Saturday, July 31, 2010

சிதைவு.

சிதைவு.

(நாடகம்)


காட்சி:1

(முதற் திரை விரிய தாடிகாண் பெரிசு(முத்தையா விசரன்),விசரனெனப் பெயர் சூடிய அந்தவூரில், அதிகம் கற்ற மனிதத்துக்கானவொரு உயிர்.தனது நிலையில் தன்னைப் பிரகடனப்படுத்த கவிதையாய்த் தன்னை உலகுக்கு ஒப்புவிக்கிறார்.அவரைச் சுற்றிச் சின்ன வண்டுகள்(சிறார்கள்)ஊரினது சாயலிலுள்ள முற்றத்தில் ஓடி விiயாடுகிறார்கள்(எட்டுக்கோடு-கோலி) அந்த முற்றத்துக்குச் சொந்தமான வீட்டின் குந்தில் வயசான மூன்று கிளார்களும் இரண்டு இளைஞர்களும் ஒரு பெட்டிளைப்பிரித்துப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.அப்பெட்டிக்குள்உலர் உணவுப்பொருட்கள் இருக்கிறது.)

முத்தையா (ஊருக்குவிசரன்):

திகழ் ஒளி நிலத்தில் சிந்த
விளங்கு பயிர் வான் நோக்கும்
எனினும்
எனக்கென்றொரு விடிவு இருண்டு கடந்தது
குப்பைக்குள் கிடக்கும் எனது எலும்புத்துண்டு
கோவணம் கட்டுகிறது வினை முடிப்பதற்கு
இது போதாத காலம்


மெலிய படுகையொன்றில்
தூங்குகிறது என் பாவம்!
பயிர் முளைத்தறியாத உவர் மண்ணாய்
மனங்கள் சில மனிதரின் பெயரில்
பெருங் கூச்சலுக்குள் கீறப்படும் கோடுகள்
அவை வளைந்தும் குறுகியும் குற்றப் பத்திரிகை தாங்கி


பொழுது புலரும்
போகும் நாளிகையும் மீண்டு வரும்
பொய் அறியாக் காலமும் கட்டுண்ட மனிதருக்காய் இரங்கும்
ஆனால்
மனிதன் நானோ மண்ணுக்குள் போய்விடினும்
மரணம் அறியாச் சிறு துகளாய்
மரணப் படுக்கையில் முள்ளாய்க் குற்றும் இருப்பு
எனது எலும்புத் துண்டம் எதிரில் தோன்ற

தோரணங்கள் துன்பித்துத் தொங்க
தூவும் மலர்ச் சொரிவும்
அர்ச்சனைக்கான அவசரத்துள்
ஆருக்கோ அபிஷேகம் அதற்கு அவஸ்த்தை

எச்சங்கள் அழித்தவொரு படுகையில்
நாளைய நிலை மறுப்பை நிச்சயிக்கச் சில முனைப்புகள்
எடுத்த எடுப்பில் சூரியனுக்குத் தூக்கு
ஊர் பெரியவரின் உதட்டில் உதிர்ந்தது உண்மை

கருத்தரித்த எனது இருப்பில்
பச்சை குத்திய முகங்களுக்கு எவருரிமை கொள்வார்?
வயற் பரப்பில் வட்டமிட்ட காகங்கள்
புழுக்களோடு மல்லுக் கட்டுகிறது
மண்பதத்தைச் செய்தவை புழுக்கள்!

தோப்பாக நின்றபோது நான் பெருங்காடாகவும்
தனிமரமாக நின்றபோது தடங்கலாகவும்
தெருவோரத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன
தறித்தெறிவதற்குத் தோதான கோடாரிக்கு
நானே முன்னொரு பொழுதில் காம்பாக இருந்திருக்கிறேன்

ஊழீ முதல்வனும் உயிர் தந்த ஆழீயும் எனக்குள் உறங்க
ஓரத்துக் கிளையில் முறிபடும் காலம்
ஈரத்தை மறைத்த இறங்காப் பொழிவில்
இதயத்தை இழக்கும்!

திகழ் ஒளி
நிலத்தினுள் சிந்தினும்
விளங்கு பயிர் வான் நோக்கினும்
விடியாத சில தேசங்கள்
எவனுக்கோ
முகமொன்று செய்து கடைவிரிக்கச்
சில காலிகள் தெருவெங்கும் ஒட்டுகிறது
களவாடிய எவன் அறி புலனை


(விசரனான அறிஞன் சிறார்களுக்கு கவிதை சொல்லி முடிக்கச் சிறார்களது சிரிப்பொலி வானை அதிர முத்தiயா மெல்ல நகர்கிறார்.அவர் அரங்கைவிட்டு கீழிறங்கிப பார்வையாளர்களை விழித்து விலகிறார்.முத்தையா விசரனின் கவிதைக்கும் தமக்கும் சம்பந்தமில்லாது உலர் பொருள்களோடு அந்த வீட்டின் குந்திலிருந்தவர்கள் ஒன்றிப்போக,அந்த முற்றத்துக்குச் சில வருகிறார்கள்.அதுள்குமுதினி, செல்லம்,தங்கமணி என்ற மூன்று பெண்களும்,சுந்தரம்,ராசா,மணி ஆகிய நடுவயதுக்காரர்கள்அடங்குவர்.அவர்கள் வீட்டின் குந்தில் பெட்டியோடிருக்கும் உலருணவுப்பொருட்களை உற்றுப் பார்த்தபடி இருக்க தங்கமணி பேசத்தொடங்கிறாள்.)



தங்கமணி: ஏன்டி ராசாத்தி இந்தியா எங்களுக்குச் சாப்பாடு போட்டமாதிரி நாடு பிடிச்சுத் தருமாடி?

ராசாத்தி:இந்தா பார் தங்கமணி அக்கா என்னைப் போட்டுப் பிராண்டாத.உன்ர கேள்வியை முத்தையா விசரனிட்டக்கேள்.எனக்கு இந்தியாவைத் தெரியாது.

(தங்கமணி,ராசாத்திக்கான பேச்சு வார்த்தைகளைக்குந்திலிருந்து கூர்ந்து கவனித்த மூன்று கிளார்களில் ஒருவர் எழுந்து முற்றத்துக்கு வருகிறார்.வந்தவர் தங்கமணியிடம் மட்டுமல்ல எல்லோருக்கும் பொதுவாகப் பேசத் தொடங்குகிறார்.)


மூன்று கிளவரில் ஒருவர்: இங்சபாருங்க,இப்ப எங்களுக்கு இந்தியா சாப்பாடு போட்டிருக்கு.இன்னுஞ்சில காலத்தில அது கட்டாயம் எங்களுக்கொரு தீர்வைச் செய்யும்.இப்ப எங்கட மண்ணுக்கு இந்தியா நேரடியாகத் தலையிட்டிருக்கு.அது எங்கட ஆறுகோடிச் சனத் தொகையை உலகுக்கு எடுத்துச் சொல்லுறதெண்டுதான் அர்த்தம்.


(இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது முத்தையா விசரன் ஒரு சிறு பெட்டியைக் காவிக்கொண்டு வருகிறார்.அவரது வருகைக் கண்ட வீட்டின் முன் உரையாடிய கூட்டம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மீளவும் சின்னஞ் சிறுசுகள் அவருக்குப் பின்னால் வால்பிடித்து வருகிறார்கள்.அந்தப் பெட்டியை அவர் முற்றத்தில் வைத்துவிட்டு,அப்பபெட்டியில் அமர்ந்தபடி தன்பாட்டிற்குப் பேசுகிறார்.அது,எல்லோருக்கும் கேட்கும்படியாக இருக்கிறது.)


முத்தiயா(விசரன்): இந்தியா பிளேனால பெட்டி போட்டிருக்கு.இந்தப்பெட்டிக்குள் சாப்பாடு இருக்கட்டும்.அது ஒரு நாள் சாப்பாடு தந்த கையால எங்களுக்கு பெட்டியடிக்குமோ எண்டும் பயமா இருக்கு.

(முத்தையா பேசும்போது,அவரைத் துரத்துகிறாள் தங்கமணி.முத்தையா கொண்டுவந்த பெட்டியை முற்றத்தில் விட்டுவிட்டு ஒடித் தப்புகிறார். அவரது பெட்டியை சுந்தரம்,ராசா,மணி ஆகியோர் உடைத்துப் பார்க்கிறார்கள்.அதற்குள் புத்தகங்கள்.அவைகள் எல்லாம் சிவப்பு நிறங்களில் இருக்கின்றன.இளைஞர்கள் அவற்றை விரித்துப் பார்க்கும்போது திரை மூடுகிறது.)

(திரை)


காட்சி:2

(திரைவிரிகிறது.ஒரு மாதாகோவிலது சூழல் அரங்கத்தில்.அது மாதா கோவிலென மற்றவர்கள்-பார்வையாளர்கள் அறியும் திரை அமைப்பு-அரங்கமாக இருக்கவேண்டும்.அந்தக் கோவிலிலுள் வயசான தாயொருத்தி ஜெபஞ் செய்கிறாள்.அவளது குரல் மிக யதார்த்தமாக இருக்க வேண்டும்.)



வயசான தாய்:

ஏசுவே உன் பிறப்பையும்
பலமுறைகள் கொண்டாடியாச்சு
இருந்தும்
கொடு வாழ்வு நமக்குப்
போனதாகத் தெரியாதிருக்கும்
இந்தப் பொழுதில்
உம்மைச் சிலுவையில் அறைந்த அதே கரங்கள்
எம்மையும் சிலுவையில் அறைய
எவரும் விழி திறவார்-நீயுந்தான்ஆண்டவனே!


நீ கொடுத்து வைத்தவன்
ஈராயிரமாண்டுகளாய் உன் இறப்புப் பிறப்புப் பேசப்படுகிறது
எங்கள் அழிவும் உன்னைப் போன்றதே
எனினும்
எவருக்கும் உணர்வு முளைக்கவில்லை
எல்லோரும் ஏறி மிதித்க
எங்கள் தேசம் எருசலேம் ஆகிறது


முசுக்கொட்டைச் செடிகளின் நுனியிலே
செல்லும் இரைச்சலைக் கேட்கும் போதே
சீக்கிரமாய் எழுந்து போகவும்
கர்த்தர் எமக்கு முன்பாக
எமது எதிரியை முறியடிக்கப் புறப்பட்டதாகவும் சொன்னாய்


எமக்குள் நடப்பதோ வேறு!
பற்றைக்குள் மறைந்தவர் மறைந்தவரே கர்த்தரே
படும் துன்பம் அப்பாவிகளுக்கே
நீயோ வானத்தில் மௌனித்தபடி
கர்த்தரின் கணகணப்பில்


நானோ பிள்ளையைத் தொலைத்தவள்
சுற்றஞ் சுகம் தொலைத்தவள்
என் பரலோகத்தில் இருக்கும் பிதாவே,
என் தேசத்தின் பிதாவுக்கு
தேவையான ஆட்பலத்தையும்
பொருட்பலத்தையும் நாம் இட்டும்
தேசம் விடியுந்தருணம் எங்கோ தொலைந்து
தறிகெட்டலைகிறதே!-நீ எமக்குக் கண் திறவாயோ?


எமக்காக நீயேன் முன் சென்று
எதிரிகளை நிர்மூலமாக்க முடியாது?


(அந்தத் தாய் மாதா கோவிலில் அழுது மன்றாடுகிறாள்.அவள் கண்ணீருடன் தலைவிரிகோலமாகக் கோவிலைச் சுற்றி அலைகிறாள்.அவளது அருகினில் சில இளைஞர்கள் ஏதோ காரணத்துக்காகக் கூடுகிறார்கள்.அவள் அவர்களிடமிருந்து எதையோ எதிர்பார்க்கிறாள்.அந்த இளைஞருள் ஒருவன் அத் தாய்க்கு ஆறுதல் சொல்லி அனுப்புகிறான்.அந்த ஆறுதல் வாய் அசையலில்மட்டும் இருக்கும்.பார்வையாளர்களுக்கு வாய் அசைவுகள்மட்டுமே தெரிய வேண்டும்.இனைஞர்களது ஆறுதல் வார்த்தைகளுக்குப்பின் தாய் கோவிலை விட்டுச் செல்லுகிறாள்.அவளது நடையிலொரு தெளிவு இருக்கிறது. இப்போது மாதா கோவிலில் கூடிய அந்தச் சில இளைஞர்களுள் சுந்தரம்,ராசா,மணி ஆகியோரும் நிற்பது தெரிகிறது.அவர்கள் முத்தையா விசரரின் பெட்டிக்குள் இருந்த நூல்களை மற்றவர்களுக்கும் பரிமாறுகிறார்கள். அப்போது,சுந்தரம் பேசுகிறான்.அப் பேச்சுப் பார்வையாளருக்கு நன்றாகக் கேட்கிறது.)

சுந்தரம்: தோழர்களே,நமது கைக்கு வந்திருப்பது எமக்கான வழிகாட்டி.நாம் தனித்திருந்து ஒன்று கூடியுள்ளோம்.எமது மக்களுக்கு நாம்தான் விடிவை ஏற்படுத்த வேணும்.இந்தியாவை நம்பக் கூடாது.

(சுந்தரத்தின் பேச்சை முறித்து ராசா கேள்வி கேட்கிறான்)

ராசா: ஏன் நம்பக்கூடாது?

சுந்தரம்: அதுக்கு தனது நலன்கள்தான் முக்கியம்.

மணி: அண்ணே எதைவைச்சுச் சொல்லுறியள்?

சுந்தரம்: இந்தியாவில் இருக்கிற தேசிய இனங்களை வைச்சுத்தான் சொல்லுறேன்.அவர்களை அடக்கும் இந்தியா எங்கட பிரச்சனையையும் அப்படியே அடக்கும்.

ராசா: அப்ப என்ன வழி?

சுந்தரம்: நாங்கதான்,எங்கடி கைகள்தான் உதவும்.எங்கட சனங்களை முதலில் ஒன்றாக்குவம்.பிரிவுகளை-பிளவுகளை ஐக்கியப்படுத்தினால்மட்டுமேதான் நாம் விடுதலையடைய முடியும்.


(சுந்தரம் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு சிறுபையன் ஓடோடிவந்து சுந்தரத்தின் காதுக்குள் ஏதோ சொல்ல அவர்கள் அனைவரும் கலைகிறார்கள்.திரை மூடுகிறது.)

(திரை)

காட்சி:3

(திரை மேலெழுகிறது.அலங்கோலமான வீடு.நாலா பக்கமும் சிதைவுகள்.அந்த வீட்டின் முன்னாள் இருந்து வயசாகிப்போன கிழமான தங்கமணி புலம்புகிறாள்.இண்டைக்கு இருபது வருஷத்துக்கு முன்னால சாப்பாடு போட்ட இந்தியா என்ர குடியைக் கெடுத்துப்போட்டுதே:என்ர வாழ்கையை நாசமாக்கிப்போட்டுதே என்று ஓங்கி அழுகிறாள்.அவளின்ஒப்பாரியைக் கேட்க யாருமில்லை.வீட்டிற்கு முன் பகுதி முள்வேலி தொடுக்கப்ப்டு மனிதர்கள் அடைக்கப்பட்டிருக்க அங்கே இராணுவத்தின் திமிர் துப்பாக்கி காவி மனிதர்களை கட்டளையுடன் பணிய வைப்பதாகவும்,அந்த மனிதர்களுக்கு உணவுப் பொட்டலும் எறியப்படுவதுமாக இருக்க,அவர்கள் முட்டிமோதி அவ்வுணவைப் பெறுவதுமாக ஒரு காட்சி இருக்கிறது.இப்போது திரை மூடப்படுகிறது.)

(திரை)

காட்சி:4

(திரை விரிகிறது.முட்கம்பி வேலிகளுக்குள் மனிதர்கள் அடைத்து வைக்கப்பட்டு,அவர்கள்அதற்குள் சிறைப்பட்ட வாழ்வு வாழ்கிறார்கள்(காட்சியில் இது கொணரப்படவேண்டும்).அந்தச் சனத்தொகைக்குள் முத்தiயாவும் நிற்கிறார்.மிக வயதாகிக் கூனிக்குறுகி நிற்கும் அந்தப் பொழுதில் அவர் சிறார்களை இருத்தி வைத்துச் சோறூட்டுகிறார்.சிறார்களோடு பெரியவர்களும் அமர்ந்திருக்கின்றனர்.அவர்களை இராணுவம் கண்காணிக்கிறது.)

முத்தiயா: எல்லாம் இழந்துபோட்டம்.இப்ப சோத்துக்குக் கயூவில நிக்கிறதே ஒரு தவம்தான்.

ஒரு சிறுவன்: அப்பு அம்மாவைப்பற்றி அறிஞ்சனீங்களோ?

முத்தiயா: இல்லை.எந்தக் காம்பில இருக்கினமோ தெரியாது.(முத்தiயா சோற்றைப் பிசைந்தபடி இருக்க)

இன்னொரு சிறுவன்:அப்பு கதை சொல்லுங்கோவன்.ஆமிக்காரன் அடிக்கிற கதை வேணாம்.

முத்தையா குழந்தைகளை இழுத்து அரவணைக்கிறார்.பின்பு கதை சொல்லகிறார்.

முத்ததையா: இரு நாட்டில் ஒரு தேசம் இருந்தது.அந்த தேசத்தில்எல்லோருக்கும் தமிழ்தெரியாது.அதுபோல சிங்களமும் தெரியாது.

(முத்ததையா கதையைத் தொடங்கச் சிறுவர்கள் மெல்ல அவரிடமிருந்து பிரிந்து போகிறான்கள்.பெரியவர்கள் முத்தையாவை ஏளனமாகப் பார்க்க அவரும் நிலத்தில் துவாயைப் போட்டுச் சாய்கிறார்.அந்தச் சந்தர்ப்பத்தில் சில இராணுவத்தினர் அந்த முட்கம்பிக்குள் வாழ்பவர்களில்சிலரை(ஆண்-பெண்) இழுத்துச் செல்கின்றனர்.முத்தiயா தரையிலிருந்து எழுந்து வானத்தைப் பார்க்கிறார்.அவரை ஏளனமாகப் பார்த்த சனங்கள் இப்போது கூர்ந்து கவனிக்கின்றனர்.வானத்தைப் பார்த்தவர் இப்போது சனங்களைப் பார்த்துப் பேச முனைகிறார்.)

முத்தiயா: எக்காலமும் இப்படி இருக்க முடியாது.என்றைக்கும் அவமானப்படுத்துவதும்,வதைபடுவதும் சாத்தியமில்லை.ஒன்று மட்டும் நிச்சியம்.நாம் எல்லோரும் வாழ ஆசைப்படுகிறோம்.அதை இந்த அரசு புரிகிறதாயில்லை!(பெரு மூச்சு விடுகிறார்)

முத்தiயாவின் கூற்றைச் சனங்கள் கூர்ந்து கவனித்து ஆமோதிக்கின்றனர்.இந்தச் சந்தர்ப்பத்தில் இராணுவம் மீளவும் வருகிறது.முத்தையா பேச்சை நிறுத்துகிறார்.சனங்களைக் கட்டளையிட்டுக் கயூவில் நிற்க வைக்கும் இராணுவம் அவர்களை மீளக் கணக்கெடுக்கிறது.இப்போது திரை மூடப்படுகிறது.)


(திரை)


காட்சி: 5

(திரை மேலெழும்போது சிங்களத் தலைநகரம் காட்சியாகிறது.அங்கே,களியாட்டங்கள் நடுக்கிறது.வெடிகள்-கொடிகளெனக் காட்சிக்குட்படுத்தும்)

தொடரும்

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
03.10.2010

No comments: