Friday, June 30, 2006

தர்மத்தின் வாழ்வுதனைச்...

தர்மத்தின் வாழ்வுதனைச்...


ஒரு பொழுது எந்தப் பித்தாலாட்டமும் நியாயத்துக்கான இருப்பை அசைத்துவிடுமானால் ...அந்தப் பொழுது வளர்க்கின்ற மனிதநாகரீகமானது இந்த அநாமதேயங்களின் உளப்பெருக்காகவே சமூகத்தில் வேர்எறிகிறது!இத்தகையவொரு உளவியல் போக்காக்கானது தான் வாழும் சமூகத்தில் அனைத்து விஷயங்களையும் எதன் பெயராலும் காவுகொடுத்துவிடும்.இன்று நம்மிடமுள்ள சமூக விழிப்புணர்வு எங்ஙனம் ஒரு அமைப்பினது அதியுயர் பொய்ப் பரப்புரைகளால் காவுகொள்ளப்பட்டதோ அதையே மனிதர்கள்-தமிழர்கள் தமது விடுதலைக்கான கோஷமாகப் பம்மிக்கொள்வதில் முடிந்துள்ளது.இங்கே தமிழ் மக்களின் அனைத்து வளமும் ஒரு சில குடும்பங்களின் தேவைகளுக்காகத் தியாகத்தின் மறு அவதாரமாக்கப்பட்டுவிட்டென.

யார்மீதும் சவாரிசெய்த அரசியலானது இன்று எந்தவொரு மனிதரையும் துப்பாக்கிக்குண்டுகளுக்கோ அல்லது எதன் பெயராலோ கொல்லுகிறது.இந்தப்படு பயங்கரமான அரசியல் வாழ்வில் அவதியுறும் மக்களை எந்தக் கவனமுமின்றிச் சில,பல மனிதர்கள் தங்கள் வக்கிரக் கண்ணோட்டத்தோட யாருக்காகவோ வாலாட்டுகிறார்கள்.இத்தகைய மனித்துவமற்ற மக்கள் கூட்டமானது உலகத்தின் எந்த மூலையிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டே அற்பத்தனங்களுக்கு அடியெடுத்துக் கொடுப்பதில் தன்னை முன்னிலைப் படுத்திவிடுகிறது. இதுதான் இன்றைய அவலமான சமூகஉளவியல்!

எங்களது உலகப் பார்வையானது மாற்றாந்தோட்டத்தில் மல்லிகைக்கு மணமிருப்பதாகக் கருதுவதில்லை.ஒற்றைத் தலைமையும்-அதைச் சுற்றித் துதித்திருப்பதும் ஆங்கிலேயனிடம் காட்டிக் காரியமாற்றிய மனங்களின் கால நீட்சிதான்.அந்தக்காலத்தில் தவமிருந்து பெற்ற அதிகாரத்துவத்தை மீளச் சுவைப்பதில் ஒரு வர்க்கமானது தன்னைத் தமிழரின் மீட்பராகக் காட்டிக் கொள்வதில் எந்தவியப்புமில்லை.இத்தகைய இழி மானிதர்கள் உலகெங்கும் எவர் பெயராலும் -எதன் பெயராலும் போரையும்,அவலத்தையும் ஏற்படுத்தித் தமது வாழ்வாதாரங்களையும்,செல்வத்தையும் காத்துக் கொண்டு,குவித்து வருகிறது.இத்தகைய ஒரு தேவையானது மீளவும் தமிழ் மக்களின் அன்றாட வாழ்வைச் சிதைப்பதில் கண்ணும் கருத்துமாகவுள்ளது.இதையிந்த அநாமதேயத்துப் பெயர்வழிகள் எப்போதும் தமது இருண்ட விசுவாசத்தால் புரிவதில்லை.'முந்தநாள் பெய்த மழைக்கு நேற்று முளைத்த காளான்கள்'தமிழ் மக்களின் வாழ்வைத் திருக்கொண்டிருக்கும் அரசியலுக்குக் காவடி தூக்குவதில் தமது அடிப்படையுரிமையைக் காலில் போட்டுச் சிதைக்கிறது.இது ஐ.நா.கொடியைக் காலில்போட்டுச் சிதைத்ததுபோல.இந்தப் பேர்வழிகள்தான் எந்தவொரு எதிர்கருத்தாடலையும்,ஜனநாயகத்துக்கான முன்னெடுப்புகளையும் முளையிலேயே கிள்ளிவிடத்துடிக்கிறது.

தமிழர்கள் ஜனநாயத்தைச் சுவாசித்தவர்களில்லை.எந்தவொரு சூழலிலும் எவரிடமும் தங்கி,அடிமைகளாய்கிடக்குமொரு கூட்டமாகவே வாழ்ந்தவர்கள்.சாதியின் பெயரால் அடக்கிவைக்கப்பட்டுக் கொத்தடிமையாக வாழ்ந்தவொரு இனக் குழுவிடம் ஒருபெரும் புரட்சி திடீரெனப் பத்திவிட முடியாது.இந்த மக்கள் கூட்டத்தைத் தமது தேவைக்கான அரசியலுக்கு எவர்வேண்டுமானாலும் பலியாக்கலாம்.அதைத் தமிழின் பெயரால் இதுவரை பல பெருச்சாளிகள் செய்து வருகிறார்கள்.அவர்களின் வாரிசுகள் எமது வாழ்வின் அனைத்து விஷயங்களையும் இப்போது குத்தகைக்கு எடுத்துவிடுவதில் உலகெங்கும் மூச்சோடு போரிட்டு வருகிறார்கள். வெளிநாடுகளிலிருந்து உல்லாசமாக இலங்கை போய்த் திரும்பும் இவர்கள்தான் அங்குள்ள மக்களைப் போராட அறைகூவல் விடுகிறார்கள்.கட்டுநாயக்க விமான நிலையத்தில் எந்தக் கெடுபிடியுமின்றிப் போய்வரும் இவர்கள,; மேற்குலக மக்களுக்கு 'இலங்கையரசு பாசிச அரசு,தமிழரைக் கொல்கிறது'என்கிறார்கள்.அதையும் யூ.என்.ஓ கட்டிடத்துக்கு முன்பால் நின்று கூவிக்கொள்கிறார்கள்.வேடிக்கைதான்.போரிடுங்கோ தம்பி-தங்கைமாரே!உலகத்தின் வரலாறு வௌ;வேறு கோணங்களில் எழுதப்பட்டுக்கொண்டேயிருக்கும்.அதை உங்கள் எந்தக்காவியத்துக் கதாநாயகர்களும் தடுத்துவிட முடியாது!

மக்கள் படும் வேதனையும் துன்பத்தையும் கேவலமான முறையில் மறைத்தொதுக்கும் ஒரு அரசியலானது இன்று கோலாச்சுகிறது.இதை;தான் இந்த அநாமதேயத்து வக்கிர இளைஞர்கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தமக்குள் பிரதிபலிப்பதைக் காட்டிக்கொள்கிறார்கள். விடுதலையின் பெயரால்,ஈழத்தின் பெயரால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வருஷமொன்றுக்குச் சமூகவிரோதிகளாகக் கொல்லப்படுகிறார்கள்.இவர்களை எந்தச் சமூக ஒழுங்கு விரோதிகளாக்குகிறது?சிங்கள அரசியலை இனவாத அரசியலாக மாற்றமுறவைத்த மேட்டுக்குடித் தமிழரின் பொருளியல் நலன்கள் இப்போது அந்த அரசியலைத் தமிழருக்குள் திணிக்கிறது.ஒருபுறம் சிங்களப்பாசிசமும்,மறுபுறம் தமிழ்ப் பாசிசமும் ஒரே பாதையில் இப்போது கூடுகின்றன,கைகுலுக்குகின்றன.அழிவு மக்களுக்குத்தான்!

சமூகம் என்றால் என்ன?

ஒருசில ஒழுங்களை ஒருசில மனிதர்களால் விதிக்கப்பட்டு அதைக்கடைப்பிடிகத் தூண்டும் ஒரு வித கருத்தியல்சார்ந்த அதிகாரத்தை ஒழுங்கு என்கிறோமா?அல்லது ஒருவிதமான மனிதக்கூட்டைச் சமூகமெனக் கருதுகிறோமா?

இந்தக் கேள்விக்குள் தொக்கி நிற்கும் பதிலுக்குப் பதிலுரைக்கும் ஒருவர் நிச்சியம் நமது சமூகம் விரோதிகளாக்கும் அப்பாவி மனிதர்களின் அழிவைக்குறித்துக் கேள்வியொழுப்பும்.அப்போது இந்த இரண்ட அரசியல் ஒடுக்கப்பட்ட தமிழர்களால் விளங்கிக் கொள்ளப்படும்.அந்தவொரு நிலைமை உருவாகும்போது எந்தக் கயவர்களும் மக்கள் மன்றத்தில் தண்டிக்கப்படுவார்கள்.அவர்களின் தலைமைகளின் இருப்பு தெருக்கூட்டுவதில் போய்முடியும்.அதையிந்த மக்கள் சமூதாயம் நிரூபித்தே தீரும்.

பாசிசமென்பது ஒரு கொடிய நோய்!அது சில அதிகாரத்துவ ஆணவத் தலைமைகளை உருவாக்குவதுமட்டுமல்ல,முழு மக்களையும் அடிமை கொள்கிறது!

-பரமுவேலன் கருணாநந்தன்

No comments: