Sunday, October 21, 2007

தமிழ் மக்கள்:மறுபக்கம்

அன்பு வாசகர்களே,வணக்கம்!

மீண்டுமொரு"மறுபக்கம்"பதிவோடு வருகிறோம்.இப்பதிவைத்தொடர்ந்தெழுதி வருபவர் ஒரு பேராசிரியர்.அவர் ஈழத் தமிழ்ச் சமூகத்துள் மிக முக்கியமான கல்வியாளர்.ஈழப்போராட்டமும்,இயக்கங்களும் கொலை செய்த கல்வியாளர்களெல்லாம் இப்போது மண்ணுக்குள் மண்ணாக.எஞ்சியிருக்கும் ஒரு சில ஈழத்துக் கல்வியாளர்களில் மிக முக்கியமானவர் பேராசிரியர்.டாக்டர்.திரு.சி.சிவசேகரம் ஆவார்.இவர் தன் சிந்தனையின் போக்கால் இடதுசாரி அறிஞராகவும் இனம் காணப்பட்டவர்.எனினும்,அவர் சிறந்த மனித நேயவாதியாகவும்,கல்வியாளராகவும், இன்றும் நம் போராட்டம் குறித்து ஆழமாகச் சிந்தித்து வருபவர்.தனது எண்ணங்களுக்கும்,மக்கள்சார்ந்த அரசியல் நோக்குக்கும் மிக இசைவாகவும்-அண்மையிலும் இருக்கிறார்.

இன்று படித்துப் பட்டம் பெற்றுவிட்டுப் பேராடும் பல்கலைக் கழகங்களுக்குள் இருக்கும் படிப்பாளிகள், மக்கள் நலன்சார்ந்து சிந்திக்காது,இயக்கவாத மாயைக்குள் இருந்தபடி ஏதேதோ அவிழ்க்கும்போது,பேராசிரியர் சிவசேகரமோ மக்களின் நலனிலிருந்து இயக்கத்தை,அதன் அரசியலை மற்றும் கட்சிகளை விமர்சிக்கிறார்.இது மிக ஆரோக்கியமான பார்வை.எமது மக்களின் நலன் சார்ந்த சிந்தனைகளை தோழர் இரயாகரனுக்கு அடுத்ததாகப் பேராசிரியர் சி.சிவசேகரமே முன் வைப்பவர்.இன்றுவரை தோழர் இரயாகரன் முன்வைத்த கருத்துக்களின் நியாயத் தன்மையைப் பேராசிரியரின் எழுத்துக்குள் அவதானிக்க முடியும்.

தேசிய விடுதலை,சுயநிர்ணயம் என்றெல்லாம் சொன்ன இயக்கங்கள், எப்படி மக்களை அடிமை கொண்டன-எங்ஙனம் மக்களை அழித்து அவர்களின் உரிமையைக் குழிதோண்டிப் புதைத்தன என்பதைத் தோழர் இரயாகரன் மிக நேர்த்தியாகவும்,விஞ்ஞானபூர்வமாகவும் தனது தளத்தில் ஆயிரக்கணக்கான பக்கங்களுக்கூடாக முன்வைத்திருக்கிறார்.அவரது கருத்துக்கு-முடிவுக்கு விஞ்ஞானத்தின் அடிப்படையே காரணமாக இருப்பதனால் அது உண்மையாக இருக்கிறது.அவ்வண்ணமே,இப்போது பேராசிரியர் சிவசேகரத்தின் கருத்துக்கும் அரசியல்-பொருளியில் விஞ்ஞானமே அடிப்படை.இக்கருத்துக்களின்படி நமது "தேசியவிடுதலை"ப் போராட்டத்தை முன்னெடுக்கும் புலிகளின் அரசியல் மற்றும் போராட்டச் செல் நெறியில் தவறிருப்பதையும்,அது தமிழ் பேசும் மக்களின் உண்மையான நலன்களோடு எந்தவிதத்திலும் சம்பந்தப்படவில்லையென்பதையும் பேராசிரியரின் இந்தச் சிறு கட்டுரையூடாக நாம் ஆழ்ந்துணர முடியும்.

வழமைபோலவே,இதையும் புலிகளின் விசுவாசிகள் நிராகரித்தபடி,தனிப் பெரும்"தலைவர் திரு.பிரபாகரனால் உலகை வெட்டி ஆளமுடியும்,தமிழருக்கு வழிகாட்ட முடியுமென"க் கூவும் ஒரு நிலை உருவாகலாம்.எனினும், நமது அரசியல் வங்குறோத்தானது இன்று நம்மை நடுத்தெருவுக்கு அழைத்து வந்து, பிச்சையெடுக்க விட்டிருப்பதை நாமெல்லோரும் உணர்வு பூர்வமாக உணர்வதால் புலி இயக்கவாத மாயை தகர்ந்து வருகிறது.இது நல்லதொரு சகுனம்,மக்களின் நோக்கிலிருந்து சிந்திப்பதற்கு.


இத்தகைய நோக்கிலிருந்து சிந்திக்கும்போதுமட்டும்தான் புதிய கோணத்திலான புரிதற்பாடுகள் முளைவிட ஆரம்பிக்கின்றன.இந்த ஆரம்பமே நமது விலங்கை நாமே போராடி உடைக்கும் புதிய புரட்சிகரமான பாதையை இனம் காட்டும்.இந்த, இனம் காணும் தரணங்களே எமது உரிமையின் உண்மை நிலையையும்,எது எமது உரிமை,எது சுய நிர்ணயம் என்பதையும் ஓங்கியடித்து எமது முகத்தினதும்,விழிகளினதும் முன் காட்சிப்படுத்தும்.இது மிக அவசியமானது- எமது சமுதாயத்துக்கு.நாம் புலிகளின் பொய்யுரைப்பால் எமது இளைய தலைமுறையையே கையாலாகச் சந்ததியாக மாற்றியபடி, தனிநபர் துதிபாடும் கூட்டமாக மாற்றி வருகிறோம்.இதிலிருந்து மீளவும்,நமது இலக்கை விஞ்ஞான பூர்வமாக விளங்கிப் போராட்டத்தை வர்க்கம் சார்ந்து முன்னெடுக்கவும் நாம் இன்னும் மிக நீண்டதூரம் சென்றாக வேண்டும்.எனினும், இக்கட்டுரையூடாகச் சில பொய்மைகள் அம்பலமாகின்றன.இதை வாசகர்கள் மிக இலகுவாக இனம் காணமுடியும்!

வழமைபோலவே,புலி இயக்கவாத மாயைக்குள் இருக்கும் அன்பர்கள் பேராசிரியர் சிவசேகரத்தின் கட்டுரையையும் "கோணங்கித்தனமானது,தமிழர் விடுதலைக்கு எதிரானது,எங்கள் தலைவர் பிரபாகரனுக்கு எல்லாம் அத்துபடி-அவர் எமக்கு விடுதலை பெற்றுத் தருவார்"என்று விவாதிக்க முனையலாம்.எனினும்,இவை விஞ்ஞானத்தின் அடிப்படையை மறுப்பவை என்பதை நாமும்,வாசகர்களாகிய நீங்களும் அறிவோம்-அறிவீர்கள்.


இந்நோக்கில், பேராசிரியர்.டாக்டர்.திரு.சிவசேகரத்தின் இக்கட்டுரையை மீள் பிரசுரிக்கிறோம்.இது இலங்கையின் முன்னணி நாளிதழான தினக்குரலிலிருந்து நன்றியோடு பிரசுரமாகிறது.

வாசியுங்கள்,சிந்தியுங்கள்-எதிர்க்கருத்தாடுங்கள்!,இவற்றால் ஆவது புதிய பாதைகள்.புதிய பாதைமட்டுமே தமிழர்களுக்கான அரசியற்பாதை என்பதை நாம் அன்றும்,இன்றும் கூறுவது உண்மையென்பது விஞ்ஞான அடிப்படை.


அன்புடன்,
கருணாநந்தன் பரமுவேலன்.
21.10.2007

மறுபக்கம்


தமிழ்த் தேசியவாதம் தமிழ்ச் சமூகத்தை எத்தகைய முட்டுச் சந்திற் கொண்டுவந்து விட்டிருக்கிறது என்பதைப் பற்றி நாம் ஆழச் சிந்திக்க வேண்டிய தருணங்கள் அடிக்கடி வருகின்றன. ஆனாலும் நாம் அதைச் செய்யத் தவறுகிறோம். தேசியமே அடிப்படையானது, மற்ற முரண்பாடுகள் இரண்டாம் பட்சமானவை என்று சிலர் புதிய தத்துவங்களை முன்வைத்துப் பதினைந்தாண்டுகள் கடந்துவிட்டன. இப்போது தேசியவாதத்தைவிடப் பிரதேசவாதத்தையே முன்னிறுத்துகிற போக்குக்களுக்கு முகங்கொடுக்க முயலாத நிலையில் தேசியவாதம் தடுமாறுகிறது. எத்தனையோ இயக்கங்கள் உருவாக்கப்பட்டு உள்மோதல்களாலும் இயக்கங்களிடையிலான மோதல்களாலும் தமிழ்ச் சமூகம் வீணான உயிரிழப்புக்களைச் சந்தித்திருக்கிறது. அன்று தமிழ் இடதுசாரிகளை மட்டுமன்றித் தமிழ் ஈழக் கோரிக்கைகளை நிபந்தனையின்றி ஏற்க மறுத்த எல்லாரையுமே துரோகிகள் என்று பட்டஞ் சூட்டிப் பழித்த தமிழ்த் தேசியவாத இளைஞர் குழுக்கள் இப்போது எங்கே போய் நிற்கின்றன? யாருடைய நிழலை நாடுகின்றன? யாருக்காகப் பணியாற்றுகின்றன?


எவரதும் மனமாற்றத்தை நியாயப்படுத்தக்கூடிய விதமாகத் தமிழ்மக்களின் வாழ்வில் மேம்பாடு ஏற்பட்டுள்ளதா? தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் வென்றெடுக்கப்பட்டுள்ளனவா? தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை ஏற்கப்பட்டுள்ளதா? தமிழ் மக்களின் வாழ்விடங்கள் மீது அவர்களது உரிமை மதிக்கப்பட்டிருக்கிறதா? இன்று தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தேசிய இனமொன்றின் மீதான தேசிய இன ஒடுக்கலாகவும் அதற்கெதிராக போராட்டம் சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வுக்கான போராட்டமாகவும் கருதப்படுவதற்கு மாறாக ஒரு மனித உரிமைப் பிரச்சினையாகவே பேசப்படுகிற ஒரு சூழ்நிலை எவ்வாறு உருவானது? அதை எவ்வாறு மாற்றுவது?
பதினெட்டாண்டுகட்கு முன்பு யாழ்ப்பாணத்தில் அன்னையர் முன்னணி ஒன்று, காணாமற் போன பிள்ளைகள் பற்றி எழுச்சியுடன் ஊர்வலம் போய் உரிமைக் குரல் எழுப்பியதை மனதில் இருத்தி, ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் மூலம் தங்கள் பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கேட்டுத் தாய்மார் ஒரு தமிழ் அரசியல்வாதியின் காலில் விழுந்து கேட்டுக் கொள்ளும் காட்சியை அதனுடன் ஒப்பிடும் போது தமிழ் மக்களின் விடுதலை உணர்வு எங்கே வந்து நிற்கிறது என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.


தமிழ் மக்களின் உரிமைப் போராட்டக் காலத்திலிருந்தே மீட்பர்களின் அரசியல் தான் இருந்து வருகிறது. அதற்கு முதல் மேட்டுக்குடி மேய்ப்பர்களின் அரசியல் இருந்து வந்தது. சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் ஆங்கிலத்தில் பேசி வென்று தருகிற தலைவர்களை நம்பி இருந்த சமூகம் பிறகு சத்தியாக்கிரகம் செய்து சமஷ்டி பெற்றுத்தர முடியும் என்கிற அரசியல் தலைமையை நம்பியது. தமிழ் பேசும் மக்கள் பற்றி நிறையவே பேசப்பட்டது. ஆனாலும், தமிழரைத் தமிழர் சாதியின் பேராலும் வம்சாவளியின் பேராலும் பிரதேசத்தின் பேராலும் ஏறி மிதிக்கிறது பற்றிக் கண்டுங் காணாமலே தமிழ்த் தேசியத் தலைமைகள் செயற்பட்டன.


முஸ்லிம்களின் தனித்துவம் பற்றியும் மலையக மக்களின் தனித்துவம் பற்றியும் எப்போதிருந்தோ சொல்லி வந்தவர்கள் தமிழ் மக்களைப் பிளவுபடுத்தப் பார்க்கிறார்கள் என்று நிந்திக்கப்பட்டனர். வடக்கு - கிழக்கு இணைந்த சமஷ்டியோ அதே அடிப்படையில் அமைந்த தமிழீழமோ எந்த வகையில் முஸ்லிம்களதும் மலையகத் தமிழரதும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கும் என்பது பற்றி எள்ளளவும் அக்கறையில்லாமலே சமஷ்டிக் கோரிக்கையும் தனிநாட்டுக் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டன. இவற்றை விமர்சித்தவர்கள் தமிழ்த் துரோகிகளாகக் காட்டப்பட்டனர்.
1976 ஆம் ஆண்டு தமிழீழத்தை வென்று தர உங்களிடம் என்ன வேலைத்திட்டம் இருக்கிறது என்று ஒரு பகிரங்க விவாதத்தின் போது கம்யூனிஸ்ற்றான சண்முகதாசன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தருமலிங்கத்தை நடுவர் ஒறேற்றர் சுப்பிரமணியத்தின் முன்னிலையிற் கேட்டபோது, தருமலிங்கம் கூறிய பதில் "அது எங்கள் இரகசியம்" என்பது தான். அந்த இரகசியமும் சிதம்பர இரகசியம் மாதிரி இல்லாத ஒரு இரகசியமே தான். தருமலிங்கத்தின் பதில் தப்பியோடப் போதுமானதாக இருந்ததே ஒழிய நேர்மையானதல்ல என்பதைப் பலரும் அறிவர். ஆனாலும், அந்தவிதமான இரகசியங்களாலேயே தமிழ் மக்கள் இன்னமும் வழிநடத்தப்படுகின்றனர்.


தமிழ் மக்கள் யார் யாரையோ எல்லாம் நம்புமாறு பல வழிகளிலும் வற்புறுத்தப்படுகின்றனர். இந்தியா பற்றிய நம்பிக்கை ஒரு வகையில் இல்லாவிட்டால் இன்னொரு வகையில், வளர்க்கப்பட்டே வருகிறது. கடைசியாக பாரதீய ஜனதா கட்சியை நம்பினால் காரியம் கைகூடும் என்கிற நம்பிக்கையை வளர்க்கிற முயற்சிகளில் வந்து நிற்கிறோம். இந்தியாவில் நாம் நம்புமாறு பரிந்துரைக்கப்படுகிற அரசியல் அமைப்புக்களதும் அரசியல் தலைவர்களதும் எண்ணிக்கை இந்து கடவுளரின் எண்ணிக்கையை எப்போது தாண்டும் என்று என்னாற் கூற இயலாது. ஆனால், என்றாவது தாண்டும் என்று தான் நினைக்கிறேன். அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய சமூகம், ஐ.நா. சபை, சர்வதேச சமூகம் என்று பலவேறு தெய்வங்களை வேண்டிக் கொள்ளுவதில் தான் தமிழ்த் தலைமைகளது கவனங் குவிந்திருக்கிறது.


பலஸ்தீன மக்கள் எவ்வாறு நாடகமாடி ஏய்க்கப்பட்டார்களோ அவ்வாறே தமிழ் மக்களும் நாடகமாடி ஏய்க்கப்பட்டு வருகின்றனர். ஹமாஸ் இயக்கம் அந்த நாடகத்தை நன்றாக அறிந்து அம்பலப்படுத்தியதால் அவர்கள் இஸ்ரேலினதும் அதன் எசமான நாட்டினதும் எசமான நாட்டின் கூட்டாளிகளாலும் கடுமையாகத் தண்டிக்கப்படுகிறது. எனினும், மக்கள் ஆதரவை அவ்வாறான தண்டனைகள் வலுப்படுத்துகின்றன. ஹமாஸ் எவ்வளவு தூரம் மக்களுக்கு நெருக்கமாகிறதோ அவ்வளவுக்கு அது தோற்கடிக்க இயலாத ஒரு சக்தியாக இருக்கும். பலஸ்தீன மக்கள் இன்னமும் இன்னல்களிடையிலும் இடிபாடுகளிடையிலும் அகதி முகாம்களிலும் வாழுகின்றனர். இருப்பிடங்களிலிருந்து விரட்டப்பட்டோரும் திரும்பி வருவது பற்றியும் தாயகம் பற்றியும் இன்னமும் பேசுகின்றனர். இந்த விடயத்தில் தமிழ் நடுத்தர வர்க்கத்தினரின் நிலையினின்று அவர்கள் ஆரோக்கியமான ஒரு வகையில் வேறுபடுகின்றனர்.


விடுதலை என்பது காலக்கெடு வைத்து சொல்லப்படுவதல்ல. விடுதலை என்பது எவரும் வந்து பெற்றுத் தருவதுமல்ல. எந்தவொரு அரசியல் போராட்டத் தலைமையும் வழிகாட்டலாமே ஒழிய ஒரு சமூகத்தின் ஏகப் பெரும்பான்மையான மக்கள் திரள் தனது தோள்கள் மீது விடுதலைப் போராட்டத்தை ஏற்றுச் சுமந்து முன்செல்லாத வரை விடுதலை வெல்லப்படக் கூடியதல்ல. ஒரு ஆயுதப் போராட்ட வெற்றியை எடுத்து அதை விடுதலையாக மாற்றுகிற பணி மக்களுடையது. எனினும், தமிழ்த் தேசியவாத அரசியல் மரபில், மக்கள் அரசியல், மக்கள் போராட்டம் என்கிற கருத்தாக்கங்கள் இன்று வரை வேரூன்றவில்லை. தமிழ் மக்களின் விடுதலையைக் குத்தகைக்காரர்கள் எவராலும் பெற்றுத்தர இயலாது என்கிற உண்மையை நாம் மறக்கவிடலாகாது.


தொண்டமான், சந்திரசேகரன் போன்றோரின் துரோகங்கள் பற்றிக் கசப்புடன் பேசப்படுகிறது. ஆனால், மலையகத் தமிழருக்கு அவர்கள் செய்து வந்துள்ள துரோகத்தைவிட அதிகமாக வடக்கு - கிழக்கின் தமிழர்கட்கு என்ன செய்துள்ளனர்? முஸ்லிம் தலைவர்களை நம்ப முடியாது என்று பேசப்படுகிறது. அவர்களை முஸ்லிம் மக்களே நம்ப இயலவில்லை. அதுபோகத், தமிழ்த் தலைவர்களைத் தமிழ் மக்கள் நம்ப முடிகிறதா?
இன்று தமிழ்த் தேசிய இனம் ஒரு அபாயகரமான திருப்புமுனையை நோக்கி நிற்கிறது. தமிழ் மக்களின் பிரச்சினை பற்றிச் சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்ப்பது என்ற போக்கின் வழியாகத் தமிழ் மக்களின் பிரச்சினையின் அடையாளத்தை மாற்றுகிற அபாயம் இன்று நிஜமான ஒரு சாத்தியப்பாடாகி வருகிறது. இது மிகவும் ஆபத்தானது. தமிழ் மக்களின் பிரச்சினை வெறுமனே ஒரு மனிதாபிமானப் பிரச்சினையாக, அகதிகள் பிரச்சினையாக, எல்லாரிடமும் கருணையை எதிர்பார்த்துக் கையேந்தி நிற்கிற ஒரு சமூகத்தின் மீதான கழிவிரக்கமாக ஒடுக்குகிற திசையை நோக்கி நாம் திரும்பிக் கொண்டிருக்கிறோம். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டியது.


உலகில் நீதியையும் நியாயத்தையும் மனித உரிமையையும் மதிக்கிற எல்லாரது நட்பும் தமிழ் மக்களுக்கு தேவையானதும் பயனுள்ளதும் என்பதில் மறுப்பில்லை. ஆனால், அந்த நட்பு ஈவோருக்கும் இரப்போருக்கும் இடையிலான உறவாக இருக்கக்கூடாது. அது சமத்துவத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். ஒடுக்குமுறை தொடர்பான எப்பிரச்சினையும் கருணையினால் தீர்க்கப்பட்டதில்லை.


என்.ஜி.ஓ.க்கள் கருணையின் பேரிலும் மனிதாபிமானத்தின் பேரிலும் மக்களை மேலும் மேலும் அடிமைத்தனத்திற்குள் அமிழ்த்துகின்றன. ஏகாதிபத்திய நாடுகள் என்.ஜி.ஓ.க்கள் மூலம் தமது கருமங்களை ஆற்றிக் கொள்ளுகின்றன. இந்த நாடு முழுவதையும் அடிமைப்படுத்த முனைப்பாக நிற்கின்றன அவையும் அவற்றின் ஏவலில் இயங்குகிற எந்த அரசாங்க நிறுவனமும் விடுதலைக்கு வழி செய்யப்போவதில்லை.


தமிழ் மக்கள் முழுமையாக அரசியல் விழிப்புப்பெறாமல் அவர்கட்கு விடுதலையும் இல்லை விமோசனமும் இல்லை. அதுவரை கருணையின் பேரால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருவர்.பேராசிரியர்.டாக்டர்.திரு.சி.சிவசேகரம்


நன்றி:தினக்குரல்
1 comment:

மு.மயூரன் said...

மீள்பிரசுரத்துக்கு நன்றி.

வெளிநாட்டுக்கு போட்டோ காட்டும் அரசியல் மீதான நல்ல விமர்சனம்.

மக்கள் போராட்டம் என்றால் என்ன, அது எப்படி இருக்கும் என்று நீங்கள் யாராவது விளங்கப்படுத்தினால் நன்றாக இருக்கும். வெறுமனே அந்த சொல் எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அதன் ஆழம் யாருக்கும் புரிவதாயில்லை.