Sunday, December 30, 2007

செய்திகள் சில ஏன் அடக்கி வாசிக்கப்படுகின்றன?

பாராளுமன்றமே ஒரு மோசடியாக இருக்கிறது.


டகங்கட்குரிய பொறுப்பான நடத்தை நாகரீகமான நடத்தை என்கிற விடயங்கள் உள்ளன. பொறுப்பு என்பது முதலில் சமூகப் பொறுப்பு. சொல்லுகிற விடயங்கள் சரியா தவறா ஐயத்துக்குரியனவா என்பன பற்றி உறுதிப்படுத்தி அதற்கமையத் தகவல்களை வழங்குவது முக்கியமானது. எவர் மீதுங் குற்றச்சாட்டுக்களை வைக்கு முன்பு அவற்றுக்கு மறுமொழி சொல்ல அவருக்கு ஒரு வாய்ப்பளித்த பின்பே குற்றச்சாட்டைப் பகிரங்கமாக முன்வைப்பது நியாயமானது. தகவல்களை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படுகிற மொழிநடை, பேசுகிற தொனி என்பன நாகரிகமான நடத்தைக்குட்பட்டவை. குறிப்பாக நேர்காணல்களின் போதும் கேள்விகளைக் கேட்கும் போதும் மற்றவருக்கு மரியாதை கொடுத்துப் பேசுவது நாகரிகமானது.


இப்போதெல்லாம் தொலைக்காட்சியிலுஞ் சரி வானொலியிலுஞ் சரி தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுகிறவர்களுடன் நிகழ்ச்சிகளை நடத்துகிறவர்கள் பேசுகிற தோரணை வீட்டில் தாய் தகப்பன் இவர்கட்கு நல்ல பழக்கங்களைக் கற்பிக்கவில்லையோ என்றுதான் எண்ணத் தூண்டுகிறது. அறியாமைக்கே உரிய திமிர்த்தனத்துடன் தான் இன்று இளம் ஒலி பரப்பாளர்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்துகிற இளையவர்களும் நடந்து கொள்கிறார்கள். வயது எதற்குமுரிய தகுதியல்ல என்று நினைவூட்டுகிற விதமாகச் சில வயதில் மூத்த பத்திரிகை எழுத்தாளர்களும் பத்தி எழுத்தாளர்களும் நடந்து கொள்ளுகிறார்கள்.


இந்த விதமான சில்லரைத் தனங்கள் பெருகுவதற்கு ஊடக நிறுவனங்களும் அவற்றின் எசமானார்களும் பொறுப்பேற்றாக வேண்டும். இன்று ஊடகவியலாளர்களை வளர்த்தெடுப்பதில் ஊடக நிறுவனங்கள் அக்கறை காட்டுவதில்லை. வேகமாக முன்னேறுகிறதாக எண்ணிக் கொண்டு தோற்றப்பாடான விடயங்களில் மட்டுமே அக்கறை காட்டுகிற பல இளைஞர்கள் எதையுமே கற்க முயலுவதில்லை. செய்தி என்பதே ஒரு பொழுது போக்கு - விளம்பர நிகழ்ச்சியாகி விட்டபின்பு யாருக்கு எதைப்பற்றி என்ன அக்கறை!


எனினும், இந்தவிதமாக ஊடகத்துறையில் ஏற்பட்டுள்ள சீரழிவு கருத்துச் சுதந்திரம் என்ற பேரில் தமது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்கிற ஒரு போக்கையும் வளர்த்துள்ளது. இது அரசாங்க ஊடகங்களில் மிக மோசமாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது என்றாலும் தனியார் துறை ஊடகங்கள் பல அரசாங்க ஊடகங்கட்கு எவ்விதத்திலும் சளைக்காத விதமாகவே நடந்து வந்துள்ளன.


சூரியன் எப்.எம். முடக்கப்படுவதற்குச் சில காலம் முன்பு வரை அதன் உள்ளூர் முதலாளியை ஒரு பெரிய அரசியல் பிரமுகராக்குகிற விதமாகச் செய்தியில் அவரைப் பற்றிய விளம்பரங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டன. மற்றப்படி தரமான முறையில் செய்திகளைத் தொகுத்துத் தந்த அந்த வானொலிக்கு இப்படி ஒரு களங்கம் தேவையா என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்ததில்லை என்றே தோன்றுகிறது.
ஒவ்வொரு ஊடக நிறுவனத்துக்கும் ஒரு அரசியற் சார்பு இருக்கிறது. அதை விட முக்கியமாக வணிக நோக்கும் இருக்கிறது. எனவே சில விதமான பக்கச் சார்புகளும் சமரசங்களும் நாம் எதிர்பார்க்கக் கூடியவையே. ஆனாலும் இவற்றை இரகசியமாக வைத்துக் கொண்டு, நடுநிலை வேடம் போடுவது கொஞ்சம் அருவருப்பூட்டுவது.


அண்மையில் மிலிந்த மொறகொடவின் மீதான ஊழல் குற்றச்சாட்டுப் பற்றிய பாராளுமன்ற விசாரணையிற் குறுக்கிடுகிற விதமாகத் `தெரிவிப்பது நாங்கள் - தீர்மானிப்பது நீங்கள்' ஊடக நிறுவனம் நடந்து கொண்டது பற்றி எழுதியிருந்தேன். காரியம் ஆகிவிட்டதாலோ என்னவோ அந்தக் கேவலமான குறுக்கீடு நிறுத்தப்பட்டுவிட்டது. மீண்டும் அந்த விவாதம் வருகிற வரை அதற்கு ஓய்வு உண்டு.

அதனிலுங் கேவலமான ஒரு காரியம் தமிழர் தேசிய முன்னணியின் கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றி வரவு - செலவுத் திட்ட வாக்கொடுப்புக்கு முன்பும் பின்பும் நடந்தது.


தொலைக்காட்சி நிருபர் ஒருவர் மூன்று உறுப்பினரதும் உறவினர்கள் கடத்தப்பட்ட நிலையில் அவர்களில் எவரும் வரவு- செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்குபற்றினால் கடத்தப்பட்ட உறவினர் கொல்லப்படுவர் என்ற மிரட்டலின் பின்னணியில் வாக்கெடுப்பில் பங்குபற்ற வேண்டுமா, கூடாதா என்று தெரிந்தெடுக்கப்பட்ட சிலரிடங் கேள்வி கேட்டனர் . அக்கேள்விக்கான விடைகள் வரவு- செலவுத் திட்ட வாக்கெடுப்பின் முன்பு வரை தொலைபரப்பப்பட்டன. போதாக்குறைக்கு வாக்கெடுப்பிற்குப் பின்பும் கேள்விகள் கேட்கப்பட்டு விடைகள் தொலைபரப்பப்பட்டன.


இந்த விடயம் வெறுமனே ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு அவரது உறவினர்களது உயிரைக் காப்பாற்றுவது முக்கியமா , கடமையுணர்வுடன் பாராளுமன்றத்தில் வாக்களிப்பது முக்கியமா என்ற விதமாகச் சுருக்கப்பட்ட பின்பு கடமை தான் முக்கியம் என்கிற கருத்து விடையாக வலிந்து வரவழைக்கப்பட்டது. ஆனால், இந்த வரவு- செலவுத் திட்டத்தில் வாக்களிக்கிற தேவை தான் என்ன என்ற கேள்வியைக் கேட்டிருந்தால் விடைகள் வேறுவிதமாக வந்திருக்கலாம். வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் தமிழர்களைப் பொறுத்தவரை என்ன வித்தியாசம் என்று கேட்டிருந்தால், தேர்தல் ஒன்று வந்து எதிர்க்கட்சி பெரும்பான்மையைப் பெற்றிருந்தால் என்ன வித்தியாசம் என்று கேட்டிருந்தால், மறுமொழியைக் கொஞ்சம் யோசித்துச் சொல்ல வாய்ப்பிருந்திருக்கும்.


தமிழ்ப் பிரதிநிதிகள் எதிர்த்து வாக்களிப்பதன் நோக்கம் வரவு- செலவுத் திட்டம் பற்றிய தமிழ் மக்களின் நிலைப்பாட்டை உணர்த்தவேயொழிய யூ.என்.பி.யை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கல்ல என்பதை நாம் மறக்கலாகாது. எனவே, சிலரை வாக்களிக்காது தடுத்ததால் அந்தக் காரியத்திற்கு எதுவிதமான கேடும் இல்லை.


பாராளுமன்றமே ஒரு மோசடியாக இருக்கிறது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை அது இரட்டை மோசடி. அதில் உள்ள ஒரே நல்ல விடயம் தமிழ் மக்களின் பிரதான கட்சி எதுவும் 1968 க்குப் பிறகு இதுவரை அமைச்சர் பதவி பெறாதது மட்டுமே.

இது போக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிந்து கொண்டே தமது உயிரைப் பணயம் வைக்க வேண்டும் என்கிற பரிந்துரையை முன்வைத்த ஊடக நிறுவனம் இன்று நாட்டில் நடக்கிற எத்தனையோ அக்கிரமங்கட்கு யார் யார் பொறுப்பு என்று அறியாதா? அவை பற்றி ஏன் எதுவுமே பேசப்படுவதில்லை?

செய்திகள் சில ஏன் அடக்கி வாசிக்கப்படுகின்றன?

36 ஆண்டுகளுக்கு முந்திய ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது. 1971 ஏப்ரல் கிளர்ச்சியை அடுத்து, தாடிக்கார இளைஞர்களை பொலிஸார் பிடித்துச் சென்று விசாரித்தனர். அதனால் பல இளைஞர்கள் போல எனது நண்பர் ஒருவரும் தனது பிரியத்திற்குரிய தாடியைத் தியாகம் செய்தார்.

தனது தாடிக்குச் சேதமில்லாதவரான இன்னொரு நண்பர் அவரைப் பார்த்து நீ ஒரு கோழை என்று கேலி செய்தார். முதலாமவர் நிதானமாக என்னிடமும் ஒரு 5 ஸ்ரீ காரும். பொலிஸில் உயர் பதவியில் நண்பரும் இருந்தால் நானும் உன்போல் வீரம் பேசுவேன் என்றார். மற்றவரின் தாடிக்குள்ளாகவும் அவரது முகம் சிவந்தது.

`பரமசிவன் தலையிலிருந்து பாம்பு கேட்டது, கருடா சௌக்கியமா?' என்கிற மாதிரி நாம் மற்றவர்கள் மீது தீர்ப்பு வழங்க முதல் நம்மையே கேட்டுக் கொள்வது நல்லது.

இதே ஊடக நிறுவனம் தனது ஊழியர் ஒருவரை அரசியல் பிரமுகராக்குவதற்குப் படாத பாடுபட்ட வருவதை நாம் அறிவோம். முஸ்லிம்களையும், மலையக மக்களையும் முட்டாள்களாகக் கருதுகிற விதமாகச் சொல்லப்பட்ட கருத்துகளின் நோக்கத்தையும் அறிவோம்.
விளம்பரத்தாலே உயர்ந்தவர் நிலைமை நிரந்தரமல்ல என்பதை மட்டும் சொல்லிக் கொள்வது போதுமானது. எவ்வளவு பண வலிமையுள்ள நிறுவனமானாலும் அது எவ்வளவு கவனமாகப் போடுகிற வேடமாக இருந்தாலும் வேடங்கள் எல்லாம் என்றோ கலைந்துதானாக வேண்டும்.


-மறுபக்கம்
நன்றி:தினக்குரலுக்கு

No comments: