Thursday, December 11, 2008

என் ஆசை அக்காள் இனி வரமாட்டாள்

நெஞ்சில் கீறும்
அக்காளின் நினைவுகொண்டு
அஞ்சலிக்கும் தங்கை நான்!!!


மௌனித்திருக்கவும் முடியவில்லை
மனதும் கேட்கிறதாயில்லை
எத்தனை கதைகளை உனக்குள்தேடிட அக்கா
எந்தன் உறவே, ஒரு வயிற்றுறவே என்னைவிட்டுப் போனாயோ
பக்கத்திலிருந்தும் பார்க்கவும் பலன்கூடவில்லையே அக்கா!!!

மீளவும் சோற்றைக் கொள்ளும்
பெருவாயுள் அகாலக் கொடுமையின் சிதை
உறவுக்கான இரைமீட்பில்
வேதனையைப் பகிர்வதற்கென்றே
பேசப்படும் தொலைபேசி அதிர அக்காள் போன செய்தி...

முந்தைய பொழுதின்
கரைந்த தடயம்
நெஞ்சில் கீறும் ஏதோவொரு அதிர்வில்
வெறுமைப் பொழுதாய் வேளைகள் செல்ல
வேதனை சொல்லும் வேளையுள் நீ வீழ்ந்தாயோ அக்கா?

நொந்துலர்ந்த இதயத்தோடு
நெடிய வாழ்வுக்குள்
குந்த இடமின்றி அகதியாய்ப் பிரிந்தோம்
இன்றோ இருப்பிழந்து நீ உறவறுத்து
இதயம் நோக எனை விழிபனிக்க வைத்தாயே அக்கா

எத்தனை இரவுகளில்
எங்களைத் தூக்கியணைத்து
துயரங்கலைத்த தோழி நீ!
ஆறுதலைச் சொல்லும்போது அம்மாவை இருந்தாய்
அக்காவாக அன்பு எனக்கு உறவானது,ஐயோ என் அன்பே!

இந்தப் பொழுதில்
நீயும் இல்லை
நெடு நிலவும் இல்லை
நெஞ்சில் உரம் சேர்க்க
எங்கள் ஊர் ஆறுமுகனும் இல்லை-சிவனே!

சுவரில் தொங்கும் கடிகாரத்தின்
ஈனக் குரலில்
இதயம் குழப்பும் ஒரு கும்மிருட்டில்
உன் முகத்துள் எனைக்காண அச்சம் கொண்டேன்
அக்காவாய் உறவுற்ற என் மூச்சே, காற்றாகிச் சென்றாயோ கடவுளிடம்?

என் ஆசை அக்காள் இனி வரமாட்டாள்
அவளுக்கு வயசாகி விட்டது நித்தியத்தை நாடிவிட்டாள்
வந்தவிடத்தில் நாட்கள்விலத்த
என்கட்டையும் நீ கூட்டிச் செல்லேனடி சோதரி
போகப் போவதுதானே உண்மை,நீ போய்விட்டாய்!

எல்லாம் இழந்த இந்த இருட்டில்
அக்காளின் நீண்ட உறக்கஞ் சொல்லும் சேதியோ
மூச்சையடக்கும் ஒரு பொழுதை மெல்ல அழைக்கும்
உனது உயிரின் இழப்பில்
எனது உடலும் இந்த ஐரோப்பியக் கொடுங் குளிரில்?...

மெல்லத் தலை கோதி அள்ளியணைத்து
கிள்ளிய வீப+தியில் நெற்றியைத் தடவி
நெடிய வலி போக்கிய அக்காவாய் அன்று
உணர்வுக்குள் கோடி கதைகளை வைத்த அக்காள் நீ
சொல்லாமற் போனாயே சோதரி!,சோர்ந்து போனது என் மனசும் அறிவாயோ?

அள்ளிய சோறும்
மெல்ல முடியாத வாயோடு
உணர்வு மரத்த மனசோடு
இதயம் நோக உனக்காக அழுது மடியும்
ஒரு உயிராய் நான் புலம்ப நீ எங்கு போனாய்?

அக்காவாய்க்கூடிப் பிறந்து
அம்மாவாய் ஆரத்தாலாட்டியவளே நின்
ஆன்மாவுக்கு ஆறுதலும்
நித்தியத்தோடு நீ நிம்மதியாகவும் இருக்க
நீண்ட பிராத்தனையோடு நெஞ்சு வலிக்க இறைஞ்சுகிறேன்.


கண்ணீர் மல்க உருகும்,
உன் ஆசைத் தங்கைகளில் ஒருத்தி.


2 comments:

பழமைபேசி said...

சகோதரிக்கு எம் வணக்கங்கள்! நெஞ்சம் நெகிழ்கிறது!!

Unknown said...

அன்புடையீர்,

நாங்கள் ஆழி பதிப்பகத்திலிருந்து தொடர்புகொள்கிறோம். அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை போட்டி தொடர்பாக உங்களுக்கு ஒரு மடல் அனுப்பவேண்டும். தங்கள் மின்னஞ்சல் முகவரியை sujatha.scifi@gmail.com க்கு அனுப்புங்கள். தொடர்புகொள்கிறோம்.

நன்றி