Friday, May 30, 2014

தமிழ்க்கவியின் பேட்டியை முன்வைத்து...

புலிகளின் பன்முகச் செயற்பாட்டாளர் தமிழ்க்கவியின் பேட்டியை முன்வைத்து...


புலிகள் அமைப்பின் பன்முகச் செயற்பாட்டாளர் தமிழ்க்கவி அவர்களது பேட்டியைப் படித்ததிலிருந்து அவரைச் சந்திக்கவும்,அவரது எழுத்துக்களைத் தேடியெடுத்துப் படிக்கவும் ஆர்வம் மேலோங்குகிறது.இதுவரை ,அவர் நாம் அறியாதயெதையும் பேசவில்லை!கடந்த 30 ஆண்டுகளாகப் புலிகள் குறித்த எமது மதிப்பீட்டை , விமர்சனத்தை அவர் உறுதிப்படுத்துகிறார் -அவ்வளவுதாம்!நாம் பரந்தப்பட்ட மக்களை அண்மித்துப் புலிகள்மீதும்,தமிழ்த் தேசியத்தின் மீதும் வைத்த விமர்சனத்தைப் பலர் கிரகிக்கமுடியாது நம்மைத் துரோகியென எச்சரித்தனர்.ஆனால், நமது கருத்து உண்மையென்று நம் ஆயுட்காலத்திலேயே-நம் கண்முன்னேயே சாத்தியமாவது மாற்றுக் கருத்துக்குக் கிடைத்த வெற்றியே!


இயக்கவாத மாயை தகரும் நமது கருத்தியற் போராட்டமானது மக்களைப் பற்றிக்கொண்டால் சிங்கள இனவாத அரசின் ஓடுக்குமுறை ஜந்திரம் நிச்சம் தகரும்.அதற்கு முன் சிங்கள அரசின் ஆதிக்கம் தகர்ந்தாகவேண்டும்.இது தகராமாற் சிங்கள வன்முறை ஜந்திரத்தின்மீது எவரும் கையை வைக்க முடியாது.


இதுள், தமிழ்க்கவியின் கருத்துக்களிலிருந்து சிங்கள அரச ஆதிக்கம் பல் முனைகளில் தனது ஆதிக்கத்தை நிலையாட்டியுள்ளதென்பதும்,அதையே மேலும் விருத்திக்கிட்டுச் செல்லும் போக்கில், இன்றைய புலிகளது "மிச்சசொச்சம்" உதவுகிறார்களென்பதும் புரியத்தக்கதே!இதைக் குறித்துப் கணிப்பிடுவதில் நாம் சரியான வரையறையைச் செய்தாகவேண்டும்.


புலிகளது முன்னாள் பிரமுகர்கள் தற்போது தமிழ் நிலப்பரப்பெங்கும் "கட்டாக்காலி எருமைகளாக" அலைந்து, "இணக்க அரசியல் -இந்தியாவைக் கையாளுதல்"என வகுப்பெடுக்கின்றனர்.இவர்களை அரவணைத்து, இயங்கும் இந்திய -இலங்கைப் புலனாய்வுத்துறையானது இத்தகையவர்களோடு மிக நெருங்கிய நட்புப் பாராட்டுவதிலிருந்து நமது போராட்டம் மேலும் ,மேலெழ முடியாதவரையில் தமிழர்களைக்கொண்டே தமிழர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.இது மிக கொடுமையானவொரு சூழல்!முள்ளிவாய்க்காலில் புலிகளது "சாண் ஏறிய போராட்டம்,முழஞ் சறுக்கிய சரணடைவிலிருந்து"தமிழ் மக்களின் அபிலாசைகளென்பவை அதிகாரத்துவத்தை உள்ளார்ந்து நேசித்த தமிழ் மேட்டுக்குடிகளின் கோரிக்கையென்பதை நாம் பல முறைகள் கூறியிருக்கிறோம்.இந்த அதிகாரத்துக்கான நேசிப்பிடம் மக்களின் வாழ்வியல் சார்ந்த மதிப்பீடுகள்,அவர்களது உயிராதாரமான பொருள் வாழ்வு சார்ந்த கோரிக்கைகள் சிறிதளவும் அவர்களது நோக்கு நிலையிலிருந்து முன்வைக்கப்படவில்லை.இத்தகைய ஒரு அவலமான அரசியலைக் கடந்த காலத்துத் தமிழர்களின் ஓட்டுக் கட்சி அரசியல் செய்து வந்ததின் தொடர்ச்சியாகப் பற்பல அழிவுகள் அராஜக இயக்கங்களின்வழி நமக்குள் வந்து சேர்ந்தன.இதுள் பேச்சுவார்த்தை மூலம்"தமிழீழம்"காணப் பிரபாகரன் மூன்று இலட்சம் மக்களைப் பலியெடுத்து, யுத்தத்தின் மூலம் பேச்சு வார்த்தைக்கு இலங்கையை நிர்ப்பந்தித்ததிலிருந்து நாம் மாபெரும் சமூகக் கிரிமினல் குற்றங்கொண்டவொரு பரப்புரையின் வழியிலான கொலை அரசியலைத் தரிசிக்கின்றோம்.இது எந்தவிதத்திலும் சிங்களவின ஒடுக்குமுறைக்கெதிரானவொரு பரந்துபட்ட மக்களது போராட்டமல்ல.மாறாக, அந்தப் போராட்டத்தைக் கையிலெடுத்த புலிகள் தமிழ்பேசும் மக்களது உயிரைத்  துஷ்ப்பிரயோகஞ்செய்து தமது இருப்புக்கானவொரு யுத்த்தால் தாமே அழிந்து போயினர்.இதை அன்று நாம் பரவலாக விவாதித்தபோது புலிகளை ஊதிப் பெருக்கி விவாதித்த "தமிழ் தேசியவாதிகள்"இன்று பெருங் கோடிசுவரர்களாகத் தமிழர்களது உயிர் -உடமை கொண்டு மகிந்தாவோடு வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர்.இவர்களே மேலும் தேசியம் -விடுதலை எனவும் பரப்புரை செய்கின்றனர் தமது ஊடகங்களின்வழி!


இந்தக் கிரிமினல் குற்றஞ் செய்தவர்கள் அனைவரும் இப்போது புலிகளாகவிருந்து சாதரண மக்களாக மாறிவிட்டனராம்.ஆனால், அப்பாவிகள் தமது உறவுகளை மட்டுமல்ல தம் "இடம்- பொருள் - ஆவி " அனைத்தையும் இழந்து, முடவர்களாக வாழும் போது அவர்களைக் குறித்து இவர்களைக் கிரிமினல் கூண்டில் ஏற்றுவதென்பது சிங்கள அரசின்அடுத்த சதியாட்டத்தை மட்டுப்படுத்துவதென்பதில் சந்தேகமில்லை!இது குறித்துப் பல்வேற பரப்புகளில் விவாதித்தாகவேண்டும்.இத்தகையவர்களின் இருண்ட அரசியல் சூழ்ச்சிகளால் பலிகொள்ளப்பட்ட தமிழ்பேசும் மக்களின் பொருளாதார உயிர்வாழ்வானது சிதைந்து சின்னாபின்னமாகியபோது, நாம் அதைத் தொடர்ந்து அநுமதித்து வருவதற்கானவொரு அரசியலை "நாடுகடந்த தமிழீழ அரசு" என்ற  "ஏகாதிபத்தியத்தின் கைக்கூலித் தமிழ் வக்கீலகள்அடங்கியவொரு கூட்டம்"  மிகக் கயமையானமுறையில் எமக்குள் திணித்துக் கொண்டிருக்கிறது!இது, இலங்கைத் தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தமது நலன்சார்ந்த மதிப்பீடுகளால் கிரகித்துக் கணித்துக்கொண்டு நம்மீது சவாரி செய்து வருகிறது.குறிப்பாகப் புலத்தில்.இங்கே, இத்தகைய விமர்சனங்களுடாக மறைக்கப்படும் அரசியலைப் புரிவது அவசியம்.

"இந்தியாவைக் கையாளுதல்"எனும் கருத்தியற் கட்டுமானத்தின்வழி இந்திய அரசியல் வியூகத்தை இலங்கைக்குள் இழுத்துவந்து அதை உலக அரங்கில் நியாயப்படுத்துவதற்குத்தாம்நிலத்தில் பலர் முன்னாள் புலிகளாய் வலம் வருகின்றனர்!
இலங்கையில் இதுவரை ஆயுதப்போராட்டத்தை அப்பாவித் தமிழர்கள் -இஸ்லாமியர்கள்மீது திணித்த அந்நிய தேசங்கள்புலிகளை வெறும் ஆயுதக் குறுங் குழுவாக்கி அழித்ததன்பின் இந்தியா, இப்போது அந்தக் குறும் ஆயுத -அராஜகக்குழுவுக்கு நிகரானவொரு அரசியல் தலைமையைத் தமிழ்பேசும் மக்களுக்குள் திணிப்பதற்கும் அதையே தமிழ்பேசும் மக்களின் நியாயமான தீர்வுக்கானவொரு பெரும் சக்தியாவும் தூக்கி நிறுத்துவதில் இத்தகைய இந்திய லொபிகளை உருவாக்குகிறது.இந்த லொபிகளது குரலேதாம் "இந்தியாவைக் கையாளுதல்,இலங்கை அரசோடு இணக்க அரசியலை" செய்தலென்ற குரலாகும்.சாரம்சத்தில் இலங்கையின் இனப்போராட்டமானது அந்நியத் தலையீட்டுக்குள் வீழ்த்தப்பட்ட வரலாறானது காலனித்துவக் காலத்திலிருந்தே தோற்றம் பெற்றிருப்பினும் அதை முற்றுமுழுதாக இந்தியச் செல்வாக்குக்குள் இறுகத் திணிப்பதற்கு இந்த லொபிகள்அவசியமாகிறார்கள்.


முள்ளி வாய்க்காலின் தோல்விகண்ட புலிகள், அரசியலைக் காவு கொடுத்து இன்று இருபது வருடங்களுக்கு மேலாகிறது.எப்போது சகோரா இயக்கங்களை அழித்துக் கொன்றார்களோ அன்றே அவர்கள் அரசியல் மக்குகள்.இதிலிருந்து மீண்டு ஒரு புது யுகம் தமிழ்பேசும் மக்களுக்கு உதயமாவதற்குப் புலிகள் தம்மை அழித்தே வழியைத் திறந்துவிட்டிருப்பினும் அந்த வழியெங்கும் அந்நிய உளவுப்படைகளும்,முன்னாள் புலிகளது அந்நிய எடுபிடிகளுமாகத் தமிழ் மண் முற்றுமுழுதான துரோகத்தால் நிறைந்திருக்கிறது.இதைத் தமிழ்கவியின் பேட்டியிலிருந்து மிக நுணுக்கமாக இனங் காண முடியும்!ப.வி.ஸ்ரீரங்கன்
30.05.2014