இன்று,திரு.சபா நாவலன் தொடர்பான அவதூறு அரசியல் மிக நெருக்கடியான மனவுளைச்சலைத் தருகிறது.இதுவரை நான் கொண்ட அரசியல்,அதன் தொடரில் ஏற்பட்ட தோழமைத் தொடர்ச்சி அந்தத் தளத்திலான அரசியல் வியூகம், அது வளர்த்த கருத்தியல் அணுகுமுறையெல்லாம் சந்தர்ப்பவாதமான ஏதோவொரு சதி அரசியலாக விரிந்து மேவுகிறது.இது நம்முன் விரிந்து வளர்ந்து மீளவுமொரு இருண்ட அரசியலைச் செய்யும் நெருக்கடிக்குள் மக்கள் நல அரசியலையே கருவறுக்கும் அளவுக்கு நேர்மையீனமாகக் கிடக்கிறது.
சந்தர்ப்பத்துக்கேற்றுத் தமது கருத்தியலை வலுப்படுத்த அனைத்து மக்கள் விரோதக் கருத்தியலை வளர்த்தவர்களோடும் இணைகிறது.தமது கருத்துக்களது நேர்மையீனத்துக்கு மறைப்புக்கட்ட தாயகம், தேசம்நெற், தேனியெனவும், புரட்சிகரமாகச் சிந்திக்கும் பல இணைய எழுத்தாளர்களையும் அது உள்வாங்குகிறது.அன்று எதையெல்லாம் நிராகரிக்கும்படி எம்மை வற்புறுத்திச்சோ அதையெல்லாம் தமது இருப்புக்காக அது தொடர்கிறது.
இது,சந்தர்ப்பவாதமில்லையா?
உண்மையான மக்கள் நல அரசியலுக்கு இந்த வகை அரசியல் சூதாட்டம் அவசியமில்லை என்பது எனது கருத்து.மக்களைச் சொல்லிச் சதியமைக்க முனைபவர்கள் தமது எஜமானர்களைத் தம்மீது தொடர்ந்து நம்பிக்கை வைக்கும்படி ஜீவமரணப் போராட்டம் நடாத்துகிறார்கள்.இதன் தெரிவில் உண்மையாக இயங்க முனையும் ஒவ்வொரு தனிநபர்களையும் ஏமாற்றமுடிந்தால்-ஏமாற்றுகிறார்கள். இல்லையேல் கரி பூசும் அரசியலை கட்டவிழ்த்து விடுகிறார்கள்.இதுவுண்மையில்திரு.சபா நாவலன் மீது இத்தகைய அரசியலைக் கட்டவிழ்த்துள்ளதா?
மிகச் சிக்கலான கேள்வி இது!
இந்தக் கேள்விக்கு விடைதேடுவது அவசியமானது.எமது மக்களது குறைந்தபட்ச அரசியல்எதிர்காலத்துக்கு இது அவசியமானது.நாம் எம்மீது கட்டவிழ்த்துவிடப்படும் உலக வல்லாதிக்கத்துக்கெதிராக எதிர்ப்பு அரசியலை நேர்மையான முறையில் கட்டியெழுப்பும் விசும்பு நிலையில் இருக்கிறோம்.இந்த முளையைக் கருக்கிவிடும் சேறடிப்பை எவரது தேவைக்காக முன்னெடுக்கிறார்கள்?
உண்மையில் நாவலன் குற்றமற்றவரா?:
அவரது எதிர்வினைமூலம் அதை அவர் நிரூபித்திருக்கிறார்.தான் எந்தத் தவறும் இழைக்கவில்லையெனச் சொல்லியிருந்தும் தமிழரங்கம் அவரைக்குற்றக் கூண்டில் ஏற்றியுள்ளது.இதைத்தொடர்ந்து தமிழரங்கும் சம்பத்தப்படுத்திய மக்கள் கலை இலக்கிய கழகமே தமது எதிர்வினைமூலம் நேரடி விவாதத்துக்குத் தமிழரங்கத்தை அழைத்திருக்கிறது.உண்மையான மக்கள் நல அரசியலை முன்னெடுப்பவர்கள் அந்தச் சவாலை எதிர்கொள்ள வேண்டும்.நாவலனை விடுதலை செய்வது மாற்றுக் கருத்தியற்றளத்துக்கும்,நமது மக்களுக்கான எதிர்கால இடதுசாரிய அரசியல்விருத்திக்கும் அவசியம்.
தொடர்ந்த நமது மக்களைத் துவசம் செய்யும் அரசியலை எதிர்கொள்ள போராட்ட முன்னோடிகள் அவசியமானவர்கள்.புலம்பெயர் சூழலுள்-தளத்துள்,எவ்வளவுக்கு இரயாகரனது தேவை அவசியமோ அதில் சிறிதுகூடக் குறையாத தேவை நாவலன்சார்ந்தும் இருக்கிறது.
இந்தப் புலம்பெயர் தளத்தில் மக்கள் நல அரசியலுக்கான இந்தத் தேவையில்,மக்களது விடிவுக்காக அன்று தொடர்ந்த போராட்ட அரசியலை இன்றும் நான் தொடர்ந்தே வருகிறேன்.பாசிசத்துக்கு முன் பணியாது கருத்திட்டவன்.எனக்குத் தனித்தியங்குவது என்பது எல்லையுடையதென்பது புரிகிறது.தோழமையும்,அணி திரள்வும் அவசியமானது.அதை மறுத்து நமது விலங்கை ஒடிக்கும் அரசியல் ஒர் அடிகூட நகர முடியாது.ஆனால்,இந்த அணிதிரள்வு மீளவும் அந்நியச் சக்திகளது காலடியில் மக்களைக் கட்டிப்போடும் அரசியலாகத் தொடர்வது சகிக்க முடியவில்லை!இதை வெற்றி கொள்ளத் தொடர்ந்து கருத்தியல் யுத்தம் புரிவது தவிர்க்க முடியாதது.அதைத் தொடர்வதே எனது பணியாகக் கிடக்கிறது. தொடர்வேன்.இதற்காக எவர்மீதும் சேறடிப்பதென்பதைவிட அவர்களது உண்மைகளைக் கண்டடைவதென்பதே எனது குறிக்கோள்.
எவர்மீதும் நான் தனிப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்திருந்தால் அது நிச்சியம் சம்பந்தப்பட்டவரது நடாத்தையில் அவர் மக்கள் விரோதியாகவே இருந்திருப்பார்.அங்ஙனம் இன்றி, எவர்மீதும் ஆப்பு வைப்பது எனது அரசியல் வாழ்வில் நிகழ்ந்திருக்க முடியாது.
நான் பலதரப்பட்ட கருத்தியலைப் புனைந்திருக்கிறேன்.அது மக்களுக்கும்-பாசிசத்துக்கும் இடையிலான தொடர் முரண்பாட்டில் பாசிசத்தை எதிர்கொள்ளும் முகமாக எனது அறிவுக்கெட்டியபடி புனைந்திருக்கிறேன்.இதற்கு அதீதமான மகத்துவம் ஒன்றுண்டென்றால் அஃது கொலை அரசியலை-சூது அரசியலை அடியோடு வீழ்த்த முனைந்த கருத்தியல்-எதிர்ப்பு அரசியல் என்பதே!இதை நான் பகிரங்கமாகச் சொல்வேன்.
என்னைப் போல் கருத்திட்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.அவர்களில் பலர் புலிகளை எதிர்த்துவிட்டு, அதைவிடப் பாரிய பாசிசக் கூட்டோடு தமது உறவுகளை வளர்த்து விட்டிருக்கிறார்கள்.புலிக்குப்பதிலாக-சமமாக, இன்னும் அதிகமாக மக்களையொடுக்கும் இலங்கை அரசோடு கைகோர்ப்பது அவசியமென்று அவர்கள் வாக்கு மூலம் தருகிறார்கள்.மக்களை நேசிப்பவர்கள் இப்படிச் சோரம் போக முடியாது. அது,புலிக்குக் காவடி எடுத்த அரசியலுக்கும்,மகிந்தாவுக்குக் காவடியெடுக்கும் அரசியலுக்கு மட்டுமல்ல மற்றெந்த அந்நியச் சக்திக்கும் காவடி தூக்கும் அரசியலுக்கும் பொருந்தும்.
மானுட நேசிப்பு:
மானுட நேசிப்புக்கு நிகராக எந்த பொருள்சார் மதிப்பீடுகளும் சமுதாயத்தில் நிலைபெறமுடியாது!அங்ஙனம்,மக்களது மாண்பு குறித்து இதுவரை இப்பொருளாதார உலகஞ் சிந்திக்கவுமில்லை.மனித சமுதாயமென்பது முழுக்கமுழுக்கப் பொருளாதார இலக்குகளை நோக்கித் தமது வளர்ச்சிப்போக்கைத் தகவமைத்தன் விளைவாக இன்றும் போர்கள் தொடர்கின்றன.இப்பிரபஞ்சத்தில் மனிதர்கள் இருப்பதற்கான-வாழ்வதற்கான அனைத்து வளங்களையும் இப் பூமி வைத்திருக்கிறது.எனினும்,கொடியவர்கள் அதைத் தத்தமது சொத்தாக மாற்றியபின் மானுட இருப்புக்கு எந்த மகத்துவமும் வந்தபாடிலில்லை!
இது,குறித்து மணிமேகலையில் சாத்தனார் இங்ஙனம் அழுதுவடிகிறார்:
"ஆரும்இலாட்டியேன் அறியாப்பாலகன்
ஈமப் புறங்காட்டு எய்தினான்-தன்னை
அணங்கோ பேயோ ஆர் உயிர் உண்டது
உறங்குவான் போலக் கிடந்தனன் காண்"என-
"அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணா
பிணங்கு நூல் மார்பன் பேது கந்தாக
ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது
மா பெருந் துன்பம் நீ ஒழிவாய்"-மணிமேகலை,சக்கரவாளக் கோட்டம்:145-150-சார்த்தனார்.
யாருடைய ஆதரவுமில்லா என் அறியாப் பாலகன்(இன்று,உலகே கைகழுவிய தமிழ் மக்களைப்போல) ஈமத்தையுடைய சுடுகாட்டு வழியே( மாற்றுக்கருத்தாளர்கள்,புரட்சிவாதிகள்-தமிழீழப் போலிக்கோசத்தினூடாகப் பயணித்தது போன்று)சென்றனன். அணங்கோ அல்லது பேயோ அவனது ஆருயிரை உண்டுவிட்டது."இங்கு நோக்கு,இந்தா உறங்குபவன் போலச் செத்துக்கிடக்கிறானே-அவனைப்பார்!" என்று தாயான பேதை கோதமை அழுது புலம்ப,"அடியேய் பேயும்,அணங்கும் உயிருண்ணாதடி பேதையே,பெண்ணே,இஃது,நெருங்கிய முப்புரி நூலை அணிந்த மார்புனுடைய சார்ங்கலனது அறியாமையே பற்றுக் கோடாக,அவனது ஊழ்வினையானது வந்து உயிரைக் குடித்து நீங்கியது.ஆதலால் பெண்ணே நினது மிகப் பெருந் துயரை நீக்குவாயாக!"என்றது சம்பாபதி தெய்வம்.
அறியாமை,
அறியாமை,
அறியாமை!
ஆம்!,அறியாமை, கேடு விளைவிக்கும்!!அன்றே புனைவினூடாகப் பக்குவமாகச் சொன்னார்கள் பெரியோர்?
"ஆமா,சொன்னார்கள்!அதற்கென்ன இப்போது?"கேள்வி எழுகிறதா? நல்லது!
கேள்விதானே அறிவினது மூலவூற்று?
கேள்விகள் தோன்றணும்!
நமது மூடர்களது தெருச்சண்டை,"புரட்சி"ஆளுக்காள் ஆப்பு வைத்த தமிழீழப் போர் குறித்துக் கேள்வி எழுந்தே ஆகணும்.
இது,தோழமையைக் குழிதோண்டிப் புதைத்தது.ஒரு தளத்தில் ஒருமைப்படும் சந்தர்ப்பங்கள் பலவெழுந்தபோது அதை நிர்மூலமாக்கியது.அந்த நிர்மூலமானது தனிப்பட்ட தமது அரசியல் இலாபத்துக்காகவே நடாத்தப்பட்டு வருகிறது.அதை தூக்கி நிறுத்தியவர்களில் நானும் ஒருவன்!கடந்தகாலத்தில் புலிகளுக்கு முண்டுகொடுத்து வேவு பார்த்தவர்கள் இப்போது உலக அதிகாரவர்க்கத்தோடும், புரட்சி-மாற்றுக்கருத்தென்றவர்கள் இலங்கையினதும் அதன் இன்றைய நட்பு நாடுகளோடும் கைகுலுக்க முனைவதன்தொடரில் நம்மையெல்லாம் ஏமாற்றுகிறார்கள்.
இந்த வகைக் குழிப்பறிப்புகள் யாவும் மக்களது நலன்-உரிமை,புரட்சியெனச் சொல்லியே அரங்கேறுகிறது.இது,இலட்சம் உயிர்களை உண்டு கழித்தும் இன்னும் நமது மக்களுக்குத் துரோகமான அரசியலேயே செய்கிறது.
இந்த ஊழ்வினைக்கு யாரு சொந்தக் காரர்?:
இப்போது,தமிழீழம் கானல் நீராகக் காடு தாண்டும்போது,அதைச் சொல்லிக் கொலைக்களத்தை ஆரம்பித்தவர்கள், அடுக்கடுக்காகத் தாமும் உயிரழித்து மறைந்தபோது,தமது தவறுகளைப் பொதுமைப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.ஏகப் பிரதிநிதிகளாக மாறுவதற்கு எல்லோரையும் வேட்டையாடி தின்றோய்ந்தவர்கள்,அதிகாரத்தைச் சுவைக்கும்போது தமக்குமட்டுமே அதைக் கையகப்படுத்தினர்.இப்போது,உழ்வினை திரண்டு அவர்களைப் பதம்பார்க்கும்போது:
"ஐயோ,இன்றைய இவ்விழி நிலைக்கு நாம் மட்டுமா பொறுப்பு?இல்லையே,நீயுந்தாம் காரணம்"எனப் புலம்ப அறியாமைப் புலிக்குப் பலபேர் போட்டியாக...தமிழ்பேசும் மக்களது அழிவில் அரசியல் செய்பவர்கள் புரட்சியெனச் சொல்லியே தோழமைகளைத் தொலைப்பதற்கான தனிநபர் முனைப்புகளை நமக்குள் விதைத்தார்கள்.அந்த வினையின் தொடர்ச்சியானது இன்றுவரை ஒருவரையொருவர் அழிப்பதிலும் சேறடிப்பதிலும் தொடரும்போது இந்த அரசியலது மூலமே "ஈழப்போராட்ட"அராஜகத்திலிருந்தே தொடர்கிறது.மக்களை வேட்டையாடித் தமது நலன்களை முதன்மைப்படுத்திய கடந்தகால இயக்கவாதம் இன்று எல்லோரதும் முகத்தில் ஓங்கியடித்துத் தம்மைமட்டும் தூய்மைப்படுத்தித் தமது எஜமானர்களது வழிக்கான தெரிவுகளைக் கொண்டியங்குகிறது.
இது,யாழ்ப் பல்கலைக்கழகத்துக்கு துணைமுதல்வரைத் தெரிவதிலிருந்துகூட அதே அரசியலையே தேடிச் செய்கிறது.
அட சிவனே,ஆர்க்கெடுத்துரைப்பேன் இவர் மோசடிகளை?
அறியாமை,பகட்டு,பேரவா,பதவி வெறி,பிடித்துக்கொண்ட "பிரபாகரன்கள்" எல்லாம்அப்பாவிகளாகி விடுகிறார்கள் நம்மில்பலரிடம்.இத்தகையவர்கள் நடாத்தும் இணையங்கள்-கட்சிகள்-கூட்டுக்கள் யாவும் மக்களுக்கான அரசியலைச் சொல்லியே புரட்சி-புரட்சி என்கின்றன.ஆனால்,இவர்களது பின்னால் நம்பிப் போகமுடியுமா? நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் ஒரு கூட்டத்தின் கைகளில் அதீதமான நிதி-ஆட்பலம்,ஊடகப்பலம் இருக்கிறது. இந்தப் பலத்தை ஏற்படுத்தி இயக்கும் அந்நிய அரசவியூகமானது ஏதோவொரு நலனினது தெரிவிலேயேதாம் இவர்களை ஊட்டி வளர்கிறதாகத் திரும்பத் திரும்பச் சொல்கிறேன்.எனது இந்த வாதமானது கடந்தகால விடுதலைப் போராட்டத்தைத் தமது கைகளில் எடுத்த இயக்கவுறகளது செயற்பாட்டிலிருந்து சொல்வதாக எவரும் கருதவேண்டாம்.இன்றைய உலக அரசியல் வியூகத்தில் புலம் பெயர் "புரட்சி"க்காரர்கள் பலரை மேற்குலக-இந்திய வியூகம் இணைத்தே தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கிறது.இலங்கையில் இயங்கும் அரசுசார்பற்ற நிறுவனங்கள்-அமைப்புகள்போல இந்தப் "புரட்சி-கட்சி"களென அவர்களது நெறியாண்மைக்கேற்ற சிவப்புச் சாயத்தைத் தகவமைத்தே தீரவேண்டியிருக்கிறது.இதுவே,தோழமை-கூட்டு,அணிதிரளும் அனைத்தையும் குறித்துப் புதிய புரிதல்களைச் செய்தே இயங்கவேண்டிய நிர்பந்தத்தைத் தருகிறது.
இந்த அப்பாவிகளது இணையம்-கட்சிகள்,உதிவிநிறுவனங்களது முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ்ந்துபோகும்போது, அதற்கு நாம் மட்டுமே அல்லப் பொறுப்பு.ஆயுதத்தை வழிபட்டுக் கண்கடை தெரியாத கொலைக்காரர்களாகப் புலம்பெயர் தமிழ்ச் சமுதாயம் புலம்பித்திருந்ததன் பயனாக விளையும் இவ்வினை, ஊரெல்லாம் உயிர்குடித்தவர்கள் வரலாறைச் சொல்லிக்கொண்டிருக்கிறது,இன்று!
ஊடகம் நடத்துபவன்(குகநாதன்போன்ற வியாபரிகள்) தனது பங்காளிகளை ஏமாற்றியதற்குத் தான்மட்டும் பொறுப்பில்லை என்கிறான்!அதற்காக, ஆங்காங்கே அவனது ஊதுகுழல்கள் ஒலிக்கின்றன!இதைப்போல்தாம் நமது "புரட்சி-மாற்றுக்கருத்து" வட்டமும் வாந்தியெடுக்கிறது.இதுரை செய்தவற்றையெல்லாம் உரைத்துப் பார்ப்பது அவசியமாகவிருக்கிறது.எனது இதுவரையான எழுத்தில் உண்மைகளையும்,அதன்வழியான தோழமைத்தொடர்ச்சியையுமே தேடினேன்.ஆனால்,அத்தகைய எழுத்துக்களைத் தமது சந்தர்ப்பவாத அரசியற் சூழ்ச்சிக்குப் பயன்படுத்துவதிலேயே "தோழமை"உறவுகள் விரிந்துகொண்டன.கயமைமிகு அரசியல் இது.
இப்போது நாகரீகம்,நட்பு,அரசியல்மாண்பு,மானுட நேயம் குறித்தெல்லாம் பேசுகிறோம்!-குறிப்பாக நான் பேசு முனைகிறேன்.
என்ன சாமான்-மானுட நேசிப்பா?
அப்படியாகவா-நல்லது.
அதென்ன மானுட நேசிப்பு?:
கொலைகளைத் தேசத்தின் பெயரால்-மனிதர்களின் பெயரால்,தேசியத்தின்பெயரால் ஊக்குவிக்கும் அரசியல், மானுட நேசிப்பென்று பம்முவது எதனால்?நானும் இதைத் தொடந்தவன்தானே?ஒருவனைக் கழுத்தறுத்து நான்கொண்ட அரசியலை முன்நிலைப்படுத்தியவன்தானே? அவ்வண்ணமே புலிக்குக் காவடியெடுத்த தீப்பொறி-தமிழீழஞ் சஞ்சிகையெனத் தொடர்ந்தன...
தேசம் நெற்,தமிழரங்கம்,இனியொரு,தேனி எனத் தொடரும் பல் நூறு இணைய ஊடகங்கள் கொண்டியக்கும் அரசியலும் இதிலிருந்து சொட்டும் விலத்த முடியுமா?இவர்களது அரசியலது தெரிவில் வீழ்த்தப்படும் மனிதநேயம் என்னைத் தொடர்ந்து தொந்தரவு செய்கிறது.விட்டொதுங்க முடியவில்லை!எங்கோ தவறு செய்துவிட்டோமெனத் தொடர்ந்து வதைப்படுத்துகிறது.நேர்மையான அரசியலது தொடர்ச்சியே எனது எழுத்துக்கு அத்திவாரமாகும்.என்னைக் குறித்து நொந்து கொள்கிறேன்.
நாம் கணியன் பூங்குன்றனிடம் போவோம்.
மானுட நேசிப்பென்பது(இஃது, வர்க்கஞ்சார்ந்தது.என்றபோதும்...) வெறும் மொழிசார்ந்த உடல்களை மையப்படுத்திய பார்வையாக-உணர்வுத்தளமாக இருக்கமுடியாது.அரசியல் ஊடறுக்கும் உடல்சார்ந்த மதிப்பீடுகளும்,மொழிவாரியாக உள்வாங்கப்பட்ட உடல்களுமே அந்தந்த அரசியற்-பொருளியற் கட்டுமானதிற்குத் தேவையாகப்பட்டுள்ளது. இது, கடந்தவொரு மானுட நேசிப்பானதை கணியன் பூங்குன்றனார் இப்படிப் பாடுகிறார்:
"யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று.
இந்த வாசகமானது மானுடர்களை மொழிவாரியாக-இனவாரியாகப் பிரிப்பதை எதிர்த்த கலகக் குரலாகும்.
எல்லையே இல்லா
மானுட உறவுகளைத் தமிழர்கள்
கொண்ட உறவினது அண்மைய
தடமாய்க் கணியன் மகத்துவம்
புரியாத இனமாச்சு அவன் வம்சம்!
நாம் மனிதர்களாக இருப்பதினால் மட்டுமே மானுடப் பண்பு உருவாகிட முடியாது,மனிதர்கள் உழைப்பால் உயரும் ஒவ்வொரு பொழுதினிலும் மானுடவொற்றுமை உண்டாகிறது.உழைப்பின் பயனே மொழியும்-அரசும்-தேசிய இன அடையாளமும் வந்து சேர்கிறது.இதன் வாயிலாக உருவாகிவிடும் குறுகிய மொழிசார்ந்த அடையாளப் படுத்தல் மனித உடல்களை அரசியல் மயப்படுத்துவதில் பொருளாதாரக் காரணிகளுடாய் காரியவுலகம் செயற்படுத்துகிறது.
இந்த உணர்வுத்தளமானது குறிப்பிட்டவொரு இனமாக-குழுவாக மானுடரைக் கூறுபோடுகிறது.
இந்த நிலையின் ஒரு வடிவமாக மொழி உயிரினும் மேலாகப் பேசப்படுகிறது.
அதுவே, மானுட வாழ்வின் அனைத்து பரிமாணங்களையும்கொண்ட முற்றுமுழுதான குறியீடாகக் காட்டப் படுகிறது.இதன் வாயிலாகவெழும் சமூக உளவியற்றளம் தான் சார்ந்த மதிப்பீடுகளை குறிப்பிட்ட அடையாளப்படுத்தல்களுக்குள் வலு கட்டாயமாகத் திணிக்கிறது.இங்கு, அந்தத் திணிப்பானது குறிப்பிட்டவொரு பொருளியல் நலனின் நோக்கை மையப்படுத்தி அதன் காப்பு-குவிப்பு எனும் தளங்களின் வியூகத்தோடு பரப்புரையாக்கப்பட்டு அரசியல் வடிவங் கொள்கிறது.
இந்தக் குறுகிய பொருளாதாரக் கயமைத்தனம் மானுடரை-அவர்தம் வரலாற்றுறவைக் காவுகொண்டு இன அழிப்புக்கிட்டுச்செல்கிறது.இந்த நிலையின் விருத்தியே இன்று நம்மைப்போட்டு ஆட்டிப்படைக்கிறது.
இங்கே,மத ஐதீகங்களுக்குக்கொடுக்கும் மதிப்பை வாழும் ஆசைக்காக, வன்னியில் அழுது மடியும் அந்த மக்களுக்கு எவருமே கை கொடுக்கவில்லை!"இறுதிவரை-ஒரு தமிழன் இருக்கும்வரை நாம் போராடிச் சாவோமென" ஐரோப்பாவுக்குப் புலம் பெயர்ந்த தமிழன் சொன்னான்.இன்றோ ,நந்திக்கடற்கரையில் செத்த பல்லாயிரம்போராளிகள்-தலைவன் உட்பட அழிந்துபோனபின், சொன்னவன் சொத்துச் சுகத்தோடு பம்புகிறான்.எதுவுமே நடவாததுபோலப் பொருளோடு அமைதியாகிவிட்டான்.அந்தப் பொருளை அளித்தவர்கள் மீளவும் நாடுகடந்த அரசாங்கம்-தமிழீழத்தை மட்டும் பிரதிபலானக இவர்களிடமிருந்து பெற்றுள்ளனர்!
அன்று,புலம்பெயர்ந்தவர்களுக்கு வன்னியில் இருக்கும் மக்கள்சார்பாய்-அவர்களது உயிரைப் போராட்டத்துள்-கொலைக் களத்தில் திணிக்க எவர்கொடுத்தார் அவ்வுரிமையை?
மொழியா,இன உணர்வா,தேசமா?-தெரிந்தவர்கள் உரைக்கக் கடவீர்!
"வேட்கை சார்ந்து பற்று ஆகுமே
பற்றின் தோன்றும் கருமத் தொகுதி
கருமத் தொகுதி காரணமாக
வருமே ஏனை வழிமுறைத் தோற்றம்
தோற்றம் சார்பின் மூப்புப் பிணி சாக்காடு"-மணிமேகலை:பவத்திறம் அறுகெனப் பாவை நோற் காதை:115
தமிழீழம்,தனி அரசு,பதவிமோகம்,அதிகாரச் சுவையோடு அள்ளுப்பட்டவர்கள் அமைத்த கோட்டைகள் யாவும் மக்களுக்குப் புதைகுழியாகின இன்று.வரியும்,தொகையும் ஏந்திய கரங்களின்று"மக்களே,மக்களே"என ஓலமிடுகிறது.
"கண்ணைத் திறந்து பாருங்கள்
கண்ணைத் திறந்து பாருங்கள்
கண்ணைத் திறந்து பாருங்கள்" என்று,
தொலைக் காட்சியில் உருகுகியது-வானொலியில் அழுது புலம்பியது!.இதை, ஏலவே உணராத தலைமை மரணத்தைச் சந்திக்கும் பொழுதே அதற்கும் மானுட மகத்துவம் புரிந்தது.எனவேதாம் சரணடைந்து பலியானது-என்ன செய்ய-எல்லாம் காலந் தாழ்ந்த ஞானமாகியது.எனினும்,எமது இன்றைய மாற்றுக் கருத்து அரசியல் இதைப் புரிந்துள்ளதா?நம்மிடம் நடைபெறுகிற வெட்டுக்கொத்துகளுக்குப் பின்னே எவரை அழைத்துச் செல்ல முனைகிறேன்? புரியவில்லை!இந்தப் புரியாத நிலையையே தமது பலமாக அரவணைத்தலிலும்-அவமதித்தலிலுமாக மாற்றுக் கருத்துவட்ட இயங்குகிறது.அதன் எஜமானர்களது தயவு எதுவரை என்பதே இனிவரும் அரசியல் தொடர்ச்சியாக வடிவங்கொள்ளும்.
அந்தப் புள்ளியைக் கண்டடையும்வரை நான் உறங்கேன்.
"பொய்யன் மின்புறம் கூறன்மின் யாரையும்
வையன் மின்வடி வல்லன சொல்லிநீர்
உய்யன் மின்உயிர் கொன்றுஉண்டு வாழுநாள்
செய்யன் மின்சிறி யாரொடு தீயன்மின்."-வளையாபதி.
இதுதான் நாம் கொள்ளதகு அறிவு.
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
03.10.2010
No comments:
Post a Comment