Sunday, December 23, 2007

இலங்கைக்கு அதி முக்கியமான ஆயுத உதவியும்...

இந்தியா மற்றும் எம்.ஜீ.ஆர் மாயை...
"இந்திரா காந்தி இலங்கையில் தமிழீழப் பிரிவினையை ஆதரிப்பது போல பாவனை
காட்டினாலும் விடுதலை இயக்கங்களிடையே மோதல்களை விருத்தி செய்வதில் அவரது முகவர்கள்
தீவிரமாக இருந்ததை இன்னமும் விளங்கிக் கொள்ள இயலாதவர்கள் இருக்கிறார்கள்.
பாகிஸ்தானின் உடைவின் பின்பு தன்னைத் தென்னாசியாவின் மேலாதிக்க வல்லரசாக்குவதற்கு
இந்தியா எடுத்த முயற்சிகட்கு சோவியத் ஆதரவு இருந்தது. இங்கு சோவியத் ஆதரவின்
நோக்கம் அமெரிக்காவின் ஆதிக்கத்தைத் தடுப்பதாகவே இருந்தது. "



அண்மையிற் பிரபல தமிழ் நாளேடொன்றில் ஒரு கருத்துப்படங் கண்டேன். அதில் இந்தியா இலங்கைக்கு ஆயுதங்களை வழங்குவது சீனாவும் பாகிஸ்தானும் ஈரானும் வழங்குவதாலேயே என்ற கருத்து வெளிப்பட்டிருந்தது. இது அந்தப் படத்துக்கு மட்டும் உரிய கருத்தல்ல. இவ்விதமாக இந்தியாவின் நடத்தையை விளக்குவது பலருக்கு ஆறுதல் தருவதாக உள்ளது.


இலங்கைக்கு அதி முக்கியமான ஆயுத உதவியும் பயிற்சியும் யாரால் வழங்கப்பட்டு வந்துள்ளது? இது முக்கியமான கேள்வி. ஆனால், இதைவிட வேறு கேள்விகளும் எழுப்பப்பட வேண்டும். இந்தியா இலங்கைக்கு இராணுவ உதவி வழங்கக் காரணம் சீனா இலங்கையில் தனது செல்வாக்கை கூட்டிக் கொள்ளப் பார்க்கிறதும் பாகிஸ்தான் தனது செல்வாக்கை கூட்டிக் கொள்ளப் பார்க்கிறதுமே என்கிற விதமான நம்ப வசதியான விளக்கங்களை இதற்கும் முதலும் பல தடவைகள் கேட்டிருக்கிறேன். சீனாவோ பாகிஸ்தானோ இலங்கையில் தமது செல்வாக்கை வலுவாக வைத்துக் கொள்ள விரும்புவது உண்மை. அதற்கான உரிமை அந்த இரண்டு நாடுகட்கும் இருக்கக் கூடாதென்றால் வேறெந்த நாட்டுக்கும் அது இருக்கக் கூடாது. சீனாவோ ரஷ்யாவோ இன்று சோஷலிஸ நாடுகளல்ல. எனினும் அவை பிற நாடுகள் மீதோ உலகின் பிற பிரதேசங்களிலோ தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் தமது படைகளை அனுப்புகிற நிலையிலும் இன்று இல்லை. பாகிஸ்தான் இந்தியா தவிர்ந்த எந்த நாட்டுடனும் எல்லைத் தகராறுகளைக் கொண்டிருக்கவில்லை. அமெரிக்க நிர்ப்பந்ததின் விளைவாகவே இன்று அது அதன் மக்களால் வெறுக்கப்படுகிற சர்வாதிகாரி முஷாரப் தலைமைக் கீழ் ஆப்கானிஸ்தானிலிருந்து விடுபட இயலாமல் திணறுகிறது.



இந்தியாவின் நடத்தையை சீனாவையும் பாகிஸ்தானையும் வைத்து விளக்குவதற்குப் பதிலாக இந்திய நடத்தையை வைத்துச் சீனாவினதும் பாகிஸ்தானினதும் நடத்தைகளை விளங்கிக் கொள்ள நாம் ஏன் முயலுவதில்லை. இந்தியாவின் அயற்கொள்கை அணி சேராமையிலிருந்து சோவியத் யூனியனுடனான பாதுகாப்பு உடன்படிக்கை வரை சென்று இப்போது அமெரிக்காவுடனான நெருங்கிய உறவாக மாறியுள்ளதை எப்படி விளக்குவது? இந்த மாற்றம் இந்திய -சீன உறவு சுமுகமடைந்து வந்துள்ள ஒரு பின்னணியில் அல்லவா நிகழ்ந்துள்ளது. இந்தியாவினுள்ளிருந்து அமெரிக்க சார்பு விஷமிகள் `சீன மிரட்டல்' பற்றிய புனைவுகளை உற்பத்தி செய்து கொண்டுள்ளனர். ஆனாலும் நம்மிடையே இவற்றை எல்லாம் நம்ப ஒரு கூட்டம் இருக்கிறது. ஒவ்வொன்றையும் ஊதிப்பெருப்பிக்க வல்ல `நிபுணர்கள்' இருந்து வந்துள்ளனர்.



இலங்கை இந்தியாவின் ஒரு பகுதியாயிருக்க வேண்டும் என்ற கருத்துப்பட நேரு இந்திய விடுதலைக்கு முன்பே பேசியுள்ளார். நேருவும் இந்திய மேலாதிக்கச் சிந்தனையாளர்களும் இந்தியாவை ஒரு பிராந்திய வல்லரசாக்குகிற நோக்கத்தில் தெளிவாகவே இருந்துள்ளனர். தன் வடகிழக்கு எல்லையில் இருந்த மூன்று நாடுகளையும் தனது ஆதிக்கத்திற்கு உட்படுத்தியிருந்த இந்தியா, ஒன்றை ஆக்கிரமித்துத் தனதாக்கியது. இன்னொன்றை இன்னமும் ஒரு கொலனி மாதிரியே நடத்துகிறது. மற்றதில் இன்று ஏற்பட்டு வருகிற மாற்றங்களைத் தடுப்பதற்கும் தனது மேலாதிக்கத்தைத் தொடர்வதற்குமாகக் குறுக்கிட்டு வருகிறது. காஷ்மீர் மீதும் கிழக்கிந்தியாவின் பிரதேசங்கள் பலவற்றின் மீதும் இந்தியா உரிமை கொண்டாடுவதும் கடல்கடந்த பிரதேசங்களான அந்தமான், நிக்கோபார் தீவுகள் மீது உரிமை கொண்டாடுவதும் எந்தப் பண்பாட்டுப் பாரம்பரிய அடிப்படையிலும் அல்ல. இவை யாவும் கொலனிய எசமானர்கள் விட்டுச் சென்றவற்றின் மீது இந்தியா உரிமை கொண்டாடுகிறதையே குறிக்கின்றன.



சீன - இலங்கை உறவு, 1952 ஆம் ஆண்டு கொரியா மீதான அமெரிக்க யுத்த காலத்தில், இலங்கை எதிர்நோக்கிய உணவு நெருக்கடியினதும் சீனாவுக்குத் தேவையான இறப்பரைப் பெற இயலாமல் அமெரிக்கா விதித்திருந்த வணிகத் தடைகளினதும் பின்னணியில் இலங்கைக்குச் சாதகமான முறையிற் செயற்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் தொடங்கியது. ராஜதந்திர உறவுகள் 1957 இல் பண்டாரநாயக்க ஆட்சியின் போதே ஏற்பட்டன. 1956 வரை இலங்கைக்கு எந்த சோஷலிச நாட்டுடனும் ராஜதந்திர உறவுகள் இருக்கவில்லை. சீன - இலங்கை உறவின் நெருக்கம் , சீன - இந்திய எல்லைத் தகராற்றை இந்தியா பேசித் தீர்க்க மறுத்த காலத்திற்கு முன்னமே ஏற்பட்டது. சீனாவுக்கு இலங்கையின் முக்கியத்துவம் சீனாவுக்குத் தான்சானியா, ஸம்பியா, கானா போன்ற நாடுகளின் முக்கியத்துவத்தை விட எவ்வகையிலும் பெரியதல்ல. அமெரிக்காவால் 1972 வரை தனிமைப்படுத்தப்பட்டு 1962 அளவிலிருந்து சோவியத் யூனியனாலும் தனிமைப்படுத்தப்பட்டு, 1972 வரை ஐ.நா. சபையில் தனது இடத்தைத் தாய்வான் தீவில் இருந்த சியாங் கைஷேக் கும்பலிடமிருந்து மீட்க இயலாத நிலையில், சீனாவுக்கு மூன்றாமுலக நாடுகள் ஒவ்வொன்றுடனுமான உறவு பெறுமதி வாய்ந்ததாகவே இருந்து வந்தது.


1971 ஏப்ரல் கிளர்ச்சியின் போது, இலங்கைக்கு இந்தியா தனது போர்க்கப்பல்களை அனுப்பியிருந்தது. இராணுவ உதவியும் வழங்கியது. இந்தியா கிழக்குப் பாகிஸ்தானாக இருந்த பங்களாதேஷில் 1972 இல் குறுக்கிட்ட போது, இலங்கை பாகிஸ்தானின் உள் விவகாரமாகவே அதைக் கருதியது. இந்தப் பின்னணியிலேயே இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான நல்லுறவு வலுப்பட்டது.



இந்திரா காந்தி இலங்கையில் தமிழீழப் பிரிவினையை ஆதரிப்பது போல பாவனை காட்டினாலும் விடுதலை இயக்கங்களிடையே மோதல்களை விருத்தி செய்வதில் அவரது முகவர்கள் தீவிரமாக இருந்ததை இன்னமும் விளங்கிக் கொள்ள இயலாதவர்கள் இருக்கிறார்கள். பாகிஸ்தானின் உடைவின் பின்பு தன்னைத் தென்னாசியாவின் மேலாதிக்க வல்லரசாக்குவதற்கு இந்தியா எடுத்த முயற்சிகட்கு சோவியத் ஆதரவு இருந்தது. இங்கு சோவியத் ஆதரவின் நோக்கம் அமெரிக்காவின் ஆதிக்கத்தைத் தடுப்பதாகவே இருந்தது.



இத்தகைய ஒரு பின்னணியிலேயே இலங்கைக்குப் பாகிஸ்தானிடமிருந்தும் சீனாவிடமிருந்தும் இராணுவ உதவி வலுப்பெற்றது. இந்தியா இலங்கையைத் தனது ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு வர முயன்றது பற்றித் தமிழ்த் தேசியவாதிகளிடையே 1987 வரை கவலையிருக்கவில்லை. ஆனால், அதைத் தடுக்கிற நோக்கில் சீனாவும் பாகிஸ்தானும் செயற்படுவது தான் எப்போதும் தவறாகத் தெரிந்து வந்துள்ளது. இன்று இந்தியாவைத் தனது நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முனைகிற அமெரிக்கா, உலகமெல்லாம் தனது கடற்படை, விமானப்படை, இராணுவம் ஆகியவற்றை நிரந்தரமான தளங்களில் வைத்திருக்கிறது. இலங்கைக்குத் தெற்கே டியேகே கார்ஸியாவிலும் தளம் உள்ளது. இதை நாங்கள் கண்டு கொள்வதில்லை. சீனாவையும் ரஷ்யாவையும் சுற்றி வளைக்கும் அமெரிக்கத் திட்டம் நம்மைக் கவலைக்குட்படுத்தாது. இலங்கை அரசாங்கத்துடனான அமெரிக்க இராணுவ உடன்படிக்கைகள் கூட நமக்கு ஒரு பொருட்டல்ல. ஆனால் சீனாவோ பாகிஸ்தானோ மாற்று நடவடிக்கை எடுத்தால் அது பிழையாகி விடுகிறது.



நாங்கள் சில விஷயங்கள் பற்றித் தெளிவாக இருக்க வேண்டும். இலங்கையிலோ எந்த ஒரு நாட்டிலுமே எந்த ஒரு அயல் நாடும் தனது படைத்தளங்களை வைத்திருப்பதை நாம் ஏற்கலாகாது. சீனாவானாலும் ரஷ்யாவானாலும் அது என்றுமே ஏற்கத் தக்கதல்ல. அவ்வாறான ஒரு நிலைப்பாட்டை எடுக்கின்ற போதே, நேர்மையாக நம்மால் அமெரிக்கத் தளங்களை அகற்றுமாறு கேட்க முடியும், இந்திய இராணுவக் குறுக்கீட்டைக் கண்டிக்க முடியும்; எந்த இராணுவ ஆக்கிரமிப்பையும் எதிர்க்க முடியும்.

சீனா எந்த நாட்டையும் ஆக்கிரமிக்காது, எந்த நாட்டிலும் தனது படைகளை வைத்திருக்காது என்பதில் கம்யூனிஸ்ட் சீனா தெளிவாக இருந்தது. ஆக்கிரமிப்பின் மூலம் சோஷலிஸத்தை உருவாக்க இயலாது என்பதில் அது உறுதியாக இருந்தது. பிற நாடுகளின் உள் அலுவலங்களில் தலையிடாமை சீனா அயற்கொள்கையின் முக்கியமான ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளது. இன்று சீனா சோஷலிச நாடல்ல. சீன முதலாளியம் நாளை சீனாவை ஏகாதிபத்தியமாக மாற்ற முனையலாம். ஆனால் இப்போதைக்கு அந்த நிலைக்குச் சீனா வரவில்லை. அயற்கொள்கையில் கொலனித்துவ ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு எதிரான கிளர்ச்சிகட்கு நிபந்தனையற்ற ஆதரவு என்ற கலைப்பாடு கைவிடப்பட்டுள்ளது. எனினும் நாடுகளின் உள் அலுவல்களின் குறுக்கிடாமை என்பது இன்னுமுந் தொடகிறது.


மாஓ வாதிகள் போராடிக் கொண்டிருந்த போதும், சீனா நேபாளத்திற்கு ஆயுதங்களை வழங்கியது. சீனாவின் சோஷலிஸ மறுப்பு பற்றிக் கடுமையாக விமர்சித்தாலும் நேபாள மாஓவாதிகள் சீனா நேபாளத்தின் ஆட்சியாளர்களுடன் வைத்திருந்த உறவைக் குற்றங் கூறவில்லை.
இலங்கையின் சுயாதிபத்தியத்திற்கு மிரட்டலாக உள்ளவர்கள் இலங்கையின் சிறுபான்மைத்தேசிய இனங்களது சுயநிர்ணயத்தின் பாதுகாவலர்களாக இருப்பார்கள் என்ற பிரமை கலையும் வரை நம்மால் ஏகாதிபத்தியத்தையும் மேலாதிக்கத்தையும் சரியாக விளங்கிக் கொள்ள முடியாது.


மறுபக்கம்

நன்றி:தினக்குரல்

No comments: