Thursday, December 11, 2008

என் ஆசை அக்காள் இனி வரமாட்டாள்

நெஞ்சில் கீறும்
அக்காளின் நினைவுகொண்டு
அஞ்சலிக்கும் தங்கை நான்!!!


மௌனித்திருக்கவும் முடியவில்லை
மனதும் கேட்கிறதாயில்லை
எத்தனை கதைகளை உனக்குள்தேடிட அக்கா
எந்தன் உறவே, ஒரு வயிற்றுறவே என்னைவிட்டுப் போனாயோ
பக்கத்திலிருந்தும் பார்க்கவும் பலன்கூடவில்லையே அக்கா!!!

மீளவும் சோற்றைக் கொள்ளும்
பெருவாயுள் அகாலக் கொடுமையின் சிதை
உறவுக்கான இரைமீட்பில்
வேதனையைப் பகிர்வதற்கென்றே
பேசப்படும் தொலைபேசி அதிர அக்காள் போன செய்தி...

முந்தைய பொழுதின்
கரைந்த தடயம்
நெஞ்சில் கீறும் ஏதோவொரு அதிர்வில்
வெறுமைப் பொழுதாய் வேளைகள் செல்ல
வேதனை சொல்லும் வேளையுள் நீ வீழ்ந்தாயோ அக்கா?

நொந்துலர்ந்த இதயத்தோடு
நெடிய வாழ்வுக்குள்
குந்த இடமின்றி அகதியாய்ப் பிரிந்தோம்
இன்றோ இருப்பிழந்து நீ உறவறுத்து
இதயம் நோக எனை விழிபனிக்க வைத்தாயே அக்கா

எத்தனை இரவுகளில்
எங்களைத் தூக்கியணைத்து
துயரங்கலைத்த தோழி நீ!
ஆறுதலைச் சொல்லும்போது அம்மாவை இருந்தாய்
அக்காவாக அன்பு எனக்கு உறவானது,ஐயோ என் அன்பே!

இந்தப் பொழுதில்
நீயும் இல்லை
நெடு நிலவும் இல்லை
நெஞ்சில் உரம் சேர்க்க
எங்கள் ஊர் ஆறுமுகனும் இல்லை-சிவனே!

சுவரில் தொங்கும் கடிகாரத்தின்
ஈனக் குரலில்
இதயம் குழப்பும் ஒரு கும்மிருட்டில்
உன் முகத்துள் எனைக்காண அச்சம் கொண்டேன்
அக்காவாய் உறவுற்ற என் மூச்சே, காற்றாகிச் சென்றாயோ கடவுளிடம்?

என் ஆசை அக்காள் இனி வரமாட்டாள்
அவளுக்கு வயசாகி விட்டது நித்தியத்தை நாடிவிட்டாள்
வந்தவிடத்தில் நாட்கள்விலத்த
என்கட்டையும் நீ கூட்டிச் செல்லேனடி சோதரி
போகப் போவதுதானே உண்மை,நீ போய்விட்டாய்!

எல்லாம் இழந்த இந்த இருட்டில்
அக்காளின் நீண்ட உறக்கஞ் சொல்லும் சேதியோ
மூச்சையடக்கும் ஒரு பொழுதை மெல்ல அழைக்கும்
உனது உயிரின் இழப்பில்
எனது உடலும் இந்த ஐரோப்பியக் கொடுங் குளிரில்?...

மெல்லத் தலை கோதி அள்ளியணைத்து
கிள்ளிய வீப+தியில் நெற்றியைத் தடவி
நெடிய வலி போக்கிய அக்காவாய் அன்று
உணர்வுக்குள் கோடி கதைகளை வைத்த அக்காள் நீ
சொல்லாமற் போனாயே சோதரி!,சோர்ந்து போனது என் மனசும் அறிவாயோ?

அள்ளிய சோறும்
மெல்ல முடியாத வாயோடு
உணர்வு மரத்த மனசோடு
இதயம் நோக உனக்காக அழுது மடியும்
ஒரு உயிராய் நான் புலம்ப நீ எங்கு போனாய்?

அக்காவாய்க்கூடிப் பிறந்து
அம்மாவாய் ஆரத்தாலாட்டியவளே நின்
ஆன்மாவுக்கு ஆறுதலும்
நித்தியத்தோடு நீ நிம்மதியாகவும் இருக்க
நீண்ட பிராத்தனையோடு நெஞ்சு வலிக்க இறைஞ்சுகிறேன்.


கண்ணீர் மல்க உருகும்,
உன் ஆசைத் தங்கைகளில் ஒருத்தி.


Saturday, June 14, 2008

தேசம் நெற்றும் சபா நாவலனும்

தேசம் நெற்றும் சபா நாவலனும்:ஒட்டும் முடிச்சுகள்

-சில குறிப்புகள்:சிந்திப்பதற்கு.


அன்பு வாசகர்களே,

தேசம் இணையவிதழில் திரு.சபா நாவலன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

"பின்னூட்டம் மக்கள் ஊடகவியலின் புதியபரிமாணம்."என்று எழுதத்தொடங்கிய அந்தக்கட்டுரையானது இணைய ஊடகத்தளத்தில் "தேசம்நெற்"எனும் வலைஞ்சிகையைத் தூக்கி நிறுத்தும் முயற்சியாகவே நாவலனால் மேற்கொள்ளப்பட்டது.இன்றைய எதிர்க்கருத்தாடலுக்கும்,மாற்றுக்கருத்துக்குமான திறந்தவெளி விவாதத்தளத்தை மிக உயரிய நோக்கில் தேசம் செய்துவருவதாக அவரது கட்டுரை பறையடித்துக்கூறுகிறது.இத்தகைய பாதையில் தேசம்நெற்றே முதன்மையாகப் பின்னூட்ட முறைமையையும்,வாசகர்களின் கருத்தை உடனடியாக வெளிப்படுத்தும் உத்தியை மக்களின் நலனினது அடியொற்றி மாற்றுக் கருத்தாடலுக்கு வழி திறந்ததாகவும் கூறுகின்ற அபாண்டமான மிகைப்படுத்தலை, கேள்விக்குள்ளாக்கின்றார் சுவிஸ் மனிதம் ரவி.

ரவியினது பின்னூட்ட எதிர்வினையானது மிகவும் பொறுப்புணர்வோடு நம்முன் நியாயம் உரைக்கிறது-உண்மை பேசுகிறது.

இலங்கைத்தமிழர்கள் புகலிடம்தேடிப் புலம்பெயர்ந்துவாழும் ஐரோப்பியக்கண்ட நாடுகளில் அவர்கள் முகங்கொடுத்த பிரச்சனைகளில் முக்கியமானவொன்று இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்த அதீத அராஜகக் காடைத்தனமாகும்.இது புலம்பெயர்ந்த தமிழ்பேசும் மக்களைத் தொடர்ந்தும் புலி இயக்கவாத மாயைக்கு அடிபணியவைக்கவெடுத்த முயற்சிகளோ அடி,தடி,வெட்டுக் குத்துக் கொலையெனத் தொடர்ந்தது.இத்தகையவொரு அவலச் சூழலில் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்த எமது அரசியல்காரணிகளை மாற்றுக்கருத்தாளர்கள் விவாதித்து,ஈழக்கோசத்தின் பின்னே சதிராடும் இயக்கச் சர்வதிகாரத்தையும்,சிங்கள அரசின் தமிழர்கள்மீதான இனவொடுக்குதலையும் நிறுத்துவதற்கான கருத்துகளையும்,முன்னெடுப்புகளையும் செய்துகொண்டோம்.இதற்காகப் புலம்பெயர்ந்த மக்கள்பட்ட துன்பங் கணக்கிலடங்காதவை.இதை சுவிஸ் இரவி அவர்கள் மிகவும் வருத்தத்தோடு வெளிக்கொணர்கிறார்-இதற்கான விலையாகக் கொடுக்கப்பட்ட உயிர்ப்பலிகளைச் சுட்டிக்காட்டுகிறார்.

புலிகளினது மிகக்கெடுதியான கொலை அரசியலிலிருந்து விடுபடுவதற்கான மாற்றுக்கருத்தாளர்களின் போராட்டம், 1985 இல் இருந்து ஆரம்பமாகிறதென்பது வரலாற்றுண்மையாகும்.இத்தகைய சூழலைமிக இலகுவாக நாவலன் மறைத்துக்கொண்டு,தேசம் இணையத்தின் இருப்புக்கு உரம்போடுவதற்காகவே முழுவுண்மையையும் திட்டமிட்டுச் சிதைக்கின்றார்.இன்றைக்கும் புலிகளை எதிர்த்துத் துணிகரமாகக் கருத்தாடும் பல தோழர்களைப் புலிகளின் அராஜக அரசியலும்,அதுசார்ந்த வன்முறையும் படாதபாடுபடுத்துகிறது.திட்டமிட்டுப் புலி ஆதரவாளர்களும்,புலி உளவுப்படையும் பற்பல மனோவியல் யுத்தத்தை நடாத்தியபடி மாற்றுக் கருத்தாளர்களைத் "துரோகிகளாக்கி"த் துப்பாக்கிக்கு இரையாக்கியது-இரையாக்கிறது!


தமது ஏகப்பிரதிநித்துவத்துக்கு எதிரான மக்கள் அணித்திரட்சியடைந்து,ஜனநாயகத்தைக்கோரும் தருணத்திலெல்லாம் இத்தகைய கோரிக்கைகளை அடியோடு சாய்ப்பதற்காகப் புலிகள் இப்போது"பொங்கு தமிழ்"எனும் வடிவத்தோடு இனவாத்தைத் தூண்டித் தமது இருப்பை உறுதிப்படுத்த எடுக்கும் முயற்சியின் ஆழத்தைப் பார்க்கும் ஒருவருக்கு அன்றைய புலிப்பாசிசக் கொலைகளை இத்தகைய நிகழ்வின்விருத்தியோடு பொருத்திப்பார்க்கும் நிலை தானாகவே தோன்றும்.

ஏகப்பிரதிநிதிகள் புலிகள் எனும் வாத்தையைத் தொடர்ந்து நிலைப்படுத்தப் புலிகள் செய்த-செய்யும் கொலைகள்,ஆட்கடத்தல்,அச்சுறுத்தல்,தாக்குதல்கள் எல்லாம் இன்றுவரையும் தொடர்கதையாகவே இருக்கிறது.இதைக்கடந்தும் மாற்றுக்குரல்கள் ஓலிகின்றதென்றால் அது மக்களின் நலன்சார்ந்து ஆற்றும் அரசியலோடு சம்பந்தப்பட்டு மக்களை நம்பிய முன்னெடுப்பாகவேமட்டும் இருக்கமுடியும்.

மக்களைத் தொடர்ந்து அடக்கி,அவர்களின் அழிவைத் தத்தமது இயக்க-கட்சி நலன்களுக்காகப் பயன்படுத்துபவர்கள் என்றைக்கும் தமது உண்மை முகத்தை மக்களிடமிருந்து மறைத்தே வருகிறார்கள்.இதற்காகவே"துரோகி"என்று மிலேச்சத்தனமான முறையில் கணிசமான மக்களைப் போட்டுத் தள்ளுகிறார்கள்.அந்தவுண்மையான முகமானது மிகமிகப் பாசிசத்தனமான அடக்குமுறையென்பதை மாற்றுக் குரல்களே அம்பலப்படுத்தி வந்திருக்கிறது.இதற்கு இன்றுவரை உயிர்கொடுத்தவர்கள்பலர்,உதைப்பட்டவர்கள்-படுபவர்கள் பலர்.

இத்தகையவொரு யதார்த்தச் சூழலை முழுமையாகத் தேசத்துக்குத்தாரவார்த்துக் கெளரவிக்கும் அரசியல் மிகவும் கபடத்தனமானது.தேசத்தின் ஊடாகக் காரியமாற்ற முனையும் மக்கள் விரோத தளமொன்று இங்ஙனம் செயற்படுவதை நாவலனின் கட்டுரையிலிருந்து நாம் விபரமாக உள்வாங்க முடியும்.இத்தகைய விபரத்தை ஓரளவேனும் பூர்த்தி செய்கிறது திரு.இரவியின் எதிர்வினையாகும்.

படித்துப்பாருங்கள்,பட்ட துன்பங்கள் யாவும் அராஜகத்தைத் தோற்கடிக்கவே என்று புரியும்.

இதை மறுத்து தேசம்போன்ற ஊடகங்களை மேல் நிலைக்கு எடுத்துவந்து"இதுதான் மாற்றுக் கருத்துக்கு முன்னோடி" என்பவர்கள்,இலக்கியச் சந்திப்பை ஆரம்பித்தகர்த்தா பரா மாஸ்டர் என்பதைப்போன்றதே.இது, காகம் இருக்கப் பனம் பழம் விழுந்த கதைமாதிரித்தான்.

இன்றைக்குப் புலம்பெயர்ந்த தமிழ்பேசும் மக்களிடத்தில் மிக அராஜகமாக இனவாதத்தையும் அதுசார்ந்து குறுந்தேசிய வாதத்தையும் விதைத்துப் புலிகள் தமது இயக்க நலனைப் பேணுவதற்கெடுக்கும் முயற்சியானது"பொங்கு தமிழ் மட்டுமல்ல.மாறாக, இன்னும் பல கொலைகளில் முடியப்போகிறது.இதன் ஒரு சுற்று நடைபெற்று இறுதிக்கட்டம் வந்தடையும் நிலையில், அடுத்த சுற்றுக்கு அடியெடுத்துக்கொடுக்கும் அரசியல் சூழ்ச்சியைத் தேசம் இணையத்தினூடாக மக்கள் விரோதிகள் செய்வதற்குத் தேசம் உடந்தையான செயல்களில் ஈடுபடுகிறது.

எங்கே மக்கள் கூடுகிறார்களோ அங்கே குண்டு வைக்கும் புலிகளின் அரசியலுக்கு மிகவும் வசதியான தளமாகப் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்குள் முன்தள்ளப்படும் தேசம் இணையம் என்பதே நமது கருத்தாகும்.இதைவிட்டுத் தேசத்தின் அரசியல் மக்களைச் சார்ந்தியவதாக எவராவது கதை புனைவாராகின் அங்கே, வேட்டைக்கான மிருகங்களைத் தேடியலையும் ஒருகூட்டம் முகாமிட்டிருப்பதாகவே நாம் அடித்துக்கூறுவோம்!

இதைக் கவனத்திலெடுத்து இரவியின் எதிர்வினையை உங்கள் முன் வைக்கின்றோம்.

நன்றி,வணக்கம்.

அன்புடன்,

கருணாநந்தன் பரமுவேலன்.
15.06.2008

------------------------



புகலிட தொடர்பு ஊடகங்களினதும் ,
மாற்றுக் கருத்துகளினதும் எனது சார்பிலான
ஒரு சிறு வரலாற்றுப் பதிவுதான் இது.


சபாலிங்கம் கொலைசெய்யப்பட்டபோது அவர்வீட்டு கொல்லைப்புறத்தில்கூட அஞ்சலி எழுத அச்சமடைந்து இருந்தவர்கள் பலர் என்று நாவலன் எழுதுகிறார். அன்று தேசம் நெற் இருந்திருந்தால் முகமிலிகளாக அஞ்சலியைப் பதிவுசெய்திருக்கும் என்று பின்நோக்கிய ஆரூடம் கொடுத்திருக்கிறார். திரும்பத்திரும்ப இந்த இரு வசனங்களையும் வாசித்துப் பார்த்தால் இதற்குள்ளேயே விடையும் இருப்பதை காணுவீர்கள்.
இதைவிட முக்கியமாக சொல்லப்பட வேண்டிய விடயமாக ஒன்று இருக்கிறது. சபாலிங்கம் கொலைசெய்யப்பட்ட காலகட்டம் பற்றிய நிலைமையை மறந்து தண்ணிபாய்ச்சுவது ஒரு ஆய்வுமுறையே அல்ல. 80 களின் நடுப்பகுதியில் புலிகளின் அடாவடித்தனம் உச்சத்தில் இருந்ததை (அனுபவித்த) சிறுபத்திரிகைக்காரர்கள் அறிவர்… புலிதவிர்ந்த -சிலமணிநேர- வானொலி ஒலிபரப்பைக்கூட நடத்த முற்பட்டவர் அறிவர். இயக்கக் கூட்டங்களுக்குள் புகுந்தடித்தனர். புதிய வெகுஜன அமைப்புகளிலிருந்து சிறுபத்திரிகைக்காரர்களின் ஒன்றுகூடல்கள்வரை கண்காணித்தபடி இருந்தனர்.. செய்திப் பத்திரிகைகளை தடைசெய்தனர் அல்லது கடைகளில் விற்கவிடாது பயமுறுத்தினர்… குகநாதன் ஆரம்பித்த தமிழ்த் தொலைக்காட்சியை அபகரித்தனர்…இப்படிப் பல. இந்த அடாவடித்தன சூழல் சபாலிங்கத்தின் கொலையுடன் ஒரு புதிய வடிவம் (கொலைவடிவம்) எடுத்திருப்பதாக அவர்கள் கருதினர். இது தமது பாதுகாப்புப் பற்றிய கேள்விகளை இந்த வட்டத்துள் எழுப்பியதும், தாம் அனுபவித்துக்கொண்டிருந்த அராஜகத்தின் வளர்ச்சிப்பாதையாக இந்தக் கொலையைக் கண்டதையும், அதனால் அமைப்புவடிவமற்ற வட்டங்கள்; அதிர்ச்சியடைந்ததையும் புரிந்துகொள்ள முடியாத ஆய்வுகள் வரட்சிமிக்கது.


காசு தராவிட்டால் ஊரிலை பார்த்துக் கொள்ளுறம் எண்டு மிரட்டிச் சாதித்த காலம் அது. மற்றைய இயக்கங்களிலிருந்து அகதிகளாய் வந்தவர்கள் வடிகால் தேடினர். இந்த நிலைமைகளுக்குள்ளால்தான் 40க்கு மேற்பட்ட சிறுபத்திரிகைகள் அரும்பி பிறிதானதொரு குரலுக்கான வெளியை இந்த அடாவடித்தனங்களுக்கூடாகவும் மெல்ல மெல்ல உருவாக்கின. அந்த வெளி சிறுபத்திரிகைகளாலும் சந்திப்புகளாலும் மெல்ல அகண்டு இன்று வானொலி இணையத்தளங்கள்வரை வந்ததே வரலாறு. சிறுபத்திரிகைக்காரர் மீதான தாக்குதல்கள், தேடகம் எரிப்பு, மனிதம் சஞ்சிகையை சட்டவிரோதமாக ரயில்நிலையங்களில் விற்றதாக சுவிஸ்பொலிசிடம் காட்டிக் கொடுத்தது… என புலிகள் இடறிக்கொண்டுதான் இருந்தார்கள். இதை ஒன்றும் மேற்கூறிய வட்டத்துக்குள் மட்டுமன்றி புலியரசியலோடு முரண்பட்ட தனிநபர்களின் திராணியோடும் சேர்த்துப் பார்க்கவேண்டும். காசுதரமாட்டம் செய்யிறதைச் செய் என்று முரண்டுபிடித்தும், எதிர்ப்பு அரசியல் (அல்லது நியாயம்) பேசியும் இந்த உதிர்pகள் செய்த செயற்பாடுகளையும் யாரும் புறக்கணித்துவிட முடியாது. இவ்வாறெல்லாம் அடையப்பட்ட இன்றைய நிலைமைகளின் மீதேறி நின்று கொண்டு ரிபிசி தேனீ பாணியில் இன்று தேசத்தையும் மாற்றுக் கருத்துக்கான களத்தை உருவாக்கிவிட்டவர்களாக அல்லது வடிகால் வெட்டிவிட்டவர்களாக சித்தரிக்க முனைவது ஒரு புகலிடவரலாற்று மோசடி.


சபாலிங்கம் கொலைசெய்யப்பட்டபோது அதை கண்டித்தும் அஞ்சலி செலுத்தியும் தமிழிலும் ஆங்கிலத்திலும் கூட்டாகப் பிரசுரத்தைத் தயாரித்து விட்டது சிறுபத்திரிகை வட்டம். அதை அவர்கள் வெளியில், ரயில்நிலையங்களில் நின்றெல்லாம் விநியோகித்த செயற்பாடுகளும் உண்டு. அதைவிட பாரிசில் இதே இலக்கியவட்டக்காரர்கள் அஞ்சலி கூட்டம் நடாத்தினார்கள். இந்தக் கொலையின் நினைவாக தோற்றுத்தான் போவோமா என்ற தொகுப்பும் புஸ்பராசாவின் உழைப்பில் வெளிவந்திருந்தது. இவற்றையெல்லாம் மறைத்து அல்லது மறந்து நாவலனால் கொல்லைப்புறக் கதையெல்லாம் எழுத எப்படி முடிந்ததோ தெரியவில்லை. அந்த நேரம் தேசம் நெற் இருந்திருந்தால் அதைப் பதிவுசெய்திருக்கும் என்று எழுதுவது கொஞ்சம் கோமாளித்தனமாக இல்லை?.

85 களின் மத்தியிலிருந்து 90களின் மத்திவரை மேற்கூறிய நிலைமைகளுக்கூடாக (கையெழுத்துப் பிரதியாகக்கூட) வந்துகொண்டிருந்த சிறுபத்திரிகைகளைப் புறந்தள்ளி, அந்நிய தேசத்தில் அகதிகளாய் வந்த சமூகத்தின் உணர்வுகள் வடிகாலற்றிருந்த காலத்தில் தேசம்நெற் உருவாகியதாகப் பதிகிறார் நாவலன். தோழர் சொல்லித்தான் எமக்கெல்லாம் இது தெரியவருகிறது. (1997 இல் தேசம் சஞ்சிகையாகவும் 2007 இல் தேசம் நெற் ஆகவும் பரிணமித்ததாக சேனன் தனது தரவுகளை பதிந்திருக்கிறார்).

பின்னூட்ட முறைமைகள் தமிழ் இணையத்தளப் பரம்பல் பற்றியெல்லாம் மாற்றுக்கருத்துகளுக்கு வெளியிலும் நாம் போய்ப் பேசியே ஆகவேண்டும். நாமறிய யாழ் இணையத்தளம் தேசம் நெற்றுக்கு முந்தியது. அதன் கருத்துக்களம்தான் (படிப்பு, தேடல் சாராத) பொதுப்புத்திப் பின்னூட்டக் கலாச்சாரத்தைத் தோற்றுவித்தது என்பது என் கணிப்பு. பதிவுகள் இணையத்தள (காத்திரமான) விவாதக்களம் தேசம் நெற்றுக்கு முந்தியது. தேசம் நெற்றில் பின்னூட்ட முறைமை சென்ற ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதெல்லாம் ஒப்பீடு செய்து தேசம் நெற்றை இடைமறிப்பதற்கல்ல. புகலிட தொடர்பு ஊடகங்களினதும் மாற்றுக் கருத்துகளினதும் எனது சார்பிலான ஒரு சிறு வரலாற்றுப் பதிவுதான் இது.

தேசம் நெற் பற்றிய பார்வையை தனிநபர்களை மண்டைக்குள் வைத்துக்கொண்டு செய்தால் அது விமர்சனமாய்ப் பரிணமிக்காது. சான்றிதழ்தான் அச்சாகும். இதே சான்றிதழின் பின்பக்கங்கள் சேறடிப்புகளாய் ஊறிக்கொண்டுதான் இருக்கும்.


-ரவி






பின்னூட்டம் மக்கள் ஊடகவியலின் புதிய பரிமாணம் : சபா நாவலன்


ஜனநாயகக் கடவுளைச் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு புலியெதிர்பென்ற புதிய சிம்மசனத்தில் சப்பாணி கொட்டி அமர்ந்து கொண்டு சட்டம்பிகளாயும், சக்கரவர்த்திகளாயும் சாம்ராஜ்யக் கனவில் மிதந்தவர்களுக்கு மட்டுமல்ல அதே ஜனநாயகத்தை ஒரு கைபார்த்து வைத்த புலம்பெயர் புலிகளுக்கும் கூட ‘தண்ணி காட்டியிருக்கிறது’ புதிய மக்கள் ஊடகவியலின் வளர்ச்சி. பரிஸில் நடந்து முடிந்தது இதை விலாவாரியாகத் தெளிவுபடுத்துகிறது.

80 களில் அரசியல் என்பது அறப்படித்த சிலரின் தொப்புள் கொடியில் தொங்கியே பிறந்தததாக வெகுஜனத்திற்கு மறைக்கப்பட்டிருந்தது. ‘கொலைகாரச் சிங்களவனை’ சிதைப்பதற்கு இதோ திசை சொல்கிறேன்’ என இரத்த வெறிக்கு உரம் கொடுத்தவர்களை எதிர்ப்பதற்கு சந்தியிலும் சாலைத் திருப்பங்களிலும் மரணித்தவர்கள் பலர். சுந்தரம் ஒபரோய் தேவன் மனோ மஸ்டர் என அறியப்பட்டவர்களும் ஆயிரக்கணக்கான முகமறியாதவர்களும் கண்முன்னால் செத்துப் போனதைக் கண்டு காயப்பட்ட வடுக்களோடு வாழும் சமூகம் தான் இந்தப் புலம் பெயர் சூழலில் ஜனநாயகத்திற்காக ஏங்கும் நாமெல்லாம்! கொன்று போடப்படவர்கள் மீதும் குற்றுயிராக்கப்பட்டவர்கள் மீதும் இடறிவிழுந்து அன்னிய தேசத்தில் அகதியாக வந்த சமூகத்தின் உணர்வுகள் வடிகாலற்றிருந்த சூழலில் தான் தேசம்நெற் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது.
சபாலிங்கம் சாகடிக்கப்பட்ட போது அவர் வீட்டுக் கொல்லைபுறச் சுவரில் அஞ்சலி எழுதுவதற்குக் கூட அச்சமடைந்து இருந்தவர்கள் பலர். இலத்திரனியல் இன்னும் இன்று போல் வளராத காலமது. தேசம்நெற் இருந்திருந்தால் முகமிலிகளாய் அஞ்சலி பதிந்திருப்போம். ஒன்றரைத் தசாப்த்தம் கடந்து போனபிறகு அஞ்சலியென்ன அதை மறுத்தவர்களையே விமர்சிக்கும், மனித விழுமியங்களையே மறு விசாரணை செய்யும் வெளியைத் தேசம்நெற் திறந்து வைத்திருக்கிறது.


நமது சமூகத்தின் விஷ வேர்களையெல்லம் ஆழச்சென்று விசாரிப்பதற்கு வடுக்களைச் சுமந்த சமூகத்தின் உணர்வுகள் மடைதிறந்த வெள்ளம் போல் பாய்ந்த தருணத்தில் தேசம்நெற் திசை பிறழவில்லையாயினும் தவறுகளுக்கு சுயவிமர்சனம் செய்து கொண்டே அதனோடு நட்பு பாராட்டிக் கொண்டவர்களோடு கலந்துரையாடியது.


இதன் பின்னதான தேசம்நேற் இணையட்தின் புதிய பரிணாமம் என்பது பல புதிய அரசியல் விவாதங்களையும் சமூக விசாரணைகளையும் நடத்தியது. தனி நபர் விமர்சனங்கள் நின்றுபோக நபர்களின் அரசியல் மீதான விமர்சனமாக தேசம்நெற்றின் பின்னூட்டங்கள் பரிமாணம் பெற்றன.
புதிய இலத்திரனியல் இணையங்கள் உருவாக்கிய கருத்துச் சுதந்திரம் இன்னொரு விமர்சனக் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியது. பழமைப் பற்றுக்கொண்ட அடிப்படை வாதக் கருத்தோட்டமுள்ள அதிகரம் இந்த விமர்சன முறையை ஏற்றுக் கொள்வதாயில்ல்லை. கருத்துரிமையின் சொந்தக்காரர்களாய் பெருமிதம் கொண்டிருந்வர்களும் அதிகாரத்தின் கர்த்தாக்களாய் அகங்காரமடைந்து இருந்தவர்களும் திகைத்துப் போகிற அளவிற்கு புதிய தொழில் நுட்பம் அறிமுகஞ்செய்த விமர்சனக் கலாச்சாரம் அமைந்திருந்தது.


எகிப்தில் பிரசித்தி பெற்றிறுந்த அப்துல் முகமட் என்பவரின் இணையத்தை அரசாங்கத்திற்கு எதிராக அவதூறு செய்ததற்காகவும் இஸ்லாத்தை அவதூறு செய்ததற்காகவும் தடைசெய்த எகிப்து அரசாங்கம் மொகம்டட்டையும் சிறையில் பூட்டி இரண்டு மாதங்கள் கூட முழுமையாகாத நிலையில் ஜெயபாலனை ‘ஜனநாயகச்’ சிறையில் அடைத்து வைக்க பென்னாம் பெரிய பூட்டோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள் நமது படித்த பயில்வான்கள்.
ஒருவரின் நாளாந்த வாழ் நிலையை விமர்சிப்பதற்கு நமது வாழ்க்கை ஒன்றும் முழுநேர அரசியலல்ல. எனது அலுவலக மேசை ஒழுங்கற்றுக் கிடக்கிறது என்று சுட்டுவிரல் காட்ட நான் எனது கட்சி அலுவலகத்தில் வேலை பார்க்கவில்லை. ஆனால் மாற்றுக் கருத்தாளியைக் கொன்று போட்டுவிட்டு ஜனநாயகம் பேச தெருவுக்கு வரும் போது, ஒவ்வொரு மாற்றுக் கருத்துக் கொண்டவனும் விசாரணை செய்ய வருவான். அதுவும் வடுக்களோடு வாழும் சமுதாயத்திலிருந்து மௌனிகளாயிருக்கும் ஞானிகளை எதிர்பார்ப்பது கடைந்தெடுத்த முட்டாள்தனம்.

நிர்மலா இராஜசிங்கம் சுசீந்திரன் எம்.ஆர். ஸ்டாலின் ராகவன் மற்றும் தலித் மேம்பாட்டு முன்னணி, SLDF மீது முன்வைக்கப்பட்ட விமர்சங்களையே உதாரணமாக புதிய நேர்பரிமாற்ற விமர்சனக் கலாச்சாரப் பின்னணியிலிருந்து பார்ப்போமானால், இதற்கான எல்லைகளை வரைவுக்கு உட்படுத்தலாம். இந்த இவர்கள் சார்ந்த அமைப்பு சர்வதேச அர்சு சாரா நிறுவங்களிடமிருந்து பணம் பெறுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது இவர்களது தனிநபர் இயல்பு சார்ந்த விமர்சனமோ அன்றி அவர்களின் நாளாந்த நடவடிக்கை சார்ந்த விமர்சனமோ அல்ல. அவர்கள் முன்வைக்கும் அரசியல் அதன் பின்னணி சார்ந்த விசாரணை. இவ்வாறான விமர்சங்களை கிசு கிசு போல இவர்கள் அறியாமலே இவ்ர்களின் முதுகுக்குப் பின்னால் நின்று குற்றச்சாட்டுக்களாக வளர்ப்ப்தை விடுத்து, ஒரு பொதுசன ஊடகத்தில் பதிந்த போது அதைப் பதிந்தவரின் சமூக உணர்வு வெளிப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பான தெளிவுபடுத்தலை பதிவாளர் எதிர்பார்ப்பது தெரியப்படுத்தப் படுகிறது. இந்த விமர்சனத்திற்கு தெளிவான பதில் வழங்கப்படும் பட்சத்தில் அது விமர்சகருக்கும் விமர்சிக்கப்படுபவருக்குமான புரிந்துணர்வாக வளர்ந்திருக்கும். வெளிப்படைத் தன்மையின் முதற்புள்ளியாக அமைந்திருக்கும்.

ஆனால் நடந்ததோ வேறு. விமர்சனமே தவறு என்று குற்றஞ்சாட்டப்பட்டு பரிஸ் வரை சென்று தணிக்கைக் கோரிக்கை எழுப்ப்பப்பட்டுள்ளது. இவ்வாறான சந்தேகங்கள் எழுவதற்கு ஆயிரம் அறியப்படாத காரணங்கள் இருக்கலாம். இன்று அரசியலற்ற அமைப்புகளுக்குப் பின்னால் இயங்கும் ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரல் அதிர்வுகளைத் தருகின்றன. என்.ஜீ.ஓ களின் மறுகாலனியாக்கம் பற்றி சமூகத்தைப் பற்றிச் சிந்திப்பவர்கள் பேசுகிறார்கள்.

இந்த வகையான சந்தேகங்கள் முன்னெழுதல் என்பது தவறன்று. அவற்றைத் தெளிவுபடுத்த வேண்டியது சம்பந்தப் பட்டவர்களின் சமூகக் கடமை. தேசம்நெற் கிளர்த்தியிருந்த விவாதங்களூடாக இந்தத் தெளிவுபடுத்தலை முன்வைப்பதற்குப் பதிலாக ரெஸ்ரோரண்டிலிருந்து விமர்சன முறையை இறக்குமதி செய்ய முனைந்திருக்கிறார் சுகன்.

சுகன் முன்வைக்கும் அரசியல் மீது அவர்மீதான தனி நபர் தாக்குதல்களை யெல்லம் கடந்து தேசம் கிளர்த்தியிருந்த விவாதத் தளத்தை எதிர்மறையாகக் ஏற்றுக்கொண்டு சில வரிகளில் முரண்பட்டவர்களை நட்புடன் தெளிவுபடுத்தியிருந்தால் பகைக்குப் பதில் கருத்து வளர்ந்திருக்கும். கருத்துக்கள் மீதான விமர்சனப் பார்வைகளை எதிர்கொள்ள முடியாமல் சுகன் இயைபுற்றிருக்கும் கூட்டணி நகைப்புக்குரியதாகவே தெரிகிறது. மலையைக் கிளப்பும் மகத்துவமிருந்தும் எலிவேட்டைக்காக இணைப்பேற்படுத்தும் பின் தங்கிய நிலப்பிரபுத்துவ மனோபாவத்தின் இவ்வகையான மூடிய தன்மையென்பதை நாமெல்லோருமே சுமந்தபடிதான் உலாவருகின்றோம் எனினும், புதிய தொழில் நுட்பம் ஏற்படுத்தியிருக்கும் வெளிப்படையான வெளியை தேசம்நெற் போன்ற இணையத்தளங்கள் ஏற்படுத்த முற்படும் போது அவற்றைக் கற்றுக்கொள்ள முனைவோம்.
வெளிப்படை நிலை என்பது தான் ஜனநாயகத்தின் முதற்படி. தவிர வினாக்களுக்கு விசனமடைவதென்பது புலி முன்வைக்கும் விமர்சனக் கலாச்சராமாகும்.

நேர்பரிமாற்றத் தொழில்நுட்பம் என்பது ஊடகவியலில் ஏற்படுத்திய பாதிப்பு என்பது நாமெல்லம் கவனத்தில் கொள்ளவேண்டியதொன்று.1. மாதக்கணக்கில் அடுத்த வெளியீட்டுக்காகக் காத்திராமல் உடனுக்குடன் கருத்துக்க்களைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.2. புதிய கருத்துக்களை முன்வைப்பது என்பது உயிரைப் பணயமாக்குவது என்றாகிவிட்ட சூழலில் அடையாளத்தை மறைத்துக் கொண்டு கருத்தை வெளிப்படுத்தும் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
3. பணபலத்தோடு மட்டுமே நாளிதழ்கள் வகையான ஊடகங்களை வெளியிடும் என்ற சூழல் மாறிப் போய் சாமான்யன் கள் கூட ஊடகவியற் துறையில் நுளைந்து விடலாம் என்ற நிலையை ஏற்பட்த்திக் கொடுத்திருக்கிறது.
4. மாதக் கணக்கில் கருத்துக்கணிப்புக்கள் காத்திருப்புகளுகிடையில் நடத்தப்படும் நிலை மாறி சில மணித்திலாங்களே போதுமானது என்ற நிலை உருவாகியுள்ளது.

இவற்றையெல்லாம் தமிழ் ஊடகவியற் துறையில் முதல் முதலாகப் பிரயோகித்த ஒரே இணைய ஊடகம் தேசம்நெற் மட்டும் தான். தேசம்நெற்றின் வெற்றி என்பது பல ஜனநாயக நிகழ்வுகளுக்குக் கூட வழிகோலியிருக்கிறது. ராஜேஸ் பாலவின் அரசியில் கருத்துக்கள் மீது எனக்குக் கிஞ்சித்தும் உடன்பாடில்லை. ஆனால அவர் மகேஸ்வரி வேலாயுதத்திற்கு அஞ்சலிக் கூட்டம் நடத்த முனைந்தபோது அவர் சந்திக்க நேர்ந்த எதிர்ப்புக்கள் புலம்பெயர் ஜனனாயகச் சூழலைக் கேள்விக்குறியாக்கியது. இந்தச் சூழ்நிலையை எதிகொண்ட தேசம் வாசகர்கள் வழங்கிய ஆதரவும் கருத்தூட்டங்களும் கூட்டம் போடும் அடிப்படைச் சுதந்திரத்தை அவருக்கு மறுபடி பெற்றுக்கொடுத்தது.

அது மட்டுமல்ல ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு சத்தம் சந்தடி இல்லாமல் வந்து போன ஜனாதிபதிக்கு அதேபோல் கொமன்வெல்த் கூட்டத்திற்கு வந்து போக முடியவில்லை. இனி லண்டன் வருவதானால் இரண்டுமுறை சிந்தித்துத்தான் முடிவெடுக்க வேண்டிய நிலைக்கான முதற் பொறியை தட்டியது தேசம்நெற். 200,000 தமிழர்கள் வாழும் லண்டனுக்கு அவர்களின் சக உறவுகளை அழிக்கும் படையின் தளபதி எப்படி உல்லாசமாக வந்துபோக முடியும் என்ற கேள்வியை முதலில் எழுப்பியது தேசம்நெற்.

இவை தேசம்நெற்றின் ஊடக பலத்திற்குக் கிடைத்த வெற்றியாகும்.


நீங்கள் தமிழ் மக்களின் பெயரில் அரசியல் செய்தால் அவர்களுக்காக எழுத விரும்பினால் அவர்களுக்காக படைக்க முற்பட்டால் அதனை வெளிப்படையாகச் செய்யுங்கள். விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருங்கள். தமிழ் மக்களின் பெயரில் செய்யவும் வேணும் ஆனால் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளவும் ஏலாது என்றால் தயவுசெய்து தேசம்நெற் பின்னூட்டகாரர்களின் கண்களில் பட்டுவிடாதீர்கள். அவர்களுக்கு புலியும் ஒன்று தான் பூனையும் ஒன்றுதான். கட்டுரையாளனாகிய நானும் தேசம்நெற்றின் ஆசிரியராகிய ஜெயபாலனும் அதற்கு விதிவிலக்கு அல்ல.
இந்த யதார்த்த நிலையைப் புரிந்து கொண்டு உண்மையிலேயே ஜனநாயகம் விரும்பும் சமூக உணர்வு கொண்டவர்கள் சலிப்படையாமல் தேசம்நெற்றை வளர்த்தெடுப்போம்.

நன்றி:தேசத்துக்கு.

Sunday, May 18, 2008

இந்திய, அமெரிக்க குறுக்கீடுகளும் விஷங்களும் பூசி மழுப்பப்படுகின்றன.

கேளாதே கண்டு கொள்ளாதே,பேசவும் நினையாதே

    • தமிழ் மக்களின் விடுதலைக்கு மக்கள் போராட்டமும்
      மக்கள் அரசியலும் பற்றிய பூரண நம்பிக்கை முக்கியமானது

>>>"தமிழீழமே தீர்வு" என்று முடிந்த முடிவாகப் பேசி
மறுத்த எல்லாருக்கும் துரோகிப்பட்டஞ் சூட்டியவர்களிற் பெரும்பாலானோர் இன்று தமிழ்
மக்களின் உரிமையை மறுக்கிறவர்களது எடுபிடிகளாகிவிட்டனர். இது ஏன் நடந்தது என்று
நாம் கவனமாக ஆராயவேண்டும். எங்களுக்கு எல்லாந்தெரியும் என்கிற விதமாகவும் யாரிடம்
இருந்தும், உலக வரலாற்றில் இருந்தும் கூட எதையுமே கற்க அவசியமில்லை என்று
திமிர்த்தனமாகவும் பேசியும் எழுதியும் வந்த ஒரு மரபு இன்னமும் தொடருகிறது.
<<<


இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக யாராவது எதைச்செய்தாலும் அது தமிழருக்கு எதிராகவே செய்யப்படுகிறது என்கிற ஒரு மனநிலையிலேயே பல தமிழ் அரசியல் ஆய்வாளர்களும் ஊடகவியலாளர்களும் உள்ளனர் போலவே தெரிகிறது. இன்னமும் இலங்கையின் ஒரே பிரச்சினை தமிழர்-சிங்களவர் பிரச்சினை தான் என்ற மன நிலையிலிருந்து பலர் விடுபடவில்லை.


இலங்கையின் இன்றைய அதிமுக்கிய பிரச்சினை தேசிய இனப் பிரச்சினை என்பதில் எனக்குக் கருத்து வேறுபாடில்லை. அதிற் தமிழ்த் தேசிய இனத்திற்கு எதிரான அரச ஒடுக்குமுறையும் விசுவரூபமெடுத்திருக்கிற சிங்கள பவுத்தப் பேரினவாத இனவெறியும் அதன் விளைவான, போகும் விடுதலைப் போராட்டமும் அதி முக்கியமானவை என்பதிலும் எனக்குக் கருத்து வேறுபாடில்லை. ஆயினும் அது மட்டுமே தான் பிரச்சினை என்கிற அணுகுமுறை தவறானது என்பதில் தான் உறுதியாக இருக்கிறேன்.


அந்தத் தவறான அணுகுமுறை மட்டுமன்றிச் சர்வதேச அரசியல் பற்றிய குறைபாடான அறிவும் இன்று வரை தமிழ் இன விடுதலைப் போராட்டத்தில் பல தவறான போக்குகட்குக் காரணமாக இருந்துள்ளன.


மலையகத் தமிழரதோ, முஸ்லிம்களதோ தேசிய இனப்பிரச்சினைகள் பற்றியும் அவர்கள் முகம்கொடுக்கும் இன ஒடுக்குமுறைகள் பற்றியும் தமிழ்த் தலைவர்கள் மத்தியிலோ ஆய்வாளர்கள் மத்தியிலோ எவ்வளவு அக்கறை இருந்து வந்துள்ளது என்பதை நாம் சுய விமர்சனக் கண்ணோட்டத்தில் ஆராய வேண்டும்.



சிங்களப் பேரினவாத அரசு தமிழ் முஸ்லிம் முரண்பாடுகள் பற்றியும் வடக்கு-கிழக்கு முரண்பாடு பற்றியும் அறிந்து அந்த அறிவின் அடிப்படையிற் போராட்டத்தைப் பலவீனப்படுத்துவதிற் வெற்றி கண்டுள்ள அளவுக்கு அரச ஒடுக்கு முறைக்கு உட்பட்ட மக்களை ஒன்றுபடுத்திப் போராட்டத்தைப் பலப்படுத்துமளவுக்குத் தமிழ்த் தலைமைகளோ பிற தேசிய இனத் தலைமைகளோ மதியூகத்துடன் செயற்பட்டிருக்கிறார்களா? பகைமைக்கே தேவையில்லாத வேறுபாடுகளை புறக்கணியாமல் கவனித்து அவற்றை நட்பான முறையில் கையாள என்ன முயற்சியாவது எடுக்கப்பட்டதா? இன்று கிளறி விடப்பட்டுள்ள பிரதேசவாதம் தமிழ்-முஸ்லிம் மக்களிடையிலான உறவுக்குங் கேடானது. அதைப் பற்றி யார் சிந்திக்கிறார்கள்? நிச்சயமாகத் தமிழ் முஸ்லிம் தேசிய வாதிகளல்ல.


தினமும் பிரதேசவாதமும் ஒழிக்கப்பட்டு விட்டன என்றும் தமிழ் மக்கள் ஒன்றுபடுத்தப்பட்டு விட்டனர் என்றும் தமிழ்த் தேசியவாதமே அதை இயலுமாக்கியது என்றும் கற்பனைக் கதைகள் கூறப்பட்டன. அதன் விளைவாக உண்மையாக இருந்துவந்த பிரச்சினைகள் பற்றிப் பேச முற்பட்டோர் தமிழரைப் பிரிக்க முயலுவோராகக் காட்டப்பட்டனர். செய்தியைக் கொண்டுவந்த தூதனைத் தண்டித்துவிட்டுச் செய்தியைக் கவனிக்காமல் விட்ட அரசன் மாதிரி தமக்குச் சாதகமற்ற எதையும் பற்றிக் "கேளாதே கண்டு கொள்ளாதே,பேசவும் நினையாதே" என்ற விதமாகவே தமிழ்த் தேசிய வாத அரசியல் பழக்கப்பட்டு விட்டது.



1976ல் த.வி.கூ.தமிழ் ஈழம் பிரகடனம் செய்த போது அது பற்றிய ஒரு
விவாதத் தொடர் வடக்கின் இடது கம்யூனிஸ்டுகட்கும் தமிழரசுக் கட்சி மரபில்
வந்தோருக்குமிடையே நடந்தது. அந்த விவாதம் தமிழ்த் தேசிய வாதிகளிடம் தமிழீழ விடுதலை
பற்றி தாங்கள் யாருக்காக எந்த மண்ணை விடுதலை செய்யப் போகிறார்கள், எப்படிப் போராடப்
போகிறார்கள் என்பன பற்றி ஒரு விதமான திட்டமும் இல்லை என்பது வெளியாகி அபாயம்
தென்படத் தொடங்கிய உடனேயே த.வி.கூட்டணியினர் யாரும் மேற்கொண்டு இவ்வாறான
விவாதங்களில் இறங்கக் கூடாது என்று மறித்தல் ஆணை பிறப்பிக்கப்பட்டது.



1980களின் நடுப் பகுதியில் இளைஞர் இயக்கங்கள் நடுவே பிளவுகள் மோசமாகி ஆளையாள் கொல்லுகிற அளவுக்கு முற்றுவதற்கு முன்பு, தமிழீழத்தை ஏற்காதவர்கள் தமிழ்த் தேசியவாதம் பற்றிய விவாதங்களில் பங்குபற்ற இயலாது என்று தடைவிதித்த "சிந்தனையாளர்களும்" இருந்தனர். தமிழரிடையே ஜனநாயக முறையிலான விவாதத்தை மறித்த அதே சிந்தனையாளர்கள் தமது `நடுநிலையும்' `சுதந்திரமான சிந்தனையும்' கேள்விக்குட்பட்ட போது அது ஜனநாயக மறுப்பு ஃபஸிஸம் என்றெல்லாம் பேசத்தலைப்பட்டனார். தேசியவாதத்தையே நிராகரித்துப் புலம் பெயர்ந்த முதலாளிய சர்வதேச வாதிகளாகவும் மாறினர். உண்மையில் இன்று வரை சுயநிர்ணய உரிமையை வலியுறுத்திப் பேசி வந்துள்ளார்கள். நேர்மையான இடது சாரிகள்தாம் பாராளுமன்ற இடதுசாரிகள் இவ் வகைக்குள் வர மாட்டார்கள் பிரிவினையை அவசியமான ஒரு தீர்வு என்று ஏற்காமல் பிரிந்து போவதற்கான உரிமையை ஏற்றவர்கட்குத் தமிழ் மக்களது பிரச்சினைகட்கும் பிற தேசிய இனங்களது பிரச்சினைகட்கும் ஒரு பொதுவான தீர்வு என்ற விதமாகத் தேசிய இனப் பிரச்சினையை அணுக முடிந்தது; விறைப்பான நிலைப்பாடுகளைத் தவிர்த்து மக்களது நலன் சார்ந்த முடிவுகளை வந்தடைய முடிந்தது. மாற்றுக் கருத்துக்களை நேர்மையாக விவாதித்து மறுதலிக்கவும் பயனுள்ளவற்றை உள்வாங்கவும் தமது தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது அவற்றை சுயவிமர்சன நோக்கில் ஆராய்ந்து திருத்தவும் முடிந்தது.


"தமிழீழமே தீர்வு" என்று முடிந்த முடிவாகப் பேசி மறுத்த எல்லாருக்கும் துரோகிப்பட்டஞ் சூட்டியவர்களிற் பெரும்பாலானோர் இன்று தமிழ் மக்களின் உரிமையை மறுக்கிறவர்களது எடுபிடிகளாகிவிட்டனர். இது ஏன் நடந்தது என்று நாம் கவனமாக ஆராயவேண்டும். எங்களுக்கு எல்லாந்தெரியும் என்கிற விதமாகவும் யாரிடம் இருந்தும், உலக வரலாற்றில் இருந்தும் கூட எதையுமே கற்க அவசியமில்லை என்று திமிர்த்தனமாகவும் பேசியும் எழுதியும் வந்த ஒரு மரபு இன்னமும் தொடருகிறது. முன்பு ஒரு நிலைப்பாட்டிலிருந்து பின்பு தலைகீழாக மாறினபிறகும் அதேவிதமான "எல்லாந் தெரிந்த" "என்றுமே பிழைவிடாத" தோரணையில் இவர்களாற் பேச இயலும். தூற்றிய ஒன்றைப் புகழ்ந்து போற்றவும், போற்றிய ஒன்றை நிந்தித்துத் தூற்றவும் இவர்கட்கு வாய் கூசுவதில்லை. ஏனென்றால் இவர்கள் நடத்துவது மக்கள் அரசியலல்ல. இவர்களது ஆதரவாளர்கள் சம்பளம் வாங்குகிற ஏவலட்கள் போன்று இவர்கட்கு எங்கிருந்தோ வரக்கூடாத இடங்களிலிருந்தெல்லாம் வருகிற வருமானத்தின் மீது தங்கியுள்ளனர். இந்த அவலம் தீவிர தமிழ்த் தேசியவாதிகளிற் பெரும்பாலானவர்கட்கு நேர்ந்துள்ளதென்றால் அது ஒரு தனி மனிதரோ ஒரு சில தனிமனிதரதோ சுயநலத்தால் நடந்ததாக இருக்க இயலாது.


தமிழ் மக்களின் விடுதலைக்கு மக்கள் போராட்டமும் மக்கள் அரசியலும் பற்றிய பூரண நம்பிக்கை முக்கியமானது என்பது எனது கருத்து. இதை எந்தத் தமிழ் தலைமையும் ஏற்றதில்லை. அதுமட்டுமன்றி அவை சனநாயக முறையில் தமது அரசியலை விருத்திசெய்யவும் இல்லை. மாற்றுக் கருத்துக்கள் தட்டி அடக்கப்பட்டளவுக்கும் புறக்கணிக்கப்பட்டளவுக்கும் பின் நாளில் சுட்டு புதைக்கப்பட்டு வருமளவுக்கும் எது பற்றியுமான திறந்த விவாதம் நடந்ததில்லை. இன்றுங்கூட மக்கள் உண்மைகளைக் கண்டறிய இயலாத விதமாகப் புனைவுகள் மூலம் அவர்களது கவனத்திசை திருப்பப்பட்டு வருகிறது. ஊடகங்கள் சில மிகவும் உடந்தையாக உள்ளன.



ஈரான் இலங்கைக்குப் பெருமளவிலான பொருளாதார உதவி வழங்க முன்வந்துள்ளது. அது ஏன் என்ற விளக்கமே இல்லாமல் அது இலங்கை மீதான ஆதிக்க நோக்குடையது. தமிழருக்கு எதிரான நோக்குடையது. அதில் ஆயுத உதவியும் உள்ளடங்கும் என்கிற விதமாகத் தமிழேடுகளில் எழுதப்பட்டு வருகிறது. சீனாவும், பாகிஸ்தானும் வழங்குகிற உதவிகள் தொடர்பாகவும் மேலாதிக்க நோக்கங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஆனால் ஒரு விடயம் மட்டும் எவராலும் கவனிக்கப்படுவதில்லை. இந்த மூன்று நாடுகளும் இலங்கையின் உள்விவகாரங்களில் என்றுமே தலையிட்டதில்லை. இரண்டு அரசுட்கு இடையிலான நல்லுறவு என்ற எல்லை மீறி எதுவுமே இதுவரை நிகழவில்லை. மாஓ காலத்துச் சீனா விடுதலை எழுச்சிகட்கு ஆதரவு வழங்கியது. இன்றைய சீனாவுக்கு அந்த அக்கறையும் இல்லை. சீனா இந்து சமுத்திரத்தில் எங்கெல்லாமோ ராணுவத் தளங்களை வைத்திருப்பதாக அமெரிக்காவுக்கோ இந்திய அரசாங்கத்துக்கோ தெரியாத கதைகள் எல்லாம் ஏதேதோ இணையத் தளங்களிலிருந்து அறுவடை செய்யப்படுகின்றன. ஆனாற் கண்ணுக்கு தெரிகிற இந்திய, அமெரிக்க குறுக்கீடுகளும் விஷங்களும் பூசி மழுப்பப்படுகின்றன. இது ஏன்?



ஏனாயிருந்தாலும் ஏமாற்றப்படுவோர் தமிழ், முஸ்லிம் மக்கள் தான். கருணா பொய்க் கடவுச்சீட்டில் லண்டன் போக முன்னமே இங்குள்ள தூதரகம் உண்மையை அறியும். போகவிட்டு அதன்பின் கைது செய்து குறுகியகாலம் சிறைக்கனுப்பிய போது மனிதஉரிமை மீறல் விசாரணைகள் நடக்கும் என்றெல்லாம் கனவுகள் காணப்பட்டன. கருணாவை இலங்கை அரசாங்கத்துடனான தனது அரசியற் பேரங்களில் ஒரு சின்னத் துடுப்புச்சீட்டாகப் பிரித்தானிய ஆட்சியாளர் பயன்படுத்தினரே ஒழிய இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தும் நோக்கம் அவர்கட்கு என்றுமே இருக்கவில்லை.


இது ஒரு சின்ன நாடகம்.


இது போலப் பெரிய, சிறிய நாடகங்கள் பல நடக்கின்றன. உண்மையென்று நம்புமாறு நமக்கு சொல்லப்படுகிறது. அது நமது அரசியல் நிபுணர்களது இருப்புக்கு அவசியமானது.



மறுபக்கம்


கோகர்ணன்

நன்றி :Thinakkural

Sunday, May 11, 2008

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு இராணுவ உதவி வழங்குவது உண்மையா...

இலங்கை பற்றி எந்த அயல்நாட்டினது அக்கறையும்
இலங்கையின் உள்விவகாரங்களின் உள்ள அக்கறை தொடர்பானதல்ல!


//தமிழ்த் தேசியவாதிகள் வேண்டுவதை எல்லாம் ஏற்பது போல
நடித்தவர்களை நம்பி இனியும் தமிழர் ஏமாற நியாயமில்லை. தமிழ் மக்களுக்கும் சகல
ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கட்கும் சமூகப் பிரிவினருக்கும் தேவையானது நீதியும் நிலையான
சமாதானமுமே. அதற்கு உண்மையான ஆதரவு எங்கு உண்டோ அதைக் கவனியாமல், தொலைந்த இடத்தில்
பொருளைத் தேடாமல் வெளிச்சம் உள்ள இடத்தில் தேடிய முல்லா நஸ்ருத்தின் மாதிரி நமது
தலைவர்கள் நடந்து கொள்ள நாம் இடமளிக்கக் கூடாது. //


இந்திய அரசாங்கம் இலங்கைக்கு இராணுவ உதவி வழங்குவது உண்மையா என்பதைக் கூட ஐயத்திற்கும் விவாதத்திற்கும் உரிய விடயமாக்குவதில் தமிழக அரசியல்வாதிகள் சிலரும் அவர்கட்கு முக்கியத்துவம் வழங்குகின்ற ஊடகங்களும் சிறிது வெற்றி பெற்றிருந்தாலும் அண்மைய செய்திகள் உண்மை என்னவென்பதை உறுதிப்படுத்தியுள்ளன. இலங்கை பற்றி எந்த அயல்நாட்டினது அக்கறையும் இலங்கையின் உள்விவகாரங்களின் உள்ள அக்கறை தொடர்பானதல்ல.

உலகில் எந்த ஒரு நாட்டினதும் உள்விவகாரங்களில் இன்னொரு நாடு குறிப்பாக வலிய நாடு ஒன்று, அக்கறை காட்டுவது நிச்சயமாக அந்த நாட்டின் நலன் கருதியோ அதன் உள் முரண்பாடுகளில் உள்ள ஈடுபாடு காரணமாகவோ அல்ல. ஒடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரிவின் சார்பாகவோ அவர்களை ஒடுக்குகின்ற அரசின் சார்பாகவோ எந்த அயல்நாடும் குறுக்கிடுகிறது மேலாதிக்க நோக்கம் தொடர்பானதே என்பதை எத்தனையோ தடவைகள் கண்டுள்ளோம். ஒரு இன அடையாளங் கொண்ட மக்கள் ஒரு நாட்டில் ஒடுக்குமுறைக்குள்ளாகும் போது பிற நாடுகளில் உள்ள அதே இன அடையாளமுள்ளோர் அதுபற்றிச் சினங்கொள்வதும் விடுதலைக்கு ஆதரவாயுங் குரல் கொடுப்பது போராட்டத்திற்கு உதவுவதும் பல்வேறு சூழ்நிலைகளில் நடந்துள்ளது. ஆயினும் அவ்வாறு நடப்பதற்கான கட்டாயம் ஏதும் இல்லை. அந்த ஆதரவு விடுதலைக்குரிய போதிய உத்தரவாதமுமல்ல. 1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்படப் பல ஆண்டுகள் முன்பிருந்தே பலஸ்தீனத்தின் அராபியருக்கு எதிரான வன்முறை யூதப் பயங்கரவாதக் கும்பல்களால் தொடக்கப்பட்டுவிட்டது. அராபியரை அவரது சொந்த மண்ணிலிருந்து விரட்டி உருவாக்கப்பட்டதே இஸ்ரேல். இஸ்ரேலின் உருவாக்கத்தையொட்டி அரபு நாடுகள் சில போர் தொடுத்தன. ஆனால், பலஸ்தீன அரபு மக்களுக்கு மிஞ்சியது என்ன? இன்றுவரை நாடற்றவர்களாகத் தமது மண்ணிலும் அண்டை நாடுகளிலும் அதற்கப்பாலும் அகதிகளாக வாழுகிறார்கள். தமது சொந்த மண்ணில் மிகக் கொடுமையாக அடக்கப்படுகிறார்கள்.


//அமெரிக்க - இந்திய நட்பு அப்படிப்பட்டதல்ல. அதிலே சமத்துவம்
என்ற பேசுக்கே இடமில்லை. அமெரிக்கா இந்தியா மீது ஆதிக்கஞ் செலுத்த இயலுமானால்
மட்டுமே அமெரிக்கா இந்தியாவின் தென்னாசிய மேலாதிக்கத்திற்கு உதவும். மற்றப்படி,
தனக்குக் கீழ்ப்படாத ஒரு இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கம் அமெரிக்காவின் உலக
மேலாதிக்க நோக்கங்கட்கு முரணானதாகவே அமையும். இதுவே அமெரிக்க இந்திய உறவில்,
குறிப்பாகத் தென்னாசிய அரசியல் பற்றிய நிலைப்பாடுகளில், ஒரு முரண்பாடாகத்
தெரிகிறது.
அதை நம்பி நாம் அமெரிக்காவின் பக்கம் சாய்வதோ இந்தியாவின் பக்கம்
சாய்வதோ தமது நன்மைக்கு அல்ல. இந்த நாட்டின் தேசிய இனப்பிரச்சினையை மேலும்
மோசமாக்குகிறதற்கே இந்தப் பாதை இட்டுச் செல்லும். //



உலகெங்கும் தமிழர் உள்ளனர் அவர்கட்கென்று ஒரு நாடு இல்லை என்றும் சனத்தொகையில் தமிழருடன் ஒப்பிடத்தக்க அராபியருக்கு இருபதுக்கும் மேலான நாடுகள் உண்டு என்னும் வாய்ப்பாடு மாதிரிச் சிலர் ஒப்பித்து எழுதி வருகின்றனர். அத்தனை அரபு நாடுகள் இருந்தும் உலக அரபு மக்களின் நிலை என்ன? இன்னமும் இஸ்ரேலால் எந்தவிதமான தயக்கமுமின்றிப் பலஸ்தீன மண்ணைத் தொடர்ந்து அபகரிக்கவும் பலஸ்தீன அராபியரை இம்சிக்கவும் முடிகிறது. லெபனானின் எல்லைக்குக் குறுக்காகத் தாக்குதல் தொடுப்பதுடன் அதன் தலைநகர் மீதுங் குண்டெறிய முடிகிறது. சிரியாவிடமிருந்து நாற்பது ஆண்டுகள் முன்பு பறித்த பகுதியிலிருந்து வெளியேற மறுக்கிறதுடன் சிரியாவிற்குள் தாக்குதல்களை நடத்த முடிகிறது . இஸ்ரேல் தனது சொந்த வலிமை காரணமாக இவ்வளவு திமிருடன் நடந்துகொள்ள முடிகிறது என்று யாருஞ் சொல்ல இயலுமா?

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் கரமாகவே இஸ்ரேல் செயற்படுகிறது. இஸ்ரேலின் வலிமை அமெரிக்காவின் வலிமையே ஒழிய வேறல்ல. இன்று மத்திய கிழக்கில் அமெரிக்கா- இஸ்ரேல் - துருக்கி என்கிற கூட்டணி ஆதிக்கம் செலுத்துகிறது. அமெரிக்காவுக்கு எதிராகவும் அமெரிக்கா மீதான அச்சங்காரணமாக அல்லது அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் ஆட்சியில் நிலைக்க முடியாது என்பதனால் மத்திய கிழக்கில் நடக்கிற எந்த அநீதியையும் தட்டிக் கேட்க இயலாதவையாக அரபு அரசுகள் உள்ளன. அது மட்டுமல்லாமல் எந்த அமெரிக்கா உலகில் சனநாயகத்தை நிலைநிறுத்தவும் பயங்கரவாதத்தை ஒழிக்கவும் போர் தொடுத்து வருகிறதோ, அதே அமெரிக்காவின் முழு ஆதரவுடன் தமது நாடுகளில் கொடுமையான அடக்குமுறை ஆட்சிகளை நடத்துகின்றன. அமெரிக்கா ஒழித்துக்கட்டப் போவதாகச் சபதம் செய்துள்ளதே, அந்த அல்-க்ஹைதா அதை உருவாக்கியதும் சோவியத் யூனியனிலும் இஸ்லாமிய தீவிரவாதிகளை அனுப்பி வைத்ததும் அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளியாக இருந்து வந்த சவூதி அரேபியாதான்.


//ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பு விடுதலைப் போராட்டத்திற்கான
புதிய தொடக்கங்களை வழங்கியுள்ளது.
அமெரிக்கா ஈராக்கில் ஏன் குறுக்கிட்டது
என்பது பற்றிய சிந்தனை இல்லாமல் சதாம் ஹுசேனின் வீழ்ச்சியை முன்வைத்து அதை
நியாயப்படுத்தியவர்கள் இருந்துள்ளனர். யுகோஸ்லாவியாவின் ஒவ்வொரு சமஷ்டி அரசையும்
பிரித்தெடுத்ததுடன் எஞ்சியிருந்த சேர்பியாவிலிருந்து கொசோவோவையும் அமெரிக்கா
பிரித்தெடுத்துள்ளது. அதே அமெரிக்கா முன்னாள் சோவியத் குடியரசான ஜோர்தியாவிலிருந்து
பிரிந்து தனிநாடாவதற்காக 1990 முதல் போரிடும் தேசிய இனங்களின் பிரிவினையை இப்போது
ரஷ்யா பகிரங்கமாக ஆதரிப்பதை ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் குறுக்கிடுவதாகக்
கண்டனந் தெரிவித்துள்ளது. கொசோவோ பிரிவினையை ஆதரித்த அமெரிக்காவின் ஐரோப்பியக்
கூட்டாளிகளும் அமெரிக்காவுடன் சேர்ந்து கூக்குரலிடுகின்றனர். கொசோவோவுக்கு ஒரு
நீதியும் தென் ஒஸ்ஸெற்றியாவுக்கும் அப்காஸியாவுக்கும் இன்னொரு நீதியுமா?
//

அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தின் நன்மைகளை அரபு மக்களில் ஒரு சிறிய பகுதியினரே அனுபவிக்கின்றனர். ஊழல் மிக்க, நடத்தை கெட்ட ஆட்சியாளர்கள் இஸ்லாமிய மார்க்கத்தின் பேரைச் சொல்லி அரபு மக்களை துய்த்தும் அடக்கியும் ஆண்டு வருகிறார்கள். அரபு மக்களின் நலனுக்கும் அராபியருக்கான நாடுகள் எத்தனை உள்ளன என்பதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. சில நாடுகளில் அரபு மக்களின் நலனுக்காக இயங்கி வந்த இடதுசாரிகளை 1940களில் ஒழித்துக் கட்டிய அரபு தேசியவாதக் கட்சிகள் கொடுமையான அடக்குமுறை ஆட்சிகளாயின. எனினும், அவற்றில் ஓரளவேனும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இருந்தது. இப்போது அதுவும் ஏகாதிபத்தியத்தால் இலக்கு வைக்கப்படுகிறது. இன்னொரு விதமாகச் சொன்னால் பூரண சுதந்திரமான அரபு நாடு என்று சொல்லக்கூடிய நிலையில் ஒரு அரபு நாடும் இல்லை.


1950 களில் முடியாட்சிகளை வீழ்த்தத் தொடங்கி 1960 களில் அந்நிய ஆட்சியாளரை விரட்டிய விடுதலை இயக்கத்தை அரபு மக்கள் மீளக் கண்டறிய வேண்டியுள்ளது. அதற்கான போராட்ட மரபு பலஸ்தீனத்தில் உயிருடன் உள்ளது. ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பு விடுதலைப் போராட்டத்திற்கான புதிய தொடக்கங்களை வழங்கியுள்ளது.


அமெரிக்கா ஈராக்கில் ஏன் குறுக்கிட்டது என்பது பற்றிய சிந்தனை இல்லாமல் சதாம் ஹுசேனின் வீழ்ச்சியை முன்வைத்து அதை நியாயப்படுத்தியவர்கள் இருந்துள்ளனர். யுகோஸ்லாவியாவின் ஒவ்வொரு சமஷ்டி அரசையும் பிரித்தெடுத்ததுடன் எஞ்சியிருந்த சேர்பியாவிலிருந்து கொசோவோவையும் அமெரிக்கா பிரித்தெடுத்துள்ளது. அதே அமெரிக்கா முன்னாள் சோவியத் குடியரசான ஜோர்தியாவிலிருந்து பிரிந்து தனிநாடாவதற்காக 1990 முதல் போரிடும் தேசிய இனங்களின் பிரிவினையை இப்போது ரஷ்யா பகிரங்கமாக ஆதரிப்பதை ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் குறுக்கிடுவதாகக் கண்டனந் தெரிவித்துள்ளது. கொசோவோ பிரிவினையை ஆதரித்த அமெரிக்காவின் ஐரோப்பியக் கூட்டாளிகளும் அமெரிக்காவுடன் சேர்ந்து கூக்குரலிடுகின்றனர். கொசோவோவுக்கு ஒரு நீதியும் தென் ஒஸ்ஸெற்றியாவுக்கும் அப்காஸியாவுக்கும் இன்னொரு நீதியுமா?

இங்கெல்லாம் தேசிய இனப்பிரச்சினைகள் அந்நிய வல்லரசுகளது உலக மேலாதிக்க, பிராந்திய மேலாதிக்க நோக்கங்கட்கு வசதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. எனவேதான், உலக மக்களின் நட்பையும், நீதிக்கான போராட்டங்கட்கான பொதுவான ஆதரவையும் ஆட்சியாளர்களின் இரகசிய நோக்கங்களையும் வேறுபடுத்திக் காணத் தவறுகிற போது மேலாதிக்க நோக்கங்கட்கு நாம் உதவுகிறவர்களாகிறோம்.


தமது பிரச்சினைகளைத் தீர்க்குமாறு நாம் வேண்டிக் கொள்கிற ஒவ்வொரு அந்நிய நாடும் எவ்வாறு தமது பிரச்சினை தொடர்பாக நடந்து கொண்டுள்ளது என்று கவனிப்போமா? சொன்னவற்றையும் செய்தவற்றையும் ஒப்பிட்டுப் பார்ப்போமா? உலக அரங்கில் மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் அமெரிக்கா குறுக்கிட்டுள்ள அளவுக்கு வேறெந்த நாடாவது குறுக்கிட்டுள்ளதா? அக்குறுக்கீடுகளால் நன்மை கண்டோர் யார்? அமெரிக்க மக்களும் அமெரிக்கக் குறுக்கீடுகளால் நன்மை அடையவில்லை என்பதை நாம் மறக்கலாகாது. அமெரிக்காவின் போர்களால் ஏற்படுகிற எண்ணெய் விலை ஏற்றமும் அமெரிக்காவின் பெரு முதலாளிய நிறுவனங்கட்கே நன்மையாகியது. அங்கே பஞ்சம் ஏற்பட்டாலும் அவர்கள் பணங் குவித்துக் கொண்ட இருப்பார்கள். அதுவே உலகப் போர்க் காலங்களிலும் அமெரிக்கப் பொருளாதார நெருக்கடிகளின் போதும் நடந்தது.


இந்தியாவை அஞ்சி அண்டை நாடுகளின் அலுவல்களில் குறுக்கிட்ட நாடும் கிடையாது. ஆக்கிரமிப்பிலும் போரிலும் இறங்கிய நாடும் கிடையாது. ஒரு காலத்தில் சோவியத் யூனியனின் உதவியுடன் தனது பிராந்திய மேலாதிக்க நோக்கங்களை நிறைவேற்றிய இந்தியா, சோவியத் யூனியன் பலவீனப்படத் தொடங்கிய நிலையிலே அமெரிக்காவுடன் தனது உறவுகளை வலுப்படுத்த தொடங்கிவிட்டது. சோவியத் - இந்திய ஒத்துழைப்பில் சோவியத் யூனியனுக்கும் இந்தியாவுக்கும் பொது எதிரியாகச் சீனா இருந்தது. அமெரிக்காவின் உலக ஆதிக்க நோக்கம் இரு நாடுகட்கும் பாதகமானதாய் இருந்தது. சோவியத் விஸ்தரிப்பு நோக்கங்கள் செயற்பட்ட பிராந்தியங்களும் இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் இலக்குகளும் வெவ்வேறாகவே இருந்தன.



//உலகில் எந்த ஒரு நாட்டினதும் உள்விவகாரங்களில் இன்னொரு நாடு
குறிப்பாக வலிய நாடு ஒன்று, அக்கறை காட்டுவது நிச்சயமாக அந்த நாட்டின் நலன் கருதியோ
அதன் உள் முரண்பாடுகளில் உள்ள ஈடுபாடு காரணமாகவோ அல்ல. ஒடுக்கப்பட்ட ஒரு மக்கள்
பிரிவின் சார்பாகவோ அவர்களை ஒடுக்குகின்ற அரசின் சார்பாகவோ எந்த அயல்நாடும்
குறுக்கிடுகிறது மேலாதிக்க நோக்கம் தொடர்பானதே என்பதை எத்தனையோ தடவைகள்
கண்டுள்ளோம். ஒரு இன அடையாளங் கொண்ட மக்கள் ஒரு நாட்டில் ஒடுக்குமுறைக்குள்ளாகும்
போது பிற நாடுகளில் உள்ள அதே இன அடையாளமுள்ளோர் அதுபற்றிச் சினங்கொள்வதும்
விடுதலைக்கு ஆதரவாயுங் குரல் கொடுப்பது போராட்டத்திற்கு உதவுவதும் பல்வேறு
சூழ்நிலைகளில் நடந்துள்ளது. ஆயினும் அவ்வாறு நடப்பதற்கான கட்டாயம் ஏதும் இல்லை.
அந்த ஆதரவு விடுதலைக்குரிய போதிய உத்தரவாதமுமல்ல. 1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்படப்
பல ஆண்டுகள் முன்பிருந்தே பலஸ்தீனத்தின் அராபியருக்கு எதிரான வன்முறை யூதப்
பயங்கரவாதக் கும்பல்களால் தொடக்கப்பட்டுவிட்டது. அராபியரை அவரது சொந்த
மண்ணிலிருந்து விரட்டி உருவாக்கப்பட்டதே இஸ்ரேல். இஸ்ரேலின் உருவாக்கத்தையொட்டி
அரபு நாடுகள் சில போர் தொடுத்தன. ஆனால், பலஸ்தீன அரபு மக்களுக்கு மிஞ்சியது என்ன?
//

அமெரிக்க - இந்திய நட்பு அப்படிப்பட்டதல்ல. அதிலே சமத்துவம் என்ற பேசுக்கே இடமில்லை. அமெரிக்கா இந்தியா மீது ஆதிக்கஞ் செலுத்த இயலுமானால் மட்டுமே அமெரிக்கா இந்தியாவின் தென்னாசிய மேலாதிக்கத்திற்கு உதவும். மற்றப்படி, தனக்குக் கீழ்ப்படாத ஒரு இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கம் அமெரிக்காவின் உலக மேலாதிக்க நோக்கங்கட்கு முரணானதாகவே அமையும். இதுவே அமெரிக்க இந்திய உறவில், குறிப்பாகத் தென்னாசிய அரசியல் பற்றிய நிலைப்பாடுகளில், ஒரு முரண்பாடாகத் தெரிகிறது.

அதை நம்பி நாம் அமெரிக்காவின் பக்கம் சாய்வதோ இந்தியாவின் பக்கம் சாய்வதோ தமது நன்மைக்கு அல்ல. இந்த நாட்டின் தேசிய இனப்பிரச்சினையை மேலும் மோசமாக்குகிறதற்கே இந்தப் பாதை இட்டுச் செல்லும்.



>>இலங்கை பற்றி எந்த அயல்நாட்டினது அக்கறையும்
இலங்கையின் உள்விவகாரங்களின் உள்ள அக்கறை தொடர்பானதல்ல. <<

தமிழ்த் தேசியவாதிகள் வேண்டுவதை எல்லாம் ஏற்பது போல நடித்தவர்களை நம்பி இனியும் தமிழர் ஏமாற நியாயமில்லை. தமிழ் மக்களுக்கும் சகல ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கட்கும் சமூகப் பிரிவினருக்கும் தேவையானது நீதியும் நிலையான சமாதானமுமே. அதற்கு உண்மையான ஆதரவு எங்கு உண்டோ அதைக் கவனியாமல், தொலைந்த இடத்தில் பொருளைத் தேடாமல் வெளிச்சம் உள்ள இடத்தில் தேடிய முல்லா நஸ்ருத்தின் மாதிரி நமது தலைவர்கள் நடந்து கொள்ள நாம் இடமளிக்கக் கூடாது.



தினக்குரலில் மறுபக்கஞ் சொல்வது:
-கோகர்ணன்

Tuesday, May 06, 2008

கிழக்கில் ஜனநாயகத்தின் பெயரில் நக்கினாலும் சரி...

தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத சதி தான், கிழக்கின் தேர்தல்!


>>>மக்களின் வாயைப் பூட்டி விட்டு, இவர்கள் தாம் நடத்துகின்ற கூத்துத் தான் இந்த தேர்தல்கள். புலி எதைச் செய்ததோ அதையே இவர்கள் அரசின் கூலிப்படையாக செய்தபடி, அதை வெட்கமானமின்றி புலியின் பெயரில் ஜனநாயகம் என்கின்றனர்.
இந்த அரசு இன்று செய்யாததையா அன்று புலிகள் செய்துவிட்டனர். எத்தனை படுகொலைகள், எத்தனை கடத்தல்கள், காணாமல் போன நிகழ்ச்சிகள். அனைத்தும் இவர்களுக்கு தெரியும். இவர்களின் துணையும் ஆதரவுமின்றி அவை நடக்கவில்லை. ஆனால் எதுவும் நடவாவது போல் நடந்து கொள்கின்ற பக்காத் திருட்டு அரசியல். அதையே இவர்கள் ஜனநாயகம் என்கின்றனர்.<<<




//அதன் அரசியல் மக்களை வென்று எடுத்ததல்ல. மக்களை கொன்று
போடும் பேரினவாத சூழ்ச்சிக்கு துணையாக இருத்தல் தான். தமிழ் மக்களின் ஜனநாயகத்தின்
பெயரில் இலண்டனில் இருந்து சென்றாலும் சரி, கிழக்கில் ஜனநாயகத்தின் பெயரில்
நக்கினாலும் சரி, பேரினவாத சூழ்ச்சிக்கு கம்பளம் விரிக்கின்ற எட்டப்பர்கள் தான்
இவர்கள். இவர்கள் தமது எட்டப்பத்தனத்தை மூடிமறைக்க, புலிப் பாசிசத்தை துணைக்கு
வைத்துக் கொண்டுள்ளனர். இதுவே தமிழ் மக்களுக்கு எதிரான சதிக் கூத்து. புலிப்
பாசிசத்தை தமது கமக்கட்டில் வைத்துக்கொண்டு, தம்மை தாம் முற்போக்குவாதிகள் என்று
காட்டிக்கொள்ளும் வேஷதாரிகள். இவர்களோ மனித விரோதத்தையே அரசியலாக கொண்ட துரோகிகள்
ஆவர்.
பேரினவாத பாசிச பயங்கரவாத கொலைகளுக்கு முண்டு கொடுக்கும் இந்த
புலியெதிர்ப்புக் கூட்டம், படுபிற்போக்கான வலதுசாரிய பாசிச சிந்தனையையும் செயலையும்
அடிப்படையாக கொண்ட கும்பல். இதற்கு வெளியில் மாற்று அரசியல், ஏன் சுயம் கூடக்
கிடையாது.
கடந்த காலத்தில் ஏகாதிபத்திய தன்னார்வ நிறுவனங்கள் புலிகள் பற்றி
வெளியிட்ட குற்றச்சாட்டுகளை எல்லாம் முன்னிலைப்படுத்தி புலியொழிப்பு பேசியவர்கள்.
இன்று அரசு மீதான அவர்களின் குற்றச்சாட்டுகளை, 'ஏகாதிபத்திய சதி" என்று கூறுகின்ற
அற்பத்தனத்தை செய்கின்றனர். பச்சோந்தித்தனத்தை ஆன்மாவாக கொண்ட பிழைப்புவாத
நக்குத்தனம்.//

 ஏகாதிபத்தியங்களும் - பேரினவாதிகளும் - புலியெதிர்ப்பு உண்ணிகளும் - புலிகளும் :

பேரினவாத பேயோ யுத்தத்தை வெல்லும், உச்சக் கொப்பளிப்பில் கொக்கரிக்கின்றது. தமிழ் மக்களை நாயிலும் கீழாக தாழ்த்தி முடிந்தளவுக்கு சிறுமைப்படுத்துகின்றனர். பேரினவாதத்தை ஊர்ந்து நக்கும் கூட்டம், தமிழ் மக்களுக்கு ஜனநாயகம் கிடைத்து வருவதாக ஊளையிட்டுக் கூறுகின்றனர்.

இந்த புலியெதிர்ப்பு ஜனநாயகம் என்பது, புலியல்லாத பிரதேசத்தில் புலிக்கு நிகரான பாசிசம். எங்கும், எதற்கும் படுகொலை, கடத்தல், காணாமல் போதல், கைது, புலியென முத்திரை குத்தல், இழிவுபடுத்தல் என அனைத்தும், இந்த ஜனநாயகத்தில் அரங்கேறுகின்றது. இதுவே ஜனநாயகமாக, இந்த பாசிசம் அரசியல் அரங்கில் நுழைந்துள்ளது.


முன்பு புலிகளின் பகுதியில் இருந்து தப்பிப் பிழைத்து வாழ முனைந்தவர்கள், புலியல்லாத பிரதேசத்தில் குறைந்தபட்ச சுதந்திரத்துடன் வாழமுனைந்தனர். ஆனால் இன்று, புலியல்லாத பிரதேசத்தில் சுதந்திரமாக வாழமுடியாது என்ற நிலை. அரசின் கூலிக் கும்பலாக எடுபிடிகளாக மட்டும் தான், யாரும் வாழமுடியும் என்ற நிலை. அரசுக்கு கைக்கூலியாக இருந்தல் தான், சுதந்திரம் என்றளவுக்கு நிலைமை மாறிவிட்டது. எதையும் சுதந்திரமாக பேசவும், சொல்லவும், செய்யவும் முடியாதளவுக்கு, பாசிசம் மனித சுதந்திரத்தை வேட்டையாடுகின்றது. இதையே தமிழ் மக்களின் ஜனநாயகம் என்கின்றனர். இதைத் தான் தமிழ் மக்களின் தீர்வு என்கின்றனர்.


தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு, இரண்டு பாசிசங்கள் தமிழ் மக்களையே விலங்கிட்டுள்ளது. கண்காணிப்பும், படுகொலை அரசியல் வெறியாட்டமும், சுயமான மானமுள்ள மனிதர்கள் யாரையும் விட்டுவைக்கவில்லை. அச்சத்தையும் பீதியையும் மனித உணர்வாக விதைத்தபடி, சுயஆற்றல் நலமடிக்கப்பட்டுள்ளது.


சமூகத்துடன் எந்த தொடர்பையும் சுயமான சுதந்திரமான மனிதர்கள் கொண்டு இருக்கக் கூடாது, என்பதே, இந்த பாசிட்டுகள் சொல்லுகின்ற தெளிவான செய்தி. இதுமட்டுமல்ல சுயநலத்தை மூலமாகக் கொண்டு, இந்தப் பாசிசத்தை பயன்படுத்தி அற்ப உணர்வுகளையும் கூட தீர்த்துக்கொள்ளும் வக்கிரமாக இது அரங்கேறுகின்றது.


கடத்தல், காணாமல் போதல், கைது, இனம் தெரியாத படுகொலைகள் சித்திரவதையின் பின்னால் பல நோக்கம் உண்டு. தனிப்பட்ட பழிவாங்கல்கள், பணத்திற்கான கைதுகள், அற்ப பாலிய உணர்வை தீர்க்க கைதுகள், தமது குற்றங்களை மூடிமறைக்க கைதுகள் என்று, வரைமுறையற்ற இவை பலவடிவில் தொடருகின்றது. இது புலியொழிப்பின் பெயரில், சிலரின் சர்வாதிகார பாசிச ஆட்சியாக ஏகாதிபத்திய சதியாக அரங்கேறுகின்றது.
இதை ஜனநாயகம் என்று காவித் திரிகின்ற புலியெதிர்ப்பு உண்ணிகள். ஜனநாயகத்தின் பெயரில் ஊர்ந்து நக்கி மக்களையே தின்ன முனைகின்றது. பேரினவாத கூலிப்படைகளாக வளர்க்கப்பட்ட இந்த கூட்டம், பேரினவாத பாசிச பயங்கரவாதத்தை ஜனநாயகமென்று கூறி அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர்.


இந்த நிலையில் இலங்கை எங்கும் சுயமரியாதையுள்ள, சிந்தனைச் சுதந்திரம் கொண்ட மனிதர்கள் யாரும் சுயமாக வாழ முடியாது என்பது தான் இன்றைய பொதுவான நிலை.


இரத்தம் குடிக்கும் புலியெதிர்ப்பு உண்ணிகள்


இலங்கையில் நடக்கும் புலியல்லாத ஒவ்வொரு கொலையிலும், புலியெதிர்ப்பு அரசியலுக்கு பங்கு உள்ளது. பேரினவாத பாசிச வெறியாட்டத்தில், அங்குமிங்குமாக புலி ஒழிப்பின் பெயரில் பங்களிக்கின்றனர். பேரினவாதத்தின் ஒவ்வொரு செயலையும், புலியெழிப்பாக காட்டி நக்கும் கூட்டம் தான் இந்தக் கூட்டம்.


அதன் அரசியல் மக்களை வென்று எடுத்ததல்ல. மக்களை கொன்று போடும் பேரினவாத சூழ்ச்சிக்கு துணையாக இருத்தல் தான். தமிழ் மக்களின் ஜனநாயகத்தின் பெயரில் இலண்டனில் இருந்து சென்றாலும் சரி, கிழக்கில் ஜனநாயகத்தின் பெயரில் நக்கினாலும் சரி, பேரினவாத சூழ்ச்சிக்கு கம்பளம் விரிக்கின்ற எட்டப்பர்கள் தான் இவர்கள். இவர்கள் தமது எட்டப்பத்தனத்தை மூடிமறைக்க, புலிப் பாசிசத்தை துணைக்கு வைத்துக் கொண்டுள்ளனர். இதுவே தமிழ் மக்களுக்கு எதிரான சதிக் கூத்து. புலிப் பாசிசத்தை தமது கமக்கட்டில் வைத்துக்கொண்டு, தம்மை தாம் முற்போக்குவாதிகள் என்று காட்டிக்கொள்ளும் வேஷதாரிகள். இவர்களோ மனித விரோதத்தையே அரசியலாக கொண்ட துரோகிகள் ஆவர்.
பேரினவாத பாசிச பயங்கரவாத கொலைகளுக்கு முண்டு கொடுக்கும் இந்த புலியெதிர்ப்புக் கூட்டம், படுபிற்போக்கான வலதுசாரிய பாசிச சிந்தனையையும் செயலையும் அடிப்படையாக கொண்ட கும்பல். இதற்கு வெளியில் மாற்று அரசியல், ஏன் சுயம் கூடக் கிடையாது.
கடந்த காலத்தில் ஏகாதிபத்திய தன்னார்வ நிறுவனங்கள் புலிகள் பற்றி வெளியிட்ட குற்றச்சாட்டுகளை எல்லாம் முன்னிலைப்படுத்தி புலியொழிப்பு பேசியவர்கள். இன்று அரசு மீதான அவர்களின் குற்றச்சாட்டுகளை, 'ஏகாதிபத்திய சதி" என்று கூறுகின்ற அற்பத்தனத்தை செய்கின்றனர். பச்சோந்தித்தனத்தை ஆன்மாவாக கொண்ட பிழைப்புவாத நக்குத்தனம்.


புலியெதிர்ப்பு, புலியொழிப்பையும் இப்படியும் முக்கி முனங்குகின்றனர். காலத்துக்கும் நேரத்துக்கும் ஏற்ப, ஏகாதிபத்தியம் முதல் ஜே.வி.பி. வரை ஆதரித்தும் எதிர்த்தும் கயிறு திரிக்கின்ற முடிச்சு மாத்திப் பேர்வழிகள். யாரெல்லாம் புலியை ஒழிக்க முனைகின்றனரோ, அவர்கள் ஜனநாயகவாதிகள் என்பதே, காலத்துக்காலம் இவர்களின் புலியொழிப்பு சித்தாந்தமாகும்.


இந்த கூட்டத்துக்கு ஏற்ற பேரினவாத சர்வாதிகார கொடுங்கோலர்கள் தான், இன்று இலங்கையில் ஆட்சியில் அமர்ந்துள்ளனர். இதுவோ மிக சதித் தன்மை கொண்டது. தனக்கு எதிரான அனைத்தையும், புலி முத்திரை குத்தி அழித்தொழிக்க சங்கற்பம் கொண்டுள்ளது. எதையும் எப்படியும் முத்திரை குத்தவும், நியாயவாதம் பேசவும், தர்க்கம் செய்யவும் கூடிய, பாசிச சிந்தனையையும் ஆற்றலையும் பெற்றுள்ளது.



தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத சதி தான், கிழக்கின் தேர்தல்


மாபெரும் ஜனநாயக மோசடி. சிங்கள பேரினவாதத்தை நிறுவ, தமிழ் இனத்தை அழிக்க, நடத்துகின்ற திருகுதாளங்கள் இவை. தனது கூலிபடைகளை கொண்டு, ஜனநாயக பாசிசக் கூத்துகள்.

