Sunday, December 30, 2007

பெனாசிர் பூட்டோ...

குஞ்சாமணிபிடித்து மூத்திரம் அடிக்கத்தெரியாத
குழந்தை ஒருகட்சிக்குத் தலைவராகி...பாகிஸ்தான்.தென்கிழக்காசியாப் பிராந்தியத்தில் அரசியல் ஸ்த்திரமற்ற சூழலுக்கான திறவுகோலாக இருத்திவைக்கப்பட்ட தேசம்.மேற்குலக மற்றும் அமெரிக்காவின் நம்பத்தகு ஏஜன்டுக்களால் நிர்வாகிக்கப்பட்ட இராணுவச் சர்வதிகாரத் தேசம்! இன்று, தடல்புடலான மாற்றங்களை வேண்டிப் படுகொலை அரசியலை மீண்டும் உள்வாங்கியுள்ளது.இது பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றில் புதிதில்லை.ஆளும் வர்க்கங்கள் தமது வலியை தேசத்தின் பெரும்பகுதி மக்களின் வலியாக்குவதற்குத் திட்டமிட்டுப் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுத் தமது ஆர்வங்களை-நலன்களை அறுவடை செய்வதொன்றும் புதிதில்லை.இப்போது, இதுவே பாகிஸ்த்தானிலும் நடைபெறுகிறது.அமெரிக்கப் புலனாய்வுத்துறையின் குரல்தரவல்ல அதிகாரியான ஸ்ரெபான் கொடேக் கூறுகிறார்:The United States offered FBI assistance in investigating Bhutto's assassination, but Pakistan has not yet made a request என்றும், அமெரிக்க ஸ்ரேற் டிப்பாட்மென் குரல்தரவல்ல அதிகாரி ரொம் கேசி சொல்கிறார்We don't know who is responsible for this attack. ... But it is clear that whoever is responsible is someone who opposes peaceful, democratic development and change in Pakistan." :என்றும்.

ஆகப் பாகிஸ்தானில் இதுவரை ஜனநாயகம் ஒன்று இல்லாததை ஒத்துக்கொண்டவர்கள்,இப்போது, பெனாசிரைக் கொல்பவர்கள் அதற்குத் தடையாக இருப்பதாகவும் குரல்கொடுப்பதும் நிகழ்ந்து வருகிறது.சமாதனம்,ஜனநாயகம்,அபிவிருத்தி மாற்றங்கள் என்பதன் பின்னால் ஒழிந்திருக்கும் மேற்குலக-அமெரிக்க நலன்கள் இன்றைய பாகிஸ்த்தான் அதிபர் முஸ்ராப்பிடம் இவற்றைக் கோரமுடியாதிருப்பது உண்மாயானதா?பெனாசீர் இவற்றையெல்லாம் பாகிஸ்த்தானில் செய்து முடித்து மக்களுக்கான செழுமையான முதலாளித்துவ ஜனநாயகத்தைப் படைத்துவிடுவாதாகவும் இவர்கள் சொல்லும் தரணங்களை எப்படி நாம் எடுத்துக்கொள்வது?இன்றைய தென்கிழக்காசியாவின் எந்த நாட்டிலும்(இந்தியா உட்பட)பெயரளவிலான ஜனநாயகப் பண்புகூடக் கிடையாது.குடும்ப அரசியலில் கட்சிகளைக் குடும்பச் சொத்தாக்கித் தத்தமது குடும்ப அதிகாரங்களை நாட்டின் இராணுவ-பொலிஸ் பலத்துடன் தேசமக்களின்மீது கொடுமையாகச் செலுத்தும் அரை இராணுவத் தன்மையிலான இராணுவச் சர்வதிகாரத்தைப் பிரயோகிக்கும் இத்தகைய அரசியலில், மக்களுக்கான அடிமை விலங்கை மிகக் கபடத்தனமாகப் பூட்டும் இவர்களை, மக்களின் நலன்களை உறுதிப்படுத்தும் தலைவர்களாகக் காட்டும் இன்றைய உலக ஆர்வங்களுக்குள் புதிதாக முளைவிட்ட நெருக்குவாரங்கள் இத்தகைய தேசங்களுக்குப் புதியவை அல்ல.பாகிஸ்தான்,இந்தியாபோன்ற நாடுகளில் மிகக் கொடுமையான குடும்பச் சர்வதிகாரமானது மேற்குலக எஜமானர்களின் அதீத ஒப்புதலோடே நடந்தேறுகிறது.பாகிஸ்தானுக்கு அணுக்குண்டைச் செய்வதற்கு அன்றைய மேற்கு ஜேர்மனியும் அதன் தலைமையில் இன்னுஞ் சில நாடுகளும் உதவி புரிந்தன.இது இந்திய-சோவியத்யூனிய நட்பைக் குறித்த வியூகத்தின் மறுவிளைவாக அன்று நடந்தேறியது.இப்போது, இத்தகைய தேசங்களில் அமெரிக்க-மேற்குலகத் தேசங்களின் நிதிமூலதனம் மிக வேகமாக விரைந்து பாய்கிறது.இதன் தொடர்ச்சியில் பாகிஸ்தானின் இன்றைய முஸ்ராப் பாணியிலான ஆட்சியமைப்பு மேற்குலகத்தின் தேவைகளைப் பூரணமாக நிறைவேற்றவில்லையென்று வெளிப்படையாகத் திட்டும் மேற்குலகம் பெனாசீரைப் பகடைக்காயாக்கிக் கொன்றுள்ளது.தற்போதைய நிலையில் முஸ்ராப்பை வெளிப்படையாகச் சாடும் மேற்குலகம்,அன்றைய முஸ்ராப்பின் பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்கக் கூட்டானது தன்னைக் காப்பதற்கென்றே சாடுகின்றன.சாரம்சத்தில் முஸ்ராப் மிகத் தந்திரமான இராணுவ அதிகாரியாக இருக்கமுடியுமா?அவரது இருப்பானது அன்றைய இராணுவப் புரட்சிக்குப் பின்பும் முன்பும் அமெரிக்க-மேற்குலக ஒப்புதலோடும்,உதவிகளோடுமே சாத்தியமானது.எனினும்,முஸ்ரப்மீதான நம்பிக்கையீனம் எங்ஙனம் தோற்றம் காணுகிறது.பாகிஸ்தானின் வளங்கள் பற்றிய மதிப்பீட்டில் அதன் இரும்பு,எரிவாயு,செம்பு போன்ற வளங்களையும் தாண்டி மேற்குலக நிதிமூலதனத்தின் சுயமான இயக்கத்துக்கு எதிரான முஸ்லீம் அடிப்படைவாதத்தின் இருப்பிடமாக உணர்ந்த வர்த்தக நிபுணர்களின் அறிவுறுத்தல்களின் அதீத-மிகை மதிப்பீடுகளுக்குள் சிக்குண்ட மேற்குலக-அமெரிக்கப் புலனாய்வுத் துறைகளின் ஏவற்காரணங்கள் அதைமறுத்து வற்புறத்தித் தமது வேலையைச் சுயாதீனமாக ஆற்றமுடியாத நிலையில், தமக்கு நம்பகமான எடுபிடியாகப் பெனாசீர் பூட்டோவை இந்த அரங்கத்துக்கு அழைத்து வந்து முஸ்ராப்பைத் தலைவெட்ட எடுத்த முடிவுகளின் விளைவுகள் இன்றைய பாகிஸ்த்தானின் அரசியல் சூழலாக மாறுகிறது.


பெனாசீர் மரித்துவிட்டபின்பும் இந்த ஆர்வங்கள் மடியாதென்பதற்கு பெனாசீரின் வாரீசான 19 வயது பைலாவல் (Bilawal ) பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக முடிசூட்டிய வரலாறு சாட்சி பகிரும்.குஞ்சாமணிபிடித்து மூத்திரம் அடிக்கத்தெரியாத குழந்தை ஒருகட்சிக்குத் தலைவராகித் தென்கிழக்காசியாவின் அறிவின் நிலையைக் கேலிப்படுத்தும்போது, நாம் தலைகுனிகிறோம்.ஒக்ஸ்பேர்ட்டில் சட்டம் படித்தாற்போல் அவருக்குத் தலைமைதாங்கும் பெரு நிலை உருவாகவில்லை.ஆங்கிலம் பேசத் தெரிந்தவனெல்லாம் தென்கிழக்காசிய மக்களுக்குப் படித்தவன்,அறிஞன் என்ற பொதுப் புத்தி இந்தப் பயலையும் தலைவராக்கும் மேற்குலகத்துக்கு ஒத்திசைவாக இருக்கும்.வாரீசு அதிகாரச் சேட்டை மிக்க இத்தகைய பிரதேசத்தில் இது புதுமையில்லை.


கார்டியன் பத்திரிகை எழுதுகிறது: பாகிஸ்த்தான் மக்கள் கட்சி மக்களின் நலன்களைத் தக்கவைக்கும் கட்சியாகத் தன்னைப் புனரமைக்க வேண்டுமாம்.


நியூஸ்வீக் எழுதுகிறது:பாகிஸ்த்தானின் பிரச்சனையானது உள்ளநாட்டோ அன்றிப் பிராந்தியப் பிரச்சனை அல்லவாம்.அது மேற்குலகத்துக்கும் அமெரிக்காவுக்குமாக இப்படிப்பார்க்கிறது:This is no local or regional matter: Pakistan is also a country that, as a harbor for both Islamic extremism and nuclear arms knowhow, today more than ever poses one of the most dangerous threats to America and the West.


நியூயோர்க் ரைம்ஸ் எழுதுகிறது: அமெரிக்காவானது முஸ்ராப்புக்கான உதவிகள் குறித்து மீள்மதிப்பீடு,வியூகம் செய்தாகவேண்டுமாம்.அமெரிக்காவால் முஸ்ராப் பெற்று வரும் கோடிக்கணக்கான நிதி பயங்கரவாத்தத்துக்கெதிரான பாகிஸ்தானின் செயற்பாட்டிற்காக வழங்கப்படினும் அது வேறான வகையில் பயன்படுவதாகக் குற்றஞ் சுமத்திவிடுகிறது.இத்தகைய சூழலில் தேசம் நெற்றில் அன்பர் திரு.சேனன் பாகிஸ்தான் குறித்தொரு கட்டுரை எழுதியிருக்கிறார்.தமிழ்ச் சூழலில் பாகிஸ்தான் குறித்துச் சில கோணப் பார்வையை இது முன் வைக்கிறது.எனினும்,இக்கட்டுரை மேற்காணும் தரவுகளோடு இணைத்துப் படிப்பதற்கானதாகவே இருக்கிறது.ஏனெனில்,இன்றைய பாகிஸ்தான் பற்றிய பலகோணப் பார்வைகளை இது முன் வைக்கவில்லை.பாகிஸ்தான் மக்களுக்குள் எந்தொரு கட்சிக்குமான ஒருமித்து ஆன்மீக ஒத்துழைப்புக்கிடையாது.பாகிஸ்த்தானில் மக்களினங்கள் பல்வேறு பிரிவுகளாகப் பிளவுபட்டுக்கிடக்கும்போது அவர்களை இணைத்துப் போராடி ஜனநாயகத்தைப் பெறுவதான அவரது பார்வையில் தவறிருக்கிறது.பாகிஸ்தானானது பல்வேறு உலக நலன்களின் மிகப் பெரும் வேட்டைக் காடாகும்.அங்கு மக்கள் புரட்சியென்பது திடீரென வெடிப்பதற்கில்லை.மக்களின் ஒருமித்த போராட்ட உணர்வை வேண்டி நிற்கும் ஒரு தேசியக் கட்சியும் அங்கில்லை.இது குறித்த வாசகர்களின் கருத்துக்கள் எதிர்பார்க்கப் படுகிறது.


கீழ்க்காணும் சேனின் கட்டுரையை தேசம் நெற்றிலிருந்து நன்றியோடு பதிவிடுகிறோம்.


தோழமையோடு,


பரமுவேலன் கருணாநந்தன்


30.12.2007


பெனாசிர் பூட்டோ: மேற்குலகும் அது கூறும் ஜனநாயகமும் :சேனன்கடந்த 27ம் திகதி ராவல்பின்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பெனாசிர் (Benazir Bhutto) சுட்டுக் கொல்லப்பட்டார். பெனாசிரை சுட்ட கையுடன் கொலையாளி ஏற்படுத்திய தற்கொலை குண்டு வெடிப்பில் 20க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். முசராப்பின் அரசாங்கம் அல்கைடாவின் பைதுள்ளா முஸ்சுத்தை குற்றம்சாட்ட, அனைத்து மேற்கத்தேய ஊடகங்களும் மீண்டும் ஒரு ரவுன்ட் அல்கைடா வசைபாடி ஓய்ந்துள்ளன. பாக்கிஸ்தான் அல்கைடாவின் பேச்சாளர் இக்கொலையை தாம் செய்ததாக அறிவித்திருந்தாலும், இக்கொலைக்கு பின்னால் இருக்கும் அரசின் பங்கை மூடி மறைக்க முடியவில்லை. குண்டுவெடிப்பின் அதிர்வில் பெனாசிரின் தலை வாகனத்தில் மோதியதாலேயே அவர் இறந்தார் என்று அவர் ஏதோ தற்கொலை செய்து கொண்டதுபோல் அரசு செய்திகள் வெளியிடுகிறது.


பாக்கிஸ்தான் மக்கள் கட்சியின் ; (PPP- Pakistan Peoples Party) தலைவியான அவரை பாக்கிஸ்தானுக்கு திரும்பி போகும்படி தூண்டியதில் இங்கிலாந்து அரசாங்கத்துக்கு முக்கிய பங்குண்டு. பெனாசிர் திரும்பி சென்று, தேர்தலில் நின்று வெற்றி பெற்று, தமக்கு தேவையான அனைத்து சலுகைகளையும் வழங்குவதை, பாக்கிஸ்தானுக்கு ஜனநாயகம் கொண்டுவருவதாக பார்த்தனர் மேற்கத்தேய அரசுகள்.


முசராப்பின் அரசு தமது செல்வாக்கை மக்கள் மத்தியில் இழந்ததும், பெனாசிர் முசராப்புக்கும் மேலாக அதிக சலுகைகளை மேற்குலக நாடுகளுக்கு வழங்க முன்வந்ததுமே ஆதிக்க சக்திகளுக்கு பெனாசிர் மேலான கரிசனை ஏற்பட முக்கிய காரணம். இதுவரை காலமாக இராணுவ ஆட்சி செய்து பெரும் ஜனநாயக மறுப்புகள் செய்து வந்த முசராபை தமது முதுகில் தூக்கித் திரிந்த மேற்கத்தேய அரசுகள் உடனடியாக அவரை கீழே தள்ளிவிட விரும்பவில்லை. மக்கள் அண்மையில் கிளர்ந்து எழுந்து போராடியிருக்;கா விட்டால் அவர்கள் தொடர்ந்தும் முசராபுக்கு ஆதரவை வழங்கியிருப்பார்கள் என்பதில் ஜயமில்லை. வழக்கறிஞர்கள், நீதிபதிகள், டாக்டர்கள் முதற்கொண்டு தொழிற் சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பு மக்களும் தெருவில் இறங்கி போராட தயாரானது ஆதிக்க சக்திகளுக்கு கிலி ஏற்படுத்தியது ஆச்சரியமானதல்ல.


போதாக்குறைக்கு வளர்ந்து வரும் இஸ்லாமிய அடிப்படைவாதம் - குறிப்பாக அணுஆயுத பலம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கையில் போய்விடுமோ என்ற பயம் இவர்களை தொடர்ந்து ஆட்டி வருகிறது. இந்த நிலையில் முசராபை கேள்விகேட்க இவர்கள் தயாராக இல்லை. அதே தருணம் தமது இராணுவத்தை பாக்கிஸ்தானில் நிலைநாட்ட தொடர்ந்து முயற்சித்து வரும் அமெரிக்காவுக்கு முசராப் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருந்து வந்துள்ளார். அதற்கு தான் அனைத்து சலுகைகளையும் வழங்குவதாக பெனாசிர் அறிவித்தது அவரை அமெரிக்காவின் முதல்தர நண்பராக்கியதும் அல்கைடாவின் முதல்தர எதிரியாக்கினதும் ஆச்சரியமான விசயமில்லை.முசராபின் அரசு தன்னை கொலை செய்யும் முயற்சியில் இருப்பதாக பெனாசிர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்துள்ளார். 150க்கும் மேலான உயிர்களை பலிகொண்ட கடந்த அக்டோபர் 18 தற்கொலை தாக்குதலில் இருந்து தப்பிய கையுடன் அவர் அரசாங்கத்தையே குற்றம்சாட்டி இருந்தார். அவரது வீட்டை இராணுவம் முற்றுகையிட்டு காவலில் வைத்திருந்த பொழுது பெனாசிர் பி பி சி ரேடியோவுக்கு வழங்கிய பேட்டியில் அரசை கடுமையாக சாடியிருந்தார். அதே நிகழ்ச்சியில் பெனாசிருடன் பங்கேற்ற இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலபான்ட் முசராபுக்கு தமது முழு எதிர்பையும் தர மறுத்துவிட்டார். முசராப் உடனடியாக அரச பொறுப்பில் இருந்து விலத்;த வேன்டும் என்று பெனாசிரும் நிகழ்ச்சி நிருபரும் மீண்டும் மீண்டும் கேட்டும் பதில்தர மறுத்துவிட்டார் மிலபான்ட். ஜோர்ஜ் புஸ் முசராப் தமது உடை மாற்ற வேன்டும் என்று கோர முஸரப் உடை மாற்றிய கதை எமக்கு தெரியும். பாக்கிஸ்தானுக்கு ஜனநாயகம் கொண்டுவரும் இவர்தம் அக்கறையான நடவடிக்கைகள் இவை.இன்று பாக்கிஸ்தான் இராணுவத்தின் ஆதரவின்றி பாக்கிஸ்தானில் யாரும் அரசமைப்பது என்பது நடக்ககூடிய காரியமாக தெரியவில்லை. பாக்கிஸ்தான் உருவான காலம் தொட்டு இந்நாடு இராணுவ ஆட்சியில் இருந்த காலமே அதிகம். இராணுவத்துக்குள் பல்வேறு கிளைகள் பல்வேறு அரசியல் நோக்கில் செயல்படுகின்றன. இருப்பினும் முழு பாக்கிஸ்தானும் இராணுவத்தினதோ அரசினதோ கட்டுப்பாட்டில் இல்லை. உதாரணமாக வடக்கு பிரதேசத்தில் இஸ்லாமிய அடிப்படை வாத குழுக்கள் பல்வேறு பகுதிகளை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். போதாக்குறைக்கு அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சுகள் தனித்து இயங்குகின்றன. ஒன்றோடு ஒன்று தொடர்புபடாத வகையில் தனிப்பட்ட அரசியல் நோக்கோடு வௌ;வேறு அரச அமைப்புக்கள் தங்களது சொந்த நலன்சார் அரசியலுடன் இயங்குகின்றன. ஊழலும் சுரண்டலும் உச்சக் கட்டத்தில் இருக்கும் பாக்கிஸ்தானில் மக்கள் வறுமையில் வாடுவது பற்றி எந்த ஆதிக்க சக்திகளும் கவலைப்படவில்லை. இராணுவத்தின் அரசியல் பலத்தை குறைத்து குறைந்தபட்ச ஜனநாயகத்தையாவது கொண்டுவருவதற்கு யாரும் தயாராக இல்லை.


பெனாசிருக்கோ PPPக்கோ இராணுவத்தின் முழு ஆதரவு ஒருபோதும் இருக்கவில்லை. மேற்குலக அரசுகளும் பெனாசிரை நம்பும் அளவுக்கு PPPஜ நம்ப தயாரில்லை. 60 களில் ஏற்பட்ட இடதுசாரி எழுச்சியின் விளைவாக உருவாகிய இக்கட்சிக்குள் இன்றும் பல்வேறு இடதுசாரி போக்குகள் உண்டு. இந்நிலையில் பெனாசிரின் இறப்பு பலத்த சிக்கல்களை தோற்றுவித்துள்ளது.


பெனாசிருக்கோ அல்லது அவரது குடும்பத்துக்கோ பெரும்பான்மை மக்கள் ஆதரவு இன்று இல்லை. அவர்கள் அரசாட்சியில் இருந்தபோது செய்த அநியாயங்களை மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை. பெனாசிரின் கணவர் 10வீதக்காரர் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர். 10வீதம் லஞ்சம் வாங்கிக்கொண்டு எல்லாவித ஊழல்களையும் அனுமதித்தவர் அவர். இருப்பினும் பெனாசிரின் குடும்ப உறுப்பினர் ஒருவரையே இக்கட்சிக்கு தலைவராக்க முயற்சி நடக்கும் என்று நாம் நம்பலாம். பூட்டோவின் பெயரை வைத்து அரசியல் செய்ய விரும்பும் PPPயின் முன்னனி தலைவர்கள் மக்களின் அதிருப்தி பற்றி அவர்களின் போராட்டம் பற்றி எந்த அக்கறையும் அற்றவர்களாகவே இருக்கிறார்கள். PPPஜ ஆரம்பித்த பெனாசிரின் தந்தை அலி பூட்டோ 1979ல் தூக்கில் இடப்பட்டதை தொடர்ந்து இக்குடும்பம் சந்திக்கும் நாலாவது கொலை இது. இதன்முலம் ஏற்படும் அனுதாப அலையை பாவிக்க – வரும் தேர்தலில் உபயோகிக்க - கட்சி முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு இன்னுமொரு பூட்டோவை கட்சிக்கு தலைமையாக்குவதில் முன்னனி உறுப்பினர்கள் முன்நிற்பர். இதில் மக்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை.

வரும் ஜனவரி 8ல் நடக்க இருக்கும் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்காது என்பதும், கள்ள வாக்குகளும் ஊழலும் நிரம்பி வழியும் இத்தேர்தலின் பின் பாக்கிஸ்தானுக்கு ஜனநாயகம் வந்துவிட்டதாக மேற்குலக ஊடகங்கள் கூவப்போவதும் எமக்கு தெரிந்ததே. இது பாக்கிஸ்தானுக்கு எந்த மாற்றத்தையும் கொண்டுவர போவதில்லை.


சிந்து பிரதேசம் உட்பட பாக்கிஸ்தான் எங்கும் இன்று கிளர்ந்தெழுந்துள்ள மக்களை ஒன்று திரட்டி தற்காப்பு கமிட்டிகளை உருவாக்கி ஒரு மக்கள் அமைப்பை கட்டி எழுப்புவதன் மூலம்தான் இராணுவத்தையும் இஸ்லாமிய அடிப்படை வாதத்தையும் எதிர்கொள்ள முடியும். இதன்மூலம் தான் பாக்கிஸ்தானுக்கு நியாயமான ஜனநாயகத்தை கொண்டுவர முடியும்.

செய்திகள் சில ஏன் அடக்கி வாசிக்கப்படுகின்றன?

பாராளுமன்றமே ஒரு மோசடியாக இருக்கிறது.


டகங்கட்குரிய பொறுப்பான நடத்தை நாகரீகமான நடத்தை என்கிற விடயங்கள் உள்ளன. பொறுப்பு என்பது முதலில் சமூகப் பொறுப்பு. சொல்லுகிற விடயங்கள் சரியா தவறா ஐயத்துக்குரியனவா என்பன பற்றி உறுதிப்படுத்தி அதற்கமையத் தகவல்களை வழங்குவது முக்கியமானது. எவர் மீதுங் குற்றச்சாட்டுக்களை வைக்கு முன்பு அவற்றுக்கு மறுமொழி சொல்ல அவருக்கு ஒரு வாய்ப்பளித்த பின்பே குற்றச்சாட்டைப் பகிரங்கமாக முன்வைப்பது நியாயமானது. தகவல்களை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படுகிற மொழிநடை, பேசுகிற தொனி என்பன நாகரிகமான நடத்தைக்குட்பட்டவை. குறிப்பாக நேர்காணல்களின் போதும் கேள்விகளைக் கேட்கும் போதும் மற்றவருக்கு மரியாதை கொடுத்துப் பேசுவது நாகரிகமானது.


இப்போதெல்லாம் தொலைக்காட்சியிலுஞ் சரி வானொலியிலுஞ் சரி தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுகிறவர்களுடன் நிகழ்ச்சிகளை நடத்துகிறவர்கள் பேசுகிற தோரணை வீட்டில் தாய் தகப்பன் இவர்கட்கு நல்ல பழக்கங்களைக் கற்பிக்கவில்லையோ என்றுதான் எண்ணத் தூண்டுகிறது. அறியாமைக்கே உரிய திமிர்த்தனத்துடன் தான் இன்று இளம் ஒலி பரப்பாளர்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்துகிற இளையவர்களும் நடந்து கொள்கிறார்கள். வயது எதற்குமுரிய தகுதியல்ல என்று நினைவூட்டுகிற விதமாகச் சில வயதில் மூத்த பத்திரிகை எழுத்தாளர்களும் பத்தி எழுத்தாளர்களும் நடந்து கொள்ளுகிறார்கள்.


இந்த விதமான சில்லரைத் தனங்கள் பெருகுவதற்கு ஊடக நிறுவனங்களும் அவற்றின் எசமானார்களும் பொறுப்பேற்றாக வேண்டும். இன்று ஊடகவியலாளர்களை வளர்த்தெடுப்பதில் ஊடக நிறுவனங்கள் அக்கறை காட்டுவதில்லை. வேகமாக முன்னேறுகிறதாக எண்ணிக் கொண்டு தோற்றப்பாடான விடயங்களில் மட்டுமே அக்கறை காட்டுகிற பல இளைஞர்கள் எதையுமே கற்க முயலுவதில்லை. செய்தி என்பதே ஒரு பொழுது போக்கு - விளம்பர நிகழ்ச்சியாகி விட்டபின்பு யாருக்கு எதைப்பற்றி என்ன அக்கறை!


எனினும், இந்தவிதமாக ஊடகத்துறையில் ஏற்பட்டுள்ள சீரழிவு கருத்துச் சுதந்திரம் என்ற பேரில் தமது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்கிற ஒரு போக்கையும் வளர்த்துள்ளது. இது அரசாங்க ஊடகங்களில் மிக மோசமாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது என்றாலும் தனியார் துறை ஊடகங்கள் பல அரசாங்க ஊடகங்கட்கு எவ்விதத்திலும் சளைக்காத விதமாகவே நடந்து வந்துள்ளன.


சூரியன் எப்.எம். முடக்கப்படுவதற்குச் சில காலம் முன்பு வரை அதன் உள்ளூர் முதலாளியை ஒரு பெரிய அரசியல் பிரமுகராக்குகிற விதமாகச் செய்தியில் அவரைப் பற்றிய விளம்பரங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டன. மற்றப்படி தரமான முறையில் செய்திகளைத் தொகுத்துத் தந்த அந்த வானொலிக்கு இப்படி ஒரு களங்கம் தேவையா என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்ததில்லை என்றே தோன்றுகிறது.
ஒவ்வொரு ஊடக நிறுவனத்துக்கும் ஒரு அரசியற் சார்பு இருக்கிறது. அதை விட முக்கியமாக வணிக நோக்கும் இருக்கிறது. எனவே சில விதமான பக்கச் சார்புகளும் சமரசங்களும் நாம் எதிர்பார்க்கக் கூடியவையே. ஆனாலும் இவற்றை இரகசியமாக வைத்துக் கொண்டு, நடுநிலை வேடம் போடுவது கொஞ்சம் அருவருப்பூட்டுவது.


அண்மையில் மிலிந்த மொறகொடவின் மீதான ஊழல் குற்றச்சாட்டுப் பற்றிய பாராளுமன்ற விசாரணையிற் குறுக்கிடுகிற விதமாகத் `தெரிவிப்பது நாங்கள் - தீர்மானிப்பது நீங்கள்' ஊடக நிறுவனம் நடந்து கொண்டது பற்றி எழுதியிருந்தேன். காரியம் ஆகிவிட்டதாலோ என்னவோ அந்தக் கேவலமான குறுக்கீடு நிறுத்தப்பட்டுவிட்டது. மீண்டும் அந்த விவாதம் வருகிற வரை அதற்கு ஓய்வு உண்டு.

அதனிலுங் கேவலமான ஒரு காரியம் தமிழர் தேசிய முன்னணியின் கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றி வரவு - செலவுத் திட்ட வாக்கொடுப்புக்கு முன்பும் பின்பும் நடந்தது.


தொலைக்காட்சி நிருபர் ஒருவர் மூன்று உறுப்பினரதும் உறவினர்கள் கடத்தப்பட்ட நிலையில் அவர்களில் எவரும் வரவு- செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்குபற்றினால் கடத்தப்பட்ட உறவினர் கொல்லப்படுவர் என்ற மிரட்டலின் பின்னணியில் வாக்கெடுப்பில் பங்குபற்ற வேண்டுமா, கூடாதா என்று தெரிந்தெடுக்கப்பட்ட சிலரிடங் கேள்வி கேட்டனர் . அக்கேள்விக்கான விடைகள் வரவு- செலவுத் திட்ட வாக்கெடுப்பின் முன்பு வரை தொலைபரப்பப்பட்டன. போதாக்குறைக்கு வாக்கெடுப்பிற்குப் பின்பும் கேள்விகள் கேட்கப்பட்டு விடைகள் தொலைபரப்பப்பட்டன.


இந்த விடயம் வெறுமனே ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு அவரது உறவினர்களது உயிரைக் காப்பாற்றுவது முக்கியமா , கடமையுணர்வுடன் பாராளுமன்றத்தில் வாக்களிப்பது முக்கியமா என்ற விதமாகச் சுருக்கப்பட்ட பின்பு கடமை தான் முக்கியம் என்கிற கருத்து விடையாக வலிந்து வரவழைக்கப்பட்டது. ஆனால், இந்த வரவு- செலவுத் திட்டத்தில் வாக்களிக்கிற தேவை தான் என்ன என்ற கேள்வியைக் கேட்டிருந்தால் விடைகள் வேறுவிதமாக வந்திருக்கலாம். வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் தமிழர்களைப் பொறுத்தவரை என்ன வித்தியாசம் என்று கேட்டிருந்தால், தேர்தல் ஒன்று வந்து எதிர்க்கட்சி பெரும்பான்மையைப் பெற்றிருந்தால் என்ன வித்தியாசம் என்று கேட்டிருந்தால், மறுமொழியைக் கொஞ்சம் யோசித்துச் சொல்ல வாய்ப்பிருந்திருக்கும்.


தமிழ்ப் பிரதிநிதிகள் எதிர்த்து வாக்களிப்பதன் நோக்கம் வரவு- செலவுத் திட்டம் பற்றிய தமிழ் மக்களின் நிலைப்பாட்டை உணர்த்தவேயொழிய யூ.என்.பி.யை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கல்ல என்பதை நாம் மறக்கலாகாது. எனவே, சிலரை வாக்களிக்காது தடுத்ததால் அந்தக் காரியத்திற்கு எதுவிதமான கேடும் இல்லை.


பாராளுமன்றமே ஒரு மோசடியாக இருக்கிறது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை அது இரட்டை மோசடி. அதில் உள்ள ஒரே நல்ல விடயம் தமிழ் மக்களின் பிரதான கட்சி எதுவும் 1968 க்குப் பிறகு இதுவரை அமைச்சர் பதவி பெறாதது மட்டுமே.

இது போக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிந்து கொண்டே தமது உயிரைப் பணயம் வைக்க வேண்டும் என்கிற பரிந்துரையை முன்வைத்த ஊடக நிறுவனம் இன்று நாட்டில் நடக்கிற எத்தனையோ அக்கிரமங்கட்கு யார் யார் பொறுப்பு என்று அறியாதா? அவை பற்றி ஏன் எதுவுமே பேசப்படுவதில்லை?

செய்திகள் சில ஏன் அடக்கி வாசிக்கப்படுகின்றன?

36 ஆண்டுகளுக்கு முந்திய ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது. 1971 ஏப்ரல் கிளர்ச்சியை அடுத்து, தாடிக்கார இளைஞர்களை பொலிஸார் பிடித்துச் சென்று விசாரித்தனர். அதனால் பல இளைஞர்கள் போல எனது நண்பர் ஒருவரும் தனது பிரியத்திற்குரிய தாடியைத் தியாகம் செய்தார்.

தனது தாடிக்குச் சேதமில்லாதவரான இன்னொரு நண்பர் அவரைப் பார்த்து நீ ஒரு கோழை என்று கேலி செய்தார். முதலாமவர் நிதானமாக என்னிடமும் ஒரு 5 ஸ்ரீ காரும். பொலிஸில் உயர் பதவியில் நண்பரும் இருந்தால் நானும் உன்போல் வீரம் பேசுவேன் என்றார். மற்றவரின் தாடிக்குள்ளாகவும் அவரது முகம் சிவந்தது.

`பரமசிவன் தலையிலிருந்து பாம்பு கேட்டது, கருடா சௌக்கியமா?' என்கிற மாதிரி நாம் மற்றவர்கள் மீது தீர்ப்பு வழங்க முதல் நம்மையே கேட்டுக் கொள்வது நல்லது.

இதே ஊடக நிறுவனம் தனது ஊழியர் ஒருவரை அரசியல் பிரமுகராக்குவதற்குப் படாத பாடுபட்ட வருவதை நாம் அறிவோம். முஸ்லிம்களையும், மலையக மக்களையும் முட்டாள்களாகக் கருதுகிற விதமாகச் சொல்லப்பட்ட கருத்துகளின் நோக்கத்தையும் அறிவோம்.
விளம்பரத்தாலே உயர்ந்தவர் நிலைமை நிரந்தரமல்ல என்பதை மட்டும் சொல்லிக் கொள்வது போதுமானது. எவ்வளவு பண வலிமையுள்ள நிறுவனமானாலும் அது எவ்வளவு கவனமாகப் போடுகிற வேடமாக இருந்தாலும் வேடங்கள் எல்லாம் என்றோ கலைந்துதானாக வேண்டும்.


-மறுபக்கம்
நன்றி:தினக்குரலுக்கு

Sunday, December 23, 2007

இலங்கைக்கு அதி முக்கியமான ஆயுத உதவியும்...

இந்தியா மற்றும் எம்.ஜீ.ஆர் மாயை...
"இந்திரா காந்தி இலங்கையில் தமிழீழப் பிரிவினையை ஆதரிப்பது போல பாவனை
காட்டினாலும் விடுதலை இயக்கங்களிடையே மோதல்களை விருத்தி செய்வதில் அவரது முகவர்கள்
தீவிரமாக இருந்ததை இன்னமும் விளங்கிக் கொள்ள இயலாதவர்கள் இருக்கிறார்கள்.
பாகிஸ்தானின் உடைவின் பின்பு தன்னைத் தென்னாசியாவின் மேலாதிக்க வல்லரசாக்குவதற்கு
இந்தியா எடுத்த முயற்சிகட்கு சோவியத் ஆதரவு இருந்தது. இங்கு சோவியத் ஆதரவின்
நோக்கம் அமெரிக்காவின் ஆதிக்கத்தைத் தடுப்பதாகவே இருந்தது. "அண்மையிற் பிரபல தமிழ் நாளேடொன்றில் ஒரு கருத்துப்படங் கண்டேன். அதில் இந்தியா இலங்கைக்கு ஆயுதங்களை வழங்குவது சீனாவும் பாகிஸ்தானும் ஈரானும் வழங்குவதாலேயே என்ற கருத்து வெளிப்பட்டிருந்தது. இது அந்தப் படத்துக்கு மட்டும் உரிய கருத்தல்ல. இவ்விதமாக இந்தியாவின் நடத்தையை விளக்குவது பலருக்கு ஆறுதல் தருவதாக உள்ளது.


இலங்கைக்கு அதி முக்கியமான ஆயுத உதவியும் பயிற்சியும் யாரால் வழங்கப்பட்டு வந்துள்ளது? இது முக்கியமான கேள்வி. ஆனால், இதைவிட வேறு கேள்விகளும் எழுப்பப்பட வேண்டும். இந்தியா இலங்கைக்கு இராணுவ உதவி வழங்கக் காரணம் சீனா இலங்கையில் தனது செல்வாக்கை கூட்டிக் கொள்ளப் பார்க்கிறதும் பாகிஸ்தான் தனது செல்வாக்கை கூட்டிக் கொள்ளப் பார்க்கிறதுமே என்கிற விதமான நம்ப வசதியான விளக்கங்களை இதற்கும் முதலும் பல தடவைகள் கேட்டிருக்கிறேன். சீனாவோ பாகிஸ்தானோ இலங்கையில் தமது செல்வாக்கை வலுவாக வைத்துக் கொள்ள விரும்புவது உண்மை. அதற்கான உரிமை அந்த இரண்டு நாடுகட்கும் இருக்கக் கூடாதென்றால் வேறெந்த நாட்டுக்கும் அது இருக்கக் கூடாது. சீனாவோ ரஷ்யாவோ இன்று சோஷலிஸ நாடுகளல்ல. எனினும் அவை பிற நாடுகள் மீதோ உலகின் பிற பிரதேசங்களிலோ தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் தமது படைகளை அனுப்புகிற நிலையிலும் இன்று இல்லை. பாகிஸ்தான் இந்தியா தவிர்ந்த எந்த நாட்டுடனும் எல்லைத் தகராறுகளைக் கொண்டிருக்கவில்லை. அமெரிக்க நிர்ப்பந்ததின் விளைவாகவே இன்று அது அதன் மக்களால் வெறுக்கப்படுகிற சர்வாதிகாரி முஷாரப் தலைமைக் கீழ் ஆப்கானிஸ்தானிலிருந்து விடுபட இயலாமல் திணறுகிறது.இந்தியாவின் நடத்தையை சீனாவையும் பாகிஸ்தானையும் வைத்து விளக்குவதற்குப் பதிலாக இந்திய நடத்தையை வைத்துச் சீனாவினதும் பாகிஸ்தானினதும் நடத்தைகளை விளங்கிக் கொள்ள நாம் ஏன் முயலுவதில்லை. இந்தியாவின் அயற்கொள்கை அணி சேராமையிலிருந்து சோவியத் யூனியனுடனான பாதுகாப்பு உடன்படிக்கை வரை சென்று இப்போது அமெரிக்காவுடனான நெருங்கிய உறவாக மாறியுள்ளதை எப்படி விளக்குவது? இந்த மாற்றம் இந்திய -சீன உறவு சுமுகமடைந்து வந்துள்ள ஒரு பின்னணியில் அல்லவா நிகழ்ந்துள்ளது. இந்தியாவினுள்ளிருந்து அமெரிக்க சார்பு விஷமிகள் `சீன மிரட்டல்' பற்றிய புனைவுகளை உற்பத்தி செய்து கொண்டுள்ளனர். ஆனாலும் நம்மிடையே இவற்றை எல்லாம் நம்ப ஒரு கூட்டம் இருக்கிறது. ஒவ்வொன்றையும் ஊதிப்பெருப்பிக்க வல்ல `நிபுணர்கள்' இருந்து வந்துள்ளனர்.இலங்கை இந்தியாவின் ஒரு பகுதியாயிருக்க வேண்டும் என்ற கருத்துப்பட நேரு இந்திய விடுதலைக்கு முன்பே பேசியுள்ளார். நேருவும் இந்திய மேலாதிக்கச் சிந்தனையாளர்களும் இந்தியாவை ஒரு பிராந்திய வல்லரசாக்குகிற நோக்கத்தில் தெளிவாகவே இருந்துள்ளனர். தன் வடகிழக்கு எல்லையில் இருந்த மூன்று நாடுகளையும் தனது ஆதிக்கத்திற்கு உட்படுத்தியிருந்த இந்தியா, ஒன்றை ஆக்கிரமித்துத் தனதாக்கியது. இன்னொன்றை இன்னமும் ஒரு கொலனி மாதிரியே நடத்துகிறது. மற்றதில் இன்று ஏற்பட்டு வருகிற மாற்றங்களைத் தடுப்பதற்கும் தனது மேலாதிக்கத்தைத் தொடர்வதற்குமாகக் குறுக்கிட்டு வருகிறது. காஷ்மீர் மீதும் கிழக்கிந்தியாவின் பிரதேசங்கள் பலவற்றின் மீதும் இந்தியா உரிமை கொண்டாடுவதும் கடல்கடந்த பிரதேசங்களான அந்தமான், நிக்கோபார் தீவுகள் மீது உரிமை கொண்டாடுவதும் எந்தப் பண்பாட்டுப் பாரம்பரிய அடிப்படையிலும் அல்ல. இவை யாவும் கொலனிய எசமானர்கள் விட்டுச் சென்றவற்றின் மீது இந்தியா உரிமை கொண்டாடுகிறதையே குறிக்கின்றன.சீன - இலங்கை உறவு, 1952 ஆம் ஆண்டு கொரியா மீதான அமெரிக்க யுத்த காலத்தில், இலங்கை எதிர்நோக்கிய உணவு நெருக்கடியினதும் சீனாவுக்குத் தேவையான இறப்பரைப் பெற இயலாமல் அமெரிக்கா விதித்திருந்த வணிகத் தடைகளினதும் பின்னணியில் இலங்கைக்குச் சாதகமான முறையிற் செயற்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் தொடங்கியது. ராஜதந்திர உறவுகள் 1957 இல் பண்டாரநாயக்க ஆட்சியின் போதே ஏற்பட்டன. 1956 வரை இலங்கைக்கு எந்த சோஷலிச நாட்டுடனும் ராஜதந்திர உறவுகள் இருக்கவில்லை. சீன - இலங்கை உறவின் நெருக்கம் , சீன - இந்திய எல்லைத் தகராற்றை இந்தியா பேசித் தீர்க்க மறுத்த காலத்திற்கு முன்னமே ஏற்பட்டது. சீனாவுக்கு இலங்கையின் முக்கியத்துவம் சீனாவுக்குத் தான்சானியா, ஸம்பியா, கானா போன்ற நாடுகளின் முக்கியத்துவத்தை விட எவ்வகையிலும் பெரியதல்ல. அமெரிக்காவால் 1972 வரை தனிமைப்படுத்தப்பட்டு 1962 அளவிலிருந்து சோவியத் யூனியனாலும் தனிமைப்படுத்தப்பட்டு, 1972 வரை ஐ.நா. சபையில் தனது இடத்தைத் தாய்வான் தீவில் இருந்த சியாங் கைஷேக் கும்பலிடமிருந்து மீட்க இயலாத நிலையில், சீனாவுக்கு மூன்றாமுலக நாடுகள் ஒவ்வொன்றுடனுமான உறவு பெறுமதி வாய்ந்ததாகவே இருந்து வந்தது.


1971 ஏப்ரல் கிளர்ச்சியின் போது, இலங்கைக்கு இந்தியா தனது போர்க்கப்பல்களை அனுப்பியிருந்தது. இராணுவ உதவியும் வழங்கியது. இந்தியா கிழக்குப் பாகிஸ்தானாக இருந்த பங்களாதேஷில் 1972 இல் குறுக்கிட்ட போது, இலங்கை பாகிஸ்தானின் உள் விவகாரமாகவே அதைக் கருதியது. இந்தப் பின்னணியிலேயே இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான நல்லுறவு வலுப்பட்டது.இந்திரா காந்தி இலங்கையில் தமிழீழப் பிரிவினையை ஆதரிப்பது போல பாவனை காட்டினாலும் விடுதலை இயக்கங்களிடையே மோதல்களை விருத்தி செய்வதில் அவரது முகவர்கள் தீவிரமாக இருந்ததை இன்னமும் விளங்கிக் கொள்ள இயலாதவர்கள் இருக்கிறார்கள். பாகிஸ்தானின் உடைவின் பின்பு தன்னைத் தென்னாசியாவின் மேலாதிக்க வல்லரசாக்குவதற்கு இந்தியா எடுத்த முயற்சிகட்கு சோவியத் ஆதரவு இருந்தது. இங்கு சோவியத் ஆதரவின் நோக்கம் அமெரிக்காவின் ஆதிக்கத்தைத் தடுப்பதாகவே இருந்தது.இத்தகைய ஒரு பின்னணியிலேயே இலங்கைக்குப் பாகிஸ்தானிடமிருந்தும் சீனாவிடமிருந்தும் இராணுவ உதவி வலுப்பெற்றது. இந்தியா இலங்கையைத் தனது ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு வர முயன்றது பற்றித் தமிழ்த் தேசியவாதிகளிடையே 1987 வரை கவலையிருக்கவில்லை. ஆனால், அதைத் தடுக்கிற நோக்கில் சீனாவும் பாகிஸ்தானும் செயற்படுவது தான் எப்போதும் தவறாகத் தெரிந்து வந்துள்ளது. இன்று இந்தியாவைத் தனது நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முனைகிற அமெரிக்கா, உலகமெல்லாம் தனது கடற்படை, விமானப்படை, இராணுவம் ஆகியவற்றை நிரந்தரமான தளங்களில் வைத்திருக்கிறது. இலங்கைக்குத் தெற்கே டியேகே கார்ஸியாவிலும் தளம் உள்ளது. இதை நாங்கள் கண்டு கொள்வதில்லை. சீனாவையும் ரஷ்யாவையும் சுற்றி வளைக்கும் அமெரிக்கத் திட்டம் நம்மைக் கவலைக்குட்படுத்தாது. இலங்கை அரசாங்கத்துடனான அமெரிக்க இராணுவ உடன்படிக்கைகள் கூட நமக்கு ஒரு பொருட்டல்ல. ஆனால் சீனாவோ பாகிஸ்தானோ மாற்று நடவடிக்கை எடுத்தால் அது பிழையாகி விடுகிறது.நாங்கள் சில விஷயங்கள் பற்றித் தெளிவாக இருக்க வேண்டும். இலங்கையிலோ எந்த ஒரு நாட்டிலுமே எந்த ஒரு அயல் நாடும் தனது படைத்தளங்களை வைத்திருப்பதை நாம் ஏற்கலாகாது. சீனாவானாலும் ரஷ்யாவானாலும் அது என்றுமே ஏற்கத் தக்கதல்ல. அவ்வாறான ஒரு நிலைப்பாட்டை எடுக்கின்ற போதே, நேர்மையாக நம்மால் அமெரிக்கத் தளங்களை அகற்றுமாறு கேட்க முடியும், இந்திய இராணுவக் குறுக்கீட்டைக் கண்டிக்க முடியும்; எந்த இராணுவ ஆக்கிரமிப்பையும் எதிர்க்க முடியும்.

சீனா எந்த நாட்டையும் ஆக்கிரமிக்காது, எந்த நாட்டிலும் தனது படைகளை வைத்திருக்காது என்பதில் கம்யூனிஸ்ட் சீனா தெளிவாக இருந்தது. ஆக்கிரமிப்பின் மூலம் சோஷலிஸத்தை உருவாக்க இயலாது என்பதில் அது உறுதியாக இருந்தது. பிற நாடுகளின் உள் அலுவலங்களில் தலையிடாமை சீனா அயற்கொள்கையின் முக்கியமான ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளது. இன்று சீனா சோஷலிச நாடல்ல. சீன முதலாளியம் நாளை சீனாவை ஏகாதிபத்தியமாக மாற்ற முனையலாம். ஆனால் இப்போதைக்கு அந்த நிலைக்குச் சீனா வரவில்லை. அயற்கொள்கையில் கொலனித்துவ ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு எதிரான கிளர்ச்சிகட்கு நிபந்தனையற்ற ஆதரவு என்ற கலைப்பாடு கைவிடப்பட்டுள்ளது. எனினும் நாடுகளின் உள் அலுவல்களின் குறுக்கிடாமை என்பது இன்னுமுந் தொடகிறது.


மாஓ வாதிகள் போராடிக் கொண்டிருந்த போதும், சீனா நேபாளத்திற்கு ஆயுதங்களை வழங்கியது. சீனாவின் சோஷலிஸ மறுப்பு பற்றிக் கடுமையாக விமர்சித்தாலும் நேபாள மாஓவாதிகள் சீனா நேபாளத்தின் ஆட்சியாளர்களுடன் வைத்திருந்த உறவைக் குற்றங் கூறவில்லை.
இலங்கையின் சுயாதிபத்தியத்திற்கு மிரட்டலாக உள்ளவர்கள் இலங்கையின் சிறுபான்மைத்தேசிய இனங்களது சுயநிர்ணயத்தின் பாதுகாவலர்களாக இருப்பார்கள் என்ற பிரமை கலையும் வரை நம்மால் ஏகாதிபத்தியத்தையும் மேலாதிக்கத்தையும் சரியாக விளங்கிக் கொள்ள முடியாது.


மறுபக்கம்

நன்றி:தினக்குரல்

Tuesday, December 04, 2007

இலங்கை அரசின் அரச பயங்கரவாதமானது...

கொலைகளும்,அதைக்காரணமாக்கிய இராஜ தந்திருங்களும் அந்த இராஜ தந்திரத்தால் முன்னெடுக்கப்படும் மக்கள் விரோத யுத்தங்களும் ஈழத்தமிழ்பேசும் மக்களை உயிர்திருப்பதற்கான சாத்தியப்பாட்டிலிருந்து மெல்ல மெல்லப் பெயர்த்தெடுத்து கொலைக் களத்துக்குள் தள்ளி விடுகிறது. இதனால், இந்தச் சமுதாயத்தின் இருப்பை அசைத்துவிட முனையும் இனவாத அரசியலிலிருந்து, தமிழ் பேசும் மக்கள் விடுதலையடைதலென்பது மீளவும் பகற்கனவாகிறது.

சிங்களப் பாசிச அரசின் இன்றைய அடக்குமுறைப் போர்- அரசியல் நடவடிக்கைகளும்,புலிகளின் தாக்குதல்களும் தமிழ்பேசும் மக்களைக் காவுகொள்ளும் தந்திரத்தோடு நகர்கிறது.இங்கு தேசத்தின் விடுதலையென்பதற்கான அடிப்படைக் காரணமே மெலினப்பட்டுப்போகிறது.தேசமென்பதற்கான இருப்பே மக்களின் இடப் பெயர்வு-அழிவோடு இல்லாமற் செய்யும் பொறிமுறையோடு இந்திய-இலங்கைத் தந்திரங்கள் புலிகளை-மக்களை அண்மிக்கின்றன.

புலிகள் தமது இயக்க நலனுக்கான போரை முன்னெடுக்கும்போது சிங்கள அரசோ தமிழ் மக்களுக்கான "ஜனநாயகத்தை"க் கோரும் போராட்டத்தைத் தனது நலனோடு சேர்த்துத் தந்திர மாகப் புலிகளை-தமிழர்களை வென்று வருகிறது!இதற்கான சகல வழிகளிலும் தமிழ் மக்களுக்குள்ளிருக்கும் மாற்றுச் சக்திகளின் அனைத்து வளங்களையும் இலங்கை-இந்திய அரசியல் பயன் படுத்தி வருகிறது.தமிழ் மக்களுக்குள் இருக்கும் இத்தகைய சக்திகளைப் பயன்படுத்தித் தமிழ் மக்களின் தேசிய விடுதலையைச் சாதிக்க வக்கற்ற புலிகளால் சகல குறுங்குழுச் சக்திகளும் புலிகளுக்கு எதிரான சக்திகளாக மாற்றப்பட்டுள்ளார்கள்.


தமது இனத்துக்குள் ஜனநாயகப் பண்பை மறுக்கும் புலிகளால் இத்தகைய நேச சக்திகள் அன்னியமாகிப் போகிறார்கள்.புலிகள் தமது இருப்பை இத்தகைய சக்திகள் அசைத்துவிடுமெனக் கருதுவதுகூட பாசிச முனைப்பின் நோய்க்கூறுதான்.இதனால் இலங்கை அரசின் அரச பயங்கரவாதமானது தமிழ் மக்களை நோக்கியல்ல மாறாகப் "புலிப் பயங்கர வாதத்துக்கு" எதிரானதாகச் சித்தரிக்கும் நிலைக்கு சிங்களப் பாசிச அரசின் அடக்குமுறைப் போர் தயாராகிறது.


இலங்கை அரசோடு முன்னமே தமது பதவி நலனுக்காகச் சோரம் போன தமிழ்க் குழுக்கள் இன்றைக்குப் "புலிகளின் பயங்கரவாத" முனைப்பைச் சரியாகப் பயன்படுத்துவதால் அந்த இராஜதந்திரத்துக்குப் பலியாவது உண்மையான மாற்றுச் சக்திகளே.இவர்கள் புலிகளின் ஜனநாயக விரோதத்தை முதன்மைப்படுத்தும் நிலைக்குப் புலிகளின் நடவடிக்கைகள் தலைகால் தெரியாது தாண்டவமாடுவதால் எமது நிரந்தர எதிரியான ஆளும் சிங்களச் சியோனிச அரசு தமிழரின் முதன்மையான எதிரியெனும் நிலையை இழந்து தற்காலிகமாகத் தன்னை மறைக்கின்றது.இதனால் மாற்றுச் சக்திகள் புலிகளை வீழ்த்துவதே முதன்மையான பணியாகச் செயற்படும்போது இது இந்திய-இலங்கை அரசுகளின் நீண்ட நாள் திட்டத்தை வலுவாக்கிவிடுகிறது.


அப்பாவி மக்களைத் தமிழ்பேசும் மக்களென்ற ஒரே காரணத்துக்காக முன்றாம்தர மக்களாக அடக்கியொடுக்கிய இலங்கைச் சிங்கள அரசோ இன்று எமது மக்களின் ஜனநாயவுரிமைக்காகப் போராடுவதாக உலக அரங்கில் பரப்புரை செய்கிறது.இதன் உச்சக்கட்டமாகப் புலிகளின் ஜனநாயக மறுப்பு போராட்டத்துக்கு ஏற்ற கோசமாகவும் மாறுகிறது.இதன் செயற்பாடானது தமிழ்மக்களின் நேச சக்திகளை(மாற்றுக் கருத்தாளர்கள்,மாற்று இனங்கள்) இன்னும் அன்னியப்படுத்தி இலங்கையின் அரச பொறிக்குள் வீழ்த்தித் தமிழர்களின் உரிமைகளுக்கு எதிரான தளத்தில் அவர்களை நிறுத்துகிறது.

இத்தகைய சூழலைத் திட்டமிட்டு ஏற்படுத்திய இலங்கையின் அரச தந்திரமானது மிக நேர்த்தியாகத் தமிழரின் அரசியல் வாழ்வைப் படுகுழியில் தள்ளித் தமிழ்பேசும் மக்களை மீள முடியாத அரசியல் வறுமைக்குள் இட்டுள்ளது.


இந்த இராஜ தந்திமானது தமிழ்பேசும் மக்களின் அனைத்து வளங்களையும் நிர்மூலமாக்கும் பாரிய அழிப்பு அரசியலை முன்னெடுப்பதாக இருக்கிறது.இதன் உள்ளார்ந்த நடவடிக்கையாக அரசியற் கொலைகள் தாராளமாக நடைபெறுகிறது.இதைப் புலியின்பெயரால் செய்யக்கூடிய நிலையில் இலங்கை அரசியல் உள்ளது.மிக மூர்க்கமாக வான் தாக்குதல் மூலமாக மக்களைப்படாதபாடு படுத்தி அவர்களைப் போராட்ட உணர்விலிருந்து அன்னியப்படுத்துகிறது-அவர்களின் உயிர்களைக் கொன்று,வாழ்விடங்களை நிர்மூலமாக்கித் தாங்கொணாத் துன்பத்தைக் கட்டவிழ்து விடுகிறது.இது புலிகளின் அரசியல் திறமையற்ற போருக்கும்,பாசிச நடவடிக்கைகளுக்கும் கிடைத்த பாரிய அரசியல் பின்னடைவு.

இந்தப் பின்னடைவுக்குப் பின்பான காலம் தமிழ்பேசும் மக்களின் குறைந்த பட்ச ஜனநாயகக் கோரிக்கைகளுக்காக அரசியல் செய்யும் தலைமைகளை வலுவாக்கும்போது நமது உண்மையான சுயநிர்ணயக் கோரிக்கை,அதன் வாயிலான அரசியல் வாழ்வு கானல் நீராகப் போவதுதான் உண்மை.


இதனால் புலிகளுக்கு எதுவித நட்டமுமில்லை.

அவர்கள் தம்மிடம் ஒதுங்கிய பாரிய சொத்துக்களை-தமது பினாமிகளுடாக வெளிநாடுகளில் நிதியிட்டு நடாத்தப்படும் பெரு தொழிலகங்களோடு முதலீடு செய்து தப்பித்துக் கொள்வார்கள்,ஆனால், தமிழினத்தின் அரசியல் வாழ்வானது அதே இனவொடுக்குமுறை அரசியலாகவே இலங்கையரசால் முன்னெடுக்கப்பட்டு இந்த மக்கள் காணாமற்போவார்கள்.

இதை சமீப காலமாக நடைபெறும் கொலைகள் மூலம் நாம் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.இனிவரும் யுத்தம் தமிழ் பேசும் மக்களுக்கான விடிவைத் தருவதற்கானதாக இருக்கப் போவதில்லை.


இது தமிழ் பேசும் மக்களின் உண்மாயான சுயநிர்ணயப் போரைத் தமது இயக்க-வர்க்க நலனுக்காகக் கையிலெடுத்துத் தமிழரின் அப்பாவிக் குழந்தைகளைப் படையணியாக்கிய புலிகளுக்கும், அவர்களின் எஜமானர்களுக்குமான பேரத்தில் நமது மக்களின் குழந்தைகளை இழப்பதாகவும் அந்த இழப்பில் அடைய முனையும் அரசியல் "தீர்வு" எழிச்சியடைய முனையும் தமிழ் பேசும் உழைக்கும் வர்க்கத்தைப் வேரோடு பிடுங்கி எறியும் அரசியலைக் கொண்டிருப்பதற்கானவொரு படையணியாக்வும்-அதிகாரத்தைக் கைப்பற்றிய சக்தியாகவும் புலித் தலைமையை விட்டுவைக்க முனையலாம்.

கருணாநந்தன் பரமுவேலன்.

Saturday, December 01, 2007

இது சாணக்கியன் எனும்...

பாரீஸ் ஞானம் சொல்கிறார்:கிழக்கைக் கிழக்காக இருக்க விடுங்கள்!"இது சாணக்கியன் எனும்
கெளடில்யனின் அரசியல்
தந்திர நெறிக்குட்பட்டதாகும்."

வணக்கம் வாசகர்களே,திரு.ஞானம் குறித்துரைக்கும் யாழ் மேலாதிக்கம் மற்றும் பிரதேசரீதீயான முரண்பாடானது சாரம்சத்தில் மிகவும் நிதர்சனமான உண்மையிலிருந்து குறித்துரைக்கப் படுகிறதென்றே நாமும் கருதுகிறோம்.கடந்தகாலத்தில் ஓட்டுக்கட்சி அரசியலில் தமிழர் விடுதலைக்கூட்டணிபோன்ற கட்சி கிழக்குமாகாண எம்.பி. இராசதுரைக்குச் செய்த குழிப்பறிப்புகளும் இதை உறுதிப்படுத்துகின்றன.இதைக் கடந்து,தமிழ் பிரதேசங்களை இலங்கை அரசியலில் வரலாற்றுரீதியாக ஆய்வுக்குட்படுத்த முனையும் ஒரு அரசியல்-பொருளியல் மாணவருக்கு மிக முக்கியமாக உண்மையாகும் இந்தச் சங்கதி எல்லோராலும் ஏற்கப்படவேண்டியது.இந்தப் பிரதேசரீதியான மேலாதிக்க மற்றும் அரசியலில் இரண்டாந்தரப்படுத்தும் போக்கை காலனித்துவத்துக்குப் பின்பு நவகாலனித்துவப் பொருளாதார ஆர்வங்களால்மிக நுணுக்காகக் கவனித்தவர்கள் அமெரிக்காவும்,இந்தியாவுமே.


கிழக்குமாகணத்தைக் கூறு போட்டுத் தமிழர்களைப் பிரித்தெடுத்துத் தனது நோக்கத்தை நிறைவுப்படுத்துவதற்காகவே செல்வநாயகத்தின் தலைமையில் கூட்டணி ஓட்டுக்கட்சியை அமெரிக்க ஏகாதிபத்தியம் நிதியளித்துக்காத்து வந்தது.இத்தகைய கட்சியின் செயற்பாடு இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாடு எந்தப் பொழுதிலும் தீர்ந்துவிடக்கூடாதென்பதில் அன்று மிகக் கவனமாகச் செயற்பட்டது.அதன் பாரம்பரியக் காட்டிக் கொடுத்தல்,குழிப்பறிப்புகளின் நீட்சி இன்றைய ஆனந்தசங்கரியாக நீள்கிறது.அன்று சிங்களக் கட்சிகளோடு செய்த ஒப்பந்தங்கள் முரண்பாடுகள் பின்பு அதையே சாட்டுவைத்து அவற்றைச் செயற்படுத்த முடியாத இனவாதச் செயற்பாடுகள்,மற்றும் தமிழ் பேசும் மக்களுக்குள் மிகக் கேவலமாகப் பிரதேசவாத ஒடுக்குமுறை,சாதிய மற்றும் பெண்ணடிமைத்தனத்தையும் மிக நேர்த்தியாக ஊன்றியபடி அந்நியர்களின் கட்டளைகளையேற்று நம்மைக் கழுத்தறுத்த வரலாறு உண்மையானதாகும். இதை; தொடர்ந்து இருத்தி வைப்பதற்காக இன்றுவரையும் இலங்கை அரசியலில் அமெரிக்கா மிகக் கவனமாகச் செயற்படுகிறது.இத்தகைய பார்வை அதன் வெளியுலக நீண்டகால நலன்களின் அடிப்படையிலானது.


அவ்வகையில் இந்தியாவினது பார்வையும் இத்தகையதே. ஆனால், அது தமிழ்பேசும் மக்களின் பிரச்சனையுள் மிக நெருங்கிய உறவுடைய நாடான இந்தியாவின் கபடத்தனமான பொருளாதார ஆர்வங்கள் இலங்கையைக் கூறுபோட்டுக் காரியமாற்றுவதல்ல.மாறாக, இனங்களின் -பிரதேசங்களின் முரண்பாடுகளைக்கூர்மைப்படுத்தி அந்தந்த இனத்தின் வீரியத்தை-படைப்பாற்றலை முழுமையாக அழித்து அந்தத் தேசத்தை முழுமையான தனது அரசியல் ஆதிக்கத்துக்குள் நிலைப்படுத்துவதே அதன் நோக்கமாகும்.இது சாணக்கியன் எனும் கெளடில்யனின் அரசியல் தந்திர நெறிக்குட்பட்டதாகும்.இந்தியாவின் மிக நெருங்கிய பாதுகாப்பு அரண்களில் ஒன்று இலங்கை என்பது சாணிக்கியனின் அரசியல் தந்திரத்தில் இருந்து நாம் இனம் காணத்தக்கதாகும்.


"சுடுசோற்றை மத்தியில் இருந்து அள்ளியுண்ணாது அதன் கரையிலிருந்து அள்ளித் திணிக்கும்போதே அனைத்தையும் உண்ண முடியுமெனுங்" கருத்து மிக எளியவகைச் சாணாக்கியனின் போராட்ட நெறியில் ஒன்று.


இன்று இந்தியாவுஞ் சரி அல்லது புலிகளுஞ்சரி கையாளும் இராஜ தந்திரம் சாணாக்கியன் வழிப்பட்டதாகும்.


இதுவரை நடக்கும் இலங்கை இனப் போராட்டத்தில் நடைபெறும் அரச தந்திரங்கள்-போராட்ட நெறிகள் யாவும் பாசிசப் போக்குடைய சாணி¡க்கியன் வழிப்பட்டதாகும்.இதை மிக இலகுவாகச் செயற்படுத்தும் இந்தியாவே நமது மக்களின் வாழ்வோடு மிகக் கேவலமாக யுத்தம் மற்றும் மனித விரோத அரசியலைக் கட்டி வளர்த்துவருகிறது.இதற்காக அமெரிக்காவும் மேற்குலகமும் ஒரு புறமும்,இந்தியாவும்,சீனாவும் ஒரு புறமாகக் காய் நகர்த்தி எமது தேசத்தை அந்நிய நலன்களின் வேட்டைக் காடாக்கியுள்ளது.


இதில் மக்களின் நலனை முன்னெடுப்பதாகச் சொல்லும் அந்நிய என்.ஜ:ஓ.க்கள் முதல் சிறு மற்றும் பெரும் ஆயுதக் குழுக்கள் அரசியல் நடுநிலைச் சிந்தனையாளர்கள் இணைத்தலைமை நாடுகள்,சமதானத்துக்கான பேச்சுவார்த்தையில் அனுசாரணையாளர்களெனுங் காட்டுமிராண்டிகள் என்று பற்பல முகமூடிகளில் இந்த நலன்கள் முன்னெடுக்கப் படுகின்றன.
பிரதேச முரண்பாடானது தனியே ஒரு முரண்பாடல்ல.இது தொழிலாளர்களுக்கும் பெரு மூலதன மற்றும் தரகு முதலாளியத்துக்குமான முரண்பாடாகவே மேலெழுகிறது.மக்கள் வாழும் பிரதேசங்களில் நிலவும் பொருளாதார-வேலைவாய்ப்பு ஏற்றதாழ்வான நிலைகளிலிருந்து மேலெழும் சிறப்பான அம்சங்கள் முரண்பாடுகளாக மாற்றப்படும்போது அவை பெண்ணடிமைத்தனமாகவும்,சாதிய ஒடுக்கு முறையாகவும்,பிரதேசவாதமாகவும் மக்கள் சமூகத்தில் மேலெழுகிறது.


இந்த முரண்பாடுகளை மிக நேர்த்தியாக நிலைப்படுத்தி அவைகளைக் கையகப்படுத்தி அவற்றினூடாக அழிப்பு அரசியலையாற்றும் இந்தியாவும் உலக ஏகாதிபத்தியங்களும் இன்றைய இந்த முரண்பாடுகளைத் தமக்குச் சாதகமாகவே பயன்படுத்துகின்றன.இவற்றைக் களைவதற்காகக் காரியமாற்றுவதாகவும்,சாசுபணம் உதவுவதாகவும்,பொருளாதார மேம்பாட்டுக்கான வழிமுறைகளைச் செய்வதுமாக மக்கள் அரங்குக்குள் நுழையும் இத்தகைய சக்திகள் தம்மை அரசுசார நிறுவனங்களாகக் காட்டுவதற்காக நமக்குள் இருக்கும் புத்தி ஜீவிகளைப் பயன்படுத்தவும் தவறவில்லை.இதிலிருந்து நாம் கற்றுக்கொள்வதென்ன?


நம்மைக் கருவறுக்க நமக்குள்ளேயே முரண்பாடுகளை வளர்த்து அவற்றைத் தமது அரசியல் அறுவடைக்காகக் காரியமாற்ற அந்நியர்கள் நமது மக்கள்சார்ந்து இயங்கும் அரசியலை அழித்துள்ளார்கள்.இதனால் நமக்குள் நிலவும் இத்தகைய முரண்பாடுகளைக்கூர்மைப் படுத்துகிறார்கள்.இதன் வாயிலாக நமது மக்களின் ஒருமைப்பாட்டைக் குலைத்துத் தனிமைப்படுத்தித் தம்மைப் பலப்படுத்துகிறார்கள்.இதன் வாயிலாக அதிகாரமையங்களைத் தமது அரசியல் நட்பு சக்திகளாக்கி இலங்கை மக்களின் முதுகில் குத்தி வேட்டையாட ஒரு புலியும் ஆயிரம் சிறுகுழுக்களும்-சிங்கள மக்களை ஏய்த்து அவர்களின் வயிற்றிலடிக்க ஒரு ஜே.வி.பீயும்,இரண்டு பெரும் ஓட்டுக்கட்சிகளும் ஓராயிரம் இனவாதக் கட்சிகளுமாக வளர்த்துத் தமிழர்களின்-மலையகத் தமிழ்மக்களின்,இஸ்லாமியர்களின் உரிமைகளைக் குதறி இலங்கையின் சுய வளர்ச்சியை முடக்கி அதன் அரசியலை மிக இழிவான பாசிச நிலைக்குள் இருத்திவைத்து மக்களின் சகல படைப்பாற்றலையும் கட்டுப்படுத்தித் தமது பொருள்களையும்,அத்தகைய பொருள்களை உற்பத்தி செய்யும் கூலிகளையும் இலங்கையில் பெற்றுக்கொண்டு கூடவே நீண்ட கால நோக்கில் இலங்கையைத் தமது இராணுவக் கேந்திரப் பாதுகாப்பாக்கு அரண் ஆக்குவதில் வெற்றீயீட்டி வருகிறது ஏகாதிபத்தியங்கள்.


இங்கே ஞானம் கொண்டிருக்கும் கருத்துக்கள்,முன் வைக்கும் வாதங்கள் இத்தகைய அரசியல் சூழ்ச்சிகளைப் புறந்தள்ள முடியாது.புலிகளினதும் மற்றும் ஆயுதக்குழுக்களினதும் அரசியலானது எப்பவும் உலக ஒடுக்கு முறையாளர்களோடு தொடர்புடையது.அவர்களினால் வளர்த்து நிதியளித்து வழிகாட்டப்படும் அரசியல் நெறியில் இப்போது ஞானம் முன்வைக்கும் இந்த வாதங்களும் அதுள் மையப்பட்ட அரசியலின் நீட்சியாக இருக்க முடியாது.எனவே,இதை மிக இலகுவாக இனம் கண்டு,தமிழ்பேசும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் அரசியல் இவற்றை நிவர்த்தி செய்யும் போராட்ட வியூகத்தையும் அரசியல் முன்னெடுப்பையும் செய்தாக வேண்டும்.
இன்றைய நிலையில் ஞானத்துக்கும் கருணாவுக்கும் உள்ள கருத்தியல் ஒற்றுமைகளின்(இத்தகைய கருத்தியலானது கிழக்கு மாகாணத்தின் உண்மையான சமூகப் பொருளாதார முரண்பாடுகளாகும்.இதைக் கருணா அந்நியர்களோடு பேரஞ் செய்து தனது மக்களை ஏமாற்றித் தனது வாழ்வை வளப்படுத்தியது வரலாறு.இது இந்தியாவின் பெரும் சூழ்ச்சிகளின் வியூகத்தில் ஒன்று.) நீட்சியாக ஞானத்தின்மீது வைக்கப்படும் குற்றச் சாட்டுக்களுக்காக ஞானம் தன்வரையில் நியாயமாகக் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.இதில் அவரது நாணயமே மக்களின் நம்பகத்தன்மையை வளர்த்துச் செல்லும்.மக்கள் சகலதையும் இழந்து உயிர்வாழ்வதற்கே போராடி வரும் இன்றைய வாழ் சூழலில் அவர்களின் உரிமைகளை அடைவு வைத்து எவரும் தமது அரசியல்-மற்றும் தனிப்பட்ட வாழ்வை வளப்படுத்த முடியாது.அங்ஙனம் ஆற்ற முனையும் இயக்கம்-கட்சி,தனி நபர்கள் மக்களின் எதிரிகள்,இத்தகைய சமூக விரோத அரசியலைத் தொடர்ந்து முன்னெடுக்கும் தரணத்தில் மக்களே இத்தகைய அரசியலைத் தோற்கடிப்பார்கள்.


கீழ்காணும் ஞானத்தின் தன் நிலை விளக்கப் பேட்டியை தேசம் இணையச் சஞ்சிகையின் ஆசிரியர் திரு.ஜெயபாலன் கண்டிருக்கிறார்.ஞானத்தின்மீதான குற்றச் சாட்டுக்களை வாசகர்கள் ஓரளவு புரிந்துகொள்ளவும்,அவர் கொண்டிருக்கும் அரசியலானது "தமிழீழத் தேசியப் பேராட்டம்" தந்த இன்றைய மக்கள் விரோத அரசியலின் விருத்தியென்பதும் கூடவே வரலாற்று ரீதியாகத் தமிழ்ப் பிரதேசங்களில் நிலவிய பொருளாதார ஏற்ற தாழ்வுகளின் அறுவடை என்பதையும் நாம் கவனத்தில் இருத்தியாக வேண்டும் என்பதற்காவும் நாம் மீள்பதிவிடுகிறோம்.


தேசம் சஞ்சிகைக்கு நமது நன்றி.ஞானத்தின் அரசியலில் நமக்கு உடன்பாடு கிஞ்சித்தும் கிடையாது.நாம் இலங்கையில் வாழும் மக்களினது முரண்பாடுகளுக்கு-இனங்களுக்கிடையிலான இன முரண்பாட்டிற்கு இலங்கையில் புரட்சிகரமான முறையில் பூர்ச்சுவா அரசைத் தூக்கியெறிந்து அதன் இடத்தில் தொழிலாள வர்க்கச் சர்வதிகாரத்தை நிறுவி வர்க்கப் பிரிவினையழிந்த மக்கள் சமுதாயத்தைக் காணவே முற்படுகிறோம்.இதுவே இலங்கையில் சாத்தியமான தீர்வாகவும்,வென்றெடுக்கக்கூடியதான போராட்டச் செல் நெறியாகும்.இதைக்கடந்து"தமிழீழம்"என்பது தமிழ்ச் சமுதாயத்திலுள்ள ஆளும் வர்க்கத்தின் நலனுக்கான கோசமென்பதும்,அது ஒருபோதும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் தகமையைக் கொண்டிருக்க முடியாதென்பதும்,புலிகள் பேசும்-செய்யும் போராட்டச் செல் நெறியில் தமிழீழம் எப்போதும் கானல் நீரென்பதற்கு நமது 30 ஆண்டுகளான போராட்டத்தின் இன்றைய அறுவடையே சாட்சி.


தோழமையுடன்,

கருணாநந்தன் பரமுவேலன்

01.12.2007


***".. கிழக்கை கிழக்காக இருக்க விடுங்கள்." வட - கிழக்கு இணைப்பை நிராகரிக்கிறார் M.R.ஸ்ராலின் :த ஜெயபாலன்
நீண்டகாலமாக மாற்று அரசியல், இலக்கியத் தளங்களில் செயற்பட்டுவரும் எம்.ஆர்.ஸ்ராலின்
அவர்கள் «எக்ஸில்» சஞ்சிகையின் ஆசிரியர்களில் ஒருவராக இருந்தவர். முஸ்லிகள்,
மற்றும் தலித் அரசியல் குறித்து கூடிய கவனம் செலுத்தி வருபவர். தலித் சமூக
மேம்பாட்டு முன்னணியின் இயங்கு சக்திகளில் ஒருவராகவும், ஜனநாயகத்துக்கான
கிழக்கிலங்கை முன்னணியின் பிரதான செயற்பாட்டாளராகவும் இருந்துவருகிறார். அண்மையில்
அவர்குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளை ஒட்டியும், கிழக்கு மாகாண அரசியல் தொடர்பாக
அவர் முன்வைத்துவரும் கருத்துக்களை மேலும் புரிந்துகொள்ளும் நோக்கிலும் அவரை
தேசம்நெற் சார்பாக அணுகி அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். அவர் அதற்கு அளித்த
பதில்கள்தேசம்நெற்: அண்மைக்காலமாக உங்களுடைய அரசியல் நிலைப்பாடு மிகவும் சர்ச்சைக்குரியதாக அமைந்து உள்ளது. இது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?ஸ்ராலின்: ஒடுக்கப்படும் மக்கள் நலம் சார்ந்த அரசியல் என்பது எப்போதுமே சர்ச்சைக்குரியதாக இருந்து வருவதே வரலாறு. காரணம் மக்கள் நலம் சார்ந்த அரசியலானது எப்போதுமே அதிகார மையங்களுக்கு எதிரானதாகவும், அதிகார மையங்களை நோக்கி கலகம் செய்வதாகவும், அதிகார மையங்களின் நி~ஸ்டையை குலைப்பதற்கு முயற்சிப்பதாகவுமே காணப்படுகிறது. ஆகவே இதுபோன்ற செயற்பாடுகள் அதிகார மையங்களாலும் அதன் துதிபாடிகளாலும், இவர்களது பிரச்சார வழிமுறைகளினாலும் சர்ச்சைக்குரியதொன்றாகவே பார்க்கப்பட்டும், பரப்பப்பட்டும் வருகின்றது.


இதன் வழியில் நிலவுகின்ற எமது சமூகத்தின் அதிகார படிநிலையை, அதனை கட்டிக்காக்கும் கருத்தியலை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றவன் நான் எனும் வகையில்தான் எனது அரசியல் பயணிக்கின்றது. இதை இன்னும் விளக்கமாகச் சொன்னால் தமிழ் பேசும் சமூகத்தின் ஆதிக்கக் கூறுகள் மதரீதியில் வேறுபட்ட முஸ்லிம்களை ஒடுக்குகின்றது. சாதிய ரீதியில் தாழ்த்தப்பட்ட மக்களை இரண்டாம் பட்சமாக்கியுள்ளது. பிரதேச ரீதியிலான ஏற்றத் தாழ்வுகளை பாதுகாக்கின்றது.


இவை அனைத்துக்கும் அடிப்படையாக அமைந்திருக்கின்ற கருத்தியல் என்னவெனக் கேட்டால் அதுதான் யாழ் - மையவாத - சைவவேளாள கருத்தியலாகும். இக்கருத்தியலில் வழிவந்த தலைமைகளே துரதிஸ்ட வசமாக இதுவரை காலமும் தமிழ் சூழலில் ஆதிக்க சக்திகளாக இருந்து வந்திருக்கிறார்கள், இன்றும் இருக்கிறார்கள். இது அரசியல் ரீதியில் தமிழர் மகாசபையில் தொடங்கி இன்றைய புலிகள் மற்றும் தமிழ் தேசியவாத இயக்கங்கள் வரையிலும் தொடர்கிறது.இந்த நிலையில் சுமார் 100 வருடங்களாக ஒற்றைத் தடத்தில் சேடம் இழுத்துக் கொண்டிருக்கும் தமிழ் தேசியவாதம் எனும் போலி முகம் கொண்ட அந்த யாழ் அதிகார மையமானது முஸ்லிம்கள் மீதான எனது அக்கறையை, தாழ்த்தப்பட்ட தலித் மக்களுக்காக ஒலிக்கும் எனது குரலை, கிழக்குமாகாண மக்களுக்கான எனது தனித்துவப் பார்வையை சர்ச்சைக்குரிய தொன்றாகவே வழிமொழியும், திரிபுபடுத்தும், சேறடிக்கும். இதன் வெளிப்பாடுதான் நீங்கள் கூறுகின்ற சர்ச்சை.


தேசம்நெற்: இலங்கை நடைமுறை அரசியலைப் பொறுத்தவரை உங்களுடைய அரசியல் நிலைப்பாடு என்ன ?

ஸ்ராலின்: முதலாவதாக இலங்கையின் அமைதியை குலைத்து வன்முறைகளுக்கு தூபமிட்டு பயங்காரவாதத்தை உருவாக்கியவர்கள் யார் எனும்போது நம் எல்லோர் பார்வையிலும் சிங்கள இனவாத தலைமைகளையே குற்றம் சுமத்துகின்றோம். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இலங்கையில் இனவாதத்தை வளர்த்தெடுத்ததில் சரிசமபங்கு அல்லது அதற்கும் மேலாக கடந்த கால தமிழ் தலைமைகளுக்கே உண்டு என்றே கருதுகின்றேன். இதற்கு இத்தலைமைகளை வழிநடத்திய யாழ் மையவாத கருத்தியலே பெரும் பங்குவகித்தது.


சர்வசன வாக்குரிமை மசோதாவிலும், சுயபாசைகளுக்கான சட்டமூல விவாதங்களின் போதும், இலவசக் கல்வி வழங்க முன்வந்தபோதும், நெற்காணிச்சட்ட மசோதாவிலும், மற்றும் தேசியமயமாக்கல் போன்ற சட்டமூலங்கள் ஏற்படுத்தப்பட்ட வேளைகளிலும் நமது தலைவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் எடுத்த நிலைப்பாடுகள் அப்பட்டமான மக்கள் விரோதிகளின் நிலைப்பாடுகளே. மலையக மக்களின் வாக்குரிமை பறிப்பிலும் கூட தமிழ் காங்கிரஸின் தலைமை எடுத்த முடிவுகள் படுகேவலமானவை.


இக்கடந்தகால தலைமைகளை வழிநடத்திய அதே கருத்தியலே இன்று புலிகளை பாஸிட்டுக்களாக்கி அவர்களையும் வழிநடத்துகின்றது. அதனால்தான் பொன். இராமநாதன் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீதான காழ்ப்பு இன்றுவரைத் தொடர்கின்றது. ஆறுமுகநாவலர் கொண்டிருந்த சாதிவெறி இன்றுவரைத் தொடர்கிறது.


இந்த நிலையில் இலங்கையில் புலிப்பாசிசம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது அரசியல் வேலைத்திட்டங்களில் முன்னுரிமைக்குரியது. இது வெறும் புலி எதிர்ப்புவாதம் அல்ல. யாழ் மையவாதம் ஆட்சிசெலுத்தும் நூற்றாண்டு காலத் தொடர்ச்சியின் இறுதி உதாரணம் புலிகளோடு முற்றுப்பெற வேண்டும் எனும் கருத்தியல் சார்ந்த நிலைப்பாடு. அதன் பின்னர்தான் வடமாகாணத்திலோ, கிழக்கு மாகாணத்திலோ, இலங்கையின் ஏனைய பிரதேசத்திலோ ஒரு ஜனநாயகச் சூழல் ஏற்பட முடியும்.


இலங்கை வாழ் மக்கள் அரசை நோக்கிய அதிகாரப் பகிர்வுகளையோ, பரவலாக்கங்களையோ ஜனநாயக வழிகளில் போராடிப் பெற்றுக்கொள்ளவும் அதற்கு தலைமை ஏற்க ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினர்களின் (பன்மைத்துவ) தலைமைகளை உருவாக்கிக் கொள்ளவும் ஏதுவான வழிகள் அப்போதுதான் சாத்தியமாகும். தென்னிலங்கையிலும் புலிகளைக் காட்டி இனவாத உணர்வைத் தக்க வைத்துக்கொண்டு சிங்கள மக்களை ஏமாற்றும் பிழைப்புவாத அரசியல்; தலைமைகளும் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அரசியல் குப்பைத் தொட்டிக்குள் சென்றடைய நேரிடும்.


தேசம்நெற்: நீங்கள் மனித உரிமைகள், ஜனநாயகம் பற்றியெல்லாம் பேசுகிறீர்கள் ஆனால் கருணா தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் (ரிஎம்விபி), கிழக்கு மாகாண மக்களின் நலன்களோடு ஒத்துப்போகின்ற புள்ளிகளில் கருணா அமைப்பை ஆதரிப்பதாகக் கூறுகிறீர்கள். ஆனால் ரிஎம்.வி.பி உடன் உங்களைத் தொடர்புபடுத்துவதை தவறு என்கிறீர்கள் ?

ஸ்ராலின்: முதலில் கருணாவின் வெளியேற்றத்தை வெறும் புலிக்குள் ஏற்பட்ட பிளவாக மட்டும் பார்க்கின்ற பார்வையானது ஒரு குறுகிய பார்வை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு பின்னால் நீண்டகாலமாக தமிழ் சமூகத்தினுள் புரையோடிப்போயிருக்கின்ற யாழ்ப்பாணம் - மட்டக்களப்பு என்கின்ற பிரதேச ரீதியிலான வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் இருக்கின்றது. ஆனால் இந்தப் பிரதேச வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு யாழ் மேலாதிக்கம் பற்றிய கருத்துக்களை கருணா எப்போது தெரிவித்தார், எதற்காக அதனைப் பயன்படுத்தினார் என்பதிலெல்லாம் எனக்கும் மாறுபட்ட கருத்துக்கள் உண்டு.


ஆனால் பகிரங்கமாக கருணா புலிகளை நோக்கி எழுப்பிய கேள்விகள் கிழக்கு மக்களின் நலன்கள் சார்ந்தவை. 32 துறைச் செயலாளருக்குமான நியமனங்களை புலிகள் வட பகுதிக்குள்ளே சுருட்டிக்கொண்டதென்பது பொய்யானதொரு தகவல் அல்ல. புலிகளது அந்த நியமனங்களில் காலா காலமாக தொடர்ந்து வருகின்ற யாழ் மேலாதிக்கம் இன்னுமொருமுறை பட்டவர்த்தனமானது. அந்த மேலாதிக்கத்திற்கு எதிரான கேள்விகள் கிழக்கு மக்களுடைய ஆழ்மனங்களின் பிரதிபலிப்பாகும்.

அந்த வகையில் கருணாவின் பிளவுடன் வெளிக்கிளம்பிய ரி.எம்.வி.பி. என்பது ஒடுக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களின் குரல்களில் இருந்து எழும்பிய அரசியல் உருவாக்கமாகும். தனது பிளவின் போது வீரகேசரிக்கு பேட்டி அளித்த கருணா தமிழீழம் எனும் கோதாவில் யாழ்ப்பாணத்தின் 90 வீதமான நலன்களே மறைந்திருந்தன என்றார். இந்த கருத்தாக்கத்தைத்தான் நான் சுமார் 1990 ஆம் ஆண்டுகளில் இருந்தே அடையாளம் கண்டு பேசியும் எழுதியும் வருகின்றேன். நான் இதை எழுத்து, உரையாடல், விவாதம் என்று கருத்தியல் ரீதியில் முன்வைத்து வருபவன். தமிழ் சமூகத்தில் வெளிக்கிளம்புகின்ற அரசியல் போக்குகளை ஒரு சமூகவியல் பார்வையில் ஆராய்ந்து ஒரு கருத்தியல் தளத்தில் செயற்பட்டு வருபவன்.

ஆனால் கருணாவோ இதனை ரீ.எம்.வி.பி.யின் உருவாக்கத்தின் ஊடாக நடைமுறை வேலைத்திட்டம் சார்ந்த களத்தில் முன்னெடுத்தார். இந்த கோட்பாட்டு ரீதியான ஒத்திசைவு என்பது இயல்பானது. இதற்காக என்னை ரி.எம்.வி.பி. எனும் அமைப்புடன் சம்பந்தப்படுத்துவது பொருத்தமற்றது. ஏனென்றால் கிழக்கு மாகாண மக்கள் நலன்சார்ந்து செயற்படுவதற்குரிய உரிமை கருணாவுக்கு மட்டுமோ, ரி.எம்.வி.பி. இற்கு மட்டுமோ தாரை வார்க்கப்பட்டு கொடுக்கப்பட்டதொன்றல்ல. அந்த உரிமை எல்லோருக்கும் உண்டு.


ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி என்பது 2002 இல் கிழக்கு மாகாணத்தில் புலிகளால் பிள்ளைபிடி நிகழ்தப்பட்டுக் கொண்டிருந்த வேளைகளில் எங்களால் அதற்கெதிராக உருவாக்கப்பட்ட ரகசிய பிரச்சார இயக்கமாகும். அப்போது கருணா புலிகளில் இருந்து வெளியேறி இருக்கவில்லை. அதன் அடிப்படையில்தான் எனது செயற்பாடுகள் எனது வழியில் அமைந்திருக்கின்றன.

நீங்கள் இப்படி கேட்கும் போது ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். வடக்கு கிழக்கு இணைப்பை புலிகள் தங்கள் உயிர் மூச்சாகக் கொண்டுள்ளார்கள் என்கிறார்கள். அதேவேளை எல்லாவிதமான தமிழ் தேசியவாத இயக்கங்களும் இந்த இணைப்பு விடயத்தில் புலிகள் கொண்டுள்ள கொள்கையையே பிரகடனப்படுத்துகிறார்கள். அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகிக்கும் ஈ.பி.டி.பி. யினர் கூட என்றும் பிரியாத வடக்கு கிழக்கு என்று உறுதியாக இருக்கின்றார்கள். இந்த வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் புலிகளின் அரசியலுடன் எல்லா இயக்கங்களுக்கும் இருக்கின்ற ஒற்றுமையை பார்த்தீர்களா?

மேலும் எந்த வித இயக்கங்களையும் சாராது அமைப்புகளுக்கு வெளியே இருக்கக் கூடிய சுதந்திரமான ஊடகவியலாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள், ஜனநாயக வாதிகள், அரசியல் ஆய்வாளர்கள், புத்திஜீவிகள் போன்ற எல்லோரும் இந்த இயக்கங்களுடன் தமிழ் மக்களின் உரிமை சார்ந்து ஒத்திசைவாகத்தானே செயற்படுகின்றார்கள். அதற்காக இவர்களை எல்லாம் எல்.ரி.ரி.ஈ என்றோ, ஈ.பி.டி.பி. என்றோ, புளொட் என்றோ கட்சி முத்திரை குத்த முடியுமா? அப்படி கட்சிமுத்திரை குத்துவது எவ்வளவு கேலிக்கூத்தானதாக இருக்க முடியும். புலிகளால் முன்வைக்கப்படும் அரசியல் கோரிக்கையுடன் (தமிழ்த்தேசியம்) இவர்களுக்கு எல்லாம் என்ன ஒத்திசைவு உண்டோ அந்த ஒத்திசைவுதான் கிழக்கு மாகாண மக்களின் நலன்களுடன் ரி.எம்.வி.பி. தன்னை அடையாளம் காட்டும் புள்ளிகளில் எனக்கும் உண்டு.


ஆகவேதான் கிழக்கு மக்களின் நலன்களுக்காக குரல் கொடுக்கின்ற என்னை ரி.எம்.வி.பி. சாயம் புசிப்பார்ப்பது உங்கள் பார்வைக் கோளாறு என்கின்றேன். சமூகம் சார்ந்த அரசியல் என்பதை கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும் மட்டுமே உரியதாக கருதுகின்ற வெகுளித்தனமான சமூகமாக தமிழ் சமூகம் இன்னும் இருப்பதும், சுதந்திரமான அரசியலாளர்களைக் கொண்டிருக்கும் பாரம்பரியமிக்க ஒரு சிவில் சமூகமான தமிழ் சமூகம் இன்னும் வளர்ச்சி அடையாதிருப்பதுமே இப்பார்வை கோளறுக்கு காரணம் என்பேன். என்ன செய்வது இன்னுமொரு பகுத்தறிவு பெரியாருக்காக எல்லோரும் காத்திருப்போம்.


தேசம்நெற்: இலங்கை அரசின் உளவுத்துறையின் கீழ் இயங்கும் ரி.எம்.வி.பி கிழக்கு மாகாண மக்கள் மீது என்ன அக்கறை கொண்டுள்ளது என்று நீங்கள் கருதுகிறீர்கள் ?


ஸ்ராலின்: முதலில் ரி.எம்.வி.பி. இலங்கை அரசின் உளவுத்துறையின் கீழ் இயங்குகிறது எனும் தீர்க்கமான முடிவுகளை கைவசம் வைத்துக்கொண்டே இக்கேள்விகளைக் கேட்கின்றீர்கள். ஆனால் இக்கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அல்லது குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய பல்வேறு அமைப்புகள் தமிழ் சூழலில் ஜனநாயக முகத்துடன் வலம் வருகின்றன. ஆனால் அவர்களை எல்லாம் நோக்கி நீங்கள் எப்போதும் இதுபோன்ற கேள்விகளை எழுப்புவதில்லை.இலங்கை உளவுத்துறையுடன் மட்டுமல்ல இந்திய உளவுத்துறையுடன் கூட பல இயக்கங்கள் கொண்டுள்ள உறவுகள் அம்பலமானவை. ஏன் புலிகள் கூட தங்களின் இருப்பை பாதுகாத்துக் கொள்ள இத்தகைய அணுகுமுறைகளை கடந்து போனவர்கள் தான் என்பது வரலாறு.இன்றைய ஜனநாயக வழிக்குத் திரும்பிய தமிழ் தலைவர்களும், அகிம்சாவாதத் தமிழ் தலைவர்களும் அடங்கலாக எல்லா தமிழ் தலைமைகளுக்கும் புலிகளிடம் இருந்து பாதுகாப்பு கொடுப்பது இலங்கை உளவுத்துறைதான். ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுக்கள் இன்று நாலா புறமும் இருந்து ரி.எம்.வி.பி.யை மட்டுமே நோக்கி வருவது யாழ்ப்பாண ஆதிக்க மனோபாவத்துடனான அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதை இவ்வேளையில் பகிரங்கப்படுத்த விரும்புகிறேன்.இதற்கு அப்பால் ரி.எம்.வி.பி. இலங்கை அரசின் உளவுத்துறையின் கீழ் வேலைசெய்கின்றதா? ரி.பி.சி. இலங்கை உளவுத்துறையின் பண உதவியுடன் இயங்குகின்றதா? ஈ.என்.டி.எல்.எவ். இந்திய உளவுத்துறையின் கீழ் இயங்குகின்றதா? என்பது பற்றிய கேள்விகள் அந்தந்த அமைப்புகளின் நடைமுறை, கட்சி வேலைத்திட்டங்களை நோக்கி எழவேண்டியவை.

நான் தமிழ் சூழலில் கட்டுண்டு கிடக்கும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள், அவற்றை ஆளும் ஆதிக்க கருத்தியல்கள், தமிழ் சமூகத்தின் அசைவியக்கமானது அக்கருத்தியலின் மீது ஏற்படுத்தி வரும் வெடிப்புகள் குறித்து கோட்பாட்டு ரீதியான ஆய்வு வேலைத்திட்டங்களைக் கொண்டவன். கட்சி வாதங்களுக்கும், இயக்க வாதங்களுக்கும் அப்பால் பட்டவன்.

அந்த வகையில் கருணாவினுடைய பிளவும் அதனூடாக உருவாகிய ரி.எம்.வி.பி. யினுடைய அரசியல் உருவாக்கமும் பல்லினச் சூழல் மிகுந்த கிழக்கு மாகாணத்தின் சமூக பொருளாதார அரசியல் காரணிகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக நான் கருதுகின்றேன்.


1) யாழ்ப்பாண ஆதிக்க சக்திகளின் நலன்களில் இருந்து உருவாகிய தமிழ் தேசியம் எனும் பெருங்கொடிய கதையாடலை கிழக்கு மாகாண மக்களிடம் அம்பலப்படுத்தி இருக்கின்றது. இந்த எழுச்சியானது கருத்தியல் ரீதியில் தமிழ் அரசியல் போக்கு அடைந்திருக்கும் வளர்ச்சிக்கட்டம் என நான் கருதுகின்றேன்.2) ஆயிரமாண்டுகளுக்கு மேலாக தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களிடையே பேணப்பட்டு வந்த சமூக நல்லிணக்கம் குலைக்கப்படுவதற்கு காரணமாய் இருந்தது கிழக்கில் காலடி எடுத்து வைத்த தமிழ் தேசியத்தின் வரவேயாகும். ஆனால் கருணா முன்மொழிந்த கிழக்குத் தேசியமானது இன ஐக்கியத்தையும், பரஸ்பர சகிப்புத் தன்மையையும் வளர்த்தெடுக்க வேண்டிய பல்லினச் சூழலில் யதார்த்த நிலையை புரிய வைக்கத் தொடங்கியுள்ளது.


3) கிழக்கு மாகாண மக்களின் அனுமதியின்றி ஜனநாயக விரோதமான முறையில் 20 வருட காலமாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான இணைப்பு நீக்கப்பட்டு உள்ளது. இதனை கிழக்கு மாகாண மக்களின் பறிக்கப்பட்டு இருந்த இறைமையானது மீளக் கையளிக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாகவே நான் கருதுகின்றேன்.


4) இவை எல்லாவற்றுக்கும் மேலாக எந்தவொரு சக்தியாலும் அசைக்க முடியாத தலைமையெனும் பிரபாகரனின் கீழ் இயங்கிய பாசிசப்படைகள் இன்று கிழக்கு மாகாணத்தில் இருந்து துரத்தியடிக்கப்பட்டு இருக்கிறார்கள்.இது வெறும் கேணல் கருணா எனும் இராணுவ வித்தகனுடைய பலத்தினால் மட்டும் சாத்தியமானதல்ல. கருணா முன்வைத்த தமிழ் தேசிய நிராகரிப்பும் கிழக்கின் சுயநிர்ணயம் எனும் புதியதொரு கருத்தாக்கம் கிழக்கு மாகாண மக்களிடையே ஏற்படுத்திய அரசியல் எழுச்சியினாலுமே சாத்தியமானதொன்றாகும்.

இவைகளெல்லாம் கிழக்கு மாகாண மக்களின் அக்கறை சார்ந்த விடயங்கள் இல்லை என நீங்கள் கூற முடியுமா?


தேசம்நெற்: இறுதியாக இடம்பெற்ற இலக்கியச் சந்திப்பில் கூட நீங்கள் ரி.எம்.வி..பிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்ற முற்பட்டு சலசலப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்படுகிறதே ?ஸ்ராலின்: இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் வைப்பவர்கள் யார்? அவர்களது மூல நோக்கங்கள் என்ன? முகவரி இல்லாத கேள்விகளை தயவுசெய்து நீங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். கண்முன்னே நடந்த இலக்கியச் சந்திப்பு பற்றி இதுபோன்ற பொய்களை புழுகுமூட்டைகளை காவித்திரிகின்ற மர்ம நபர்கள் உங்கள் கேள்விகளின் உந்துசக்தியாக இருப்பது உங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் மீதான நம்பகத்தன்மையை பாதிக்கின்ற விடயம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தகவல்களை நாலாபுறமும் விசாரித்த பின்னரே அவற்றை குற்றச்சாட்டுகளாக அவைக்கு கொண்டுவர வேண்டும்.அந்த நிகழ்வை தலைமையேற்று நடத்திய பரா மாஸ்ரர் அவர்களிடமோ, அங்கு கலந்துகொண்ட 100 மேற்பட்ட பார்வையாளர்களில் சில 10 பேர்களிடமோ நீங்கள் விசாரித்திருக்க முடியும். இருந்தாலும் கேள்வி என்று வந்த பின்னர் பதிலிறுக்க வேண்டிய பொறுப்பு எனக்குண்டு என்பதால் அங்கே நடந்த விடயத்தை ஒப்புவிக்கின்றேன்.


இலக்கியச் சந்திப்பில் போடப்பட்ட தலைப்பின்படி தீர்வுத்திட்டம் பற்றிய ஒரு பேச்சு திரு.சிவலிங்கம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதன்படி அவரது பேச்சு திஸ்ஸவிதாரண யோசனைகளின் அடிப்படையில் பல நல்ல அம்சங்கள் தமிழ் மக்களுக்கு இருப்பதை முன்னிறுத்தி அமைந்திருந்தது. அதையொட்டி திஸ்ஸவிதாரண யோசனைகளை இலக்கியச் சந்திப்பு ஆதரித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்கின்ற முன்மொழிவை அங்கு சிலர் ஆதரித்தனர்.

இந்த நிலையில் மேற்படி யோசனைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை மேலும் சிலர் சுட்டிக்காட்டினர். குறிப்பாக முஸ்லிம்களின் தனித்துவம் பற்றிய சில பார்வைகளை தொட்டுக்காட்டி பசீர் அவர்களும், தலித் மக்களுக்கு விசேட சிறப்புரிமைகள் வழங்க வேண்டிய திருத்தத்தை பிரான்ஸ் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரும், பெண்களின் நிலை தீர்வுத்திட்டங்களில் கவனம் கொள்ளப்படுவதில்லை என்பதால் அதுகுறித்த உபசரத்துக்களை பெண்களின் சார்பில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று உமா அவர்களும் குரல் எழுப்பினர். இதே போன்றுதான் வடக்கு, கிழக்கு இணைப்பு அல்லது பிரிப்பு தொடர்பாக திஸ்ஸவிதாரண யோசனைகளில் கிழக்கில் இருந்து வெளிவரும் எண்ணங்களும், ஆலோசனைகளும் கருத்தில் எடுக்கப்பட வேண்டும் என நானும் முன்மொழிந்தேன்.

அதாவது கிழக்கில் இருந்து மூன்று அமைப்புக்கள் இதுவரை தீர்வுத்திட்டம் குறித்த தமது கருத்துக்களை வெளியிட்டு இருப்பதை சுட்டிக்காட்டினேன். ரி.எம்.வி.பி. எனும் அமைப்பினது தீர்வுத்திட்டம் திஸ்ஸவிதாரணவிடம் நேரடியாக கையளிக்கப்பட்டு இருந்தது. கிழக்கு முஸ்லிம் குழுவினது தீர்வுத்திட்டம் ஊடகங்களில் பகிரங்கப்படுத்தப்பட்டது. அதே போன்று ஜனநாயகத்திற்கான கிழக்கிலங்கை முன்னணியினராகிய நாங்கள் கடந்த ஆண்டு ஸ்ருற்காட்டில் கிழக்கின் சுயநிர்ணயம் எனும் விரிவான தலைப்பில் ஆவணப்படுத்திய முடிவுகள் போன்றவை முக்கியமானவையாகும். கிழக்கில் இருந்து வெளியான குரல்கள் எனும் அடிப்படையில் திஸ்ஸவிதாரணவின் தீர்வுகளுடன் இணைந்து கிழக்கு மாகாண இணைப்பு பற்றிய விடயத்தில் முடிவுகளை எடுப்பதில் மேற்படி மூன்று அமைப்புகளினதும் ஆலோசனைகள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் என்று கூறினேன். இதுதான் நடந்தது.

முஸ்லிம்கள் சார்பிலும், தலித் மக்கள் சார்பிலும் பெண்கள் சார்பிலும், கிழக்கிலங்கை மக்கள் சார்பிலும் சில விசேட கவனங்களை கோருகின்ற எங்களது திருத்தங்கள் திஸ்ஸவிதாரண யோசனைகளை தீhமானமாக நிறைவேற்ற முயன்றவர்களுக்கு உவப்பளிக்கவில்லை. விவாதங்களை எதிர்கொள்ளாமலும் முன்திட்டமிடப்பட்ட வகையிலும் «திஸ்ஸவிதாரண யோசனைகளை ஏகமனதாக இலக்கியச் சந்திப்பு தீர்மானித்ததென்று» அறிக்கைவிடத் தயாராய் இருந்தவர்கள் எங்கள் கருத்துக்களை முதலில் நிராகரித்தனர். பின்னர் கவனத்தில் கொள்வதாக கூற முயன்றனர். இறுதியில் தீர்மானம் நிறைவேற்றும் முயற்சியைக் கைவிட்டு பின்வாங்கினர். இதுதான் நடந்தது.

எங்கேயோ யாராலோ திட்டமிடப்படுகின்ற, யாரினதோ அரசியல் அட்டவணைகளுக்காக வேலை செய்கின்ற முன்முடிவுகளுடன் வந்தவர்களுக்கு இலக்கியச் சந்திப்பின் விவாதக் கலாசாரத்திற்கும் பன்முகப் பார்வைகளைக் கொண்ட உரையாடல் பாரம்பரியங்களுக்கும் முகம்கொடுக்க முடியாமல் போனது என்பதுதான் அந்த நிகழ்வுகளின் சாரம். மற்றையோரின் கருத்துகளுக்காக உயிரைக்கொடுக்க வேண்டாம், மற்றையோரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவும் வேண்டாம், மற்றையோர் கருத்துச் சொல்லும் உரிமை அவர்களுக்கு உண்டு எனும் குறைந்தபட்ச முதலாளித்துவ ஜனநாயக பண்புகள் கூட அற்ற வக்கிரமான மனப்பான்மையில் இருந்துதான் நான் ரி.எம்.வி..பி. இற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்ற முயன்றதாக பொய்ப் பிரச்சாரங்கள் முளைத்தெழுகின்றது.

தேசம்நெற்: கருணாவுடைய பிளவின் ஆரம்பத்தில் ரிபிசி வானொலி கருணாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டிருந்தது. அப்போது நீங்களும் குமாரதுரை போன்றவர்களும் ரிபிசிக்கு உங்கள் பங்களிப்பை வழங்கி வந்தீர்கள். பிற்காலங்களில் கருணாவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளால் தாங்கள் கருணாவில் இருந்து அந்நியமானதாக ராம்ராஜ் கூறுகிறார். ரிபிசி உடனான உங்கள் முரண்பாட்டிற்கு என்ன காரணம் ?

ஸ்ராலின்: ரி.பி.சி. என்பது பாசிசத்திற்கெதிரான ஒரு ஜனநாயக குரல்களின் சங்கமிப்பு என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் எங்களின் பங்களிப்பு இருந்தது. இது எந்த ஒரு இயக்கத்தினதோ, கட்சியினதோ கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே நாங்கள் கருதியிருந்தோம். ஆனால் காலப்போக்கில் ரி.பி.சி.யின் பணிப்பாளராகிய ராம்ராஜ் அவர்கள் சார்ந்த கட்சியின் (ஈ.என்.டி.எல்.எவ்) மறைமுகமான கட்டுப்பாட்டுக்குள் ரி.பி.சி. இழுத்து செல்லப்படுவதையும், ரி.பி.சி.யில் பங்கெடுத்து வந்த ஜனநாய சக்திகளின் செல்வாக்கு ஈ.என்.டி.எல்.எவ். இன் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுவதையும் நாங்கள் அவதானித்தோம்.

அது மட்டுமல்ல ஒரு புறத்தில் ரி.பி.சி. யில் பாசிச எதிர்ப்புப் பிரச்சாரம் பண்ணிக்கொண்டு மறுபுறத்தில் தீப்பொறி என்கின்ற இணையத்தளத்தில் பாசிச எதிர்பாளர்களை கொச்சைப்படுத்தி, புலிகளின் நிதர்சனத்தின் தோழமை இணையத்தளமாக சுழியோடும் சுத்துமாத்து அரசியலையும் ரி.பி.சி.யின் பணிப்பாளராய் இருக்கின்ற ராம்ராஜ் அவர்கள் அரங்கேற்றி வருகின்றார். இந்த நிலையில் ரி.பி.சி. ஆனது யாருடைய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இயங்குகின்றது, எதைநோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்கின்ற கேள்விகள் இன்று எங்களிடம் மட்டுமல்ல பல தரப்பினரிடமும் எழும்பியுள்ளது. இதன் காரணமாகத்தான் ரி.பி.சி. மீதான பொதுமக்களின் நம்பகத்தன்மையும் இன்று பாரிய சரிவு கண்டிருக்கின்றது.

இந்த நிலையில் நீங்கள் ரி.பி.சி. யினுடைய தொடர்பை நிறுத்திக் கொண்டவர்களாக என்னையும் குமாரதுரை அவர்களையும் மட்டுமே சுட்டிக்காட்டி இருப்பது, எங்களது வெளியேற்றத்தை, ரி.பி.சி. யுடனான எங்களது முரண்பாட்டை கருணா பிரச்சனையுடன் சம்பந்தப்படுத்திப் பார்க்கின்ற தவறான பார்வையில் இருந்தே எழுகின்றது. ஆனால் இன்று ரிபி.சி. யின் முதுகெலும்பான அரசியல் விவாதங்களில் பங்கெடுத்து வந்த 90 வீதமானவர்கள் ரி.பி.சி. யுடன் முரண்பட்டு வெளியேறி இருப்பதை இட்டு நீங்கள் கேள்வி கேட்கவேண்டும்.


ரி.பி.சி யில் அரசியல் ஆய்வாளர்களாக கடமையாற்றிய ஜெயதேவன், பசிர், விவேகானந்தன் போன்றோரும், அரசியல் விவாதங்களில் பங்கெடுத்த கார்த்திக், நிமோ, சோலைய+ரான், ஜெமினி, கவி, யோகரெட்ணம், நவம், மற்றும் விஜி, சுதா …. என்று ஏராளமானோர் விலகிவருவதன் (விழித்துக்கொண்டதன்) காரணங்களை நீங்கள் தேடுங்கள். இவர்களோடெல்லாம் ஏற்பட்ட முரண்பாட்டுக்கு ரி.பி.சி. யின் பணிப்பாளராசிய ராம்ராஜ் அவர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்?தேசம்நெற்: நீங்கள் கருணாவினுடைய நிதி பரிமாற்றங்களில் ஈடுபட்டு உள்ளதாகவும் அதிலிருந்து பெறப்பட்ட பணத்தில் வீடு வாங்கி உள்ளதாகவும் குற்றச்சாட்டப்பட்டு உள்ளது. உங்களுடைய மறுப்பறிக்கையில் நீங்கள் அதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. (நீங்கள் வாழும் வீடும் தற்போது வாங்கியதாகச் சொல்லப்பட்ட வீடும்) இக்குற்றச்சாட்டுப் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?ஸ்ராலின்: கடந்த மாதம் 20 ஆம் திகதி நீங்கள் பாரிஸ் தலித் மாநாட்டுக்கு வந்திருந்தபோது இக்குற்றச்சாட்டு பற்றிய உங்கள் வினாவலுக்கு எனது தன்னிலை விளக்கத்தை அளித்திருந்தேன். «கருணாவின் வருகைக்கும், நிதி பரிமாற்றங்களுக்கும், எனக்கும் சம்பந்தமில்லை.» - ஸ்ராலின் மறுப்பு எனத் தலைப்பிட்டு அந்த செய்தியை தேசம் நெற் இணையத்தளத்தில் பிரசுரித்திருந்தீர்கள். அதன் பின்னரும் மேற்படி குற்றச்சாட்டுகளை முகவரி இல்லாத இணையத்தளங்கள் நிறுத்திக் கொள்ளாததன் காரணமாக ஒரு பகிரங்க மறுப்பை நானே முன்வந்தும் தெரிவித்திருந்தேன். «என்மீதான சேறடிப்புகளையும், குற்றச்சாட்டுகளையும் கடுமையாக மறுக்கிறேன்.» என்ற தலைப்பில் 26 ஒக்டோபர் மாதம் தேனி, விழிப்பு போன்ற இணையத்தளங்களில் அந்த மறுப்பு பிரசுரமாகியிருந்தது. அதனையும் உங்களது இணையத்தளத்தில் நீங்கள் மீள வெளியிட்டிருந்தீர்கள்.
இந்த எனது பகிரங்கமான மறுப்பில் பக்கம் பக்கமாக நான் எழுதியிருந்த விளக்கங்களின் இறுதியில் மீண்டுமொருமுறை எனது மறுப்பை தெளிவுபடுத்தி «என் மீதான இந்த சேறு ப+சல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை, அநீதியானவை என்று கூறி இவை அனைத்தையும் கடுமையாக மறுக்கின்றேன்.» என முடித்திருந்தேன்.

இவையனைத்துக்கும் பிறகு இந்தக் கேள்வியை மீண்டும் மீண்டும் எதற்காக எனை நோக்கி எழுப்புகின்றீர்கள்? மடியிலே கனமில்லாதவன் யாருக்கும் மண்டியிடத் தேவையில்லை என்பதற்கிணங்க அணுவளவு கூட உண்மையற்ற குற்றச்சாட்டுக்களுக்காக இத்தனை மறுப்புகளுக்கும் மேலாக நான் எனது தனிப்பட்ட வாழ்வு பற்றிய சுயவிபரங்களை விபரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை எனது சுயமரியாதைக்கு இழுக்காகக் கருதுகின்றேன்.
மாறாக குற்றச்சாட்டுகளை பரப்புகின்றவர்கள் தங்கள் சொந்த முகங்களுடன் வெளியே வரட்டும். அவர்கள் முகம் அற்;ற மனிதர்களாக அலைவதிலேயே உங்களுக்கு புரியவில்லையா?


இவையெல்லாம் ஆதாரமில்லாத பொறுப்பற்ற சேறடிப்புகள் என்று. இது வெறும் சேறடிப்பு மட்டுமல்ல இதில் மறைந்திருக்கின்ற சூழ்சியை நான் அம்பலப்படுத்தியே ஆக வேண்டும். நான் கொண்டுள்ள அரசியல் கருத்துகளுக்கு முகம் கொடுக்க முடியாத கோழைகள் என் கருத்துக்களை மட்டுமல்ல என்னையும் அழிப்பதற்கான ஒரு சதித்திட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். நேரடியாகச் சொன்னால் இது ஒரு கொலை முயற்சியாகும்.
கருணாவின் மீது புலிகள் கொண்டுள்ள பழி தீர்க்கும் படலத்தை லாவகமாக எனை நோக்கி திருப்பிவிட்டு புலிகளைக் கொண்டு என்னைக் கொலை செய்வதற்கான ஒரு திட்டமிட்ட சதி அரங்கேறிக்கொண்டிருப்பது என்பதையிட்டு ஒரு பொறுப்பு மிக்க பத்திரிகைத் துறையில் ஈடுபடுபவர்கள் எனும் வகையில், நீங்கள் கவனம் கொள்ள வேண்டும். எனது சொந்த விலாசத்தை எனது முழுப்பெயரை, இலங்கையில், எனது சொந்த முகவரியை, எனது நிழற்படத்தை தயார் செய்து போலிக் குற்றச்சாட்டுக்களுடன் புலிகளின் கொலைக் கருவியான நிதர்சனத்துக்கு அனுப்புபவன் கொலைவெறி கொண்டலைபவன் அன்றி வேறென்ன. இதுபற்றி கள்ள மௌனம் காத்துக்கொண்டிருக்கின்ற புகலிடத்து ஜனநாயக முகங்களையும் நீங்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

ஆகவே இப்போது ஒரு ஊடகம் எனும் வகையில் நான் உங்கடாக ஒரு வேண்டுகோளை விடுக்கின்றேன். என்மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம் என்ன?, குற்றங்களைச் சுமத்தியவர்கள் அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடப்பாட்டில் இருந்து தப்ப முடியாது. அதே போன்று அந்த ஆதாரங்களைப் பெற்று பகிரங்கப்படுத்த வேண்டிய பொறுப்பு இந்த கேள்விகளுடன் என்னை அணுகியவர்கள் எனும் வகையில் உங்களுக்கும் உரியது.


என்மீது நிதிக்குற்றச்சாட்டு செய்திகளைப் பரப்பிய அந்த முகவரி இல்லாத மர்ம நபர்கள் அதற்குரிய ஆதாரங்களை உடனடியாக வெளியிடுமாறு கோருகின்றேன். ஆதாரங்களை வெளியிட தாமதிக்கின்ற ஒவ்வொரு பொழுதுகளும் அவர்கள் என்மீதான கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் என்கின்ற எனது குற்றச்சாட்டு வலுவடைந்து கொண்டே இருக்கும். மாறாக தமது அநாகரிகமான செயற்பாடுகளை உணர்ந்து எனக்கு அநீதி இழைத்தமைக்காக இவர்கள் பகிரங்க மன்னிப்பு கோரியே ஆகவேண்டும்.தேசம்நெற்: உங்கள் மறுப்பறிக்கையில் நீங்கள் ஒரு பிரதேசவாதியல்ல என்று குறிப்பிடுகிறீர்கள். ஆனால் வடக்கு – கிழக்கு இணைப்பை நீங்கள் கடுமையாக எதிர்க்கிறீர்கள். வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட வேண்டும் என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தீர்கள். இதில் நீங்;கள் வைக்கும் நியாயம் என்ன ?ஸ்ராலின்: ஆம் நான் நிட்சயமாக பிரதேசவாதியல்ல. ஒரு பிரதேசத்தின் பெயரால் மற்றொரு பிரதேசத்தின் மீது ஆதிக்கம் செலுத்த முனைவதுதான் பிரதேச வாதம். கிழக்கு மாகாணமானது ஒருபோதும் யாரையும் அடிமை கொண்ட வரலாறோ, மேலாதிக்கம் செலுத்திய வரலாறோ அற்றதொன்றாகும். நாங்கள் எங்கள் பிரதேசத்தின் நிர்வாகம் எங்களிடம் இருக்க வேண்டும் என கோருவது எங்களது பிரதேச நலன் சம்பந்தப்பட்ட விடயம். எங்களது மக்களின் அரசியல் அபிலாசைகள் சம்பந்தப்பட்ட விடயம். அதைத்தாண்டி வேறு ஒரு பிரதேசத்தை தேடி அதை ஆக்கிரமிக்க, அதன் மேல் ஆட்சிசெலுத்த முனையும் போதுதான் அது பிரதேசவாதம் ஆகின்றது.
மட்டக்களப்பில் வாழுகின்ற யாழ்ப்பாணத்து வியாபாரிகளை மட்டக்களப்பை விட்டு துரத்த முயன்றால், அது அப்பட்டமான பிரதேசவாதம். தமது பிரதேசத்தில் வாழும் மற்றய பிரதேசத்து மக்களை இரண்டாம் தர பிரசைகளாக நடாத்த முனைவது நிட்சயம் பிரதேச வாதமாகத்தான் இருக்க முடியும்.

அதை விடுத்து நாங்கள் கிழக்குமாகாண மக்கள் தனிமாகாண, தனிநிர்வாக அந்தஸ்துக்குரியவர்கள் என குரலெழுப்புவது எங்களது பிரதேச நலன் சார்ந்த விடயம். இன்று தமிழர் தரப்பு அரசியல் வாதிகள் எல்லோரும் தமிழர்களுக்காக தனிநிர்வாகம் கோருவது என்பது இனவாதமாகுமா? இனத்தின் பெயரில் உரிமை கோருவது என்பதால் அது இனவாதம் ஆகிவிட முடியாது. ஆனால் தமிழர்களின் பெயரில் உரிமை கோரிக்கொண்டு தமிழர்களோடு வாழும் சிங்களவர்களையும், முஸ்லிம்களையும் அகற்றிவிட்டு தனித்தமிழ் நிலமாக வடகிழக்கை ஆக்க முனைவதுதான் அப்பட்டமான இனவாதமாகும்.

ஆகவே தமிழர்களது அதிகாரப் பகிர்வு கோரிக்கையில் இருக்கின்ற நியாயங்கள் தமிழர்களது சுயநிர்ணயம் சார்ந்த விடயம் என்கின்றோம் அல்லவா? அதைபோன்றுதான் கிழக்கு மாகாணம் தனித்து இயங்க வேண்டும் என்பதும் கிழக்கு மாகாண மக்களின் சுயநிர்ணயம் சார்ந்த விடயம். இதை யார் மறுக்க முடியும். ஒரு மக்கள் கூட்டம் எதை அடிப்படையாகக் கொண்டு ஒடுக்கப்படுவதாகக் கூறுகின்றதோ அந்த அடையாளத்தை வைத்தே தமது உரிமைகளைக் கோரும். அது மொழியாகவோ, இனமாகவோ, பிரதேசமாகவோ ஏன் சாதியாகவோ கூட இருக்கலாம்.


யாழ்ப்பாணத்து தமிழர்களிடையே காணப்பட்ட சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த எம்.சி.சுப்பிரமணியம் அவர்கள் 1970 களில் தாழ்த்தப்பட்ட தலித் மக்கள் ஒரு தனி தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முயன்றதை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஆகவே தமிழர்களின் உரிமைகளை கேட்கின்றவர்கள் கிழக்கு மக்களின் உரிமைகளைப் பற்றி பேசுகின்ற எங்களை எப்படி பிரதேசவாதி என்று சொல்ல முடியும். தமிழ் மக்களின் உரிமைகளை மறுக்கின்ற «சிஹல உறுமய» வை சிங்கள இனவாதிகள் என்று சொல்ல முடியும் என்றால் கிழக்கு மக்களின் உரிமைகளை மறுக்கின்ற எல்லாத் தலைமைகளையும் யாழ்ப்பாண பிரதேசவாதிகள் என்று சொல்ல முடியும்.
ஆம் நாங்கள் அல்ல பிரதேச வாதிகள். எங்களை பிரதேசவாதிகள் என்று சுட்டுகின்ற ஒவ்வொருவரும் யாழ்மேலாதிக்க மனோபாவம் கொண்ட பிரதேசவாதிகளேயாகும். கிழக்கு பிரியவேண்டும் என்பதற்கான நியாயங்கள் ஆயிரம் உண்டு. ஆனால் அவற்றையெல்லாம் ஒற்றைவரிக்குள் அடக்கிவிடலாம். அதுதான் சுயநிர்ணய உரிமை. (கிழக்கின் சுயநிர்ணயம் எனும் பெயரில் ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி சார்பில் வெளியிடப்பட்ட ஆவணக் கையேட்டைப் பார்க்கவும்)ஆனால் கிழக்கு மாகாணம் தனித்து இயங்குவதற்கு நியாயங்களை முன்வைக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் நீண்ட நெடிய வரலாறு எங்கும் கிழக்கும் வடக்கும் ஒருபோதும் இணைக்கப்பட்டி ருக்கவில்லை. அறியப்பட்ட வரலாறுகளின் அடிப்படையில் உறுகுணை ராச்சியத்தின் (கண்டி) உபபிரிவாகவே கிழக்கு மாகாணம் என இன்று அழைக்கப்படுகின்ற பிரதேசங்கள் அனைத்தும் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இருந்து வந்தது. முதன் முதலாக மாகாண பிரிப்புகள் வெள்ளையரால் ஏற்படுத்தப்பட்ட போது 1832 ஆண்டு கோல்புறுக் -கமறூன் குழுவினரின் ஆலோசனைகளுக்கு இணங்க மாகாணங்கள் எனும் புதிய புவியியல் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டது.

அன்றில் இருந்து 1987 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தை அடாத்தாக வடக்குடன் இணைக்கும் வரை இன்னிலை நீடித்தது. அதற்காகத்தான் கிழக்கு மாகாணம் தனித்து இயங்க வேண்டும் என்பதல்ல இதன் அர்த்தம். வடக்குடன் கிழக்கை இணைக்கக் கோருபவர்கள்தான் அதற்கான நியாயங்களை முன்வைக்க வேண்டும். ஆம் - சவால் விடுகின்றோம், விவாதிக்கத் தயாராயிருக்கின்றோம், வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என்பதற்கு என்ன நியாயங்கள் உண்டு என்பதை முன்வையுங்கள். வடக்குடன் இணைவதால் கிழக்கு மாகாணத்துக்கு என்ன நன்மைகள் உண்டு? சேறடிப்புகளையும், கறைப+சல்களையும் விடுத்து நேர்மையான பகிரங்க விவாதத்துக்கு வாருங்கள் என அழைக்கிறோம்.

தேசம்நெற்: வடக்கு கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டால் கிழக்குத் தமிழர்கள் சிறுபான்மையினர் ஆவார்கள். அதனால் கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் அரசியல் லாபம் என்ன ?


ஸ்ராலின்: இது நீங்கள் மட்டுமல்ல பல தேசியவாத இயக்கங்களும் முன்வைக்கும் கேள்வியாகும். நாங்கள் எவ்வளவுதான் ஜனநாயகம் பேசினாலும், எவ்வளவுதான் மனித உரிமைகள் குறித்துப் பேசினாலும், எவ்வளவுதான் இன ஜக்கியம் பேசினாலும் தமிழ் நோக்கில் இருந்து வெளியேவர முடியவில்லை என்பதற்கு ஆதாரம் இக்கேள்விதான். உங்களுக்கு (இக்கேள்விகளுடன் அலைகின்ற எல்லோருக்கும்) தமிழர்களைப் பற்றியே கவலை. கிழக்கு மாகாணத்தின் பல்லின வரலாறு, பாரம்பரியம், சமூகப் பரம்பல் என்ற விடயங்கள் பற்றிய பரிட்சயம் அற்றவர்கள் இப்படித்தான் கேட்க முடியும்.

ஆனால் நாங்கள் தமிழர்கள் என்ற குறுகிய பார்வையுடன் மட்டும் பேசவில்லை. அக்குறுகிய பார்வையுடன் கிழக்கு மாகாணத்தை அணுவது சமூகவியல் ரீதியில் பொருத்த மற்றதொன்றாகும். ‘கிழக்கு மாகாணம் தமிழர்களுக்கு மட்டும் உரிய நிலம் அல்ல. அது தமிழர்களுக்கும் உரிய நிலம்.’ கூடவே முஸ்லிம்களுக்கும், சிங்களவர்களுக்கும், பறங்கியர்களுக்கும், ‘வேடர்கள்’ என்று சொல்லப்படுகின்ற வன சுதந்திர மனிதர்களுக்கும் உரிய நிலம். நாங்கள் கிழக்கு மாகணம் எனக் கூறும் போது வெறும் «தமிழ் நோக்கு அரசியல்» இங்கே பொருத்தமற்றது.

தமிழ் தேசியவாதத்தின் வரவே எங்களிடம் இனப்பகையை மூட்டியது. ஈராயிரம் ஆண்டு கால இன ஒற்றுமையும், சகிப்புத் தன்மையும், கூட்டு வாழ்க்கையும் கொண்டவர்கள் நாங்கள். ஒரு போதும் இனத்தின் பெயரில் ஒரு துளி இரத்தம் சிந்தியதாகக் கூடி வரலாறு இல்லை. இந்த தமிழ் அரசியல், தமிழ் தேசியவாதம் என்பவைகள் என்று கிழக்கில் காலடி எடுத்து வைத்ததோ அன்றில் இருந்துதான் இனங்களிடையே பரஸ்பர சந்தேகமும், இனமுரண்பாடுகளும், இன பகைமையும், கலவரங்களும் அங்கே உருவாகத் தொடங்கின.

ஒரு வரலாற்றுக் குறிப்பை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். 27-04-1977 ஆண்டு கனவான் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களுடைய சாம்பல் கிழக்கு மாகாணத்திற்கு கொண்டுவரப்பட்ட அன்றுதான் முதன் முதலாக வரலாற்றுப் பெருமைமிக்க கிழக்கு மாகாணத்தின் அமைதி குலைத்தெறியப்பட்டது. மூவினங்களும் சேர்ந்துவாழும் அற்புதமான எங்கள் திருகோணமலை இனக்கலவரத்தை அன்றுதான் கண்டது. அன்று தொடங்கிய இரத்தத் துளிகள் இன்றுவரை தொடர்கிறது.


ஆகவே எங்களை முன்புபோல் வாழ விடுங்கள் என்று கேட்கின்றோம். தமிழ் மண் எனும் ஒற்றை அடையாளம் எங்கள் பல்லினத்தன்மைக்கு எதிரானது. தமிழர்களாகவும், முஸ்லிம்களாகவும், சிங்களவர்களாகவும் எமது தனித்துவங்களுடன் நாங்கள் கிழக்கு மாகாணத்தின் மக்களாக வாழ விரும்புகின்றோம். கிழக்கை கிழக்காக இருக்க விடுங்கள்.

தேசம்நெற்: கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட வேண்டும் என்பது உங்களுக்கான அரசியல் அடையாளத்தை தேடும் ஒரு முயற்சியாக நோக்கப்படுகிறது அது பற்றிய உங்கள் கருத்து என்ன ?


ஸ்ராலின்: ஆம் அது எங்களுக்கான அரசியல் அடையாளத்தைத் தேடும் முயற்சியேதான். வடக்கில் இருந்து மொழியின் பெயரால் எம்மீது திணிக்கப்படுகின்ற ஒற்றை அடையாளத்தை நாம் மறுதலிக்கின்றோம். எங்கள் பன்முக அடையாளங்களை தேடியபடி இன்னும் இன்னுமாய் எங்கள் முயற்சி தொடரும்.