Saturday, August 20, 2011

இந்தக் கிரீஸ் குழு...

அரச ஆதிக்கம்-அரச ஜந்திரம்...

ஆதி ஆதித்யன் :
" இது சம்மந்தமான குறிப்பில் கலையரசன் என்பவர் அதிகளவில் கொக்கரித்துக் கொண்டிருந்தார். யாருக்கு எப்படியான ஆபத்து இருக்கிறது என்பதற்கப்பால் இந்த பிசாசுகளின் பின்னணியில் சிங்கள ராணுவம் இருக்கிறது என்பதை அடியோடு மறுத்து வந்த கலையரசன் என்பவர் சிறிலங்கா அரசின் முகவர் என்பது பின்புதான் தெரியவந்தது. அவர் நீண்டகாலமாக அந்த வேலைதிட்டத்தில் ஈடுபட்டுவருவதாக சிலர் உறுதிப்படுத்தியுள்ளனர். ... ......"

Parani Krishnarajani முக நூற்றட்டியில்

பரணி, அரச ஆதிக்கம்,அரச ஜந்திரம்,அதன்வழி மக்கள் விரோதங்கள் குறித்து நிறையப் பலர் எழுத முடியும்.இனவழிப்பில் அதீத தேவையை வற்புறுத்தும் சிங்கள ஆளும் வர்க்கத்தினது நலன்களின்வழி அரச ஆதிக்கமானது பெரும்பகுதிச் சிங்களப் பாமரர்களைத் தொடர்ந்து கட்டிப் போடுவதில் பல காரியங்களைச் செய்வதை நாம் சமீப காலமாகப் பார்த்து வருகிறோம்.இது பாராளுமன்ற ஆட்சியின்மீதான கவனத்தைத் திசை திருப்புவதில் பண்டுதொட்டியங்கிய வியூகத்தின் இன்னொரு வகைமாதிரியானது.

எழுத்தில் அந்ததந்தக் காலத்து அரசியல் அராஜகங்கள்-போக்குகள் குறித்துப் பதிவது அவசியம்.

நீங்கள் பதிந்ததும் அவசியம்.

ஆனால்,அதை வெட்டிக் கருத்தாடுபவர்களை அப்படியே விட்டுவிட வேண்டியதுதாம்.

கருத்துகளைக் காலம் தீர்மானித்துக்கொள்ளும்.

புலிவழி "தமிழீழம்"சாத்தியமென்றும்,காரிகாலன் அதைச் செய்து காட்டுவான் என்பதும் தமிழர்களின் 95 வீதமானவர்களின் புலம்பலாக-அவாவாக இருந்தது.இதுள் , பெயருக்குப் பின்னால்-முன்னால் பல பட்டங்களைச் சுமப்பவர்களே பெரிதும் புலம்பிக்கொண்டனர்.

அப்போது,நாம் புலிகள் பூண்டோடு அழிக்கப்படுவர்களெனச் சொன்னோம்.அவ் வேளைகளில் நம்மைக் கடித்துக் குதறிய பெரும் பல்கலைக் கழகப் பேராசிரியர்களையும் நாம் பார்த்திருந்தோம்.

இது,வரலாற்று இயங்கியலைப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்துடன் பார்க்காத தொழில்முறைக் கல்வியாளர்களது வினையாக இருந்தது.அவர்களுக்குப் பின்னே ஒருபெரும் வால் கூட்டம் தொடர்ந்து அணிவகுத்துக்கொண்டது.இப்போது,இந்த உதரிவர்க்க "அறிஞர்"குழாம் இருந்த இடம் தெரியாது உதிர்ந்தே போய்விட்டது.

என்றபோதும்,உண்மைகள் முகத்தில் ஓங்கி அறையும்போது,அவர்கள் பெரும் மௌனத்துள் தியானிப்பதும்,அடையாள நெருக்கடி ஏற்படும்போது உரையாடுவதிலும் கவனம் கொள்கின்றனர்.மீளவும்,கருத்தியல்வழியாகச் சிந்திப்பதில் தமது இயலாமைகளை முற்போக்குவாதிகளிடம் கொட்டுவதில் காலத்தைப் போக்குகின்றனர்.

இன்றைய இலங்கையில் நிகழும் அராஜகங்களுக்கு நேரடியாக அரசுமட்டுமே காரணமில்லை.

அரசினது ஆதிக்கத்தை விரிவாக்கும் அந்த அரசினது ரீபிரசென்சுகள்[Representative] நமக்குள்,கிராமத் தலைவர்களாகவும்,எம்.பி. அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள்.அத்தோடு இராணுவத் தளபதிகளாகவும்.இவர்கள் தத்தமது பதவிகளைக் காப்பதிலும்,தமக்கு எதிராக ஓட்டளித்துத் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்த தமிழ்பேசும் மக்களை ஏதோவொரு வகையில் பழிவாங்கப் பல தளங்களில் இயங்குகின்றனர்.

புலிகளைப் பூண்டோடு அழித்த யுத்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் நகர்ந்தும் இலங்கை இராணுவத்தில் எந்த மாற்றமுமின்றி அது யுத்தக் காலத்துக் கட்டமைப்போடு இருக்கிறது.

இராணுவத் தளபதிகளுக்குப் தமது பதவியின் இருப்பு நிலைப்பட்டாக வேண்டும்.அமைச்சர்களுக்கு(டக்ளஸ் போன்றவர்கள்)த் தம்மை ஏமாற்றிய மக்களைப் பழிவாங்க வேண்டும்.கிராமத் தலைவர்கள் தமது பதவிகளை இராணுவத் தளபதிகளோடிணைந்து காப்பதில் காரியவாதிகளாக இருக்கின்றனர்.

சமூகத்தில் குடிசார் அமைப்புகளது தோற்றம் அவர்களை அச்சப்படுத்தும்போது தமது நிலைகளைக் காப்பதில் கிரிஸ் குழு அது-இதுவென அராஜகம் மேலெழுகிறது.

அரசுக்கு இது தெரிந்தும் அது இராணுவ ஆட்சியைத் திணிப்பதில் கவனஞ் செலுத்துவதும்,கூடவே தமிழ்ப் பிரதேசமெங்கும் வாழும் தாழ்த்தப்பட்ட(தலித்துகள்)மக்களை வென்றெடுத்துத் தனது ஆதிக்கத்தை நிலப்படுத்த விரும்புகிறது.

இவைகளின் கூட்டுவடிவமான இந்த நிகழ்வுப்போக்கை,புலியெதிர்ப்பு அரசசார்ப்புக் கூட்டத்தால் சகிக்க முடியாதுதாம்.அவர்களது எஜமானர்களே அவர்களது அனைத்து நடவடிக்கைகளையும் தீர்மானிக்கும்போது,இவை குறித்துப் பெரிதாக விவாதிக்க வேண்டியதில்லை!

ஆனால்,அவர்களது நடிவடிக்கையின் பின்னே உந்தப்படும் அரச ஆதிக்கத்தின் கண்ணிகளை விவாதிப்பதில் கவனமெடுக்கலாம்.அரச ஆதிக்கத்துக்கும்,அரச ஜந்திரத்துக்குமான இருவேறு தளங்களை மிக விரிவாக விளங்கியாக வேண்டும்.

இந்த இரு தளமும் ஒன்றையொன்று காப்பதில் தமது இருப்பையிட்டுப் பாரிய மனிதவிரோதத்தைக் கட்டமைக்கின்றன.அதிலொன்றே இந்தக் கிரீஸ் குழு.

நட்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
20.08.11

No comments: