Wednesday, November 30, 2011

தாய்மண் விடுதலை நோக்கி பயணிப்பவர்கள்...

மணிவண்ணன் ஏகாம்பரம் போன்ற மடக் கொழுந்துகளுக்கு...

//விடுதலைப் புலிகள்.... தூய்மையானவர்கள்... மது ..புகை , பாலியல் ஆசை என்னும் போதைக்கு அடிமை ஆகாத கொள்கை மாறாது அன்றுமுதல் இன்று வரை தாய்மண் விடுதலை நோக்கி பயணிப்பவர்கள்.//

இரமணியின் முக வாயில் : -Manivannan Ehambaram


தற்போது வன்னியில் முடித்து வைக்கப்பட்ட ஆயுதப் புலிகளது அழிப்போடு சம்பந்தப்பட்ட கயவர்கள் புலிகளுக்குள் தானே முளைவிட்டனர்?கருணாவும்,பிள்ளையானும் மட்டுமல்ல கே.பி.யும் இன்னும் பல புலிகளும்தானே தமிழ் மக்களைக் காட்டிக்கொடுத்த கயவர்கள்?இவர்களை அம்மானென்றும்,கே.பி.என்றும் செல்லமாக அழைத்த தமிழ்த் தேசியப் பால்குடிகள் மற்றவர்களைத் துரொகியென இப்பவும் வகுப்பெடுப்பதும்,தனிநபர்கள்மீது தப்பான நடாத்தைகளைக் கற்பிக்கவும் முனைகின்றனர்.இது சாபக்கேடா அல்லது புலித்தனமா?மணிவண்ணன் ஏகாம்பரம் போன்ற மடக் கொழுந்துகளுக்கு இது புரியாது போனது ?;புலிகளுக்கு ஆலவட்டம் கட்டும் கொடிய மனதானது யுத்தத்தால் இழந்த இலட்சம் உயிரையும் ஒரு நொடியில் கேவலப்படுத்தி விடுகிறது.


„தலைவர் வல்லவர்;

தலைவர் அனைத்தையுஞ் செய்து தமிழீழம் காண்பார்;

தலைவர் கரத்தைப் பலப்படுத்தினால் போதும்;

தலைவர் காலத்தில் தமிழீழம் கிடைக்கும்-நம்புங்கள்!.“


தலைவருக்கு அனைத்தையும் ஒப்புக்கொடுத்த ஒரு இனம், தனக்குள்ளேயே உள்ளக ஒடுக்குமுறையை மட்டும் „துரோகத்தின்“பெயரில் நடாத்தி முடித்தது.

நமது போராட்டவாழ்வில்,கடந்த 25 ஆண்டுகளாக நமது சமுதாயம் தனது ஆற்றலை,சமூக இருப்பை,படைப்பாற்றலை,மனித வளத்தைப் பரவலாக இழந்துவிட்டது.போராட்டத்தாலான சமூகச் சிதைவு மனித சீவியத்தைத் தொலைத்துப் பூர்வீக வாழ்விடத்திலிருந்தே தமிழ்பேசும் மக்களைத் துரத்தியடித்துவிட்டுள்ளது.இயக்க-அரச ஆதிக்கத்தின் விளைவாக நிகழ்ந்த இவ் நடாத்தைகள் ஏலவே இலட்சம் முஸ்லீம்களில் ஆரம்பிக்கப்பட்டு இன்று, அந்த மக்களை விரட்டியடித்த பொதுமைப்பட்ட சமூகவுளவியலுக்குச் சொந்தக்காரர்களான தமிழ்பேசும் மக்களையுமே மெல்ல வாழ்விடங்களைவிட்டுத் துரத்தியடித்துள்ளது.தமிழீழம் என்ற அரசியல் சூதாட்டம் எத்தனை ஆயிரம் தலைகளை உருட்டியும் தனது தவறைக்குறித்து மிதப்பாகவே பதிலளிக்கிறது.இதன் பின்னாலிருந்து மீளவும் அரசியல் செய்யமுனையும் தமிழ் தேசியத்தின் போலி முகங்கள் தமது வர்க்கத்தின் நலனைப் பிரதானப்படுத்தித் தமிழ்பேசும் மக்களைக் குறித்தான எல்லாவகை நியாயங்களையும் தமிழ் தேசத்தின் விடுதலை என்ற பதத்துக்குள் விளக்க முனைகிறது.இது, கடந்தகாலத்துத் தவறுகளின் அறுவடையாக நிகழ்த்தப்படும் இன்றைய யுத்த அழிப்பைக்குறித்துப் பொத்தாம் பொதுவாகத் தீர்ப்புக் கூறுகிறது:


// புலி எதிப்பாளர்களை நான் நன்றாக அறிவேன் . அவர்களின் குணம் செய்கை என்பவற்றை வைத்து சில கணிப்புகள்

என்னிடம் இருக்கின்றது இது எனது சொந்த அனுபவம் ....நான் சந்தித்த பலரிடம் இருந்து அறிந்தவை....

1 ) வேற்று இயக்கத்தில் இருந்து பிரிந்தவர்கள் தங்களை இன்னும் விடுதலை விருமிபிகள் என்று சொல்லவதும் ஆனால் புலிகளின் பாதை சரி இல்லை என்றும் ( ஆடத்தெரியாதவன் அரங்கம் பிழை என்று சொல்வது) புலிகள் தங்களை போராட விடவில்லை என்றும் சந்தர்ப்பவாதம் பேசுபவர்கள்.

2 ) சுயநல அரசியல் நடத்தும் அரசியல் வாதிகளின் நிழலில் இருப்பவர்கள்.

3 ) விடுதலை போராட்டத்தை எதிரிகளின் காலடியில் போட்டுவிட்டு கொள்கை மாறி சுகபோகம் அனுபவிக்கும்
கூட்டம்

4 ) ரகசிய மது மாது போன்ற எல்லா பழக்கத்துக்கும் அடிமைப்பட்ட சிலர் தங்களை புத்திஜீவிகள் என்று சமுதாய அரங்கில் தங்களை ஆய்வாளர்களாகவும் விடுதலை விரும்பிகளாகவும் காட்டுபவர்...

5 ) எதையும் செய்யாது வீராப்பு பேச்சில் காலம் கழிக்கும் ஒரு சிலர்

6 ) தேசத்துக்கும் பிறமக்கள் துயருக்கும் உதவ மனம் இல்லாதவர்கள் .

7 ) தங்களை விட சிறந்த கல்விமான்கள் இல்லை என்றும் தங்களிடம் இருக்கும் திறமைகளை தாங்களே
புகழும் கூட்டம்.

8 ) பதவி ஆசையும் தன்னலத்துக்காக எதையும் செய்ய துணியும் கூட்டம்....

9 ) எதிரிகளின் கைகூலிகள் , தன தவறை மறைத்து பிறர் மீது குற்றங்களை சுமத்தும் குணம்.

சரியான தகவல் தெரியாது பிறரின் சொல்கேட்டு தவறான கருத்துக்களை கொண்டிருப்பவர்கள்...
பிழையான போதனைகளில் வேறு இயக்க அல்லது எதிரி வழியில் செல்பவர்கள்...
அரசியல் சுயநலம் , அரசியல் கட்சிகளின் செல்வாக்கு. இப்படியாக பல குணம் இருக்கும்

அனால் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் எந்நிலையிலும் .........தமிழ் உணர்வு உள்ளவர்கள். தாய்மண் விடுதலை நோக்கி பயணிப்பவர்கள்விடுதலைப் புலிகள்.... தூய்மையானவர்கள்... மது ..புகை , பாலியல் ஆசை என்னும் போதைக்கு அடிமை ஆகாத கொள்கை மாறாது அன்றுமுதல் இன்று வரை தாய்மண் விடுதலை நோக்கி பயணிப்பவர்கள்.
ஈழ விடுதலைக்கு எதிராக சொந்த தாய் தாய் உடன்பிறந்தவர் செயல்பட்டாலும் அவரை தேச விரோதிகளாக கணித்து கொல்லும்கொள்ள்கை வெறி அவர்களிடம் இருக்கும். தாய் மண்ணுக்காக வாழும் அனைவரும் விடுதலைப்புலிகள்.....// -Manivannan Ehambaram
http://www.facebook.com/profile.php?id=100000789360672&sk=wall


அது, பெரும்பாலும் அரசியல் தவறென்பதை“எட்டப்பன்,துரோகி,காக்கை வன்னியன்“எனும் ஆதிக்க வர்க்கத்தின் திமிர்த்தனமான கருத்தியற் பாசிசத்துடன் மெல்லத் தமது நலன்களையும், அதுசார்ந்த அழிவு அரசியலையும் நியாயப்படுத்துவதில் மற்றவர்களைச் சொல்லித் தப்பிக்கிறது.

இதைக் குறித்துக் கேள்விகளைக் கேட்டாக வேண்டும்:

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் மொழியப்பட்ட வெறும் வாய் வீச்சுத்“தமிழீழக் கோசம்“எங்ஙனம் போராட்டத்துக்கான காரணமாக மாறியது?

இத்தகையவொரு கோசத்தக்குள் மறைந்திருந்த அரசியலின் தெரிவு என்ன?

இதை முன்னெடுத்த அரசியல் தலைமையின் பின்னால் இருந்த அரசியலின் தொடர்ச்சி எது?

தமிழீழம் என்ற கோசத்துக்கு ஏதுவான பொருளாதாரச் சூழல் தமிழ்பேசும் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த நிலப்பரப்பில் நிலவியதா-நிலவுகிறதா,இது சார்ந்த சுயநிர்ணயம் சாத்தியப்படுமா?

சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களுக்குள் தமது பொருளாதார இலக்குகளைக் கண்டடைந்தவொரு வர்க்கம் அவ்வண்ணமே சிங்கள அரச பீடத்தில் தமது சேவைத் துறைசார் அதிகாரத்தைக் கையகப்படுத்தியபடி எங்ஙனம் தமிழீழஞ் சொல்ல முனைந்தது?

இத்தகைய „தமிழீழ“க்கோசத்தை முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களது அபிலாசையாக்குவதில் எத்தகைய சக்திகள் உடந்தையாக இருந்தன,அவை இலங்கைக்குள் மட்டும் தமது இருப்பைக்கொண்டவையா அல்லது இலங்கைக்கு வெளியில் இருந்தும் வெளிப்பட்டவையா?

இக் கேள்விகளது அடுத்த நிலையில், சிந்தப்பட்ட குருதிக்குக் காரணமான அரசியலுக்குத் தார்மீகக் காரணம் ஏதாவது உண்டா?

அது, தமிழ் பேசும் முழுமொத்த மக்களையும் இவ்வளவு பாதிப்புக்குள் உட்படுத்தித் தனது மூர்க்கமான அழிவு யுத்தத்தைத் தமிழினது பெயராலும் அது நிலவும் நிலப்பரப்புக்கடந்தும் நடாத்துவதில் எத்தகைய அரசியல் முதன்மையுறுகிறது?

இது,தமிழ்பேசும் மக்களது விடுதலையைத் தமிழீழத்தின் திசைவழியில் வென்றுவிட முடியுமென்று ஊக்கப்படுத்திய „மாவீரர்கள்“பட்டியலின் தெரிவில் எவரது நலன்கள் முதன்மையுற்றுக் கொலைக் களத்துக்குச் சிறுவர்களைப் பிடித்தனுப்பியது?

தற்போது வன்னியில் முடித்து வைக்கப்பட்ட ஆயுதப் புலிகளது அழிப்போடு சம்பந்தப்பட்ட கயவர்கள் புலிகளுக்குள் தானே முளைவிட்டனர்?கருணாவும்,பிள்ளையானும் மட்டுமல்ல கே.பி.யும் இன்னும் பல புலிகளும்தானே தமிழ் மக்களைக் காட்டிக்கொடுத்த கயவர்கள்?இவர்களை அம்மானென்றும்,கே.பி.என்றும் செல்லமாக அழைத்த தமிழ்த் தேசியப் பால்குடிகள் மற்றவர்களைத் துரொகியென இப்பவும் வகுப்பெடுப்பதும்,தனிநபர்கள்மீது தப்பான நடாத்தைகளைக் கற்பிக்கவும் முனைகின்றனர்.இது சாபக்கேடா அல்லது புலித்தனமா?மணிவண்ணன் ஏகாம்பரம் போன்ற மடக் கொழுந்துகளுக்கு இது புரியாது போனது ?;புலிகளுக்கு ஆலவட்டம் கட்டும் கொடிய மனதானது யுத்தத்தால் இழந்த இலட்சம் உயிரையும் ஒரு நொடியில் கேவலப்படுத்தி விடுகிறது.

இது, குறித்த கேள்விகளோடு,கொல்லப்பட்ட மக்களுக்கு எத்தகைய அரசியல் நடாத்தைகள் சிங்கள-தமிழ் ஆளும் வர்கத்தின் தரப்பிலிருந்து இப்போது முன்வைக்கப்படுகிறது?

இவை மிக அவசியமாகக் கேட்கப்பட்டு விடைகாணவேண்டிய மிகச் சாதாரணக் கேள்விகள்.

மக்களது இன்றைய இழி நிலைக்கு மேலும் „தமிழீழத் தாயகம்“ எனும் சமூகவுளவியல் அனைத்தையும் மொழியினதும்,தேசத்தினதும் பெயரால் சமமப்படுத்தி,தலைவரது தியாகத்துக்கு முன் குறுக்கிவிடமுடியாது.

தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பு இலங்கையில் கேள்விக்குள்ளான அரசியலில் புலிகளினது போராட்டச் செல்நெறி-அரசியற்பாதை மற்றும் அதன் பாத்திரம் குறித்து நாம் நிறையக் கேட்டாக வேண்டும்.இது,அடுத்தகட்டத்தைத் தகவமைப்பதற்கும் நமது சமுதாயத்தைத் திடகாத்திரமான சமுதாயமாக்குவதற்கும் இது அவசியமான ஆரம்பக்கட்டம்.இதை எவரும் மறுத்தொதுக்கிவிட்டுத் தமிழீழம் என மீளவும் கூட்டாகக் கோசமிடமுடியாது.

புலிகளைச் சுற்றிக்கட்டியமைத்த பிரமைகள் நீர் குமிழி போன்றதென்பதைப் முள்ளி வாய்க்காலும்,கே.பி.யும்,கருணாவும் தெளிவுப்படுத்தி விட்டனர்.புலிகளது அரசியலைத் தொடர்ந்து தாங்கிப்பிடித்து,அதில் தொங்க முனைவது நம்மை ஒடுக்கும் சிங்களப் பேரினவாதத்துக்கு இன்னும் சாதகமான அரசியல் ஊக்கத்தை வழங்குவதாகவே இருக்கும்.

நாம்,எமது அரசியல் தலைமைகள் குறித்து ஆய்வுகளைச் செய்தாகவேண்டும்.

இதுள், அவர்களது அனைத்து மூலங்களையும் கண்டடையவேண்டும்.

இங்கே,தலைவர்-தேசியத் தலைவருக்குப் புகழ் மாலை போட்டது போதும்.அவர் தமிழ்பேசும் மக்களது அரசியலில் அரிச்சுவடியைக்கூடப் புரிந்துகொண்டவரல்ல.ஆதலாற்றாம் ஆதிக்க வர்க்கத்தால் ஆட்டிவைக்கப்படக் கொலை அரசியலைத் தொடர்ந்தார்.இதன் சாதகத்தைப் பலமாகக் கருதிய சிங்கள இனவாத அரசு, தமிழ்பேசும் மக்களது இருப்புக்கே இப்போது வேட்டுவைத்து வருகிறது.இதற்கான அரசியல் தெரிவைப் புலிகளதும் அவர்களது முன்னோர்களும் போட்டதாகக் கொண்டோமானால், இதை வலுப்படுத்தித் துரோக அரசியலுக்குக் களம் அமைத்த சக்திகள் எவை?

இதன் வழி நாம் சிந்திப்போமா?


ப.வி.ஸ்ரீரங்கன்.

No comments: