Sunday, February 10, 2008

நமது மக்களால் தமது எதிரியை...

நமது மக்களால் தமது எதிரியை முறியடிக்க முடியும்:நம்புங்கள்!அன்பு வாசகர்களே,வணக்கம்.

என்னிடமுள்ள ஒரே கேள்வி,"நமது மக்கள் தோற்றுப் போய்விடுவார்களா?"என்பதே!இன்றைய இலங்கையின் அரசியல் நகர்வால்-இந்தியாவின் ஈழமக்களுக்கெதிரான சதியால்-உலக வல்லரசுகளின் தமிழ்மக்கள் விரோத நலன்களால் ஈழமக்களாகிய நாம் தோற்றுத்தான் போவோமா?,புலிகளின் போராட்டத்தில் ஏற்பட்டிருக்கும் தொய்வு-தேய்வு-துரோகத்தனமான,தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான தமிழ்க் கைக்கூலிக்குழுக்களால் ஏற்பட்டதா?அங்ஙனம் அவை ஆற்றிய பண்புகளால் நாம் பலவீனமான நிலையை அடைந்தோமெனில்,இத்தகைய பகைமையான அரசியலை எவர் நடாத்தினார்கள்?-ஏன் நடாத்தினார்கள்?எங்கள் மக்களுக்குள் இவ்வளவு மோசமான அரசியலைச் செய்தவர்கள் எவர்கள்?இத்தகைய கூலிக் குழுக்களாக முன்னாள் இயக்கங்கள் மாறுவதற்கான சகோதர இயக்கப் படுகொலைகளைச் செய்த புலிகள்தானே குற்றவாளிகள்?புலிகள் இங்ஙனம் இவற்றைச் செய்வதற்கான அரசியல் எதன்பொருட்டு,எவரால் கட்டவிழ்த்துவிடப்பட்டது?

இக் கேள்விகளுக்கு நாம் விடை கண்டாகவேண்டும்!

நம்மைச் சிதைத்து, நமது அடிச்சுவட்டையே அழித்துவிட முனையும் சிங்கள-இந்திய அரசியல்-இராணுவ நகர்வு படிப்படியாகப் புலிகளைப் பலவீனப்படுத்தியே தனது வெற்றியை ஒவ்வொன்றாகக் குவித்துவருகிறது.இதற்கு தமிழ் பேசும் மக்களின் எந்தவிதமான எதிர்பெழுச்சிகளும் இதுவரை நிகழவில்லை!கால் நூற்றாண்டாய்ப் போராடிய மக்கள் எங்ஙனம் இவ்வளவு உறக்கமாக இலங்கை அரசின் அட்டூழியத்தை ஏற்று வாளாது(வாளாமை-மெளனம்) இருக்கிறார்கள்?மக்களின் எந்தச் சுயவெழிச்சிக்கும் முன் எந்த ஒடுக்குமுறையும் செல்லாக் காசு என்பதைப் பாலஸ்த்தீன மக்கள் நிரூபித்திருக்கிறார்கள் என்கிறார் பேராசிரியர் திரு.கோகர்ணன்.

அவரது இன்றைய கட்டுரையில் "தனது மதிப்பீட்டின்படி" காமாஸ் இயக்கத்தின் வெற்றியாகவே எகிப்திய எல்லை மதில்களின் சரிவு பார்க்கப்படுகிறதென்கிறார்.செங்கடலோரம் சிறைக் கதவுகளாகப் போடப்பட்ட இந்த மதில்கள் சினை மாகாணத்தை பாலஸ்த்தீனத்திலிருந்தும்,இஸ்ரேலில் இருந்தும் பிரிப்பதாகும்.எகிப்தின் ஒவ்வொரு அங்குலமண்ணிலும் நிறுத்தப்பட்டிருக்கும் இராணுவக் காவலரண்கள் அப்பாவி அரபு மக்களைச் சோதனை செய்து, நடாத்தும் காட்டு மிராண்டித்தனத்தை நான் நேரில் பார்த்தவன்.வெளியுலகத்தவரைத் தவிர அரபு மொழி பேசும் மக்களுக்கு எகிப்த்துக்குள் நுழைவது அவ்வளவு எளிய விடயமில்லை.அரோபிய எகிப்த்தின் ஆட்சியானது தனது சொந்த இனத்தையே சீரழித்து அமெரிக்க-ஐரோப்பிய தேசங்களுக்கு வால்பிடியாக இருக்கும்போது, அந்தத் தேச மக்களில் பலர் உல்லாசப் பயணிகளிடம் கை ஏந்திய கண்ணீர்க் கதைகளை நான் அறிவேன்.ஒரு நேர உணவுக்காக நான் எறிந்த சில்லறைகளை அந்த மக்கள் சந்தோசமாக ஏற்ற கணம் நெஞ்சில் வடுவாக இன்றும் இருக்கிறது.

இந்த தேசம் தனது சொந்த மக்களுக்கே துரோகமிழைக்கும்போது,அதற்கு எதுவிதத் தடையுமின்றி அத்தகைய அரசை ஆபிரிக்காவிலேயே மிக உயர்ந்த ஜனநாயக நாடாக மேற்குலகம் கூறுகிறது.இத்தகைய நிலையில்தான் பாலஸ்தீனமக்கள் தமது வயிற்றிலடித்த இஸ்ரேலிய வன் கொடுமை அரசின் சதியிலிருந்து தப்ப எகிப்துக்குள் நுழைந்து, அங்கிருந்து வாழ்வாதார அதீத மானுடத் தேவைகளைப் பூர்த்தி செய்தார்கள்.இதைக் கண்ணுற்ற அமெரிக்க வெறியன் புஷ்சோ எகிப்திலிருந்து ஆயுதங்களைக் காமாஸ் இயக்கம் கடத்துவதாகக் குற்றஞ் சொல்லி, எல்லையை ஒரு கிழமைக்குள்ளேயே மூடவைத்து பாலஸ்தீன மக்களைப் பழிவாங்கினான்.எனினும்,வெறும் கைகளைவைத்தே உலகப் பயங்கர நாடுகளையும், வன்கொடும் ஆயுதம் தாங்கிய இஸ்ரேலிய நரவேட்டை இராணுவத்தை எதிர்த்துப் பழகிய பாலஸ்தீன மக்கள் அடிபணியவில்லை!அவர்கள் காமாஸ்சின்பின் அணிவகுக்கும் சூழலை அந்த அமைப்பே செய்து,மக்களின் சயவெழிச்சிக்குத் தோதாகவே காரியமாற்றி உலகச் சதியை மெல்லமெல்ல முறியடிக்கும்போது,நாம் என்ன செய்கிறோம்?எங்கள் போராட்டப்பாதையில் பாலஸ்த்தீனத்துக்கு ஏற்பட்ட அனைத்துச் சதிகளும் தென்படுகின்றன.என்றபோதும்,நாம் எழிச்சியிழந்து பலாத்தகாரத்துக்குப் பணிகிறோம்.இலங்கைச் சிங்கள-புலிகளின்-மற்றும் கைக்கூலிகளின் ஆயுதங்களுக்கு முன் நாம் மண்டியிடும் தரணம் எப்படி உருவாகிறது?

மக்களின் வலுவைச் சிதைத்த ஆதிக்கம் இப்போது சிங்களச் சதியை முறியடிக்க முடியாது திண்டாடுகிறது.இயக்கத்தின் இருப்புக்காகவே குண்டுகளை வைக்கும் மிகத் தாழ்ந்த நிலைக்கு அது மாறிவிட்டதா?மக்களின் எந்த முன்னெடுப்பையும் தத்தமது இயக்க நலனுக்குள் திணித்து மக்கள் எழிச்சியை மொட்டையடித்தவர்கள் இன்று அந்த மக்களை வெகுஜனப்படுத்தி அணிதிரட்ட முடியாது, தமது குண்டுகளின் ஆதரவை நம்பிக் கிடப்பது எமது மக்களுக்கு எதிரானது.மக்களை அணிதிரட்டிப் போராட்ட இலக்கை மக்கள் மயப்படுத்தி, நமது எதிரிகளை ஓடோட வெருட்டும் மக்கள் சக்தியை நமது மக்கள் பெற்றாகவேண்டும்!

இது எங்ஙனம் சாத்தியம்?

பாலஸ்த்தீனம் நமக்கு முன்னுதாரணமாக விளங்குவதற்கு முன் நமது போராட்ட இயக்கத்தின் வரலாற்றுப்பாடங்களே நமக்கு முன்னுதாரணமானது.அது நமது சொந்த அனுபவமாகும்.நாம் உலகத்தில் மற்றெந்த இனத்துக்கும் சளைத்தவர்களில்லை.நம்மிடம் எழிச்சியுறும் வலுவுண்டு.தியாகவுணர்வு உண்டு.எமது பெண்களின் கரங்களிலுள்ள ஒவ்வொரு சுடுகருவியும் அந்த வலுவையும்-மனத்திடத்தையும் சொல்பவை!நாம் எழிச்சியடைந்து நமது உரிமையை வென்றாகவேண்டும்.எம்மீது விரிந்து மேவும் வலுக்கரங்களுக்குள் நாம் கட்டுண்டுகிடப்பதல்ல நமது வாழ்வு.போராடுவதும் உரிமையைப் பெறுவதும் அதிமானுடத் தேவைதான்.


இங்கே,எந்தவொரு ஆயுத இயக்கத்துக்குமில்லாத உரிமை தமிழ் மக்களுக்கே உண்டு!அவர்களே தமது பிள்ளைகளைப் போராட்டத்துக்கு அற்பணித்து அடிமை¨யாகியுள்ளார்கள்.இந்த மக்கள் சுயவெழிச்சியுற்று ஆயுதம் எடுத்தாகவேண்டும்.அதற்கு நமக்குள் இருக்கும் அவர்களது ஆயுதம் தரித்த பிள்ளைகளே உறுதியான ஆதரவு நல்கி, நமது தேசியவிடுதலை இயக்கத்தைக் கட்டிப் புதிய பாணியில் போராட்டத்தை நடாத்தியாகவேண்டும்.இது நடக்காத காரியமல்ல.மக்களே வரலாற்றைப்படைபவர்கள்.அவர்களின் ஆதரவின்றி அணுவும் அசையாது.மக்களைப் பன்பற்றி அவர்களின் சுயவெழிச்சியை தீயாய்ப்பரவவிடுங்கள்.


தினக்குரல் கட்டுரையாளர் எழுதியவற்றின் பின்புலம் இதுவே!

மக்களை உலக நடப்பிலிருந்து தயார்ப்படுத்துவதும், அவர்களின் சுயமுனைப்பை வளர்த்து அவர்களுக்குப் பின் உந்துதலாக இருந்து நமது எதிரிகளை நாம் முறியடிக்கும் சூழலே இப்போது நமக்கு முன் இருக்கும் சூழல்.இங்கே,நமது இயக்கம் சோடை போனதன் எதிர்விளைவுகள் இப்போது நம்மை அநாதையாக்கி வருகிறது!இதிலிருந்து நாம் வென்றாகவேண்டும்.உலக நடப்புகளை மிகக் கவனமாக நம் இளைய கல்வியாளர்கள்-போராளிகள் கவனித்து அனுபவத்தைப் பெற்றாகவேண்டும்.

நாம் தோற்கடிக்கப்பட முடியாத பலத்தை நமது மக்களின் மேலான பங்களிப்போடு மட்டுமே பெறமுடியும்!

மக்களின் வலுவைத் தவறான பாதையில் பயன்படுத்திய சூழ்ச்சிமிக்க அரசியலின் விடிவுதான் இன்றைய போராட்டப் பின்னடைவு-சிக்கல், இதிலிருந்து நாம் மீள்வதெப்போ?

தினக்குரலுக்கு நன்றி.

இதோ, மறுபக்கக் கட்டுரையாளர் இன்னுஞ் சில வற்றைச் சொல்கிறார்.அனுபவப்படுவோம்.அறிவுபூர்வமாக நடந்து மக்களின் கரங்களைப் பலப்படுத்தி அவர்களின் சுயவெழிச்சிக்கு உரம் சேர்த்து,நமது மக்களைக்கொண்டே நமது எதிரிகளை வென்று,நமது மக்கள் விடுதலையடையும் பொழுதைப் புலரவைத்தல் இன்றைய இளைஞர்களின் கைகளிலேயேதான் இருக்கிறது!


நிறைந்த நேசத்துடன்,


பரமுவேலன் கருணாநந்தன்
10.02.08

"இஸ்ரேல் தொடர்ந்தும் ஏமாற்றும் என்பதில் ஐயமில்லை.
எனினும் பலஸ்தீனத்தின் பெரிய பலவீனமாக ஒரு துரோகத்தனமான தலைமை அமைந்துள்ள ஒரு
சூழலில்
மக்கள் போராட்டம் எதிரியை மட்டுமல்லாமல் துரோகிகளையும்
தனிமைப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளது."


மறுபக்கம்:

பலஸ்தீனத்தின் காஸா பகுதியை எகிப்திலிருந்து பிரித்து நின்ற இரும்புத் தகட்டாலான வேலியும் கொங்கீறீற்றாலான சுவரும் 23 ஜனவரி அன்று சரித்து வீழ்த்தப்பட்ட காட்சி அநேகமாக எல்லாப் பத்திரிகைகளிலும் வந்தது என்று நினைக்கிறேன். இதன் அரசியல் முக்கியத்துவம் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டன.சில நிபுணர்கள் இது இஸ்ரேலுக்கு ஆறுதல் தருகிற விடயம் என்று விளக்கியிருந்தார்கள்.


காஸாவைச் சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் அப்பகுதி மீது விதித்துள்ள பொருளாதாதரத் தடைகள் குறிப்பாக எரிபொருள் வழங்கற் தடை 2006 ஜனவரி தொட்டுக் கூடிக் கூடி வந்து கடந்த சில மாதங்களாகவே அங்கு வாழுகின்ற மக்களைப் பல வகைகளிலும் வாட்டி வருத்தி வந்தது. அதுவும் போதாமல் இஸ்ரேலிய குண்டு வீச்சுக்கள் தொடர்ந்தும் ஹமாஸ் போராளிகள் என்று கருதப்பட்டோரையும் பிறரையுங் கொன்றுங் காயப்படுத்தியும் வந்தன. இந்த முற்றுகை மேலுஞ் சில மாதங்கள் தொடருமாயின் ஹமாஸ் பணிந்து போக நேரிடும் என்றும் ஹமாஸ் பொதுசன அரசியலிலிருந்து விலகி மேலுந் தீவிரமான மதவாத நிலைப்பாட்டை நோக்கி நகரும் என்றும் பலவாறான ஊகங்களின் நடுவே இஸ்ரேலின் பொருளாதாரத் தடை ஏற்படுத்துகிற மனிதாபிமானப் பிரச்சினைகள் பற்றி இஸ்ரேலுக்கு எதிராகச் சர்வதேச அபிப்பிராயம் உருவாகத் தொடங்கியிருந்தது.எனினும், முன்னர் லெபனான் மீதான தாக்குதலின் போதும் பலஸ்தீன மக்களுக்கு எதிரான பலவேறு இராணுவ நடவடிக்கைகளின் போதும் பலஸ்தீன நிலப்பறிப்பு நடவடிக்கைகளின் போதும் நடந்து கொண்ட விதமாகவே சர்வதேச அபிப்பிராயத்தைப் பொருட்படுத்தாமலே இஸ்ரேல் நடந்து வந்தது. இந்த நெருக்கு வாரத்தின் நடுவே காஸாவில் இருந்த மக்களின் வெளி உலகத் தொடர்புகள் வடக்கிலும் கிழக்கிலும் இஸ்ரேலியத் தரை எல்லைகளாலும் வடமேற்கே கடல் வழி முற்றுகையாலும் தென் மேற்கே எகிப்திய அரசாங்கம் அமெரிக்கா - இஸ்ரேலிய நெருக்குவாரங்கட்குப் பணிந்து எழுப்பிய பெரு மதிலாலும் இரும்புத் தகட்டு வேலியாலும் தடுக்கப்பட்டிருந்தன.


இந்தத் தடையை மீறிச் சுரங்கப் பாதைகள் மூலம் ஹமாஸ் போராளிகள் எல்லை தாண்டிப் போய்வந்து கொண்டிருந்தனர். ஆயுதங்களைக் கொண்டு வந்தனர். அவசியமான போது தப்பிச் சென்று மறைந்து வாழ்ந்தனர். எனினும், இஸ்ரேலின் பொருளாதாரத் தடையை முறியடிப்பதானால் கடல் வழியே மேற்கிலோ தரைவழியே தெற்கிலோ வணிகத் தொடர்புகள் அவசியம். கடல்வழி வணிகத்தின் மீதான இஸ்ரேலியத் தடை சர்வதேச விதிகட்கு விரோதமானது. எனினும், இஸ்ரேல் வைத்ததே சட்டம் என்கிற சூழ்நிலையில் எகிப்தை காஸாவிலிருந்து பிரித்த மதிலையும் வேலியையும் தகர்ப்பதை விட காஸாவின் மக்களுக்கு வேறு வழியிருக்கவில்லை. பலஸ்தீன மக்கள் அதையே செய்தார்கள்.இதன்மூலம் இஸ்ரேல் மீதான சர்வதே நெருக்குவாரம் தணிந்துள்ளது என்பது முன்னர் குறிப்பிட்ட நிபுணர்களது மதிப்பீடு. இவர்கள் எல்லாரும் இஸ்ரேலைச் சர்வதேச நெருக்குவாரங்கள் மூலம் நியாயமாக நடந்துகொள்ளச் செய்யமுடியும் என்று நம்புகிறவர்களாக இருக்க வேண்டும். அல்லது மற்றவர்கள் நம்ப வேண்டுமென்று எதிர்பார்க்கிறவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறான மதிப்பீடுகள் உண்மைக்கு மாறானவை. எனவே, இஸ்ரேலிய அதிகாரம் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கு மாறாக நெஞ்சுக்குட் பொருமிக் கொண்டிருக்கும் என்பதே உண்மை.எகிப்தைப் பொறுத்தவரை, இது ஒரு அதிர்ச்சியூட்டுகிற விடயம் என்பதையும் மேலலைநாட்டு ஊடகங்கள் ஏற்க ஆயத்தமாக இல்லை. ஏனெனில், அவை எகிப்தில் உள்ள அடக்குமுறை ஆட்சியை விமர்சித்தாலும், அதை ஒரு சனநாயக ஆட்சி மேவுவதை விரும்பவில்லை. அன்வர் சதாத் என்கிற சர்வாதிகாரியை முஸ்லிம் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொன்ற பின்பு ஆட்சிக்கு வந்த ஹொஸ்னி முபாரக், சதாத்தையும் மிஞ்சிய அமெரிக்க விசுவாசியாகவும் கடுமையான அடக்குமுறையாளராகவும் இஸ்ரேலுடன் இணக்கப்பாட்டுக்காகப் பலஸ்தீன மக்களைக் காட்டிக் கொடுக்கக் கூசாதவராகவும் தனது ஆட்சியை நீடிக்க எதையுஞ் செய்ய கூடியவருமாகவே தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். காஸாவின் இஸ்ரேலிய எதிர்ப்பாளர்கள் எகிப்துடனான எல்லையூடாகவே தம்மை ஆயுதபாணிகளாக்கி இஸ்ரேலைத் தாக்குகின்றனர் என்ற இஸ்ரேலிய வாதத்தை ஏற்று காஸாவுடனான எல்லையை இரும்புத் தகட்டுவேலியாலும் கொங்கிறீற் சுவராலும் மூடிய பெருமை முபாரக்குக்குரியது.காஸா மீதான கடுமையான இஸ்ரேலிய முற்றுகையும் வணிகத் தடையும் மக்களின் அன்றாட வாழ்வை வேதனைமிக்கதாக்கிய போதும் ஹொஸ்னி முபாரக் அசைந்து கொடுக்கவில்லை. இஸ்ரேலின் முற்றுகை காஸாவின் மக்களைப் பயமுறுத்திப் பணிய வைக்கும் பற்றாக்குறைகளும் இன்னல்களும் காரணமாக அங்கு ஹமாஸ் இயக்கத்துக்கு இருந்து வந்த ஆதரவு சரியும் என்றே முபாரக் ஆட்சி எதிர்பார்த்தது. இது இஸ்ரேலினது எதிர்பார்ப்பு மட்டுமல்ல; பலஸ்தீன அதிகாரசபையின் தலைவரான மஹ்மூத் அபாஸும் அதையே எதிர்பார்த்தார்.


அபாஸின் எதிர்பார்ப்புக்கு மாறாக அவர் சார்ந்த அல்ஃபதாஹ் இயக்கத்திற்கு அதிக ஆதரவுள்ள `மேற்குக் கரைப்' பகுதியில் இஸ்ரேலின் முற்றுக்கைக்கு எதிராக மக்களின் கொதிப்பு வேகமாகவே உயர்ந்தது. அவர்கள் ஹமாஸை ஏற்கவில்லை. ஹமாஸின் மதவாத அரசியலை அவர்கள் நிராகரித்தனர்.அரபாத் மீது மிகுந்த மதிப்பும் அல் ஃபதாஹ் இயக்கத்தின் மீது அவருடைய இயக்கமென்ற அடிப்படையில் மரியாதையும் உடைய அவர்களால் ஹமாஸை ஒழித்துக் கட்டுகிற பேரில் காஸாவிலுள்ள தங்களது சகோதரச் சமூகம் துன்புறுத்தப்படுவதை ஏற்க முடியவில்லை. இஸ்ரேலுக்கு எதிரான அவர்களது ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் இஸ்ரேலியப் படையினரைக் கடுமையாக நடந்துகொள்ளத் தூண்டின. அபாஸின் பாடு திண்டாட்டமாகி விட்டது. இஸ்ரேலிய நடவடிக்கையைக் கண்டிக்காமல் இருந்தால் அவரது இருப்பே கேள்விக்குறியதாகி விடும் என்பதால் இஸ்ரேல் தனதுபொருளாதாரத் தடையை நீக்க வேண்டுமென வற்புறுத்தத் தொடங்கினார்.இத்தகைய ஒரு பின்னணியிலேயேதான் காஸா -எகிப்து எல்லையில் அமைந்த பெருஞ்சுவரும் இரும்புத் தகட்டுவேலியும் தகர்க்கப்பட்டன. ஆயிரக்கணக்கான காஸா வாசிகள் கால்நடையாகவும் வாகனங்களிலும் எகிப்தின் சினாய் பிரதேசத்தினுட் புகுத்தனர். அவர்கட்குத் தேவையான பண்டங்களுடன் எகிப்திய வணிகர்களும் நண்பர்களும் வந்து சேர்ந்தனர். எரிபொருள், உணவுப் பண்டங்கள், ஆடு, மாடுகள் உட்பட பல பொருட்களும் காஸாவுக்குட் சென்றன. இஸ்ரேலின் முகத்தில் மட்டுமன்றி எகிப்தினதும் அபாஸினதம் முகங்களிலும் கரி பூசப்பட்டது. ஹமாஸின் தேர்தல் வெற்றிக்குப் பின்பு பலஸ்தீன மக்களின் எண்ணங்களை அவமதிக்கிற முறையிலேயே இஸ்ரேலும் அபாஸ் ஆட்சியும் எகிப்து உட்பட்ட பிற்போக்குவாத ஆட்சிகளும் அமெரிக்கத் தலைமையிலான சர்வதேச சமூகமும் நடந்துகொண்டன. அத்தனை முகங்களிலும் ஒன்றாகவே கரிபூசிய இந்தநிகழ்வுதான் கடந்த சில ஆண்டுகளிற் பலஸ்தீன மக்கள் ஈட்டிய மாபெரும் வெற்றியாகும்.இந்த வெற்றி ஹமாஸின் வெற்றியாகும் என்பது எனது மதிப்பீடு. இந்த நிகழ்வில் ஹமாஸ் செய்ததை விட மிக அதிகமாக காஸாவின் மக்களே பங்குபற்றினர். இது உண்மையான ஒரு மக்கள் எழுச்சி. இதை இயலுமாக்குவதில் ஹமாஸின் பங்கு எவ்வளவு என்று இப்போதைக்குக் கூறுவது கடினம். எனினும், மக்களே முன்னின்று தங்களுக்கு எதிரான ஒரு முற்றுகையை வீண் உயிரிழப்புக்கள் இல்லாமலும் எவரும் கண்டிப்பதற்கு இடமளியாமலும் நடத்துவதற்கு இடமளித்ததன் மூலம் ஹமாஸ் இந்த மக்கள் வெற்றியில் பெருமைக்குரிய ஒரு பங்காளியாகி விட்டது. பலஸ்தீன மக்களின் உரிமைகள் வெல்லப்படாதவரை, பலஸ்தீன மக்கள் தமது நீதியான போராட்டத்தின் முடிவைக் காணாதவரை, அவர்களது போராட்டம் வெல்லற்கரியது என்ற உண்மையை பலருக்கு இன்னொரு முறை இந்த நிகழ்வு உணர்த்தியுள்ளது.இஸ்ரேலால் எல்லாப் போராளிகளையும் பயங்கரவாதிகள் என்று இன்று வரை முத்திரை குத்த முடிந்தது. எல்லா ஆயுதப் போராட்டங்களையும் பயங்கரவாத நடவடிக்கைகள் என்று கண்டித்துத் தனது அடக்குமுறையை வலுப்படுத்தி நியாயப்படுத்த முடிந்தது. இத்தனைக்கும் இஸ்ரேலுக்கு எதிராக எவரும் எதுவுமே செய்ய இயலாதபடி அமெரிக்கா கவனித்துக் கொண்டது. எனினும், பலஸ்தீன மக்கள் தொடங்கிய `இன்ற்றிஃபாடா' என்கிற எதிர்ப்பு இயக்கத்தின் முன்னால் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளால் அதிகஞ் செய்ய முடியவில்லை. வீதி மறியலில் ஈடுபட்ட பெண்களும் கற்களை எறிவதற்கு மேலாக எந்த வன்முறையிலும் ஈடுபடாத சிறுவர்களும் பணிய மறுத்த பலஸ்தீனத்தின் அடையாளச் சின்னங்களாயினர்.அதன் பின்னரே இஸ்ரேல் இரண்டு முறையும் அமைதிப் பேச்சுக்கட்கு இணங்கியது.


இஸ்ரேல் தொடர்ந்தும் ஏமாற்றும் என்பதில் ஐயமில்லை. எனினும் பலஸ்தீனத்தின் பெரிய பலவீனமாக ஒரு துரோகத்தனமான தலைமை அமைந்துள்ள ஒரு சூழலில் மக்கள் போராட்டம் எதிரியை மட்டுமல்லாமல் துரோகிகளையும் தனிமைப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளது.
தினக்குரலில் பேராசிரியர் கோகர்ணன்.