Sunday, March 27, 2016

புலம் பெயர் புலிப்பினாமிகள்-பிரமுகர்கள் வீடுகளை முற்றுகையிடுங்கள்.

வன்னியில் பசியால் வாடும்  போராளிகளை ;மக்களைக் காப்பதற்கு இன்றே  புலம் பெயர்  புலிப்பினாமிகள்-பிரமுகர்கள் வீடுகளை முற்றுகையிடுங்கள்.


" இன்றைய அண்ணளவான கணப்பீட்டின்படி,இலங்கைக்கு வெளியே புலிகளால் திரட்டப்பட்ட நிதி 16 பில்லியன்கள்(மில்லியன்கள் அல்ல.1000.மில்லியன்கள் 1 பில்லியன் என்பது ஒரு குறிப்புக்காக...)  அமெரிக்க டொலர் வரை புலிப் பினாமிகளிடமும்,புலிப்பிரமுகர்களிடம் தேங்கிக்கிடக்கிறது.இது,இலங்கை இரூபாயில்160 இலட்சம் கோடிகள் இரூபாயாகும்.இலட்சக்கணக்கான கோடிகளைச் சொந்தமாக்க முனையும் புலிப் புதிய ஆளும் வர்க்கத்துக்கு இவைகள் எந்தப் பொழுதிலும் சொந்தமில்லை!அங்ஙனம், ஆக்கவும் விடக்கூடாது!! "


மக்களின் ஆன்ம விருப்பைப் புறந்தள்ளிய புலிவழித்தேசியமானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் "மக்களை"மதிக்கத் தக்க அரசியல் ஸ்த்தானத்தை வந்தடைய வாய்ப்பின்றியிருக்கத்தக்கபடி, அந்தப் புலி அமைப்புக்கு முண்டுகொடுத்தவர்கள் பலர். இவர்கள்,இப்போது புலிகளது "பூண்டோடான அழிப்புக்கு" ஆசிய மூலதனத்தோடு ஒத்திசைவாகிப் புலித் தலைமையை நயவஞ்சகத்தின் மூலஞ் சாகடித்த வெளியுலகப் புலிப் பெரும் பணக்காரர்களைக் காத்தபடி, தமது தவறுகளைப் "பெருந்தலைவரின் வீர மரணத்தில்"மறைத்துக்கொள்ள முனையும்போது,எல்லாமே முடிந்தபின் தமது தவறுகள் குறித்து ஒப்புதால் வாக்கு மூலம் தருகிறார்கள்.இவர்கள் இன்று கூறித் தவிக்கும் "தப்புகள்"குறித்து நாம் ஏலவே பலவருடங்களாகச் சொல்லி முடித்தாச்சு.இந்த நிலையில்,நாம் இவர்களிடமிருந்து இத்தகையதை எதிர்பார்த்துக் கிடக்கவில்லை!


மாறாகப் புலிகளது தோல்விகுறித்து மிகக் கராராகவும்,அறிவியல் ரீதியாகவும் ஆய்வுகளையே கோரிக்கொண்டோம்.புலிகளது இராணுவத் தலைமையை வழிநடாத்திய புலிகளுக்குள் உருவாகிய புதிய ஆளும் வர்க்கமானது பிரபாகரனையே கொன்று, குவிக்கும் ஓரவஞ்சனையினூடாகத் தமது நலனை எட்டுவதற்கு எடுத்த முயற்சிகள் வெறுமனவே கவனிப்பாரற்றுக்கிடக்கிறது.இது, பெரும்பாலும் சமூக விரோதிகளுக்குடந்தையானவொரு சூழலை மீளவும் வற்புறுத்தி, புலம்பெயர் மக்களை மேலும் மொட்டையடிக்கும் இன்னொரு தொடர்ச்சிக்குக் காரணமாக முடியப்போகிறது.
 "புலிகளுக்குப் பின்னாலுள்ள ஆளும் வர்க்கம்-ஆளும் வர்க்கம்"
என்று நாம் கூறியபோது,அது என்னவென்று கேலி பேசிய "புலிப்பொடியள்"இப்போது தலைவரது படுகொலையை செய்வித்து,அதை மறைப்பவர்களது வீடுகளுக்குள் இதை இனங்காணலாம்.


இதைவிட்டு நாம் பேசவேண்டிய விடையத்துக்கு நேரடியாகச் செல்லுவோம்.


பிரபாகரனைப் படுகொலை செய்வித்த, புலிகளுக்குள் உருவாகிய புதிய ஆளும் வர்க்கம்,இது குறிப்பிட்ட எல்லைப் படுத்தல்களை பொருள்வயப்பட்ட குவிப்புறுதிவூக்கத்துக்குள் ஏற்படுத்திக்கொண்டு, தமிழ்ச்சமூகத்துக்குக் குறுக்காய் மக்கள் உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கத் தயாராகிறது.இது, எந்த மக்களுக்கான அடையாளத்துக்காகக் குரலெறிய முற்படுவதாகச் சொல்கிறதோ அதை உதாசீனப்படுத்துவதையே தனது அக்கறைக்குரிய முன்னெடுப்பாகச் செய்கிறது.இங்கேதாம் நமது மரபு ரீதியான புலி இயகக் அரசியல் புரிவானதின் இயலாமை நம்மைப் போட்டுக் குழப்பிக் கொள்வதை நாம் அநுமதிக்கிறோம். இத்தகையவொரு விருப்புறுதியானது நம்மால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட "எதிர்பார்ப்புகளால் "ஆனதாகா! இது காலாகாலமாக புலிகளது அழிவு அரசியல் பண்பாட்டுத் தகவமைப்புகளால் வார்க்கப்பட்ட வொரு வடிவமாக நம்முன் வேறொரு காரணத்தைக் கற்பிக்கும்படியும், மீளவும் "ஈழக் கனவு" காணத்தக்கக் கலவையைத் தயார்ப்படுத்தி நமது நோக்கத்தையே திசை திருப்புகிறது.


கடந்தகாலத்தில் புலிகளது இராணுவத் தலைமைக்கான மையக்கனவுகள் இன்று தகர்ந்து நொருங்கியபின்,புலம்பெயர் தமிழ்மக்களது குருதியில் திரட்டப்பட்ட பெரும் மூலதனம் புலிகளது பினாமிகளிடம்,இலங்கைக்கு வெளியே உலாவரும் புலிப்பிரமுகர்களிடமும் முடங்கிப் போகிறது.


"தமிழருக்கு ஈழமே தாயகம்,போராட்டம் தொடரும்,தலைவர் வருவார்,நாங்கள் இன்னும் வீச்சாகப் புலிகளது கரங்களைப் பலப்படுத்த வேண்டும்"என்ற-இத்தகைய மனவிருப்புக்களால் புலிப் பிரமுகர்கள் தப்பித்து மக்களது செல்வத்தோடு கோடிஸ்வரர்களாகக் கும்மாளம் அடிக்கிறார்கள். இவர்களே, பிரபாகரனைக் கொன்று குவிக்க இலங்கைக்கு-உலகத்துக்கு உடந்தையாக இருந்தவர்கள்!


இதை எத்தனை பேர்கள் புரிந்துள்ளோம்?அல்லது, இன்றைய இளைய தலைமுறை இதைப் புரிந்துள்ளதா?


வன்னியில் அவதியுறும் மக்களுக்குக் காசு சேர்க்க முனையும் மனது புலிப்பினாமிகளிடம் குவிந்துள்ள செல்வத்தைக் குறித்து என்ன மதிப்பீடு வைத்திருக்கிறது?


இப்போது,இந்தத் தருணத்திலும் இராணுவத் தடுப்பு முகாங்களுக்குள் முடக்கப்பட்ட  போராளிகளுக்கு -வன்னி மக்களுக்கு உதவுவதற்காக "புலியல்லாத மாற்றுக் கருத்தாளர்கள்,புரட்சி பேசுபவர்களைக் காசு சேர்த்து வன்னியில்கொண்டுபோய் கொடுக்கும்படி"கூச்சலிடும் புலிப் பொடிப்பசல்கள்-புலி அனுதாபிகள் இணையங்களில் ஒருவலம் வருகிறார்கள்.எங்கேயும் வன்னி மக்களுக்கு ஒரு நேரவுணக்கான கதையும்,அந்த மக்களுக்கான இரங்கலுமாக இருக்கிறது.

தலைவர் உயிரோடு மக்களுக்குள் மறைந்திருந்தபோது அது(புலிகளால் செய்யப்பட்ட தடுப்பு யுத்தம்) மக்களது விடுதலைக்கான போராகவே இவர்களால் உரைக்கப்பட்ட நிலையில், தலைவரது படுகொலைக்குப் பின்னான காலத்தில் மக்களது ஒருநேரக்கஞ்சிக்கு வழிதேடுகின்றார்கள்,புலி அனுதாபிகள்.


இஃது நல்லதே.இது குறித்து எந்த விமர்சனமும் எமக்கு அவசியமில்லை!ஆனால்,"காசு சேர்த்து-உணவுசேர்த்து" வன்னிக்குக் கப்பல்
அனுப்புவது, கொண்டுபோய்க் கொடுப்பதென்பதைக் குறித்துப் பேசுபவர்களால் இன்னொரு முயற்சியும் நடந்தாகவேண்டும்.இது குறித்து இவர்களது புத்திக்கு இன்னும் உறைக்காத விஷயம் ஒன்றுண்டு.அது குறித்து நாம் மிகவும் கவனமாகவே இருக்கின்றோம்."தமிழீழ விடுதலை"ப் போர் செய்து, பல பத்தாயிரம் போராளிகளையும் அவர்களது பெற்றோர்களையும்,முழுமொத்தத் தமிழர்களையும் நாசமாக்கியவர்களின் பின்னே, இன்னுமொரு துரோகம் நிறைந்திருக்கிறது.உயிர்களைக் குடித்த "ஈழக் கனவு"தமிழ்பேசும் மக்களது
குருதியினால் குவிந்த செல்வங்களையும் குவித்துக் கொண்டுள்ளது.இதைத் தமதாக்கும் முயற்சியில் தலைவரையே சாகடித்துவிட்டு மறைப்புக் கட்டுவதுதாம் இன்றைய கடைந்தெடுத்ததுரோகம்.


இத் துரோகத்தை மறைக்க"மார்க்சியம்,மார்புக் கச்சை,புரட்சி"எல்லாம் பொய்.வன்னி மக்களுக்கான மனிதாபிமான முயற்சிகள்,இலங்கை அரசை அம்பலப்படுத்துவதுதாம் முக்கியம்"என்பதும் காணக்கூடிய எதிர்வாதந்தாம்.


முப்பது வருடமாகப் புலிகளது அம்பலப்படுத்தல்கள்போய், இப்போது தனி நபர்களது அம்பலப்படுத்தலால் இலங்கையில் தன்னைத் தகவமைக்கும் ஆசிய மூலதனம் மிரண்டுவிடப் போகிறது.பாருங்கள் இதுதாம் இன்றைய புலிகளது புதிய வார்ப்பு!


 ஈராக்கில் நடந்த சதாம் அழிப்பில்,மேற்குலகத்திடமும்,அமெரிக்காவிடமும் தனது மூலதனத்தை,நலத்தைப் பறிகொடுத்த சீனா-இருஷ்சியா போன்ற நாடுகள், இலங்கையில் மேற்குலகத்துக்கு வால்பிடித்த புலிகளது
கதையை முடித்து மேற்குலகத்தைப் பழிவாங்கும் ஆசிய மூலதனமாக இலங்கையில் தகவமைக்கும் அரசியலானது, பற்பல தொடர் நடவடிக்கைகளை அன்று முடுக்கியது.இதன் தெரிவில் புலிகளை
முடித்துப் புதிய கதை வரைவுக்கு இன்னொரு முன்னோட்டம் மகிந்தா குடும்பமாகும்.


இது, இப்போது மைத்திரி மேற்குலகமாக யிருக்க-நாம் மக்களைக் காக்கும் நிதி பற்றிச் சிந்திப்போம்!


இலங்கைக்கு வெளியே புலம்பெயர்ந்து குடியேறிய மக்களை அச்சமூட்டிப் பெறப்பட்ட கப்பம்-நிதி என்ற போர்வையில் புலிப் பிரமுகர்களாகத் தம்மை உருவாக்கிய கயமைமிகு தமிழர்களிடம் குவிந்திருக்கிறது.

இவர்கள் மக்களிடம் பெறப்பட்ட நிதிகளை அசையும்-அசையாச் சொத்துக்களாக மாற்றித் தமது உடமையாகக் குவித்துள்ளார்கள்.போராளிகள் -மக்கள் வன்னியில் ஒரு நேரவுணவுக்கு இரங்கும்போது,இவர்கள் தமது சொகுசான வாழ்வுக்காகப் புலம்பெயர்ந்த மக்களிடம் திரட்டிய நிதியோடு ஒடித்தப்பிவிடுவது நியாயமாகுமா?


இன்றைய அண்ணளவான கணப்பீட்டின்படி,இலங்கைக்கு வெளியே புலிகளால் திரட்டப்பட்ட நிதி 16 பில்லியன்கள்(மில்லியன்கள் அல்ல.1000.மில்லியன்கள் 1 பில்லியன் என்பது ஒரு குறிப்புக்காக...)  அமெரிக்க டொலர் வரை புலிப் பினாமிகளிடமும்,புலிப்பிரமுகர்களிடம் தேங்கிக்கிடக்கிறது.இது,இலங்கை இரூபாயில்160 இலட்சம் கோடிகள் இரூபாயாகும்.இலட்சக்கணக்கான கோடிகளைச் சொந்தமாக்க முனையும் புலிப் புதிய ஆளும் வர்க்கத்துக்கு இவைகள் எந்தப் பொழுதிலும் சொந்தமில்லை!அங்ஙனம், ஆக்கவும் விடக்கூடாது!!


இப்பெரும் தொகையான செல்வம் இலங்கையிலுள்ள-வன்னியில் வதைபடும் போராளிகளுக்கு -மக்களுக்கு அபிவிருத்திக்காகப் பயன்படுத்தப்படவேண்டும்-அவர்களது பசிக்கு இவை உணவாக வேண்டும்.இதைத் தட்டிக்கேட்பதற்காகவும்,அச் செல்வங்களை மக்களுக்காகப் பயன்படுத்தும்படியும் புலம்பெயர் நாடுகளிலுள்ள ஒவ்வொரு புலிப்பிரமுகர்களது வீட்டு வாசலையும் முற்றுகைப் போராட்டத்தின்மூலம் திறந்தாகவேண்டும்.


செய்வது யார்?


இன்றைக்குப் புலம்பெயர் தமிழ்மக்களது குழந்தைகள் வீதிக்கு வந்து போராட முனைகிறார்கள்.எமது மக்களுக்காக இலங்கை அரசபயங்கரவாதத்துக்கு எதிராகக் குரல்கொடுத்துப் புலம்பெயர் மக்கள் தாம் வாழும் நாடுகளையே தட்டிக் கேட்டார்கள்.இது, வீரம் மிக்க செயல்.இத்தகைய இன்னொரு வீரம் மிக்க போராட்டமாகப் புலிகளது வெளியுலகப் பிரமுகர்களை முற்றுகையிடும் போராட்டம் வெடித்தாகவேண்டும்.


எமது இளையோர்களேதாம் இதையும் இப்போது நடாத்தியாகவேண்டும்.


தாமதமாகும் ஒவ்வொரு கணமும், மக்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதிகளோடு கம்பி நீட்டிவிடும் கயவர்களாகப் புலிப் பிரமுகர்கள் மாறி விடுவார்கள்.வன்னியில் வாழ்வாதார-அடிப்படை வசதிகளை இழந்து தவிக்கும் மக்களது நல்வாழ்வுக்காகப் புலிகளிடம் திரண்டுபோய்க் கிடக்கும் அனைத்துச் செல்வங்களும் மக்களுக்காகப் பயன்பட்டாகவேண்டும்.இது மனித நேயமுள்ள ஒவ்வொருவரும் யோசிக்கும் விடையம்.ஜெயலலிதாவின் தேர்தல் செலுவுக்காக கோபாலசாமி ஊடாக 500 கோடி நிதியளித்த புலிப் பினாமிகள், எமது மக்களது வயிற்றுப் பசிக்காகத் தம்மால் பயமுறுத்தித் திரட்டப்பட்ட மக்கள் பணத்தை வன்னியில் வதைபடும் மக்களுக்காகப் பயன்படுத்த நேர்மையோடு முன்வரவேண்டும்.ஆனால்,இந்த நேர்மையைப் புலிப்பினாமிகளிடமோ அல்லது புலிப் பிரமுகர்களிடமோ நாம் எதிர்பார்க்க முடியாது.இவர்கள் தமது சதியால் கொல்லப்பட்ட தமது தலைவருக்கே தண்ணிகாட்டியவர்கள்.இப்போது, வன்னியில் வதைபடும் மக்களுக்காக இரங்குவார்கள்?


ஆகவே,இளையோரே இலங்கைக்கு வெளியே புலிப்பிரமுகர்களாக வாழும் புலிகளைது இல்லங்களை முற்றுகையிடுங்கள்-முடிந்தால் அவர்களிடம் அனைத்துக் கணக்கு விபரங்களையும் பெறுங்கள்.இதை நீங்கள் வாழும் தேசங்களது சட்ட எல்லைக்குள் மிக இலகுவாக நீங்கள் செய்துவிட முடியும்.இத் தேசங்களது காவற்றுறையூடாக-இறைவரித் திணைக்கழகங்கட்கூடாகவும் இவற்றைச் செய்து முடிக்க முடியும்.மக்களது நல்வாழ்வுக்காகவே புலிகளிடம் முடங்கியுள்ள மக்களது நிதிகள் பயன்பட்டாகவேண்டும்.


இதைவிட்டுத் தனிநபர்கள் இவ்வளவு பெருந்தொகை பணத்தையும் கையாடித் தமது குழந்தைகளுக்காகப் பயன்படுத்த முனைவது சமூகக் குற்றமாகும்.வன்னி மக்களுக்காகத் தெருவில் இறங்கிப் பிச்சை எடுப்பது இப்போது இருக்கட்டும்!


புலிகளது வீடுகளை முற்றுகையிடுங்கள்.


திரட்டப்பட்ட நிதி,எங்கே,எவ்வகையில் மூலதனமாக மாற்றப்பட்டு இயங்குவதென்று துருவித் தேடுங்கள்.அத்தகைய நிதியைக்கொண்டு நமது மக்களை வாழவைக்க முனையுங்கள்.


வீதிக்கிறங்கிப் போரிடும் இளையோரே!, இதுவும் உங்கள் கடமையே.


புலம் பெயர் தேசங்களில் ஒருவர் வேலை செய்து சம்பாதித்துச் செல்வத்தைத் திரட்டுவதென்பது குதிரைக்கொம்பாகும்.


தனக்குச் சொந்தமில்லாத, மக்களது பணத்தில் புலிப்பினாமிகள் சொகுசு வீடுகளும்,கார்களும் வைத்திருப்பதற்கு அனுமதிக்காதீர்கள்!


அவர்களிடம் உள்ள செல்வம் உங்களது பெற்றோர்கள் குருதி சிந்தி உழைத்த செல்வம்.விட்டுவிடாதீர்கள்.


அவர்களது துரோகம் பிரபாகரனது மரணத்தோடுமட்டும் போகட்டும்.


மக்களது செல்வத்தையும் அது சூறையாட அனுமதிக்காதீர்கள்.


இவர்களிடமுள்ள அனைத்துச் செல்வமும் புலிகளது பெயரால் மக்களிடம் தட்டிப் பறித்தெடுக்கப்பட்டதென்பதை மறக்காதீர்கள்.இனி என்ன தயக்கம்?


போராட்டத்துக்கு துணையில்லையா?


அதை உங்களது பெற்றோர்களைக்கொண்டே நிறைவு செய்யுங்கள்.
ஊரார் பணத்தில் புலிகளது பினாமிகளும்,பிரமுகர்களும் இனியும் தின்று கொழுப்பதை அனுமதிக்காதீர்கள்!!!


அங்கே-வன்னியில் பசியால் வாடும் முன்னாள் போராளிகளை -மக்களைக் காப்பதற்கு, இன்றே புலிப்பினாமிகள்-பிரமுகர்கள் வீடுகளை முற்றுகையிடுங்கள்.இதுவே இன்றைக்கு உங்கள் முன்னுள்ள அவசியமான பணி!-மறுக்காதீர்கள்-மறந்திடாது போராடப் புறப்பிடுங்கள்-புயலாக,உங்களைத் தடுக்க எவராலும் முடியாது.ஏனெனில், உங்களிடம் நியாயமும்,உண்மையும் இருக்கிறது.


வாய்மையை வெல்லும்!வழிதொடருங்கள்-வீதிகளில் தோழமையும் பெறுவீர்கள் இளையோரே!


ப.வி.ஸ்ரீரங்கன்

No comments: