Showing posts with label யுத்தமும். Show all posts
Showing posts with label யுத்தமும். Show all posts

Sunday, May 11, 2008

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு இராணுவ உதவி வழங்குவது உண்மையா...

இலங்கை பற்றி எந்த அயல்நாட்டினது அக்கறையும்
இலங்கையின் உள்விவகாரங்களின் உள்ள அக்கறை தொடர்பானதல்ல!


//தமிழ்த் தேசியவாதிகள் வேண்டுவதை எல்லாம் ஏற்பது போல
நடித்தவர்களை நம்பி இனியும் தமிழர் ஏமாற நியாயமில்லை. தமிழ் மக்களுக்கும் சகல
ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கட்கும் சமூகப் பிரிவினருக்கும் தேவையானது நீதியும் நிலையான
சமாதானமுமே. அதற்கு உண்மையான ஆதரவு எங்கு உண்டோ அதைக் கவனியாமல், தொலைந்த இடத்தில்
பொருளைத் தேடாமல் வெளிச்சம் உள்ள இடத்தில் தேடிய முல்லா நஸ்ருத்தின் மாதிரி நமது
தலைவர்கள் நடந்து கொள்ள நாம் இடமளிக்கக் கூடாது. //


இந்திய அரசாங்கம் இலங்கைக்கு இராணுவ உதவி வழங்குவது உண்மையா என்பதைக் கூட ஐயத்திற்கும் விவாதத்திற்கும் உரிய விடயமாக்குவதில் தமிழக அரசியல்வாதிகள் சிலரும் அவர்கட்கு முக்கியத்துவம் வழங்குகின்ற ஊடகங்களும் சிறிது வெற்றி பெற்றிருந்தாலும் அண்மைய செய்திகள் உண்மை என்னவென்பதை உறுதிப்படுத்தியுள்ளன. இலங்கை பற்றி எந்த அயல்நாட்டினது அக்கறையும் இலங்கையின் உள்விவகாரங்களின் உள்ள அக்கறை தொடர்பானதல்ல.

உலகில் எந்த ஒரு நாட்டினதும் உள்விவகாரங்களில் இன்னொரு நாடு குறிப்பாக வலிய நாடு ஒன்று, அக்கறை காட்டுவது நிச்சயமாக அந்த நாட்டின் நலன் கருதியோ அதன் உள் முரண்பாடுகளில் உள்ள ஈடுபாடு காரணமாகவோ அல்ல. ஒடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரிவின் சார்பாகவோ அவர்களை ஒடுக்குகின்ற அரசின் சார்பாகவோ எந்த அயல்நாடும் குறுக்கிடுகிறது மேலாதிக்க நோக்கம் தொடர்பானதே என்பதை எத்தனையோ தடவைகள் கண்டுள்ளோம். ஒரு இன அடையாளங் கொண்ட மக்கள் ஒரு நாட்டில் ஒடுக்குமுறைக்குள்ளாகும் போது பிற நாடுகளில் உள்ள அதே இன அடையாளமுள்ளோர் அதுபற்றிச் சினங்கொள்வதும் விடுதலைக்கு ஆதரவாயுங் குரல் கொடுப்பது போராட்டத்திற்கு உதவுவதும் பல்வேறு சூழ்நிலைகளில் நடந்துள்ளது. ஆயினும் அவ்வாறு நடப்பதற்கான கட்டாயம் ஏதும் இல்லை. அந்த ஆதரவு விடுதலைக்குரிய போதிய உத்தரவாதமுமல்ல. 1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்படப் பல ஆண்டுகள் முன்பிருந்தே பலஸ்தீனத்தின் அராபியருக்கு எதிரான வன்முறை யூதப் பயங்கரவாதக் கும்பல்களால் தொடக்கப்பட்டுவிட்டது. அராபியரை அவரது சொந்த மண்ணிலிருந்து விரட்டி உருவாக்கப்பட்டதே இஸ்ரேல். இஸ்ரேலின் உருவாக்கத்தையொட்டி அரபு நாடுகள் சில போர் தொடுத்தன. ஆனால், பலஸ்தீன அரபு மக்களுக்கு மிஞ்சியது என்ன? இன்றுவரை நாடற்றவர்களாகத் தமது மண்ணிலும் அண்டை நாடுகளிலும் அதற்கப்பாலும் அகதிகளாக வாழுகிறார்கள். தமது சொந்த மண்ணில் மிகக் கொடுமையாக அடக்கப்படுகிறார்கள்.


//அமெரிக்க - இந்திய நட்பு அப்படிப்பட்டதல்ல. அதிலே சமத்துவம்
என்ற பேசுக்கே இடமில்லை. அமெரிக்கா இந்தியா மீது ஆதிக்கஞ் செலுத்த இயலுமானால்
மட்டுமே அமெரிக்கா இந்தியாவின் தென்னாசிய மேலாதிக்கத்திற்கு உதவும். மற்றப்படி,
தனக்குக் கீழ்ப்படாத ஒரு இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கம் அமெரிக்காவின் உலக
மேலாதிக்க நோக்கங்கட்கு முரணானதாகவே அமையும். இதுவே அமெரிக்க இந்திய உறவில்,
குறிப்பாகத் தென்னாசிய அரசியல் பற்றிய நிலைப்பாடுகளில், ஒரு முரண்பாடாகத்
தெரிகிறது.
அதை நம்பி நாம் அமெரிக்காவின் பக்கம் சாய்வதோ இந்தியாவின் பக்கம்
சாய்வதோ தமது நன்மைக்கு அல்ல. இந்த நாட்டின் தேசிய இனப்பிரச்சினையை மேலும்
மோசமாக்குகிறதற்கே இந்தப் பாதை இட்டுச் செல்லும். //



உலகெங்கும் தமிழர் உள்ளனர் அவர்கட்கென்று ஒரு நாடு இல்லை என்றும் சனத்தொகையில் தமிழருடன் ஒப்பிடத்தக்க அராபியருக்கு இருபதுக்கும் மேலான நாடுகள் உண்டு என்னும் வாய்ப்பாடு மாதிரிச் சிலர் ஒப்பித்து எழுதி வருகின்றனர். அத்தனை அரபு நாடுகள் இருந்தும் உலக அரபு மக்களின் நிலை என்ன? இன்னமும் இஸ்ரேலால் எந்தவிதமான தயக்கமுமின்றிப் பலஸ்தீன மண்ணைத் தொடர்ந்து அபகரிக்கவும் பலஸ்தீன அராபியரை இம்சிக்கவும் முடிகிறது. லெபனானின் எல்லைக்குக் குறுக்காகத் தாக்குதல் தொடுப்பதுடன் அதன் தலைநகர் மீதுங் குண்டெறிய முடிகிறது. சிரியாவிடமிருந்து நாற்பது ஆண்டுகள் முன்பு பறித்த பகுதியிலிருந்து வெளியேற மறுக்கிறதுடன் சிரியாவிற்குள் தாக்குதல்களை நடத்த முடிகிறது . இஸ்ரேல் தனது சொந்த வலிமை காரணமாக இவ்வளவு திமிருடன் நடந்துகொள்ள முடிகிறது என்று யாருஞ் சொல்ல இயலுமா?

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் கரமாகவே இஸ்ரேல் செயற்படுகிறது. இஸ்ரேலின் வலிமை அமெரிக்காவின் வலிமையே ஒழிய வேறல்ல. இன்று மத்திய கிழக்கில் அமெரிக்கா- இஸ்ரேல் - துருக்கி என்கிற கூட்டணி ஆதிக்கம் செலுத்துகிறது. அமெரிக்காவுக்கு எதிராகவும் அமெரிக்கா மீதான அச்சங்காரணமாக அல்லது அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் ஆட்சியில் நிலைக்க முடியாது என்பதனால் மத்திய கிழக்கில் நடக்கிற எந்த அநீதியையும் தட்டிக் கேட்க இயலாதவையாக அரபு அரசுகள் உள்ளன. அது மட்டுமல்லாமல் எந்த அமெரிக்கா உலகில் சனநாயகத்தை நிலைநிறுத்தவும் பயங்கரவாதத்தை ஒழிக்கவும் போர் தொடுத்து வருகிறதோ, அதே அமெரிக்காவின் முழு ஆதரவுடன் தமது நாடுகளில் கொடுமையான அடக்குமுறை ஆட்சிகளை நடத்துகின்றன. அமெரிக்கா ஒழித்துக்கட்டப் போவதாகச் சபதம் செய்துள்ளதே, அந்த அல்-க்ஹைதா அதை உருவாக்கியதும் சோவியத் யூனியனிலும் இஸ்லாமிய தீவிரவாதிகளை அனுப்பி வைத்ததும் அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளியாக இருந்து வந்த சவூதி அரேபியாதான்.


//ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பு விடுதலைப் போராட்டத்திற்கான
புதிய தொடக்கங்களை வழங்கியுள்ளது.
அமெரிக்கா ஈராக்கில் ஏன் குறுக்கிட்டது
என்பது பற்றிய சிந்தனை இல்லாமல் சதாம் ஹுசேனின் வீழ்ச்சியை முன்வைத்து அதை
நியாயப்படுத்தியவர்கள் இருந்துள்ளனர். யுகோஸ்லாவியாவின் ஒவ்வொரு சமஷ்டி அரசையும்
பிரித்தெடுத்ததுடன் எஞ்சியிருந்த சேர்பியாவிலிருந்து கொசோவோவையும் அமெரிக்கா
பிரித்தெடுத்துள்ளது. அதே அமெரிக்கா முன்னாள் சோவியத் குடியரசான ஜோர்தியாவிலிருந்து
பிரிந்து தனிநாடாவதற்காக 1990 முதல் போரிடும் தேசிய இனங்களின் பிரிவினையை இப்போது
ரஷ்யா பகிரங்கமாக ஆதரிப்பதை ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் குறுக்கிடுவதாகக்
கண்டனந் தெரிவித்துள்ளது. கொசோவோ பிரிவினையை ஆதரித்த அமெரிக்காவின் ஐரோப்பியக்
கூட்டாளிகளும் அமெரிக்காவுடன் சேர்ந்து கூக்குரலிடுகின்றனர். கொசோவோவுக்கு ஒரு
நீதியும் தென் ஒஸ்ஸெற்றியாவுக்கும் அப்காஸியாவுக்கும் இன்னொரு நீதியுமா?
//

அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தின் நன்மைகளை அரபு மக்களில் ஒரு சிறிய பகுதியினரே அனுபவிக்கின்றனர். ஊழல் மிக்க, நடத்தை கெட்ட ஆட்சியாளர்கள் இஸ்லாமிய மார்க்கத்தின் பேரைச் சொல்லி அரபு மக்களை துய்த்தும் அடக்கியும் ஆண்டு வருகிறார்கள். அரபு மக்களின் நலனுக்கும் அராபியருக்கான நாடுகள் எத்தனை உள்ளன என்பதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. சில நாடுகளில் அரபு மக்களின் நலனுக்காக இயங்கி வந்த இடதுசாரிகளை 1940களில் ஒழித்துக் கட்டிய அரபு தேசியவாதக் கட்சிகள் கொடுமையான அடக்குமுறை ஆட்சிகளாயின. எனினும், அவற்றில் ஓரளவேனும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இருந்தது. இப்போது அதுவும் ஏகாதிபத்தியத்தால் இலக்கு வைக்கப்படுகிறது. இன்னொரு விதமாகச் சொன்னால் பூரண சுதந்திரமான அரபு நாடு என்று சொல்லக்கூடிய நிலையில் ஒரு அரபு நாடும் இல்லை.


1950 களில் முடியாட்சிகளை வீழ்த்தத் தொடங்கி 1960 களில் அந்நிய ஆட்சியாளரை விரட்டிய விடுதலை இயக்கத்தை அரபு மக்கள் மீளக் கண்டறிய வேண்டியுள்ளது. அதற்கான போராட்ட மரபு பலஸ்தீனத்தில் உயிருடன் உள்ளது. ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பு விடுதலைப் போராட்டத்திற்கான புதிய தொடக்கங்களை வழங்கியுள்ளது.


அமெரிக்கா ஈராக்கில் ஏன் குறுக்கிட்டது என்பது பற்றிய சிந்தனை இல்லாமல் சதாம் ஹுசேனின் வீழ்ச்சியை முன்வைத்து அதை நியாயப்படுத்தியவர்கள் இருந்துள்ளனர். யுகோஸ்லாவியாவின் ஒவ்வொரு சமஷ்டி அரசையும் பிரித்தெடுத்ததுடன் எஞ்சியிருந்த சேர்பியாவிலிருந்து கொசோவோவையும் அமெரிக்கா பிரித்தெடுத்துள்ளது. அதே அமெரிக்கா முன்னாள் சோவியத் குடியரசான ஜோர்தியாவிலிருந்து பிரிந்து தனிநாடாவதற்காக 1990 முதல் போரிடும் தேசிய இனங்களின் பிரிவினையை இப்போது ரஷ்யா பகிரங்கமாக ஆதரிப்பதை ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் குறுக்கிடுவதாகக் கண்டனந் தெரிவித்துள்ளது. கொசோவோ பிரிவினையை ஆதரித்த அமெரிக்காவின் ஐரோப்பியக் கூட்டாளிகளும் அமெரிக்காவுடன் சேர்ந்து கூக்குரலிடுகின்றனர். கொசோவோவுக்கு ஒரு நீதியும் தென் ஒஸ்ஸெற்றியாவுக்கும் அப்காஸியாவுக்கும் இன்னொரு நீதியுமா?

இங்கெல்லாம் தேசிய இனப்பிரச்சினைகள் அந்நிய வல்லரசுகளது உலக மேலாதிக்க, பிராந்திய மேலாதிக்க நோக்கங்கட்கு வசதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. எனவேதான், உலக மக்களின் நட்பையும், நீதிக்கான போராட்டங்கட்கான பொதுவான ஆதரவையும் ஆட்சியாளர்களின் இரகசிய நோக்கங்களையும் வேறுபடுத்திக் காணத் தவறுகிற போது மேலாதிக்க நோக்கங்கட்கு நாம் உதவுகிறவர்களாகிறோம்.


தமது பிரச்சினைகளைத் தீர்க்குமாறு நாம் வேண்டிக் கொள்கிற ஒவ்வொரு அந்நிய நாடும் எவ்வாறு தமது பிரச்சினை தொடர்பாக நடந்து கொண்டுள்ளது என்று கவனிப்போமா? சொன்னவற்றையும் செய்தவற்றையும் ஒப்பிட்டுப் பார்ப்போமா? உலக அரங்கில் மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் அமெரிக்கா குறுக்கிட்டுள்ள அளவுக்கு வேறெந்த நாடாவது குறுக்கிட்டுள்ளதா? அக்குறுக்கீடுகளால் நன்மை கண்டோர் யார்? அமெரிக்க மக்களும் அமெரிக்கக் குறுக்கீடுகளால் நன்மை அடையவில்லை என்பதை நாம் மறக்கலாகாது. அமெரிக்காவின் போர்களால் ஏற்படுகிற எண்ணெய் விலை ஏற்றமும் அமெரிக்காவின் பெரு முதலாளிய நிறுவனங்கட்கே நன்மையாகியது. அங்கே பஞ்சம் ஏற்பட்டாலும் அவர்கள் பணங் குவித்துக் கொண்ட இருப்பார்கள். அதுவே உலகப் போர்க் காலங்களிலும் அமெரிக்கப் பொருளாதார நெருக்கடிகளின் போதும் நடந்தது.


இந்தியாவை அஞ்சி அண்டை நாடுகளின் அலுவல்களில் குறுக்கிட்ட நாடும் கிடையாது. ஆக்கிரமிப்பிலும் போரிலும் இறங்கிய நாடும் கிடையாது. ஒரு காலத்தில் சோவியத் யூனியனின் உதவியுடன் தனது பிராந்திய மேலாதிக்க நோக்கங்களை நிறைவேற்றிய இந்தியா, சோவியத் யூனியன் பலவீனப்படத் தொடங்கிய நிலையிலே அமெரிக்காவுடன் தனது உறவுகளை வலுப்படுத்த தொடங்கிவிட்டது. சோவியத் - இந்திய ஒத்துழைப்பில் சோவியத் யூனியனுக்கும் இந்தியாவுக்கும் பொது எதிரியாகச் சீனா இருந்தது. அமெரிக்காவின் உலக ஆதிக்க நோக்கம் இரு நாடுகட்கும் பாதகமானதாய் இருந்தது. சோவியத் விஸ்தரிப்பு நோக்கங்கள் செயற்பட்ட பிராந்தியங்களும் இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் இலக்குகளும் வெவ்வேறாகவே இருந்தன.



//உலகில் எந்த ஒரு நாட்டினதும் உள்விவகாரங்களில் இன்னொரு நாடு
குறிப்பாக வலிய நாடு ஒன்று, அக்கறை காட்டுவது நிச்சயமாக அந்த நாட்டின் நலன் கருதியோ
அதன் உள் முரண்பாடுகளில் உள்ள ஈடுபாடு காரணமாகவோ அல்ல. ஒடுக்கப்பட்ட ஒரு மக்கள்
பிரிவின் சார்பாகவோ அவர்களை ஒடுக்குகின்ற அரசின் சார்பாகவோ எந்த அயல்நாடும்
குறுக்கிடுகிறது மேலாதிக்க நோக்கம் தொடர்பானதே என்பதை எத்தனையோ தடவைகள்
கண்டுள்ளோம். ஒரு இன அடையாளங் கொண்ட மக்கள் ஒரு நாட்டில் ஒடுக்குமுறைக்குள்ளாகும்
போது பிற நாடுகளில் உள்ள அதே இன அடையாளமுள்ளோர் அதுபற்றிச் சினங்கொள்வதும்
விடுதலைக்கு ஆதரவாயுங் குரல் கொடுப்பது போராட்டத்திற்கு உதவுவதும் பல்வேறு
சூழ்நிலைகளில் நடந்துள்ளது. ஆயினும் அவ்வாறு நடப்பதற்கான கட்டாயம் ஏதும் இல்லை.
அந்த ஆதரவு விடுதலைக்குரிய போதிய உத்தரவாதமுமல்ல. 1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்படப்
பல ஆண்டுகள் முன்பிருந்தே பலஸ்தீனத்தின் அராபியருக்கு எதிரான வன்முறை யூதப்
பயங்கரவாதக் கும்பல்களால் தொடக்கப்பட்டுவிட்டது. அராபியரை அவரது சொந்த
மண்ணிலிருந்து விரட்டி உருவாக்கப்பட்டதே இஸ்ரேல். இஸ்ரேலின் உருவாக்கத்தையொட்டி
அரபு நாடுகள் சில போர் தொடுத்தன. ஆனால், பலஸ்தீன அரபு மக்களுக்கு மிஞ்சியது என்ன?
//

அமெரிக்க - இந்திய நட்பு அப்படிப்பட்டதல்ல. அதிலே சமத்துவம் என்ற பேசுக்கே இடமில்லை. அமெரிக்கா இந்தியா மீது ஆதிக்கஞ் செலுத்த இயலுமானால் மட்டுமே அமெரிக்கா இந்தியாவின் தென்னாசிய மேலாதிக்கத்திற்கு உதவும். மற்றப்படி, தனக்குக் கீழ்ப்படாத ஒரு இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கம் அமெரிக்காவின் உலக மேலாதிக்க நோக்கங்கட்கு முரணானதாகவே அமையும். இதுவே அமெரிக்க இந்திய உறவில், குறிப்பாகத் தென்னாசிய அரசியல் பற்றிய நிலைப்பாடுகளில், ஒரு முரண்பாடாகத் தெரிகிறது.

அதை நம்பி நாம் அமெரிக்காவின் பக்கம் சாய்வதோ இந்தியாவின் பக்கம் சாய்வதோ தமது நன்மைக்கு அல்ல. இந்த நாட்டின் தேசிய இனப்பிரச்சினையை மேலும் மோசமாக்குகிறதற்கே இந்தப் பாதை இட்டுச் செல்லும்.



>>இலங்கை பற்றி எந்த அயல்நாட்டினது அக்கறையும்
இலங்கையின் உள்விவகாரங்களின் உள்ள அக்கறை தொடர்பானதல்ல. <<

தமிழ்த் தேசியவாதிகள் வேண்டுவதை எல்லாம் ஏற்பது போல நடித்தவர்களை நம்பி இனியும் தமிழர் ஏமாற நியாயமில்லை. தமிழ் மக்களுக்கும் சகல ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கட்கும் சமூகப் பிரிவினருக்கும் தேவையானது நீதியும் நிலையான சமாதானமுமே. அதற்கு உண்மையான ஆதரவு எங்கு உண்டோ அதைக் கவனியாமல், தொலைந்த இடத்தில் பொருளைத் தேடாமல் வெளிச்சம் உள்ள இடத்தில் தேடிய முல்லா நஸ்ருத்தின் மாதிரி நமது தலைவர்கள் நடந்து கொள்ள நாம் இடமளிக்கக் கூடாது.



தினக்குரலில் மறுபக்கஞ் சொல்வது:
-கோகர்ணன்