Friday, February 01, 2013

"முன்னணிக்கான அரசியல் திட்டமும்,அதன் நோக்கமும்" .


முன்னிலைச் சோசலிசக்கட்சி குறித்தும் அதன் கோட்பாட்டு ரீதியான "தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணயவுரிமை மறுப்பையும்" குறித்து நாம் விவாதிப்பதற்குத் தமிழரங்க இரயாவின் சுத்(து)தல் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்கிறது.

இரயாகரன் குழுவின் அரசியல்-சித்தாந்தம் அதன் வழியான அவர்களது அரசியல் நடவடிக்கையானது ஒன்றுக்கொன்று முரண்ணாகவும்,காலத்துக்குக் காலம் "பிளேட்டை மாத்திப்போடும்" வியூகத்தைக் கொண்டிருக்கிறது. அப்பப்பத் தோன்றும் அணி திரட்சிக்கொப்பவும் தமது எஜமானர்களது நலன்களுக்குத் தோதாகவும் தொடர்ந்து இவர்களால் நகர்த்தப்படும் பரப்புரைகள் மக்களுக்கு-அதாவது, பரந்து பட்ட மக்களது விடுதலைக்குக் குறுக்கே நிற்கும் எதிர்ப் புரட்சியாக மையமுறக் காத்திருக்கிறது.

இந்தக் துரோகத்தை-எதிர்ப் புரட்சிகரப் பாத்திரத்தைக் குறித்து நாம் நிறையவே பேசியாகவேண்டும்.



முன்னிலைச் சோசலிசக் கட்சியையும்,அதன் வாலான சம உரிமை இயக்கத்தையும், தம்மையும், ரோசா லுக்சம்பேர்க்-லெனினுக்கும் இடையில் நடந்த ஒத்துழைப்பு, நட்பு-முரண் ஆகியதளத்தில் வைத்துத் தாம் ஒத்துழைப்பதாகவும், ஆதரிப்பதாகவும் கயிறு திரிக்கும் இந்தக் குழுவானது மொத்தத்தில் புலத்திலுள்ளவருக்குப் புரட்சி பூவைக் காதில் சொருகிறது.

ரோசா லுக்சம்பேர்க்கோடிணைத்து மு.சோ.க.வை இரயாகரன் வகுப்பெடுக்கும் நிலைக்கு நல்ல பதிலை, சுவிஸ் மனிதம் இரவி குமார் குணரத்தினத்தைப் பார்த்துக் கேட்ட கேள்விகளிலிருந்து நாம் காணமுடியும்.

முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு மௌனமாகவிருந்து அதை ஆதரித்த இவர்களது இனவாதப் போக்கையும்,சந்தர்ப்பத்தையும் தோலுரித்த சுவிஸ் இரவி, "குமார் அந்த நேரத்தில் கட்சியைவிட்டே வெளியேறியிருக்கவேண்டுமென" மிகச் சரியான விவாதத்தைத் தொடக்கியுள்ளார்.இங்கே, குமார் கூறிய பதிலை முகத்துக்கு நேரே மறுத்தொதுக்கி, நிராகரித்த இரவி, நம்பிக்கையைத் தருகிறார்.

ஆனால்,இரயாகரன் குழுவோ மிகக்  கெடுதியாகச் சதிவலை பின்ன ஒன்றையொன்றுகுள் திணித்துத் திரித்து முன்னிலை சோசலிசக் கட்சியை குழந்தை-பால் குடியென்று சொல்லித் தமது சதி அரசியற் பாத்திரத்துக்கு நடைமுறைசார்ந்து திடீர் புரட்சிகரக் கட்சியின் பிறப்பாக மு.சோ.க.வை இணைத்து, முரசு கொட்டித் தம்மை அதன் முன் புரட்சிகரச் சக்தியாக்கிறது.தார்மீக அறமேயற்ற இந்த இரயாகரன் குழுவானது சுய நிர்ணயங் குறித்துத் தொடர்ந்து திரிக்கும் போக்குக் குறித்து நாமும்-அவர்களும் நினைவுகொள்வது கடினந்தாம்.

கடந்த செப்ரெம்பர் 2009ஆம் ஆண்டு பாரிசில் நடந்த சந்திப்பில் நாம் இவர்களுக்கிடையிலான சந்திப்பில் "முன்னனணிக்கான அரசியல் திட்டமும்,அதன் நோக்கமும்"எனும் அரசியல் கோட்[Political ethics ] பெற்று விவாதித்தோம்.அந்த 16 பக்கப் பிரசுரத்தில் உள்ளடக்கப்பட்ட திட்ட வரைவுகளைக் குறித்தும்,இன்றைய இவர்களது சுயநிர்ணய விளக்கத்தைக் குறித்தும் பார்த்தால், இவர்கள் காலத்துக்குக் காலம் பக்கஞ் சாய்ந்து பிழைக்கும் சந்தர்ப்பவாதிகள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

" 7.2: சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வுதான்,தமிழ் மக்களின் பிரச்சனைக்கான அரசியல் தீர்வாகும்.இதை இந்த அரசு வழங்க மறுக்கின்றது.இதுவல்லாத எதுவும்,ஆளும் வர்க்கத்தின் குறுகிய நலன்களும்,அவர்களின் தேவைக்கும் உட்பட்டவையாக இருக்கும்.(முன்னணிக்கான திட்டம்-2009 .பக்கம்:5) " என்று இரயாகரன் குழு திட்டமுரைத்தது அன்று.

இன்று, சுயநிர்ணயத்தை மறுக்கும் முன்னிலை சோசலிசக் கட்சியை ரோசா லுக்சம்பேர்க்கோடிணைத்து "தமிழ்த் தேசியவினத்துக்குச் சுயநிர்ணயத்தை எதிர்த்து, வழங்க மறுக்கும் இலங்கை ஆளும்வர்கத்துக்கு ஒத்திசைவாகப் புரட்சி பேசும்"  மு.சோ.க.வை ஆதரிக்கும் இராயாகரன் குழு, "தமிழ்பேசும் தேசியவினத்துக்குச் சுயநிர்ணயத்தை மறுத்து,இதுவல்லாத எதுவும்,ஆளும் வர்க்கத்தின் குறுகிய நலன்களுக்கும்,அவர்களின் தேவைக்குட்பட்டவையாக இருக்கும்"என்று தாம் வைத்த முன்னணித்திட்ட வரைவையே தலைகீழாக்கி விட்டு இன்று, இப்படி எழுதுகிற பிழைப்புவாதி இரயாகரனது சந்தர்ப்பவாதத்தை இங்கே  பாருங்கள்:

// இப்படி இருக்க "சிங்கள மக்கள் மத்தியிலிருந்து ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்களும் தமிழ்ப் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும் குரல்களும் சிறுகச் சிறுக எழ ஆரம்பித்தன. அவற்றை முளையிலேயே கிள்ளியெறிவதற்கான தூண்டப்பட்ட திரிபுவாதிகள் தாம் பொறுக்கிய மார்க்சியக் கருத்துக்களோடு இனவாதத்தைக் கலந்து ஜே.வி.பி ஐ உயிர்ப்பித்த போது உருவானதே முன்னிலை சோசலிசக் கட்சி." என்று, ஒரு வர்க்க கட்சியை திரித்து காட்டுகின்ற பித்தலாட்டங்கள் அரசியல் அடிப்படையற்றவை. "சுயநிர்ணய உரிமையை ஆதரி"த்தால் அதை திரிபுவாதி அல்ல என்று கூறமுனைகின்ற இழிவான அரசியல் அர்ப்பத்தனத்தைத்தான் இங்கு நாம் காணமுடியும்.



இந்த அரசியல் தர்க்கம் சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொண்டவர்களை, இனவாதிகள் அல்ல என்கின்றது. திரிபுவாதிகள் அல்ல என்கின்றது. இது தான் மூடிமறைத்த தமிழ்தேசிய சந்தர்ப்பவாதிகளின் உண்மை முகம். சுயநிர்ணயத்தை முன்வைத்து இயங்கும் குறுந்தேசியம் வரை, இனவாதிகள் அல்ல என்று இந்த அரசியல் கண்ணோட்டத்தை இந்த தர்க்கம் வரையறுக்கின்றது.

மறுதளத்தில் சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொள்வது மட்டுமல்ல, அதற்கான நடைமுறையும் அவசியமானது. சுயநிர்ணயத்தை முன்னிறுத்தி நிற்கும் இனவாதத்தை எதிர்த்துப் போராடும் பொது அரசியல் தளத்தில் தான், சுயநிர்ணயத்தை கோட்பாடாக முன்வைக்காமைக்கு எதிராகவும் போராட முடியும்.

கோட்பாட்டு அளவில் சுயநிர்ணயத்தை முன்வைக்காமல் நடைமுறையில் இனவொடுக்குமுறையையும், இனவாதத்தையும் எதிர்த்துப் போராடும் ஒரு கட்சியின் செயல் தந்திரத்தை இனவாதமாக திரிபுவாதமாக சித்தரிப்பது அபத்தம். அவர்கள் தங்கள் போராட்டத்தை மேலும் சிறப்பாக முன்னெடுக்க, கோட்பாட்டுரீதியான அரசியல் ஆயுதத்தைக் கொண்டிராமை என்பது தொடர்ந்து விவாதத்துக்கும் விமர்சனத்துக்குமுரியது. அதை ஏற்க வைக்கும் போராட்டம் என்பது கூட, அவர்களின் இனவொடுக்குமுறைக்கும், இனவாதத்துக்கும் எதிரான நடைமுறைப் போராட்டத்தின் ஊடாகத்தான் சாத்தியம். வெறும் கோட்பாட்டுத் தளத்தில் மட்டுமல்ல.

சுயநிர்ணயத்தை ஏற்காமையை வைத்து அரசியல்ரீதியாக முத்திரை குத்துகின்ற இழிவான போக்கே இங்கு அரசியலாகின்றது. "இலங்கை இந்திய அரசுகள் அந்த ஒரு விடயத்தில் மட்டும் மிகவும் தெளிவாக இருந்திருக்கின்றன. எந்தக் கணத்திலும் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் குரல்கள் எழுந்துவிடக் கூடாது என்பதில் அவற்றின் செயல் தந்திரம் உறுதியாகவிருந்தது" என்று கூறுவதன் மூலம், முன்னிலை சோசலிசக் கட்சியை அதன் அரசியல் கூறாக காட்ட முனைகின்றனர்.//-முன்னிலை சோசலிசக் கட்சி இனவாதிகளா!? திரிபுவாதிகளா!? சந்தர்ப்பவாதிகளா!?-பி.இரயாகரன்

தொடர்ந்து || முன்னணிக்கான திட்டம்.பக்கம்:9 இல் இப்படி வரைகின்றனர் அன்று 2009 இல்:

7.தமிழ் மக்களின் சுயநிர்ணயவுரிமை அங்கீகரக்கப்பட வேண்டும்.தேசிய இனங்கள் தாம் வாழும் பிரதேசங்களில் நிர்வாகங்களை கையாளும் ஆட்சி அமைப்பை உருவாக்க வேண்டும்.

8. சுயநிர்ணயம் என்பது பிரிந்துபோவதையும்,ஐக்கியப்பட்டு வாழுவதையும் அடிப்படையாகக் கொண்டதென்பதைப் பரஸ்பரம் அங்கீகரிக்க வேண்டும்.

9:சுயநிர்ணயம் என்பது தேசியப் பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்ட தேசியமாகும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். " என்று ,திட்டம் வரைந்த இரயாகரன் குழுவோ ஒன்றுக்கொன்று முரணாக நின்று கருத்தாடுகிறது.

இவர்கள் திரிபு வாதிகள்-எதிர்ப் புரட்சியாளர்கள்.அந்நியச் சக்திகளது கூலிக் குழுக்கள் என்பதற்கான சகல தரவுகளையும் இவர்களே பின்னும் சதிக்குள் நாம் இனங்காணமுடியும்.

இப்போது நமது கேள்வியெல்லாம்,சுயநிர்ணயத்துக்கு மாற்றானதெல்லாம் ஆளும் வர்க்கத்தின் குறுகிய நலன்களுக்கும்,அவர்களின் தேவைக்கும் உட்பட்டவையாக இருக்கும் என்று நீங்கள் சொன்னதையேதாம் நாமும் முன்னிலைச் சோசலிசக் கட்சிக்கும் சொல்கிறோம்.தமிழ்பேசும் தேசியவினத்தின் சுயநிர்ணயவுரிமையை மறுக்கும் இலங்கைப்பாசிச அரசுக்குத் துணைபோவதற்காகவே முன்னிலை சோசலிசக்கட்சி தமிழர்களது சுயநிர்ணயவுரிமையை மறுக்கின்றனரென்பதை" சுயநிர்ணயமல்லாது எதுவும் ஆளும் வர்க்கத்தின் குறுகிய நலன்களுக்கும்,அவர்களின் தேவைக்கும் உட்பட்டவையாக இருக்கும்"என்ற தங்கள் கருத்தின் தளத்திலிருந்து நாம் உரைக்கும்போது இஃதெப்பட்டிப் பேரினவாதிகளோடு கூட்டுச் சேர்வதாகும் திருவாளர் இரயாகரன் அவர்களே?

ஓ,இலங்கையில் தேசிய முதலாளியம் இல்லாதவொன்றென்பதால் அது சார்ந்த சுயநிர்ணயமும் இல்லாமல் போய்விட்டதோ இப்போது? இருந்தாலும் இருக்கும்.உங்களுக்கு மட்டுமே சந்தர்பத்துக்கேற்பச் சுத்தத் தெரியுமே!

"சீச்சீ, சுயநிர்ணயங் குறித்த புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் கருத்துகள் இவை.அதிலிருந்து நாம் கிஞ்சித்தும் விலகவில்லை.ஆனால் பெரும் பகுதி மக்களிடம் அரசியலையும்-புரட்சிகர முன்னெடுப்பையுஞ் செய்யும் முன்னிலை சோசலிசக் கட்சியுடன்"இனவாதத்தை"போக்கும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்காக நாம் அவர்களுடன் இணையும்போது குறைந்தபட்ச உடன்பாடும்-நட்பும் ,சமாதான சகவாழ்வும்கொள்கிறோமென"வும் சுத்துவதை வருங்காலத்தில் தவிர்ப்பதற்கான உங்களது இன்றைய சுயநிர்ணய விளக்கமும் புரியத் தக்கதே.

இப்படியொரு ஏவல்-அந்நியக் கைக்கூலிப் பிழைப்பைவிட்டு உடல் வருத்திக் கூலி வேலைசெய்து கஞ்சி குடிக்கும் வாழ்வு மேலானது இரயாகரன்.

இதுவொன்றேதாம் மக்களைக் கொல்லாத-காட்டிக்கொடுக்காத நியாயமான மனிதனின் கடமை.

இதைவிட்டுப் புரட்சியென்று பொய்பேசி ,எதிர்ப் புரட்சிகரப் பாத்திரத்தை வகிக்கும் உங்களது வரலாற்றை நாம் எழுத வேண்டுமென்ற காலமிருந்தால் அதை யாரால் மாற்றமுடியுமென நாம் வேதாந்தம் உரைக்கப்போவதில்லை.மாறாக, உங்களது "தமிழீழப் போராட்ட"ப் பாத்திரத்துள் புதிய ஜனநாயகப் புரட்டை வேரோடறுத்துச் சாய்க்கும்வரை எமது போராட்டம் தொடரும்.

மக்களை அந்நியருக்காகச் சாகத் தூண்டும் உங்களைக்போன்ற பல் நூறு ஏவற் படைகளை நாம் மக்கள் முன் நிறுத்தித் தமிழ்பேசும் மக்களே உங்களனைவரையும்தண்டிக்குமொரு சூழலை மிக விரைவாக்குவது நமது முதற் கடமை!

எதிர்ப் புரட்சியாளர்கள் வரலாற்றில் சறுக்கியவர்களல்ல. மாறாகப் புரட்சிக்குரிய நிலவரத்தைத் திட்டமிட்டுச் செயற்கையாகப் படைத்து அதன்வழியாகத் தம்மைப் புரட்சிகரச் சக்தியாகக் காட்டிப் புரட்சியைச் சிதைத்தபடியே தம்மைப் புரட்சியாளர்களெனத் தொடர்ந்து நிரூபித்துப் பற்பல புரட்சிகரக் கட்சி நாமத்துடன்  உலகெல்லாம் விரிந்து வாழ்பவர்கள். இது, புட்சிகரத் தோழமைக்குள் நியாயப்படுத்தப்பட்ட தோழமையாக விரித்து வைக்கும் சதி முதலாளித்துவத்து இருப்புக்கான வியூகத்தின் தெரிவிலொரு வழியாகும்.

எனவேதாம், மாக்ஸ் கோர்க்கைமரது மொழியில்:" எவர் இந்த முதலாளிய வியூகத்தைக்குறித்தும்,அதன் எதிர்ப் புரட்சிகரப் பாத்திரத்தையும் உரையாட விரும்பவில்லையோ அவர் பாசிசம் குறித்து உரையாடாது மௌனித்திருக்கலாம்  [Wer vom Kapitalismus nicht reden will, soll über den Faschismus schweigen. By Max Horkheimer ]". என்பது. இதன்வழி நமது சிந்தனையாளர்கள் பலர் 2009 வரை ஆழ்ந்த மௌனத்தைப் புலிப்பாசிசத்தின் முன் கடைப்பிடித்தபோது அதன் கிளைகள்-வேர்கள்-விழுதுகள் தற்போது புரட்சிகரச் சக்தியாகப் படங்காட்டிப் பின்னும் சதிவலையைக்கூடப் புரட்சியென நம்பும் நம் மக்களை விட்டில் பூச்சியாகவே நாம் இனம் காணவேண்டும்.

ப.வி.ஸ்ரீரங்கன்

01.02.2013

No comments: