Tuesday, August 02, 2011

வேளாள முள்ளி வாய்க்கால்,கரையான் முள்ளி வாய்க்கால்....

இலங்கையைவிட்டுப் புலம் பெயர்ந்தவர்களது தலித்துவக் கோரிக்கைகள்.

"Ours is a battle not for wealth or for power. It is a battle for freedom. It is a battle for the reclamation of human personality" By Dr. B.R. Ambedkar

லங்கை அரசு கடற் கண்காணிப்பு வலையத்த்தின் வழி சாதிரீதியகச் சில வகைமாதிரித்தாக்குதலைச் செய்கிறது.அது ஒரு பக்கத் தாக்குலாக வரியும்போது,மறு வார்ப்பாகப் பிற்போக்குத் தேசியத்தின்தோல்வியில் வர்க்க முரண்பாட்டைக்குறித்து இலங்கை அரசு,சிங்கள-தமிழ் மீன்பிடியாளர்களைப் பிளவுப்படுத்துவதில் சில தர்க்கால வெற்றியையும்,தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணயவுரிமைக்கு ஆப்பு வைப்பதில் இத்தகையத் துண்டு உரையாடலிலுமாக ஒரு பிரச்சனையுள் பல காய்கள் நகர்த்தப்படுகிறது.
இன்று,இலங்கை பூராகவும் நிலவும்(ஏன் இந்தியா பூராகவும்)சாதியமைப்பு, நடைமுறையிலுள்ள சமூக அமைப்பின் உருவாக்கமல்ல. நிலவும் நவகாலனித்துவ அமைப்பு தனது முழுமை பெறாத முதலாளித்துவ வளர்ச்சிக்கொப்பச் சீர்படுத்திக்கொண்ட(தடுத்தாட்கொண்ட)அல்லது திருத்தி அமைத்துக்கொண்ட இலங்கையின்-இந்தியாவின்கடந்தகால நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பின் ஒரு ஊக்கமாகவே இந்தச் சாதிய அமைப்பு முறை மேலெழுகிறது.

இதைக் குறுக்கி வாசிக்கத் தெரிந்த நீங்களெல்லோரும்,அதையே தனிப்பட்ட வகைமாதிரிக்குள் மொன்னைத் தனமாக விளக்குவதும்,அதையே ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்குக் குறுக்கே நின்று கல்லெறியும் வினையாக மாற்றுகிறீர்கள்.சாதியமைப்பின் நிலைகளையும்,இன்றைய நிலைக்கான காரணத்தையும் ஆய்வதென்பது கடந்த 200 ஆண்டு வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டிய தேவையைப் பின் தள்ளிவிட்டு, சமீப வரலாற்றில் 60 ஆண்டு அரச முதலாளியத்தின் கடைக்கோடியில் தமிழ்பேசும் சமுதாயத்தைக் கழுமரத்தில் ஏற்றுவது நியாயமான அறிவுப்போக்கல்ல.

பிற்போக்குத் தமிழ்த் தேசியத்தின் தோல்வியோடு தாழ்த்தப்பட்ட மக்களது கழுத்துக்கு வரயிருந்த கயிறு இற்று அறுந்துபோய்விட்ட பின்பும்,சரியான திசையில் இந்த ஆய்வுகளை-கோரிக்கைகளை நகர்த்தமுடியாத நீங்கள், இத்தகைய அரைவேக்காட்டு நறுக்கோடு தமிழ்பேசும் முழுமொத்த மக்களது விடுதலைக்கு வேட்டுவைப்பதில் காலத்தைக் கடத்துவது சாதியத்தை அகற்றும் போராட்டமாகப் படவில்லை!

தமிழ்ச் சமுதாயத்தின் யாழ் மையவாதத்துக்குட்பட்ட தமிழ் மத்தியதரவர்க்கத்தின் இயற்கையான பலவீனத்தினதும்,முன் அநுபவமற்ற உலகியிற் கண்ணோட்டத்தாலும்,இன்னுஞ்சில விஷேக் குணாம்சங்களினது விளைவாலும் இந்த மத்தியதர வர்க்கம் நிலப்பிரபுத்தவப் பிற்போக்குத் தேசிய வாதத்துடன் தமிழீழம் காணப் புறப்பட்டு, புரட்சிகரக் குணாம்சத்தையே எட்டமுடியாது சிக்குப்பட்ட இன்றைய சூழலில் இந்த வகைக் குறுங் கதையாடல் எதையும் சாதிக்காது.இது மேலும்மக்களைப் பிளவுபடுத்தி அதே பிற்போக்குத் தேசிய வாதத்தை வளர்ப்பதிலேயேதாம் முடியப்போகிறது.

இந்தச் சூழலை விளங்கிக் கொள்ள ஒவ்வொரு தொழிற்பிரிவையும் இலங்கை-இந்தியச் சூழலில் புரியும்போது, அங்கே வர்க்க ஒடுக்குமுறையானது சாதியவொடுக்குமுறையாக விரிவதை இனங்காண முடியும்.இதைக் கவனத்தில் எடுப்பதை மறுப்பதென்பது நிலப்பிரபுத்துவ எச்சசொச்சத்தின் இருப்பைத் தொடர்ந்து நிலைப்படுத்துவதைவிட வேறென்னவாக இருக்க முடியும்?


ஸ்ரீரங்கன்

02.08.11

No comments: