Monday, November 21, 2011

நந்திக் கடற்கரையில் நவம்பர்: 27

"மாவீரர்கள்" : பணத்தைக் குவிப்பதற்கான பந்தையக் குதிரைகளாக...

நவம்பர்: 27,நெருங்க-நெருங்க,


ந்திக் கடற்கரையில் பிரபா உச்சி பிளந்து காட்டிய துட்டக்கைமுனு நமது மக்களது அடிமை சாசனத்தை உறுதிப்படுத்தும் சிங்கள உளவியலாக அன்று வெளிபட்டது.இது, ஒரு வரலாற்றுத் தரிசனமாகவே உள்வாங்கப்படவேண்டும்.இத்தகையவொரு உளவியலைச் சமுதாய மனநிலையாக மாற்றிய இலங்கையின் இனவாதத்தத் தொடர்சியுள்ள உண்மைகளை வெறுமனவே இனவாதக் கருத்தாக ஒதுக்கிவிட முடியாது.
 
என்றபோதும், எங்கும்,பொய்யும் அது சார்ந்து கருத்தியில் போரும் தொடர்கிறது!புலம்பெயர் மக்கள் மத்தியில் மிகக் கணிசமான வீதத்தில் இத்தகைய பொய்யுரைப்புகள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்படுகிறது.
 
ஒரு இயக்கத் தலைவனது சரணடைவுக்குப்பின்,அவனைக் கொலை செய்து மகிழ்ந்த அரசியல் இலங்கைக்குச் சொந்தமெனினும்,அதையே மறைத்து இன்னும் தமிழீழக் கனவு வீசும் கயமைமிகு புலம்பெயர் தமிழ் அரசியலானது ஆபத்தானது.


இஃது, ஒரு சமுதாயத்தையே சதிராடிச் சீரழித்தபின் மீளவும், பணம் பறிக்கும் வியாபார உத்தியோடு, அரசியல் செய்வதுதாம் எமக்குரிய பாரிய வெறுப்பாக அமைகிறது.கடந்த முப்பதாண்டுப் புலி அரசியல்-போராட்ட முறைமைகளால் தமிழ்பேசும் மக்கள் பெரும்பாலும் இனவாதம் ஊட்டப்பட்ட பொம்மைகளாகவே இருத்தி வைக்கப்பட்டார்கள்.இந்தப் பொம்மை விளையாட்டில் பலிகொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் மண்ணோடு போக,எஞ்சியிருப்பவர்கள், தமது வாழ்வுக்கான புதிய மதிப்பீடுகளைப் புலியழிப்புக்குப் பின்பான இலங்கை அரசியலில், கண்டடைய முனையும் இன்றைய தருணத்தில்தாம் இனிவரும் நவம்பர் 27 கொலையையும்-சதியையும்,சரணாகதி அரசியலையும் புனிதப்படுத்தியபடி போர்க்கதை சொல்லப் போகிறது.
 
மக்களை ஒட்ட மொட்டையடித்து,அநாதைகளாக்குவதில் தொடரும் அரசியல் என்னவென்பதைப் புரிந்துகொண்டாக வேண்டும்!
 
இது,மற்றவர்களை ஏமாற்றிப்பிழைப்பதில் காலாகாலமாகப் பழக்கப்பட்டவொரு சமுதாயத்தின் அகவிருப்பாகவே இனங்கண்டாக வேண்டும்."ஊரை அடித்து உலையில் போடும்" ,யாழ்ப்பாணிய அரசியலுக்கு, அழிவு இன்னும் இல்லை என்பதை அழகாகக இனங்காணும் அரசியலை இப்போது பணப்புலி நெடியவன் குழுவுக்குள்ளும்,காடுகடந்த "தமிழீழ அரசின் " தலைமையில் இன்னொரு பிளவுக்குள் தவிக்கும் இலண்டன் தலைமைக்ககுள்ளும் காணமுடியும்.வெறும் மன விருப்புகளைத் தமிழின்-தமிழரின் பெயரால் கணக்குக் கூட்டித் தீர்மானிக்கும் அரசியல் அபிலாசை நம்மைப் படு குழியில் தள்ளிய வரலாறாக விரிந்துகொண்டே செல்லுகிறது.

" குண்டடிபட்ட மனிதக் குழந்தை
குருதியுள் அமிழ்ந்து கருவாடாகியபோது
கம்பி வேலிக்குள் அதன் எச்சம் அடக்கப்பட்டது
இத்தனைக்கும் மத்தியில் மீள உண்டியலோடு
உருப்படாத பணப்புலி..."

தமிழ்பேசும் மக்கள் இவ்வளவு தூரம் அழிவுக்குள் உட்பட்டுவரும் இந்தத் தருணத்திலும்,எவரெவரோ அந்த மக்களின் நலன்களைச் சொல்லியே அவர்களை அழித்தும்,அவர்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடியும், தத்தமது வாழ்வை மெருக்கூட்டியுள்ளார்கள்-மெருக்கூட்ட முனைகிறார்கள்.
 
ஆயுதப் போராட்டம் எமது மக்களிடமும்,போராடும் போராளிகளிடமும் அந்நியப்பட்டுக்கொண்டே சென்று,இறுதியில் சிங்கள இராணுவத்திடம் படுதோல்வியடைந்து , தமிழ்பேசும் மக்களை ஒட்டவொடுக்கும் சிங்கள மற்றும் உலக முலதனத்திடம் காட்டிக்கொடுத்தது.
 
அது, எமை அனைத்துக்கும் அடிமையாக்கிச் சென்றுள்ளது.
 
இந்த அடிமை வாழ்வை மேலும் தீவிரப்படுத்த முனையும் புலம் பெயர் எச்ச சொச்சங்கள் போடும் திரை மறைவு அரசியல், தமிழ்பேசும் மக்களுக்கு "உரிமை"குறித்துப் பேசுகிறது.அதே பழைய பாணியில் கருத்தாடும் நபர்கள், கடந்த காலத்தில் அழியுண்டுபோன போராளிகளை மிக மலினப்படுத்திப் பூசிப்பதால் ,அவர்களது கொலைகளை தேசத்துக்கான தியாகமாக்கிவிட முடியாது.
 
நவம்பர் இருபத்தியேழுக்கான ஒத்திகைச் செய்துவரும் பாசிசப் பணப் புலிகள்,இதுவரையான எல்லாவிதப் போராட்ட முறைகளும் செய்து பார்த்த இவர்களது போராட்டத் தலைமையோ, இவர்களாலேயேதாம் காட்டிக்கொடுக்கப்பட்டு[இறுதியில் சரணடைந்து] செத்த ஈனத்தனத்தை,இவர்கள் தியாகமாக்குவதில் மேலுஞ் சில்லறைகளைக் கவ்வுவதற்கேற்ப அரசியல் பேசுவது தமிழ் மக்களது ஞபகசக்தியோடு விளையாடுவதே.மாவீரரை நினைவு கூரும் தகமை இந்தப் பணப் புலிப்பினாமிகளுக்கு உண்டா?

அந்தத் தகமையானது உண்மையான-நியாயமான அறங்களால் கட்டியமைக்கப்படுவது. மக்கள்சார்ந்த துளியளவு வெளிப்படையான அரசியலும் செய்ய முடியாத இந்த மாபியாக்கள்தாம் ,இனிவரும் கார்த்திகைத் தீபம் ஏந்தக் காத்துக்கிடக்கின்றனர்.தம்மால் பலியிடப்பட்ட அப்பாவிப் போராளிகளை வைத்து ,மீளவும் பணந் திரட்டம் இந்தக் கேடுகெட்ட புலிகளுக்கு வக்காலத்து வேண்டும் அறிவுகெட்ட தேசியப் பாலகர்களை எந்தப் பொழுதிலும் ஜீரணிக்கவே முடியவில்லை!தமது சொந்தத் தலைவனுக்கு என்ன நடந்ததென்றதையே மறைத்தொதுக்கும் களவாணிக்கூட்டம்,செத்த போராளிகளுக்த் தீபம் ஏற்றுவதற்கு இலாயக்கானவர்களா?

அதிகார வர்க்கத்தோடிணைந்து தமிழ்மக்களை மொட்டையடிக்கும் குவிப்பூக்க விருப்புறுதியானது ,தமக்கு எதிரான எந்தப் புறநிலை மாற்றத்தையும் இரகசியமானமுறையில் வேவுபார்த்துச் சிதைப்பதில் முன்நிலை வகிக்கிறது!இதைப் புதிய புலிக்காவடிகளும்,அதை ஆட்டுவிப்பவர்களும் தொடர்தே வருகிறார்கள்.தத்தமது இடத்தைத் தக்கவைப்பதில் மிகவும் நிதானமாகவே இந்தக்கூட்டு இருக்கிறது.இதற்கான உறுதியான அத்திவாரமாக இந்தப் பலிகொடுக்கப்பட்ட பாலகர்களது முகங்களைக்காட்டி ,மீளமீளப் பணம்புரட்டும் வியாபாரக் கூட்டமாக மாறியுள்ள புலம்பெயர் புலிப்பினாமிகளை அவர்களது குணவியல்புக்கமைய அவர்களே வெளிப்படையாகக் "குத்துவெட்டில் "இறங்கிக் காட்டிக்கொண்டாலும் ,செத்த போராளிகளது முகங்களைக் காணும் எந்த மனிததரும் இரங்கவே செய்வார்கள்.

இந்தப் பலவீனத்தைக் காசாக்குவதில் அதீத கவனஞ் செலுத்தும் பணப் புலிகள்,தம்மால் அநாதவராக விடப்பட்ட போராளிகளையோ அல்லது தம்மால் கட்டாயமாகப் பிடித்துக் கொலைக்கு அனுப்பப்பட்ட போராளிக் குழந்தைகளது பெற்றோருக்கோ இதுவரை எந்தக் காரியமும் செய்யவே இல்லை!எனினும்,கார்த்திகை இருபத்தியேழு என்பதில் காசு காணும் மனோபாவமானது,ஒரு இனத்தின் உரிமையையே வியாபாரமாக்கிய கையோடு ,செத்த போராளிகளது ஆன்மாவையே வைத்துக் கடைவிரிப்பதில் தமது "ஆன்மாவென்பது பணம் புரட்டும் ஸ்த்தானத்திலேயேதாம் புரட்டிப் போடப்பட்டதென" நிரூபிக்கின்றனர்!
 
இலங்கையில் தமிழ்பேசும் மக்கள்படும் தொடர் துன்பங்கள், பசி,பட்டுணி, சாவு, பொருளிழப்பு,வாழ்விடங்களைவிட்டு ஒதுங்குதல்,அகதி வாழ்வு,இத்தகைய சமூகச் சீர் குலைவு மக்களிடத்தில் ஆத்மீகப் பலவீனத்தையும்,அது சார்ந்த மதிப்பீடுகளையும் வேறொரு பாணியில் உருவாக்கி விட்டுள்ளது! இப்போது ,விடுதலை,சுதந்திரம் என்பதெல்லாம் மக்களின் வாழ்வோடு சம்பந்தப்படாத விஷயமாக மக்களே உணரத்தலைப்படும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.இதை இனம் கண்டவர்கள் எமது மக்களின் எதிரிகளே!நம்மைச் சுற்றி மதில்களை உருவாக்கிய விடுதலை இயக்கங்கள், நமது மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து கிஞ்சித்தும் கவலை கொள்ளாது அவர்களையே ஆயுதப் பலாத்தகாரத்தால் ஒடுக்கித் தமது ஆதிக்கத்தை நிலைப்படுத்த முனைந்த இந்தக் கேடுகெட்ட அரசியலுக்குப் புலிகளையோ அல்லது மற்றைய இயக்கங்களையோ காரணம்காட்டிப் பேசுவதைவிட,நமது மக்களின் அரசியல் அறிவு நிலை சார்ந்து சிந்திப்பதே சாலச் சிறந்தது.
 
இன்றோ, புலிகளது தோல்வியிலிருந்து பாடங்கற்க வேண்டியவொரு ஒடுக்குமுறைக்குள்ளாகும் இனமாக நாம் இருந்தும்... அது, குறித்து மேம்போக்கான மனநிலையோடு மிகக் கெடுதியாக வீராப்புப் பேசுகிறோம்!

புலம்பெயர்ந்த மண்ணிலோ,தமிழ்மக்களை ஒட்ட மொட்டையடித்து,அரசியல் அநாதைகளாக்குவதற்கென்றொரு கூட்டம்"நாடு கடந்த தமிழீழம்-நாடு கடந்த நாடாளுமன்றம்-நெடியவன்-கொடியவன் குழுவென "பணப் பிசாசுகளாக வலவந்து ,மக்களை ஏமாற்றிக்கொள்ள மீண்டும் செத்த போராளிகளது பெயரால் பணவேட்டைக்காகக் கார்த்திகைத் தீபம்,மாவீரர் முகந்தாங்கி உண்டியல் கிலுக்குமானால் ,தமிழ்பேசும் மக்கள் அடுத்த நூற்டில் ஆட்டு மந்தைகளாகவே அடுத்தவர் தயவில் வாழக் கற்றுக்கொள்வர்.இதைத் தடுத்து நிறுத்துவதற்கு நாம் முனைந்து,இவர்களது மோசடி வித்தைகளை அம்பலப்படுத்தியாகவேண்டும்.இது எந்தவடிவிலுஞ் செய்து முடிக்கவேண்டிய அவசியப்பணி.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,ஜேர்மனி
21.11.2011

No comments: