Friday, June 30, 2006

இஸ்ரேலாகும் இலங்கை:

இஸ்ரேலாகும் இலங்கை:

திரிகோணமலைப் படுகொலைகள்,அரச வன்முறைகளின் தொடர்ச்சி!

இலங்கையரசின் அரசியல் காய் நகர்த்தலானது இன்றிடம்பெறும் "பழைய பாணி" இனவழிப்புக் கலவரமாக உருவெடுத்துவிடுகிறதென்பது மிகவும் உண்மையான செய்தி.இது பாரதூரமானவொரு பின்னடைவைத் தமிழ்பேசும் இலங்கையருக்குத் தந்துவிடுவதும் உண்மையே! கடந்த காலங்களைப்போன்று தமிழர்கள் ஒரே குடையின் கீழ் அரசியல் செய்யவில்லை. 58 இல்,77 இல்,83 இல் இழப்புக்குள்ளான தமிழ்பேசும் மக்களை சிங்கள இனவாத அரசே கொன்று குவிப்பதை உலகம் பார்த்து வந்தது.
இன்றோ இது வேறுவிதமாகப் பேசப்படுகிறது.
இலங்கையினது நீண்டகாலக் கனவானது தற்போது பொதுவரங்கத்தில் நிசமாகிறது!பொய்யில்லை!!-இது உண்மையே.அரசியல் ஆதாயங்கள் மக்களின் அழிவுகளில் எட்டப்படுவதாக மாறிப்போனது இன்று நேற்றல்ல இலங்கையில்.எனினும் இத்தகைய சூழலில் இழப்புக்குள்ளாகும் அப்பாவி மக்கள்தம் வாழ்வும் சாவும்,நேர்மையற்ற அரசியல் வாதிகளால் மீளரசியலாக மாற்றப்படும்போது நாம் பொறுமையிழக்கிறோம்.
புலி,
புலி எதிர்ப்பணி!-இந்த இருவகைத் தமிழ் மக்களின் அரசியலானது சியோனிசச் சிங்கள அரசை காப்பதற்கும்,உலக அரங்கில் நியாயமுள்ள அரசாகக் காட்டுவதற்கும் உடைந்தையாகும் அதேவேளை, தமிழ் மக்களின் உரிமைகளைக் காட்டிக் கொடுப்தாகவும் விரிந்து செல்கிறது.

புலிகளின் அதீத அரசியற் குழு வாதமானது ஒற்றைத் துருவ இயக்கமாக அதை வளர்த்தெடுத்தபோது,இதை நிலைப்படுத்திய அதன் அரசியல் தலைமையானது தமிழ் மக்கள் நலனைத் துவசம் செய்வதில் முனைப்புறும் இன்னொரு பகுதியைத் தோற்றுவிக்கும் இயக்கப்பாட்டை கணிப்பிடுவதில் தவறிழைத்தது!அல்லது திட்டமிட்ட சதிவலையை பின்னிய வெளியுலகச் சக்திகள் புலிகளின் அரசியல் தலைமையைப் பயன் படுத்தியுள்ளது-பயன்படுத்தி வருகிறது!

துரத்தியடிக்கப்பட்ட ஈழப்போராட்டக் குழுக்களைத் துரோகியாக்கிய அரசியற் பரப்புரைகளைப் புலிகள் உருவாக்கிக்கொண்ட சூழலை மிகவும் கவனமாக அவர்கள் மறுத்தொதுக்குவதும், அதன் நீட்சியாகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட பாசிசக் கொலைகளும் இதனூடாக வலுப்பெற்ற புலியெதிர்ப்பு முகாமும் தமிழரின் சுயநிர்ணயவுரிமையைக் களைந்தெறிவதற்கானவொரு சதிவலையை கருத்தியல் தளத்தில் மெல்லவுருவாக்கிக்கொண்டுள்ளது.இதன் உச்சபட்ச நீட்சியே மாற்றுக்குழுக்களை ஒட்டுக் குழுக்களெனும் சதியுடைய மொழிவாகும்.

இன்றிந்தச் சதியானது இலங்கை அரசின் அனைத்துவகைக் கறைபடிந்த காட்டுமிராண்டித் தனங்களையும் புலிகளின் பெயரால் கழுவிப் புனிதச் செயலாக்கி விடுகிறது.

இதைத்தானே உலகமும்,இலங்கையும் எதிர்பார்த்தது

மக்கள் வலுவுற்றிருந்தபோது அனைத்து இயக்கங்களும் வலுப்பெற்றுத் தமது படைவலுவைத் தேடிக்கொள்ளும் மனித ஒத்துழைப்பு நிலவியது.அவ்வண்ணமே அவைகள் ஓரளவு உறுதியுடைய அரசியலைத் தீர்மானிக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தன!இன்று மக்கள் பற்பல அரச ஜந்திரங்களுக்குள்,அதன் ஆதிக்கத்துக்குள் பிளவுண்டு கிடக்கின்றார்கள்.இத்தகைய பிளவுகளும் சர்ச்சைகளும் இயக்க அமைப்பாண்மைக்குள்ளும் அதன் அகப் புறச்சூழலிலும் வலுவுற்றிருக்கிறது.இது ஒருவகைக் கண்ணியம் பேசி,மக்களை முட்டாளாக்கியபின் தமிழ் மக்களின் இது வரையான இழப்புகளைத் தியாகங்களைக் கொச்சைப்படுத்தி வருகிறதும்,கூடவே தமிழ் மக்களின் வரலாற்று வாழ்விடங்களை அழித்தொழிப்பதற்கான இலங்கையரசின் நகர்வுகளைச் சட்டவாதத்துக்குள் காப்பதற்கும் முனைகிறது.

நேற்றைய அசம்பாவிதங்கள் வெறும் எதிர்வினையே தவிர அது திட்டமிட்ட அரச பயங்கரவாதிமில்லை என்பதாக இன்றைய தமிழ் மக்களின் அரசியலின் ஒரு பிரிவு கூறிக்கொள்ளும் அளவுக்கு சிங்களச் சியோனிசம் வெற்றி பெற்றிருக்கு.

இந்த நிலையில் தமிழ்பேசும் மக்கள் இன்னும் அதிகமாகத் தமது உயிர்களை இழந்துவிடுவார்களோ?

அப்பாவி மக்களை அழிக்கும் அரசியாலானது இன்று மிகச் சாதாரணமாக உலக வல்லரசுகளால் மேற்கொள்ளப்படுகிறது.இந்த அரசியலின் மிகப் பெரும் பகுதியைக் கடந்த காலத்தில் பாலஸ்தீனியர்கள்மீது பரிசோதித்த அமெரிக்கா உருவாக்கிய இராஜதந்திரம் இஸ்ரேலாக இன்றுருவாக்கும் அரசியலை, இலங்கை இன்னொரு வகையில் கடைப்பிடிக்க- நமது வாழ்வு அராஜக உலக அரசுகளால் பறிக்கப்படுவது பாரிய மனிவுரிமை மீறலாகும்.

பரமுவேலன் கருணாநந்தன்
13.04.06

No comments: