Tuesday, October 05, 2010

சுதந்திரம் யாருக்கானது?

ரோப்பாவில் பிரான்ஸ் அரசு காலாகாலமாக வாழ்ந்த சிந்தி-ரோமா மக்களை வேட்டையாடுகிறது.கிட்டலர் செய்தான் இதை,அவன் பாசிசத் தலைவன்!இவன் சார்கோசி? நெப்போலியனின் கொள்ளுப் பேரன்?

போராடும்பழங்குடி மக்கள் பிரான்சிலும்,பிரேசிலிலும் மட்டுமல்ல உலகெங்கும்.அவர்களும் போராடுகிறார்கள்.நாமும் தேசம்-இனமென்ற வட்டத்துள் இப்படிப் போராடுகிறோம்.நாம் உலக மனிதர்களென ஒன்றுபட்டு எப்போது போராடுவோம்?

கிழக்கு ஜேர்மனியின் மக்கள்-தொழிலாளர்கள்"சுதந்திரம் யாருக்கானது?"இப்படிக் கேட்கிறார்கள்:





"எம்மைச் சுதந்திரமாக ஆளும் வர்க்கம் ஒடுக்குவதற்கும்,கூலி ஏய்புச் செய்வதற்கும்,எமது வளங்களைத் திருடுவதற்குமான "சுதந்திரம்" உங்களுக்கு அவசியமானது.இது எம்மை ஒடுக்குவதற்கான சுதந்திரம்.மக்களுக்கான சுதந்திரம் இது (கிழக்கு-மேற்கு இணைப்பு)அல்ல.என்கின்றனர்.


கடந்த 03.10.2010 கிழக்கு-மேற்கு ஜேர்மனிகள் உலகச் சதியின் மூலம் உருவாக்கப்பட்ட ஒருமைப்பாடு-ஒன்றான பெரு ஜேர்மனியின் இணைவுக்கான கொண்டாட்டத்தில் ஜேர்மனிய அதிகார வர்க்கம் திளைக்கும்போது கிழக்கு ஜேர்மனிய மக்கள் மேற்காணும் கேள்விகளோடு...


போராட்டம் வலுக்கிறது.கிழக்கு ஜேர்மனியில்உழைப்பவர்கள் வேலையின்றி 34 சத வீதம்(மேற்கில்11 சதவீதம்) சமூகவுதவியில் வாழ்கிறார்கள்.அவர்களுக்குக் கிடைக்கும் பிச்சைப்பணம்-அடிமாட்டுக்கூலியுழைப்பு இந்தத் தேசத்தில்பாரிய வர்க்கப் போரைத் தகவமைத்து வருகிறது.கிழக்கு ஜேர்மனியச் சோசலிசத் தேசத்தில் வேலையிழப்பு-வேலை அற்ற நிலை மிகவும் கீழ் நிலையிலிருந்தது.என்றபோதும், அனைவருக்கும் அடிப்படை மாதாந்த வருமானம் உறுதிப்படுத்தப்பட்டிருந்து.அதை அந்த மக்கள் இப்போது உணரத் தலைப்படுகிறார்கள்.மேற்கு ஜேர்மனி இருபதாண்டுகளுக்கு முன் நடத்திய சதியை இப்போது உணர்கின்றனர்.இதை எதிர்த்துப் போராட்டம் இப்படி வெடிக்கிறது:





ஆளுங் கட்சிகளது கையாலாகத்தனம்.பெரு வங்கிகள்-முதலாளிகளுக்குக் கட்டுபட்டுக் கிடக்கும் கட்சிகளே பெரு மூலதனத்தைக் கொண்டியக்கும்போது அரச வன்முறை ஜந்திரம் போராடும் மக்களை வேட்டையாடுகிறது.போராடும் உரிமைகளைப் பறிக்கிறது.சுதந்திரமாக ஆர்ப்பாட்டவூர்வலங்களை வன்முறையில் முடிக்கிறது ஜேர்மனியப் பொலீசு.


ஒன்றுபட்ட ஜேர்மனிய மக்களது உரிமைப் போராட்டம் பற்பல தளத்தில் நிகழ்கிறது.


கூலி ஏய்ப்பு,
சமூக மானியம் வெட்டு,
வேலையிழப்பு,
தொழிற்சாலைகள் மூடுதல்,

வரிப்பணத்தை பெருவங்கிகளுக்குத் தாரைவார்த்தல்,
யுத்தத்துக்கான நிதியளிப்பு,
பெருங்கட்டுமானங்கள் மக்களுக்கு எதிரான முறையில் எழுவது,

என்ற இன்னபிற அனைத்துக்குமான மக்களது வெகுஜன எழிச்சி வலுத்தே வருகிறது.


"ஸ்ரூட்கார்ட் 21" (Stuttgart 21)சுரங்க இரயில் நிலையக் கட்டுமானத்துக் எதிரான பாரிய போர் வெடிக்கிறது.அது, வலுக்கும் ஒவ்வொரு பொழுதும் அரச வன்முறை ஜந்திரம் ஒடுக்க முனைகிறது.இது பெரு முதலாளிக்களுக்காக மக்களை ஒடுக்கும் செயலாக விரிகிறது. எனினும்,போராடும் மக்கள் பெரு வெற்றிபெற்றே வருகிறார்கள்.


இந்த நிலையில்,மதவாத நிறுவனங்களும் அவைசார் மக்கள் குழாமும் ஒரு பிந்திய- மந்தமுடைய சமூககமாக இருப்பதும்,உற்பத்தியின் வீச்சில் உறுதிப்படுமெனவெண்ணும் வாழ்வாதாரங்களையும் நம்புவதற்கு மனத்தளவிற்கூட முடியாதிருக்கும் காலம் இன்றைய காலமாகும்.எந்தத் தளத்திலும் கால்வைத்திருக்க முடியாத தருணத்தில் மிதக்கும் மௌன மனவோட்டத்திற்கு மதிலொழுப்பிக் கொள்ள முனைவதில் ஆத்மீகம் தோற்றுப்போனது. மத நிறுவனங்களால்அவதியோடு சாவை நோக்கும் கரித்துண்டமாக வாழ்வும்,உயிர்ப்பும் சிறுமைப்படும் இந்த நிலையில் வர்க்கப் போரைத் தகவமைக்கும் இடதுசாரிய வட்டம் கிழக்கு-மேற்கு ஜேர்மனியில் வலுத்துவருவது நம்பிக்கை அளிக்கிறது.இது,பிரான்ஸ்சிடமிருந்து பாரிய பாடத்தைக் கற்கிறது.


பெருந்தேசங்களையே வேட்டையிடும் பெரு வங்கிகள்,அவைக்காகவே உருவாக்கப்படும் அரசுகளென உலகத்தில் அனைத்தும் பெருமூலதனத்துக்கு அடிமையாகிவிட்டது.


எங்கு நோக்கினும் சமூகக் கொந்தளிப்பு.வர்க்கப்பிளவு அதீதமாக விரிவடைந்தே செல்கிறது.அதேபோல் தொழிலாளர்களைப் பிளந்து வேட்டையாடுதலும் நிகழ்கிறது.சமீக காலமாக ஜேர்மனியில் கொந்தளிப்புக்குள்ளாகும் சமூக அமுக்கம் ஏகாதிபத்தியப் பெரு வங்கிகளது கோரமுகத்தின் தொடர் வினையாகவே உருவெடுக்கிறது.ஜேர்மனிய அரசும்,அதன் வன் முறை ஜந்திரமும் தனது கடமையைச் செவ்வனவே செய்கிறது.அது ஊர்வலத்தை குழப்புகிறது பெருந்தொகை மக்களை வதைத்து ஊர்வலத்தைச் சிதைக்கிறது.எனினும்,மக்கள் வீதிக்கு இறங்குகிறார்கள்.


நிலத்தடி இரயில் பாதை-நிலையமைத்தல்,


சமூக மானியவெட்டு,


பெரு வங்கிகளுக்கு வரிப்பணத்தைத் தார வார்த்துக் கொடுத்தல்,


வேலையில்லாதோரை மணித்தியாலத்துக்கு ஒரு யூரோ ஊதியம்பெற்று வேலைக்குத் துரத்துவதுபோன்ற அடிமைச்(Hartz IV-கார்ட் 4) சமுதாயத்தை உருவாக்க நினைக்கும் மூலதனப் பேய்களுக்கு எதிராக வர்க்கப் போர் மூழ்கிறது.


குரோஸ் போடர் லீசிங் (Cross Border Leasing)மூலமாக மக்களது அடிப்படையான வாழ்வாதாரவூலங்களைப் பெரு வங்கிகளுக்கு விற்ப்பது- 99 வருடத்துக்குக் குத்தகைக்கு விடுவதென சேவைத்துறை அனைத்தையும்(நீரூற்று,நதி,பெருந்தெருக்கள்,இரயில்வே,தபால்,நகரசபையினது கட்டுப்பாட்டிலிருந்த இவைகள் தற்போது தனியார் சொத்து) உலகப் பெருவங்கிகளுக்கு விற்று ஏப்பம்விட்ட ஜேர்மனிய அரசு, சுரங்க இரயில்வே கட்டுவதற்குச் சூழலைப்பாதுகாக்கும் பூங்காவை அழிக்கிறது.
பல்லாயிரம் கோடிகளைச் செலவு செய்து இவற்றைக்கட்டும்போது,மக்களுக்கான பாடசாலைகள் திருத்த வேலையின்றி நாறுகிறது.மக்கள் வீதிக்கு வருகிறார்கள்-வர்க்கப் போர் வளர்கிறது. இதை நவீன முறையில் முறியடித்தால் எதிர்கால இடதுசாரியத்து எதிர்காலமில்லை!ஆனால்,இந்த அரசு மக்களை ஒடுக்க முடியுமானால் அது பாசிசத்தைக் கட்டமைக்கவேண்டும்.இது நடவாதவரை இடது சாரிய முகாம் வலுப்பெற்று வருகிறது.மக்கள் வெல்வதற்கான சூழலொன்று நெருங்கி வருகிறது.


"சுதந்திரம்-விடுதலை" இன்றைக்கு அதிகமாக உணரப்படும் வார்த்தைகள்,குறியீடாகிக் கருத்துணர்ந்து அநுபவிக்கும் மானுட தரிசனமாகும்.இவற்றை இதுவரை மானுடம் நேர்த்தியாகப் பெறமுடிந்ததா?அநுபவித்துக்கொள்ளும் வாய்ப்புத்தாம் கிடைத்ததா?


இன்னும் யோசிப்பதே விடையாகும்.


பொருளுண்டு,புவியுண்டு! எனினும் மானுடர் வாழ்வு வெற்றுப் புள்ளியில் வீரியம்பேசி வினையாற்ற வக்கின்றித் தன்னைத்தானே அடிமைத் தளைக்குள் உந்தி தள்ளியபடி.வர்க்கப் போரே இதை முறியடிக்கும்.அந்தப் போர் வெடிக்கிறது!



இங்கு, இந்த நெருக்கடிக்கு உந்தப்பட்டு,வாழ்நாளெல்லாம் மனித விடுதலைக்காகச் சிந்திக்கிறார்கள் பலர். தம் முன்னோர்களையும்,பின்னோர்களையும் கோடுகிழித்து சுதந்திரமென்றால் "சுயதேர்வு"செயற்படுத்தல்,என்பதும்,எதையும் மறுதலிக்கையில் தேர்விடுதலே சுதந்திரமென்பதாயும் கூறிச் சென்றவர்கள் கோடி!


இருபதாம் நூற்றாண்டின் மகத்துவமற்ற முறைமைகளுக்காக மனிதம் பலியாகியதைக் காணும் அறிவுப்பரப்புக்கு எவர் சொந்தக்காரர் ?


மார்க்சிய ஆசான்கள்-போராட்டத் தலைவர்கள் இன்றைய சூழலில் புதுமையோடு எழுகின்றனர் இப்படி : http://www.kommunistische-initiative.de/

எமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்-இல்லையேல்
நாம் புவியில் கருகி மாள்வோம்!- இதைச் செய்பவர்கள் பெரு வங்கிக் கயவர்கள்,பெருமுதலாளிகள்-ஏகாதிபத்தியத் தேசங்களாக இருக்கும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
06.10.2010

No comments: