Friday, June 30, 2006

தற்கொலைத் தாக்குதலும்,புலியரசியலும்!

தற்கொலைத் தாக்குதலும்,புலியரசியலும்!


எங்கும் மனிதச் சிதைவு,அகதி வாழ்வு.
போர் கைதிகளின் தொடர்ச் சிறைவாழ்வு.

அழிவு, சிறார்களின் போர்ப்பாதிப்பு மனவழுத்தம்,உடல் ஊனம்,விதவை வாழ்வு,குடிசார் வாழ்வு மறுப்பு.

யுத்தம்,

குண்டுவெடிப்பு,

குருதி!-நோய்,நொடி.

பட்டுணி,வறுமையின்வாயிலாகத் துன்பம்!வேலையின்மை-வாழ்வுக்கான சூழலின்மை!

போர்,"இருப்புக்கான" போர்!!-யாருடைய இருப்புக்கான போர்?

தமிழ் மக்களின் இருப்புக்கான போர்!


இன்றைய ஈழமெனும் தமிழ்ப் பகுதிகளில் இது தொடர்கதை!

இந்தக் கருத்துரைகளின்பின் தொடரும் பாரிய மனிதவிரோத அரசியல் மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களைக் குறிவைத்து அழிக்கிறது.இது மனித அவலத்தைச் சமுதாயத்தின் இருப்புக்காகச் செய்வதாக அல்லது நடந்து விடுவதாகச் சொல்கிறது.எதிர்காலத்தை முதன்மைப்படுத்தித் தற்கால வாழ்வை நாசமறுத்தாலும் பரவாயில்லையெனும் கருத்தாக, இது வளர்தெடுக்கப்படுகிறது.இதையும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் பெரும்பாலும் ஒத்துக்கொள்ளும்படி கருத்தாடுகிறார்கள்.

இது நம் காலத்தில் மிகக் கொடூரமான மனிதவிரோதப் போக்காகும்.


போரென்பது மக்களின் வாழ்வைப் பறித்து,அவர்களின் ஜீவாதார உரிமைகளை மெல்லப் புதை குழிக்குள் தள்ளும் பாரிய சமூக விரோதச் செயற்பாடாகும்.இதைத் தவிர்த்துவிடுவதற்கு எந்த அரசோ,அல்லது இயக்கமோ விரும்பவில்லையென்றால், அதன் உள்நோக்கம் மக்களின் நலனோடு எந்தவிதத்திலும் தொடர்புடையதில்லை.


இலங்கைபோன்ற குட்டித் தீவில் தனியரசுக்கான தமிழர் போராட்டமானது வெறும் மேம்போக்கான ஒரு "ஆண்ட பரம்பரை"க் கனவானதாகும்.ஆனால் இலங்கைப் பாசிச அரசின் இனவாதச் சிங்களச் சியோனிசமானது எப்பவும் பாராளுமன்ற அரசியல் நெருக்கடியை தற்காலிகமாகவேனும் திசை திருப்புவதற்காக இந்தத் தமிழர் விரோத, இனவொதுக்கல் அரசியல் நகர்வைச் செய்தே வருகிறது.இதை எதிர்கொள்வதற்கான போராட்டமானது எந்தத் திசை வழியைப் பின்பற்றியதென்பதில்தான் நமது எதிர்காலம் தங்கியிருந்தது.எமது போராட்டத் திசைவழி அதே பாராளுமன்றச் சகதியைத் தழிர்களின் பேரால் ஏற்படுத்தும் ஒரு சட்டவாக்க எல்லையைத் தமிழர்களின் பெயரால் ஏற்படுத்தித் தமிழர்களை ஆளமுனையும்"ஆண்ட பரம்பரைக் கனவு"வெறும் நிர்பந்தப் போருக்கு இதுவரைத் தமிழர்களைத் தள்ளி,அவர்களது சகல குடிசார் உரிமைகளையும் இல்லாதாக்கி வருகிறது.


இங்கே மனிவுயிர்ப்புக்கூட போராட்டத்துக்கான தேவையோடே கருத்தாடப்படுகிறது.எந்தப் பக்கம் பார்த்தாலும்"போராடு,போராடு"என்பதாகவும்,தற்கொலைக் குண்டுதாரிகளால் மட்டுப்படுத்தப்படும் உயிர்வாழ்வு, விடியலுக்கான உயிர் ஆயதமாகவும் குறித்துரைக்கப்படுகிறது.


இத்தொடர் நடவடிக்கைகள் மனித வாழ்வின் மிகக் குறுகிய வழிகளைத் தகவமைத்துக்கொண்டு,ஒரு தேசத்தை விடுவிக்க முடியுமெனப் பொய்யுரைப்பது,நமது காலத்து ஊழ்வினை!இத்தகைய கொடுமையான மனிதவிரோத அரசியலை, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் ஜனநாயக மறுப்பாக- உலகத்தில் தனிமைப்படும் தமிழ்பேசும் மக்களின் "சுயநிர்ணய உரிமை"சிங்களச் சியோனிசத்தின் வெற்றியாகவும்,தமிழ் மக்களின் நியாய வாதத்தைக் கையிலெடுத்த "பயங்கரவாத அமைப்பான" புலிகளின் தோல்வியாகவும் நாம் கருத முடியாது.


புலிகள் தம்மளவில் கேடுகெட்ட அரசியல் போக்குகளை உள்வாங்கிய வலதுசாரி அமைப்பானாலும் அது தமிழ் மக்களின் உரிமைகளுக்கு எதிராகச் செயற்படுவது எப்படியென்பதே முக்கியமாக இனம்காணவேண்டிய இன்றைய அவசியத் தேவையாகும்.புலிகளின் வர்க்க நிலை இவ்வளவுதூரம் மக்களை அழிவுப்பாதைக்கிட்டுச் செல்வது, அந்த அமைப்பின் இருப்பையும் அழித்துக்கொள்வதற்கான அரசியல் மதிய+கத்தைச் சிங்களச் சியோனிசத்துக்கு ஏற்படுத்திக் கொடுத்தபடி நகரும்போது, எந்தவொரு அரசியல் முன்னெடுப்புமற்றுக் கிடக்குமொரு சூழலில் புலிகள் மட்டுப்படுத்தப்பட்ட போருக்குத் தயாராவது எந்தத் தளத்திலும் அதன் இருப்பைத் தக்கவைப்பதில் சாத்தியமிருக்காது.


புலிகளின் இந்த வரம்புமீறிய மீள் போராட்டத் திசைவழிக்கு நிச்சியமான அவசியமொன்றிருப்தாக எந்தக் காரணமுமில்லை.இது உள்ளிருந்து புலித் தலைமையால் எடுக்கப்பட்ட நகர்வாக இருக்கமுடியாது.புலிகளைப் பலவீனப்படுத்தித் திசைவழியை எவரெவரோ தகவமைத்துக் கொடுக்கும் ஒரு நிர்ப்பந்தம் இன்றைக்குப் புதிதாக நடப்பதல்ல.ஆரம்பத்திலிருந்து இதுதான் கதை.எனினும் இன்றைய புலிகளின் இரண்டும்கெட்டான் ஆப்பிழுத்த போராட்டப்பாதையானது, புலிகளின் தலைமை வன்னிக்குள் இல்லையென்பதைத் தெளிவுறப் புரிவதில் நம்மையிட்டுச் செல்லும்.தொடரும் போருக்கான மட்டுப்படுத்தப்பட்ட நகர்வுகள் அந்த அமைப்பின் குறுகிய மதிநுட்பத்தைத் தெட்டத் தெளிவாக்கிவிடுகிறது.


கடந்த காலத்தை மேம்போக்காகப் பார்த்தோமானால்,இலங்கையில் ஓரளவேனும் தேசியத்தன்மைகளைச் சார்ந்து இயங்கமுனையும் எந்த ஆட்சியும் நிலைக்காதிருந்தே வந்திருக்கிறது.சுய சார்புடைய,மட்டுப்படுத்தப்பட்டவொரு பொருளாதாரப்போக்கு முகிழ்க்கும் காலங்களில் இத்தகைய பொருளாதாரத்தை முன் தள்ளும் அரச கட்டமைப்பை உலக நாடுகள் அழித்தே வந்திருக்கின்றன.இம்மாதிரியான உலக முன்னெடுப்புகளுக்கு மிகப் பிற்போக்கான அன்னிய அரசுகளின் எடுபிடிகளான இலங்கை ஐக்கிய தேசிக் கட்சியும்,தமிழ்ப் பாராளுமன்ற அரசியற் கட்சிகளும் மிகவும் உடந்தையாக இருந்திருக்கின்றன.இது வரலாறாக நாம் பார்த்ததுதான்.


இன்றைய மகிந்த அரசானது சாராம்சத்தில் ஒரு இனவாத அரசே!எனினும் அந்த அரசானது இலங்கையில் பெயரளவிலான தேசிய முன்னெடுப்புகளைச் செய்வதற்கு உடந்தையாகத் தமிழரின் பிரச்சனையை அணுக முற்படுவதென்பதும் உண்மையே.இந்த அரசின் திடமான முடிவு"தனித் தமிழீழம்"சாத்தியமற்றதென்பதாகும்.அந்த எல்லையை விட்டு,தமிழர் தரப்பை வேறொரு கோணத்துக்குள் உந்தித் தள்ளிச் சில முன்னெடுப்புகளை அரசியல் சாத்தியப்பாட்டோடு நிவர்த்தி செய்வதும் அந்தவரசின் மையப் பிரச்சனையாக இருப்பதை எவரும் மறுக்க முடியாது.உண்மையில் தமிழ்பேசும் மக்களின் வாழ்வாதாரவுரிமைகளுக்கும்,அவர்களின் சுபீட்சமான வாழ்வுக்கும் இந்தப் பாராளுமன்ற ஆட்சியலமைப்புக்குள் "தனியரசு"ஒருபோதும் மாற்றுக்கிடையாது.சாத்தியமான அரசியல் திசைவழி எப்போதும் நம் மக்களுக்கு ஐக்கிய இலங்கைக்குள் நிலவுமொரு அரசியல் தீர்வே சாத்தியமாகும்.அந்தத் தீர்வானது இன்றைய தமிழ் மனத்துக்குப் புரியமுடியாத அனால் புலிகளால் ஆசைப்படும் சமஷ்டியமைப்பு முறையாகும்.அதுள் புலிகளினது ஆளும் வர்க்கக் கனவுகள் மட்டுமே நிலைபெற்றுத் தமது வர்த்தக ஆளுமை இருப்புறுவதும்,தாம் மட்டுமே தனிப்பெரும் உடமையாளருமாக அனைத்துத் தமிழ்பேசும் மக்களையும் தமது நலனுக்கேற்ற வகைகளில் மேய்ப்பதற்கும் தனிப் புலி அரசியல் ஆளுமை தேவையாக இருக்கிறது.இந்தவிடத்தில் இணங்காத மகிந்த அனைத்துக்கட்சிகளையும் உள்ளடக்கியவொரு ஜனநாயகத்தன்மையை ஓரளவேனும் சார்ந்த பல் கட்சி முறைமைகளை உள்வாங்க முனைவது புலிகளுக்கு மிகவும் ஒரு ஆளுமைச் சிக்கலை வழங்குவதால், புலிகள் தமது எஜமானர்களின் விருப்பான விதேசியச் சார்புக்குத் தம்மையும் இணைவாக்கி அவர்களோடிணைகிறார்கள்.இந்த இணைவின் அடிப்படையில் மகிந்தாவின் அரசையும்,மகிந்தாவையும் ஓழித்துக்கட்டுவதில் இந்த அன்னியச் சக்திகளுக்குப் புலிகள் அடியாளக மாறுவது தற்செயல் நிகழ்வல்ல.


எனவே மக்களினது நலனானது,அந்த மக்களின் நலன்சார்ந்த நோக்குக்கு இசைவாகிக்கிடக்கும் இன்றைய நிலையில்,புலி நலனானது அந்த மக்கள் நலனை முளையிலேயே கிள்ளியெறிவதும்,தமது பொருளாதார நலன்களை,ஆர்வங்களை உள்ளடக்கியவொரு தனியான ஒற்றைக் கட்சி அரசியலைத் தமக்கு இசைவாக்க முனைவதும் மெய்யான சூழ்நிலையாகும்.இந்த அபிலாசைகளை இலங்கையில் மாறிவரும் ஒரு அரசியற் சூழ்நிலை சாத்தியப்படுத்தும்போது புலிகள் சமாதானம் என்ற கயிற்றைப் பிடிப்பார்கள்.அல்லது போரென்ற முழக்கத்தில் குண்டுதாரிகளாக நமது சிறார்களைப் பயன்படுத்தித் தமிழ் மக்களை அழித்தபடி வாழ்வார்கள்.


இங்கே இந்தமாதிரியானவொரு அரசியற் சூழ்நிலையானது திட்டமிட்ட முறைகளில் இலங்கையரசின் தேசிய சுய சார்புப் பொருளாதார நகர்வுகளுக்கு எதிராகச் செயற்படும் அன்னிய மூலதனங்களின் அரசியல் தந்திரோபாயமாகும்.இதற்கு அவசியமான முறைகளில் தமிழ்பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தைப் பயன்படுத்தும் இந்த அன்னிய ஆர்வமானது எதிர்காலத்தில் தமிழர்களின் அனைத்து வாழ்வாதார உரிமைகளையும் தமது பொருளாதார இலக்காக மாற்றி நம்மைத் தமது அடிமைகளாக்குவது நிகழும்.இதுவேதான் இன்றைய பலஸ்தீனத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் வருடாந்த உதவியாக -தம்மில் அவர்களைத் தங்க வைத்துக் கருவறுக்கும் அரசியலாக நம் கண்முன் விரிவது.இதை மறுத்தொதுக்கும் வலு புலிகளுக்கு இருக்கமுடியாது.அவர்களின் இன்றைய மூலதன முன்னெடுப்புகள் அந்தப் பெரும் மக்கள் நலன் சார்ந்த அன்னிய எதிர்ப்பியக்கத்தை முழு இலங்கையினூடாக இணைத்துச் செயற்படுத்துவதற்குத் தடையாகக் குறுக்கே நிற்கிறது.


புலிகளின் நிலையானது புலியின் கடந்தகாலத் தலைமையான பிரபாகரனின் உயிரைக்காப்பதும்,தமது புதிய தலைமையைச் சாத்தியமானவரை இழக்காமல் நிலைப்படுத்துவதிலும் கவனமாக இருக்கிறது.பிபாகரன் என்பவர் உலக நாடுகளால் அதுவும் இந்தியாவால் மிகவும் தேடப்படும் பயங்கரவாதி.அவரைக் கைதாக்குவது இந்த அரசுகளின் எதிர்பார்ப்பாகும்.ஆனால் பிரபாகரன் புலித் தலைமையை இழந்திருப்பினும் அவரது பாதுகாப்பைப் புதிய தலைமை மட்டுப்படுத்தப்பட்டவொரு எல்லைக்குள் செய்தே கொடுத்துள்ளது.இந்தச் சங்கதியை இவர்கள் எதுவரை செய்வார்கள்,எவ்வளவு காலத்துக்குத்தான் பிரபாவின் உயிர் வாழ்சாத்தியமென்பதெல்லாம் புலிகளினால் உந்தப்படும் அரசியலிலேதான் தங்கியுள்ளது.


எனவே தமிழ் மக்கள்மீதான அடக்குமுறைகளும்,மனிதவுரிமை மீறல்களும் தொடர்ந்தும் புதிய வடிவங்களில் நிலவுமேயொழிய,முடிவுக்கு வருவதற்கில்லை.இந்த இருள்சூழ்ந்த நிலையில் தமிழ் மக்களின் அரசியல் எதிhகாலம் மிகவும் கீழானவொரு நிலைக்கே உந்தித் தள்ளப்படும்.இதை;தடுத்து நிறுத்துவதற்கான மாற்றுவழியென்பது பல்கட்சி அரசியலையும்,தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயகத்துக்கான திறந்த அரசியல் விவாதத்தையும் முன்னெடுக்காதவரை எதுவும் சாத்தியமில்லை.இந்தவொரு தேவைக்காக மக்களின் அத்தியாவசிய உயிர்வாழ் தேவைகளுக்கான- இயல்பு வாழ்வுக்கான முன்நிபந்தனையாக நாம் ஆற்றவேண்டிய மிகப்பெரிய அக்கறையுடைய ஒரே வழி, திறந்த விவாதங்களும் பல்கட்சி முறைமையுடைய அரசியல் பேச்சுவார்த்தைகளும்தான். அதன் வாயிலாகவொரு சமஷ்டிமுறையிலான பொது அரசியல் முன்னெடுப்புமே இன்றைய அரசியல் யதார்த்தித்தில் நிலவக்கூடிய வழியாகும்.

பரமுவேலன் கருணாநந்தன்.
30.04.2006