாட்டின்மீது வைக்கவேண்டியதும்,அந்தப் பண்பாட்டைத் தூக்கி நிறுத்தும் பொருளாதாரத்தைக் கேள்விக்குட்படுத்தாது,ஒரு இனத்தின்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட சிங்கள அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்தும் கீரனது அறிவின்மீது ஆணி அடிப்பதைத் தவிர நம்மால் வேறென்ன செய்ய முடியும்?


சாதியத்தின்மீத கீரனது பார்வையை இந்தியாவுக்குள்ளும்,சிங்களச் சமுதாய அமைப்புக்குள்ளும் பொதுமைப்படுத்திப் பார்த்தோமானால்
கீரன் சிறுபிள்ளைத் தனமாகவும், அப்பாவித்தனமாகுவம் சிங்கள அரசுக்கு முட்டுக்கொடுக்க அல்லது அதை நியாயப்படுத்த முனைந்து தனது அறிவிலப் புலம்பலை முழுமொத்த தமிழ்பேசும் மக்களுக்கெதிராகச் செய்து சிங்கள இனவாத முன்னெடுப்புகளைத் தொடர்ந்து நியாயப்படுத்துகிறார்.


யாருக்கு யார் குரலிடுவது?:


யாரு யாருக்குக் குரல் கொடுப்பது,யாருடைய குரலைப் பதிவிடுவது?


பாடசாலைகளில், இலங்கை மாணவர்கள் கற்கும் வரலாற்றுக் கல்வி உண்மையில் வர்க்கஞ் சாராத முழுமொத்த மக்களின் வாழ்வியற் தொடர்ச்சிகளைப் பதிந்துள்ளதா? இந்தக் கல்வியைக் கையில் வைத்திருக்கும் இலங்கை அரசு குறித்தும், அதன் சாதியப் பிளவு அரசியல் குறித்தும் கண்டிய-கரையோரச் சங்களச் சமுதாயத்தின் சாதிய வேறுபாட்டிலிருந்து புரிவதும் அவசியமில்லையா?கொய்கமச் சாதியத்தின் வரலாறு என்ன?அதன் பொருளாதார ஆதிக்க நலன்கள் எவையாக இருக்கின்றன கீரன்?


அதிகாரத்தை நிலைப்படுத்தியவர்கள் தொடர்ந்து தமது இருப்பை நிலைப்படுத்த எடுத்த-எடுக்கும் முயற்சி யாருக்கு எதிரானது?யாரை ஒடுக்கிய இராணுவ முன்னெடுப்புகளை வரலாற்றுப்படமாகவுள்ளது?போர் வரலாறு என்றும் முழுமொத்த மக்களையும் சார்ந்த வரலாறாக இருப்பதில்லை(வரலாறு கண்ட யுத்தங்கள் யாவும் வர்க்கங்களுக்கிடையிலானது-மார்க்ஸ் /The history of all hitherto existing Society is the history of Class Struggles).அஃது, தொடர் வருத்தல்களை ஒரு இனத்துக்குள்ளேயே வற்புறுத்தி அந்த இனத்துள் கணிசமானவர்களையொடுக்கி வருவது. வரலாற்றில் இயங்கும் சக்திகளைச் சரியான வர்க்கப்பார்வையின்றி மதிப்பீடு செய்வது கும்பல்ல கோவிந்தாப்போடுவதாக இருக்கும்.இதுதாம் சொல்கிறது நமது தேசயவாதம் "தற்காப்புத் தேசியவாதம்"என்று.


இப்படியும்,இதற்கு மேலும் அது கடைவிரிக்கும்.ஆனால்சிங்களப் பேரனவாதத்தையும் அதன் வரலாற்றுப் புரட்டுக்களையும் மறுத்துப் பேசும் தகுதியைத் தமிழ் அறிவாளிகள் இழந்ததென்பது சிங்கள அதிகாரத்தால் அல்ல.அது திட்டமிட்ட தமிழ்வரலாற்றுக் குருடாகளால் முன்னெடுக்கப்பட்டதும்,அதைப் பிழைப்புக்காக அரசியலாக்கிய அந்தப் பெருங்குடிப் பிறப்புக்களாலுமே.


என்றைக்குமே ஆதிக்கத்தை நிலைப்படுத்துபவர்களின் ஊடகங்களும்,அவர்களின் பரபலங்களும் தம்மிலும் கீழானவர்களுக்கு எந்த வகை உதவிகளைச் செய்துள்ளார்கள்?


சாதியத்தை; துடைத்தெறியும்-சமூக மேம்பாடு என்ற திசைக்கும் நிலவும் மறைமுகமான அவமானப்படுத்தல்கள்-தொடர்ந்தும் சாதியத்தை நிலைப்படுத்தும் அடையாளங்கள் யாவும் ஒரு முனையில் இன்னொரு வகை அகவொடுக்குமுறையைச் செய்கிறதேயொழிய பண்பாட்டு மாற்றத்தைக்கோரவில்லை!அத்தகைய நிலையில்,தொடர்ந்தும் அவர்களது கால்களில் விழுந்தொழும்வுவதற்கான தளங்களையும்,வலைகளையும் உதவி-மனிதாபிமானம் என்ற முகமூடிக்குள் ஒழிந்தாற்றும் கபடம் அறியத் தக்கதுதாமே?


இதிலிருந்து தலித்துவக் கோரிக்கைகளைப் பிரித்துப் பார்க்க முடியுமா?


இத்தகைய ஒடுக்குமுறையாளர்களிடம் எந்தச்"சாதகம்-பாதகம்"என்ற அளவுகோல் முன்னிலைப்படும்?அதென்ன அவர்களுக்கிருக்கும் உரிமை?தமது எஜமானர்களுக்கு வாலாட்டும் உரிமையா?அந்த உரிமைக்குள் இருக்கும் நரித்தனம் இன்னொரு இனத்தின் விடுதலையைக் குழி தோண்டிப் புதைக்குமானால் அதைக் குறித்து என்ன வகைமாதிரியான அணுகு முறையை நாம் செய்யவேண்டும்?.


பேரினவாதம் சாதி பார்த்தா தமிழ் பேசும் மக்கள்மீது குண்டிறிந்தது?தமிழ் பேசுபவர்கள் என்ற ஒரு காரணத்துக்கு மட்டுமா சிங்கள இராணுவம் தமிழ் பேசும் மக்களது சுய நிர்ணயக் கோரிக்கையைச் சிதைத்தது?தமிழ்பேசும் மக்களது விடுதலையோடு இலங்கையின் ஏனைய சிறுபான்மை இனங்களதும் விடுதலை பின்னிப் பிணைந்திருக்கவில்லையா?ஏன் தென்னாசியப் பிராந்தியத்தின் விடிவெள்ளியாகக் கூட இப்போராட்டம் இருந்திருக்காதா? இதையுணர்ந்ததாற்றாமே பாசிப் புலிகளை வளர்த்தெடுத்தனர்-புரட்சிகரக் கட்சிகளை அழித்தனர்?


ஆளும் வர்க்கக் கருத்தியல் தளத்தில் நிற்கும் கீரன்-தேவதாசன் போன்றோரிடம்இவற்றைக் குறித்த புரிதல்கள் இல்லாமலா இருக்கும்?அல்லது மறந்துவிடுகிறார்களென்றோ கூறுவதற்கில்லை!


ஒவ்வொரு வர்க்கமும் தன் தன் வர்க்க நலனுக்குச் சாதிய நலனுக்கொப்பவே காரியமாற்றும்.இது அனைத்து மக்கள் கூட்டத்திடமும் நிலவும் விஷயம்.இதை இப்படியும் பார்க்கலாம்.ஈழத்து வடமாகாணத்தில் 1966-1970 காலக்கட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களால் செய்யப்பட்ட ஆலயப்பிரவேசம்,தேனீர்கடை பிரவேசங்கள் போன்ற சுயகௌரவத்துக்கான வாழ்வாதாரப்போராட்டங்கள் சாதிவெறி வேளாளர்களால் எங்ஙனம் ஒடுக்கப்பட்டது என்பதும்,அந்தப் போராட்டத்தை முன்னெடுத்த தலித்துப் பெரியார்கள் எப்படி வரலாற்றில் மறைக்கப்பட்டார்கள்-ஒடுக்கப்பட்டார்கள் என்பதை ஆய்வுக்குட்படுத்தும்போது மேற்காட்டிய மனக் குமுறல் பொதுமையாக விரியவேண்டியுள்ளது.அது ஒடுக்கப்பட்ட மக்களது பொதுமையெனப் புரிந்துகொன்னவேண்டும்!ஒடுக்கப்பட்டவர்கள் அனைத்து சாதிகளுக்குள்ளும் இருப்பவர்களே!


அதாவது, ஒடுக்குமுறையாளர்களுக்கு எந்த நிறமும் இல்லை.அவர்கள் சாரம்சத்தில் பொதுவானவொரு வர்க்கக் கூட்டைக் கொண்டிருக்கிறார்கள்.இன்று ஆறுமுகத்தைப்பற்றிக் கூறுகையில் அவர் ஆசான்,நாவலர் என்று ஒளிவட்டம் உண்டு.ஆனால், அவரது மறுபக்கமோ அப்பட்டமான சாதி வெறியன் என்பதாக விரியும்.ஊருக்கு ஊர் எழுந்த "சைவப்பிரகாச வித்தியாலயம்"எனும் ஆரம்பப்படசாலைகளுக்கூடாக நாம் காணும் சமூக யதார்த்தம் என்ன?


இது தாழ்த்தப்பட்டவர்கள்-ஒடுக்கப்பட்டவர்கள்-உழைப்பாளர்களது பிள்ளைகள் அரச கலவன்பாடசாலையுள் உள்வாங்கப்பட்டதற்கு எதிர்க்கும் முகமாக எழுந்ததா இல்லையா? இந்த ஆறுமுகத்திடம் இருந்த ஆதிக்க-மேலாதிக்க மனம் எந்தக் கருத்தால் வடிவமைக்கப்பட்டது? தனியே சாதியத்திமிரா அல்லது வர்க்க நலனா?


ஒரு தேசிய இனமெனும்பொழிவு, புலப்படும்சிந்தனை :


எவ்வளவுதாம் நாம் முயன்றாலும் தமிழ்பேசும் உலகம் ஒரு தேசிய இனமாக இருப்பதற்கான ஒழுங்கமைக்கு குறைவானது.தமிழ் பேசுபவர்களை பல் தேசிய இனங்களாக இலங்கைக்குள்ளேயே நம்மால் பார்க்கமுடியும்.எனவே, அகிலவுலகத்துத் தமிழரெனும் பெருங்கூட்டத்துள் எமது தொடர்ச்சியை நிலைப்படுத்துவது அவ்வளவு இலகுவல்ல.அதுவும் அவசியமற்றது.ஏனெனில், நம்மைத் தொழிலால் ஒன்றுபடுத்திவிடமுடியும்.மொழியால் கூறிடப்படும் மானுடம்,தன் தொழிலால்-படைப்பால் ஒன்றுபடும்போது அங்கே ஒருமித்த மக்கள்பலம் தன்னையொடுக்கும் பெரு நகர்வை மிக இலகுவாக-வெளிப்படையாகப் புரிகிறது.இங்கே ஒடுக்கப்படும் அந்தக் கூட்டம் ஒடுக்குபவர்கள் தத்தம் இனங்களுக்குள்ளேயும்,வெளியேயும் கரங்களை இணைப்பதைப் புரிந்திட வாய்ப்புண்டாகிறது.இதுவன்றி நமது மானுடத் தொடர்ச்சியைக் குறுக்கி இனம்சார்ந்த-மொழிசார்ந்த அலகுகளுக்குள் இனம்காணும்போது, நிகழ்வது வெறும் உணர்வு நிலைப் புள்ளியில் தங்கும் பெருமிதம்தாம்.அங்கே செயற்கரிய விய+கம் அடிபட்டுப்போகிறது.


எதிரியும் நமது இனம் எனும் பச்சோதாபம் எம்மை விடுவிக்கப் பங்கஞ் செய்து படிமத்துள் தள்ளும் நம்மை.


கோழைத்தனமும்,இரண்டாம் நிலைச் சமூகம் எனும் உணர்வு நிலை எங்ஙனம் தொடர்ச்சியை வற்புறுத்தி இதுவரை நம்மைத் தொடர்கிறது.தனிநபர் வழிபாடு,ஏன்-எதற்கு என்ற கேள்வி ஞானமின்றிய கட்சி-இயக்க விசுவாசம்,நக்கிப் பிழைப்பதே சாலச் சிறந்ததாக்கி வைக்கப்பட்டுள்ள அரசியல்,சினிமாத்தனமான கருத்தாடல்,தனிமனிதவாதம்.இவைகளெல்லாம் ஓட்டுமொத்தமாகவுள்ள ஒரு சமூகம் அதிலிருந்து விடுபடும் பண்பாட்டுப் புரட்சிக்கு எவர் தடைக்கல்லாக இருக்கிறார்கள்.அகவிடுதலையென்பது புறவிடுதலையோடுமட்டுமே சாத்தியமாகும்போது,அகத்தைப் புறத்திலிருந்து பிரித்தெடுதுப்பார்த்தல் அகவயக் குறைபாடுதாமே?


எல்லைகளை விடுவித்துப் புவிநிலைசார் விடுதலையை ஒருபோதும் சாதிக்க முடியாது.எங்கே தேசியத்தன்மைகள் அழிகப்பட்டனவோ அங்கே அந்த அலுகுகள் மீளக் காக்கப்பட்டு,அது சார்ந்த பொருளாதாரச் சுதந்திரமின்றி புவிசார் விடுதலை கனவிலும் சாத்தியமில்லை.இது எல்லா வகைப்பட்ட விடுதலைக்கும் புறநிலையாக இருக்குமொரு முன் நிபந்தனை.அதை மறுதலித்தபடி நாம் சொல்லும்-செய்யும் விவாதம் உட்புறத்துள் ஊனத்தைக்கொண்டபடி கருத்து நிலையில் தோல்விக்கான காரணங்களை வேறொரு பொருளில் பேச முற்படும்.இதைத்தாம் இப்போது கீரன் மற்றும் தலித்துவ மேம்பாட்டு முன்னணி வகையறாக்கள் பேசுவதில் முடிந்துள்ளது!


இன்றைய மேலாண்மைச் சிந்தனையானது வெறும் கருத்துகளால்மட்டும் ஆனதில்லை.அது அவர்களது பொருட்களிலும்,மருத்துவ மற்றும் விஞ்ஞானத்திலும் மெருக்கேற்றப்பட்டு நம்மைத் தாக்குபவை.இன்றைய வர்த்தகக் கலாச்சாரமென்பதை எங்ஙனம் மதிப்பிடுவது?


இதன் போசாக்கென்பது மூன்றாம் உலகத்தை ஏப்பமிடுவதிலும்,நுகர்வடிமையாக்குவதிலுங் மையங் கொள்கிறதென்பது உண்மையா?


அப்படியாயின் இதற்கெதிரான போராட்டம் எல்லையைத் தூய்மைப்படுத்துவதோடு நின்றுவிடுமா அல்லது எமது வரலாற்றைப் புரட்சிகரமான முறையில் உந்தித் தள்ளி மாற்றை வைத்துப் போராடுவதில் நிசமாகுமா?


