Saturday, January 19, 2008

மாத்தையா மகிந்த சிந்தனையை...

இந்தியாவின் தேவைகள்
இலங்கையில் அப்பாவி மக்களைப்
படுகொலை செய்கிறது.

//‘மாத்தையா’ மகிந்த சிந்தனையை உரமிட்டு வளர்க்கும் ‘மல்லி’ பிரபாவின் சிந்தனை? :த
ஜெயபாலன்//



அன்பு வாசகர்களே,வணக்கம்!

இன்று நாம் வாழும் சூழல் மிகக் கெடுதியானது.நமது மக்களின் இருப்பை அசைக்க முனையும் அன்னிய நலன்கள் இலங்கையில் இனவாதத் தீயை வளர்த்துத் தமது விருப்புக்குரிய கட்சியை ஆட்சியல் தக்க வைத்து வருகிறார்கள்.இத்தகைய நிகழ்வினூடே காய் நகர்த்தப்படும் அரசியலானது இலங்கை வாழ் மக்களை வகைதொகையின்றிக் கொன்று குவிக்கிறது.இதன் தாக்கம் இலங்கையில் பாரிய இனக் குரோதவுணர்வாகத் திட்டமிடப்பட்டு வளர்த்தெடுக்கப்படுகிறது.இது பாலஸ்த்தீனப் போராட்டத்தில் நடக்கும் அதே கதையீடாகவே செல்கிறது.அங்கே,ஸ்ரேலியச் சியோனிச அரசை அடியாளாக வைத்திருக்கும் அமெரிக்க அரசோ அனைத்தையும்(அரசியல்சதி) கட்டவிழ்த்துவிட்டுப் பாலஸ்தீனப் போராட்டத்தை எங்ஙனம் சிதைத்து நாசஞ் செய்ததோ அதே கதையாக இலங்கையில்"அடிக்கு அடி-இனவாதக் கொலைகளுக்கு அதே பாணியிலான கொலைகள்" எனத் தகவமைக்கப்படுகிறது.

இதைச் செய்து முடிக்கும் அரசியலானது எப்படி உருவாகிறது-ஏன் உருவாகிறது?

இது கேள்வி.

விடை கூறுகிறார்: திரு.த.ஜெயபாலன் தேசம் நெற்றில்!


ஆனால்,அவரது பார்வையில் இலங்கைமீதான இந்தியச் சூழ்ச்சி மற்றும் உலகச் சதி பேசப்படவில்லை.


அன்று, இந்திய ரோவினது கட்டளைப்படி புலிகள் அநுராதபுரத்தில் அப்பாவிச் சிங்கள மக்களை நரவேட்டையாடினார்கள்.இதே பாணியில் ஏலவே இலங்கை அரசைக் காரியமாற்ற வைத்த இந்திய அரசு புலிகளையும் அத்தகைய நடவடிக்கைய+டாகக் காரியமாற்ற வைத்துத் தமது நலனை அடையமுற்பட்டது.


இன்று, இலங்கையின் அரசியல் சூழலில் தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்கான சில சாத்தியப்பாடுகள் உலக அரசமட்டத்தில் சாதகமாகத் தோன்றியதைக் கண்ட இந்தியா மலைத்துப்போய் அதைக்கூறுபோட்டுக் குழப்புவதில் முனைப்புற்றுள்ளதோவென்று அஞ்சுகிறோம்.இலங்கையில் தமிழ்பேசும் மக்களின் போராட்டத்தை நியாயமற்றதாக்கக் காரியமாற்றிவரும் இந்தியாவும் அமெரிக்காவும்,மேற்குலகமும் சிங்கள மக்கள்மீது தமது கைக்கூலிகளை வைத்துக் கொலைகளைப் புரிகிறார்கள்.அத்தகைய கொலைகளை உலகுக்குப் புலிகளின் பயங்கரவாதமாகமட்டுமல்ல தமிழர்களின் இனவாதமாகவும் காட்டிக் கருத்துக்கட்டுகிறார்கள்.இது மிகக் கபடத்தனமான அரசியலோடு புலிகளைமட்டுமல்ல தமிழ் பேசும் மக்கள் அனைவரையுமே கருவறுக்கத் திட்டமிட்டுச் செயற்படுவதாகவே நாம் உணர்கிறோம்.


நண்பர் ஜெயபாலனோ இத்தகைய கொலைகளினூடாக விரியும் இனவாத இருப்பைப் பேசுகிறார்.ஆனால்,இதை நேர்த்தியாகச் செய்து தமிழ்பேசும் மக்களின் ஜீவாதாரவுரிமையான சுயநிர்ணயத்தைச் சிதைத்து அதை இல்லாதாக்கும் அரசியலை இனம் காண மறுக்கிறார்.இந்தியாவின் நீண்ட நாட்கனவாகவே இது இருக்கிறது.இலங்கையில் உளவுப்படைகளை-கைக்கூலிகளை வைத்துக் படுகொலைகளை-அரசியல் சதிகளை நடாத்தி முடிக்கும் இந்திய உளவுப்படையானது ஓட்டுமொத்தத் தமிழ்பேசும் மக்களையும் இலங்கையிலுள்ள இனங்களுக்கு எதிரான திசையில் நிறுத்தியுள்ளது.அன்று, இஸ்லாமியர்களை வேரோடு பேத்தெறியும் அரசியலுக்கு உடந்தையாக இருந்த இந்தியா, இன்று வௌ;வேறு தளங்களில் இலங்கை இனப்பிரச்சனையை நகர்த்தி வருகிறது.இலங்கைப் பாசிச அரசின் ஒடுக்கு முறைக்குள் தினமும் முகங்கொடுக்கும் தமிழ்பேசும் மக்களுக்காகச் சர்வதேச அரங்கில் சாதகமான குரல்கள் மேலெழும் பல தரணங்களில் இந்தியாவின் சூழ்ச்சி இலங்கையில் அப்பாவிச் சிங்கள மக்களின் படுகொலைகளில் முடிகிறது.இதன}டாகத் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளையும் அவர்கள் தொடரும் போரையும் பயங்கரவாதமாக்கித் தனக்குப் பக்கத்திலுள்ள தமிழர்கள் நியாயமாக விடுதலையடைவதைத் தடுத்தே வருகிறது இந்தியா!இந்த இலக்கைச் சமீபத்தில் மொனராக்கொலவில் பஸ்குண்டு வெடிப்பாக அது செய்து முடித்திருக்மென்றே நாம் கருதுகிறோம்.இன்றைய தரணத்தில் இதைப் புலிகள் செய்திருந்தால் நிச்சியம் இது இந்திய விசுவாச அணியின் செயற்பாடாகவே அமையும்.நமது மக்களுக்காக உலகம் குரல் கொடுத்துவரும் இந்தத் தரணத்தில் தமிழர்கள் தம்மைத் தனித்துப் பிரிந்துபோகும் தகைமையுடையவர்களாகப் பிரகடனப்படுத்தும் ஒரு சாதகமான சூழலில் இது அதற்கு ஆப்பு வைக்கும் அரசியலைக் கொண்டிருக்கும்போது, இதை எவர் செய்தாலும் அது இந்திய-அமெரிக்க நலன்களுக்கானதாகவே நாம் இனம் காண்கிறோம்.


உலகத்தில் இலங்கை அரசானது பெயரளவில்மட்டுமே சுதந்திரமானவொரு அரசாக இருக்கிறது.இலங்கையை ஆட்டிப்படைக்கும் பிராந்திய வல்லரசான இந்தியா இலங்கையின் சுதந்திரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.இதே பாணியில்தாம் இன்றைய இலங்கைமீதான அனைத்து மேற்குலக-அமெரிக்க அரசியல் தொடர்புகள் விரிகிறது.இலங்கைமீதான இராணுவ-பொருளாதார ஒத்துழைப்புகள் அந்தத் தேசத்தை என்றுமே சுதந்திரமான இலங்கையாக விட்டுவைக்கவில்லை.தத்தமது அடிவருடிகளை-கட்சிகளை இலங்கையில் ஆட்சிப்பீடத்தில் இருத்தும் அந்நிய நலன்கள் இலங்கையின் இருபெருங்கட்சிகளோடு இன்னும் பற்பல கட்சிகளைத் தோன்றவைத்து அவற்றுக்குத் தீனிபோட்டுத் தமது நலன்களைத் தக்கவைக்கின்றன-இதன் தொடர்ச்சியானது இலங்கைத் தமிழ் மக்களின் இலட்சம் உயிர்களைக் குடித்தும் பெரும் இரத்த தாகமாகமாக விரிகிறதென்றே இன்றைய இலங்கைச் சூழல் குறித்துரைக்கிறது.


இங்கோ புலிகளின் அரசியலானதும்சரி போராட்டச் செல் நெறியானாலும்சரி அது அன்னிய இந்திய விய+கங்களுக்கிசைவாக இருப்பதை நாம் கடந்தகால நிகழ்வுகளிலிருந்து கண்டறிய முடியும்.இது, ஒரு தற்செயலான நிகழ்வாகக் காணமுடியாது.திட்டமிட்ட ஒரு தேசத்தின் நலன்களோடு இணைந்த தந்திரோபாயமாகவே இனம் காணப்படவேண்டும்.புலிகளினதும் மற்றும் ஆயுதக் குழுக்கள்-ஓட்டுக்கட்சிகளின் பின்னே உலகப் பெரும் உடமை வர்க்கம் இருந்து தமக்குத் தோதான அரசியலை இலங்கையில் நடாத்தி முடிக்கும்போது, நாமோ இலங்கைச் சிங்கள இனவாதக்கட்சிகளை இலங்கைக்குள்ளும் புலிகளை வன்னிக்குள்ளும் இனம் காணுவது ஏதோவொருவகையில் அன்னிய நலன்களை மேன்மேலும் வேறொருவடிவில் இலங்கையில் நிலைப்படுத்தும் நலனோடு இணைவதாகவே நாம் பார்க்கிறோம்.

ஜெயபாலனின் கட்டுரையினூடாக நகர்த்தப்படும் அரசியலானது தமிழ்பேசும் மக்களின் உண்மையான எதிரிகளை மறைத்தபடி அந்த எதிரிகளுக்குச் சேவகஞ் செய்யும் எடுபடிக் கட்சிகளை,இயக்கங்களைச் சாடுவதில் இருக்கும் சாணாக்கியம் ஏதோவொரு தேசத்தின் உறவோடு சம்பந்தப்பட்டதாக இருக்குமோ?


வாசகர்களாகிய நீங்கள் இத்தகைய ஊடாகத் தந்திரங்களை மிகவும் கூர்ந்து இனங்காணும் இன்றைய தரணங்கள் நமக்கு முக்கியமானவை!நாம் எதிரிகளின் அத்துமீறிய குழிபறிப்புக்குள் வீழ்ந்துள்ளோம்.நமது விடுதலையை முன்னெடுக்கும் அமைப்பின்(புலிகள்)அரசியல் மற்றும் யுத்த தந்திரோபாயமானது முற்றிலும் தமிழ்பேசும் மக்களுக்கு எதிரான தளத்திலேயே இதுவரை தொடர்கிறது.இது, இங்ஙனம் தொடர்வதற்கான தகுந்த காரணமென்ன?நாம் பல்லாயிரம் உயிர்களைப் பலிகொடுத்தும் நமது அரசியல்,போராட்ட முறைமைகள் அன்னிய தேசங்களுக்குச் சாதகமாக நகருமானால் அங்கே நாம் ஏமாற்றப்பட்டு வருகிறோம் என்பதே உண்மை.நமது வாழ்வாதாரங்களைத் திருடியும்,நமது தேசத்தை அழிப்பு யுத்தத்துக்குள் இருத்தியபடி நமது விடுதலையை மறுதலிக்கும் அரசியலைத் தொடர்பவர்கள் நிச்சியம் நம்மைப் ப+ண்டோடு அழிக்கும் அரசியலையே இதுவரை நமக்கு வழங்கி வருகிறார்கள்.இதைச் சிங்கள அரசின் வடிவிலும் புலிகளின் போராட்ட வடிவிலும் நமக்குள் விதைக்கிறார்கள்.நாமோ நமது அனைத்து உரிமைகளையும் இழந்து அன்னிய தேசங்களின் கால்களுக்குள் உதைப்பந்தாகக் கிடக்கிறோம்.

இதை மாற்றியாக வேண்டும்!

நமது இலக்குள் தவறிழைத்தல் இனியும் சகிக்கத் தக்கதல்ல.

இந்திய உளவுப்படையில் ஒப்புதலோடு நடாத்தி முடிக்கப்படும் இலங்கை அரசியல் படுகொலைகள்,பொதுமக்கள் படுகொலைகள் மற்றும் படுபாதகமான யுத்த முன்னெடுப்புகள் நமக்குச் சொல்வது என்ன?

"போராடாதே,பணிந்து போ!நாம் தருவதை ஏற்றுக் கொள்"என்றாகவே இருக்கிறது.இத்தகைய வார்த்தைகளைப் பற்பல குரல்களில் சொல்கிறார்கள்.இங்கே,ஆனந்த சங்கரி தொடக்கம் மற்றும் இலங்கை அரசு,ரீ.பீ.சீ-சோ வரைத் தொடர்கதையாக வருகிறது.நண்பர் ஜெயபாலனின் நிலை இதில் எது?


இலங்கையின்மீதான பார்வைகள் வெறும் விருப்பு வெறுப்புக்குட்பட்ட பார்வைகளால் முன்வைக்கப்படமுடியாது.இலங்கையின் இன்றைய நிலைக்கு முழுமுதற்காரணமும் அன்னிய தேசங்களே அதில் முக்கியமான தேசம் இந்தியா.இந்தியா செய்யும் குழிபறிப்பால் அதன் எல்லைகடந்து இலட்சம் தமிழ்பேசும் மக்கள் அழிந்துள்ளார்கள்.இது போதாதென்ற நிலையாகச் செய்விக்கப்படும் குண்டுவெடிப்புகள் நமது மக்களின் அபிலாசைகளைக் கானல் நீராக்கி வருகிறது.


புலிகளைச் சொல்லிச் செய்யப்படும் இன்றைய படுகொலைகள்மிகவும் திட்டமிடப்பட்ட இந்திய நலனின் வெளிபாடாகவே நாம் வரையறுக்கிறோம்.எமது தேசத்தை நாமே நிர்ணியிக்கக்கூடிய சூழலுக்கு மேற்குலக ஒத்துழைப்புக் கிடைப்பதை உடைப்பதற்கான முன்னெடுப்பாகவே இது நகருகிறது.இங்கே, புலிகளைச் சொல்லியே தமிழர்களைக் குட்டிச் சுவாராக்கும் இன்னும் எத்தனை பேர்கள் இந்திய முகவர்களாக மாறுவார்கள்?


தேசம்நெற்றில் ஜெயபாலன் முன்வைத்த கட்டுரையானது மிகத் தந்திரமான இந்தியாவின் அரசியலை இனம் காண மறுப்பது எதற்காக?


இக்கேள்வியோடு அதை வாசித்து விளங்க முற்படும் ஒவ்வொரு தரணமும் நமது மக்களை ஏமாற்றும் சூழ்சியை நமக்குள்ளேயே இருப்பவர்களைக்கொண்டு இந்தியா அரங்கேற்றுவது மிகத் தெளிவாகப் புரிகிறது.



அன்புடன்,

பரமுவேலன் கருணாநந்தன்
20.01.2008




மாத்தையா’ மகிந்த சிந்தனையை உரமிட்டு வளர்க்கும் ‘மல்லி’ பிரபாவின் சிந்தனை? :த ஜெயபாலன்


இலங்கை அரசும் பேரினவாதமும் மோசடியும்:ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இன்றைய அரசாங்கம் சுதந்திர இலங்கையை ஆட்சி செய்த மிக மோசமான அரசாங்கம் என்பது தமிழர்களால் மட்டுமல்ல இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு உண்மை. இந்த உண்மையை, சர்வதேச உரிமை அமைப்புகளினதும், பொருளாதார கணிப்பு அமைப்புகளினதும், நாட்டின் பல்வேறு சுட்டிகளை அளவிடும் அமைப்புகளினதும் அறிக்கைகளும் புள்ளி விபரங்களும் மதிப்பீடுகளும் நிரூபிக்கின்றது.


இலங்கையில் இதற்கு முன்னர் ஆட்சிக்கு வந்த கட்சிகள் வாக்கு வங்கிகளை நிரப்ப இனவாதத்தை தூண்டும் அரசியலில் ஈடுபட்டன. எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கா இனவாதியாகக் கருதப்படாவிட்டாலும் சிங்கள மொழிச் சட்டத்தை அறிமுகப்படுத்தி தனது வாக்கு வாங்கியை பலப்படுத்திக் கொண்டார். பின்னர் மலையகத் தமிழர்களின் வாக்குரிமையை பறித்து அவர்களை நாடற்றவர்களாக்கி பேரினவாதப் போக்குடனேயே செயற்பட்டது இலங்கை அரசு. ஆயினும் ஆர் பிரேமதாசா வரை ஆட்சிக்கு வந்தவர்களில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் போன்றவற்றில் நிதிமோசடிகள் இடம்பெற்றிருந்தாலும் அவை இன்றுள்ளது போன்ற ஒரு மோசமான நிலையை அடைந்திருக்கவில்லை.
ஆனால் ஆர் பிரேமதாசாவின் ஆட்சிக் காலத்திற்குப் பின் நிதி மோசடிகள் அரச மட்டங்களில் பரவலாகியது. சந்திரிகா குமாரதுங்க ஒரு இனவாதியாக இல்லாவிட்டாலும் அவருடைய ஆட்சிக்காலத்தில் நிதி மோசடிகள் ஆட்சி அதிகாரத்துடன் நெருங்கியதாக இருந்தது.


மகிந்தவின் ஆட்சியும் மகிந்த சிந்தனையும்:




முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகாவுடன் அதிகாரப் போட்டியில் வெற்றிபெற்ற இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒரு குடும்ப அரசியலையே நடத்திக் கொண்டு உள்ளார். நிதி மோசடிகளில் ஜனாதிபதியும் அவரது குடும்பத்தினரும் நேரடியாகத் தொடர்புபடுத்தப்படுகின்றனர். அமைச்சர்களே ரவுடியிசம் செய்வது அரச தொலைக்காட்சியில் நேரடியாகக் காண்பிக்கப்படும் அளவிற்கு இன்றைய அரசு படுகேவலமான ஒரு ஆட்சியை நடுத்துகிறது.


இலங்கையில் ஒரு காலத்தில் அறியப்படாதிருந்த பணப் பெட்டிகளுக்காக கட்சி தாவும் அரசியலை மகிந்த அரசு இன்று சாதாரண செய்திகளாக்கும் அளவிற்கு மாற்றிவிட்டார். தன்னை ஆதரிக்காத சிறுபான்மையினக் கட்சிகளை பணப் பெட்டிகளையும் அமைச்சுப் பதவிகளையும் வீசி சிதறடிக்கிறார். சிறிய நாடுகளில் ஒன்றான இலங்கையில் பெரிய அல்ல மிகப்பெரிய அமைச்சரவை. கட்சிகள் மட்டுமல்ல தொழிற்சங்கங்களிற்கும் அதே நிலைதான். இவர் வீசும் பணப்பெட்டிகளை எப்படி ஈடுசெய்வது? விளைவு சுதந்திர இலங்கையில் முதற்தடவையாக கடந்த 18 மாதங்களாக பணவிக்கம் 10 வீதத்திற்கும் அதிகமாகி உள்ளது. இப்போது 17 - 20 வீதமாக இரட்டிப்படைந்து இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. அதனால் குழந்தைகளிற்கான பால்மா, அரிசி என அத்தியவசிய பொருட்கள் ரொக்கற் வேகத்தில் ஏறுகின்றன.



மகிந்த அரசு தன்னைத் தெரிவு செய்த மக்களிற்கோ அல்லது சர்வதேச சமூகத்திற்கோ பொறுப்பாக பதிலளிக்க தயாராகவில்லை. கொழும்பிலும் உயர் பாதுகாப்புப் பகுதிகளிலும் தமிழர்கள் காணாமல் போகிறார்களே என வெளிவிவகார அமைச்சர் போகல்லகமையை லண்டனில் சந்தித்த போது கேட்டோம். அவர்கள் தாங்களாகவே தலைமறைவாகிறார்கள் என பதிலளித்தார் அமைச்சர் போகொல்லாகம. அப்படியானால் சிறார்கள் தாங்களாகவே ஓடிவந்து சேருகிறார்கள் என கருணா அணியும் விடுதலைப் புலிகளும் சொல்வதை அரசு நம்பித்தானே ஆக வேண்டும். இலங்கைக்கான பால் பொருட்கள் நியூசிலாந்து, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் இருந்தே தருவிக்கப்படுகிறது. ஆனால் பால் மா விலையேற்றப்பட்டதற்கு பிரித்தானியாவில் மாடுகளுக்கு ஏற்பட்ட நோய்தான் காரணம் என்கிறார் அமைச்சர் பெர்ணான்டோப்புள்ளே.


டிசம்பர் முற்பகுதியில் லண்டன் வந்திருந்த மக்கள் கண்காணிப்புக் குழுத் தலைவரும் சோசலிசக் கட்சித் தலைவருமான சிறிதுங்க ஜெயசூரிய மகிந்த அரசைப் பற்றி விபரிக்கையில் இந்த அரசு நரகத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் அதனை நரகத்திற்கே செல்லவிட வேண்டும் என்று தெரிவித்தார். அவர் இதனை என்னிடம் தெரிவித்த போது வரவு செலவுத்திட்ட விவாதத்தின் இறுதிவாக்கெடுப்பு நிகழவில்லை. இந்த வாக்கெடுப்பில் அரசு கவிழ்ந்துவிடக் கூடாது எனக் கூறிய சிறிதுங்க, இப்போது கவிழ்க்கப்பட்டால் இவர்கள் திரும்பவும் எழுந்து வந்துவிடுவார்கள், அதனால் மக்களால் கவிழ்க்கப்பட்டு நரகத்திற்கு அனுப்பப்பட்டால் இவர்கள் எப்போதுமே திரும்பி வர முடியாது எனத் தெரிவித்தார்.



இன்று இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்கள் மத்தியிலும் அரசிற்கு எதிரான உணர்வுகள் மேலோங்கி உள்ளது. இந்த உணர்வு மேலும் மேலும் தூண்டப்பட வேண்டும். இந்த உணர்வு தக்க வைக்கப்பட வேண்டும். இதன் மூலம் அரசுக்கெதிரான நடவடிக்கைகள் தீவிரமடைகின்றன. அதனால் தான் இதனை முறியடிக்க அரசு தன்னிடம் உள்ள சகல பலத்தையும் மக்களிற்கு எதிராகத் திருப்பி ஒடுக்குகிறது. ஊடகவியலாளர்களையும் ஊடகங்களையும், தொழிற்சங்கத் தலைவர்களையும் மிரட்டி, அராஜகம் பண்ணி, கைது செய்து ஒடுக்குகிறது. இதனால் இலங்கையில் மக்கள் புரட்சி ஏற்பட்டுவிடும் என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் தங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்ய முடியாத மக்கள், தங்கள் நடுத்தர வர்க்க கனவுகளை நிறைவேற்ற முடியாத மக்கள் அரசுக்கு எதிராக வீதியில் இறங்குவது தவிர்க்க முடியாதது.
ஆனால் மக்கள் அரசிற்கு எதிராக இப்போதுள்ள சூழ்நிலையில் வீதியில் இறங்க மாட்டார்கள். இதற்கு ஒரு பெரும் தடை உள்ளது.



பிரபாவின் சிந்தனையும் தமிழ் மக்களும்:


அரசியலில் ஒற்றைப் பிரதிநிதித்துவம் ஏகபிரதிநிதித்துவம் என்பது முற்றாக நிராகரிக்கப்பட்ட ஒரு சூழலில் விரும்பியோ விரும்பாமலோ விடுதலைப் புலிகளே இன்று பெரும்பான்மையான தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள் என்பதே யதார்த்தம். அதனால் விடுதலைப் புலிகள் எடுக்கின்ற அரசியல், இராணுவ முடிவுகள் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வாழ்நிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.


அந்த வகையில் இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சிக்கு கொண்டு வந்ததில் முக்கிய பொறுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உள்ளது. வடக்கு கிழக்கு தமிழ் மக்களை வாக்களிக்கவிடாது தடுத்ததன் மூலம் விடுதலைப் புலிகள் மகிந்தவை ஆட்சிபீடம் ஏற்றினர் என்பது மறுக்க முடியாத உண்மை. மகிந்த அரசு பற்றி 2007 மாவீரர் தின உரையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் இவ்வாறு குறிப்பிடுகிறார் ‘சமாதானத்திற்கான போர்’ என்றும் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கை’ என்றும் ‘தமிழரின் விடுதலைக்காக, விமோசனத்திற்காக நடாத்தப்படும் போர்’ என்றும் … மகிந்த அரசு தனது முழுப் படைப்பலச் சக்தியையும் அழிவாயுதங்களையும் ஒன்றுதிரட்டி எமது தாயகத்தின் தெற்குப் பிராந்தியம் மீது பெரும் போரைக் கட்டவிழ்த்துவிட்டது’ என்கிறார் அவர்.


வடக்கு கிழக்கு மக்கள் வாக்களித்து இருந்தால் அன்று தமிழ் மக்களால் சமாதானத் தூதனாகக் காணப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தான் பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சி பீடம் ஏறியிருப்பார். இப்படிக் கூறுவதால் ரணில் இலங்கையில் சமாதானத்தை கொண்டு வந்திருப்பார் என்று அர்த்தம் கொள்ளத் தேவையில்லை.


ஆனால் தமிழ் மக்களை வாக்களிக்கவிடாது தடுத்தால் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வருவார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டே விடுதலைப் புலிகள் வாக்களிப்புக்கு தடை விதிதத்தனர். இதற்காக பணப் பெட்டிகள் பரிமாறப்பட்ட செய்திகள், சம்மந்தப்பட்ட நபர்கள் பற்றிய செய்திகளெல்லாம் சிங்கள ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளிவந்தது. ஆனால் கொடுத்தவர்களோ வாங்கியவர்களோ இவற்றை ஒப்புக் கொள்ளப் போவதில்லை.
மகிந்த ராஜபக்ச அரசை ஆட்சிக்கு கொண்டு வந்ததில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் விடுதலைப் புலிகளுக்கும் முக்கிய பங்குண்டு. அந்த முடிவு தவறானது என்று இப்போது நீங்கள் நினைக்கிறீர்கள் என காலம்சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் இடம் கேட்ட போது, "நிச்சயமாக இல்லை" என மறுத்த அவர

"…..அப்படியானால் ரகசியமாக ஒப்பந்தத்தைச் செய்து ஒரு மூன்றாம் தரப்பு நாட்டிடம் அதை ஒப்படைப்போம். தேர்தலிலே நீங்கள் (ஐதேக) வெற்றி பெற்று இதை அமுல்படுத்த தவறினால் இது வெளியிடப்படும் என்று. இது நியாயமானதொரு கோரிக்கை. இதற்கும் யூஎன்பி சம்மதம் தெரிவிக்கவில்லை. இத்துடன் நின்றுவிடவில்லை. தேர்தல் காலத்தில் சில கசப்பான உண்மைகளை வெளியிட்டார்கள். மிலிந்த மொறகொட அவர்களும் நளின் திசநாயக்க அவர்களும். (வி.புலிகளில் இருந்து கருணா பிரிந்த பொழுது கருணாவுக்கு யூஎன்பி புகழிடம் அளித்தது.) ஆகவே இப்படி கபடத்தனமான அரசியலை நடத்திய யூஎன்பி இனருக்கு நாங்கள் வாக்களித்து வெல்ல வைப்பதில் என்ன இருக்கிறது." என்றார். ரவிராஜ் தேசம் சஞ்சிகைக்கு வழங்கிய இந்நேர்காணல் இதழ் 28ல் (ஓகஸ்ட் - ஒக்ரோபர் 2006) வெளியாகியது.


தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதற்கு:

இல்லை அது சிங்கள பாராளுமன்றம் சிங்கள மக்களே ஒற்றையாட்சியை மகிந்த சிந்தனையை ஏற்று மகிந்தவை தங்கள் தலைவனாக தெரிவு செய்ததாக வாதிடுவது உண்மைக்குப் மாறானது. அது சிங்கள தேசம், சிங்களப் பாராளுமன்றம் என்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தங்கள் பா உ பதவிகளை தூக்கி எறிந்திருக்க வேண்டும். இன்று அவர்கள் தங்கள் பதவிகளை வைத்திருப்பதன் மூலம் என்ன சாதித்தார்கள்? அவர்கள் தாங்கள் பேச்சுவார்த்தைகளில் நேரடியாகக் கலந்துகொள்ளப் போவதில்லை (விடுதலைப் புலிகளே நேரடியாகக் கலந்துகொள்வார்கள்) என்கிறார்கள், மகிந்தவின் அரசும் தீர்வுத் திட்டம் பற்றி ஆராயும் சர்வகட்சிக் குழுவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுக்கவில்லை.


சென்ற ஆண்டு தமிழ்தேசியக் கூட்டமைப்பு ஐரோப்பிய சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு லண்டனுக்கும் வந்திருந்தனர். அவர்கள் தாங்கள் கொண்டுவந்த மனிதஉரிமை அறிக்கைகளைச் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு சமர்ப்பித்தனர். அதற்கு அப்பிரதிநிதிகள் இந்த மனிதஉரிமை மீறல்களும் எங்களுக்குத் தெரியும் இதற்கு மேலும் எங்களுக்குத் தெரியும் என்ற வகையில் கருத்து வெளியிட்டு உள்ளனர். இறுதியில் லண்டன் வந்த பா உ சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழர் தகவல் நடுவத் தலைவர் வரதகுமாரும் நியூகாம் கவுன்சிலர் போல் சத்தியநேசனும் ‘மேற்கு நாட்டுப் பிரதிநிதிகளுக்கு அழுத்தம் கொடுப்பது எவ்வாறு’ என வகுப்பெடுத்து அனுப்பி வைத்தனர்.


ஆகவே மொத்தத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கைப் பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சக டக்ளஸ் தேவானந்தா என தமிழ் பிரதிநிதித்துவத்தையும் பிரதிபலிக்கும் பன்மைத்துவ அரசியல் அரங்காக இலங்கைப் பாராளுமன்றத்தை சர்வதேசத்திற்கு காட்டவே இவர்கள் வழிவகுக்கிறார்கள். மாவீரர் தின உரையில் சிங்கள அரசை நம்பிப் பயனில்லை. இறுதிவரை போராடுவதே ஒரே வழி என முடிவெடுத்த பின், இவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை வைத்திருப்பதிலும் பார்க்க அவற்றை தூக்கியெறிந்து, மகிந்தவினுடைய இந்த அரசு ஒரு இனவாத அரசு என்பதை அம்பலப்படுத்துவதே இன்றைய காலகட்டத்தில் பொருத்தமானதாக இருக்கும்.


ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சொந்த நலன்கள் இதில் அடங்கி இருப்பதால் அவ்வாறான ஒரு அழைப்பிற்கு அவர்கள் செவி சாய்ப்பார்களா என்பது சந்தேகமே. மேலும் இலங்கையில் விடுதலைப் புலிகளை தடை செய்வது என அரசு தீர்மானித்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். அல்லது மீண்டும் ரெலோ, ஈபிஆர்எல்எப் (சுரேஸ் அணி), கூட்டணி (சம்பந்தன் அணி) என்று துணைக் குழுக்களாக வேண்டி ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


மகிந்தவும் பிரபாவும் ஒரே மொழியில் பேசுகின்றனர்:

2007 மாவீரர் தின உரையில் வே பிரபாகரன் "சிங்கள தேசத்தை நம்ப முடியாது என்பது உறுதியாகிவிட்டது. இனஅழிப்பைத் தொடரும் சிங்கள அரசிற்கு இராணுவப் பொருளாதார உதவிகள் வழங்குவதை அடியோடு நிறுத்தி சர்வதேசச் சமூகம் எமது மக்களின் சுயநிர்ணய உரிமையையும் இறையாண்மையையும் ஏற்று அங்கீகரிக்க வேண்டும். அறிவுவளம், செயல்வளம், பொருள்வளம், பணவளம் என உங்களிடம் நிறைந்து கிடக்கும் அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி எமது விடுதலைப் போராட்டத்திற்கு நீங்கள் தாருங்கள். எத்தனை துயர் வரினும் எத்தனை இடர்வரினும் நாம் எமது விடுதலைப் பாதையிலே தொடர்ந்து போராடுவோம்" என போர் பிரகடனம் செய்தார். மகிந்த சிந்தனை எதனை விரும்பியதோ அது பிரபாவின் சிந்தனையிலும் எதிரொலித்தது.


இதனை உறுதிப்படுத்தும் வகையில் மாவீரர்தின உரையை வழங்கி 24 மணி நேரத்தில் கொழும்பில் இடம்பெற்ற இரு வேறு குண்டுத் தாக்குதல்களில் 16 பொது மக்கள் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர். மாவீரர் தினத்தன்று இலங்கை விமானப்படையினர் நடத்திய வௌ;வேறு தாக்குதல்களில் புலிகளின் குரல் வானொலி உறுப்பினர்கள் பாடசாலை மாணவிகள் உட்பட 20 பொது மக்கள் கொல்லப்பட்டனர். பிரபாவும் மகிந்தவும் ஒரே மொழியில் பேசினர்.


இதற்கு முன்னர் இடம்பெற்ற அனுராதபுர விமானத்தளத் தாக்குதலிலும் தாக்குதல் நடத்தப்பட்டு 24 மணிநேரத்திற்குள் விமானத்தளத்திற்கு ஏற்பட்ட இழப்புகளின் விபரம் மதிப்பிடுவதற்கு முன் இலங்கை அரசு 200 மில்லியன் டாலர் பெறுமதியான புதிய விமானக் கொள்வனவு ஒப்பந்தத்தை செய்யப் போவதாக அறிவித்தது. உக்ரெய்னிடம் இருந்து 3.1 மில்லயன் டொலருக்கு பாகிஸ்தானால் கொள்வனவு செய்யப்பட்ட ‘பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை’ இலங்கை பாகிஸ்தானிடம் இருந்து 6.2 மில்லியன் டொலர்களுக்கு வாங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆயுதக் கொள்வனவு ஒப்பந்தங்களில் பெருமளவு நிதி கொமிசனாக செல்வது ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு விடயம். ஒரு வகையில் அனுராதபுரத் தாக்குதல் மகிந்த அரசுக்கு பழம் நழுவி பாலில் வீழ்ந்த கதை தான்.


ஏற்கனவே குறிப்பிட்டது போல இன்று மகிந்த அரசு இக்கட்டான ஒரு அரசியல் சூழலில் உள்ளது. மகிந்த சிந்தனையை ஆட்சியல் அமர்த்தியது முதல் விடுதலைப் புலிகள் அதற்கு உரமிட்டு நீரூற்றி வருகின்றனர். சந்தர்ப்பம் பார்த்திருந்த இலங்கை அரசு மீண்டும் ஜனவரி 2ல் கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது. சர்வதேச கண்டனங்களும் அழுத்தங்களும் இலங்கை அரசுக்கு எதிராக குவிய, உத்தியோகபூர்வமாக யுத்த நிறுத்தம் முடிவுக்கு வரும் ஜனவரி 16 அன்று மகிந்த அரசை கைகொடுத்து எழுப்பிவிட்டது மொனராகலையில் நடத்தப்பட்ட பஸ் வண்டி மீதான தாக்குதலும் சிங்களக் கிராமவாசிகள் மீதான தாக்குதலும். பள்ளிச் சிறுவர்கள் பெண்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர்.


விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சக்திகள் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அரசியல் அழுத்தம் ஒன்றைக் கொண்டுவர முயற்சி எடுத்து பிரித்தானிய பாராளுமன்றத்தில் விவாதத்தையும் ஏற்பாடு செய்து சில மணி நேரங்களிலேயே சிங்களப் பொதுமக்கள் மீது அத்தாக்குதல் நடத்தப்பட்டது. ஜனவரி 17 மாலை பிரித்தானிய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹிம் ஹோல்ஸ், ‘மொனராகலையில் இடம்பெற்ற பஸ் குண்டுவெடிப்பை வன்மையாகக் கண்டித்ததுடன் அரசியல் நோக்கங்களை அடைவதற்கு கொலை செய்வதையும் பயங்கரவாதத்தைக் கைக்கொள்வதையும் எல்ரிரிஈ கைவிட வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.
இந்த விவாதம் நிறைவு பெற்று அடுத்த 24 மணி நேரத்தில் மொனராகலையில் மேலும் 10 கிராமவாசிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். காயமடைந்து சிலரும் இறந்துள்ளனர். அம்மாவட்டத்தில் இரு தினங்களிலும் கொல்லப்பட்ட சிங்கள கிராமவாசிகளின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்திருக்கிறது.


இவ்வாறான தொடர்ச்சியான சிங்கள மக்களிற்கு எதிரான நடவடிக்கைகளால் சிங்கள மக்கள் அரசிற்கு எதிராக இப்போதுள்ள சூழ்நிலையில் வீதியில் இறங்க மாட்டார்கள். சிங்கள மக்களின் அரசிற்கு எதிரான உணர்வை மழுங்கடிப்பதில் விடுதலைப் புலிகள் முன்நிற்கின்றனர். சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தைக் கூர்மைப்படுதி அரசுக்கு எதிரான உணர்வை தமிழ் மக்கள் பக்கம் திசை திருப்பும் மகிந்த சிந்தனையை விடுதலைப் புலிகள் கச்சிதமாக முடிக்கின்றனர். அனுராதபுரத் தாக்குதல், கொழும்பு குண்டுவெடிப்பு எனத் தாக்குதல் நடக்கும் போதெல்லாம் அரசு பால் மா உட்பட அத்தியவசிய பொருட்களின் விலையை அதிகரிக்கிறது.


ஏற்கனவே முஸ்லீம் மக்கள் விடயத்திலும் முஸ்லீம் மக்களை இலங்கை அரசின் பக்கம் தள்ளிவிட்ட கைங்கரியத்தையும் விடுதலைப் புலிகளே செய்திருந்தனர்.

போராட்ட அணுகுமுறையில் மாற்றம் தேவை:

சிங்கள மக்கள் தொகையாகக் கொல்லப்படும் போது இலங்கை அரசு அதனை வைத்து அரசியல் நடத்துவதும் தமிழ் மக்கள் தொகையாகக் கொல்லப்படும் போது விடுதலைப் புலிகள் அதனை வைத்து அரசியல் நடத்தவதும் இன்று வழமையாகி விட்டது. கிழக்கு தீமோரிலும் கோசோவோவிலும் அங்கு இடம்பெற்ற மனித அவலமே சர்வதேச நாடுகள் அவற்றின் விடயத்தில் தீர்மானமாக தலையீடு செய்யும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. அவ்விரு நாடுகளிலும் அரசு திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டது அம்பலமானது.


ஆனால் இலங்கை விடயத்தில் அரசும் அரசுக்கு எதிராகப் போராடும் விடுதலைப் புலிகளும் மனித அவலத்தை ஏற்படுத்துவதில் ஒருவரை ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதையே நிகழ்கால சம்பவங்கள் எடுத்துக்காட்டுகிறது. ஒருவரின் இருத்தலுக்கு மற்றவரின் இருத்தலும் அவசியமாகிறது. மகிந்தவின் சிந்தனையை பிரபா சிந்தனை உரமிட்டு வளர்க்கிறது. இதன் மறுதலையும் உண்மையானதே.


தமிழீழ விடுதலைக்கான 30 வருட ஆயுதப் போராட்டம் தமிழ் மக்களுக்கு எந்த உரிமையையும் பெற்றுக் கொடுக்கவில்லை என்பதிலும் பார்க்க தமிழ் மக்களின் அடிப்படை உரிமையான வாழ்வுரிமையே கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளது. இன்னும் சில ஆண்டுகள் இந்த யுத்தம் தொடர்ந்தால் வன்னிக்குப் பதில் ஸ்காபோறோவில் தான் தமிழீழம் கேட்க வேண்டியிருக்கும். நிகழ்கால யதார்த்தங்களைக் கவனத்தில் கொண்டு விடுதலைப் புலிகள் தமது போராட்ட அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். சிங்கள மக்களுக்கு எதிராக தங்கள் ஆயுதங்களைத் திருப்பாமால் சிங்கள மக்களை அரசுக்கு எதிராகத் திருப்ப என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஆராய வேண்டும்.



உரிமைகளை வென்றெடுக்க ஆயுதங்கள் அவசியம். ஆனால் கடந்தகால இராணுவ வெற்றிகள் எதனையுமே விடுதலைப் புலிகளால் அரசியல் வெற்றிகளாக மாற்ற முடியாமல் போய்விட்டது. இதனை அவர்கள் 30 ஆண்டுகால போராட்ட அனுபவங்களில் இருந்து கற்கத் தவறிவிட்டனர். விடுதலைப் புலிகள் அரசாங்கத்தையும் அதன் ஆதரவுத் தமிழ் குழுக்களையும் குற்றம்சாட்டுவதும் அரசாங்கமும் அதன் அதரவுத் தமிழ் குழுக்களும் விடுதலைப் புலிகளைக் குற்றம்சாட்டுவதும் மக்களை ஏமாற்றவே அல்லாமல் வேறொன்னும் இல்லை.

2 comments:

Anonymous said...

ஒரு விடயம் புரிவதி்லலை. தமிழர்கள் குறிப்பாக ஈழத் தமிழர்கள் சாவதில் இந்திய அரசிற்கு என்ன ஆதாயம் உள்ளது. அதை வெளிக்காட்டினால் புண்ணியமாகப் போகும்

P.V.Sri Rangan said...

//ஒரு விடயம் புரிவதி்லலை. தமிழர்கள் குறிப்பாக ஈழத் தமிழர்கள் சாவதில் இந்திய அரசிற்கு என்ன ஆதாயம் உள்ளது. அதை வெளிக்காட்டினால் புண்ணியமாகப் போகும//


ஈழத்தமிழரின் சாவில் இந்திய அரசுக்கான ஆதாயம்...?

"மகாத்துமா"காந்தியைக் கொன்றதில் என்ன இலாபமுண்டோ அதே இலாபம்தான் இங்கேயும் அடைகிறது!



விடியவிடிய இராமர்காதை,விடிந்தால் இராமருக்குச் சீதை என்னவேணும் என்ற கதையானால் மேலுஞ்சில குறிப்புகள்:



ஈழம் பிரிந்துவிடாது.


ஈழப்போராட்டத்தைப் ப+ண்டோடு நசுக்கிவிடலாம்.


தமிழ்நாடு சினிமாவுக்குள் தலைபுதைக்கும்.



இந்திய மாநிலங்கள் ஈழத்தின் பாடத்திலிருந்து தாமும் போராடாது விட்டுவிடுவர்.



இந்திய ஆளும் வர்க்கம் தொடர்ந்து இந்தியச் சிறுபான்மை இனங்களை ஒட்டச் சுரண்டி அடக்கமுடியும்.



போலித் தேசியம் பேசி சிறுபான்மை இனங்களின் அனைத்து வகையான வளர்ச்சிகளையும் கட்டுப்படுத்தித் தாமே அனுபவிக்க ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல பஞ்சாப், நாகலாந்து,காஷ்மீரி,மற்றும் தலித்துக்கள் என்று பல இலட்சம் மக்கள் செத்தபடிதான் இருக்கிறார்கள்.



இந்தியாவின் மிகக்கொடுமையான பக்கங்களைப் போலித் தேசிய மாயையில் கரைத்தவர்களுக்கு இவை புரியாது உங்களைப் போலவே.


இந்திய இராணுவம் ஈழமண்ணில் செய்த கொடுமைகளை விவரிக்க பக்கங்கள்போதாது.