Monday, November 05, 2007

விழுந்து கிடந்ததாகக் காணப்பட்ட பி.கே.கே. எவ்வாறு மீள எழுந்தது...

மறுபக்கம்


//தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் பலவேறு துரோகங்களால் இழப்புகளைச்
சந்தித்துள்ளது. அவற்றை தண்டிப்பதை விட முக்கியமானது அவ்வாறான தவறுகள் தொடராமல்
தடுப்பது. அது வெகுசன அரசியலாலேயே இயலுமானது. அதே அளவு முக்கியமானது விடுதலைக்கான
போராட்டங்கள் அனைத்திற்கும் உள்ள பொது எதிரிகளை தேசிய மட்டத்திலும் சர்வதேச
மட்டத்திலும் மக்களுக்கு அடையாளங்காட்டுவது. எதிரியைத் தனிமைப்படுத்துவது என்பது
ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்து செய்கிற காரியமல்ல. எதிர்த்து நின்றே அதைச் செய்ய
முடியும். //


பல வேளைகளிற் போர்கள் ஏன் தொடக்கப்பட்டன என்பது பற்றிய நினைவே அழிந்து போய்ப் போர்கள் தொடர்கின்றன. போருக்கு கற்பிக்கப்படுகிற காரணங்களும் வேறுபடுகின்றன. அமெரிக்கா ஈராக்கில் தொடக்கிய போர் ஈராக்கில் உள்ள பேரழிவுப் போர்க்கலங்களை இல்லாதொழிப்பதாகத் தொடங்கி ஈராக்கில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக என்று மாறி, இன்று பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பேரில் தொடருகிறது. அமெரிக்காவின் ஆள்வலிமையும் ஆயுதவலிமையும் போரை வெல்ல உதவவில்லை என்றால் அதற்கான காரணம் ஈராக்கோ சிரியாவோ அல்ல.இரண்டு அடிப்படையான காரணங்களே முக்கியமானவை. அமெரிக்கப் படைகளின் இருப்பை ஈராக்கின் மக்கள் வெறுக்கின்றனர். விடுதலைப் போரை மக்கள் ஆதரிக்கின்றனர். அமெரிக்கா இதுவரை ஈராக்கின் மக்களைப் பிளவுபடுத்தி ஒருவரோடு ஒருவர் மோதவிடுவதிலும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு இடமே இல்லாத ஒரு மண்ணில் அவர்களுக்கு ஒரு இடத்தை உருவாக்கியதிலும் ஒரு வகையான வெற்றியைப் பெற்றிருக்கிறது. இவற்றைக் கொண்டு விடுதலைப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தவும் ஆக்கிரமிப்பை நீடிக்க ஒரு நியாயத்தைக் காட்டவும் இயலுமாக இருந்தது. ஆனாலும், அமெரிக்கா உருவாக்கிய பூதங்கள் அமெரிக்காவுக்குப் புதிய தலைவலிகளை ஏற்படுத்தியுள்ளன. இது எல்லா ஆதிக்கவாதிகளுக்கும் நடப்பது.இன்று அமெரிக்காவுக்கு ஆதரவாக ஒரு சமூகம் ஈராக்கில் இருக்கிறதென்றால் அது ஈராக்கின் குர்திய சமூகம் தான். அமெரிக்கா 16 ஆண்டுகள் முன்னர் நடத்திய ஆக்கிரமிப்பை அடுத்து ஈராக்கின் வடக்கிலும் தெற்கிலும் ஈராக்கின் அரசாங்கத்தின் படைகளின் கட்டுப்பாடு இல்லாது போயிற்று. இதனைப் பயன்படுத்திக் குர்திய சமூகம் ஈராக்கின் வட பகுதியில் ஒருவாறான சுயாதிபத்தியத்தை அமெரிக்க உதவியுடன் மெல்லமெல்ல உருவாக்கிக் கொண்டது. அமெரிக்க ஆக்கிரமிப்பின் போது அமெரிக்காவுக்கு முழு ஆதரவாகக் குர்திய தேசிய இனத்தின் தலைமைகள் செயற்பட்டன.


//விழுந்து கிடந்ததாகக் காணப்பட்ட பி.கே.கே. எவ்வாறு மீள எழுந்தது என்று நாம்
சிந்திக்க வேண்டும். பி.கே.கே.நண்பனையும் எதிரியையும் வேறுபடுத்திக் காணுகிறது.
மாற்றுக் கருத்துடைய, குர்திய விடுதலைப் போராட்டத்தை ஆயுதமேந்தி முன்னெடுப்பதை
நிராகரிக்கிற, குர்தியர்களைக் கூட அது எதிரிகளாகக் காணவில்லை. அதேவேளை,
துருக்கியப்படையினருடன் குர்தியர்களின் அரசியல் நிறுவனம் எதுவும் ஒத்துழைக்காத
விதமாக அரசியற்பணிகளை வெகுசனத் தளத்தில் முன்னெடுக்கிறது. தனது தவறுகளிலிருந்து
கற்கிறது. துரோகிகளைத் தண்டிப்பதைவிடத் தனிமைப்படுத்துவதிற் கவனங்காட்டுகிறது.
//

எனவே, அவர்களை மகிழ்விக்கிற விதமாகவும் தனக்குள் ஒரே ஆதரவுத் தளத்தை வலுப்படுத்து முகமாகவும் அமெரிக்கா ஈராக்கின் ஆட்சி அதிகாரத்தில் குர்தியத் தலைமைகட்கு ஒரு கணிசமான பங்கையும் குர்தியப் பிரதேசங்களில் ஏறத்தாழ ஒரு சுயாட்சியும் உருவாக உதவியது.
ஈராக்கினுள் நுழைய இருந்த அடிப்படையானதும் அறிவிக்கப்படாததுமான அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறவில்லை. ஈராக்கின் எண்ணெய் வளத்தைத் தமதாக்கிக் கொள்ளக் காத்திருந்த அமெரிக்க எண்ணெய்க் கம்பனிகள் இப்போது குர்தியப் பகுதியிலுள்ள எண்ணெயைத் தமதாக்கிக் கொள்வதில் கவனங்காட்டின. அந்த நோக்குடன் செய்யப்பட்ட ஒரு உடன்படிக்கை இன்று ஈராக்கிய ஆட்சியாளர்களின் கடும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.

மறுபுறம் துருக்கியின் குர்திய சமூகத்தின் விடுதலை இயக்கமான குர்திய தொழிலாளர் கட்சியின் (பி.கே.கே.) தலைவரான ஒச்சலான் சிறைப்பிடிக்கப்பட்டதையடுத்தும் சோர்வு கண்டிருந்த பி.கே.கே. போராளிகள் துருக்கிய ஆட்சியாளர்களுடனான சமரசங்கள் பயனற்றுப்போன நிலையில் மீண்டும் ஆயுதமேந்திப் போராடத் தொடங்கியுள்ளனர். ஈராக்கின் குர்திய சமூகத்தினரிடையே ஆதரவுத்தளம் இல்லாதபோதும் வட ஈராக்கினுள் பி.கே.கே.போராளிகள் தஞ்சம் அடைவதையும் தளங்கள் அமைப்பதையும் அவர்கள் ஏற்றுக் கொண்டனர். இதனால் அவர்கட்கு எதிராக ஈராக்கிய அரசாங்கத்தாலோ ஈராக்கின் குர்தியத் தலைமைகளாலோ எதுவுமே செய்ய இயலவில்லை. இதனால் அமெரிக்காவின் நிலை `இரண்டு பெண்டாட்டிக்காரன் பாடு' என்கிற மாதிரி ஆகிவிட்டது. பி.கே.கே. தனது ஏகாதிபத்திய எதிர்ப்பால் எவ்வகையிலும் கட்டப்படவில்லை.பி.கே.கே.என்றும் அமெரிக்காவுக்கு வேண்டாத ஒரு `பயங்கரவாத' இயக்கம். துருக்கிய ஆட்சியாளர்கள்' குறிப்பாகத் துருக்கிய இராணுவத்தினர் அமெரிக்காவின் மிக நெருங்கிய நண்பர்கள் . எனவே, ஒரு பொது எதிரியாக பி.கே.கே. உள்ளது. ஆனால், இன்று ஈராக்கில் அமெரிக்காவுக்கு எஞ்சியுள்ள ஒரே வெகுஜன ஆதரவுத்தளமும் அமெரிக்கப் படைகளுக்குப் பாதுகாப்பான பகுதியாகவும் உள்ளது. வட ஈராக்கின் குர்தியப் பகுதிகள். அவர்கள் தந்திரோபாயமாக வேனும் இன்று அமெரிக்காவுக்கு மிக அவசியமான நட்புச் சக்திகள் .


//அவர்கள் இன்னமும் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் மனந்திருந்தித் தமிழ்
மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் என்று எதிர்பார்ப்பவர்களாகவோ தேசிய இன
விடுதலையை ஒரு இடதுசாரி அமைப்பு முன்னெடுப்பதை விரும்பாதவர்களோ இருப்பார்களாயின்
அதில் வியக்க ஒன்றும் இல்லை. ஏனெனில், தமிழ்ச் சமூகத்திற் பெரும் பகுதி இன்னமும்
தனது பழமைவாதச் சிந்தனையிலிருந்து விடுபடவில்லை. இன்னமும் தமிழரின் வசதி படைத்த
வர்க்கத்தினரிடையே `வெள்ளைக்காரர் நியாயமானவர்கள்' என்கிற சிந்தனைப்போக்கு வலுவாகவே
உள்ளது. தமிழ் ஈழ விடுதலையையும் விடுதலைப் புலிகளையும் ஆதரிப்பதாகக் கூறிக் கொண்டே
நேபாள மாஓவாதிகள் பற்றிய வலதுசாரி அவதூறுகளைக் கிளிப்பிள்ளைகள் போலத்திருப்பிச்
சொல்வது நமது ஊடகங்களில் வழமையாகியுள்ளது. விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல
என்று பிரகடனஞ் செய்து கொண்டே நேபாள மாஓவாதிகளையும் பிற விடுதலைப் போராளிகளையும்
பயங்கரவாதிகள் என்று சொல்ல இயலுமாகிறது. இந்த இரண்டக நிலைக்குக் காரணம் அவர்களது
சமூகப் பார்வையே.//
பி.கே.கே.யை ஏற்காவிட்டாலும் அதற்கு எதிரான எந்த நடவடிக்கையையும் அம்மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். அதைவிடவும் ஈராக்கிய அரசாங்கம் ஈராக்கினுள் துருக்கியப் படைகள் விரும்பியபடி நுழைவதை ஏற்காது. எனவே, பி.கே.கே.யை துருக்கிய மண்ணில் மட்டுமே எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குள் துருக்கியப் படைகள் இருந்து வந்துள்ளன.


மீண்டும் வலுப்பெற்று வருகிற பி.கே.கே.அண்மையில் துருக்கியப் படையினருடன் மோதிப் படையினர் தரப்பில் கணிசமான உயிர்ச் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது துருக்கிய ஆட்சியாளர்கட்குச் சங்கடமாகியுள்ளது. துருக்கிய ஆட்சியாளர்கள் பி.கே.கே. மீதான தமது தாக்குதல்கட்கு ஈராக்கிய ஆட்சியாளர்களது சம்மதத்தைப்பெற வேண்டும். பேச்சுவார்த்தைகள் மூலம் உடன்பாடு காணப்பட்டாலும், துருக்கியப்படைகளின் இராணுவ நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதது. அத்துமீறல்கட்கே வழி செய்யும். எனவே, அமெரிக்காவின் நிலை மேலும் அந்தரமாகும்.
மறுபுறம், துருக்கியில் இராணுவத்தின் அதிகாரத்திற்கு எதிரான உணர்வுகள் வலுப்பெற்று வருகின்றன. ஒரு பக்கம் மதவாத அரசியல் வலுவடைகிறது. இன்னொரு பக்கம் மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகளின் குரல் வலுவடைகிறது. இரண்டும் இராணுவம் அரசின் அலுவல்களில் ஆதிக்கஞ் செய்வதை விரும்பாத போக்குக்களாகவே அமையும். அதைவிட அமெரிக்காவின் இஸ்லாமிய விரோதப் போக்கும் துருக்கிக்குள் புதிய எதிர்ப்புச் சக்திகளை உருவாக்கிவிடும்.


துருக்கிய இராணுவ நடவடிக்கைகள் வட ஈராக்கில் கொந்தளிப்பான சூழ்நிலைகட்கே வழி கோலும். எனவே, ஈராக்கின் பிற பகுதிகளில் தடுமாறி நிற்கிற அமெரிக்காவால் ஈராக்கில் ஐக்கியத்தைப் பேண முயன்றாலும் தொல்லைப்படும். தான் முன்பு திட்டமிட்ட படி பிளவுபடுத்தி மூன்று மாநிலங்களாக்கித் தன் ஆதிக்கத்தைச் செலுத்த முயன்றாலும் தொல்லைப்படும்.


சென்ற நூற்றாண்டின் இறுதியில் பி.கே.கே. முடிந்து விட்டது என்ற கருத்து பலரிடம் வலுவாக இருந்தது. அது பற்றி மகிழ்ச்சி அடைந்தோர் அமெரிக்க, துருக்கிய ஆட்சியாளர்களும் பிற மேலாதிக்கவாதிகளும் மட்டுமல்ல. தங்களைத் தமிழ்த் தேசிய இன விடுதலைக்கு ஆதரவானவர்களாகச் சொல்லிக் கொள்கிற சில ஆய்வாளர்களுந்தான். துருக்கிய கம்யூனிஸ்ற்றுக்களை வெறுப்பவர்களாகத் தொடங்கிச் சில காலப் போராட்ட அனுபவத்தின் பின்பு அவர்களுடைய நட்புச்சக்தியாக மாறித் துருக்கியில் சனநாயகத்திற்கும் மனித உரிமைகட்கும் ஏகாதிபத்திய எதிர்ப்புக்குமான போராட்ட அணியில் ஒரு அங்கமாகவும் குர்திய மக்களின் சுய நிர்ணயத்திற்கும் சமூக விடுதலைக்குமான ஒரு போராட்டச் சக்தியை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தைத் தீவிரமாக எதிர்த்து நிற்கிற ஒரு விடுதலை இயக்கத்தை, ஏன் அவர்கள் வெறுக்கின்றனர் என நாம் கவனிக்க வேண்டும்.அவர்கள் இன்னமும் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் மனந்திருந்தித் தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் என்று எதிர்பார்ப்பவர்களாகவோ தேசிய இன விடுதலையை ஒரு இடதுசாரி அமைப்பு முன்னெடுப்பதை விரும்பாதவர்களோ இருப்பார்களாயின் அதில் வியக்க ஒன்றும் இல்லை. ஏனெனில், தமிழ்ச் சமூகத்திற் பெரும் பகுதி இன்னமும் தனது பழமைவாதச் சிந்தனையிலிருந்து விடுபடவில்லை. இன்னமும் தமிழரின் வசதி படைத்த வர்க்கத்தினரிடையே `வெள்ளைக்காரர் நியாயமானவர்கள்' என்கிற சிந்தனைப்போக்கு வலுவாகவே உள்ளது. தமிழ் ஈழ விடுதலையையும் விடுதலைப் புலிகளையும் ஆதரிப்பதாகக் கூறிக் கொண்டே நேபாள மாஓவாதிகள் பற்றிய வலதுசாரி அவதூறுகளைக் கிளிப்பிள்ளைகள் போலத்திருப்பிச் சொல்வது நமது ஊடகங்களில் வழமையாகியுள்ளது. விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல என்று பிரகடனஞ் செய்து கொண்டே நேபாள மாஓவாதிகளையும் பிற விடுதலைப் போராளிகளையும் பயங்கரவாதிகள் என்று சொல்ல இயலுமாகிறது. இந்த இரண்டக நிலைக்குக் காரணம் அவர்களது சமூகப் பார்வையே.மேற்கூறியவாறான தமிழர் விடுதலை ஆதரவாளர்களது பார்வை குறுகலானது. அவர்களால் தமிழ்மக்களின் விடுதலையை உலக வரலாற்றில் வைத்து நோக்க இயலுவதில்லை. பிற ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கண்ணோட்டத்தில் நோக்க இயலுவதில்லை. தமிழ் மக்களிடையே உள்ள ஒடுக்குமுறைகளினதும் பலவேறு முரண்பாடுகளதும் முக்கியத்துவத்தை முன்வைத்து ஆராய இயலுவதில்லை.
விழுந்து கிடந்ததாகக் காணப்பட்ட பி.கே.கே. எவ்வாறு மீள எழுந்தது என்று நாம் சிந்திக்க வேண்டும். பி.கே.கே.நண்பனையும் எதிரியையும் வேறுபடுத்திக் காணுகிறது. மாற்றுக் கருத்துடைய, குர்திய விடுதலைப் போராட்டத்தை ஆயுதமேந்தி முன்னெடுப்பதை நிராகரிக்கிற, குர்தியர்களைக் கூட அது எதிரிகளாகக் காணவில்லை. அதேவேளை, துருக்கியப்படையினருடன் குர்தியர்களின் அரசியல் நிறுவனம் எதுவும் ஒத்துழைக்காத விதமாக அரசியற்பணிகளை வெகுசனத் தளத்தில் முன்னெடுக்கிறது. தனது தவறுகளிலிருந்து கற்கிறது. துரோகிகளைத் தண்டிப்பதைவிடத் தனிமைப்படுத்துவதிற் கவனங்காட்டுகிறது.


தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் பலவேறு துரோகங்களால் இழப்புகளைச் சந்தித்துள்ளது. அவற்றை தண்டிப்பதை விட முக்கியமானது அவ்வாறான தவறுகள் தொடராமல் தடுப்பது. அது வெகுசன அரசியலாலேயே இயலுமானது. அதே அளவு முக்கியமானது விடுதலைக்கான போராட்டங்கள் அனைத்திற்கும் உள்ள பொது எதிரிகளை தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் மக்களுக்கு அடையாளங்காட்டுவது. எதிரியைத் தனிமைப்படுத்துவது என்பது ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்து செய்கிற காரியமல்ல. எதிர்த்து நின்றே அதைச் செய்ய முடியும்.

பேராசிரியர்.சி.சிவசேகரம்

நன்றி:தினக்குரல்

No comments: