இன்று 29.12.2012 இரவு 21:30 மணிக்கு , ஜீ.ரீ வியில்[GTV] "பேசாப் பொருள்" குறித்தவுரையாடலொன்று நிகழ்ந்தது.
திரு.சம்பந்தனது "ஸ்ரீலங்கா இராணுவத்தை"தமிழ்ப் பிரதேசத்திலிருந்து வெளியேறத் தேவையில்லையெனும் பாராளுமன்றப் பேச்சின்மீதான உரையாடலாகப் பேசாப் பொருள் நிகழ்வையின்று நிகழ்த்தினார்கள்.
நிகழ்வுக்குத் தோழர் நாவலன் வந்தார். நேற்றே என்னைப் பங்குபற்றும்படி கேட்டார்.ஆம் என்றேன்.
இன்றும், உரையாடலைச் செய்வதற்குமுன் அதுள் என்னையும் தொலைபேசி வாயிலாகவுரையாடும்படி நிகழ்வேற்பாட்டளரான தயாநந்தாவும்,நாவலனும் வேண்டிக்கொண்டனர். நானும்,ஆம் என்றேன்.
கட்சிசார் அ ரசியலை விமர்சிப்பதும்,ஒரு கட்சியென்பது என்னவென்பதும் சொல்லியாகவேண்டும். பரந்துபட்ட "மக்களது உணர்வுக்கு" அப்பாற்பட்டு, அதை விளக்கும் தேவையும் உண்டு.எனவே,ஆவலோடு "ஆம் " என்றேன்.
இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின்(பொதுவாக அனைத்துக் கட்சியின் என்பதே சரியானது) நோக்கங்களையும்,சாரம்சத்தையும் மதிப்பிடுவதற்கு, கட்சிகள் முன்வைக்கும் அவர்களது" செயற்றிட்டம் "என்பதை ஆராய்வதைக்காட்டிலும் வரலாற்றில் அவை என்ன செய்தனவென்றும்,மக்களை அண்மிக்கும் பல்வேறு பிரச்சனைகளில் எந்த முறையிலான அணுகுமுறையோடு எப்படியான தீர்வுகளைச் செய்கின்றனவென்றும் நாம் நோக்க வேண்டும்.
வர்க்க மக்கள் சமுதாயத்துள் பல்வேறு வர்க்கங்களின், (விவசாயிகள், தொழிலாளர்கள், முதலாளிகள்,நிலச்சுவாந்திரர்களுப்பட்ட) இதரர்களது சீவியத்தின் பிரதான முரண்பாடுகளில் கட்சிகள் எப்படி நடந்துகொள்கின்றனவென்பதிலிருந்தே ஒரு கட்சியின் மீதான ஆய்வை முன் வைத்தாகவேண்டும். இதுதாம் மார்க்சிய-லெனினிய ஆய்வு முறையாகும்.
பேசப்பொருள் நிகழ்வில் இது குறித்து நாவலனோ அன்றி எந்த நேயருமோ உரையாடவில்லை!
என்னைப் பேச வேண்டுமெனக் கேட்டவர்கள்,பின் என்னையும் ஒரு நேயரின் நிலைக்குட்படுத்திப் பொதுவான தொலைபேசியழைப்புக்கு வரவேண்டுமென்றார்கள். நானும் ஒரு மணி நேரமாக முயற்சித்தும் அழைப்புக் கிடைக்கவில்லை.மணியொலிக்கும் நேரம் எனது தொலைபேசியை எடுக்காதிருக்கின்றனர்.பின் அழைப்பையிட்டால் அழைப்பில் மற்றவர்கள் நிற்கின்றனர்.
எனது கருத்தையும் அவசியமாகக் கருதியிருந்தால் அவர்களே அழைப்பைச் செய்திருக்க முடியும்.
தமிழ் அரசியலுக்கு ஏமாற்றத் தெரிவதென்பது சொல்லியா ஆகணும்?
என்னுடைய 25 ஆண்டுகால அரசியல் வாழ்வில் இப்படி எங்கும்-எதுக்கும் ஏமாறிய வரலாறு தொடர்ந்து நிகழ்கிறது.
எவரையுமே நம்பமுடியவில்லை-நம்ப முடியவில்லை!
ஸ்ரீரங்கன்
30.12.2012