இராணுவ பாசிச சர்வாதிகாரத்தை நிறுவி, யாரும் சுதந்திரமாக நடமாடவே முடியாத சூனியத்தை உருவாக்கி, கூலிப்படைகளை கொண்டு தேர்தலை நடத்தி, அவர்களே ஜனநாயக காவலராகின்றனர்.

கூலிக்கு மாரடிக்கும் கொலைகாரக் கும்பலாக, ஆள் காட்டிகளாக திரிந்த அராஜக கும்பலுக்கு, சட்ட அந்தஸ்து கொடுத்து விடுகினற கூத்துத் தான் இந்த ஜனநாயகம். இலங்கை அரசின் கூலிப்படைகள், தேர்தல் என்ற மோசடி மூலம் ஜனநாயக காவலராக்கி வேடிக்கை, இப்படி இலங்கையில் அரங்கேறியது.

இந்த மண்ணில் சுதந்திரமான எண்ணம் கொண்ட, சுதந்திரமான செயலைக் கொண்ட எந்த மனிதனும் உயிருடன் நடமாட முடியாது. அரசை எதிர்க்கின்ற யாரும், இந்த ஜனநாயக பூமியில் வாழமுடியாது. இது தான் இவர்கள் இங்கு படைத்துள்ள ஜனநாயகம்.
இந்த பாசிச ஜனநாயகம் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்கள் யார்? ஈவிரக்கமற்ற கொலைகாரர்கள், மக்களை கொள்ளையடித்து வாழ்பவர்கள், கற்பழிப்புகள் செய்தவர்கள், அடிதடிப் பேர் வழிகள், கட்டைப் பஞ்சாயத்து செய்பவர்கள், என்று சமூகத்துக்கு எதிரான இழிவான செயல்களைச் செய்பவர்கள் அல்லது அதற்கு துணையாக நின்றவர்கள் இவர்கள். இதற்குள் துப்பாக்கி முனையில் கட்டாயப்படுத்தி தேர்தலில் நிறுத்தப்பட்ட அப்பாவிகள் மறுபுறம். இப்படி பாசிசம் பலவழியில் செழித்து நிற்கின்றது.


ஆயுதம் ஏந்திய ரவுடிகளின் ஆட்சி இது. உணர்வு ரீதியாக, சித்தாந்த ரீதியாக, கூலிப்படை அரசியல். ஜனநாயக வித்தைகள் மூலம், அரங்கேற்றுகின்ற அரசியல் சதிகளும் திருகு தாளங்களும் மட்டுமே அரங்கேறின. வென்றவர்கள் முன்னாள் பாசிசப் புலி, இன்னாள் பாசிசக் கூலிப்டை. அரச புலனாய்வுப் பிரிவின், தொங்கு சதைகள். ஆள்காட்டிகள் மூலம், முழு சமூக ஜனநாயக கூறுகளையும் அழிதொழித்தபடி, ஜனநாயகத்தை பாதுகாப்பதாக கூறுவதுதான், இந்த பாசிச மோசடி.


எஞ்சி இருக்கின்ற ஜனநாயகத்தை சிதைக்க, அதன் கூறுகளை அழித்தொழிக்க, தேர்தல் மோசடிகள். இது தமிழ் மக்களின் பெயரில், பேரினவாதிகளால் அரங்கேற்றப்படுகின்றது. தமிழ் மக்கள் இந்த தேர்தலுக்காக ஏங்கி நிற்பதாக காட்டுகின்ற மோசடி தான், கூலிக்கு மாரடிக்கும் கும்பலின் பிழைப்புவாத அரசியல்.

மக்களின் வாயைப் பூட்டி விட்டு, இவர்கள் தாம் நடத்துகின்ற கூத்துத் தான் இந்த தேர்தல்கள். புலி எதைச் செய்ததோ அதையே இவர்கள் அரசின் கூலிப்படையாக செய்தபடி, அதை வெட்கமானமின்றி புலியின் பெயரில் ஜனநாயகம் என்கின்றனர்.

இந்த அரசு இன்று செய்யாததையா அன்று புலிகள் செய்துவிட்டனர். எத்தனை படுகொலைகள், எத்தனை கடத்தல்கள், காணாமல் போன நிகழ்ச்சிகள். அனைத்தும் இவர்களுக்கு தெரியும். இவர்களின் துணையும் ஆதரவுமின்றி அவை நடக்கவில்லை. ஆனால் எதுவும் நடவாவது போல் நடந்து கொள்கின்ற பக்காத் திருட்டு அரசியல். அதையே இவர்கள் ஜனநாயகம் என்கின்றனர்.


சில ஏகாதிபத்திய எதிர்வினைகள் எதனால்?


சர்வதேச ரீதியாக ஏகாதிபத்திய முரண்பாடு முற்றிவருவதன் விளைவு, இலங்கையிலும் எதிரொலிக்கின்றது. இலங்கை அரசின் யுத்த முனைப்பை உருவாக்கி, இந்த போட்டி ஏகாதிபத்திய ஊடுருவல்கள் நடக்கின்றது.

இலங்கை அரசுக்கு எதிரான சில ஏகாதிபத்திய எதிர்வினைகள், இலங்கை சந்தை தொடர்பானதே. அமெரிக்கா – ஐரோப்பிய ஏகாதிபத்தியுடன் முரண்படுகின்ற ஏகாதிபத்தியங்கள், அரசின் யுத்தமுனைப்பை பயன்படுத்தி இலங்கையில் ஊடுருவத் தொடங்கியுள்ளது.
அமெரிக்கா – ஐரோப்பிய நாடுகள் தமது சுரண்டல் கட்டமைப்பை பாதுகாக்க, தற்காப்பு நிலையெடுத்து, அரசின் மனித உரிமை மீறல் பற்றி ஊளையிடுகின்றது.

மனித உரிமை மீறல் பற்றிய இலங்கை விவாதம், ஏகாதிபத்திய முரண்பாடுகளில் இருந்து வெளிவருகின்றது. இது யுத்தத்துக்கு ஆதரவாக, ஒருபுறம் யுத்த வளங்களை வழங்க, மறுபக்கம் யுத்த வெளிப்பாடான மனிதவுரிமை மீறல்களைப் பற்றி மற்றைய ஏகாதிபத்தியங்கள் பேசுகின்ற நிலையை உருவாகியுள்ளது.

புலிகளின் பாசிச பயங்கரவாத நிலையால், இதில் தடுமாற்றங்களும் உண்டு. இரண்டையும் செய்ய முனைகின்ற தன்மை வெளிப்படுகின்றது.
ஏகாதிபத்தியங்கள் விரும்பியவாறு, நிலைமையை பரஸ்பரம் ஆட்டுவிக்கின்றது. யுத்த முனைப்பை முன்தள்ளி, அதை கொண்டு மற்றய ஏகாதிபத்தியத்தை புறந்தள்ள முனைவதும் போட்டி ஏகாதிபத்தியங்கள் தான்.
இலங்கை யுத்த செய்யும் சுய ஆற்றலும், வளமுமற்றது. ஏகாதிபத்திய நலனுக்கு ஏற்ற யுத்த சர்வாதிகாரர்களை உருவாக்கியுள்ளது. அவர்களின் குறுகிய குடும்ப நலனை முன்னிறுத்தி, யுத்த வழி ஊழல் இலஞ்சம் மூலம் முன்னேற வழிகாட்டி, யுத்தத்தை மற்றைய ஏகாதிபத்த்pயத்துக்கு எதிராக திணித்துள்ளது.


இப்படி இலங்கையில் இரண்டு யுத்தம் நடக்கின்றது.

1. புலி ஒழிப்பு யுத்தம

2. அமெரிக்கா – ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான மற்றைய ஏகாதிபத்திய யுத்தம்.

ஒரு சூக்குமமான, வெளித் தெரியாத நிழல் யுத்தம் பல முகத்துடன் அரங்கேறுகின்றது. இந்தியாவின் அதிகளவிலான தலையீடும், சீனா, ரூசியா, ஈரான் போன்ற நாடுகளின் தலையீடும், ஏகாதிபத்திய முரண்பாடுகள் விளைவால் அதிகரிக்கின்றது. யப்பான் அங்குமிங்கும் நெளிகின்றது.
மொத்தத்தில் இதன் விளைவால் யுத்த வளம் கிடைப்பதுடன், யுத்தத்தை பயன்படுத்தி வாழ்கின்ற கூட்டத்தின் பாசிச அரசியல் மூர்க்கமாகி, யுத்த வெறியுடன் கொட்டமடித்து நிற்கின்றது.


இப்படி ஏகாதிபத்திய முரண்பாடுகள், இலங்கையின் பொருளாதாரம் மீதான ஆதிக்கப் போட்டியாக, தமது இராணுவ செல்வாக்குக்குட்பட்ட மண்டலமாக வைத்திருக்கும் போட்டியாக மாறி நிற்கின்றது.

புலிகள் தாமே உருவாக்கிய சொந்த அழிவில் துரிதமாகின்றனர்


சர்வதேசத்தில் மாறிவரும் போக்குகளை பயன்படுத்தும் நிலையில் கூட, புலிகள் இல்லை. அரசியலை, போராட்டத்தை இராணுவவாதத்தில் மூழ்கடித்து சிதைந்து போனார்கள் புலிகள். தமது பாசிச வெறியாட்டம் மூலம் பயங்கரவாத இயக்கமாக, தமக்கு தாமே உலக அங்கீகாரம் பெற்று நிற்கின்றனர். இதனால் ஏகாதிபத்திய முரண்பாடுகள், புலிக்கு சாதகமாக கூடிய எந்த வழியும் கிடையாது. மாறாக அரசுக்கு சார்பாகியுள்ளது. ஒருபுறம் யுத்தம் செய்ய புலியை தடைசெய்யாத ஏகாதிபத்திய ஆதரவையும், மறுபக்கம் புலியை தடைசெய்த ஏகாதிபத்தியங்களையும் பேரினவாதம் பயன்படுத்துகின்றது. புலிப்பாசிசம் என்ற ஒரு கல்லில், இரண்டு மாங்காய் என்ற உத்தி இங்கு பேரினவாதிகளால் நிகழ்த்தப்படுகின்றது.
புலிகள் ஏகாதிபத்திய முரண்பாட்டை பயன்படுத்தி இனியும் மீள முடியாது.


1. புலிகள் அதற்கான சர்வதேசக் கூறுகளை முன் கூட்டியே அழித்துவிட்டனர்.

2. யுத்தத்தை முனைப்புடன் நடத்த முடியாத வகையில், மக்கள் மத்தியில் முற்றாக அம்பலப்பட்டு, மக்களிடம் தோற்றுக்கொண்டு இருக்கின்றனர். இது பேரினவாதிகளிடமான தோல்வியாக மாறிவிட்டது.


தமிழ் மக்களின் கதி என்பது மோட்சமல்ல, நரகம் தான். எந்த மீட்சிக்கும் இடமில்லை. மொத்தத்தில் இலங்கை ஏகாதிபத்திய சூறையாடலுக்குள் சிதைக்கப்பட்டு அழிகின்றது. மக்களின் மீட்சிக்கான பாதைகள், மேலும் மேலும் ஆழமாக சிதைந்து சுருங்கி வருகின்றது என்பதே உண்மை.



பி.இரயாகரன்16.03.2008


தமிழரங்கத்திலிருந்து...

Thursday, May 01, 2008

மாஓ வாதிகள்...

//எவ்வாறாயினும் தேசிய வாதிகளும்,
தலித்தியவாதிகளும் பெண்ணியவாதிகளும் பிரிந்து நின்று எல்லாரையும் பிளவு படுத்திச்
சாதிக்க இயலாத விடயங்கள் பலவற்றை எல்லா முரண்பாடுகளையும் ஒரு முழுமையின் பகுதியாக
வர்க்கப் போராட்டத்தினுடன் தொடர்பு படுத்திய ஒரு போராட்டப் பாதை பத்தே ஆண்டுகளிற்
சாதித்துள்ளது. அதன் பாடங்கள் உன்னதமானவை. //




மறுபக்கம்:


>>>மாஓ வாதிகள் ஒரு மாபெரும் வெற்றியைப்
பெற்றுள்ளனர். ஆனால், இது ஒரு முக்கியமான திருப்பு முனையே ஒழிய இறுதி வெற்றி அல்ல. <<<



நேபாளத்தில் அதி முக்கியமான அரசியல் நிகழ்வென்று கூறக் கூடிய விதமாக முடியாட்சியின் ஒழிப்பை அதன் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் உறுதிப்படுத்தியுள்ளது. நேபாள மாஓ வாதிகளின் வெற்றி, வெறும் தேர்தல் வெற்றியல்ல. பாராளுமன்றத்தின் மூலம் வர்க்கம், இனம், மதம், சாதி, பால் என்ற அடிப்படைகளில் ஒடுக்கப்பட்ட மக்களது உரிமைகளை வென்றெடுக்க இயலாது என்பது ஒரு புறம் இருக்க ஒரு சனநாயக நாட்டில் பாராளுமன்றத்தின் மூலம் செய்யக் கூடியதைக் கூடச் செய்ய இயலாதளவுக்கு உண்மையான அரசியல் அதிகாரம் நேபாள மன்னராட்சியின் கையில் இருந்தது. நேபாள இராணுவம் அந்த அரசியல் அதிகாரத்தின் உத்தரவாதமாக இருந்தது.


1994 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த பாராளுமன்ற இடதுசாரிக் கட்சியால் எதையுமே செய்ய இயலாதது போக அந்த ஆட்சி கூடக் கலைக்கப்பட்டு மன்னராட்சிக்கு உடன்பாடான நேபாள காங்கிரஸ் அரசாங்கம் அமைத்தது. இத்தகையதொரு பின்னணியிலேயே மாஓ வாதக் கம்யூனிஸ்ட்டுக்கள் பாராளுமன்றத்திலிருந்து வெளியேறி 1996 ஆம் ஆண்டு மக்கள் யுத்தத்தைத் தொடுத்தனர்.


அப்போது அவர்கள் வலுவான ஒரு சக்தியாக இருக்கவில்லை. அவர்கள் ஒரு புறம் அரசுடன் போர் தொடுத்தனர். மறுபுறம் தங்கள் ஆதரவுப் பிரதேசங்களில் மாற்று அரசியல் அதிகாரம் ஒன்றைக் கட்சியெழுப்பினர். இந்த அதிகாரத்திற்கு ஆயுதங்களை விட அரசியல் முக்கியமானதாக இருந்தது. காணிச் சீர்திருத்தம், பண்ணையடிமை முறை ஒழிப்பு, சாதி, மதப் பாகுபாட்டுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள், பெண்கள் சமத்துவம் என்று ஒவ்வொரு துறையிலும் அவர்களது அக்கறை இருந்தது. அதை அவர்கள் செயலிலும் காட்டினர். கொள்கைகளை மக்களுக்கு விளக்கினர். அவற்றை நடைமுறைப்படுத்துவது பற்றி மக்களுடன் கலந்தாலோசித்தனர். மக்கள் மூலமே அவற்றை நடைமுறைப்படுத்தினர்.


கட்சியிலும் மக்கள் படையிலும் தலைமைப் பொறுப்புகளிலும் பல்வேறு மட்டங்களிலும் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவினர் இருந்தனர். யாரையும் கட்டாயப்படுத்திக் கட்சியிலோ படையிலோ சேர்க்கும் தேவை அவர்களுக்கு இருக்கவில்லை. மக்கள் அரச படைகளதும் ஒடுக்கும் வர்க்கத்தின் அடியாட்களதும் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்த வேண்டியிருந்தது. தாங்கள் வென்றெடுத்த உரிமைகளைக் காத்து விருத்தி செய்ய அவர்களுக்கு அரசியல் தேவைப்பட்டது. அரசியற் தளத்திலும் சமூகத் தளத்திலும் ஆயுதப் போராட்டத்திலும் மக்களை நெறிப்படுத்தியது. வெகுசன அரசியல், வெகுசனப் போராட்டம், மக்கள் யுத்தம் என்பவற்றை முதன்மைப்படுத்தியது. ஒரு அரசியல் சிந்தனையே.
நேபாளத்தின் சனத்தொகை இலங்கையுடன் ஒப்பிடத்தக்கது. அங்கு பத்தாண்டுகளாக நாடு தழுவிய ஒரு ஆயுதப் போராட்டம் நடந்தது. அப் போராட்டத்தின் போக்கில் நாட்டின் 80 முதல் 90 சதவீதம் வரையிலான நிலப்பரப்பு மாஓ வாதக் கம்யூனிஸ்ற்றுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. மாஓ வாதிகள் மக்கள் யுத்தத்தின் மூலம் ஆட்சியை ஸ்தம்பிக்கச் செய்த எத்தனையோ தருணங்கள் இருந்தன. அவர்கள் அதேவேகத்தில் தொடர்ந்திருந்தால் தலை நகரமான காத்மண்டு உட்பட முழு நாட்டிலும் தமது அதிகாரத்தை நிலைநாட்ட ஓரிரு ஆண்டுகளே போதுமாயிருந்திருக்கும். இதை அப்போது ஒத்துக் கொள்ளத் தயங்கியவர்கள் இப்போது ஒத்துக் கொள்கின்றனர்.


>>>வேறுமனே பாராளுமன்ற அதிகாரத்தின் மீது நேபாள மாஓ
வாதிகள் தங்கியிருப்பார்களேயானால் அவர்கள் இரத்தம் சிந்திப் பெற்ற வெற்றியைப்
பாராளுமன்ற விவாதங்களின் சுடு காற்று அள்ளிச் சென்று விடும். மக்கள் அதிகாரத்தை மாஓ
வாதிகள் எவ்வாறு வலுப்படுத்தப் போகிறார்கள் என்பது தான் நேபாளத்தின் சுபிட்சத்தை
முடிவு செய்யும். <<<

மாஓ வாதிகள் தமது போராட்டத்தின் மூலம் பலமுறை தலைநகரைச் சுற்றி வளைத்து ஸ்தம்பிக்கச் செய்ய முடிந்ததென்றால் அவர்கள் தலைநகரைக் கைப்பற்ற முயலாதது ஏன்? பத்து வருடப் போர் பதின்மூவாயிரம் பேர்களின் உரைப் பறித்தது. அதில் பத்தாயிரம் உயிர்கள் அரச இராணுவத்தினரால் பறிக்கப்பட்டவை. போர் மூலம் தலை நகரைப் பிடிப்பதனால் மேலும் பல ஆயிரம் உயிர்கள் பலியாக நேரும் என்பது போக, சீர்குலைந்த ஒரு பொருளாதாரச் சூழலில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தடைப்படுவதால் இலட்சக்கணக்கான மக்கள் அல்லற்படுவர். அதற்கும் மேலாக நேபாளத்தில் குறுக்கிடுவதற்குத் தருணம் பார்த்திருந்த இந்தியாவும் அமெரிக்காவும் அங்கு சனநாயகத்தைக் காப்பாற்றுகின்ற பேரில் குறுக்கிடும் வாய்ப்பும் இருந்தது. எனவே, விடுவிக்கப்பட்ட நேபாளம் தொடர்ந்தும் பல ஆண்கட்கு உள்நாட்டுக் கலவரங்கட்கு முகம் கொடுக்க நேரும்.
நேபாளத்தின் வறுமையும் பொருளாதாரப் பின்னடைவும் அரசியல் குழப்பமும் நேபாளத்தில் அந்தியக் குறுக்கீட்டை மட்டுமன்றி நிரந்தரமான அந்நிய ஆக்கிரமிப்பையும் சாத்தியமாக்கும் வாய்ப்புகள் அதிகம் எனுபதற்குக் கடந்த பத்தாண்டுக்கால உலக நிகழ்வுகள் சான்று கூறும். அதைவிட நேபாளம் சீனாவுடனும் இந்தியாவுடனும் கொண்டுள்ள நீண்ட எல்லை அதை உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவுக்கு முக்கியமான ஒரு பிரதேசமாக ஆக்கியுள்ளது.


நேபாள முடியாட்சி தன் இயலாமையை மூடி மறைக்கப் பாராளுமன்றத்தைக் கலைத்து முழு அதிகாரத்தையும் தன் வாசமாக்கிய போது பாராளுமன்றக் கட்சிகள் இயங்குவதற்கான வாய்ப்பே இல்லாது போயிற்று. மன்னராட்சிக்கு எதிராக அவை ஒன்றிணைந்த போதும் அவற்றால் மன்னராட்சியின் அடாவடித்தனங்கட்கு முன் தாக்குப் பிடிக்க இயலவில்லை. இச் சூழலில் மாஓ வாதிகளின் குறுக்கீடு அவர்கட்கு உதவியாக அமைந்தது. அவர்களால் மன்னராட்சிக்கு எதிராகத் தைரியமாக ஆர்ப்பாட்டங்களை நடத்த முடிந்தது. சுருங்கச் சொன்னால் ஆயுதமேந்திய புரட்சி மூலம் மாஓ வாதிகள் ஒரு சனநாயக ஆட்சியை இயலுமாக்கினர். வேறு விதமாக நேபாளத்திற்கு எவ்விதமான சனநாயக ஆட்சியும் மீண்டிருக்க இயலாது.

//மாஓ வாதிகள் தமது போராட்டத்தின் மூலம் பலமுறை தலைநகரைச்
சுற்றி வளைத்து ஸ்தம்பிக்கச் செய்ய முடிந்ததென்றால் அவர்கள் தலைநகரைக் கைப்பற்ற
முயலாதது ஏன்? பத்து வருடப் போர் பதின்மூவாயிரம் பேர்களின் உரைப் பறித்தது. அதில்
பத்தாயிரம் உயிர்கள் அரச இராணுவத்தினரால் பறிக்கப்பட்டவை. போர் மூலம் தலை நகரைப்
பிடிப்பதனால் மேலும் பல ஆயிரம் உயிர்கள் பலியாக நேரும் என்பது போக, சீர்குலைந்த ஒரு
பொருளாதாரச் சூழலில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தடைப்படுவதால்
இலட்சக்கணக்கான மக்கள் அல்லற்படுவர். அதற்கும் மேலாக நேபாளத்தில்
குறுக்கிடுவதற்குத் தருணம் பார்த்திருந்த இந்தியாவும் அமெரிக்காவும் அங்கு
சனநாயகத்தைக் காப்பாற்றுகின்ற பேரில் குறுக்கிடும் வாய்ப்பும் இருந்தது. எனவே,
விடுவிக்கப்பட்ட நேபாளம் தொடர்ந்தும் பல ஆண்கட்கு உள்நாட்டுக் கலவரங்கட்கு முகம்
கொடுக்க நேரும்.
நேபாளத்தின் வறுமையும் பொருளாதாரப் பின்னடைவும் அரசியல்
குழப்பமும் நேபாளத்தில் அந்தியக் குறுக்கீட்டை மட்டுமன்றி நிரந்தரமான அந்நிய
ஆக்கிரமிப்பையும் சாத்தியமாக்கும் வாய்ப்புகள் அதிகம் எனுபதற்குக் கடந்த
பத்தாண்டுக்கால உலக நிகழ்வுகள் சான்று கூறும். அதைவிட நேபாளம் சீனாவுடனும்
இந்தியாவுடனும் கொண்டுள்ள நீண்ட எல்லை அதை உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவுக்கு
முக்கியமான ஒரு பிரதேசமாக ஆக்கியுள்ளது. //


மன்னர் பணித்த பின்பு ஏழு பாராளுமன்றக் கட்சிகளிடையிலும் பழைய பாராளுமன்ற விளையாட்டுக்கு மீளுகிற நோக்கம் வந்து விட்டது. குறிப்பாக நேபாள காங்கிரஸ், ஐக்கிய மாக்சிச லெனினிசக் கம்யூனிஸ்ற் கட்சி என்பன தமது பாராளுமன்ற அரசியல் ஆதிக்கம் பற்றிய சிந்தனையிலே இருந்தன. மாஓ வாதிகள் அதற்கு உடன் படவில்லை. ஒரு அரசியல் நிர்ணய சபையைச் சனநாயக முறைப்படி தெரிந்தெடுத்துப் புதிய அரசியல் யாப்பொன்றை வகுத்து மக்களின் சனநாயக, அரசியல், சமூக உரிமைகளை உறுதிப்படுத்துவது அவசியம் என்று வற்புறுத்தினர். வேறு வழியின்றி ஏழு கட்சிக் கூட்டணி அதற்கு உடன் பட்டது. அதன் பின்பும் மாஓ வாதிகள் அரசியல் நிர்ணய சபையில் பெரும்பான்மை வலிமை பெற இயலாத விதமாகப் பல்வேறு சூழ்ச்சிகள் செய்யப்பட்டன.


தென் கிழக்கு நேபாளத்தின் மாதேஸி சமூகத்தினரிடையே இந்திய இந்துத்துவ விஷமிகள் கலவரங்களைத் தூண்டி விட்டனர். அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை இழுத்தடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறான பல `கண்டங்கள் தாண்டி' மாஓ வாதிகள் ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர். ஆனால், இது ஒரு முக்கியமான திருப்பு முனையே ஒழிய இறுதி வெற்றி அல்ல.


பத்தாண்டுக்கால ஆயுதப் போராட்டத்தின் மூலம் பால் அடிப்படையிலும் இன,மத,மொழி அடிப்படையிலும் சாதி அடிப்படையிலும் இருந்து வந்த ஒடுக்கு முறைகட்கெதிரான மக்கள் இயக்கத்தை வலுப்படுத்த வேண்டியுள்ளது. பழைய நிலவுடைமையாளர்கள் தங்களது இழந்த ஆதிக்கத்திற்கு மீளப் பலவாறும் முயல்வார்கள். அது தொடர்ச்சியாக எதிர்க்கப்பட வேண்டும். அதை விட முக்கியமாக நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்புகிற பேரில் அந்நிய மூலதனம் ஆதிக்கம் செலுத்த முயலும். ஏற்கனவே நேபாளத்தில் நிலை கொண்டுள்ள என்.ஜீ.ஓ. முகவர்கள் மூலம் பல குழிபறிப்பு வேலைகள் நடைபெறும். இதனிடையே கம்யூனிஸ்ட்டுகள் தம்மைத் திரும்பத்திரும்பப் புடமிட வேண்டும்.


வேறுமனே பாராளுமன்ற அதிகாரத்தின் மீது நேபாள மாஓ வாதிகள் தங்கியிருப்பார்களேயானால் அவர்கள் இரத்தம் சிந்திப் பெற்ற வெற்றியைப் பாராளுமன்ற விவாதங்களின் சுடு காற்று அள்ளிச் சென்று விடும். மக்கள் அதிகாரத்தை மாஓ வாதிகள் எவ்வாறு வலுப்படுத்தப் போகிறார்கள் என்பது தான் நேபாளத்தின் சுபிட்சத்தை முடிவு செய்யும்.


எவ்வாறாயினும் தேசிய வாதிகளும், தலித்தியவாதிகளும் பெண்ணியவாதிகளும் பிரிந்து நின்று எல்லாரையும் பிளவு படுத்திச் சாதிக்க இயலாத விடயங்கள் பலவற்றை எல்லா முரண்பாடுகளையும் ஒரு முழுமையின் பகுதியாக வர்க்கப் போராட்டத்தினுடன் தொடர்பு படுத்திய ஒரு போராட்டப் பாதை பத்தே ஆண்டுகளிற் சாதித்துள்ளது. அதன் பாடங்கள் உன்னதமானவை.


-பேராசிரியர் கோகர்ணன்

நன்றி:தினக்குரல்


http://www.thinakkural.com/news/2008/4/27/sunday/marupakkam.htm

Sunday, March 30, 2008

மாகாணசபைத் தேர்தல்...

கிழக்கில் சனநாயகமான முறையில்
தேர்தலை நடத்த இயலாது என்று சொல்லிக் கொண்டே
தேர்தலில் பங்குபற்றுவது;

`கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை!



மட்டக்களப்பு உள்ளூராட்சித் தேர்தல்களைப் பகிஷ்கரித்த யூ.என்.பி.இப்போது மாகாண சபைத் தேர்தலில் பங்குபற்றுவது பற்றிப் பேசுகிறது. மாகாண சபைத் தேர்தலில் பங்குபற்றுவதை ஊக்குவிக்கும் படியாக மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெற்றனவா?


தேர்தல் முடிவுகளை வைத்து முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தனக்கு முஸ்லிம்களிடையே உள்ள ஆதரவுத்தளம் மிகவும் வலுவாக உள்ளது என்று கூறியுள்ளது. ஆனால், வாக்காளர்களில் எத்தனை வீதமானோர் சுயவிருப்பின் அடிப்படையில் வாக்களிக்கச் சென்றனர் என்பதும் எத்தனை சதவீதமானவர்கள் சுயவிருப்பின் அடிப்படையில் வாக்களித்தனர் என்பதையும் ஆராய்ந்தால், தேர்தலுக்கு முன்பு தெரிவிக்கப்பட்ட கவலைகள் நியாயமானவையா இல்லையா என்று விளங்கும். மட்டக்களப்பு மாவட்டத்தில் மிரட்டலுக்குப் பணிந்து வாக்களித்தோர் தமிழர் மட்டுமே என்று யூ.என்.பி.யின் தலைமை கருதுகிறதா? அப்படியானால், சிங்கள, முஸ்லிம் வாக்காளர்களது பங்கு பற்றலும் வாக்களிப்பும் எவ்விதமான குறுக்கீடும் இல்லாமல் நடைபெறும் என்பது அவர்களது எதிர்பார்ப்பா?


தேர்தல் முறைகேடுகள் பற்றி அறியாத ஒரு அரசியற்கட்சியும் இந்த நாட்டில் இல்லை. 1980 கள் முதலாக அவை தொடர்பான குற்றங்களுக்கு அப்பாற்பட்டு இந்த நாட்டை ஆண்ட ஒரு கட்சியும் இல்லை. தேர்தல்களில் நடந்த முறை கேடுகள் மட்டுமன்றித் தேர்தல் பகிஷ்கரிப்புக்களும் சனநாயகத்தின் மறுப்பாகவே அமைந்திருந்தன. விடுதலைப் புலிகள் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி அழைப்பு விடுத்தனர். அந்த அழைப்பு இறுதி நேரத்திலேயே விடுக்கப்பட்ட போது, மக்கள் வாக்களிப்பில் பங்குபற்றாது கட்டாயப்படுத்தப்பட்டனர் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. பின்னர் ராஜபக்ஷவின் சார்பில் விடுதலைப் புலிகளின் முகவர்கள் இலஞ்சம் பெற்று மக்களை வாக்களியாமல் மறித்தனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதை எழுப்பியவர் இன்று உயிருடன் இல்லை. அது பற்றி இப்போது பேசப்படுவதும் இல்லை.


தமிழ் மக்களிடையே தேர்தல் பகிஷ்கரிப்பு என்ற கருத்து மிகவும் பழையது. டொனமூர் ஆணைக்குழுவின் முடிவுகளை ஏற்காமல் யாழ்ப்பாணத்தில் அரச சபைத் தேர்தல் பகிஷ்கரிக்கப்பட்டது. ஆனால், தென்னிலங்கை அரசியல் தலைமைகள் தடுமாற்றத்துக்குட்பட்டுத் தங்களது முடிவை மாற்றிக் கொண்டன. 1977 க்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் வேகமாக வளர்ச்சி கண்ட வன்முறை அரசியல் கலாசாரத்தின் தொடக்கங்கள் தமிழர் விடுதலைக்கூட்டணிக்குள்ளேயே இருந்தன. அரசியற் படுகொலைகளையும் தமிழ் ஈழப் பிரிவினையை ஏற்காதோரை மிரட்டுவதையும் தமிழர் விடுதலைக் கூட்டணி மௌனமாக அங்கீகரித்தது. யார் யாருக்கெல்லாம் இயற்கையான சாவு வராது அல்லது வரக்கூடாது என்றெல்லாம் பொது மேடைகளிற் பேசப்பட்டது. எனினும் `சிங்கள இரத்தங் குடிக்கிறதாக" மேடையேறி முழங்கியவர்களின் கண்முன்னாற் குடிக்கப்பட்டது. "தமிழ் இரத்தமே". அது தங்களவர்களது இரத்தமாகும் வரை அதிலே பிழை காணமாட்டாதவர்களாகவே தமிழ்த் தலைவர்கள் எனப்பட்டோர் இருந்து வந்தனர். 1983 இல் பொதுத் தேர்தலைத் தவிர்ப்பதற்காக 1982 ஆம் ஆண்டு நடந்த கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பின் நோக்கங்களை விளங்காமல் (அல்லது சரியாகவே விளங்கிக் கொண்டதால்) தமிழர் விடுதலைக் கூட்டணி அதில் பங்குபற்ற மறுத்து நின்றது.


இளைஞர்களும் முதலில் அதிற் பங்கு பற்ற வேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுத்தனர். பின்னர், மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தின் விளைவாக இந்த நிலைப்பாடு மாறியது.


1989 சனாதிபதி தேர்தலில் பிரேமதாஸாவிற்கு எதிராக போட்டியிட்ட ஷ்ரீமா பண்டாரநாயக்காவுக்கு வெற்றிவாய்ப்பை மறுக்கிற விதமாக வடக்கில் ஒருவிதமான முயற்சியும் தெற்கில் வேறொரு விதமான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டன. வடக்கின் தமிழர்கள் யாரையும் ஆதரிக்கக்கூடாது என்ற அடிப்படையில் ஷ்ரீமா பண்டாரநாயக்காவுக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் மீது கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இடதுசாரி வேட்பாளரை ஆதரித்த அண்ணாமலை சுட்டுக்கொல்லப்பட்டார். சிலர் தமது உயிரை காப்பாற்றிக் கொள்ள குடாநாட்டைவிட்டு வெளியேற நேர்ந்தது. தென்மாகாணத்தின் ஜே.வி.தனது மிரட்டல் அரசியலையும் பிரசார இயந்திரத்தையும் தேர்தல் பகிஷ்கரிப்பு என்ற திசையில் முடுக்கிவிட்டது. யூ.என்.பி.க்கு எதிரான உணர்வுகள் வலுவாக இருந்த இரண்டு பகுதிகளில் பகிஷ்கரிப்பு என்பது யூ.என்.பி.க்குச் சாதகமாக அமையுமென அறிந்து கொண்டே அது பிரசாரமாக முன்னெடுக்கப்பட்டது. வடக்கில் சிறிமா ஆட்சிக்காலத்தில் நன்மை கண்ட விவசாயிகளின் ஆதரவும் வலுவாக இருந்ததால் சிறிமாவுக்கு அங்கே பெரும்பான்மையான வாக்குகள் கிட்டின. தென்மாகாணம் பகிஷ்கரிப்பால் யூ.என்.பி.ஆதரவாளர்களை மறிக்க இயலவில்லை.


எனவே ஜே.வி.பி.யின் பகிஷ்கரிப்பு யூ.என்.பி.எதிர்ப்பு வாக்காளர்களையே பங்குபற்றாமல் தடுத்தது. அதன் விளைவுகளை பிரேமதாஷா ஆட்சிப்பொறுப்பை ஏற்று சில மாதங்களிலேயே ஜே.வி.பி.அனுபவித்தது.


தேர்தல்களில் பங்குபற்றாமையும் யாருக்கும் வாக்களிக்க மறுப்பதும் மிகவும் சனநாயகமான அரசியல் நடவடிக்கைகள். ஆனால், அவற்றை எவ்வாறு முன்னெடுப்பது என்கிறதே, அவற்றின் சனநாயகத் தன்மையைத் தீர்மானிக்கின்றது. மிரட்டல் மூலமும் குழப்ப நிலைகளைத் தோற்றுவிப்பதன் மூலமும் வாக்களிக்கும் வாய்ப்பை மக்களுக்கு மறுத்து மேற்கொள்ளப்படுகிற எந்தப் பகிஷ்கரிப்பும் தனது சனநாயக இலக்கை இழந்துவிடுவதோடு தனது நோக்கத்திற் கூட முடிவில் ஏமாற்றமடையலாம் என்பதையே இலங்கையின் பகிஷ்கரிப்பு அனுபவங்கள் உணர்த்துகின்றன.


கள்ள வாக்குகள் பதிவு செய்யப்படக்கூடிய ஒரு சூழ்நிலையில் வாக்குப் பெட்டிகள் `அடையப்படுகிற' ஒரு சூழ்நிலையில் பகிஷ்கரிப்பின் வெற்றி வெளிப்படையாகத் தெரிய இயலாது. எனவே, மக்கள் தமது வாக்குப் பகிஷ்கரிப்பை வாக்களிப்பில் பங்கு பற்றி வாக்குச்சீட்டுகளைப் பழுதாக்குவதன் மூலம் அறியத்தரலாம். இவ்வாறான பகிஷ்கரிப்பில் எல்லா வாக்குகளும் குறிப்பிட்ட ஒரு வகையில் பழுதாக்கப்பட்டிருப்பின் பழுதான வாக்குகள் பலமான ஒரு செய்தியைக் கூறுவனவாகும். அத்துடன் மக்கள் மறிக்கப்பட்டனர் என்ற குற்றச்சாட்டுக்கு இடமே இராது. இவ்வாறான பகிஷ்கரிப்பை இயலுமாக்க அதை முன்னெடுக்கிற அரசியல் அமைப்புகள் மக்களின் பெருவாரியான ஆதரவை உடையனவாகவும் மக்கள் மீது முழுமையான நம்பிக்கையுடையனவாயும் இருக்க வேண்டும்.


அதற்கு ஒரு முக்கியமான முன் நிபந்தனையாக மக்கள் அரசியல்மயப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதற்கான அரசியல் நாமறிந்த தேர்தல் அரசியலிருந்தும் மாறுபட்டது.


கிழக்கில் அமைதியற்ற ஒரு சூழலில் மக்களிற் கணிசமான பகுதியினர் இடம்பெயர்ந்தும் இயல்பு வாழ்வுக்கு மீளாமலும் அகதி முகாம்களிலும் அரசாங்கத்தினதும் என்.ஜீ.ஓ.க்களதும் ஊழல் மிக்க நிருவாகங்களின் தயவில் வாழ்கின்றனர். அவர்களுக்கெதிரான உயிர் மிரட்டல் வலுவானது. மக்களின் போராட்ட உணர்வை விட உயிரச்சம் அதிகமாயுள்ள சூழலில் மேற்குறிப்பிட்ட விதமான சனநாயக முறையிலான பகிஷ்கரிப்பு இயலுமானதல்ல.


ஜே.வி.பி. கிழக்கில் த.ம.வி.பு. அமைப்பிடமிருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்கிறது. அது சரியானது; ஆனால், அது போதுமானதல்ல. கிழக்கு முழுவதும் அரசாங்கத்தின் ஆயுதப் படைகளின் ஆதிக்கத்தின் கீழ் உள்ள சூழ் நிலையில் ஜே.வி.பி. தனக்குச் சாதகமான ஒரு ஆயுதக் களைவைக் கோருகிறது. மக்கள் எந்த விதமான ஆயுத மிரட்டலுக்கும் உட்படாமல் இயல்பு வாழ்வு வாழுகிற ஒரு நிலையிலன்றி எந்தத் தேர்தலும் நம்பகமானதாக அமைய முடியாது.


கிழக்கில் சனநாயகமான முறையில் தேர்தலை நடத்த இயலாது என்று சொல்லிக் கொண்டே தேர்தலில் பங்குபற்றுவது; `கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை', என்கிற விதமான அரசியல் கிழக்கின் சனநாயகம் தமிழருக்கு முழுமையாகவும் முஸ்லிம்கட்கு அரை குறையாகவும் சிங்களவர்கட்கு மிகக் குறைவாகவுமே மறுக்கப்படுகிறது என்பது எவரதும் மதிப்பீடானால் அதை வெளிவெளியாகவே சொல்லிவிட்டுத் தேர்தலில் பங்குபற்றுவது பொருந்தும்.


எதிர்க்கட்சிகள் உண்மையிலேயே கிழக்கில் தேர்தல்களை நடத்துவது பற்றியும் அங்கு நிலவும் சனநாயக மறுப்புச் சூழல் பற்றியும் கவலையுடையவர்களானால் அனைத்து எதிர்க்கட்சியினரும் ஒன்றுபட்டு ஒரு பொது முடிவுக்கு வரலாம்.

அந்தப் பொது முடிவு பகிஷ்கரிப்பாக அமையுமாயின் அது உத்தமமானது. அவ்வாறான பகிஷ்கரிப்பு வாக்குச் சீட்டுகளைப் பழுதாக்குவதாக அமையுமாயின் அது நல்ல பலனளிக்கக்கூடும். அம் முயற்சியின் மூலம் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை காலில் ஒன்றுக்கும் கீழாகக் குறையும் என்றால் அது ஒரு மாபெரும் வெற்றியாகும்.


எனினும், இனவாத அரசியல் ஆதிக்கம் செய்கிற ஒரு சூழலில் இன அடையாளத்தை வைத்தே அரசியற் கட்சிகள் செயற்படுகின்றபோது இனவாதக் கணிப்புகள் சனநாயக அரசியலுக்கான தேவையை மேவி விடலாம். இனவாத அரசியலால் வளர்ந்தும் வாழ்ந்தும் வருகிற கட்சிகளால் இனவாத அணுகுமுறையைக் கைவிடும்படி மக்களைக் கேட்க முடியாது.


மாகாணசபைத் தேர்தலில் பங்குபற்றுவதாக முடிவெடுத்ததன் மூலம் எதிர்க்கட்சிகள் தமது அரசியல் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளன. அது அரசாங்கத்தின் வெற்றியாகிவிடாது. அது சனநாயகமற்ற அடக்குமுறை ஆட்சியை நோக்கிய நகர்வுகளுக்குக் கிடைத்துள்ள ஒரு வெற்றியாகும்.


மறுபக்கஞ் சொல்பவர்:கோகர்ணன்

நன்றி தினக்குரல்.

Sunday, March 09, 2008

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்


அன்புடையீர்,
புலம்பெயர் ஈழத்தமிழ் சமூக இருப்பில் மகளிர் விடுதலை மற்றும் முன்னெடுப்பாளர்களில் ஒருவரான பாலரஞ்சனா என்ற பானுவின் அன்புக் கணவர் திரு. மருதையனார் பவாநந்தன் அவர்கள் 08.03.2008 அன்று, மாலைமணி:21.25 க்குத் தனது 49 வது வயதில் நோய்வாய்ப்பட்டுக் காலமாகியுள்ளார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகிறோம்.


திரு.ம.பவாநந்தன் அவர்கள் அனலைதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,ஜேர்மனியில் Am Attichsbach 2, 74177 Bad Friedrichshall எனும் இடத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்தார்.அன்னார்,காலஞ்சென்ற மருதையனார் இலட்சுமி தம்பதியினர்தம் செல்வ மகனும்,பாலரஞ்சனாவின்(பானு)அருமைத் துணைவனும்,சரண்யன் மற்றும் மதுஷாவின் அன்புத் தந்தையுமாவார்.


தோழி பானு அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தவர்களுக்கும் எமது ஆழ்ந்த அநுதாபம்.


பவாநந்தனின் இறுதி நிகழ்வுகள் வரும் வியாழக்கிழமை 13.03.2008 அன்று, மதியம் 13 மணி தொடக்கம் 15மணி வரை 74177 Bad Friedrichshall நகர் நல்லடக்கச்
சேமக்காலையில் இடம்பெறும்.
இறுதி நிகழ்வுகள் குறித்த மேலதிகத் தகவல்களுக்கு:


சரண்யன் பவாநந்தன்
தொலைபேசி:07136-991750


Saranyan Pavananthan,
Am Attichsbach 2,
74177 Bad Friedrichshall.

Tel.07136/991750

Kamal(பானுவின் சகோதரர்)சுவிஸசர்லாந்து.

Tel. 0041319920543

Sunday, February 10, 2008

நமது மக்களால் தமது எதிரியை...

நமது மக்களால் தமது எதிரியை முறியடிக்க முடியும்:நம்புங்கள்!



அன்பு வாசகர்களே,வணக்கம்.

என்னிடமுள்ள ஒரே கேள்வி,"நமது மக்கள் தோற்றுப் போய்விடுவார்களா?"என்பதே!இன்றைய இலங்கையின் அரசியல் நகர்வால்-இந்தியாவின் ஈழமக்களுக்கெதிரான சதியால்-உலக வல்லரசுகளின் தமிழ்மக்கள் விரோத நலன்களால் ஈழமக்களாகிய நாம் தோற்றுத்தான் போவோமா?,புலிகளின் போராட்டத்தில் ஏற்பட்டிருக்கும் தொய்வு-தேய்வு-துரோகத்தனமான,தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான தமிழ்க் கைக்கூலிக்குழுக்களால் ஏற்பட்டதா?அங்ஙனம் அவை ஆற்றிய பண்புகளால் நாம் பலவீனமான நிலையை அடைந்தோமெனில்,இத்தகைய பகைமையான அரசியலை எவர் நடாத்தினார்கள்?-ஏன் நடாத்தினார்கள்?எங்கள் மக்களுக்குள் இவ்வளவு மோசமான அரசியலைச் செய்தவர்கள் எவர்கள்?இத்தகைய கூலிக் குழுக்களாக முன்னாள் இயக்கங்கள் மாறுவதற்கான சகோதர இயக்கப் படுகொலைகளைச் செய்த புலிகள்தானே குற்றவாளிகள்?புலிகள் இங்ஙனம் இவற்றைச் செய்வதற்கான அரசியல் எதன்பொருட்டு,எவரால் கட்டவிழ்த்துவிடப்பட்டது?

இக் கேள்விகளுக்கு நாம் விடை கண்டாகவேண்டும்!

நம்மைச் சிதைத்து, நமது அடிச்சுவட்டையே அழித்துவிட முனையும் சிங்கள-இந்திய அரசியல்-இராணுவ நகர்வு படிப்படியாகப் புலிகளைப் பலவீனப்படுத்தியே தனது வெற்றியை ஒவ்வொன்றாகக் குவித்துவருகிறது.இதற்கு தமிழ் பேசும் மக்களின் எந்தவிதமான எதிர்பெழுச்சிகளும் இதுவரை நிகழவில்லை!கால் நூற்றாண்டாய்ப் போராடிய மக்கள் எங்ஙனம் இவ்வளவு உறக்கமாக இலங்கை அரசின் அட்டூழியத்தை ஏற்று வாளாது(வாளாமை-மெளனம்) இருக்கிறார்கள்?மக்களின் எந்தச் சுயவெழிச்சிக்கும் முன் எந்த ஒடுக்குமுறையும் செல்லாக் காசு என்பதைப் பாலஸ்த்தீன மக்கள் நிரூபித்திருக்கிறார்கள் என்கிறார் பேராசிரியர் திரு.கோகர்ணன்.

அவரது இன்றைய கட்டுரையில் "தனது மதிப்பீட்டின்படி" காமாஸ் இயக்கத்தின் வெற்றியாகவே எகிப்திய எல்லை மதில்களின் சரிவு பார்க்கப்படுகிறதென்கிறார்.செங்கடலோரம் சிறைக் கதவுகளாகப் போடப்பட்ட இந்த மதில்கள் சினை மாகாணத்தை பாலஸ்த்தீனத்திலிருந்தும்,இஸ்ரேலில் இருந்தும் பிரிப்பதாகும்.எகிப்தின் ஒவ்வொரு அங்குலமண்ணிலும் நிறுத்தப்பட்டிருக்கும் இராணுவக் காவலரண்கள் அப்பாவி அரபு மக்களைச் சோதனை செய்து, நடாத்தும் காட்டு மிராண்டித்தனத்தை நான் நேரில் பார்த்தவன்.வெளியுலகத்தவரைத் தவிர அரபு மொழி பேசும் மக்களுக்கு எகிப்த்துக்குள் நுழைவது அவ்வளவு எளிய விடயமில்லை.அரோபிய எகிப்த்தின் ஆட்சியானது தனது சொந்த இனத்தையே சீரழித்து அமெரிக்க-ஐரோப்பிய தேசங்களுக்கு வால்பிடியாக இருக்கும்போது, அந்தத் தேச மக்களில் பலர் உல்லாசப் பயணிகளிடம் கை ஏந்திய கண்ணீர்க் கதைகளை நான் அறிவேன்.ஒரு நேர உணவுக்காக நான் எறிந்த சில்லறைகளை அந்த மக்கள் சந்தோசமாக ஏற்ற கணம் நெஞ்சில் வடுவாக இன்றும் இருக்கிறது.

இந்த தேசம் தனது சொந்த மக்களுக்கே துரோகமிழைக்கும்போது,அதற்கு எதுவிதத் தடையுமின்றி அத்தகைய அரசை ஆபிரிக்காவிலேயே மிக உயர்ந்த ஜனநாயக நாடாக மேற்குலகம் கூறுகிறது.இத்தகைய நிலையில்தான் பாலஸ்தீனமக்கள் தமது வயிற்றிலடித்த இஸ்ரேலிய வன் கொடுமை அரசின் சதியிலிருந்து தப்ப எகிப்துக்குள் நுழைந்து, அங்கிருந்து வாழ்வாதார அதீத மானுடத் தேவைகளைப் பூர்த்தி செய்தார்கள்.இதைக் கண்ணுற்ற அமெரிக்க வெறியன் புஷ்சோ எகிப்திலிருந்து ஆயுதங்களைக் காமாஸ் இயக்கம் கடத்துவதாகக் குற்றஞ் சொல்லி, எல்லையை ஒரு கிழமைக்குள்ளேயே மூடவைத்து பாலஸ்தீன மக்களைப் பழிவாங்கினான்.எனினும்,வெறும் கைகளைவைத்தே உலகப் பயங்கர நாடுகளையும், வன்கொடும் ஆயுதம் தாங்கிய இஸ்ரேலிய நரவேட்டை இராணுவத்தை எதிர்த்துப் பழகிய பாலஸ்தீன மக்கள் அடிபணியவில்லை!அவர்கள் காமாஸ்சின்பின் அணிவகுக்கும் சூழலை அந்த அமைப்பே செய்து,மக்களின் சயவெழிச்சிக்குத் தோதாகவே காரியமாற்றி உலகச் சதியை மெல்லமெல்ல முறியடிக்கும்போது,நாம் என்ன செய்கிறோம்?எங்கள் போராட்டப்பாதையில் பாலஸ்த்தீனத்துக்கு ஏற்பட்ட அனைத்துச் சதிகளும் தென்படுகின்றன.என்றபோதும்,நாம் எழிச்சியிழந்து பலாத்தகாரத்துக்குப் பணிகிறோம்.இலங்கைச் சிங்கள-புலிகளின்-மற்றும் கைக்கூலிகளின் ஆயுதங்களுக்கு முன் நாம் மண்டியிடும் தரணம் எப்படி உருவாகிறது?

மக்களின் வலுவைச் சிதைத்த ஆதிக்கம் இப்போது சிங்களச் சதியை முறியடிக்க முடியாது திண்டாடுகிறது.இயக்கத்தின் இருப்புக்காகவே குண்டுகளை வைக்கும் மிகத் தாழ்ந்த நிலைக்கு அது மாறிவிட்டதா?மக்களின் எந்த முன்னெடுப்பையும் தத்தமது இயக்க நலனுக்குள் திணித்து மக்கள் எழிச்சியை மொட்டையடித்தவர்கள் இன்று அந்த மக்களை வெகுஜனப்படுத்தி அணிதிரட்ட முடியாது, தமது குண்டுகளின் ஆதரவை நம்பிக் கிடப்பது எமது மக்களுக்கு எதிரானது.மக்களை அணிதிரட்டிப் போராட்ட இலக்கை மக்கள் மயப்படுத்தி, நமது எதிரிகளை ஓடோட வெருட்டும் மக்கள் சக்தியை நமது மக்கள் பெற்றாகவேண்டும்!

இது எங்ஙனம் சாத்தியம்?

பாலஸ்த்தீனம் நமக்கு முன்னுதாரணமாக விளங்குவதற்கு முன் நமது போராட்ட இயக்கத்தின் வரலாற்றுப்பாடங்களே நமக்கு முன்னுதாரணமானது.அது நமது சொந்த அனுபவமாகும்.நாம் உலகத்தில் மற்றெந்த இனத்துக்கும் சளைத்தவர்களில்லை.நம்மிடம் எழிச்சியுறும் வலுவுண்டு.தியாகவுணர்வு உண்டு.எமது பெண்களின் கரங்களிலுள்ள ஒவ்வொரு சுடுகருவியும் அந்த வலுவையும்-மனத்திடத்தையும் சொல்பவை!நாம் எழிச்சியடைந்து நமது உரிமையை வென்றாகவேண்டும்.எம்மீது விரிந்து மேவும் வலுக்கரங்களுக்குள் நாம் கட்டுண்டுகிடப்பதல்ல நமது வாழ்வு.போராடுவதும் உரிமையைப் பெறுவதும் அதிமானுடத் தேவைதான்.


இங்கே,எந்தவொரு ஆயுத இயக்கத்துக்குமில்லாத உரிமை தமிழ் மக்களுக்கே உண்டு!அவர்களே தமது பிள்ளைகளைப் போராட்டத்துக்கு அற்பணித்து அடிமை¨யாகியுள்ளார்கள்.இந்த மக்கள் சுயவெழிச்சியுற்று ஆயுதம் எடுத்தாகவேண்டும்.அதற்கு நமக்குள் இருக்கும் அவர்களது ஆயுதம் தரித்த பிள்ளைகளே உறுதியான ஆதரவு நல்கி, நமது தேசியவிடுதலை இயக்கத்தைக் கட்டிப் புதிய பாணியில் போராட்டத்தை நடாத்தியாகவேண்டும்.இது நடக்காத காரியமல்ல.மக்களே வரலாற்றைப்படைபவர்கள்.அவர்களின் ஆதரவின்றி அணுவும் அசையாது.மக்களைப் பன்பற்றி அவர்களின் சுயவெழிச்சியை தீயாய்ப்பரவவிடுங்கள்.


தினக்குரல் கட்டுரையாளர் எழுதியவற்றின் பின்புலம் இதுவே!

மக்களை உலக நடப்பிலிருந்து தயார்ப்படுத்துவதும், அவர்களின் சுயமுனைப்பை வளர்த்து அவர்களுக்குப் பின் உந்துதலாக இருந்து நமது எதிரிகளை நாம் முறியடிக்கும் சூழலே இப்போது நமக்கு முன் இருக்கும் சூழல்.இங்கே,நமது இயக்கம் சோடை போனதன் எதிர்விளைவுகள் இப்போது நம்மை அநாதையாக்கி வருகிறது!இதிலிருந்து நாம் வென்றாகவேண்டும்.உலக நடப்புகளை மிகக் கவனமாக நம் இளைய கல்வியாளர்கள்-போராளிகள் கவனித்து அனுபவத்தைப் பெற்றாகவேண்டும்.

நாம் தோற்கடிக்கப்பட முடியாத பலத்தை நமது மக்களின் மேலான பங்களிப்போடு மட்டுமே பெறமுடியும்!

மக்களின் வலுவைத் தவறான பாதையில் பயன்படுத்திய சூழ்ச்சிமிக்க அரசியலின் விடிவுதான் இன்றைய போராட்டப் பின்னடைவு-சிக்கல், இதிலிருந்து நாம் மீள்வதெப்போ?

தினக்குரலுக்கு நன்றி.

இதோ, மறுபக்கக் கட்டுரையாளர் இன்னுஞ் சில வற்றைச் சொல்கிறார்.அனுபவப்படுவோம்.அறிவுபூர்வமாக நடந்து மக்களின் கரங்களைப் பலப்படுத்தி அவர்களின் சுயவெழிச்சிக்கு உரம் சேர்த்து,நமது மக்களைக்கொண்டே நமது எதிரிகளை வென்று,நமது மக்கள் விடுதலையடையும் பொழுதைப் புலரவைத்தல் இன்றைய இளைஞர்களின் கைகளிலேயேதான் இருக்கிறது!


நிறைந்த நேசத்துடன்,


பரமுவேலன் கருணாநந்தன்
10.02.08





"இஸ்ரேல் தொடர்ந்தும் ஏமாற்றும் என்பதில் ஐயமில்லை.
எனினும் பலஸ்தீனத்தின் பெரிய பலவீனமாக ஒரு துரோகத்தனமான தலைமை அமைந்துள்ள ஒரு
சூழலில்
மக்கள் போராட்டம் எதிரியை மட்டுமல்லாமல் துரோகிகளையும்
தனிமைப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளது."


மறுபக்கம்:

பலஸ்தீனத்தின் காஸா பகுதியை எகிப்திலிருந்து பிரித்து நின்ற இரும்புத் தகட்டாலான வேலியும் கொங்கீறீற்றாலான சுவரும் 23 ஜனவரி அன்று சரித்து வீழ்த்தப்பட்ட காட்சி அநேகமாக எல்லாப் பத்திரிகைகளிலும் வந்தது என்று நினைக்கிறேன். இதன் அரசியல் முக்கியத்துவம் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டன.



சில நிபுணர்கள் இது இஸ்ரேலுக்கு ஆறுதல் தருகிற விடயம் என்று விளக்கியிருந்தார்கள்.


காஸாவைச் சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் அப்பகுதி மீது விதித்துள்ள பொருளாதாதரத் தடைகள் குறிப்பாக எரிபொருள் வழங்கற் தடை 2006 ஜனவரி தொட்டுக் கூடிக் கூடி வந்து கடந்த சில மாதங்களாகவே அங்கு வாழுகின்ற மக்களைப் பல வகைகளிலும் வாட்டி வருத்தி வந்தது. அதுவும் போதாமல் இஸ்ரேலிய குண்டு வீச்சுக்கள் தொடர்ந்தும் ஹமாஸ் போராளிகள் என்று கருதப்பட்டோரையும் பிறரையுங் கொன்றுங் காயப்படுத்தியும் வந்தன. இந்த முற்றுகை மேலுஞ் சில மாதங்கள் தொடருமாயின் ஹமாஸ் பணிந்து போக நேரிடும் என்றும் ஹமாஸ் பொதுசன அரசியலிலிருந்து விலகி மேலுந் தீவிரமான மதவாத நிலைப்பாட்டை நோக்கி நகரும் என்றும் பலவாறான ஊகங்களின் நடுவே இஸ்ரேலின் பொருளாதாரத் தடை ஏற்படுத்துகிற மனிதாபிமானப் பிரச்சினைகள் பற்றி இஸ்ரேலுக்கு எதிராகச் சர்வதேச அபிப்பிராயம் உருவாகத் தொடங்கியிருந்தது.



எனினும், முன்னர் லெபனான் மீதான தாக்குதலின் போதும் பலஸ்தீன மக்களுக்கு எதிரான பலவேறு இராணுவ நடவடிக்கைகளின் போதும் பலஸ்தீன நிலப்பறிப்பு நடவடிக்கைகளின் போதும் நடந்து கொண்ட விதமாகவே சர்வதேச அபிப்பிராயத்தைப் பொருட்படுத்தாமலே இஸ்ரேல் நடந்து வந்தது. இந்த நெருக்கு வாரத்தின் நடுவே காஸாவில் இருந்த மக்களின் வெளி உலகத் தொடர்புகள் வடக்கிலும் கிழக்கிலும் இஸ்ரேலியத் தரை எல்லைகளாலும் வடமேற்கே கடல் வழி முற்றுகையாலும் தென் மேற்கே எகிப்திய அரசாங்கம் அமெரிக்கா - இஸ்ரேலிய நெருக்குவாரங்கட்குப் பணிந்து எழுப்பிய பெரு மதிலாலும் இரும்புத் தகட்டு வேலியாலும் தடுக்கப்பட்டிருந்தன.


இந்தத் தடையை மீறிச் சுரங்கப் பாதைகள் மூலம் ஹமாஸ் போராளிகள் எல்லை தாண்டிப் போய்வந்து கொண்டிருந்தனர். ஆயுதங்களைக் கொண்டு வந்தனர். அவசியமான போது தப்பிச் சென்று மறைந்து வாழ்ந்தனர். எனினும், இஸ்ரேலின் பொருளாதாரத் தடையை முறியடிப்பதானால் கடல் வழியே மேற்கிலோ தரைவழியே தெற்கிலோ வணிகத் தொடர்புகள் அவசியம். கடல்வழி வணிகத்தின் மீதான இஸ்ரேலியத் தடை சர்வதேச விதிகட்கு விரோதமானது. எனினும், இஸ்ரேல் வைத்ததே சட்டம் என்கிற சூழ்நிலையில் எகிப்தை காஸாவிலிருந்து பிரித்த மதிலையும் வேலியையும் தகர்ப்பதை விட காஸாவின் மக்களுக்கு வேறு வழியிருக்கவில்லை. பலஸ்தீன மக்கள் அதையே செய்தார்கள்.



இதன்மூலம் இஸ்ரேல் மீதான சர்வதே நெருக்குவாரம் தணிந்துள்ளது என்பது முன்னர் குறிப்பிட்ட நிபுணர்களது மதிப்பீடு. இவர்கள் எல்லாரும் இஸ்ரேலைச் சர்வதேச நெருக்குவாரங்கள் மூலம் நியாயமாக நடந்துகொள்ளச் செய்யமுடியும் என்று நம்புகிறவர்களாக இருக்க வேண்டும். அல்லது மற்றவர்கள் நம்ப வேண்டுமென்று எதிர்பார்க்கிறவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறான மதிப்பீடுகள் உண்மைக்கு மாறானவை. எனவே, இஸ்ரேலிய அதிகாரம் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கு மாறாக நெஞ்சுக்குட் பொருமிக் கொண்டிருக்கும் என்பதே உண்மை.



எகிப்தைப் பொறுத்தவரை, இது ஒரு அதிர்ச்சியூட்டுகிற விடயம் என்பதையும் மேலலைநாட்டு ஊடகங்கள் ஏற்க ஆயத்தமாக இல்லை. ஏனெனில், அவை எகிப்தில் உள்ள அடக்குமுறை ஆட்சியை விமர்சித்தாலும், அதை ஒரு சனநாயக ஆட்சி மேவுவதை விரும்பவில்லை. அன்வர் சதாத் என்கிற சர்வாதிகாரியை முஸ்லிம் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொன்ற பின்பு ஆட்சிக்கு வந்த ஹொஸ்னி முபாரக், சதாத்தையும் மிஞ்சிய அமெரிக்க விசுவாசியாகவும் கடுமையான அடக்குமுறையாளராகவும் இஸ்ரேலுடன் இணக்கப்பாட்டுக்காகப் பலஸ்தீன மக்களைக் காட்டிக் கொடுக்கக் கூசாதவராகவும் தனது ஆட்சியை நீடிக்க எதையுஞ் செய்ய கூடியவருமாகவே தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். காஸாவின் இஸ்ரேலிய எதிர்ப்பாளர்கள் எகிப்துடனான எல்லையூடாகவே தம்மை ஆயுதபாணிகளாக்கி இஸ்ரேலைத் தாக்குகின்றனர் என்ற இஸ்ரேலிய வாதத்தை ஏற்று காஸாவுடனான எல்லையை இரும்புத் தகட்டுவேலியாலும் கொங்கிறீற் சுவராலும் மூடிய பெருமை முபாரக்குக்குரியது.



காஸா மீதான கடுமையான இஸ்ரேலிய முற்றுகையும் வணிகத் தடையும் மக்களின் அன்றாட வாழ்வை வேதனைமிக்கதாக்கிய போதும் ஹொஸ்னி முபாரக் அசைந்து கொடுக்கவில்லை. இஸ்ரேலின் முற்றுகை காஸாவின் மக்களைப் பயமுறுத்திப் பணிய வைக்கும் பற்றாக்குறைகளும் இன்னல்களும் காரணமாக அங்கு ஹமாஸ் இயக்கத்துக்கு இருந்து வந்த ஆதரவு சரியும் என்றே முபாரக் ஆட்சி எதிர்பார்த்தது. இது இஸ்ரேலினது எதிர்பார்ப்பு மட்டுமல்ல; பலஸ்தீன அதிகாரசபையின் தலைவரான மஹ்மூத் அபாஸும் அதையே எதிர்பார்த்தார்.


அபாஸின் எதிர்பார்ப்புக்கு மாறாக அவர் சார்ந்த அல்ஃபதாஹ் இயக்கத்திற்கு அதிக ஆதரவுள்ள `மேற்குக் கரைப்' பகுதியில் இஸ்ரேலின் முற்றுக்கைக்கு எதிராக மக்களின் கொதிப்பு வேகமாகவே உயர்ந்தது. அவர்கள் ஹமாஸை ஏற்கவில்லை. ஹமாஸின் மதவாத அரசியலை அவர்கள் நிராகரித்தனர்.அரபாத் மீது மிகுந்த மதிப்பும் அல் ஃபதாஹ் இயக்கத்தின் மீது அவருடைய இயக்கமென்ற அடிப்படையில் மரியாதையும் உடைய அவர்களால் ஹமாஸை ஒழித்துக் கட்டுகிற பேரில் காஸாவிலுள்ள தங்களது சகோதரச் சமூகம் துன்புறுத்தப்படுவதை ஏற்க முடியவில்லை. இஸ்ரேலுக்கு எதிரான அவர்களது ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் இஸ்ரேலியப் படையினரைக் கடுமையாக நடந்துகொள்ளத் தூண்டின. அபாஸின் பாடு திண்டாட்டமாகி விட்டது. இஸ்ரேலிய நடவடிக்கையைக் கண்டிக்காமல் இருந்தால் அவரது இருப்பே கேள்விக்குறியதாகி விடும் என்பதால் இஸ்ரேல் தனதுபொருளாதாரத் தடையை நீக்க வேண்டுமென வற்புறுத்தத் தொடங்கினார்.



இத்தகைய ஒரு பின்னணியிலேயேதான் காஸா -எகிப்து எல்லையில் அமைந்த பெருஞ்சுவரும் இரும்புத் தகட்டுவேலியும் தகர்க்கப்பட்டன. ஆயிரக்கணக்கான காஸா வாசிகள் கால்நடையாகவும் வாகனங்களிலும் எகிப்தின் சினாய் பிரதேசத்தினுட் புகுத்தனர். அவர்கட்குத் தேவையான பண்டங்களுடன் எகிப்திய வணிகர்களும் நண்பர்களும் வந்து சேர்ந்தனர். எரிபொருள், உணவுப் பண்டங்கள், ஆடு, மாடுகள் உட்பட பல பொருட்களும் காஸாவுக்குட் சென்றன. இஸ்ரேலின் முகத்தில் மட்டுமன்றி எகிப்தினதும் அபாஸினதம் முகங்களிலும் கரி பூசப்பட்டது. ஹமாஸின் தேர்தல் வெற்றிக்குப் பின்பு பலஸ்தீன மக்களின் எண்ணங்களை அவமதிக்கிற முறையிலேயே இஸ்ரேலும் அபாஸ் ஆட்சியும் எகிப்து உட்பட்ட பிற்போக்குவாத ஆட்சிகளும் அமெரிக்கத் தலைமையிலான சர்வதேச சமூகமும் நடந்துகொண்டன. அத்தனை முகங்களிலும் ஒன்றாகவே கரிபூசிய இந்தநிகழ்வுதான் கடந்த சில ஆண்டுகளிற் பலஸ்தீன மக்கள் ஈட்டிய மாபெரும் வெற்றியாகும்.



இந்த வெற்றி ஹமாஸின் வெற்றியாகும் என்பது எனது மதிப்பீடு. இந்த நிகழ்வில் ஹமாஸ் செய்ததை விட மிக அதிகமாக காஸாவின் மக்களே பங்குபற்றினர். இது உண்மையான ஒரு மக்கள் எழுச்சி. இதை இயலுமாக்குவதில் ஹமாஸின் பங்கு எவ்வளவு என்று இப்போதைக்குக் கூறுவது கடினம். எனினும், மக்களே முன்னின்று தங்களுக்கு எதிரான ஒரு முற்றுகையை வீண் உயிரிழப்புக்கள் இல்லாமலும் எவரும் கண்டிப்பதற்கு இடமளியாமலும் நடத்துவதற்கு இடமளித்ததன் மூலம் ஹமாஸ் இந்த மக்கள் வெற்றியில் பெருமைக்குரிய ஒரு பங்காளியாகி விட்டது. பலஸ்தீன மக்களின் உரிமைகள் வெல்லப்படாதவரை, பலஸ்தீன மக்கள் தமது நீதியான போராட்டத்தின் முடிவைக் காணாதவரை, அவர்களது போராட்டம் வெல்லற்கரியது என்ற உண்மையை பலருக்கு இன்னொரு முறை இந்த நிகழ்வு உணர்த்தியுள்ளது.



இஸ்ரேலால் எல்லாப் போராளிகளையும் பயங்கரவாதிகள் என்று இன்று வரை முத்திரை குத்த முடிந்தது. எல்லா ஆயுதப் போராட்டங்களையும் பயங்கரவாத நடவடிக்கைகள் என்று கண்டித்துத் தனது அடக்குமுறையை வலுப்படுத்தி நியாயப்படுத்த முடிந்தது. இத்தனைக்கும் இஸ்ரேலுக்கு எதிராக எவரும் எதுவுமே செய்ய இயலாதபடி அமெரிக்கா கவனித்துக் கொண்டது. எனினும், பலஸ்தீன மக்கள் தொடங்கிய `இன்ற்றிஃபாடா' என்கிற எதிர்ப்பு இயக்கத்தின் முன்னால் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளால் அதிகஞ் செய்ய முடியவில்லை. வீதி மறியலில் ஈடுபட்ட பெண்களும் கற்களை எறிவதற்கு மேலாக எந்த வன்முறையிலும் ஈடுபடாத சிறுவர்களும் பணிய மறுத்த பலஸ்தீனத்தின் அடையாளச் சின்னங்களாயினர்.அதன் பின்னரே இஸ்ரேல் இரண்டு முறையும் அமைதிப் பேச்சுக்கட்கு இணங்கியது.


இஸ்ரேல் தொடர்ந்தும் ஏமாற்றும் என்பதில் ஐயமில்லை. எனினும் பலஸ்தீனத்தின் பெரிய பலவீனமாக ஒரு துரோகத்தனமான தலைமை அமைந்துள்ள ஒரு சூழலில் மக்கள் போராட்டம் எதிரியை மட்டுமல்லாமல் துரோகிகளையும் தனிமைப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளது.




தினக்குரலில் பேராசிரியர் கோகர்ணன்.

Sunday, January 20, 2008

அரசியல் தலைமைகள்...

மேலாதிக்கத்திற்கும்
ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக நிற்கத் தவறுகிற
எந்த ஒரு விடுதலை இயக்கமும்
குறுகியகாலத்திற் கூடத் தனது மக்களுக்குத் துரோகஞ் செய்ததாகலாம்!



>>>அரசியல் தலைமைகள் மேலாதிக்க வாதிகளதும் ஏகாதிபத்தியத்தினதும்
முகவர்களாகவும் தரகர்களாகவும் மாற்றப்பட்டு வருகிற ஒரு காலத்தில் வாழுகிறோம். தேசிய
விடுதலைக்கான போராட்டம் சந்தித்துள்ள பின்னடைவுகள் நிலைமைகளை அதற்கு
வலுவாக்குகின்றன. எனவேதான் ஒவ்வொரு தேசிய இனத்தின் சார்பிலும் முன்வைக்கப்படுகிற
கோரிக்கைகளைத் தலைவர்கள் முதலில் சம்பந்தப்பட்ட மக்களுக்கு விளக்கி அவர்களது
உடன்பாட்டைப் பெறாமல் அந்நிய நாடுகளின் குறுக்கீட்டைக் கோருவது சகல மக்களுக்கும்
இழைக்கப்படுகின்ற பெரிய துரோகமாகும். அவ்வாறான செயல்களைக் கேள்விக்குட்படுத்துவது
நம் ஒவ்வொருவரதும் உரிமையும் கடமையுமாகும். <<<


இந்தியா சென்றிருந்த அமைச்சர் சந்திரசேகரன் ஜனவரி 10 அன்று இலங்கைத் தமிழர் பிரச்சினையை இந்தியா மட்டுமே தீர்க்க இயலும் என்று சொல்லியிருக்கிறார். தமிழகத்தின் அரசியல்வாதிகட்கும் இது ஒன்றும் புதிதல்ல. எல்லாருமே பலவிதமான முறைகளில் இந்தியா பலவாறான தீர்வுகளை இலங்கை மீது திணிக்க வேண்டும் என்று பேசுகிறார்கள். அதேவேளை அவர்கள் டில்லி மீது எந்த விதமான நெருக்குவாரத்தைச் செலுத்தலாம் என்றும் அதன் வரையறைகள் பற்றியும் அவர்கள் நன்றாக அறிவார்கள். ஆனாலும் அந்த நாடகம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
இந்தியா குறுக்கிட வேண்டும் என்று சொல்லுகிறவர் இன்று தமிழ் மக்களைக் கொன்று குவிக்கிற ஒரு அரசாங்கத்தின் அமைச்சர். அது அவசரகாலச்சட்டத்தை நீடிக்க வாக்கெடுப்பு நடத்துகிற போது கையை உயர்த்தத் தவறாத அமைச்சர். அவர் இந்தியா குறுக்கிட வேண்டும் என்று சொன்னதற்காக இந்த நாட்டு அரசாங்கத் தலைமை அவரை மெச்சுமா? இல்லை கண்டிக்குமா? இல்லை அமைச்சர் பதவியிலிருந்து அகற்றுமா? அல்லாமல் போனால் இந்தியா குறுக்கிட வேண்டும் என்று அவரும் இந்தியா உதவவேண்டும் என்று சனாதிபதியும் வேண்டிக் கொள்வது ஒரே நோக்கத்துடனா? நம் அமைச்சர் சொல்லுக்கு அங்குஞ்சரி இங்குஞ்சரி பெறுமதி குறைவு.




>>>கடந்த முப்பதாண்டுகளில் இலங்கையின் தமிழ்த் தேசிய இனத்தின் தலைவர்கள்
எனப்படுவோர் எதையுமே கற்கவில்லை என்று நான் நம்பவில்லை. இந்தியாவையும்
அமெரிக்காவையும் சர்வதேச சமூகத்தையும் நம்புமாறு சொல்வதுடன் ஐ.நா. சபையினதும் அதன்
அமைதிப்படையினதும் குறுக்கீட்டை வேண்டுவோர் முற்றிலும் அறியாமையால் சொல்வதாக நான்
நம்பவில்லை. சரியானதைச் செய்யும்படி மக்களுக்கு அறிவுறுத்த இயலாமல் அவர்களைத்
தடுக்கிறது எது என்று நாம் சிந்திக்க வேண்டும். <<<




இன்றைய மலையகத் தமிழ்த் தலைவர்களால் மலையகத் தமிழரது, குறிப்பாகத் தோட்டத் தொழிலாளரது தேவைகள் பற்றி என்ன செய்ய முடிகிறது? தலைவர்களது துரோகங்களால் கசப்படைந்து தொழிற்சங்கங்களின் தலைமைகளை மீறிப் போராடிய தொழிலாளர்களது போராட்டத்தைக் கூடக் காட்டிக் கொடுத்த பெருமை அவர்கட்குரியது. மலையகத் தமிழ் சிறுவர்களது கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. பாடசாலை நிருவாகங்களில் இவர்கள் குறுக்கிட்டுத் தங்களது அதிகார உரிமையைக் காட்டிக் கொள்கிறதன் மூலம் பொறுப்புள்ள ஆசிரியர்கள் மனமுடைந்து போகிறார்கள். தட்டிக் கேட்கிறவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். சாதி, பிரதேசம் போன்ற பலவிடயங்களும் பாடசாலைகள் முதல் வேலைவாய்ப்புகள் வரை பலவற்றிலும் நுழைக்கப்படுகின்றன. மலையகத் தமிழரின் உரிமைகளுக்காக குரல்கொடுக்கவும் போராடத் தலைமை தாங்கவும் வேண்டிய தலைவர்கள் பதவிக்கட்காகவும் சலுகைகட்காகவும் ஒடுக்குமுறை அரசாங்கங்களிடம் சரணடைகிறார்கள். மேல் கொத்மலைத் திட்ட கட்டிக் கொடுப்புக்குக் கூடாகாத மலையகத் தலைமைகளிடம் எதை எதிர்பார்ப்பது என்று எல்லோருக்கும் தெரியும். அதனாலேயே தான் மலையகத் தலைவர்களுக்கு வடக்கு-கிழக்கு பற்றிப் பேசுவது வசதியாகவுள்ளது. அது தமிழகத்தின் உணர்ச்சி அரசியலுக்கு வசதியானது. அங்கு உரிய இடங்களில் பல்வேறு லாபகரமான தொடர்புகளை ஏற்படுத்த வசதியானது.




என்றாலும் எல்லாருக்கும் இந்திய ஆட்சியாளர்கள் என்ன செய்வார்கள் என்று தெரியும். தமிழக அரசில் யார் ஆட்சியிலிருந்தாலும் டில்லியை மீறி எதுவுமே தமிழக அரசு செய்யாது எனறும் தெரியும். நாடகமே உலகம் என்பார்கள். நாடகமென்றால் தமிழகத்தில் நடக்கிற உணர்ச்சி அரசியலல்லவா நாடகம். தமிழ் சினிமாவின் முன்னோடியான நாடகமேடைப் பாரம்பரியம் இன்று தமிழகத்தின் அரசியலை ஊடுருவி நிற்கிறது. தமிழ்ச் சினிமா தமிழகத்தின் சீரழிவு, தமிழகத்தின் பண்பாட்டு சீரழிவின் அடையாளம் என்றால் தமிழகச் சட்டமன்ற அரசியலின் சீரழிவு அதன் உச்சக்கட்டம் எனலாம். தமிழ்ச் சினிமாவை உண்மையான வாழ்க்கை என்று நினைக்கக் கூடியவர்கள் உள்ளனர். அது ஒரு காலத்தில் போதையூட்டும் இன்பக்கனவாக இருந்தது. இப்போது அது பயங்கர கனவாகவுமுள்ளது. போக்கிரிகள் தான் இன்றைய கதாநாயகர்களாகக் காட்டப்படுகிறார்கள். சண்டித்தனமே இன்று தலைமைத்துவப் பண்பாகக் காட்டப்படுகிறது. அந்தளவுக்கு மட்டும் அது தமிழகத்தின் அரசியலை யதார்த்தமாக சித்திரிக்கின்றது.



இந்தக் கோமாளிக் கூத்துக்குள் சில்லறைப் பாத்திரங்கள் மாதிரி ஈழத்து அரசியல்வாதிகள் போய்த் தலையை காட்டிவிட்டு வரலாம். அவர்களுடைய பங்கேற்பை அரசியல் வசதிக்காக அங்குள்ள அரசியல் தலைமைகள் பயன்படுத்துமேயொழிய அதனால் எந்தவிதமான தாக்கமும் ஏற்படாது. 1983 வன்முறையை அடுத்துத் தமிழ்நாட்டின் ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் எதிர்பாராத ஒரு உணர்ச்சி அலை எழுந்தது. ஆனால், 1987 அளவில் தமிழக அரசியல்வாதிகள் அதை எப்படிக் கையாண்டு தங்களது நோக்கங்களுக்காகப் பயன்படுத்த இயலும் என்பதில் போதிய பயிற்சி பெற்றுவிட்டனர். அன்று முதல் இன்றுவரை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுபவர்களிற் கணிசமான பகுதியினரை இந்திய ஆட்சியாளர்கள் தங்களது முகவர்களாக மாற்றுவதில் வெற்றி கண்டுள்ளனர். இந்திய ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் விடுதலைப் போரட்டத்திற்கு மட்டுமல்லாமல் அமைதிப் பேச்சுவார்த்தைகட்கும் செய்துள்ள துரோகத்தையும் குழி பறிப்பையும் நமது தமிழ்த் தலைவர்கள் எனப்படுவோர் நன்கறிவார்கள். ஆனாலும், இன்று வரை ஆக மிஞ்சி அவர்கள் சொல்லக்கூடியதெல்லாம் இந்தியாவின் நிலைப்பாடு பற்றி வருந்துகின்றோம், இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றும் என்று எதிர்பார்க்கின்றோம் என்பதுதான். இந்திய அதிகார வர்க்கமும் அதன் அரச நிறுவனமும் எந்தத் திசையில் என்ன இலக்கை மனதிற்கொண்டு செயற்படுகின்றன என்று அறிய முடியாதளவுக்கு இவர்கள் சின்னப்பிள்ளைகளல்ல.


>>>சீனாவும் ரஷ்யாவும் ஈரானும் இந்தியா-அமெரிக்கா-இஸ்ரேல் என்கிற
அமெரிக்கத் தலைமையிலான கூட்டணி மூலம் அமெரிக்கா ஆசியாவைத் தனது ஆதிக்கத்திற்குக்
கீழ் கொண்டுவருகிற முயற்சிக்கு முன்னாற் சும்மா இருக்கப் போவதில்லை. இது இந்து
சமுத்திரப் பகுதியில் உள்ள நாடுகளில் புதிய நெருக்கடிகளை உருவாக்கலாம். இந்தச்
சூழலில் தேசிய இன மேலும் வலுப்படலாம். எனவேதான் தேசிய இன ஒடுக்கல் விடுதலைக்கான
போராட்டங்கள் தமது மூலோபாயங்களைக் கவனமாக வகுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
எந்த
வல்லரசையும் நம்பி ஒரு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பது மூடத்தனம்.
வல்லரசுகளின் அதிகாரப் பகிர்வின் கணக்கு வழக்குகளில் விடுதலைப் போராட்டங்கள்
சில்லரைக் காசுகள் மாதிரி. வல்லரசு அரசியலிருந்தும் பிராந்திய மேலாதிக்கப்
போட்டியிலிருந்தும் சுயாதீனமாக இருப்பதன் மூலமும் மக்களைச் சார்ந்து நிற்பதன்
மூலமுமே தேசிய இன விடுதலையை வெல்ல இயலும். அதிலும் முக்கியமாக மேலாதிக்கத்திற்கும்
ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக நிற்கத் தவறுகிற எந்த ஒரு விடுதலை இயக்கமும்
குறுகியகாலத்திற் கூடத் தனது மக்களுக்குத் துரோகஞ் செய்ததாகலாம். <<<


ராஜீவ் காந்தி காலத்தில் இந்திய நிலைப்பாட்டில் ஏற்பட்ட முக்கியமான மாற்றம் அமெரிக்காவுடனான நெருக்கம். ரஷ்யா (அன்று சோவியத் யூனியன்) இந்தியாவைப் பிராந்திய வல்லரசாக்க உதவியது என்பது இன்றைய இந்திய ஆட்சியாளர்களது நினைவின் ஏதோ ஒரு மூலையில் ஒட்டிக்கிடக்கலாம். எனினும் இன்னமும் இந்தியாவின் ஆயுதத் தளபாடங்களில் 70 சதவீதம் ரஷ்யாவில் உற்பத்தியானவையயாகவே உள்ளதால் ஏதோ வகையான உறவு தொடரும். எனினும் இந்தியாவின் அமெரிக்கா நோக்கிய நகர்வு, சோவியத் யூனியனின் உடைவையடுத்துத் துரிதமடைந்தது. இந்தியாவின் ஆட்சியாளர்கள் அமெரிக்காவுடன் ஏற்படுத்திவருகிற நெருக்கமான உறவை அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுக்கிற இந்தியாவின் பாராளுமன்ற இடதுசாரிக் கட்சிகளால் தடுக்க இயலாது. தமிழ்த் தேசியவாதமும் தெலுங்கு தேசியவாதமும் பேசுகிற பிராந்தியக் கட்சிகளும் இந்தியாவின் அயற்கொள்கை பற்றியோ உலகமயமாதலுக்கு இந்தியாவை இரையாக்குவது பற்றியோ கவலைகாட்டவில்லை. இந்தியாவின் ஆளும் அதிகாரவர்க்கம் இந்தியாவை அமெரிக்க உலக ஆதிக்க முயற்சிக்கு ஒரு அடியாளாக மாற்றுவதற்கு முழுமையாக உடன்பட்டு வருகிறது. அதற்குப் பிரதியாக இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நோக்கங்களுக்கு அமெரிக்கா தடையாக இராது. இதனால் நட்டப்படப்போவோர் இந்தியாவின் உழைக்கும் மக்கள்தான்.



சீனாவும் ரஷ்யாவும் ஈரானும் இந்தியா-அமெரிக்கா-இஸ்ரேல் என்கிற அமெரிக்கத் தலைமையிலான கூட்டணி மூலம் அமெரிக்கா ஆசியாவைத் தனது ஆதிக்கத்திற்குக் கீழ் கொண்டுவருகிற முயற்சிக்கு முன்னாற் சும்மா இருக்கப் போவதில்லை. இது இந்து சமுத்திரப் பகுதியில் உள்ள நாடுகளில் புதிய நெருக்கடிகளை உருவாக்கலாம். இந்தச் சூழலில் தேசிய இன மேலும் வலுப்படலாம். எனவேதான் தேசிய இன ஒடுக்கல் விடுதலைக்கான போராட்டங்கள் தமது மூலோபாயங்களைக் கவனமாக வகுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.


எந்த வல்லரசையும் நம்பி ஒரு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பது மூடத்தனம். வல்லரசுகளின் அதிகாரப் பகிர்வின் கணக்கு வழக்குகளில் விடுதலைப் போராட்டங்கள் சில்லரைக் காசுகள் மாதிரி. வல்லரசு அரசியலிருந்தும் பிராந்திய மேலாதிக்கப் போட்டியிலிருந்தும் சுயாதீனமாக இருப்பதன் மூலமும் மக்களைச் சார்ந்து நிற்பதன் மூலமுமே தேசிய இன விடுதலையை வெல்ல இயலும். அதிலும் முக்கியமாக மேலாதிக்கத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக நிற்கத் தவறுகிற எந்த ஒரு விடுதலை இயக்கமும் குறுகியகாலத்திற் கூடத் தனது மக்களுக்குத் துரோகஞ் செய்ததாகலாம்.



கடந்த முப்பதாண்டுகளில் இலங்கையின் தமிழ்த் தேசிய இனத்தின் தலைவர்கள் எனப்படுவோர் எதையுமே கற்கவில்லை என்று நான் நம்பவில்லை. இந்தியாவையும் அமெரிக்காவையும் சர்வதேச சமூகத்தையும் நம்புமாறு சொல்வதுடன் ஐ.நா. சபையினதும் அதன் அமைதிப்படையினதும் குறுக்கீட்டை வேண்டுவோர் முற்றிலும் அறியாமையால் சொல்வதாக நான் நம்பவில்லை. சரியானதைச் செய்யும்படி மக்களுக்கு அறிவுறுத்த இயலாமல் அவர்களைத் தடுக்கிறது எது என்று நாம் சிந்திக்க வேண்டும்.


அரசியல் தலைமைகள் மேலாதிக்க வாதிகளதும் ஏகாதிபத்தியத்தினதும் முகவர்களாகவும் தரகர்களாகவும் மாற்றப்பட்டு வருகிற ஒரு காலத்தில் வாழுகிறோம். தேசிய விடுதலைக்கான போராட்டம் சந்தித்துள்ள பின்னடைவுகள் நிலைமைகளை அதற்கு வலுவாக்குகின்றன. எனவேதான் ஒவ்வொரு தேசிய இனத்தின் சார்பிலும் முன்வைக்கப்படுகிற கோரிக்கைகளைத் தலைவர்கள் முதலில் சம்பந்தப்பட்ட மக்களுக்கு விளக்கி அவர்களது உடன்பாட்டைப் பெறாமல் அந்நிய நாடுகளின் குறுக்கீட்டைக் கோருவது சகல மக்களுக்கும் இழைக்கப்படுகின்ற பெரிய துரோகமாகும். அவ்வாறான செயல்களைக் கேள்விக்குட்படுத்துவது நம் ஒவ்வொருவரதும் உரிமையும் கடமையுமாகும்.



-மறுபக்கம்

தினக்குரலிலிருந்து மறுபக்கம் மீள் பதிவாகிறது இங்கே:நன்றி!