இலங்கையை உதாரணமாக எடுத்தால் நமது சிந்தனையை நாம் நமது நோக்கிலிருந்து இதுவரை முன்னெடுத்தபோதெல்லாம் எமக்கு எதிரான ஆதிக்கக் கருத்துக்கள் மெல்லத் தாக்குகின்ற வரலாறு வெறுமனவே நம்மை வந்தடையவில்லை.அவை நமக்குள் இருக்கும் குறை வளங்களாலேயே (சாதியம்-பெண்ணடிமை,மத வேறுபாடு,மொழி வேறுபாடு-பிராந்திய வேறுபாடு இத்தியாதி) முன்னெடுக்கப்படுவதை நாம் எதிர்கொள்ளும் இன்றைய யதார்த்தத்தில்- அதை மேன்மேலும் பலவீனப்படுத்தும் எதிர்ப்பியக்கம், அந்த மேலாதிக்கத்தைச் சார்ந்திருக்கும் தருணத்தில் எங்கே செல்லும்?


கீரன் பேசும் சாதியறுப்புக்கான கருத்துக்கள் எந்த வகையிலும் சாதியத்தை வேரறுப்பது அல்ல. மாறாக, அது இலங்கைப் பாசிச அரசின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ற-அவர்களால் தகவமைக்கப்பட்ட கருத்தாடலே.இது, ஒருபோதும் தலித்துவ மக்களுக்கான விடுதலையையோ அன்றி முழுமொத்த தமிழ்பேசும் மக்களது சுய நிர்ணய உரிமைக்கோ எந்த விதத்திலும் உதவாது, அடக்கு முறையாளர்களது தயவுக்காக நக்கிப் பிழைக்கும் கருத்தாடலாகவே காணப்படும்.இஃது, காலப் போக்கில் நிகழும்போது இத்தகைய தலித்துவக் கோரிக்கைகள் காணாமற் போவது மட்டுமல்ல,யாருக்காகப் போராடுவதாகச் சொன்னார்களோ அந்த மக்களே தம்மை ஒடுக்கு முறையாளர்களது வலையிற் சிக்க வைத்து மேலும் வதைப்படுவர்.



ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
26.06.11

Sunday, January 30, 2011

தமிழக மீனவர்கள்-சிங்களப்படைத்தாக்குதல் :

தமிழக மீனவர்கள்-சிங்களப்படைத்தாக்குதல் : புரிதலும்,உரிமைகளும்!

நாம் பிரதிகளது தன்னிலைகள் குறித்தும், அதன்மீதான சுயதம்பட்டச் சீரலைச் சிதறல்களிலும் மாட்டுண்டுபோனோம்!உயிர்நிலைக் களன்களில் குதறப்படும் ஏதோவொருகணம் நோக்கிய தன்னிலைக் கோரல்களிலும் எந்தத் தோதானவொரு பொருத்தப்பாடுடைய தேடுதலைத்தானும் பகிர்ந்துகொள்ளத்தானும் எவருக்குமே துப்பில்லை.இருந்தும், பெருங்கதையாடற் புலமையும்,அதன் உள்ளார்ந்த நுட்பநோக்கும் பெருகக்பெற்றதான சுய புலம்பலே சினங்கொள்ளதக்கது.

மனித எச்சங்கள் மீது ஏறி நின்று, நோக்கப்படும் புதியதை நோக்கிய கட்டமைப்புகள் யாவுமே, வாழ்பவர்களக்கும் மண்ணோடு அள்ளுப்பட்டவருக்குமான தொடர்ந்த போராட்டமாகவே நிலைகொள்ளும் புதிய பொருளாதார ஆர்வத்தின்மீதான பொருத்தப்பாட்டைச் சுட்டுவதற்கு மேலாக, இந்த மீனவர் பிரச்சனையானது சாதராணச் சராசரி மீன்பிடி உழைப்பவர்தம் வயிற்றுப்பாட்டுக்கும்,சம்மாட்டி வடிவமாகப் புரிந்து,உணரப்பட்ட பெரு தொழில் வணிகக் கட்டமைப்புடைய தொழில்முறை ஜந்திரப்படகு கட்டும் "பெரு" வணிகத்துக்குமான வர்க்க உழைப்பு நிலைக் களன்கள் பிரத்தியேகமாகவேனும் புரிந்துணரப்படுவேண்டும்.

சாதாரணத்துக்கும்,அசாதாரணத்துக்குமிடையிலான வித்தியாசங்களை இவர்களது உழைப்பின்மீதான"பலம்-பலவீனம்"என்பதை பொருள் வளம்-வறுமைப்பட்ட ஏழை மீனவர்கள் எனும் தளத்தில்வைத்து, அணுகுவதற்கானவொரு புள்ளியைச் சுட்டியிருக்கிறான் மயூரன்.இது பரவலாக உணரப்பட்டதாகினும் அதைப் பேசுவதற்கான சூழல் மறுக்கப்பட்டிருந்த தேசியவாதக் கோரிக்கைகளது தார்ப்பாரில் எல்லாம் பூச்சியமாகக்"கருவாடு கரைந்து ஆணத்துக்க"என வாசிக்கப்பட்டது.



இப்போது, இதன் ஆணிவேரைத் தொட முனைதல் வரவேற்கத் தக்கது.கடலுக்குச் செல்பவர்கள்மீதான அத்துமீறிய மறுப்பைக்கொண்டியக்கிய தமிழ்க் கொழும்புசார் வர்த்தகமானது இராணுவத்துக்குக் கப்பஞ்செலுத்தியபடி ஜப்பானிலிருந்து ரின் மீன் இறக்கிக்கொள்ளையடித்த தேசியவிடுதலைப்போர்ச் சூழலொன்றும் பலரால் புரிந்துகொள்ளப்பட்டதே.

பெரு வணிகமானது கப்பல் கட்டி,ஏழை மீனவனது வலையறுத்துக் கடற்கொள்ளையிடுவதைத்"தமிழ் மீனவன்"என்ற பொதுப் பதத்துள் உள்ளிழுத்து விவாதிக்கக் கூடியதாக மாற்றிய அரசியலையும் உடைத்துப்பார்க்க வேண்டும்.

எந்தத் துவித-துருவ எதிர்மறைகளிலுமேனும் இதைவைத்த சொற்பப் புரிதப்படானது குதறப்படும் நலிந்த-விளிம்பு நிலைகளை நோக்கிய பலம்தேடும்,பலமளிக்கும் வரைவுகளைத் தந்துவிடுவதான தேடுதலும்,ஒத்திசைவும் அந்தக் கோரிக்கைகளுக்குள் ஊசாலாடும் வயிற்றுத் தேவைமீதான அடிப்படை உரிமைப் பிரச்சனையாக ஏற்றுக்கொள்ளும் நிலையுள்,கொல்லப்படும் சாதரண தமிழ்நாட்டு மீன்பிடித் தொழிலாளியையும் இந்த அத்துமீறிய வர்த்தகக் காழ்புணர்ச்சி கொல்வதைத்தானும் தட்டிக் கழித்துவிட முடியுமா?

தென் கிழக்காசிய மீன் பிடித் தொழில்மீதான ஜந்திரப்படகு-ரோலர் வைத்துழைக்கும் பெரு மீன்பிடித்தொழிலுக்கும்,சிற்றுழைப்பு வடிவிலான மரபுசார் மீன்பிடித் தோணிக்குமான முரண்பாடுகள்,"வசதிபடைத்த அரசியற் செல்வாக்கு-மாபியாக் கட்டமைப்பு" என்ற தளங்களை அண்மித்துப் பார்க்காத எந்தத் தீர்ப்பும் சாதாரண மீன்பிடித் தொழிலாளிக்கு எதையும் விட்டுவைக்காது.

கடலில் சாகும் தமிழ்நாட்டு மீனவன்,பெரு வணிக-சம்மாட்டிக்குக் கீழ் பணிசெய்பவனாகினும் அந்தச் சாவைப் பெருவணிக ஆதிக்கத்துள் வைத்து அணுகுவதானது அத்தகைய நலிந்த உழைப்பாளியது இருப்பை மறுப்பதில் முடியும்.இந்தச் சிக்கலைப் புரிதலென்பது,இலங்கை-இந்தியக் கடல் எல்லை-உரிமைப் பிரச்சனையுள் வைத்து அரசியலாக்கஞ் செய்வதிலும் பார்க்க, மீன்பிடித் தொழிலுள் ஆதிக்கஞ் செய்யும் பெருவணிக-ரோலர்களது அத்துமீறிய கொள்ளை-மாபியாத் தனம் என வரைந்துகொண்டு,சாதாரண மீனவன் அதுள் தொழிலாளியாக-அடிமையாகப் பணிபுரியும் களத்தை அங்கீகரித்தால்"சாவு"சாதாரண-நலிந்த வர்க்கத்துக்கே நேர்கிறது.இதை மறுத்து ஒதுக்க எந்தத் துவித எதிர்மறைப்(சிங்கள இனவாதம்-தமிழன் இத்தயாதி புரிதல்வகையறா) புரிதலும் கைகொடுக்காது.

சம்மாட்டிகளதும்,அவர்களது எல்லைகடந்த வணிக வட்டத்தினதும்கடல்வளக் கொள்ளைக்கும்,சாதரணக் கரையோர மக்களது அடிப்படை உழைப்பின்மீதான ஆதிக்கத்துக்கும் இடையிலுள்ள இந்தச் சிக்கலானது, சிங்களக் கடற்படையினது மரபுசார்ந்த புரிதலுள்(பங்கு-கமிசன்)ஏற்படும் சிக்கலெனவும் விரிவதை எவரும் புரிந்திருக்க முடியுமாவெனவும் சந்தேகமே!

எனவே,தமிழக மீனவர்களது கொலைகளது அரசியலூக்கம் வெறும் இனவாரியான புரிதலையுந்தாண்டி வர்த்தக நலன்கள்-உழைப்புச் சந்தை,எனவிரியும் முனைகளில் புரிந்துணரப்பட்டுத் தீர்க்க வேண்டிய தேவையைப் பரந்துபட்ட மக்கள் தாம்சார் வலயத்துள் முன்மாதிரியாக அணுகுவதென்பது, அரசியல் கட்சிகளை விலத்திவைத்துப் பெருவணிகத்தின் மாபியாத் தனங்களைப் புரியந்தருணங்களே.அங்ஙனம் செயற்படும்போது இதுள் அரசுக்கும் பெருவணிக-சம்மாட்டி முறைகளுக்கும் உள்ள நீண்ட தொடர்புகள் அந்நியப்படுத்தப்பட்டுப் புரிய வாய்புகளுண்டு.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
30.01.11

Friday, January 28, 2011

பெற்றோலிய டொலர்க் கொள்ளை!

துனிசியா,எகிப்த்து: இன்னும்பல தேசத் தலைகள் உருளும்!

அரபு தேசங்களில் நடப்பது மக்கள் புரட்சியின் பெயரால் பெற்றோலிய டொலர்க் கொள்ளை!இப்படி ஒரே வார்த்தையில் போட்டுடைக்கும் தீர்ப்புக்கு,விரிவாக எழுதப்படும் ஒரு நீண்ட புலம்பாதிக்கக் குஞ்சம், சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தனது துணிவுகொண்டு...

இந்த உலகம் மிகக் கெடுதியாவும்,சடுதியாகவும் கருத்தைப் புனைவதில்லை!அது மிகத் தந்திரமாக புரட்சி,ஜனநாயகம்-நல்ல வேஷமிட்டு,மக்களைக் காப்பதாகவும்,அவர்களின் நலனில் அக்கறையுள்ளதாகவுமே கருத்துக்களைக் கொட்டுகிறார்கள்.இலக்கியம்,புனரமைப்பு,அபிவிருத்தியென்றெல்லாம் "சந்திப்புகள்"படு அமர்க்களமாக மாதந்தோறும் அரங்கேறுகிறது.

இலக்கியத்துக்கான நிகழ்வுகள்,உலகப் புகழ்பூத்த எழுத்தாளர்களது தயவோடு நடக்கின்றன.

எழுத்தின் மீதான பார்வைகள் மக்களுக்கான விடுதலை-ஜனநாயமெனும் மொழியாடல்களதுவழியிலேயே உருவகப்படுத்தப்படுகின்றன.

ஆக்க இலக்கியமென்பதை மனிதவாழ்வின் இரண்டாவது இயற்கையெனச் சொல்லப்பட்டபின் அதன் வர்க்கச்சாரம் புரியப்படலானது.நிலைத்திருக்கும் எழுத்து முனைப்புக்குள் நிறுவனப்பட்டியங்கும் அதிகாரங்கள்,அதுசார்ந்த கருத்தியற் பேணுகை உடைப்பட்டுப் புரிந்தும் போனது.எப்போதும்போலவே இந்தப் புரிதலிலும் ஒரு எல்லையிடப்பட்டது.கலைவடிவங்கள் கலையெனப்பேணப்பட்ட இயக்கப்போக்கின் விருத்தி மிக நேர்த்தியான கதைசொல்லிகளை வளர்த்தெடுத்திருந்தபோது அந்தக் கதைசொல்லிகள் பண்டமாக மாற்றப்பட்டபோது மிக முன்னேறிய தேசத்து இலக்கியவாதிகள் எல்லோருஞ் சந்தைப்படுத்தப்பட்டார்கள்.அவர்களே,இப்போது மக்கள் அனைவருக்குமான குரலுமாக ஒலிக்கத் தொடங்கினர்.அதிகாரம் இவர்களை ஊடகமாக்கியபின் படைப்பிலக்கியத்தின் போலித்தனம் அருவருக்கத் தக்கதாகியது.அது,மார்ட்டின் வல்சரையோ அல்லது குன்ரர் கிரசையோ மேல் நோக்கிய மனிதர்கள் என்பதை ஒரு நொடியில் நொருக்கி எறிந்துபோடுகிறது.



என்றபோதும்,எத்தனையோ படைப்பாளிகளை அவர்களது மனித நோக்குக்காக நாம் மதிக்கிறோம்.அவர்கள் தாம் வாழும் உலகத்தில் கால்பதித்துச் சிறந்தபடைப்புகளைச் சொல்லியிருக்கிறார்கள்.அவர்களில் எனக்கு அதிகமாகப் பிடித்தவர்கள் டோல்ராய் (Tolstoi: Anna Karenina)அனா கறினினா,டோஸ்ரோஜேவிஸ்க்கி (Dostojewskij: Der Idiot)முட்டாள்,மற்றும்அலெக்ஸ்சாண்டர் புஷ்கின் (Alexander S.Puschkin:Erzaelungen) கதைகள்.இத்தகைய படைப்பாளிகளுக்கு நிகராக எழுதிவந்தவர் அல்பேர்ட் காம்யு(Albert Camus:Die Pest,Der Mythos des Sisyphos,Der Fremde...).

"மீண்டு வரும் பொழுதொன்றில்
பொய் முகம் முறித்தெறியும்
தெருவொன்று துன்பத்துள்
திருப்பத்தில் எகிறும் எலும்புத் துண்டம்

மொய்த்திருக்கும் இலையான்களின்
குருதி நினைந்த கால்களில்
இந்த மிருகத்தின் தடமொன்று சிக்கியது
எரிந்த சாம்பலையும் அவை விட்டபாடில்லை!

கனத்த மிதப்பொன்றில்
கடுகுகளுக்குக் கால் முளைத்து
வளத்தின்மீதான பெரு விருப்பாய்
வன் பொழுதொன்றில் வர்ணமிடும் பொழிவுகள்
அமெரிக்க மாமாக்களின் நா நுனியில்."

இவர்களது தடத்தைப் புரியமுனையும்போது சாதாரணமான பரிசீலனைக்குப் போவதென்பது ஆகக் குறைந்த புரிதலென்பதையுந்தாண்டி என்ன-ஏதாகிறது எழுத்தெனுங் கேள்விக்கு விடைதேடுவதாக மாறகிறதெனக்கொண்டு மேலுள்ள வரிகளை எழுதிப் பார்த்தால் உடனே அமெரிக்கா வருகிறது.

என்னவெனச் சொல்!நீ,சொல்லமாட்டாய்.சொல்வதில்-புரிவதில் சிக்கல் இல்லை!வர்க்க உணர்வில்த்தாம் சிக்கல்.எனக்குப் புரிந்ததைச் சொல்வதில் சிக்கலெழ முடியவில்லை.என் வர்க்கவுணர்வானது எனது வாழ்நிலையால் தீர்மானிக்கப்பட்டது.


சரி.அப்படியே இருக்கட்டும்!

இங்கே, சமூகவுணர்வென்பது ஆன்மீக வாழ்க்கையில் செயற்படுகின்ற அமைப்புதானே?

சமூகவுணர்வுக்கும் தனிப்பட்டவுணர்க்கும் இடைப்பட்ட செயல்,சமூகப் பிரிவுகளுக்கும் வர்க்கங்களுக்கும் இடையில் சித்தாந்தப் போராட்டம்.கருத்துக்கள்,சிந்தனைகள்,தத்துவங்களின் பரிவர்த்தனை,அவற்றின் தோற்றம்,வளர்ச்சி,பெருந்திராளான மக்களின் மீது அது தாக்கஞ் செய்யும்.இவைகள்தானே நாம் உணரும் சமூக உணர்வு?

கொஞ்சம் அண்மிக்கிறேனா? சரி!


அல்ஜீரியனான Camus தன் "கொள்ளை நோய்"என்ற நாவூலாடாக முகமின்றி அலைகிறானே!அப்படியொரு அலைச்சல் எனக்கும் உருவாகிறது.அல்ஜீரியனாகவும் அல்லாமல் பிரஞ்சுக்காரனாகவுமல்லாமல் மனிதானக இருக்க முடியாது, அடையாளம் எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது.

இவ்வளவும் எதற்கு?:

மாறிவரும் அரேபிய உலகின் சமீபத்திய போராட்டம் என்ன?துனிசியாவினதும்,அதைத் தொடர்ந்து ஜெமேன்,எகிப்த்துவெனத் தொடரும்"ஜனநாயகபத்தியத்தின்" [democratic imperialism]போராட்டம் எதுவரை?இதற்கும்[ Global Revolution(...) ]மரபுசார்ந்த மக்கள் போராட்டத்துக்கும்[Revolution] எந்தவழிகளில் மாறுபாடுகள் இருக்கிறது?அல்லது இது மக்கள் போராட்டமாகிறதா?வர்க்கப் போராட்டத்துள் எந்த வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றும்?உழைப்பாளர்களது அதிகாரத்தை இங்கே எதிர்வுகூறமுடியுமா?

பரவலாக துனிசியாவிலோ ,எகிப்திலோ எந்தவொரு பகுதியிலும் ஆண்களே போராட்டத்துள் அதிகமாக ஈடுபடுவதும் இந்தத்திசையில் அரேபிய பெண்களது பாத்திரம் என்ன?மக்கள் போராட்டத்துள் பெண்ணின் பாத்திரம் புறகணிக்கப்பாட்டதொரு சூழலை நினைத்தே பார்க்க முடியாதிருக்கும்.ஆனால்,அரேபிய தேசத்தில் அதுவே உண்மையாகிறது.

தொடர்ந்து சமூகவுணர்வு-சமூகவாழ்வே உணர்வைத் தீர்மானிப்பதென்ற வாய்ப்பாடுகளைத்தாண்டி இந்த அரேபிய உலகத்தை உற்று நோக்கும்போது அவர்களது சமூகப் போராட்டத்தைப் புரிவதில் பலசிக்கல்கள் இருந்தன.நேற்றுவரை இதுவே எனக்குள்ள பிரச்சனையாக இருந்தது.இதை மேற்குலகங்கள் கூறுவதுபோன்று மக்கள் போராட்டமெனக்கொள்வதில் எனக்குச் சிக்கல்கள் இருக்கிறது.கிழக்கு ஐரோப்பியச்"சோசலிசச் சரிவு" போன்று இதுவும் அரோபியச் சர்வதிகாரிகளது சரிவு எனச் சொல்லும் மேற்குலகச் சிந்தனையாளர்களைத் தொடர்ந்து செல்ல முடியவில்லை!அவர்கள் தேசத்து அரசுகளும்,தலைவர்களும் போராடும் அரேபிய மக்களது போராட்டத்து ஆதரவு தெரிவிக்கின்றனர்.மக்களது போராட்டம் எனவும் பேரிகை கொட்டுவதில் அமெரிக்க வெளிவிவகார மந்திரியும்,அஞ்கேலா மேர்கலும்(ஜேர்மனிய அதிபர்) முந்திக்கொள்கின்றனர்.கூடவே,அரேபியத் தேசத்துச் சர்வதிகாரிகளுக்குக் கோரிக்கையும்விட்டு,"அமைதிவழிப் போராட்டத்துக்குக் குறுக்கே நிற்கவேண்டாம்"என ஆலோசனைகளும் வழங்கியுள்ளனர்.

எகித்துக்கு எதிர்க்கட்சித் தலைவராக அறிமுகமாகும் எல் பாறடாய் [Mohamed ElBaradei]அணுக் கண்காணிப்புக்குழுவுக்குத் தலைவராகவிருந்து ஈரான் பற்றித் துப்புத் துலக்கி அமெரிக்காவுக்கு வக்காலத்துவேண்டிய கடந்தகாலம் என் கண்களில் பட்டுத் தெறிக்கிறது! இன்றைய அவரது வருகையில் எகித்தியப் போராட்டம்,துனிசியா போன்றவற்றின் தொடரில் அரேபிய மாபியாக்கள் பலரது தலைகள் மறைந்து போகலாம்-தத்தம் தேசங்களைவிட்டு ஓடலாம்.ஆனாலும் இது மக்களுக்கான,அவர்களது அதிகாரத்துக்கான போராட்டமாக எடுக்கமுடியுமா?-என்னால் முடியவில்லை!



துனிசியவை விட்டு வெளியேறிய அதன் தலைவர் பென் அலியை இதுவரை ஜனநாயகத் தலைவராகக் கொண்டாடிய மேர்குலகக் கட்சித் தலைவர்கள் இப்போது அவனை சர்வதிகாரியெனச் சொல்லியும்,எழுதியும் வருகிறார்கள்.பென் அலியின் வெளிநாட்டுச் சொத்துக்கள் மற்றும் வெளியலுக வங்கிக் கணக்கு-பணம் முடக்கப்படுகிறது.இதன் தொடராகச் சிலவற்றைக் குறித்துப் பேசமுடியும்.

1: அரேபிய உலகத்தில் நடப்பது மக்கள் போராட்டம் அல்ல,

2: இப்போராட்டத்தினது சூத்திரதாரிகள் ஏகாதிபத்திய உலகத்தவர்கள்,

3: அரேபிய உலகத்திலுள்ள தேசங்களது "அரசுகள்-தலைவர்கள்"கவிழும்போது அதன் இடத்தில் புதிய மேற்குலகச் சார்பு அரசுகளே மீளவும் வரமுடியும்,

4: தேசங்களைவிட்டுச் செல்லும் சர்வதிகாரிகளது வெளிநாட்டுச் சொத்துடமை-செல்வம்-முலதனம் முடகத்துக்குள் வந்துவிடும்.


ஓடுகின்ற அரோபியச் சர்வதிகாரிகள் ஏலவே "மக்கள் புரட்சிக்கு"தயாராகின்ற தேசங்கள்(சவுதி அரேபியா,குவைத்,கட்டார்) நோக்கியே ஓடுகின்றனர்.மேற்கில் அவர்களுக்கு இடமளிக்கப்படவில்லை.

வழமையாக உலகச்சர்வதிகாரிகளுக்கு உறைவிடமான அமெரிக்கா இதில் கடுகளவும் இடம்கொடுக்காது ஜனநாயக வேடங்கொண்டும் உள்ளது.இதன் அச்சொட்டான அரசியல் என்னவாக இருக்க முடியுமென்பதற்காக மேலே சொன்னவற்றை மீளச் சிந்திப்பதில் கவனமெடுத்தால் நிச்சியம் இந்தப் போராட்டத்தின் திசைவழியைப் புரிந்துகொள்ள முடியும்.

குறிப்பாக அரேபியத் தேசங்களது இன்றைய போராட்டமானது "சமூக இணையத் தொடர்பாடலது அழுத்தமான பங்களிப்புடனே"யேதாம் அரேபியத் தேசத்துள் "மக்கள் எழிச்சி" எழுந்துள்ளதாகவும்,ரிவிட்டர்,பேஷ்புக்-புளக்கர் போன்ற இணையவழி ஊடகங்களே இதைச் சாத்தியமாக்கப் பெரும் பங்கு செய்ததாகவும் பலர் குரலிட முனைகின்றனர்.மக்கள் எழிச்சிக்குள்ளாகும் சமூகப் புறநிலை எப்போதுமே இஸ்லாமிய மத அழுத்தங்களால் இல்லாதாக்கப்பட்டபோதும், அரேபியவுலகத்துள் சமூகவுணர்வானது வயிற்றுப்பாட்டின் வீச்சில் ஆவேசமாகும் என்பது ஏலவே அறியப்பட்டதே. இதை என் எகிப்தியப் பிரயாணங்களில் அதிகம் நேரடியாகக் கண்டும் இருக்கிறேன்.

இத்தாலிய மாபியாக்களது "மாபியாப் பொருளாதாரம்"உலக வணிகத்துள் நாற்பது வீதம் சுழல்கிறது என்கிறார் "மாபியா டொச்சுலாந்து"என்ற நூலின் ஆசிரியர் இயூர்கன் இரொத் .மேற்குலகில் வீழ்த்தப்படும் மாபியாக்களது இறுதியிடமானது அரேபிய-ஆசியக்கடற்கரைகளாக இருக்கின்றவென்பதை நான் சார்மல் சைக் நகரத்தில் கண்டேன்.அரேபிய-ஆசியக் கடற்கரைகளில் நிறுவப்படும் பல நட்ஷத்திர ஓட்டல்களும்,உல்லாசப் பிரயாணத்துறையையும் இந்த இத்தாலிய-உலக மாப்பியாக்களே கைப்பற்றியுள்ளனர்.இவர்களால் மொய்க்கப்பட்ட அரேபிய உலகக் கடற்கரைகளது பரந்தவெளிகள் மேற்குலகத்துக்கு நல்ல வருமானந்தரும் வியாபாரமாக இருக்கிறது.என்றபோதும் இந்த அரேபியப் போராட்டத்தால் இப் பொருளாதாரத் துறை நொருங்கிவருகிறது.இதை அனுமதிக்கும் மேற்குலகம் இந்த மாபியாக்களாலேயேதாம் ஆளப்படுகிறது.என்றபோதும் ஏன் இந்தப் போராட்டங்கள் இவர்களுக்கு உவப்பாக இருக்கு?வரவேற்று,வாழ்த்துவதன் நோக்கமென்ன?

எண்ணை டொலர்[Petrodollar] :

இன்றைய மேற்குலகத்தின் இதுகாலவரையான இயக்கத்துக்கு-இருப்பு பக்கப்பலமாக இருப்பவை உலக நாணய நிதியம்,உலக வங்கி என்பது ஒருவகையான உண்மை.இந்த வங்கிகளது வாடிக்கையாளர்கள் அதிகமாக மூன்றமுலகம் எனப்படும் தேசங்களே.கடன் கொடுத்தல் வட்டியறவிடுதல் என்பதையுந்தாண்டி இவ் வங்கிகள்-நிதியங்கள் சம்பந்தப்பட்ட தேசங்களது அனைத்து இயக்கத்தையும் கட்டுப்படுத்துபவை.

இந்த உலக வங்கி,நாணய நிதியங்களுக்கு எவர்களது நிதி வந்துசேர்கிறது-எப்படி வந்து சேர்கிறதெனப் பலருக்கு புரியும்.அதிகமான வளர்ச்சியடைந்த தேசத்து அரசுகளது நிதிமூலதனமே இவற்றுக்கூடாக நகர்வதாக நாம் அறிவோமா?ஆனால்,அது கடுகளவும் உண்மையில்லை!




இன்றைய நவலிபரல் பொருளாதார நகர்வில் ஊகவணிகம் அனைத்தையுமே கட்டுப்படுத்தி விடுகிறது.உணவுப் பொருட்களையே ஊகவணிகம் விட்டுவிடவில்லை.பொருளாதாரச் சழற்சி நொடிவதும்,தேங்குவதும்,துண்டு விழுவதும்,கருப்பு மூலதனம் பணவீக்கத்தைச் செயற்கையாகப் பின்னுவதும் தொடர்கதையே.மேற்குத் தேசங்களே திவாலாகும் இன்றைய சூழலில் அமெரிக்கா கடன் பளுவிலும் 500 மில்லியன்கள் டொலருக்கு அவ்கானிஸ்தானில் தூதுவராலயம் அமைக்கிறது.தேசங்கள்,மக்கள் துவண்டுபோகும்போதும் அதிகார வர்க்கம்-ஆதிக்க வர்க்கம் தமது கைகளில் கடிக்கும் நிதிப் பளுவை மக்களது தலையிற்சுமத்துவதை ஐரோப்பியக் கூட்டமைப்பினது யூரோ நாணயத்தைக் காக்கும் நிதியீடுகளுக்குள் காணமுடியும்.அதை செவிவழி Doves G-20 பொருளாதாரக் கூட்டினது [Weltwirtschaftsforum in Davos] சந்திப்புக்குள் கேட்டக முடியும்.

பொருளாதாரம் பொறியும்போது,உலக வங்கி,நாணய நிதியம் தனது கையிருப்புத் தங்கத் தைச் சீனாவுக்கு விற்றுக் கொண்டதென்பதும் வரலாறு.

செல்வம் எங்கே?சேந்த நிதி எங்கே?உலக வங் கிகளது கையிருப்பில் இருக்கும் ரிசேர்வ்த் தங்கம்,பெற்றோலிய டொலர்களது புண்ணியம்.அதென்ன பெற்றேலாலிய டொலர்?
பலருக்குப் புரியும்.எண்ணை விலை உயர்ந்தபோதும்,உயரும்போதும் குவியும் உபரிச் செல்வமானது அரேபிய மாபியாக்களது(தேசத்துத் தலைவர் எனக்கொள்க)கைகளில் குவியும்.அதை அவர்கள் மேற்குலக வங்ககளில் குவித்துவைத்துக் கனவு காண்பர்.அப்படிக் குவிக்கப்பட்ட பணம் பெற்றோலிய டொலர்கள் என்பது வரலாறு.இதன் பெறுமதி அண்ணளவாக 15 றில்லியன்கள் எனக் கொள்ள முடியும்.எனினும்,சட்டபூர்வமாக அது 6 றில்யன்கள் எனச் சொல்கிறார்கள்.இந்த பெற்றோலிய டொலர்கள் சமீபத்துப் பொருளாதாரப் பொறிவில் 25 வீதம் மூன்றே மாதத்துள் சாம்பலாகியது.அப்படியிருந்தும் இன்னும் 75 % வீதம் அமெரிக்க-ஐரோப்பிய வங் கிகளுக்குள் சுழ ல்கிறது.

இந்தப் பணம் யாருடையது?:

அரோபிய தேசங்களது தலைவர்கள்,அமைச்சர்கள்,அரேபியச் சேக்குகளது.அரோபியாவுக்கு"ஜனநாயக ஏகாதிபத்தியம்"மக்கள் புரட்சியெவெடிக்கும்போது ஒரு பென் அலி தனது பெற்றோலிய டொலர்ச் சேமிப்பை இழந்தார்.அதன் பெறுமதி 8 பில்லியன் டொலரென மதிப்பிடப்படுகிறது.

இத்தகைய பெற்றோலிய டொலர் உரைமையாளர்கள் ஒவ்வொன்றாகச் சரிவார்கள்.இது திட்டமிடப்பட்ட,நவீனத் தட்டிப்பறிப்பு.அதற்கு மக்களது ஆவேசம்,வர்க்கப் போராட்டமே பலியாகி ஒவ்வொரு அரேபிய தேசத்துக்கும் புதிய மேற்குலக எடுபிடிகள் பதவிக்கு வருவார்கள்.

அவர்கள் ஜனநாயகம் அதிகமாகப் பேசுவார்கள்.

பழைய பெற்றோலிய டொலர் உரிமையாளர்கள் தலை தப்பினால் போதுமென ஒதுங்க அவர்களது மக்கள் விரோதத்தின் அரசியல்-உரிமைப் பிரச்சனையுள் இந்தப் பெற்றோலிய டொலர்கள் மாயமாக மறைந்துவிடும்.அரேபியத் தேசங்களுக்கு புதிதாய் வரும் அரசுகள் இந்தப் பெற்றோலிய டொலர்களை மீளப் பெற முனையுமா?

அப்படிப் பெற முடியாதவாறேதாம் இன்றைய துரோக அரசியல் அரேபிய தேசத்துள் 80களின் பின் பகுதி கிழக்கு ஐரோப்பிய-இருஷ்சிய வீழ்ச்சிகளை ஞாபகமூட்டுகிறது.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
28.01.11

Friday, January 07, 2011

நாவலன்: சொந்த முகங்களை இழந்து...

"சொந்த முகங்களை இழந்து... - புலம் பெயர் அரசியல்" சொல்ல அவசரப்படாதீர்கள்!

"சொந்த முகங்களை இழந்து.. – புலம்பெயர் அரசியல் "நாவலன் கட்டுரை தொடர்பாக எனது புரிதல்.இது குறித்து மிக விரிவாக எழுதியாகவேண்டும்.எனினும்,இப்போதைக்கு கொஞ்சம் பேசலாம்."புலம் பெயர் மக்கள்"இந்த வார்த்தையே மிக விரிவாகப் பகுத்தாய்ந்து முடியவில்லை.உலகம் பெரு வெளியில் மனிதத்தைத் தொலைத்த கதை இதற்குள்...நாம்,மேலே போவோம்.

நாவலன்,"சொந்த முகங்களை இழந்து... - புலம் பெயர் அரசியல்" சொல்ல அவசரப்படாதீர்கள்! இப்படிச் சொல்வதற்கு எனக்கு நிறையக் காரணங்கள் உண்டு!

நான்,உங்களது இக்கட்டுரைக்கு ஓடிவந்து நறுக்குப் பதிலுரைக்கும்வாசகர்கள் போன்று கருத்துச் சொல்லமாட்டேன்.

இதற்கான காரணங்களை நமது மக்களதும்-புலம் பெயர் மானுடர்தம் சமூக உளவியல்சார் தொடர்பாடலோடும், அதன் தளத்தில் அவர்களது சமூக அசைவியக்கத்தோடும் பொருத்தியே நான் எழுத முற்பட்டிருப்பேன். உங்களது கட்டுரை இவற்றையெல்லாம் பார்க்கமால் வெறும் முன்தீர்ப்பு மொழிவுகளோடு அவசரக் குடுக்கைத் தனமாக எழுதப்பட்ட அறிதலை எமக்கு வழங்குகிறது.

அவசரப்படாதீர்கள்-ஆத்திரப்படாதீர்கள்!



நான்,நேரடியாக விஷயத்துக்கு வருவேன் :

[ //இன்று இலங்கையில் கூட அருகிப் போய்விட்ட பூப்புனித நீராட்டு விழா, மரபு சார்ந்த திருமணச் சடங்குகள் போன்றவற்றை மிகுந்த பொருட்செலவில் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்கிறார்கள்.//

//30 வருடங்களின் முன்னிருந்த “யாழ்ப்பாணத்தை” ஐரோப்பாவில் மட்டும்தான் காணமுடியும்.//

//ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் புலிகளுக்குக் கிடைத்த உணர்வு பூர்வமான ஆதரவு என்பது 90 களின் பின்னர் இலங்கையின் வட கிழக்கில் அவர்களுக்குக் கிடைத்ததில்லை. மேற்கின் சீரழிந்த கலாச்சாரத்திலிருந்து தமது சந்ததியைப் பாதுகாக்கின்ற குறியீடாக விடுதலைப் புலிகள் அமைப்பை “மேற்குத் தமிழர்கள்” நோக்கினார்கள் என்பதே இதன் அடிப்படையாகும்.// ]

இப்படியுரைக்கிறீர்கள்.ஒரு மார்க்சிஸ்ட்டு இத்தகைய முடிவுக்கு வருவதில் பல சிக்கல்கள் இருக்கிறது-உங்களுக்கு இந்தச் சிக்கல் முன் தோன்றவில்லையா?

சரி,நான் சொல்கிறேன்!மனிதர்கள் கூட்டாகவும்,தாம்சார்ந்த மொழி நிலைப்பட்ட குழுவாழ்வுக்குள் தம்மை இணைத்து உறவாடியபோது,அவர்கள் ஒரு பொது மொழிக்கு இணைவாகவும்-சிந்தனை பூர்வமாகவும் ஆத்மீகரீதியான ஆற்றலோடு இசைந்து உயிர்த்திருக்க முனைந்தனர்.இலங்கை அரசு,இந்த வாழ் சூழலை இல்லாதாக்கிச் சமூக நிலையைச் சிதைத்தபோது, புலப்பெயர்வு-இடப்பெயர்வு ஆரம்பமாகிறது.இங்கு,ஒரு "ஒழுங்குக்கு" உட்பட்ட உறவு-வாழ்நிலை உடைவுறுகிறது.புலம்பெயர்ந்த தேசம் புதிய சூழலோடு-புதியபாணி ஒடுக்குமுறையோடு புலம்பெயர் தமிழர்களை-மனிதர்களை வரவேற்கிறது.புலம் பெயர்ந்தவர்கள் முன் எல்லாம் வெறுமை!அம் மனிதர்கள் அனைத்திலும் வறுமையோடு இப் புலப் பெயர்வை எதிர்கொள்கின்றனர். வரலாற்றில் கட்டியமைக்கப்பட்ட"ஈஸ்ற்-வெஸ்ற்"[East-West]கருதுகோள் மேற்கு மனிதர்கள் மூலம் அறிமுகமாகிறது.

அந்தோ பரிதாபம்!ஆச்சி காலமுக்க-அப்பு,கைப்பிடித்து குரும்பட்டி பொறுக்கி விளையாட்டுக்காட்ட வளர்ந்த நாம்,அனைத்தையும் இழந்து, பெட்டி வீட்டுக்குள் புறாக்கூடு கட்டிவைத்து எமது குழந்தைகளை வளர்க்கும் போது, இந்த நெருக்கடியைத் தவிர்த்து சமூக இசைவாக்காத்தோடு மேற்குடன் கலக்கப் போராடித் தோற்போம்!அங்கே,அனைத்தையும் சொல்லும் தடையாக,நாசமாப்போன வாழ்நிலை சிதறி மனிதர்களைத் துவசம் செய்கிறது.

"குங்குமம்"ஐரோப்பியர்களுக்கு ஒரு நிறம் மட்டுமே.தமிழ்மொழிக் காரருக்கு ஒரு வாழ்வு அநுபவம்!"ஆர்பைட் மார்க் பிறாய்"[Arbeit macht Frei] தமிழர்களுக்கு ஒரு சுதந்திரம் குறித்த வார்த்தை.ஆனால் ஜேர்மனியனுக்கு ஒரு ஒடுக்குமுறையின் திசைவழி சொல்வது.இதைத் தாண்டுவோமா?

தான்சார்ந்து,தன் சுற்றங்கொண்ட சிலாகித்த வாழ்வு தொலையும்போது, வந்த தேசத்தில் குழுமமாக வாழ மொழி தடையாகிறது-நிறம் தடையாகிறது-கல்வி தடையாகிறது-செயற்றிறன் தடையாகிறது.என்ன செய்வார்கள்?

புலம்பெயர்ந்தோரை,அங்கொன்றும் இங்கொன்றுமாய் வாழப் பணித்த ஐரோப்பிய நிர்வாகம்,அவர்களது இணைவைத் திட்டமிட்டுப் பறித்தெடுத்தது.இதன் புரிதலில்,தான்சார்ந்த சமூகத்தோடு அசைவுறும் வழியென்னவெனப் பாமர மனிதன் சிந்திக்க முனைதல் சாத்தியமில்லையா?; தான் வாழ்ந்து மடிந்த ஏதோவொரு கனவில் தன்னிருப்புக்கு நெருக்கடியேற்படுவதில் அதைக் காக்கவும்-கண்டடையவும் தன் வேர்களைக் காணமுனைவது சாத்தியமாகிறது.

எனக்குப் பண்பாடுண்டா,எனக்கு உணவுக் கலாச்சாரம் உண்டா,எனக்கெனவொரு மொழி-தேசம் உண்டா?இது கேள்வியாகவும்,உள நெருக்கடியாகவும் புலம்பெயர்ந்த எம்மைத் தக்குகிறது!

எமக்கு முன் துருக்கியர்கள் கூட்டாகவும்,கொடிபித்தும் வாழ்ந்து பார்க்கின்றனர்.இத்தாலியர்கள் தமது தேசக்கொடியை முத்தமிட்டு மிடுக்குக்காட்டும்போது,புலம்பெயர் தேசத்துக் குடிமகனோ தனது தாய்ப் பூமியை தரிசித்து எம்மை ஏசுகிறார்கள்.நாம்,மீளவுஞ் சிதைகிறோம்.எமக்கானவொரு "கொடி-தேசம்,மொழி-பண்பாடு" நம்மைத் தவிக்க வைக்கிறது.இலங்கையிலிருந்தபோது இந்தப் பஞ்சம் ஏற்பட்டதில்லை.அங்கு தேசமாகவும்-நகரமாகவும்,கிராமமாகவும் வாழ்ந்ததைவிட ஒரு சுற்றமாக வாழ்ந்தோம்.எமக்கு அந்நிய நெருக்கடி தெரியவில்லை.பெரிதாகத் தெரிந்தது மாமி வீடும்-சித்தியின் வீடும்.மிச்சம் சந்தித் தெருவில் உலகம் விரிவதாகவிருந்து, நாகமணியின் தேனீர்க்கடையில்பருப்பு வடையும்-பிளேன் ரீயும் குடித்துக் "கமல்-ரஜனி வாழ்வு" பேசியது.இது,ஒரு சமூக வாழ்நிலையில் உறுதியான சமூக அசைவாக்கம் விரித்துப் பார்த்திருக்கிறது.



இவை இழந்தபோது,எனது உறவுகள்,புலம் பெயர் தேசத்தில் பொய்யுரைத்த புலிக்கொடிக்கு அர்த்தங்கண்டது-தமிழீழத்தைத் தனது தேசமாகக் கண்டடையக் புறக் காரணிகள்வழி வகுத்தன.பண்பாட்டுத் தாகமாகவும்,வாழ்ந்தனுபத்தின் முன்னைய கருத்தியலைத் தகவமைக்க விரும்பியது.அங்கே,"சாமத்திய-கல்யாண-பிறந்ததின"க் கொண்டாட்டங்கள் தனது சுற்றத்தோடு தன்னை இணைத்துக் கோலம் போட விரும்பிய அக விருப்புக்கு வடி காலாகிறது.

புலிக்கொடிக்கு எந்தவுந்துதல் காரணமோ அதே காரணம் அனைத்துக்குமான காரணத்தின் திறவுகோலை எமக்கு வழக்குகிறது.இது,சமூக நெருக்கடியின் தற்காலிகத் தேவையாக புலம் பெயர் மக்கள் ஒவ்வொருவரையும் அண்மிக்கிறது.இது,தமிழர்களுக்குமட்டுமல்ல அனைத்து இனப் புலப்பெயர்வுக்கும் பொருந்துகிறது.இதை வெறுமனமே சப்ப முடியாது!
சமூக-மானுடவியற் புரிதலின்வழி சிந்திக்க வேண்டும்.

முப்பது வருடத்துக்கு முன்பிருந்த யாழ்ப்பாணத்தை இன்றைய யாழ்ப்பாணத்தில் காணமுடியாதுதாம்.அதுதூம்சமூக வளர்ச்சியின் பரிணாமம்.அவர்களும்,அவர்தம் இன்றைய சுற்றஞ் சூழப் "பில்லி-சூனியமெல்லாஞ் " செய்து சுகமாய் வாழ்வதாகக் கனவுகொள் மனமும்,யுத்தத்தில் மையங்கொண்ட மனிதத்தைக் குழிதோண்டிப் புதைத்து நல்லூர்த் திருவிழாச் செய்து, தம்மை நிரூபித்தார்கள்! இது,ஒரு குழுமம வாழ்வுக்குச் சாத்தியம்.புலம் பெயர் மண்ணில் நாம் சமூகவாழ்வோடு இசைந்து ஒரு மொழிக் குட்பட்ட "ஒழுங்குக்குள்" வாழ முடியுமா? இது இல்லாதவரை,இருந்த அன்றைய சூழலை மையப்படுத்தி அடையாளமாக வாழ்ந்து காட்டுவது மனித நடத்தைக்குப் புதிதாகுமா?

[ //ஆக, மூன்றாம் உலக நாடுகளின் குடியேற்ர வாசிகள் தமது அடையாளத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக மிகவும் “விசித்திரமான” சிந்தனைத் தளத்தில் போராடுகின்றார்கள். இந்தச் சிந்தனை அவர்களிடையே ஒரு வகையான ஒருங்கிணைவை ஏற்படுத்துகிறது.// ]

நாவலன்,இது அபத்தமாகத் தெரியவில்லையா?விசித்திரமோ-சாத்திரமோ இங்கு கிடையாது.மனிதர்கள் எப்போது சமூகவுணர்வோடு"ஒரு ஒழுங்குக்குள்"வாழ நேர்ந்தார்களோ,அந்த ஒழுங்கினது வாழ்நிலைக்கிசைவான"அடையாள"நெருக்கடி உருவாவதை எவரும் விரும்புவதில்லை!வாழ் சூழல் பாதிப்படைந்து தன் சூழலைவிட்டு அந்நியமானவொரு சூழலை எதிர்கொண்டபோது,அதைத் தமதாக்க முடியாத மனிதர்கள் அதற்குப் பிரதியீடாக இன்னொரு முறைமையைத் தமக்கேற்ற புரிதலோடு இணைத்து வாழ முற்படுதல்தாம் அவர்களை உயிர்த்திருக்க வைப்பது.இதை மறுத்து வாழ முற்படுதலென்பது எப்போதும் சாத்தியமாக முடியாது.விசித்திரம் என்பது எதைவைத்து-எதர்க்கு நிகராக அணுகிச் சொல்ல முடிகிறது.

தனக்குள் பொருத்தப்பாடும்-பொருந்தாதத் தன்மைகளுடனும் புலம்பெயர் இளைய தலைமுறை வாழும் இந்தப் புலம் பெயர் வாழ்வில் சமூகவாண்மை என்பது தனக்குட்பட்ட அரசியல் வாழ்வைத் தகவமைக்கும் போராட்டமாக இருக்கும்போது,ஒரு பொருளாதார வாழ்வுக்குட்டபட்ட"வாழ்நிலை"இவர்களுக்குக் கைகூடிவிட்டதா?ஏதோ,சொல்வதால்-சொல்லிச் செல்லும் கட்டுரை மொழி வேண்டாம்!

[ //உதாரணமாக இ தனது பெண்பிள்ளை ஒரு கறுப்பினத்தவரைத் திருமணம் செய்துகொண்டிவிடக் கூடாது என்பதில் அவர்களிடையே ஏற்படுகின்ற ஒருங்கிணைவுஇ திருமணத்திற்கு முன்னர் பெண்பிள்ளை உடலுறவு வைத்துதுக்கொள்ளக் கூடாது என்பதில் அவர்களிடையே ஏற்படும் ஒருங்கிணைவு என்பனவெல்லாம் பண்பாட்டுத் தளத்தில் ஒருங்கிணைகின்றன. அவை பண்பாட்டு நிகழ்வுகளாகவும்,கலாச்சார வைபவங்களாகவும், மத வழிபாடுகளாகவும் வெளிப்படுகின்றன.// ]

"கருப்பு-வெள்ளை"-திருமணப் பந்தம்-எதிர்காலம்."கற்பு"-பதிவுத்திருமணத்துக்கு முன் "உடலறுவு"ஒரு வாசிப்புக்காகச் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது.எமது நினைவிலி மனதில் தமிழ்மொழிவழி சிந்தனைத் தேட்டம் அழியாதவரம் பெற்றிருக்கிறது.இளமையிற் கற்றல்(வாழ்நிலை)சிலையில் எழுத்து"சரி.இன்று,தமிழ் வானொலிகளில் தமக்கு அந்நியப்பட்ட,தமது நிறத்தைக் கேலி பேசும் தமது சமூகத்துக்கு உட்பட்ட உணர்வானது தமது பண்டத்தை விற்கவே வெள்ளைமேனிப் பெண்ணை முன்னிறுத்தி விளம்பரஞ் செய்கிறதா?எது,அரிய பொருளாக இருக்கோ-அதற்கு மவுசுதாம்!நாம் இயல்பாகக் கருப்பர்களா?நமது சமூகத்தில் மேற்குலகச் சிந்தனைக்குட்பட்ட-கலப்படைந்த மக்கள் வெண்மையாக-"அழகாக"இருக்கிறார்களா?எமது சமுதாயத்தின்பெண்கள்-ஆண்கள்"கருப்பு-அவலட்சணம்"கண்டு கேலி பேசுகிறார்களா?கலப்படைந்து"வெள்ளையாக"இருக்கும் நபருக்கு இருக்கும்"செருக்கு"எத்தகைய சமூக-அகவொடுக்குமுறையை"கருமையாக"இருக்கும் மனிதருக்கு வழங்கியது? இந்த அனுபவம் தன் பெண்ணுக்குத் தொடர்ந்து"கருமையுடைய"பிள்ளை பிறப்பதை நம்மில் எத்தனைபேர் விரும்பினோம்?"கருப்பு-வெள்ளை"கருத்தியலைச் செய்த "மேற்கு,கிழக்கு"க் கருதுகோள் நம்மைக் கோவணத்தோடு-கும்மப் பூவோடு அலையவிட்டது மட்டுமல்ல-நம்மையே,நாம் அங்கீகரிக்க-மதிப்பளிக்க மறுத்து நிற்கிறது.

இன்றைய புலப்பெயர்வு வாழ்வில் பாலியல் நடாத்தையென்பது பொறுப்போட நடைபெறவில்லை."அநுபவித்தில்-தட்டிக்கழித்தல்" வரை முறையற்ற பாலியல் நடாத்தையெனப் பல பாலகர்களைத் துவசம் செய்து நடுத்தெருவில் அலையவிடும்போது,இப்போது மேற்குப் பெற்றோரே தமது பிள்ளைகள் குறித்துக் கவலையடையும்போது,நீங்கள் இதைக் குறித்து மேலோட்டமான வார்த்தைகொண்டு மெலினமாகவுரையாடுகிறீர்கள்.இது,முழுமொத்த மனித சமூகத்தையே இன்று பல உள நெருக்கடிக்குள் கொணர்ந்திருக்கும்போது அதை நமது மக்களிடம்-புலம்பெயர்ந்தவர்களிடம் மட்டும் குறிப்பாக நிகழ்வதாக ஒரு மார்க்சியன் கருத்துக் கூறுவதாகவிருந்தால் நான் உங்கள் மார்க்சியம் குறித்துக் கவலையடைகிறேன்.மனிதர்களை அவர்களது வாழ்நிலையோடு புரிதலைவிட்டுப் பெயர்த்தெடுத்து விமர்சிப்பது நியாயமாகாது.எமது வாழ்நிலை பாதிப்படைந்து நாம் அங்குமிங்குமாக அலைகிறோம்.

[ //இவ்வாறு புலத்திலிருந்து தொலை தூரத்தில் உருவாகின்ற தேசிய உணர்வானது “கலாச்சாரப் பய” உணர்வின் அடிப்படையிலிருந்து மேலெழுகிறது. இத் தொலை தூரத் தேசிய உணர்வு சொந்த நாட்டின் அரசியலில் கணிசமான தாக்கதைச் செலுத்துகிறது.// ]

தூரத்தே உருவாகும்"தூரத்தேசியவுண்ர்வு"என்பதெல்லாம் அடிப்படையில் அறிவியல் பூர்வமற்றது.ஒரு இனக் குழும மக்கள் இடம்பெயர்ந்து,சிதறிச் சமூகக்கூட்டின்றியும், எந்தப் பொருளாதார-நில-நினைவிலித் தளமும் இன்றியவொரு புலம்பெயர் தளத்தில் இத்தகையவுரையாடலானது அந்த மக்கள் துண்டிக்கப்பட்டவொரு மனிதக் கூட்டாக வாழ நேர்ந்த வலியயை மறுதலிப்பதாகும்.இது,புலம்பெயர் தேசத்துப் பொருளாதார-இனத்துவ அடையாள அரசியலது ஈனத் தனத்தை மறுமுனையில் வைத்து மறைக்கும் கயமைத்தனமாகும்.புலம் பெயர் மக்களைத் தொடர்ந்து அச்சத்துக்குட்படுத்தி,அவர்களது மனவலிமையை-ஆற்றலை முடக்கி நிராகரித்துத் தமது சமுதாயத்துக்கு புறம்பாக வாழ நிர்பந்தித்த வெள்ளைத் தேசமும்-வேற்று அரசவுரிமையுடைய தேசத்துச் சமுதாயங்களும் தொடர்ந்து புலம்பெயர்ந்த-குடியேறியவர்களைத் திட்டமிட்ட உளவியலொடுக்குமுறைக்குட்படுத்தும்போது அங்கே, தமது அடையாள நெருக்கடிக்குள் வந்துவிட்ட வாழ்நிலைகண்டு அச்சங்கொள்வதும்,தாம் வாழ்ந்த வரலாற்று மண் நோக்கிய அவாவுறுதலும் மனிதர்கள் அனைவருக்குமான பொதுப் பண்பாக மாறுவது இயல்பு.இதுவே,புலம்பெயர் வாழ்வில் ஒவ்வொரு அகதியும் சந்திக்கும் மிகப் பெரிய சோகம்.இதுள்,இவர்கள்"துராத் தேசியவுணர்வடைகிறார்கள்"என்பது தப்பான கற்பித்தலாகும்.

இன்றுவரை,இந்த உணர்வைத் தமது அயலுறுவு-நலன் நோக்கிய அரசியற் காரணங்களுக்காகத் தட்டையாக உருவாக்கி அசைபோட்டுவரும் மேற்குலகம், இத்தகைய புலம்பெயர் மக்களைக்கொண்டு, அவர்கள் சார்ந்த தேசத்து அரசியலை அழுத்தப்படுத்தித் தமது தேவைகளைப் பூர்த்தி செய்ததை நாம் ஈரானியர்கள்-ஈராக்கியர்கள்,குத்தீஸ் புலம்பெயர் மக்கள் வழி புரிகிறோம்.இந்த வகையிற்றாம் புலிகளது தேவையோடு,அவை மிக நெருக்கமான வினையாற்றலைக்கொண்டியங்கியது. இது குறித்துச் சிந்தியுங்கள்.

இவர்களது கொச்சையான-மொட்டையான இந்தக் கருத்தை ஜேர்மனியக் கவிஞன் ஹன்ஸ்-ஹேர்பேர்ட்திறைஸ்கே [ Hans-Herbert Dreiske] இப்படிக் கேலி பேசிய ஆண்டு 1985. :

"இங்கே அந்நியராய் இருந்தோம்
அங்கே அந்நியராக்கப்பட்டோம்
எனினும்,
நாம் ஒரு வனாந்திரத்தைத் தேடி
ஒரு நாட்டை உருவாக்குவோம்
எங்கெங்கு
எப்படியெப்படியோ அந்நியர்களாகிய
அனைவருக்குமாக."


[ Hier

fremd geblieben

dort

fremd geworden

Vielleicht

sollten wir

ein land suchen

einen Staat gruenden

fuer alle

die irgenwo

irgenwie

Fremde sind.]

-Hans-Herbert Dreiske, Dueseldorf,im August 1984


[ //குஜராத்யர்கள் செறிவாக வாழும் பிரித்தானியாவின் நகரமான லெஸ்டரில் சாரி சாரியாக 30 ஆயிரம் பேர்வரை கலந்துகொண்ட கூட்டம் பாரதீய ஜனதா கட்சியின் அத்வானி கலந்துகொண்ட பொதுக்கூட்டமாகும். விஸ்வ இந்து பரிசத் என்ற இந்து அடிப்படை வாதக் குழுவிற்கு பிரித்தானியாவிலிருந்து ஒவ்வொரு இந்தியரும் உணர்வு பூர்வமாக வழங்கும் பணம் புலிகள் இயக்கத்திற்குத் தமிழர்கள் “கண்ணை மூடிக்கொண்டு” வழங்கிய பணத்தைப் போன்றதாகும்.// ]

புலிகளுக்கு நிதி கொடுத்த சமூகவுணர்வை-உளநிலையை மிகவும் தப்பாக உரைப்பதற்குப் பலர் முனைகிறார்கள் நாவலன்.நீங்கள் இந்த வரிசையில் ஒருபோதும் உரைத்திருக்கப்படாது.இது,தப்பானது.எமது மக்கள் முன் சில தீர்வுகள் இருந்திருக்கிறது.இந்த நிதியுதவி மனத்துள்.இவர்கள் எவரும் கண்ணை மூடிககொண்டு புலிக்கு நிதிகொடுக்கவில்லை!

"கண்ணை மூடிக் கொடுத்ததுபோல்" நடாகங்காட்டியது புலிப்பினாமிகள்.அது,மக்களது நிதியைக் கறக்க அவர்களது பணத்தில் புலி தன் பொண்டிலுக்குத் தாலிகட்டி பின் அதை மக்கள் முன் களற்றிப் போட்டு நாடகம் ஆடியது.இதுவொரு வியூகம்.

ஆனால்,எமது மக்கள் தமது உழைப்பில் சிறு தொகையை மாதாந்தங்கொடுக்கும்படி உருவாகிய சூழல் மிக முக்கியமாகத் தவறவிடப்படுதல் சாபக்கேடானது!


1:"ஊரிலுள்ள உறவுகளை புலிவேட்டையிலிருந்து காத்தல்"

2;"தாம் தேசம்-தாயகம் திரும்பும்போது புலி வேட்டையின் முன் முகங்கொடுத்தல்"

3:"தமது சமுதாயத்தின் அழிவைக்கண்டும்-தாம் தப்பிய குற்றவுணர்விலிருந்து விடுதலையடையவும்"

4:சிங்கள அரசின் அத்துமீறிய இனவழிப்புக்கு விடிவு தேடிய பாமரவுணர்வுகொண்ட நம்பிக்கை"

ஆகிய காரணிகளது வழியிலேயே புலிக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.இதைவிட்டு,"கண்மூடி-கண்திறப்பு" வார்த்தைகள் மோசமான பார்வைகளைக்கொண்டது.

நாம்,எமது மக்களது சமூக உளவியலைப் புரிய முனைதலும்,மனித சமுதாயத்தை மிக முன்னேறிய புரிதல்களைக்கொண்டு ஆய்வு செய்யவும் கடமைப்பட்டுள்ளோம்.புலம்பெயர் சமூகங் குறித்து எவரும் போகடிபோக்காக வரலாறு எழுதலாம்.ஆனால்,அவையெல்லாம் குப்பைக் கூடைக்குள் ஒரு நாள் செல்லும்.மார்க்சியம் புரிந்த உங்களிடமிருந்து இத்தகையவொரு கட்டுரை"புலம்பெயர் மக்கள்"குறித்து வந்ததில் நான் மிகவும் வருந்துகிறேன்.மையமான புள்ளிகளைத் தொட்டு ஆய்வு மனத்தோடு எழுதப்படவேண்டிய கட்டுரையை வெறும் மனவுணர்வுக்குள் உந்தப்பட்டெழுத முற்படுதல் மார்க்சிய ஆய்வாகாது!

[ //இந்த நூற்றாண்டின் தெற்காசியாவின் மிகப்பெரிய மனித அவலத்தைச் சந்தித்திருக்கும் தமிழ்ப் பேசும் மக்களின் “புலம் பெயர் அரசியல்” தொலைதூரத் தேசிய உணர்விலிருந்து விடுதலை செய்யப்பட்டு மனித நேயம் மிக்க அரசியலாக மாற்றமடையே வேண்டும். ஆப்கானிஸ்தானிலும்இ காஷ்மீரிலும் மனிதர்கள் கொல்லப்படும் போது அதன் வலியையும் நாம் உணர வேண்டும்.// ]

ஏன்,எமது மக்கள்மீது குறைப்படுகிறீர்கள்?,எங்கள் மக்களுக்கு இந்த வலிகளைச் சொல்லும் எத்தனையூடகங்கள் நமக்குள் உண்டு?தொடர்ந்து தமிழ் ஊடகங்களில் புலிக்கு வக்காலத்து அல்லது, தமிழ்நாட்டுச் சீரழிவு நாடாகம்-சினிமா!இதைவிட எமது சமூகத்துக்கு என்ன சமூகப் புரிதலை காட்சியூடகம் வாயிலாகச் சொன்னோம்.எமது மக்களது சிந்தனையைக் காயடிக்கும் இன்றைய ஆளும் வர்கங்கள்தாம் எமது மக்களது சிந்தனையைத் தகவமைத்தபோது,நாம் அவ்கானை-ஈராக்கை-காஸ்மீரைக் காணது பேசுவதாகக் குறைப்படுதல் நியாயமாகாது.புரிதற்பாடென்பது அந்தச் சமுதாயத்தின் ஊடகங்கட்கு வெளியில் வெறும் கல்வியல் மட்டுமே தங்கும்.பொதுத்தளத்தில் உலக மக்களது வாழ்வுஞ் சாவும் ஊடகங்களின் வழியே சமூக ஆவேசம்-உணர்வு கொள் திசைவழியைத் தகவமைக்கும்.எமது ஊடகங்களது நயவஞ்சமான வர்த்தக நோக்கு இதுள் மையமாகத் தவிர்க்கப்பட முடியுமா?


[ //தவறுகளைத் தர்க்கரீதியான ஆய்விற்கும் விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உட்படுத்துவதனூடாக தேசிய வாதத்தின் முற்போக்குக் கூறுகளை வளர்த்தெடுக்க முடியும். இலங்கைப் பேரினவாதப் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் மக்கள் சார்ந்த புலம்பெயர் தமிழ்ப் பேசும் மக்களின் பங்களிப்பு குறைந்தபட்சம் மக்கள் போராட்டத்திற்கான ஜனநாயகச் சூழலை இலங்கையில் உருவாக்குமாயின் போராடத்தின் புதிய திசைவழியில் ஒரு மைற்கல்.// ]


இலங்கையில் ஜனநாயகச் சூழலை உருவாக்கப் புலம் பெயர்ந்த மக்கள் பங்களிப்பதென்பதன் அர்த்தம் வெறும் பேச்சுக்கானதான ஒரு பரிவர்த்தனைதாம்.இலங்கையில் மட்டுமா "ஜனநாயகம்"செத்துப் போனது? இந்தப் புலத்து வாழ்வில் வாழுகின்ற ஒவ்வொரு அகதிக்கும் தனது வாழ் நிலையில் புரிந்த ஒருவுண்மையானது "ஜனநாயகம்"என்பது என்னவென்று புரியாததுதாம்.தனக்கான வாழ்வு-தேசம்,மொழி,பொருள் முன்னேற்றம்.இதைவிட்டகலாவொரு அரசைக் குறித்த மிக அருகிய புரிதல்.இதைவிடப் புலப்பெயர் வாழ்வில் முன்னேறும் போராட்டம் இலங்கையிலொரு ஜனநாயகச் சூழலைத் தீர்மானிக்கும் பகுதிச் சக்தியென்பதுகூட மிக நெருங்கிப்பார்த்தறியும் புரிதலுக்கு எதிரானது.தனது வாழ்நிலையில் ஒரு கூட்டாக-குழுமமாக வாழ முற்படும் அரும்பு நிலையுள் தவிக்கும் புலம்பெயர்ந்த மக்கள் கூட்டாகக் கோவிந்தாபோட்டு ஓய்ந்த சூழலில் அவர்களது நிதியுதவியைத் தொடர்ந்து பெறுவதற்கும்,இலங்கையில் "ஜனநாயக"ச் சூழலை மீட்பதென்பதற்குமான புரிதலது எல்லை, இலங்கைக்கு வெளியில் அநாதவராகக் கிடக்கிறது.


இலங்கையுள் வாழும் மக்களுக்கு முடியாதவை எதுவும், அந்தத் தேசத்துக்கு வெளியிலிருந்து இறக்கு மதியாகும் எந்தவொரு சக்திக்கும் அவர்கள் நியாயமாக-விசுவாசமாக நடக்க முடியாது.இலங்கைத் தேசத்து ஒடுக்கப்படும் மக்களே தமது தலைவிதியைத் தீர்மானிப்பதைத் தவிர புலம்பெயர் மக்களுக்கு எந்தப் பொறுப்புஞ் சுமத்த முடியாது.புலமானது தனது தளத்திலுள்ள மக்களது வலியை வெளியுலகுக்குச் சொல்வதைத்தவிர வேறெதுவையுஞ் செய்துகொள்ள முடியாது.இவர்கள் தமது வாழ்வுக்கான போராட்டத்தையே செய்துகொள்ள முடியாது திசையில் இலங்கை நோக்கி...(?...)

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
07.01.2011

Tuesday, January 04, 2011

புலத்து"இடதுசாரிகள்",போதும்-போதும்!

புலத்து"இடதுசாரிகள்",போதும்-போதும்!

இலங்கைச் சிறுபான்மை இனங்களின்தேசியத் தன்மைகளைக் குலைக்க முனையும் அரசு-ஆளும்சக்திகள் எமது மக்களில் ஒருசாரர்களை,அவர்களது வர்க்க நலன்களுக்கிணங்கப் பயன்படுத்துகிறது.தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை-தேசிய அபிலாசைகளை தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைகளை அழிப்பதற்கெதிராகப் போராட முனையும் பரந்துபட்ட மக்களது அமைப்பாண்மையைச் சிதைப்பதில் நமது எதிரிகள்பலவடிவில் கூடுகிறார்கள்.நான் இதுவரை புலம்பெயர் சூழலுக்குள் இனங்காணும் அரசிலானது பற்பல கோணத்தில் மிகத் தந்திரமாக இயங்குகிறது. தம்மைத்தாமே உண்மையான மக்கள்சார் அமைப்பாக-குழுவாக முன்னிறுத்திவரும் புலம்பெயர் "இடதுசாரிகள்"அனைவரும் ஏதோவொரு ஆதிக்க நலனுக்குப் பலியாகிவிட்டு மீளவும், நமது மக்களுக்குத் தம்மைத்தாமே மேய்ப்பர்களாக-மக்கள் "விடுதலை" அமைப்பாக இனம் காட்டுவதில் கவனங் குவிக்கின்றனர்.தமது இருப்புக்கும்,தொடர் எஜமான விசுவாசத்துக்காவும் தாம் "அம்பலப்பட்டபோதும்" அதை மறந்து-மறுத்து மக்கள் சார் அரசியலைத் தாம் பேசுவதாக ஏமாற்றுகின்றனர்.


இன்றைய மிகக் கெடுதியான அரசியல் நடாத்தைக்கு இந்தக் குழுக்களே காரணமானவர்கள்!இவர்கள், ஒருபோதுமே ஓய்ந்துபோக விரும்பாதவர்கள்.தமது எஜமானர்களது படியளப்புக்கு விசுவாசமாக இவர்கள் இயங்க முனையும் தளம் பாதிக்கப்பட்ட-யுத்தத்தால் அழிவுக்குட்ட-அரச இனவொடுக்குமுறையால் சிதைந்துபோன தமிழ்பேசும் மக்களது எதிர்காலமாக இருக்கிறது! புலம்பெயர் தளத்தில் இடதுசாரிகள்-முற்போக்குவாதிகள் எனும் போர்வையில் எந்தக் குழுவுரையாட முனைகிறதோ அதைச் செருப்பால் அடித்தாகவேண்டும்.இந்தக் கயவர்கள் தமது குழு நலனுக்கான நிபந்தனையாகத் தொடர்ந்து நமது மக்களது எதிர்கால அரசியலை இல்லாதாக்கப் பல முனை வேடமணிகிறார்கள். இதுள்" இடதுசாரிய" வேடம் இவர்களுக்கெப்பவும் கைகொடுப்பதால் அதையே தொடர்ந்து அணிந்தபடி எல்லாவற்றும் "தீர்ப்பு"எழுதுவதில் தம்மை முற்போக்காளர்களாக்கி, அந்நிய ஆளும் வர்க்கங்களுக்கு நமது மக்களைக் காட்டிக்கொடுக்கிறார்கள்.இந்த "இடதுசாரிய"அராஜகவாதிகள் மிகக்கெடுதியான பிற்போக்கு முகாங்களது தயவிலேயே வாழ்வதென்பது உண்மையானது.எந்தவொரு புலம்பெயர் "இடதுசாரிகளும்-தேசிய,புலி-எலி வாதிகளும்"நம்பிக்கையற்ற கபட மனிதர்கள் என்பதே எனது அறுதியான நம்பிக்கை!இந்த நம்பிக்கையானது இவர்கள்மீது நம்பி ஏமாந்த எனது அநுபவத்தின்வழி ஏற்பட்டதல்ல.மாறாக இவர்களது அரசியற் பாத்திரத்தின்மீதான விமர்சனத்தின் வழி பெறப்பட்டதே!இவர்கள் அனைவரும் நாசகாரச் சக்திகள் என்பதே எனது துணிபு!இவர்களை நம்பி எந்தவொரு அரசியலும் செய்வதென்பது தம்மைத்தாமே தொலைப்பதற்கு ஏதுவானது.

இந்நிலையில், நமக்குள் பற்பல முரண்பாடுகளை அவ்வப்போது செயற்கையாக உருவாக்கி நமது இறைமையைச் சிதைப்பதில் தமிழ் மக்களின் எதிரிகளான இந்தப் புலம்பெயர்"இடதுசாரிகள்" விழிப்பாகவே இருக்கிறார்கள். இத்தகைய எதிரிகளை நாம் வலுவாக முறியடித்தாகவேண்டும்.அதற்கு நம்மிடமிருக்கும் அனைத்து வளங்களையும் நமது புலத்து மக்கள் பயன்படுத்தி,அதை அனைத்துச் சிறுபான்மை இன மக்களுக்குமான விடுதலையைத் தோற்றும் அரசியல் நகர்வாக முன்னெடுப்பதும் காலத்தின் அவசியமாகும்.


நம்மை,நமது வாழ்வைக் கேவலமாக்கும் கும்பல்களாக்க முனையுமிந்த அரசியல் பொறுக்கிகள், அற்ப சலுகைகளுக்காக நமது ஜனநாயக உரிமைகளை-வாழ்வாதார அடிப்படையுரிமைகளை, அந்நிய நாடுகளின் அரசியல்-பொருளியல் நலன்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் பொறிமுறைகளை "புரட்சிகர"கட்சிகள்-அமைப்புகள்,ஜனநாயகமெனும்போர்வையில் செய்து முடிக்கத் தயாராகியபடி. இவர்களே தனிநபர் துதிபாடி,கேவலமான பாசிஷ்டுக்களை(...) தமிழரின் பிரமுகர்களாகவும்- தலைவர்களாகவும்,மகாமேதைகளாகவும் ஒளிவட்டம் கட்டுகிறார்கள். இந்த வேலையில் தமிழரங்க வாசக வட்டமென்ற போர்வையில் இரஜாகரனது தளத்தில் கீறும் "அவர்களது" கைகளே"எங்கப்பன் குதிருக்குள் இல்லை"என்று அம்பலப்பட்டுப்போகிறது!

இவர்கள் எவருமே மக்களின் நலனுக்கான ஜனநாயக விழுமியத்துக்காகக் குரலிடவுமில்லை,போராடவுமில்லை.இவர்களிடம் பணப்பலமுண்டு.இதன்மூலம் நம்மைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வெறும் கொத்தடிமைகளாக்கும் அரசியலை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள். இவர்கள் கூறும் ஜனநாயம்-பாசிசத்துக்கு எதிரான"சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு ஆதரவு" என்பதெல்லாம் வெறும் ப+ச்சுற்றலாகும்.

ஒன்றுக்கொன்று மாறுபட்ட குதர்க்க அரசியல் மோடி வித்தையை "இராஜாகரன்"பெயரில் எழுதும் பல முகமூடி மர்ம மனிதர்கள் செய்துவருகின்றனர்.இதேபோன்ற இன்னொரு முகமாக,ஏலவே அம்பலப்பட்டுப்போன ஞானம்-தலித்துவ அமைப்புத் தேவதாசன்குழு,இலங்கை ஜனநாயகவொன்றிய இராகவன் குழு,சோபா சக்தி வட்டமென எல்லாவிதமான சர்ச்சைக் குரிய நபர்களும் மக்களது அரசியலைக் கையிலெடுத்துத் தமது இருப்பு நோக்கிக் கூடுகிறார்கள். இரஜாகரனுக்கோ "எதிரியின் எதிரி நண்பனென" எவரையும்-எதற்காவும் "ஆதரிக்கவும்-எதிர்க்கவும்" முடிகிறது. இப்படியொரு இழி அரசியலைச் செய்வதைவிடத் தூக்குப்போட்டுத் தொங்குவது மேலாக இருக்கும் என்று எப்பவுஞ் சொல்வேன்!

புலத்திலுள்ள மக்களைச் சுயவெழிச்சுக்குள் தள்ளி, அவர்களால் போராட்டத்தை முன்னெடுக்கத் தடையாகவுள்ள ஒவ்வொரு நாளியும் நமக்கு ஆபத்தே!புலத்து மக்கள் சுயமாகச் சிந்திக்க விடாது தடுத்துவருபவர்கள் மக்களின் விரோதிகள் என்பது எனது நிலைப்பாடாகவே இருக்கிறது.

இன்றோ இந்தக் கேடுகெட்ட"போலி இடதுசாரிய"மாபியாக்களிடமும்,ஓட்டுக்கட்சிப் பாராளுமன்றப் பாசிஸ்டுக்களிடமும் மாட்டப்பட்டிருக்கும் தமிழ்,முஸ்லீம் மக்களின் அரசியல் எதிர்காலமானது தத் தமது அரசியல்-பொருளியல் அபிலாசைகளோடு தனித்துவமான தேசிய முன்மொழிவுகளைக் கோரிக் கொண்டே இருக்கப் போகிறது. எனினும்,இந்த முன் மொழிவுகள் இனத்துவ அடையாளத்தை மையப்படுத்திய பேரெழிச்சியாக மாறாத வகையில் இலங்கை-இந்திய,சீனச் சதி அரசியல் நிலவரம் செறிவேற்றப்படுகிறது. இந்தச் செறிவேற்றலைச் செய்து முடிக்கும் இனவொடுக்குமுறையானது அப்பாவி மக்களை அழித்துத் துவசம் செய்யும்போது அங்கே அவர்களின் அத்துமீறிய வன்முறைகளை இந்தப் "போலி இடதுசாரிய" மற்றும் ஓட்டுக்கட்சிப் பாராளுமன்றப் பாசிஸ்டுகள் தமக்கேற்றபடி தகவமைத்து மக்களுக்குள் பரிசீலீத்துவருகிறார்கள்.சமீபத்தில் யாழ்மாவட்டத்தில் இடம்பெறும் இத்தகைய தாக்குதல்கள் ஒரு பரீட்சார்த்தமாகும்.

பண்டுதொட்டுத் தமிழ்பேசும்மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள்.ஆயுத முனையிலும்,கருத்தியல் முனையிலும் அவர்களின் உரிமைகள் ஏலம் விடப்படுகிறது.இந்த ஈனத்தனத்தை எல்லாக் குழுக்களும்-தனிநபர் பயங்கரவாதிகளும் திறம்படச் செய்துமுடிக்கிறார்கள்.இந்த மோசமான சூழலில் இத்தகைய மனிதவிரோதிகள் யாவருமே மக்கள் நலன்சார்ந்தவர்களாகத் தம்மை முன்நிறுத்தியபடி மக்களை வேட்டையாடுவதே பெரும் பயரகமானதாக இருக்கிறது.ஒரு இனவாதப் பாசிச அரசு இதன் மூலம் காப்பாற்றப்பட்டு, அது மக்கள் நல ஜனநாயக அரசெனும் படியை முன்னகர்த்திச் செல்வதே இதன்மூலம் சாத்தியமாகி வருகிறது.இது, சாதுரியமாக புலம்-நிலமென விரிகிறது.

தமிழரங்கமோ அல்லது மற்றைய அரச அனுதாபிகளோ"சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு"ஆதரவாகப் பைத்தியகாரத்தனமாகக் கருத்தாடி, நம்மக்களைக் கேவலமாகச் சுரண்டிக்கொள்ள முனைதல், மிகக் கேவலமானதாகும். தமிழரின் குருதியில் கும்மாளமடித்த காலங்களையெல்லாம் மறந்து- அவர்தம் கொஞ்சநஞ்ச அரசியல்-வாழ்வாதாரவலுவையும் தங்கள் தேவைக்கேற்றவாறு "அரசியல்"ஆக்கி,அதுள் தமது இருப்புகளைக் காக்க முனைதலென்பது மிகக் கெடுதியானது.இவர்களை இனங்காணுதலென்பது "நான் சொல்லியோ-எழுதியோ" அல்ல.மாறாக, இவர்களது அரசியல் நடாத்தையையும்,இவர்தம் செயற்பாட்டையும் இதுவரையான காலவோட்டுத்துள் சீர் தூக்கிப் பார்த்தும்,இதுள் எந்தப் பொழுதில் எவரை "எதிர்த்து-ஆதரித்து" இவர்கள் அரசியல் செய்வதென்பதை நோக்கியே இதைச் செய்தாகவேண்டும்-இனம் காணவேண்டுமெனச் சொல்வேன்!

எமது மக்களது வாழ்வு, பலவகைகளிலும் நாசமாக்கப்பட்டு,மனிதவுரிமைகளற்ற காட்டுமிராண்டித்தனமான சூழலிலெமது மக்களின்று வாழும்போது, அன்று,சிங்கள அரசின் அத்துமீறிய யுத்தங்கள் கிழக்கிலும் வடக்கிலும் அவர்களைக் காவுகொண்டு-அவர்தம் சமூகவாழ்வையே சின்னாபின்னாமாக்கியது.இந்த இருள்சூழ்ந்த அவலத்தை மறைத்து, இத்தகைய யுத்தம் புலிகளை-புலிகளின் பயங்கரவாதத்துக்கெதிரானதாகக் காட்டி உலகத்தை ஏய்த புலம்பெயர் தமிழ்குழுக்கள்-கட்சிகள் இந்தியாவின் எலும்புத்துண்டுக்காக நமது மக்களின் எதிர்காலத்தோடு தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காகப் பொறுக்கித்தனமாக அரசியல் செய்யும் இன்றைய சூழலாக இந்த "சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு" எமக்கு முன் விரிகிறது!இதைப் பாசிசத்துக்கு எதிரான நகர்வாகச் சொல்லும் இராஜகரனது அரசியல் இருப்பே இன்று இந்தப் போலிகளை "ஜனநாயகத்துக்கான செயற்பாட்டாளர்களாக்கி" ஆதரிப்பதால்மட்டும் சாத்தியமாகிறது! மாநாட்டை ஆதரிப்பதென்பது புலி எதிர்ப்பாகிறதாம்!புலியோ செத்துச் சிதைந்து எங்கோவொரு மூலையில் வர்த்தகஞ் செய்கிறபோதும் புலியே இவர்களுக்குப் பெரிய சக்தியாகவும்-முரண்பாடாகவும் இருக்கு!

ஈழப் போராட்டம்- போராட்டத்துக்குப் பின்பான அரசியல் மக்களின் இருப்பிடங்களை விட்டுத்துரத்தியடித்தபோது,அவர்களின் வாழ்வாதாரத்தச் சொத்தைத் திருடிக் குவித்துள்ள செல்வங்களும் அதிகாரங்களும் அதனூடாகப் பெறப்பட்ட-பெறப்படும் பதவிகளும் புலியெதிர்ப்பு முகாமெனக் கூறப்படும் சிங்கள அரசின் அடிவருடிகளிடம் பாரிய அதிகாரச் சுவையை நாக்கில் வீணியூறும் படியாக ஆசையாக்கி விட்டுள்ளது.இதன்வாயிலாகவெழும் அற்ப விருப்புகள் மக்களின் உரிமைகளையே பாசிச அதிகார மையங்களுக்கு அடகு வைத்துத் தமது நலனை அடைவதில் குறியாகவுள்ளது.இத்தகைய சூழலில்தாம் இன்று பற்பல புலம் பெயர் "இடதுசாரி-ஜனநாயக"மாபியாக்கள்இந்தச் சூழலில் தமது பங்கைக் குறித்து இயங்குகிறார்கள்.இவர்கள் போடும் பாசிசத்துக்கு எதிரான எழுத்தாளர் இயக்கம்-ஊக்கம் என்பதெல்லாம் தமது அம்பலப்பட்டுப்போன திசைவழியைத் தட்டிவைத்து மறைத்துக்கட்டி மக்களை ஏமாற்றிப் பிழைப்பதே!


இந்த இழி அரசியல்சூழலுக்குள் சிக்குண்ட புலத்து-நிலத்து மக்கள் தம் எதிர்காலத்தை இராணுவப் பாசிசவொடுக்குமுறைக்கு,ஆயுதக் குழக்களின் அராஜகத்துக்கு இரையாக்கி வருகிறார்கள். மக்களின் உயிருடன் விளையாடும் அதிகாரத்துவத்துக்கான போராட்டங்களால் ஆளும் வர்க்கங்கள் தத்தமது நலனைக்காத்துவரும் இந்த "மக்கள் விரோத அரசியலை" எங்ஙனம் முறியடிப்பது?


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
04.01.2011

Saturday, November 13, 2010

சோபாசக்தி,வளர்மதி : இடையில் நான்...

சோபாசக்தி,வளர்மதி:இடையில் நான்...

Shaseevan hat geschrieben:
„அண்ணை, நீங்கள் சோபாசக்தி கேட்ட கேள்விக்கு எழுதப்போகும் பதிலை நினைத்தால் ஃபேஸ்புக்கை விட்டு ஓடி ஒளியவேண்டும் போல் உள்ளது. எதிர்காலத்தில் 'சளாப்பல்' என்ற சொல்லுக்கு உங்கள் பதிலே உதாரணமாக இருக்கும். :)“



Shoba Sakthi13 November 2010 at 10:14
Betreff: From Shoba
/உங்கள் நேரத்தை இப்படியானவர்களுடன் விவாதித்து விரயம் செய்யவேண்டாம் என்று அனுபவத்தாலும் நட்பினாலும் கேட்டுக்கொள்கிறேன்// என எழுதப்பட்ட பின்னூட்டமான்றிற்கு தீபச்செல்வனும் சிறீரங்கன் அண்ணனும் விருப்பம் சொல்லியிருக்கிறீர்கள் இங்கே 'இப்படியானவர்கள்' எனச் சொல்லப்படுவது நான்தான். என்னுடன் விவாதிப்பது விரயம் என்றா நீங்கள் இருவரும் கருதுகிறீர்கள்? உங்கள் இருவரதும் பதில்கள் எனக்கு முக்கியமானவை.



இக் கிழமை முதல்,நான் புதிய வேலைகிடைத்து என்னுடல்-மூளை வருத்தி ஓய்ந்து,குடித்துத் தூங்கி,மதுமயக்கத்தில் எழுந்தபோது,கணினித்திரை மங்கலாக இருக்கச் சோபாசக்தியின் கேள்வியும்,நாரதன் சசீவனின் கருத்தும் கண்ணிலேபட்டுத் தாக்கியது மண்டையை!

இனி விஷயத்துக்கு வருவோமா தம்பி சசீவா?(இஃது-பொதுவூழ்)

தம்பி,சசீவா!,சோபாசக்தி என்ன சொறுடிங்கரது பிரச்சனைகளை அல்லது பின்னங்களைப் போட்டா கேள்வி எழுப்பியுள்ளார்?-நான் சளாப்ப!

அவரைப் பொருத்தவரை,தன்மீதான அரசியல் உரையாடலையொட்டி,அவர் இருப்புச் சம்பந்தப்பட்டதும்,அதுள் எழுந்துள்ள அடையாள நெருக்கடிகுறித்ததுமான புரிதலில் அவர்சார் அரசியலைக் குறித்து நாம் எதிர்கொள்ளும் போக்குகளோடு நெருங்க முனைகிறார்.அல்லது, நொருக்க முனைகிறார்.இது,எனக்கு,எப்போதும்போலவே விருப்புக்குரியதும்-என்னை உரைத்துப் பார்ப்பதற்கும் உவகையானதே!(இது"நான்" எழு நிலை).

அன்புச் சோபாசக்தி, "உங்கள் அரசியல்-எழுத்துப் பரந்தபட்ட மக்களது அரசியல்வாழ்வோடு இயங்குகிறதா?அல்லது நீங்கள் குறிப்பிட்டவொரு நிலையில் அத்தகைய எழுத்துக்களை மக்களது பரந்துபட்ட நலன்களோடிணைத்துப் பரந்துபட்ட மக்களையொடுக்க முனையும் ஆதிக்க சக்திகளை மக்களுக்கு மேய்ப்பர்களாக்கும் முயற்சியில் வியூகம் அமைப்பவரா?"(...)

ஒடுக்குமுறைகளை உடைத்து முன்னகர முனையும் எம் மக்களக்குக் குறுக்கே நின்று கல்லெறிவது எனக்கு உடந்தையானதில்லை!உங்களுக்கும் அப்படியே எனக்கொண்டு உங்கள் கேள்விக்கு வருகிறேன்.

உங்களை நோக்கி(சோபாசக்தியை நோக்கி)பல்வேறு கட்டுரைகளை-கேள்விகளை நண்பர் வளர்மதி எழுதியுள்ளார்-எழுப்பியுள்ளார்.அவருடைய கேள்வியானது உங்கள் அரசியல் நடாத்தையைக் கேள்விக்குட்படுத்துபவை.சமீகாலமாக நான் கவனித்துவரும் எழுத்துக்களில் முக்கியமானது வளர்மதியின் எழுத்துக்கள்.எப்படி உங்கள் எழுத்துக்கள் நமது மக்களது வாழ்வோடும்-விடுதலையோடும்,அவர்களது அரசியலோடும் விளைவுகளை ஏற்படுத்த முனைகிறதோ அதேயளவு உங்களது அரசியல் நடாத்தையைக் கேள்விக் குட்படுத்துவது வளர்மதியின் கேள்விகள்.

இந்தப் புள்ளியில்,நீங்கள் இதுவரை எதுவுமே நடாவாததுபோன்றிருந்துகொண்டு, மற்றவிடயங்களில் மூழ்கும்போது(அப்படிக் காட்டும் நிலையில்) நான் வளர்மதிக்கு உரைக்கிறேன்"சோபசக்தியோடு விவாதிக்க முனைவது வீண் விரயம்" என்று.அத்தகைய எழுத்தை முன்வைக்கும் பின்னூட்டமும் விருப்பமாகிறது!

வளர்மதிக்குப் பதிலுரைப்பது உங்களதுரிமை.ஆனால்,சமீபக காலமாக நீங்கள் இயக்கும் அரசியல் உரையாடல்உலகத்தால் ஒடுக்கப்படும்தமிழ்பேசும் மக்களது எதிர்காலத்தோடு சம்பந்தப்பட்டதென்பதால்,நீங்கள் பொதுத் தளத்தில் வளர்மதியோடு உரையாடவேண்டும்-அவர் முன்வைத்த அனைத்துக் கேள்விகளுக்கும்,தாங்கள் குறித்த அரசியல் நடாத்தைக்கும் பதிலுரைத்தே ஆக வேண்டும்.இத்தைய கடப்பாட்டைத் தட்டிக்கழித்துவிட்டு என்னிடம் பதில் கேட்பதன் நியாயத்தோடு வந்திருப்பது சரியே!அதேபோன்று,நானும்"சோபாசக்தியோடு உரையாடுவது விரயம்"எனச் சொல்வதும் தங்கள் நிலையினது விளைவுதரும்எனது புரிதலில் எனக்கும் நியாயமாகிறது!

இந்த எனது "நியாயத்தை"தப்புவென நிரூபிப்பது உங்கள் கையில்.அதைச் செய்து(வளர்மதிக்குப் பதிலுரைத்து) என்னைக் கேள்வி கேட்பது இன்னொரு தளத்தில் இயலுமாகும் சோபாசக்தி.அதுவரையும்...



ப.வி.ஸ்ரீரங்கன்.

13.11.2010

Friday, November 05, 2010

வரதராஜபெருமாளு அண்ணாவுக்கு ஒரு ஜோர்...

"ஆக்கபூர்வ"வரலாறின் வரதராஜபெருமாளு அண்ணாவுக்கு ஒரு ஜோர்...


"வந்தாரய்யா வரதராஜப் பெருமாளு-சொன்னாரய்யா மன்னிப்பு,தருவாரய்யா பாரதச் சோப்பு!
"

"நாணயவான் வாறாரூ செம்பை எடுத்துவை, உள்ளே!"



என்றுரைத்துக் கட்டியமொன்று கடை-வாய் கிழித்து:


இன்றெமது காலச் சூழலானது சூதுநிறைந்த கருத்தியற்றளத்தையும்,புரிதற்தடுப்புக்கான மாறாட்டங்களையும் கொண்டிருக்கிறது.இதன் பன்முகத் தாக்குதலானது பின் தங்கிய சமூகச் சக்திகளிடம் மிகவும் மோசமாவொரு உளவியற்றாக்குதல்-காயடித்தல்வகைப்பட்ட "மாதிரி பரப்புரைகள்"மலிந்து கிடக்கிறது.


இந்தக் கருத்தியற் தளத்தின் எல்லையிலிருந்துகொண்டு மக்கள் சார்ந்த மதிப்பீடுகளை அணுகுவது மிகப் பெரும் ஆபத்தானது.இதை முன் நிபந்தனையாகக் கொள்வோமானால் கருத்துகளின் மைய வலுவானது அந்தந்தச் சமுதாய இருப்பை ஆட்டிப் படைக்கும் அனைத்துக் கூறுகளையும் மட்டுப்படுத்துவதும்-புரட்டிப்போடுவதும் உணரப்படுவேண்டும்.


பாரதக் கரச் சேவைக்கு "பாரு நான் வந்தேன்"என்றபடியே பாட்டுக்கட்டும் பெருமாள்களுக்குப் பல்லவி எடுத்துவிடப் பெரி-அரிய,வலிய-சுழிய சுண்ணாம்பு டப்பாக்களும் களமாடிச் சேர்க்கும் கூட்டமெல்லாம் "மண்டை மூட்டைகளை" மறந்து குலாவிக் குஞ்சம் முடிய...நாமும் நரகத்திலிருந்து அவர் பாதம் நோக்கி-நோக்கி....


அவர் விபரஞ் சொல்ல முனைந்து...


சிங்களமும் சினைகொள் சங்கமித்தையும்களிகொள்பொழுதுக்குள்...




மண்டைகளில் தடம் புரண்ட விரல்களின் நர்த்தனத்துள் குருதி நெடில்ஓய்ந்தே போனதென்றால் அப்பப்ப மூக்கும் சளிகட்டிக்கொண்டதாக எடுத்தாண்டு கொள்(ல்)க! முன்னைய அரிய க(கொ)லைக்காகப் பின்னைய பொழிவுகள் எல்லாம்-எல்லோர் பெயராலும் வாசித்து,வாசித்து வஞ்சிக்கவென...இதற்குள் கூழ்ப்பானைப் பல்லியாக விஸ்வலிங்கம் சிவலிங்கம், வினை தீர்க்கும் வேலொடு இராமராஜ பகவதர் அண்ணாச்சி,படு அமர்க்களமாக மந்திகள்கூட்டு.பாரிசீல் சந்திப்பு,வானொலியில் வஞ்சிப்பு என்றெல்லாப் பக்கமும் வரதரின் வாய்மொழிப் புலமைகாண் குஞ்சுகள்...


அடாத மழை பொழியுங்கால் விடாத நாடகம் நடாத்தியே காட்டும் ஜில் ஜில் சோனியா-ராஜபக்ஷ தியேட்டர் கம்பனி,நடுவினில் கோமாளிக் குஞ்சுகளாகக் கொக்குத் தலையில் வெண்ணை தடவிப்..."பேச்சு வார்த்தை"பாடம் நடாத்த தென்கோடிப் பேரரசர் தெவிட்டாத டக்ளஸ் மாத்தையா.கிழக்குத் தமிழ் செழித்தோங்க ஜனநாயகப் பசளையிடும் பிள்ளையாரூ-கருணாகர மாத்தையா சிறப்பு அதிரடிப் படைகள் திரண்ட வெண்ணையில் முகத்தைப் புதைத்தபடி வரதராஜ பெருமாளு...இழவு வீட்டில் பெயர்ப் பலகைத் தட்டியை நிறுத்திய ஒரு கணப் பொழுதில் ஓய்ந்தது யுத்தம்,ஒழிந்தது பஞ்சம் கிழக்குக் குடிசைகளுக்குள்-வடக்கு பங்களாக்குள்...அநுராதபுரத்துள் சிங்களத்து உச்சி பிளந்து எல்லாளனைக் காட்டிய முள்ளிவாய்க்கால் பேரரசர் பிரபாகரச் சக்கரவர்த்திக்குப் பின்னாளில் மண்டை பிளந்து துட்டக்கைமுனுவைக் காட்டிய கேடிகளில் பெருமாளும் ஒருவரெனக் கொண்டே தீரவேண்டுமெனப் பொன் கரம் கூப்பிப்பொருளுரைக்கும் நக்கீரப் பேரர்களது நாவலிக்கும் நர்த்தனத்துள்நஞ்சு வைக்கும் நல்ல பொழுதுகளும் நம்மை நெருங்கும்.


முள்ளி வாய்க்காலில் கிள்ளி வைத்த தலையும் பிளந்து,தாகம் தொலைத்த துட்டக்கைமுனுவுக்கு சிங்களத்தில் எடுத்துச் சொல்ல சிங்களமும் கற்றுத் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு தர வந்துள்ளார் தங்கத் தலைவர் வரதராஜ பெருமாளு.தெவிட்டாத தென்பாண்டித் தமிழிலுரைக்கும் அவர் பாலான "புகழ்" மாலை கட்ட வட்டக் கலரில் வர்ணந்தீட்டவும்"ஆக்க பூர்வமான" வரலாறொன்றுண்டெனச் சொல்லப் பலருண்டு பாரீசு மாநாகரில்-மாத்தையா மகிந்தா மடக்கி வைத்த செருப்புக்குப் பட்டில குஞ்சமெனத் "தடுக்குப் பாய் எடுத்து உள்ளே வை நாணயவான் வாறானெனச் சொல்ல" வம்பு -ஏன்? ...ம் கொட்ட எங்களுக்குஞ் சந்தர்ப்பம் வருகிறது.இந்த ...ம்---க்குள் பம்முகிற பேரவா பின்னைய பொழுதொன்றில் காகோலை கொண்டெவரை கொளுத்துமோ யான் அறியேன் அச்சோபாவே!



விதியே விதியே வினை முடிப்பாயோ?விண்ணஞ்சும் அதிர்வேட்டுப் போர்முழக்கும் விதித்தப் பல கட்டளைகளில் காலம் அறுந்து சிதைந்தது,சிரித்த தந்தையின் உணர்வுக்குள் சில்லறைகள் கல்லறை அமைக்க,கடுகு தேடிய தாயோ"மாவீரர் மரணம்"அற்ற வீடுகளும் இருக்கக் கண்டாள்.மடியிலே சுமைகொண்ட புலம் ஐந்தும் வதை செய்யப் புக்கினாள் தேசியக் கோட்டை அன்று!செம்மறிவுக் குலப் பேரரசன் முன்னாளும் இன்னாளும் முதலமைச்சுப் பொடிசூடிய திம்புத் திட்டத்து தும்புக் காவடிக்குத் தோள்கொடுத்தான் கொரிலாக்குஞ்சு!பாரதமே-பாரதமே பார் நீ பக்காப் படைப்பு நிலைக் களன்தொடு பங்காளிப் பேரிரைச்சலை!பல்லாக்குத் தூக்க இப்படியும் ஒரு கூட்டம்.பரதேசி-பரதேசி, மோட்டுக்கணக்கொன்றைக் கூட்டி நீ கழிக்கையியே சொருடிங்கர்தம் பூனைக் குற்றுயிரும் பெட்டிக் கதிர் வீச்சும் சுட்டும் பொழுதுக்குள் வாழ்தலும்-சாதலும் ஒருதடவையில்... தமிழ்ப்பெருங்குடியும் இங்ஙனமே-இங்ஙனமே!


கடன்பட்ட நெஞ்சு:


முன்னொரு காலத்தில் முக்கி-முக்கி நானெழுதிய பிச்சைப் பொடி நடைக்குள் குப்பர உன்னை அமுக்கி:


"இராணுவம் தேசியக் கொடிக்கு மட்டும் மரியாதை செய்யும் பட்சத்தில் தனி நபரின் மரணம் எதையோ உரைத்துச் சொல்கிறது".-காப்டன் கூறிக்கொணடான்


"ஒரு இராணுவப் படையணி நகரொன்றை மட்டும் பிடித்து எதிரியை வேட்டையாடும்போது இவ்வூழ்வினையுள் ஏதோவொன்று நிலவுகிறது."-ஜெனரல் கூறிக்கொண்டான்.


தேசாபிமானி கூறினார்:-" இறுதி மனிதன் இருக்கும்வரை நாம் போராடிச் சாகவேண்டுமானால்,இச் சாவு தாய்நாட்டிற்காக மட்டும் உபயோகமாக வரவேண்டும்".


தூரநோக்குடைய பண்பாட்டு வரலாற்றியலாளர் தூரப்பார்த்துவிட்டுக் கூறுகின்றார்:" எப்போதாவது இரு நாடுகள் -இரு இனங்கள் சுயமாகச் சிதைவுற்றுப்போனால்-அவை வீணான காரணங்களுக்காகச் சிதைவுற்றுப்போகவில்லை.உலகம் தன்னைத் தானே ஞாபகப் படுத்திக் கொள்வதும்,புதிதாய் மலர்வதும்,மேல்நோக்கி வளர்வதும் வேண்டும்.கூடவே தனது இரத்தக்கறை படிந்த மனித வரலாற்றை கழுவியாகவேண்டும்".


முதிர்ந்த புத்திஜீவி தனது குளிர்ந்த விரல்களால் நீண்ட தாடியைத் தடவியபடி:-" குழப்பம் நிறைந்த பழைய முதலாளியத்தை- நவகொலனித்துவத்தை எடுப்போம்,உலகம் பூராக மீளவும் இவர்களால் குற்றச் செயல்கள் செய்ய எப்படிச் சாத்தியமாச்சு?தோட்டத்துக்குப் பசளையிடுவதுபோன்று மனிதம் பலியாக்கப் பட்டு-கொலையாக்கப்பட்ட பூமிப் பகுதியை மூடி மறைத்து, காத்திராது தங்கள் அறுவடையை செழிப்பாக்கி வளர்த்தெடுக்கிறார்கள்.கூடவே பாசாங்கு விளையாட்டுப் போட்டிகளால் வேறு மக்களைச் சுரண்டியும்,அவர்கள் மூளையைச் சலவை செய்தும்...!" மீளவும் தலையைச் சொறிந்தார்,வானத்தைப் பார்த்தபடி.


கடவுள் கூறிக்கொண்டார்:-" எனது சூரியக் குடும்பம் இருபத்தி நான்காவதுக்கு,அரேபியும்-ஆங்கிலமும்-மூத்த குடித் தமிழும்... தொலைந்தது இந்தப் பூமிக் கிரகம்.இது சௌபாக்கியமான அர்த்தம் நிறைந்ததாக இப்போது தோன்றுகிறது. சிலவேளை இப்படித் தொலைந்தது நன்மையே! என் விருப்பத்தின் பொருட்டு எப்போதாவது இந்த எல்லாச் சூரியகுடும்பத்தையும் பிரபஞ்ச ஒழுங்குக்கு பொருந்தி வரக்கூடியதாக மாற்றிக்கொள்ள..." ஆத்திரப்பட்டுக்கொண்டார்.

"என் பிள்ளைகள் பத்திரமாக மீளவும் வீடு திரும்புவார்களென்றால் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று விட்டுவிடலாம்".- வன்னியிலிருந்து திருமதி.சுப்ரமணியம் கூறிக்கொண்டார்-அன்றும்,இன்றும்.

வேறு-வேறு:

கொய்பிள்ஸ்சும் தோல்விகாண,கோவேந்தர் வரதருக்கு வாழ்த்துரைக்க வந்தானே எம் மகராசா புஷ்பா அண்ணாவின் புனைவொன்றைக்காவிக் காவி... கப்பலேறிக்கொடும் அஞ்ஞாதவாசத்துள் கொள்ளி வைக்கத் திண்ணைக்கு வந்தான் மண்டையன் வரதராஜப் பெருமாளு.தள்ளி நில்!

வேறுக்கும் வேறான வேடம்:


கே.பி.மாமா மோப்பம் பிடித்து மெல்லச் சொல்லும் அபிவிருத்தியில் எட்டிப் பிடிக்கும் புனர்வாழ்வை புலிக்கு வால் பிடித்த பின்னைய பன்னப் பாய் படுக்கைக்குரியதுகளுக்கு அம்பு வைத்து ஆட்டுகிறார் அவர்கள் புலிப் போராளிகளென. புண்ணாக்குகளும் நம்பிக்கொண்டிருக்க நாடகத்தின் தொடர்கள் நல்ல நடிகர்களைத் தேடுகிறது.இங்கும் அங்குமென சந்திப்பு-ஒத்திகையென மண்டையன் குழுத் தலைவரோ அந்தப் பெருமாளுக்கே தண்ணிகாட்டி மன்னிப்பு வேறு... ரீ.பீ.சீ வானொலியும் வகுப்பெடுக்கும் பித்தளைத் தங்கம் பின்னைய இரவில்மக்களுக்கு அடிப்படை வாழ்வாதார வகுப்பெடுக்க சிரசுகள் பறித்த ஆவிகள் தொடரும் அந்தா-இந்தா,முன்னாள் முதலமைச்சர் மண்டையன் குழுவின் வேட்டைப் பொழுதில்...


15 வருடத்து அஞ்ஞாத வாசத்து "தோ லருக்கு"ப் பொன்னாடை போர்த்துவதற்கு இன்னொரு பொதுவரங்குகொள் நல்ல கலைஞர்கள்-கவிஞர்கள் பெருக்கெடுக்க பண் ஊதத் தேவையென பெரு விளக்கஞ் செய் புன்னையில்லா பேரளகர்களும் இங்கே உண்டு-உண்டு!"கொல்லையில் கிடக்கும் மண் குடத்தை எடுத்து நீ உள்ளே வை-உள்ளே வை!"கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்டால் நீ அழுதுண்டு அடுக்கிவிடு அப்பன்,ஆத்தையில்ல ஊருக்கு அடுப்பெரிக்கவே வக்கில்லையென.

கொட்டைபோட்ட சிரசு அறுப்பர்கள் மொட்டை போட்டு நாமமிட 15 ஆண்டுகளுக்கு வகுப்பெடுத்து நம்மையெல்லாம் தேடிக்கொள்ள நடரோட்டில் ஆண்டி வேறு அகப்பட்டானே!

ஆட்கொள்ளல் கண்டு அரண்ட பொழுது:

"டொலர்களில் பரிமாற்றும் மேற்குலகில் செய்வததென்றால் பிடித்தசிறார் வீடு மீள்வாரென" தமிழ் நியாயம் சொல்ல நிலவு, அடிவானில் அமிழ்ந்து, வானம் சிவந்தது-அன்று! இன்று, வர்ணக் கலவையில் வகுப்பெடுக்கும் தோரணையில் எங்கள் நாவலனும் என்ன அழகோ எப்படியழகோ!எட்டுத் திசையும் இருண்ட பொழுதில் பாரதத்தின் பாட்டி "காக்க வடை சுட்ட கதை கேளென" பக்குவமாய் பாக்குத் தறித்து பாடையில் போக்குவதற்கு தேசிக்காய் தேடியெடுத்து அரிந்து அப்பால் வீசுகிறாள்.


பிற்குறிப்பு:

எனது கைகளிலிருந்த வறுத்த வேர்க்கடலை வாயிலிருந்து ஏதோவொரு அமிலமாக வெளிச்சத்துக்கு வந்தது.

இலங்கையரசு தமிழ் மண்ணை மட்டுமல்ல அழித்து வருகிறது என்ற தொடரில்... வடக்குக் கிழக்கு மாகாணங்கள் தமிழருக்குச் சொந்தமில்லையென்றும் அழுது வடிந்த ஜீ.ரிவி மக்களை,குடும்பத்தலைவரை,சிறார்களை,பெண்களைக்குதறி... பத்திரிகையாளரைக் கைதும் செய்து கஷ்ரடியில் வைத்துக் கொல்வதென்றதை விட்டுவிட்டதாகப் புலிகள் சர்வதேசத்துகுச் சொல்லும் செய்தியும் தோன்றக் கண்டார் கையிலை மலையில்.


வாஸ்த்தவம்தான்!,வாடிய பயிரைக் கண்டபோது வாடியவர்கள் "அவர்கள்"மட்டுமல்ல நம்ம தேசத்துச் சிங்கள-தமிழ் "தோலர்களும்"தாம்.

"தாங்காதம்மா தாங்காது,கொலைத்தாகம் தீர்ந்து போகாதம்மா போகாது!"தம்பிக்குத் தங்கைக்கு பெட்டிக்குள்ள பெரு வீரம்,பேரென்னவோ"பெரியாருக்கு"-போருக்குள்ளே

புகழுண்டு, ஊருக்குள்ளே இழவுண்டு!

நோட்டு கனவு கொட்டக் கொட்ட வடக்கு மறுத்துக் கிழக்கைப் பிரி,வலிந்த பக்ஷ வாரித்தந்த "தீர்வை"மாகணங்களுக்குள் கண்டபோது சபைக் காச்சல் ஏறிய டிகிரியில் சொக்கிய குருதி நினைவைப்பறிக்க மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனை செய்ய... வந்தாரய்யா வரதராஜப் பெருமாளு-சொன்னாரய்யா மன்னிப்பு,தருவாரய்யா பாரதச் சோப்பு!


ப.வி.ஸ்ரீரங்கன்

05.11.2010