Saturday, February 09, 2013

சோபா சக்தி : நாம்"அரசுகளுக்குள்"வாழ்வதைப் பார்க்க மறுத்தல்...

சோபா சக்தி : நாம்"அரசுகளுக்குள்"வாழ்வதைப்  பார்க்க மறுத்தல்...

// பிரசுரத்தின் தலைப்பே சம உரிமை இயக்கத்தின் அரசியல் பண்பைச் சொல்லிவிடக் கூடியதாக அமைந்திருக்கின்றது. ” அனைத்து தேசிய பிரஜைகளும்  சம உரிமையை பெற்றுக் கொள்வதற்கான அத்தியாவசிய நுழைவு” என்பதே அப்பிரசுரத்தின் தலைப்பு. அனைத்து ‘தேசிய இனங்களிற்குமான’ சம உரிமை எனச் சொல்லாமல் அனைத்துத் ‘தேசியப் பிரஜைகளிற்குமான ‘ சம உரிமை எனச் சொல்வது தேசிய இனங்களின் இருப்பையே மறுப்பதாகும். நாட்டின் மொத்த சனத்தொகையில் முக்கால்வாசியாக இருக்கும் சிங்கள தேசிய இனத்தின் இருப்புக்கு முன்னால் பலவீனமாகச் சிதறிக் கிடக்கும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் இருப்பை ‘தேசியப் பிரஜைகள்’ என்ற கருத்தாக்கம் சிதைத்து, பெரும் தேசிய இனத்திற்குள் கரைத்துவிடும் அபாயமிருக்கிறது. இன்னொருவகையில் ஒடுக்கப்படும் இனங்கள் தங்களது இன அடையாளங்களின் அடிப்படையில் அரசியல் சக்திகளாகத் திரளும் உரிமையையும் இது மறுப்பதாகும்.// By Shoba Sakthy


சோபா சக்தியின் இந்தக் கட்டுரை பலதரப்பட்ட நியாய அரசியல் அறத்துக்குட்பட்ட கேள்விகளை இலங்கைச் சிறுபான்மையினங்களது "அரசியல்-உரிமை " சார்ந்த இருப்பிலிருந்து எழுப்புகிறது.அதையொட்டிய பல தரவுகளுடாக இலங்கை அரசினது இனவாத அரசியல் ஊக்கத்தையும்,இனவொடுக்குமுறையின் முலம் தம்மைக் காத்துவரும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தையும் வரலாற்றுத் தரவுகளோடு பேசுகிறார் சோபாசக்தி.மிக நேர்த்தியான அரசியல் அறக் கேள்விகளை முன்னிலைச் சோசலிசக் கட்சியின் முன்னும் அதன் சம உரிமை இயக்கத்தின்"இன ஐக்கிய"அஜந்தாவின் முன்னும் வைத்திருக்கிறார்.

இதுவரை,தமிழ்பேசும் மக்களது பலதரப்பட்ட அரசியற்றலைமைப் பீடங்களே பாராமுகமாகவும்,புலத்து இடது சாரிகளெனத் தம்மை அழைத்துக்கொள்ளும் முக்கால்வாசிப் பேர்களும் முன்னிலைச் சோசலிசக் கட்சியை நியாயப்படுத்தி அரசியல் செய்யும்போது சுவிஸ் மனிதம் இரவிக்குப் பின் சோபாசக்தியின் இந்தக் கட்டுரையே முழுமையானவொரு தேர்ந்த கேள்விகளைச் சுயநிர்ணயஞ் சார்ந்து எழுப்புகிறது.இது,அவசியமானவொரு இடைவெளியினை நிரப்பும் அறக் கேள்விகளது அரசியலை முன்னெடுப்பதில் எம்மிடமிருந்தவொரு வெற்றிடவுளவியலை அழித்து, மக்களை அண்மித்து, அவர்களது அரசியலுரிமைசார் மானிடவுரிமைகளைப் பேசுகிறது.

இன்று,முன்னிலைச் சோசலிசக் கட்சியையும்,அதன் வாலாக நீண்டுயரும் சம உரிமை இயக்கத்தையும் சேர்த்து இலங்கையில்" இன ஐக்கியம்" உரைக்கும் பலருள், முன்னணியில் இருப்பவர்கள் இரயாகரன் குழுவே.இக் குழுவின் இன்றைய அரசியலோ,இலங்கைச் சிறுபான்மை இனங்களது அடிப்படை உரிமைகளையுறுதிப்படுத்தக் கூடியதும்,பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து தம்மைக் காக்கக்கூடியதுமான நசுக்கப்படும் தேசியவினங்களது ஒரே அரசியல் ஆயுதமான சுயநிர்ணயத்தை இந்த முன்னிலைச் சோசலிக் கட்சியின் நட்புக்குப் பின் மறுத்தொதுக்கின்றது.

இரயாகரன் குழுவின் முக்கிய சிந்தனையாளர்களில் ஒருவரான திரு.தேவகுமார் சுவாமிநாதன் எம்மைப் பார்த்துத் தமது இன்றைய நிலைப்பாட்டைச் சரியென்பதற்காக இப்படியுரைக்கிறார்

"இலங்கையின் பெரும்பான்மை இனமான சிங்கள மக்களுக்கே சுயநிர்ணயத்தைச் சிங்களப் பாராளுமன்றப் பிரதிநிதிகளும் அவர்களது எஜமானர்களும் வழங்க மறுக்கும்போது,சிங்கள மக்களே சுய நிர்ணயமின்றி இருக்கின்றனர்.சுயநிர்ணயவுரிமையற்றச் சிங்கள மக்களிடம் போய்த் தமிழர்கள் சுயநிர்ணயவுரிமை குறித்துக் கேட்பதென்பது ஒரு வகையில் இனவாமே." என்று தத்துவஞ் சொல்கிறார்.ஆனால்,சோபாசக்தியின் இந்தக் கட்டுரை மிகவும் நேர்த்தியாகவே இலங்கைச் சிறுபான்மை இனங்களது உரிமைகள் குறித்துப் புரிய முனைகிறது.வரலாற்றியக்கத்தில் இலங்கையின் இடதுசாரிய-வலதுசாரிய அரசியல் கோரிக்கைகள்,நடவடிக்கைகள் சார்ந்து கடந்தகால அரசியலை மிகச் சாதுரியமாக இன்றைய வெகுளித்தனமான முன்னிலைச் சோசலிசக் கட்சிசார் உரையாடலுக்குமுன் பொருத்திச் சிறுபான்மை இனங்களது மெலினப்பட்ட குரலை அரசியல் ரீதியாகப் பலமாக்குகிறார்.இந்தத் தளத்தில் சோபாசக்தியின் இந்தக் கட்டுரைக்கான உழைப்புப் பாராட்டத்தக்கது.

இக்கட்டுரையின் இலங்கைசார் உள்ளக அரசியல் புரிதலில் முரண்பட எதுவுமில்லை!.குறிப்பாகச் சோபாசக்தி வரையறுக்கும் சிறுபான்மை இன மக்களது இருப்புக்கான அரசியல் புள்ளியைச் சுட்டுவதென்பதைச் சொல்கிறேன்.

ஆனால்,சோபா சக்தி, நான் உங்கள்மீதும்,உங்கள் அரசியலோடும் சமீபத்தில் முரண்பட்டவன் என்றபோதும், இந்தவகையான அரசியல் உரையாடலில் நீங்கள் பெரும்பகுதி மக்களது அரசியலது அறத்தைப் பேசுகிறீர்களென்று பகிரங்கமாக இக்கட்டுரையை முன்வைச்துச் சொல்கிறேன்.அத்தோடு,இதைத் தாண்டி இன்னொரு விடையத்தைச் சுட்டிக் காட்டுவது மிக அவசியமானது.

இக்கட்டுரையானது ஒரு வகையில், முழுமையானதல்ல. இக்கட்டுரையூடாக,  இலங்கை அரசு-ஆளும் வர்க்கத்தின் அரசியல் ஊக்கம்-மற்றும் அதன் அரசியல் ஆதிக்கஞ்சார் திசைகளில் நீங்கள் பிரமிப்பான தேடுதலைச் செய்திருப்பதை வரவேற்றுக்கொண்டாலும்,நாம் இன்றையவுலகத்தில் ஒரு அரசு என்ற அமைப்புக்குள் வாழ நிர்பந்திக்கப்படவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இன்றையவுலகப் பொருளாதாரப் பொறியமைவில் நாம் "அரசுகள்"அவை சார்ந்த பொருளாதாரச் சட்டங்களுக்குட்பட்ட பொறியமைவுக்குள்-அரசுகளின் அமைப்பாண்மைக்குள்  இருத்தி வைக்கப்பட்டுள்ளோம்.

கடந்த கால இரத்தஞ் சிந்திய சிங்கள இனவாதவொடுக்குமுறைக்கெதிரான தமிழ்பேசும் மக்களது போராட்டமும்,அதை உருவாக்கியதற்கான இலங்கையின் அரசியலும் அந்நியத் தேசங்களது நலன்களிலிருந்தே முகிழ்த்தன.அவை, தமக்கான நலன்களது தெரிவில் செய்யப்பட்ட அரசியலானது நமது தலை விதியையே மாற்றி முள்ளிவாய்க்கால்வரை ஒரு தேசியவினத்தை வருத்திச் சென்று அழித்திருக்கும்போது, நாம், முன்னிலைச் சோசலிசக் கட்சியின் இன்றைய அமுக்க அரசியலது வினையாற்றல்களைத் தனியே இலங்கை அரசியல் வட்டத்துக்கையும் அதன் அரசியல் ஆதிக்கத்துக்குள்ளான நிலப்பரப்புக்குள்ளும் முடக்கிப் பார்க்க முடியாதென்பதை நீங்கள் வலுவாக அறிந்திருந்தும் இது குறித்தொரு துரும்பைத் தன்னும் இக்கட்டுரைவழி பேச முற்படவில்லை. ஜே.வி.பி.யினால்,மலையக மக்கள் மீது சுமத்தப்பட்ட "இந்திய விஸ்தரிப்பு வாதம்"சார் பார்வையைத் தவிர நீங்கள்,அந்நிய வியூகங்களது இன்றைய அரசியல் அணித் திரட்சிகள் அதன் திறன்சார் அரசியலைப் பேச மறுப்பது எதனால்?

இஃது ,இக்கட்டுரையின்குறையாகவே இருக்கிறது.

இதன் தெரிவில், முழுமையின்றி இருக்கும் இவ் விமர்சன ஊக்கமானது இன்றைய இலங்கைக்குள் முட்டிமோதும் இருவேறு அந்நியத் தேசங்களது முகாங்களின் அரசியல் விஸ்த்தரிப்புப் பொருளாதார இலக்குகளின் நலன்சார் விஸ்த்தரிப்புகளுக்கமைய நகர்த்தப்படும் இலங்கையின் உள்ளக அரசியல் இயக்கப்பாட்டை இவர்களை விட்டுப் புரிந்துகொள்வது முழுமையில்லை என்றே சொல்வேன்.இதைவிட்டு அரசியல் பேசுவது நமது தலைவிதியை மீளவும் அந்நியர்களே தீர்மானிப்பதில் போய் முடியும்.இதை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துள் நடாத்தப்பட்ட "மாவீரர்களுக்கான நினைவு விளக்கேற்றும்" அரசியலது புள்ளியில் வைத்து மீளவும் உறுதிப்படுத்துகிறேன்.அந்தக் கலகத்தைத் தகவமைத்த கம்பி கடல்கடந்து நீண்டுசென்று டெல்லியில் முடிச்சிட்டதையெவர் மறுப்பார்-இராயாகரன் குழுவைத்தவிர?

இன்றையதும்,இனித் தொடரப்போகும் இலங்கையின் அரசியல் முரண்பாடுகள்,அதுசார்ந்த நடாத்தப்படும் கட்சி-இயக்க வலதுசாரி-இடதுசாரி அரசியலானது அந்நியத் தேசங்களது கண்காணிப்புக்குக் கீழேதாம் நடாத்தப்படுவதென்பதை எவருமே மறுக்கப்படாதென்பது எனது கருத்து.

நாம்,இது சார்ந்து உலகை நோக்கும்போது அதன் உண்மையான முகங்களை கிழக்கைரோப்பியச் சோசலிச முகாங்களது வீழ்ச்சியோடு, யுக்கோ ஸ்லோவிய-சேர்பியாவூடாகச் சென்று அரேபியவுலகில் நமது கவனத்தைக் குவிக்கும்போது இலங்கையின் அரசியலிலும்-கட்சிசார் அரசியல் உந்துதலிலும் நிரூபணமாகும் அந்நியச் சக்திகளது நலன்கள் புரிகிறதல்லவா?

சேர்பிய "ஒற்போர்-எதிர்ப்பரசியல்",அதன் நிறுவனர் சேர்ட்யா பொப்போவிச்சும் [Srđja Popović_Otpor!  ]எத்தனையோ முடிச்சுகளை அவிழ்த்து மேற்குலக ஆதிக்கத்தைத் தனிக் குழுவுக்குள் முடக்கிக் காப்பதில் விடியும் உண்மைகளைத் தரிசிக்கும் ஊடக வலுவில் நாம் இருந்தும், இலங்கையில் விடியும் அரசியலது வினைகளை இலங்கைக்குள் மட்டும் பார்க்கும் அரசியலைப் என்னால் புரிய முடியாதிருக்குச் சோபா சக்தி.

இந்திய-சீன மற்றும் மேற்குலக வியூகங்கள் இந்தச் முன்னிலைச் சோசலிசக் கட்சியின் இன்றைய அதிவேகப்"புரட்சிகர"ப் பாத்திரத்துள் எங்காவது மையங்கொள்ளாது[Srdja Popovic Revolution als Business. http://www.tagesspiegel.de/politik/widerstandsguru-der-serbe-srdja-popovic-betreibt-revolution-als-business/3946482.html  ] விட்டுவிடுமாவென கேள்வி கேட்டுச் சந்தேகிப்பதைவிட அதை அந்நியத் தேசங்களை மதிப்பிடும் சர்வதேச அரசியல் வியூகத்தில் வைத்துப் புரிந்துகொள்வதைத்தாம் வலியுறுத்துகிறேன்.


ப.வி.ஸ்ரீரங்கன்.
ஜேர்மனி
09.02.2013

No comments: