Sunday, December 30, 2012

ஜீ.ரீ வியில்[GTV] "பேசாப் பொருள்

ன்று 29.12.2012 இரவு 21:30 மணிக்கு , ஜீ.ரீ வியில்[GTV] "பேசாப் பொருள்" குறித்தவுரையாடலொன்று நிகழ்ந்தது.

திரு.சம்பந்தனது "ஸ்ரீலங்கா இராணுவத்தை"தமிழ்ப் பிரதேசத்திலிருந்து வெளியேறத் தேவையில்லையெனும் பாராளுமன்றப் பேச்சின்மீதான  உரையாடலாகப் பேசாப் பொருள் நிகழ்வையின்று  நிகழ்த்தினார்கள்.

நிகழ்வுக்குத்  தோழர் நாவலன் வந்தார். நேற்றே என்னைப் பங்குபற்றும்படி கேட்டார்.ஆம் என்றேன்.

இன்றும், உரையாடலைச்  செய்வதற்குமுன்  அதுள் என்னையும் தொலைபேசி வாயிலாகவுரையாடும்படி நிகழ்வேற்பாட்டளரான  தயாநந்தாவும்,நாவலனும் வேண்டிக்கொண்டனர். நானும்,ஆம் என்றேன்.

கட்சிசார் அ ரசியலை விமர்சிப்பதும்,ஒரு கட்சியென்பது என்னவென்பதும் சொல்லியாகவேண்டும். பரந்துபட்ட  "மக்களது உணர்வுக்கு"  அப்பாற்பட்டு, அதை விளக்கும் தேவையும் உண்டு.எனவே,ஆவலோடு "ஆம் " என்றேன்.


இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின்(பொதுவாக அனைத்துக் கட்சியின் என்பதே சரியானது) நோக்கங்களையும்,சாரம்சத்தையும் மதிப்பிடுவதற்கு, கட்சிகள் முன்வைக்கும் அவர்களது" செயற்றிட்டம் "என்பதை ஆராய்வதைக்காட்டிலும்  வரலாற்றில் அவை என்ன செய்தனவென்றும்,மக்களை அண்மிக்கும் பல்வேறு பிரச்சனைகளில் எந்த முறையிலான அணுகுமுறையோடு எப்படியான தீர்வுகளைச் செய்கின்றனவென்றும் நாம் நோக்க வேண்டும்.

வர்க்க  மக்கள் சமுதாயத்துள் பல்வேறு வர்க்கங்களின், (விவசாயிகள், தொழிலாளர்கள், முதலாளிகள்,நிலச்சுவாந்திரர்களுப்பட்ட) இதரர்களது சீவியத்தின் பிரதான முரண்பாடுகளில் கட்சிகள்  எப்படி நடந்துகொள்கின்றனவென்பதிலிருந்தே  ஒரு கட்சியின் மீதான ஆய்வை முன் வைத்தாகவேண்டும். இதுதாம் மார்க்சிய-லெனினிய ஆய்வு முறையாகும்.

பேசப்பொருள் நிகழ்வில் இது குறித்து நாவலனோ அன்றி எந்த நேயருமோ உரையாடவில்லை!

என்னைப் பேச வேண்டுமெனக் கேட்டவர்கள்,பின் என்னையும் ஒரு நேயரின் நிலைக்குட்படுத்திப்  பொதுவான தொலைபேசியழைப்புக்கு வரவேண்டுமென்றார்கள். நானும் ஒரு மணி நேரமாக முயற்சித்தும்  அழைப்புக் கிடைக்கவில்லை.மணியொலிக்கும் நேரம் எனது தொலைபேசியை எடுக்காதிருக்கின்றனர்.பின் அழைப்பையிட்டால் அழைப்பில் மற்றவர்கள் நிற்கின்றனர்.

எனது கருத்தையும் அவசியமாகக் கருதியிருந்தால் அவர்களே அழைப்பைச்  செய்திருக்க முடியும்.

தமிழ் அரசியலுக்கு ஏமாற்றத் தெரிவதென்பது சொல்லியா ஆகணும்?

என்னுடைய 25 ஆண்டுகால அரசியல் வாழ்வில் இப்படி எங்கும்-எதுக்கும் ஏமாறிய வரலாறு தொடர்ந்து நிகழ்கிறது.

எவரையுமே நம்பமுடியவில்லை-நம்ப முடியவில்லை!


ஸ்ரீரங்கன்
30.12.2012

Saturday, December 08, 2012

புதிய ஜனநாயக மக்கள் தோழமை முன்னணி (புலம் பெயர்)

புதிய ஜனநாயக மக்கள் தோழமை முன்னணி (புலம் பெயர்) விடுக்கும் தோழமைக்கான அறைகூவலும், எச்சரிக்கையும்!


யாழ்ப் பல்கலைக்கழக மாணவரது போராட்டம் இலங்கை பூரகவும் படர்கிறது.இஃது, புரட்சிக் கிளை-விழுதெறிந்து மகிந்தா அரசினது பாசிசத்தைத் தோற்கடிக்கும். புதிய ஜனநாயக மார்க்சிய-லெனியக் கட்சியானது பெருந்தலைவர் தோழர் திரு.செந்தில்வேல் தலைமையில் சிங்கள முற்போக்குச் சக்திகளிடம் "புரட்சிக்குரிய புறநிலைகளைத் தகவமைத்துக் கொண்டு" வருகிறது.

புரட்சிக்குரிய "புறவயச் சூழல் மற்றும் அகவயக் காரணியின் ஒற்றுமைகள்" சிங்களச் சமுதாயச் சூழலில் எவ்வகையில் நிலவுகிறதென்பதைப் பேராசிரியர் Prof.Dr. சி.சிவசேகரம் அவர்களது தலைமையில் கட்சியானது  கள ஆய்வுப்பணியை முடுக்கி விட்டிருப்பது மகிழ்ச்சியே!

இந்தக் கள ஆய்வில்"புரட்சியின் அடிப்படை விதியை அலட்சியப்படுத்துவது அரசியலில் அதி சாகசத்துக்குட்பட்டுப் புரட்சியைத் தோல்விக்கிட்டுச் செல்லும்" என்பதால் தோழர்  இரயாகரன் தானே கவனித்துப் பரிசீலிப்பதற்கான பணியைப் பொறுப்பேற்றிருப்பதும் நமக்கு நம்பிக்கையை இரட்டிப்பாக்கிறது.


அந்த நம்பிக்கைக்கு, உரஞ் சேர்ப்பதுபோல தம்பி பழ.ரிச்சர்ட்டும் தொடர்ந்து நிலத்திலிருந்து புரட்சிகரமான நகர்வுகளைச் செய்து எதிரிக்கெதிராக நெஞ்சை நிறுத்தி, மக்கள் முன் வருகிறான்.இது,இன்றைய நிலத்து இளைய தலைமுறைக்கு வலுவான நம்பிக்கையைத் தருவதும்,புலம் பெயர் இளைய படைப்பாளிகள்,சிந்தனையாளர்களுக்கும் ஆதர்சத்தைத் தருவதாகவும் உணரப்படுகிறதென்றுணரப்படுகிறது.மொத்தத்தில் இஃது,ஒரு இளைய நட்ஷத்திரம்  உருப்பெற்றதன் பலனைக் கட்டியம் கூறி நிற்கிறது.


இன்றைய முதலாளித்துவத்தின் பொது நெருக்கடிச் சகாப்தத்தில் பாசிச மகிந்தாவின் ஆட்சிக் கவிழ்ப்பு பிற்போக்கு வர்க்ககங்களின் எதிர்ப்புரட்சி நடவடிக்கையின் வெளிப்பாடாக இருக்குஞ் சந்தர்ப்பத்தைக் கவனத்திலெடுக்கும் பேராசான் தோழர் இரயாகரன் அவர்கள், இது, குறித்துக் கவனமாக இருக்கவேண்டுமெனத் தோழர் பழ.ரிச்சர்ட்டுக்கு எச்சரித்துக் கண்காணித்து வருகிறார்.எந்த நூல்களை-பத்திரிகைகளை,நபர்களை வாசிக்க-அணுக வேண்டுமெனவும் இளைய தோழருக்கு எடுத்தியம்பி வர்க்கவுணர்வுமிக்க உளவியற்றொடர்ச்சிக்கும் பணியை முடுக்கி விட்டிருக்கும் இந்தச் சூழலில் புரட்சியென்பது ஒரு தேசத்துக்குள் நிலவமுடியாதது.அது, உலகு தழுவியது-நீண்டகாலத்துக்கானதென்பதிலும் தோழர் ஸ்டாலினின் ஆலோசனையைப் படிப்பினையாகவும் நாம் கொண்டிருப்பதால் மகிந்தாவின் பாசிசத்தை முறியடித்து அவரது பதவிக் காலத்துக்கு முன்பே இலங்கைப் பாட்டாளியவர்க்கச் சர்வதிகாரத்தை நிறுவி இலங்கையில் புரட்சிகரமாகச் சமுதாயத்தை மாற்றியப்போம் என நாமும் பகிரங்கமாக அறைகூவுகிறோம்!புதிய ஜனநாயக மக்கள் தோழமை முன்னணியினரான நாமும் நிலத்தில் புதிய ஜனநாயக மார்க்சிய-லெனியக் கட்சியான நமது தாய்க் கட்சியின் பின் தோழமையோடு புரட்சிகர போராட்டத்துள்புரட்சி நடைபோட்டுத் தொடர்கிறோம்.இஃது,உத்தியோக பூர்வமான எமது அறிவிப்புத் தோழர்களே,நமக்குத் தோழமையையும் தங்கள் பொருளாதாரவுதவியையும் மக்களது விடுதலைக்காகத் தமிழ்பேசும் மக்களது விடுதலைக்காகத்தந்து புரட்சியைத் தொடருமாறும் நாம் செவ் வணக்கமிட்டுச் சொல்கிறோம்.
அத்தோடு, புலி அழிப்புக்குப் பின்பான இன்றைய சூழலில்,அந்நிய சக்திகளிடம் கட்டுண்டு கிடக்கும் இலங்கைத் தேசத்தின் ஆளும் வர்க்கத்தால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை உதாசீனப் படுத்தப்படுகிறது.சிங்கள ஏக இனவாதம் தொடர்ந்து இருத்தி வைக்கப்படுகிறது.சிங்கள அடையாளஞ்சார் பண்பாட்டு மேலாத்திக்கம் பற்பல வடிவத்தில் தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய நிலப்பரப்புகளில் கட்டியெழுப்பும் கருத்தியற் பலமானது மேலுஞ் சிக்கலான அக அழுத்தத்தைத் தமிழ்பேசும் மக்களிடம் உருவாக்கும்போது ,அவர்களால் "தமது அடையாளந் தள்ளிவைப்பதெனும் தப்பித்திலே" இந்தச் சிங்களப் பண்பாட்டு மேலாத்திகத்தால் தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது.இலங்கையை ஆளும் மகிந்தாவினது அரசுக்கு மிக அண்மையாக இயங்க முனையும் ஆசிய மூலதனமானது ஆசியாவின் இருபெரும் வல்லதேசங்களால்(இந்தியா-சீனா)நிர்வாகிக்கப்பட்டுப் புதிய சந்தை-கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடல்வழிப் போக்குவரத்துக்கான வியூகத்தில், இலங்கையைக் குறிவைக்கின்றன.


இவ்வெதிர்காலப் பொருளாதார வல்லரசுகள், தமது நோக்கையை மிக இலகுவாக வென்றெடுக்கப் பலியாக்கப்படும் தென்னாசியச் சிறுபான்மை இனம் தமிழ்பேசும் இலங்கை மக்களாக வரலாற்றின் முன் நிற்கிறார்கள்.இந்நிலையுள்,சிங்கள வரலாற்றுப் புனைவுகளைப் புதுப்பிக்க முனையும் சிங்களப் பழமைவாத ஆதிக்க வர்க்கத்துக்குத் தமது தேசத்தின் இறைமையைவிடத் தமிழ் மக்களை ஒட்ட மொட்டையடிக்கும் நோக்குக்கு எவர் அங்கீகாரம் வழங்குகின்றனரோ அவருடன்கூடித் தேசத்தை மொட்டையடித்தாலுங்கூடத் தமிழ்பேசும் மக்களுக்குத் துண்டுவுரிமையும் இலங்கையில் நிலவக்கூடாதென்ற சமூகவெண்ணவோட்டத்தின் தொடரில் தமிழ் அரசியலோ(கட்சி-இயக்க,தலித்துவச் சங்கம் முதல் வேளாளச் சதி அரசியல்வரை) கலந்து சங்கமிக்கிறது.இதுதாம்,இந் நூற்றாண்டின் மிகக் கேடான அரசியல் சூதாட்டம். இவர்களையும் எச்சரித்துப் புலம் பெயர் தளத்தில் இலங்கையரசின்-மகிந்தாவின் பாசிசத்தின் தொங்கு சதைகளான ஞானம்,தேவதாசன்,கீரன்,ரெங்கன்,சோபா சகதி,போன்ற அனைத்து விரோதிகளையும் பேராசான் தோழர் இரயாகரன் தலைமையில் வீழ்த்துவோம் என்பதும் உறுதி.


இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள
ப.வி.ஸ்ரீரங்கன்

மத்திய குழுவுறுப்பினர்
புதிய ஜனநாயக மக்கள் தோழமை முன்னணி (புலம் பெயர்)

08.12.2012 ஜேர்மனி.

Saturday, October 20, 2012

புலிப் பினாமிகளும்,இளையராசாவும் இசை வியாபாரமா?

புலிப் பினாமிகளும்,அதந்தப் பினாமிகளை ஆட்டிப்படைக்கும் புலிகளது மேல் நிலைத் தலைவர்களும் இப்போது தமது ஆயுதத் தலைமையை அழித்துவிட்ட கையோடு இலங்கை அரசுக்கு ஒத்தூதித் தமிழர்களது செல்வத்தைக் கொள்ளை அடித்துச் செல்வந்தர்களாகினார்கள்.அதை மேலும் நிலைப்படுத்தும் அதிகாரத்துக்கான கோதாவில் மீளவும்,"மாவீரர்"தினமெனவும்,தமிழர் உரிமை எனவும் பொய்யுரைத்துத் தமக்குள்ளே போட்டியிட்டுக் கொள்ளையிலும்,கொலையிலும் ஈடுபட்டது பத்தாதென்று ஒருவருக்குள் ஒருவர் தொடர்ந்து மோதி இளையராசா இசை நிகழ்ச்சி வர்த்தகத்தில் தமது இலாபங்களை நோக்கிக் கேள்விகளையும்-காய் நகர்த்தலையுஞ் செய்கிறார்கள்!

சுத்த மானங்கெட்ட வியாபாரிகள்!இலட்சம் மக்களை அழித்துச் செல்வஞ் சேர்த்த புலிப் பினாமிகளுக்கு இப்போது நிதியீடு தேவையாகவிருக்கிறது.இதற்காகச் சகல வடிவிலும் முனைகிறார்கள்.மானங்கெட்ட தமிழ்ச் சினிமாக் குத்தாட்ட நிகழ்ச்சிகூட இந்த மானங்கெட்ட புலிகளுக்கு விதிவிலக்கல்ல! இவர்கள்தாம்"ஈழத்தில் சினிமாப் பாட்டுக்குத் தடை விதித்தவர்கள்!இப்போது பிழைப்புக்கு ஒரு இளையராச!தூ...
இத்தகைய புலிப் பினாமிகளது பிளவுபட்ட புலி இயக்கவாதக் குழுக்களுக்குள் நிலவுஞ் செல்வமானது தொடர்ந்து நிலைப்படுத்தப்படவும்-பெருக்கவும் இத்தகைய வடிவங்களுடாக ஒரு பாதுகாப்பான அத்திவாரத்தை நோக்கி மக்களைக் காயடிக்கிறது புலிப் பினாமிக் கூட்டம்!


தமிழ்பேசும் மக்களிடம் கறந்த செல்வமானது பல வடிவங்களில் முதலீடாக்கிய தெருச் சண்டியர்களுக்குப் புலிகளால் "வலுகட்டாயமாகப் பிடித்துக் களப்பலியாக்கப்பட்ட" அடிமட்டப் போராளிகளது தியாகம் தேவைப்படும்போது,அதைத் தினமும் தமிழ் தேசிய அபிலாசையூடாக அனுமதிக்கும் புலம்பெயர் தமிழ் மக்கள் களப்பலியான ஏழைகளது குழந்தைகளது மரணத்தைக் கொச்சைப்படுத்துவதுமல்லாது அதை வியாபாரமுமாக்கி விடுகின்றனர்.

புலிகள் செய்த யுத்தமானது சாரம்சத்தில் தேசியவிடுதலைப்போராட்டமோ அன்றித் தடுப்பு யுத்தமோ இல்லை.மாறாக,யாழ்ப்பாண மேட்டுக் குடிகளின் அழிவு அரசியல் நடாத்தையின் நேரடி விளைவாகத் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் திணிக்கப்பட்ட யுத்தமாகும் இஃது!

இது,மக்கள் போராட்டத்துக்கு எதிரான தமிழ் ஆளும் வர்க்கத்தின் திமிர்த்தனமான நடாத்தை.இதைத் தகவமைத்துக்கொடுத்த தமிழ் ஆளும்வர்க்கத்தினது அந்நிய எஜமானர்கள் இலங்கையின் புரட்சிக்கு எதிரான அழிப்பு-அழிவு யுத்தத்தைத் தமிழர்களது இன பிரச்சனையூடாகக்கட்டியமைத்துக் கொலைகளை நடாத்தி முடித்தார்கள்.இங்கே,இதே தொடர்கதையோடு தொடர்ந்து மக்களைப் பலிகொடுக்கும் நாசகார யுத்தம்,அதைச் செய்து வந்த புலிகளையே வேட்டையாடியபோது, வெளிநாடுகளில் அலையும்பினாமிப் புலிகள் தம்மிடம் சேர்ந்துள்ள மக்கள் பணத்தைக் காப்பதற்காகவும்-பெருக்கவும்"மாவீரர்"பயனையோடு அனைத்து விரோத நிகழ்வுகளையும்  செய்து மீளவும் தொடர்ந்து மக்களைக் காயடிக்கிறார்கள்!


இவர்களது ஒரு தரப்பு, முழு வர்த்தகத்தில் மக்களைக் கொள்ளையடித்த  பணத்தோடு  இயங்குவது சகலரும் அறிந்தது.

ஐங்கரன் நிறுவனத்தின் முழுச் சொத்தும் புலப் புலிப்  பினாமிகளது சொத்தாகவும்,அந்தப் புலிப் பினாமிகள் "தமிழீழஞ்"சொல்லி மக்களைப் பலோத்தகாரப்படுத்திப் பறித்த சொத்தோடு தம்மைப் பெரும் வர்த்தகர்களாக்கியுள்ளனர்.

அனைத்துச் செல்வமும் புலிகளுடையது கிடையாது-அவை மக்களுடையது.

இவற்றைச் சேர்ப்பதற்கு எத்தனை ஆயிரம் இளைஞர்களது உயிரைப் பறித்திருப்பார்கள் இந்தப் பாசிசவ் புலிகள்!

இவர்கள் நேர்மையானவர்கள்?

இவர்கள், சீமானைக் கேள்வி கேட்கும் தகமையுடையவர்கள்?


கேடுகெட்ட தெரு பொறுக்கிக் கூட்டமான பாசிசப் புலிப் பினாமிகள் இன்று ஜனநாயக வேடமிட்டுச் சீமானைக் கேள்வி கேட்கின்றனர்!


நமது மக்களது அழிவில் செல்வஞ் சேர்த்த புலிப் பொறுக்கிகள், தமிழ்நாட்டு அரசியலில் இலங்கைத் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் சீமானைச் சிறையிட வைப்பதில் எவரது நலனைப் பேணுகிறார்கள்?அத்தோடு இந்தப் புலிப்பினாமி வர்த்தக மாபியாக்கள் தமது நிறுவனப்பட்ட அராஜகத்தைத் தொடர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் நிலைப்படுத்தி, மக்களை உளவியல் ரீதியாகவும் அச்சத்துக்குள்ளாக் கின்றனர். இப்படியாகப் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்ந்து, அச்சமூட்டபட்டும், அராஜகத்தின் மூலமும் தமிழ் விதேசிய வாதம் தொடர்ந்து இருத்திவைக்கப்படுகிறது.இது பாசிசமின்றி வேறென்ன?

குழந்தைகளைக் கட்டாயமாகப் பிடித்துச் சென்று இதுவரை பலியாக்கியது தியாகமாக இருக்க முடியுமா? எவருக்கான-எதுக்கான"மாவீரர்"தினம்?வர்த்தகஞ் செய்வதற்காகவா?இதுள் முரண்பட்ட இருவேறு புலிப் பினாமிகள் சகல வடிவிலும் மக்களை வேட்டையாட முனையும் வினையுள் இளைஞராசா நிகழ்சியும் ஒன்று!

புலிப் பணப் பினாமிகள் குறித்து நாம் மனசாட்சியோடு பதிலளிக்கக் கடமைப்பட்டவர்கள்.

ஏனெனில் இலட்சம் உயிர்களோடு விளையாடியவர்கள்இந்தப் பொறுக்கிகள்.

தமிழ்ச் சிறார்களது அளப்பரிய வாழும் ஆசையைக் குழிதோண்டிப் புதைத்தவர்கள் இந்தக் கேடுகெட்ட புலிப் பாசிஸ்டுக்கள்!இவர்களுக்கெதற்கிந்தச் சினிமாத் தனப் பிழைப்பு?

இவர்கள் கொல்லப்பட்ட மக்களுக்காகப் பொறுப்புணர்வோடு செற்பட்டார்களா?அல்லது, மக்களது அழிவுக்குத் தார்மீகப் பொறுப்பெடுத்து மன்னிப்புக் கோரினார்களா?இவையெல்லாவற்றையும் தள்ளிவிட்டுத் தமது வர்த்தகத்துக்காகத் "தமிழ் மக்கள்" நலன்-சீமான் எதிர்ப்பென வகுப்பெடுக்கும் இந்தத் தெரு நாய்களை ஒட்டு வெருட்டியாகவேண்டும்!


இவர்களும்,அழிந்து சாம்பாலய்ப்போன இவர்களது பொம்மைப் புலித் தலைமையும் சமூகக் குற்றவாளிகள்.

அத்தகையப் புலிப் பணப் பினாமிகள், தமிழ்பேசும் மக்களுக்குமட்டுமல்ல முழு இலங்கை உழைக்கும் வர்க்கத்துக்கு எதிரானவர்கள்.

புரட்சியைக் காட்டிக்கொடுத்த அந்நிய கைக்கூலிகள்.இவர்களுக்கு, இளையராசவின் இசையில் இப்போது செல்வஞ் சேர்க்கும் அவா!பிழைப்புவாத நாய்கள்!தூ...

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
20.10.2012

Saturday, September 01, 2012

கொலை செய்வேன்"ஓட்டுப் போடவேண்டும்"கும்பிட்டுக் கேட்டகாலம்போய்,கொலை செய்வேன்"ஓட்டுப்
போடவேண்டும்" என்பதுதாம் ஜனநாயகம்.
இந்த மாகாணசபைத் தேர்தலில்

அடுத்த அராஜகத்தை-கொலைக் களத்தைத் திறந்திருக்கும் அரசியற் சூழ்ச்சியில் பலியாவது எது-என்ன?

 
குட்டி மாபியா பிள்ளையானின் உரையைக்கொண்டு கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல முழு இலங்கையிலே நிலவும் ஆயுத அராஜகத்தின் ஆதிக்கத்தை அளக்க முடியும்.
 
  
"தமிழ்த் தேசியமானது" இப்போது பிரதேச வாதமாகச் சுருங்கிக் கொலையாடலாக மாறுகிறது.
 
வெல்லப் போவது தமிழ்த் தேசியக் கள்வர்களாக இருந்தாலும் கொலைப்படப்போவது எவரென்பதே எனது நோக்கு!
 
 
எனவே,பிள்ளையானைக் கொலைக்காரக் கும்பலாகத் தொடர்ந்திருத்தவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கள்வர்கள் சதி அரசியலைச் செய்கின்றனர்.

 
பிள்ளையானுக்கு உரை மொழி வரவில்லையேதவிர அராஜக அரசியலது உண்மைகளைப் போட்டுடைக்கத் தெரிந்திருக்கிறது.
 
 
சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு எவ்வளவு பெரியவுதவியைத் தமிழ் அரசியல் செய்கிறதென்பதைக் குட்டி மாபியத் தலைவன் பிள்ளையான் மூலம் அறிய முடிகிறது.

 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கயமைக் கூட்டம் இந்த மாபியத்தனத்துள் ஜனநாயக இடைவெளியைத் தொட்டுக்காட்டும் ஒரு புள்ளியில்பிரதேச வாதத்தின் திரட்சியைக் காட்டவாவது ஒரு சந்தர்ப்பத்தைத் தமிழ்பேசும் மக்களுக்குச் சொல்லிக் கொள்கின்றனர்.


தன்னைத் தோற்கடித்தால் கொலை செய்வேன்-அழிப்பேன் என்ற குட்டி மாபியாப் பிள்ளையானின் கொலையாடலைக் கேட்டுப் பாருங்களேன்-இதுதாம் கிழக்குக்கு வசந்தமான மந்திரம்!


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
01.09.2012Saturday, March 31, 2012

கூடங்குள அணுவுலை மின்சாரத் திட்டத் தேவையும்-தவிர்க்கக்கூடியதா?

"இந்தியாபோன்ற தேசத்தின் சுயவளர்ச்சியானது அதன் சுயாதிபத்திய சக்தி வளத்திலேயேதாம் தங்கியிருக்கிறது."

ந்தியத் துணைக்கண்டப் பாதுகாப்பும் கூடங்குள அணுவுலை மின்சாரத் திட்டத் தேவையும்-தவிர்க்கக்கூடியதா?

இந்தியாவானது அடுத்த பத்தாண்டுகளில் இன்னும் பலபத்து அணுமின்னாலைகளை நிறுவிவிடும்.அதன் வளர்ச்சியும்,பொருளுற்பத்தியும் சீனாவுக்கு நிகராக உயரும் சாத்தியமுண்டு.

இந்தத் தேவையின் பொருட்டு வளர்ந்துவரும் இந்தியாவானது எந்த நிலையிலும் சூழற் பாதுகாப்புணர்வுடன் நடந்துகொள்ள வாய்ப்பில்லை.அதன் பொருளாதாரச் சார்பானது அமெரிக்க ஆதிக்கத்தின் பக்கம் இருக்கும்போது இந்தச் சூழலியற்றேவைகளை ஒருபோதும் இந்தியா மதிக்காது.பண்டைய வாழ்வு அதற்கினிக் கைகூடாது.

இந்தியத் துணைக்கண்டத்தின் அணுமின்சாரத்திட்டமானது மிகவும்அவசியமான சக்திவளத்தைக் குறிவைத்தே இயங்குகிறது.இந்தியா வளர்ந்து வரும் தேசம். 110 கோடிகள் மக்கள் தொகைக்கேற்ப அது வளர்ந்தே தீரவேண்டும்.

ஐரோப்பாவானது மிகவும் வளர்ந்து, ஒரளவு சம நிலையை நகரத்துக்கும் கிராமத்துக்கும் பேணும் நிலையில் இந்தியா அத்தகைய வளர்ச்சியைக் கண்டடையும் உற்பத்தியையும்,அதுசார்ந்த கட்டுமானத்தையும் கொண்டியங்குவதாக இருந்தால் பல கூடங்குளங்கள் தோன்றவே செய்யும்.அதைத் தடுத்திடவே முடியாது.

இந்தியாவானது தனது உள் நாட்டுச் சந்தையைப் பூர்த்திசெய்யும் சுய படைப்பில் தன்னை நிலை நிறுத்த முனையும் இந்தச் சந்தர்ப்பத்தில் அதன் சக்தி வளத்தேவையானது முன்னைய காலத்தையும்விட 50 வீதத்தால் அதிகரித்திருக்கிறது.அதைப் பூர்த்தி செய்யும் தகுதி அணுமின்சாரத் தொழில் நுட்பத்துக்கே உண்டு.எனினும்,அணுமின்சாரமானதும்,அதுசார்ந்த மனவொப்புதலும்சிறுபிள்ளைத்தனமானது! இதற்குச் சில உதாரணங்களைப் பார்ப்போம்.

 • 1):வளர்ந்துவரும் சூழலியல் விஞ்ஞானமானது நமது உயிர்வாழ்வின் அவசியத்துக்கு இப் புவிப்பரப்பானது அணுமின்சாரத்தை நிராகரித்த உற்பத்தித் திறனோடு எதிர்காலத்தை எதிர்கொள்வதே சாலச் சிறந்ததாகக் காண்கிறது.இதன் பொருட்டுப் பற்பல மேற்குலக நாடுகள் 2030 ஆண்டுகளுக்குள் தமது அனைத்து அணுமின் நிலையங்களையும் படிப்படியாக மூடிவிடும் திட்டத்தோடு மாற்று வழிகளைக்காணும்போது இந்தியாவோ அணுமின் திட்டத்தை வலுவாகச் செயற்படுத்தத் தயாராகிறது!.
 • 2):இந்தியா அணுமூலமாகத் தயாரிக்கும் மின்சாரத்தை மிகவும் இலாபகரமாகப் பெறமுடியாது.இதற்கான தகுதி அதற்குக் கிடையாது.அதாவது அமெரிக்காவுடன் அதன் ஒப்பந்தம் இத்தகுதியை அதனிடமிருந்து பறித்துவிடும்.மின்சாரம் போதியளவு பெற்றுவிடலாம்.ஆனால் அணுக் கழிவுகளே மிகப் பெரும் செலவை இந்தியாவுக்கு வழங்கி அதன் உட்கட்டமைப்பைச் சிதறிடிக்கும்.இது மிகவும் நிதானமான அமெரிக்காவின் சதிவலை.இந்திய ஆளும் வர்க்கமானது தமது வருவாயை மட்டுமல்ல அந்நிய சக்திகளோடிணைந்து இந்தியக் கனிவளங்களையும் சூறையாடிப் பெருவங்கிகளில் பதுக்குவதற்குத் தயாராகிறார்கள்.இதன்படி அந்த வர்க்கம் எந்த முன் நிபந்தனையுமின்றி அமெரிக்காவோடு கூட்டிணைவதில் மும்மரமாகச் செயற்படுவார்கள்.

இவை மிகமுக்கியமான உதாரணங்களாகும் இந்தியத் தரகு முதலாளிய ஆட்சியாளர்களின் ஈனத்தனத்தை அறிவதற்கு.

ஏனெனில், அணுமின்சாரமானது மிகவும் ஆபத்தானது.

அது புவிப்பரப்பு எதிரானது!

ஏன் உயிரினங்கள் அனைத்துக்குமே எதிரானது.

இதை எங்ஙனம் நிறுத்தமுடியுமென மானுவர்க்கஞ் சிந்தித்து அதற்காகப் போராடி வரும்போது இந்தியாவோ தொடர்ந்து அணுமின்சார ஆலைகளை உருவாக்கவேண்டிய தேவையில் இருக்கிறது.அதன் உற்பத்திக்கேற்ற வலுவுள்ள ஆலைகள் இனிவரும் ஆண்டுகளில் நிறுவப்படும்-நிறுவியே தீரவேண்டும்.

ஐரோப்பாவானது தனது ஜந்திரத்துக்கு மாற்று மின்சாரவூக்கிகளைக் கண்டடைந்திருப்பினும்,அவைகளைப் பெறுவதற்கான படைப்புச் சக்திகளை ஏலேவே அணுமின் துணைகொண்டுபெற்ற வளங்களது அடைப்படையிலிருந்தே பெற்றுக்கொண்டன.வளர்ச்சியுறும் தேசங்களைப்பார்த்து" சூழலியற் பாதுகாப்பு" எனக் கோசமிடும் தேசங்கள் தமக்கும்,தமது தொழிற்சாலைகளுக்குத் தீனிபோடவும்,தாமே தொடர்ந்தும் உலகத்துக்கு உற்பத்தியாளராகவும் இருக்கவே ஆசை கொள்கின்றனர்.வளரும் தேசத்து மக்களை வெறும் நுகர்வோராக்கும் சதியும் இதற்குள் ஒளிந்தே இருக்கிறதெனக் கருதவேண்டும்.

அரசியல் வாதிகள்எவ்வளவுதாம் கூச்சலிட்டாலும் அவர்களது எஜமானர்களுக்கு அவசியமான திசையிலேயேதாம் அவர்கள் காரியஞ் செய்தாகவேண்டும்.இந்தியாவினது நடுத்தரவர்க்கத்தின் உயர்வானது ஓரளவு நுகர்வுச் சக்தியை அதிகரிக்கிறது.அந்தச் சக்திக்கேற்ப தீனிபோடும் உள்நாட்டுவுற்பத்தி இயங்காதுபோனால் இந்தியாபோன்ற தேசம் முழுமையாக நவகாலனித்துவத்தின் கடைக்கோடியில் அமர்ந்திருக்கும் அபாயமுண்டாகிறது.

அணுக் கழிவுகளைத் தேட்டமாக்கியபடிதாம் ஒரு தேசம் இனிமேல் வளரவேண்டிய தேவையுண்டாகிறது.அதுவும் இந்தியாபோன்ற தேசத்தின் சுயவளர்ச்சியானது அதன் சுயாதிபத்திய சக்தி வளத்திலேயேதாம் தங்கியிருக்கிறது.இதை எத்தனைபேர்கள் விளங்கியுள்னர்?இந்தியாவின் சயாதிபத்தியம் என்பது அதன் தேசியவுற்பத்தியாளரது உற்பத்திச் சக்திகளென யாரும் புரிந்துகொண்டால் அது தப்பானது.எனவே,ஒரு தேசமானது சுயவுற்பத்தியைத் தனது மக்களுக்கேற்பவும்,அவர்களது தேவைக்கேற்பவும் கட்டிக்கொள்வது அவசியமானதென்பதைப் புரியும்போது,அணுமின்சாரத்தின் அவசியமும்உணரத்தக்கதாகவே இருக்கமுடியும்.ஆனாற் கழிவுகளை என்ன செய்வது?

அணுமின்சாரத்தின் இறுதிக்கழிவு வடிவமானது புளோட்டோனியமாகும்.இந்தப் புளோட்டோனியத்துக்கு பலவகைத் தரப்படுத்தற் காலமுண்டு.அந்தவகையில் அதன் அரைதரக் காலமானாது 24.000.வருடங்களாகும்.இதன் அர்த்தம் என்னதென்றால்முதற்பகுதி24.000 ஆண்டுகளுக்;கு நடைபெறும் கதிர்வீச்சு பின்பும்24.000.ஆண்டுகளுக்கு கதிரியக்கமாக நடக்கும்- அடுத்த அரைக் காலத்திலும் கதிரியக்கம் நடைபெறும்,அதன்பின்பு இதே தொடர்கதையென்று கதிரியக்கம் பற்றிய அறிவு குறித்துரைக்கிறது. இந்தக் கேடுவிளையும் அபாயமான சாமான் மிகவும் பாதுகாப்பாகச் சேமித்து வைத்திருக்கவேண்டும்.இந்தியாவல் இது சாத்தியமில்லை.அதாவது என்னென்ன வடிவங்களில் இது காக்கப்படுவேண்டுமென்றால்:

 1. கதிர்வீச்சை தடுப்பதற்கான முறைமைகளைத் தவிர்காதிருக்கவேண்டும்.
 2. யுத்தத்தால் பாதிப்படைவதைத் தடுத்தாகவேண்டும்.
 3. வெள்ளப் பெருக்கிடமிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.
 4. பயங்கரவாதத் தாக்குதிலிலிருந்து பாதுகாக்கப்படுவேண்டும்.
 5. பலாத்தகாரத்துக்குள்ளாகப்படுவதைத் தடுத்தாகவேண்டும்.
 6. ஊழலிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.
 7. கீழ்தரமாகப் பயன்படுத்தலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.
 8. நிர்வாகக் கவனக்குறையிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.
 9. ஞாபக மறதியிலிருந்து தவறேற்படுவதைத் தடுத்தாகவேண்டும்.

இப்படிப் பல்வகைக் கடப்பாடோடு இந்த உயிர்கொல்லியைப் பாதுகாத்தாகவேண்டும்.அதாவது கண்ணுக்குள் எண்ணையை ஊற்றிக்கொண்டே பாதுகாத்தாகவேண்டும்.இந்த வகைப் பாதுகாப்போடு எந்த நாட்டிலுமுள்ள பகுதிகளும் இல்லை!வளர்ச்சியடைந்த நாடுகளே திண்டாடும்போது இந்தியாபற்றிச் சொல்லவே தேவையில்லை!இந்த நேரக்குண்டானதையெங்குமே பாதுகாத்துவிட முடியாது.இதன் கதிரியகத்தை எந்த விஞ்ஞானமும் கட்டுப்படுத்திட முடியாது.இலட்சம் ஆண்டுகளுக்குப் பாதுகாக்கப்பட வேண்டியதை,எந்தக் கொம்பரும் மலிவாகச் செய்துவிட முடியாது.பலகோடிக்கணக்கான செல்வத்தை இது வேட்டையாடிவிடுகிறது.

இதைப் பாதுகாக்கப் பயன்படும் செலவானது அந்த நாட்டின் மொத்தவுற்பத்தியில் பல பங்கைச் சூறையாடும்.இந்தப் புளோட்டோனியம் நமது புவியையும், உயிர்களையும் கொன்று இல்லாதாக்கி வருகிறது.இன்றைய உற்பத்தி முறைமையின் சக்திவளாதாரம் எங்ஙனம் மனிதவலத்தை ஏற்படுத்துகிறது?-இதையும் சற்று நோக்குவோம்.

இன்றைய சக்திவள ஆதாரத்தில் மனித வாழ்வு:

 • -ஒவ்வொரு செக்கனுக்கும் ஒருவர் பட்டுணி கிடக்கிறார்.
 • - ஒவ்வொரு நிமிடத்துக்கும் 30 கெக்டர் காடு அழிக்கப்படுகிறது
 • -நாளொன்றுக்கு 80 வகைத் தாவரங்கள் அழிந்தே போகிறது.
 • -ஒவ்வொரு கிழமையும் 50 கோடித் தொன்கள் கரியமில வாயுவை நமது வளிமண்டலத்தில் கொட்டுகிறோம்.
 • -ஒவ்வொரு மாதமும் பாலைவனத்தில் 5 இலட்சம் கெக்டரை விஸ்தரித்துப் பெருக்கிவிடுகிறோம்.
 • -ஒவ்வொராண்டும் ஓசான் பாதுகாப்புறையில் 1 வீதம் மெலிதாக்கி வருகிறோம்.

இந்த மனித வாழ்வு எங்கே செல்கிறது?

எதை நோக்கி முதலாளியம் மனித வாழ்வை நகர்த்துகிறது?

நாம் பிறக்கிறோம்,கற்கிறோம் வேலைக்குச்செல்கிறோம்,மணமுடித்துக் குழந்தைகள் பெறுகிறோம்!எங்களில் எத்தனை பேர்கள் நமது சூழலின் தூய்மை-மாசு பற்றிய உணர்வோடு வாழ்கிறோம்?எத்தனை பேர்கள் தத்தம் நாட்டின் அரசியல் பொருளாதாரச் சூழல் நெருக்கடியை உணர்வுப+ர்வமாக உள்வாங்கி அதை நிவர்த்தி செய்வதற்கான அழுத்தங்களை முன்வைக்கின்றோம்?

இன்றைய சூழலியல் நெருக்கடியானது மிக உண்மையானது.கடுமையானது!இந்த நெருக்கடியை தீர்த்தாகவேண்டும்.அங்ஙனம் தீர்க்கப்படாதுபோனால் புவிப்பரப்பில் இன்னும் ஓரிரு நூற்றாண்டில் உயர் வாழ்தல் சாத்தியமின்றிப்போவது உண்மையாகும்.நச்சுக் கிருமிகளினதும்,விஷச்செடிகளினதும் இருப்பே சாத்தியப்படலாம்.இத்தகைய எதிர்காலத்தை எதிர்கொள்ளவா நாம் மாடாய் உழைக்கிறோம்,குழந்தைகளைப் பெறுகின்றோம்?

எமது உற்பத்தி முறைகளுக்கும்,சக்திவள நுகர்வுக்கும் எந்தப் பொறுப்பும் சுமத்தாமால் வெறுமனவே இலாப வேட்கையுடன் தொடர்ந்தாற்றும் மனித இடைச்செயலானது, நம் தலைமுறையையே நோய்வாய்ப்படுத்தியுள்ளதை எத்துணை மதிப்பீடுகளுக்குள் நாம் உட்படுத்தி ஆய்ந்திருக்கிறோம்?சமுதாயத்தின் முழுமொத்த மக்களும் ஆரோக்கியமற்ற மனிதர்களாகவும்,ஏதோவொரு குறைபாடுடைய சிசுவாகக் கருவில் உருவாகும் புதிய மனிவுயிருக்கு யார் பொறுப்பாளிகள்?நமது வாழ்கை முழுதும் பெரும் குற்றவாளிகளாக மாறிவரும் இந்தப் பொருளாதாரத்தைக் கொண்டு நடாத்தும் "நம் கூட்டுழைப்பு" நம்மையடிமைப்படுத்தும் இன்றைய காலத்தில் வாழ்வின் அர்த்தம் என்ன?

இன்றைய யுரேனியத்தின் இருப்புக்கு எல்லையுண்டு!

யுரேனியத்தின் கச்சாவிருப்பு இன்னுமொரு தலைமுறைக்குச் செல்லமுடியாது.ஆகக்கூடிய அதன் வளம் இன்னும் எண்பது அல்லது நூறு வருஷங்களே

என்னைப் பொருத்தவரை நமது பொருளாதாரமானத்து சூழலிருந்து திருடுவதை நிறுத்தாதவரை மனிதவினத்துக்கு எந்த விமோசனமுமில்லை.

அவுஸ்ரேலியாவிலும்,தென் ஆஜென்டீனாவிலும் பெற்றோர்கள் தமது குழந்தைகளை 13 நிமிடங்களே வெய்யிற் காலத்தில் வெளியில் அனுமதிப்பது நடக்கின்றது.இதற்கு மிஞ்சினால் தோற் புற்று நோயை அந்தக் குழந்தைகள் எதிர்கொள்வதில் முடியும்.புவியின் தென்துருவத்தில் மெலிதாகிப்போன ஓசான் பாதுகாப்பு உறை இன்று புற்று நோயைப் பரிசாக வழங்குகிறது!இன்னும் சில வருடங்களில் புவியின் வடதுருவத்திலும் ஓசான் ஓட்டை பெரிதாகி எல்லோருக்கும் இதைப் பொதுவாக்கிவிடும்.வருடமொன்றிக்கு அவுஸ்ரோலியாவில் 140.000. பேர்கள் தோற் புற்று நோய்க்கு உள்ளாகி வருகிறார்கள்.சுவாசப்பை மற்றும் கண்,தொண்டை,மூக்குப் பகுதிகளில் கண்ட கண்ட நோய்கள் வந்து தொலைக்கிறது.

200 வருடங்களுக்கு முன் இமானுவேல் கன்ட்[Immanuel Kant (* 22. April 1724 in Königsberg; † 12. Februar 1804 ebenda] எனும் தத்துவவாதி சொன்னார்:"இயற்கைச் சீற்றமென்பது கடவுளின் தண்டனையல்ல மாறக மனிதர்களின் குற்றமே"அதாவது மனிதரின் இடைச் செயலே என்றான்

என்றபோதும்,இந்தியத் தேசத்தினது அணுசக்தித்திட்டமானது அரைகுறையான வளர்ச்சிக்கட்டத்துக்குள் இருக்கும் இந்தச் சூழலில் ஐரோப்பிய"சூழலியக் கோசத்தை"சட்டை செய்யாது.செய்வும் முடியாதது.ஐரோப்பா தன்னைக் காப்பதற்கானவொரு ஆயுதமாகவே சூழற்பாதுகாப்பை ஒரு ஆயுதமாகவும் பயன்படுத்துகிறது.அது,மாற்றுத் தேசங்களும்-மக்களும் தமக்கான உற்பத்தித் திறனைக்கொண்டியங்குவதைத் தடுப்பதிலேயேதாம் ஐரோப்பியாவின் பொருளாதாரத்தின் ஏற்றமுண்டு என்பதனைத் தெரிந்தே வைத்திருக்கிறது!

இருளுக்குள் இருப்பவர்கள் ஒளிவருமுன்னமே அந்த வழியைத் தடுப்பதில் உயிர் வாழ்ந்துதாம் என்ன-வாழாவிட்டாற்றாமென்ன?மனிதத் தேவைக்கேற்ப அனைத்தும் வந்தே தீரும்-மாறியே தீரும்!இன்றில்லாவிட்டாலும் எப்போதொரு பொழுதில் லிட்டில் போயும்[ Little Boy_was the codename for the atomic bomb dropped on Hiroshima on August 6, 1945 by the Boeing B-29 Superfortress Enola Gay, piloted by Colonel Paul Tibbets of the 393rd Bombardment Squadron, Heavy, of the United States Army Air Forces ] -பெற் மானும் [Fat Man_ is the codename for the atomic bomb that was detonated over Nagasaki, Japan, by the United States on August 9, 1945. ]இந்தவுலகத்தைப் பூண்டோடு பொசுக்கத்தாம் போகிறது.அதைச் செய்து காட்டிய கீரோசீமா-நாகசாகியை மறந்திட முடியாதல்லவா?பிறகென்ன?கூடங் குளமிருந்தாலென்ன-இல்லாது போனலென்ன?

ஸ்ரீரங்கன்
31.03.2012

Wednesday, January 18, 2012

சிறுபான்மை இனங்களைப் பிளந்து நடைபெறும் அரசியல் :

சிறுபான்மை இனங்களைப் பிளந்து நடைபெறும் அரசியல் :
71 நபர்கள்-கையெழுத்தும்,அறைகூவலும்!

ந்த உரையாடலது உள்ளடக்கஞ்சார்ந்து கருத்துக் கூறுவதென்பதைவிட,இந்த வகை உரையாடலுக்குள்ளும்,71 நபர்களது கோரிக்கை-அறிக்கையென்பதற்குள்ளும் இருக்கும் அரசியலைச் சமாந்தரமாகப் புரிந்துகொள்வது அவசியமாகிறது.

இலங்கையில் இனங்களுக்கிடையிலான அனைத்து முரண்பாடுகளும் ஏதோ இனக் குரோதத்தால்-ஐய்யப்பாடுகளால் எழுந்தாக இருக்கமுடியுமா?

இந்தக்கீரன்,அல்லது ரங்கன் தேவராஜன் போன்றவர்களது கருத்தானது இலங்கையின் சிறுபான்மை இனங்களுக்கானவொரு அரசியல் தீர்வுக்கான பாதையுள்,ஒரு நீண்டகால அரசியல் தீர்வுசார்ந்த ஆரம்பப் புள்ளிகளையே குழப்பிச் சிறுபான்மை இனங்கள்மீது ஒவ்வொரு புறமாக அவநம்பிக்கையையும்,அவதூறையும் விதைத்துத் தொடர்ந்து வரலாற்றுப்பழியூடாக ஒரு இனத்தை இலங்கையில் எந்தவுரிமையுமற்ற நிலைக்குட்படுத்துவதற்கேற்ப சிங்கள ஆளும் வர்க்கத்துக்கிசைவான தெரிவுகளில்(மக்களுக்குள் நிலவும் பல்வேறு "வேறுபாடுகளை" மேல் நிலைக்குக்கொணர்ந்து அவையூடாகப் பிராதான கோரிக்கையை நீர்த்துப்போக வைத்தல்-திசை திருப்பிய அதிர்வுகளின்வழி, மீளப் பிரித்தாளும் வியூகத்தைத் திட்டமிட்டுச் சிங்கள அரசுக்கேற்ப இயக்குவது) அரசியலாகச் செய்கின்றனர்.

இதற்கு முன்மாதிரியாக நிர்மலா போன்றவர்கள் தமது சகோதரியின் படுகொலையை எப்படிப் பிரபலமாக்கி ஒரு அரசியலை இலங்கையரசுக்கேற்பச் செய்தார்களோ,அதையே, மீளவுஞ்செய்வதில் தொடர்ந்து கருத்தியற் போராட்டத்தை இத்தகைய வடிவங்களில் செய்கின்றனர்.

ராஜனி திரணகம போன்ற எத்தனை ஆயிரம் மக்கள் இலங்கையின் இனவொடுக்குமுறை அரசின் சூழ்ச்சியால்-ஒடுக்குமுறையால் கொல்லப்பட்டனர்.இந்த இனவொடுக்குமுறை அரசியற்றொடர்ச்சியால் பலபத்து இயக்கங்களைத் தோற்றுவித்த இந்திய நலனானது, இலங்கையின் மக்களுக்குள் நிகழ்த்திய அரசியலானது மக்களுக்கு விரோதமாக இயக்கங்களை வைத்தே காரியம் செய்துகொண்டது.

அதன் தொடர்ச்சியானது மீளவும், தமிழ்பேசும் மக்களை மொட்டையடிப்பதில் அதே தமிழர்களை வைத்தே நாடகமிடுகிறது. இதுள்,நிர்மலாவென்ன-கீரனென்ன?

அனைத்து நபர்களதும் பின்னே உருவாகி விருட்சமாகி இருக்கும் பிராந்திய நலன்சார் அரசியலது வேட்டைதாம் முக்கியமானது அதைப் பரவலாகவும் பேசியாக வேண்டும்.

நாவலன் வரும் 7ஆம் தேதி பெப்ரவரி,கேள்வி நேரத்தில் பங்குபெற முடியுமெனக் கருதுகிறேன்.

இந்த 71 பேர்களில் எவரும் வந்து விவாதிக்கக்கூடியவொரு களத்தை திறப்போம்.இன்றைய சூழலில் இத்தகைய 71 பேர்களது முகத்தோடு வரும் கோரிக்கை-அறைகூவல்கள் யாவும் பின்னே அதிகார வர்க்கத்தின் அரசியல் நலத்தைப்க்கொண்டியங்குகின்றது.இது,இலங்கை அரசினது இனவொடுக்குமுறை நிகழ்வால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்கோ அல்லது வேறெந்த மக்களுக்கோ எந்த விடிவையும் தரப்போவதில்லை!முஸ்லீம் மக்களது பெயரால் மேலெழும் இந்த அரசியலானது சமீபத்தில் தலித்துவ மக்கள் பேராலும் எழுந்து, இலங்கைச் சிறுபான்மை இனமக்களுக்குள் இனவொடுக்குமுறையென்ற ஒன்றே இல்லாததுபோலக் கட்டமைத்து.அதன் உச்சமாக இதுவும் மேலெழுந்து மேலுமொரு சிக்கலான முரண்வெளியை நமக்குள் தோற்றுவிப்பதில் இலங்கை-இந்திய அரசியல் சூழ்ச்சிக்காரர்கள் வெற்றி கொள்கின்றனர். இவர்களது லொபி அரசியற் செயற்பாட்டையும்,மீளவும் இந்திய அரசும்,இலங்கையும் இணைந்துத் தம் வலுக்கரத்தை இனங்களுக்கிடையில் மெல்ல திணித்துத் தமிழ்பேசும் மக்களது அரசிற் தீர்வுகள்-கோரிக்கைகளை நீர்த்துப்போக வைப்பதும்,வரும் வசந்தகாலத்தில் ஜெனிவாவில் நிகழும் மனிதவுரிமைசார் நிகழ்வூக்க இருக்கையில் இலங்கையின் பாசிச அரசினது இனவழிப்புக் குறித்தும் விவாதங்கள் எழ இருக்கிறது. இவற்றையெல்லாம் திசை திருப்பவும்,தமிழ்பேசும் மக்களும் தமக்குள் இனவாதத்தைக்கொண்டிருந்தனர், தமக்குள்வாழ்ந்த சிறுபான்மை இனத்தை ஒட்டமொட்டையடித்து வெருட்டியடித்தனர், என்பதெல்லாம் ஒரு அரசியலாக மேலெழுகிறது!

நிர்மலா தலைமையில் அணிவகுக்கும் 71 ஆட்டுக்குட்டிகளும்,சிங்கள மேலாதிக்க வாதத்தைக் காப்பதற்கெடுக்கும் முன்நிபந்தனையாகிறது.தமிழ்பேசும் மக்களுக்குள் ஒரு வலுவான அமுக்கக் குழுவாக இது இயங்க வைக்கப்படுவதற்கானவொரு முன்னோட்டமே இந்தக் கோரிக்கை-கையெழுத்து நடவடிக்கை.

இது,திட்டமிடப்பட்ட சதி.

இதற்கேற்பக் கீரன் தொடர்ந்து பேசும் விவேகமற்ற விதாண்டாவாதமானது அரசு என்றால் என்ன அதன் தாத்பாரியம் எப்படி ஆதிக்கமாக மக்களுக்குள் இயங்குகிறதென்பதை வேடிக்கையாகப் புரிந்துகொண்ட சந்தர்ப்பத்தை இவ் வுரையாடல் மூலஞ்செய்கிறார்.

இதுவொரு,தேவையோடுதாம் இத்தகைய முரட்டு மோடர்களை வைத்து இலங்கையின் அரச ஆதிக்கமும்,இந்திய அரசும் தமது நிகழ்ச்சி நிரலைக்குறித்து முன்னோட்டமாகச் சில கருத்துக்களத்தைத் தகவமைக்கிறது.இதனூடாக விரியும் அடுத்த நகர்வானது இலங்கையின்இனப்பிரச்சனையுள் எந்தவித அரசியற் தீர்வையும் தட்டிக்கழிப்பதற்கும்,அதன் வாயிலாக மக்களைத்தொடர்ந்து ஏமாற்றித் தமது அரச அதிகாரத்தை நிலைப்படுத்துவதற்குமான வியூகமே இப்போதைய தெரிவில் முதலிடம் வகிக்கிறது.

யாழ்ப்பாணத்தில் அரச அதிகாரிகளாக இருப்பவர்களே,முஸ்லீம் மக்களது வருகையை எதிர்ப்பதென்பதைத் தமிழர்களாக மொழிபெயர்ப்பதிலுள்ள சிக்கலைக் குறித்து எவரும் கவலைப்பட்டாதாகத் தெரியவில்லை.இதுவொரு தீங்கான திரிபு அரசியல்.

இனவழிப்பைச் செய்த அரசு,புலிகளை அழிக்கும்போது"புலிகள் வேறு,தமிழ்பேசும் மக்கள் வேறு"என்றார்கள்.அப்போ,தமிழ் பேசும் மக்களிலிருந்து வேறானவொரு இயக்கவாத அரசியலும் அதுசார்ந்த அரசியல் நகர்வுஞ் செய்த இஸ்லாமிய மக்களுக்கெதிரான அரசியலை ஏன் இப்போது தமிழ்பேசும் மக்களினத்தின் பெயரால் நீட்டி முடக்குகிறார்கள்?

இந்த"தமிழீழப் போராட்டம்"என்பதன் ஆரம்பமே சிங்கவாத அரசின் இனவொடுக்குமுறையின் விளைவுதானே?

இனவொடுக்குமுறையைக்கட்டவிழ்த்துவிட்டு, மக்களை ஒடுக்கிவரும் அரசானது,அத்தகைய ஒடுக்குமுறையத் தவிர்த்து இனங்களுக்கிடையில் சமாதான சக வாழ்வைச் செய்திருந்தால்,அரசியல்ரீதியாக நியாயமானவொரு தீர்வைச் சிறுபான்மை இனங்களுக்குள் ஏற்படுத்தியிருந்தால், புலிகள்போன்ற அந்நிய அடியாட்படை அமைப்புகள் தோன்றியிருக்க முடியாது.

அவ்வண்ணம், இந்திய சூழ்ச்சிக்குப் பலியாகி,இந்தியாவின் ஆலோசனைக்கிணங்க அநுராதபுரச் சிங்கள மக்கள் கொலைகள்-இஸ்லாமியர்களைத் துரத்தியடித்தலென்ற மக்கள்விரோதச் செயல்களை நமக்குள் செய்யும் இந்நிலை தோன்றியிருக்க முடியாது.

இது திட்டமிட்ட மேற்குலக மற்றும் இந்திய-இலங்கைச்சதி அரசியல்.

இன்றும், அதே பழையபாணிப் பிரித்தாளும் தந்திரத்துடன்,தமிழ்பேசும் மக்கள்மீது கட்டவிழ்த்துவிட்ட இனவழிப்பைத் திட்டமிட்டு மறைக்கவும்,அதன்மீதான கவனத்தைத் திசைதிருப்பித் தம்மை நியாயப்படுத்த முனையும்,இலங்கை-இந்திய ஆளும்வர்க்கத்து அரசியலை முன்னெடுக்கும் இந்த 71 நபர்கள் அடங்கிய கூட்டம் மிகவும் மோசமானவொரு லொபிக்குழுவாக நமது மக்களதும் மற்றும் இலங்கைச் சிறுபான்மை இனங்களதும் உரிமைகளை நசுக்குவதற்கேற்ப இந்த முரட்டுத்தனமான-முட்டாள்தனமான கோரிக்கையூடாக அந்நியத் தேசங்களுக்கு கருத்தியற் காவிகளாகவும்,எமக்குள் ஒரு அமுக்கக் குழுவாகவும் இறக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மிக விரிவாக வரும் 7 ஆம் தேதி கேள்வி நேரத்துள் உரையாடலாம்.

தோழமையுடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
19.01.2012

Sunday, January 08, 2012

கள்ள மௌனம் சாதித்த பேய்களெல்லாம்

இப்பொழுது ,புலம் பெயர் தமிழர்கள் அதிகமாகப் புத்தகங்கள் போடுகிறார்கள்.

புலிகள் இருந்தபோது, ஒரு நூல் வெளிவருவதோ பெரிய முயற்சியாக இருந்திருக்க வேண்டும்.அல்லது ,உயிருக்குப் பயந்து எழுதமால் இருந்திருப்பினம்.

புலியிருக்கும்போது மக்கள் சாவதைத் தேசிய விடுதலையெனக் கள்ள மௌனம் சாதித்த பேய்களெல்லாம் இப்போது,கதை-கவிதைத் தொகுப்பென வெளியிடுகினம்.அதையும் , காலச்சுவடு முதல் கிழக்கு-மேற்குப் பதிப்பகங்களென வெளியிட ,தேசியப் பேச்சாளர் சேரன் பெறுகிறார்.


என்ன கொடுமையடா!,

நாம புலி-அரச பயங்கரவாதங்களைக் குறித்து எவ்வளவு பெறுமதியாக ,மக்களுக்காக உண்மைகளை பேச முற்பட்டிருப்பினும்"துரோகி-எட்டப்பன்"என்ற பட்டங்களைத்தாம் இந்தத் தமிழ்ச் சமூகம் தந்தது-என்ன கொடுமை!


அப்போது,மௌனித்தவர்களது நூல்கள் இப்போது எது குறித்துப் பேசும்?

புலியில்லை-சாவில்லை,பிறகென்ன எல்லாம் ஆறாத வடுக்களாகப் புண்பட்டிருக்கிறதென பாம்புப் புற்றுக்குளிருந்து தலைகாட்டும் இந்தக் காளான்கள் ,மக்கள் குறித்தும்,அவர்கள் வலி குறித்தும் வகுப்பெடுப்பதையும் நாம் இனிக் கேட்டாக வேண்டும்.


கடந்த இருபது ஆண்டாக மாடாய் அடித்து, ஓய்ந்துபோன நான் இதிலிருக்கும் இலண்டன் போகக் கஷ்டப்படும்போது,நேற்று ஐரோப்பாவுக்குள் வந்தவன் இன்று இந்தியா-இலங்கையென ஊர் சுத்த முடிகிறது-எங்கிருந்து பணம் புரள்கிறது?

எல்லாம் பெரிய குழப்பமாக இருக்கிறது.

கல்வி பயின்று,பட்டம்பெற்றுப் பேப்பரோடு வேலை செய்யும் எனக்கு 2200 யுரோ தான் அடிப்படைச் சம்பளம்.கழிவுபோகக் கையில் கிடைப்பது 1650 யுரோ!; இதற்குள் வாடகை வீட்டுக்கு வாடகை கட்டி,கரன்டு பில் கட்டி,தொலைபேசி பில்-கடன் பாக்கி,கட்டியும்,தவணைக்கடன் மாதாந்தஞ் செலுத்தியும் ,கையில் கிடைப்பது வெறும் 400 யுரோ.

இதற்குள், வேலைக்குப் போகக் காருக்கு பெற்றோல்,சாப்பாடு,பிள்ளைகளது படிப்புச் செலவு எனப் பிய்த்துவிடும்போது,மாத மத்தியில் சேடம் இழுக்கிறது.

வாற மாதச் சம்பளத்தை எடுத்து ,இந்த மாதம் வாழும் புலம் பெயர் வாழ்வில் சிலருக்கு எப்படி மேற்சொன்னபடி செலவுகள் செய்ய முடிகிறது?

விசயம் தெரிந்தால் சொல்லுங்கப்பா.

நானும்,இப்படி நாயாய்-ஓடாய்த் தேயத் தேவையில்லை.

50 வயதுக்குப் பிறகு உடம்பு ஒத்துழைக்க மறுக்கிறது.எங்கேயாவது காசி,இராமேஸ்வரத்தை நோக்கி நடவென்று மனம் அலைக்கழிக்கிறது...

// இவ்வுலகமானது ரொம்ப அபாயகரமானது,அதற்குள் வாழ்வதற்கு-இந்நிலை மனிதர்களாலோ,போக்கிரிகளாலோ அல்ல,மாறாக,மனிதர்கள் இவைகளுக்கு அருகினிலிருந்து அவர்களை அநுமதித்து விடுவதாலேயே.//
-அல்பேர்ட் ஐன்ஸ்ரையன்

08.01.2012