Showing posts with label எச்சரிக்கையும். Show all posts
Showing posts with label எச்சரிக்கையும். Show all posts

Saturday, December 08, 2012

புதிய ஜனநாயக மக்கள் தோழமை முன்னணி (புலம் பெயர்)

புதிய ஜனநாயக மக்கள் தோழமை முன்னணி (புலம் பெயர்) விடுக்கும் தோழமைக்கான அறைகூவலும், எச்சரிக்கையும்!


யாழ்ப் பல்கலைக்கழக மாணவரது போராட்டம் இலங்கை பூரகவும் படர்கிறது.இஃது, புரட்சிக் கிளை-விழுதெறிந்து மகிந்தா அரசினது பாசிசத்தைத் தோற்கடிக்கும். புதிய ஜனநாயக மார்க்சிய-லெனியக் கட்சியானது பெருந்தலைவர் தோழர் திரு.செந்தில்வேல் தலைமையில் சிங்கள முற்போக்குச் சக்திகளிடம் "புரட்சிக்குரிய புறநிலைகளைத் தகவமைத்துக் கொண்டு" வருகிறது.

புரட்சிக்குரிய "புறவயச் சூழல் மற்றும் அகவயக் காரணியின் ஒற்றுமைகள்" சிங்களச் சமுதாயச் சூழலில் எவ்வகையில் நிலவுகிறதென்பதைப் பேராசிரியர் Prof.Dr. சி.சிவசேகரம் அவர்களது தலைமையில் கட்சியானது  கள ஆய்வுப்பணியை முடுக்கி விட்டிருப்பது மகிழ்ச்சியே!

இந்தக் கள ஆய்வில்"புரட்சியின் அடிப்படை விதியை அலட்சியப்படுத்துவது அரசியலில் அதி சாகசத்துக்குட்பட்டுப் புரட்சியைத் தோல்விக்கிட்டுச் செல்லும்" என்பதால் தோழர்  இரயாகரன் தானே கவனித்துப் பரிசீலிப்பதற்கான பணியைப் பொறுப்பேற்றிருப்பதும் நமக்கு நம்பிக்கையை இரட்டிப்பாக்கிறது.


அந்த நம்பிக்கைக்கு, உரஞ் சேர்ப்பதுபோல தம்பி பழ.ரிச்சர்ட்டும் தொடர்ந்து நிலத்திலிருந்து புரட்சிகரமான நகர்வுகளைச் செய்து எதிரிக்கெதிராக நெஞ்சை நிறுத்தி, மக்கள் முன் வருகிறான்.இது,இன்றைய நிலத்து இளைய தலைமுறைக்கு வலுவான நம்பிக்கையைத் தருவதும்,புலம் பெயர் இளைய படைப்பாளிகள்,சிந்தனையாளர்களுக்கும் ஆதர்சத்தைத் தருவதாகவும் உணரப்படுகிறதென்றுணரப்படுகிறது.மொத்தத்தில் இஃது,ஒரு இளைய நட்ஷத்திரம்  உருப்பெற்றதன் பலனைக் கட்டியம் கூறி நிற்கிறது.


இன்றைய முதலாளித்துவத்தின் பொது நெருக்கடிச் சகாப்தத்தில் பாசிச மகிந்தாவின் ஆட்சிக் கவிழ்ப்பு பிற்போக்கு வர்க்ககங்களின் எதிர்ப்புரட்சி நடவடிக்கையின் வெளிப்பாடாக இருக்குஞ் சந்தர்ப்பத்தைக் கவனத்திலெடுக்கும் பேராசான் தோழர் இரயாகரன் அவர்கள், இது, குறித்துக் கவனமாக இருக்கவேண்டுமெனத் தோழர் பழ.ரிச்சர்ட்டுக்கு எச்சரித்துக் கண்காணித்து வருகிறார்.எந்த நூல்களை-பத்திரிகைகளை,நபர்களை வாசிக்க-அணுக வேண்டுமெனவும் இளைய தோழருக்கு எடுத்தியம்பி வர்க்கவுணர்வுமிக்க உளவியற்றொடர்ச்சிக்கும் பணியை முடுக்கி விட்டிருக்கும் இந்தச் சூழலில் புரட்சியென்பது ஒரு தேசத்துக்குள் நிலவமுடியாதது.அது, உலகு தழுவியது-நீண்டகாலத்துக்கானதென்பதிலும் தோழர் ஸ்டாலினின் ஆலோசனையைப் படிப்பினையாகவும் நாம் கொண்டிருப்பதால் மகிந்தாவின் பாசிசத்தை முறியடித்து அவரது பதவிக் காலத்துக்கு முன்பே இலங்கைப் பாட்டாளியவர்க்கச் சர்வதிகாரத்தை நிறுவி இலங்கையில் புரட்சிகரமாகச் சமுதாயத்தை மாற்றியப்போம் என நாமும் பகிரங்கமாக அறைகூவுகிறோம்!புதிய ஜனநாயக மக்கள் தோழமை முன்னணியினரான நாமும் நிலத்தில் புதிய ஜனநாயக மார்க்சிய-லெனியக் கட்சியான நமது தாய்க் கட்சியின் பின் தோழமையோடு புரட்சிகர போராட்டத்துள்புரட்சி நடைபோட்டுத் தொடர்கிறோம்.இஃது,உத்தியோக பூர்வமான எமது அறிவிப்புத் தோழர்களே,நமக்குத் தோழமையையும் தங்கள் பொருளாதாரவுதவியையும் மக்களது விடுதலைக்காகத் தமிழ்பேசும் மக்களது விடுதலைக்காகத்தந்து புரட்சியைத் தொடருமாறும் நாம் செவ் வணக்கமிட்டுச் சொல்கிறோம்.




அத்தோடு, புலி அழிப்புக்குப் பின்பான இன்றைய சூழலில்,அந்நிய சக்திகளிடம் கட்டுண்டு கிடக்கும் இலங்கைத் தேசத்தின் ஆளும் வர்க்கத்தால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை உதாசீனப் படுத்தப்படுகிறது.சிங்கள ஏக இனவாதம் தொடர்ந்து இருத்தி வைக்கப்படுகிறது.சிங்கள அடையாளஞ்சார் பண்பாட்டு மேலாத்திக்கம் பற்பல வடிவத்தில் தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய நிலப்பரப்புகளில் கட்டியெழுப்பும் கருத்தியற் பலமானது மேலுஞ் சிக்கலான அக அழுத்தத்தைத் தமிழ்பேசும் மக்களிடம் உருவாக்கும்போது ,அவர்களால் "தமது அடையாளந் தள்ளிவைப்பதெனும் தப்பித்திலே" இந்தச் சிங்களப் பண்பாட்டு மேலாத்திகத்தால் தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது.இலங்கையை ஆளும் மகிந்தாவினது அரசுக்கு மிக அண்மையாக இயங்க முனையும் ஆசிய மூலதனமானது ஆசியாவின் இருபெரும் வல்லதேசங்களால்(இந்தியா-சீனா)நிர்வாகிக்கப்பட்டுப் புதிய சந்தை-கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடல்வழிப் போக்குவரத்துக்கான வியூகத்தில், இலங்கையைக் குறிவைக்கின்றன.


இவ்வெதிர்காலப் பொருளாதார வல்லரசுகள், தமது நோக்கையை மிக இலகுவாக வென்றெடுக்கப் பலியாக்கப்படும் தென்னாசியச் சிறுபான்மை இனம் தமிழ்பேசும் இலங்கை மக்களாக வரலாற்றின் முன் நிற்கிறார்கள்.இந்நிலையுள்,சிங்கள வரலாற்றுப் புனைவுகளைப் புதுப்பிக்க முனையும் சிங்களப் பழமைவாத ஆதிக்க வர்க்கத்துக்குத் தமது தேசத்தின் இறைமையைவிடத் தமிழ் மக்களை ஒட்ட மொட்டையடிக்கும் நோக்குக்கு எவர் அங்கீகாரம் வழங்குகின்றனரோ அவருடன்கூடித் தேசத்தை மொட்டையடித்தாலுங்கூடத் தமிழ்பேசும் மக்களுக்குத் துண்டுவுரிமையும் இலங்கையில் நிலவக்கூடாதென்ற சமூகவெண்ணவோட்டத்தின் தொடரில் தமிழ் அரசியலோ(கட்சி-இயக்க,தலித்துவச் சங்கம் முதல் வேளாளச் சதி அரசியல்வரை) கலந்து சங்கமிக்கிறது.இதுதாம்,இந் நூற்றாண்டின் மிகக் கேடான அரசியல் சூதாட்டம். இவர்களையும் எச்சரித்துப் புலம் பெயர் தளத்தில் இலங்கையரசின்-மகிந்தாவின் பாசிசத்தின் தொங்கு சதைகளான ஞானம்,தேவதாசன்,கீரன்,ரெங்கன்,சோபா சகதி,போன்ற அனைத்து விரோதிகளையும் பேராசான் தோழர் இரயாகரன் தலைமையில் வீழ்த்துவோம் என்பதும் உறுதி.


இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள
ப.வி.ஸ்ரீரங்கன்

மத்திய குழுவுறுப்பினர்
புதிய ஜனநாயக மக்கள் தோழமை முன்னணி (புலம் பெயர்)

08.12.2012 ஜேர்மனி.