Wednesday, October 06, 2010

"நான்-நான்"-Ethical egoism

"நான்-நான்"-Ethical egoism

மீண்டுமொருமுறை இந்த முறைமையிலான பண்டுதொட்டுப் பேசப்படும்- மொழிவழி செயற்படும் அதிகாரத்துவ,ஆணவ ஆதிக்க உளவியல் குறித்வொரு குறிப்பு அவசிமாக இருக்கிறது.காலாகாலமாக மரபுவழிப் புரிதற்பாட்டினது உளவியற் பரப்பிலிருந்து முற்று முழுதாகி விட்டு விடுதலையாகும் ஒரு மனிதருக்கும் -அதன் வழி இதுவரை செயற்பட்டுவரும் எழுத்து வடிவத்துக்கும் மதிப்பீடாக எந்த வொரு சாத்தியப்பரப்பையும் இதனுள் நிறுவாது-இது முற்றுமுழுதானவொரு உளப்பரிமாற்றமாகவும் நட்பினது ஆகக்கூடிய தோழமையை உறுதிப்படுத்துவதற்கான முனைவாகவும் இருந்தால் அதுவே எமது தோழமையினது வெற்றியாகும்.

"நான்தான் தனித்து ஆப்பு இழுத்தேன்,

நான் தான் மார்க்சிசம் பேசினேன்,

நான் தான் தனித்து உருட்டிப் புரட்டினேன்"

புலம்பெயர் பத்திரிகை-இணைய ஊடகத்துள் இந்த முத்துக்களை மலிவாகக் காணமுடிம்.இந்த "நான்"சாகடிக்கப்படமால் நானிலித்துக்கு நன்மை பயக்குமெனக் கருத முடியுதோ?-;இல்லையே!

"நானே குரல்-நானே ஜீவன்" -"நானே புதியஜனநாயகத்தை புலம்பெயர் சூழலில் அறிமுகப்படுத்தினேன்". சுப்பரடா-சுப்பா!

1986 இன்ஆரம்பத்திலிருந்து நூரன் பேர்க்குக்கு இலங்கையிலிருந்து சென்று தமிழ்நாட்டில் வாழ்ந்த "என் குரு"( சிவகுரு ஐயாவுக்கு அன்று எழுபது வயது.அவரது மகள் ஜனகா அக்கா இன்று பிரான்சில் இருக்கிறாள்) மூலம் நேரடியா எடுத்து நாமும் வாசித்தோம்-நேரடியான சந்தாதாரராயும் இன்றுவரை இருக்கிறோம்.புலம்பெயர் மொத்தச் சமூகத்தையும்"நான்-நான்"க்குள் புதைக்க முடியுமா? சமூக மாற்றத்துக்காக எல்லோருந்தாம் உழைக்கின்றனர்.சிலர் பொதுவான எண்ணவோட்டத்துள் மூழ்கி வினைமறுப்பில் இயங்க,அதைப் பயனாக வைத்து "நான்" முன்னுக்கு வர முடியுமா?

இந்த "நான்" தொலையவேண்டுமெனச் சொன்னவர் சிவகுரு ஐயா.அவர் எனக்கு மு.வரதராஜன் அவர்களது கரித்துண்டு நாவலை வாசிக்கும்படி நச்சரித்தார்.தமிழ்நாடு பூராக அந்த நாவலைத் தேடியெடுக்க முனைந்தார், அன்றவர்.அவரும்,அவர்தம் புதல்வி ஜனகாவும் அன்று(1986-1993) தமிழ்நாட்டில் தத்தளித்த நமது மாணவர்களைப் படிப்பிப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டனர்!நாம் அவர்களக்கு அணிலாக இருந்தோம்(சிறந்த சமூகசேவை-புரட்சியாளன் எனது குரருவென்று இன்றும் பணிவேன்!சிவகுரு ஐயா இப்போது உயிரோடு இருக்க வேண்டுமென அவாப்படுகிறேன்.ஆனால், அவர் பற்றி எதுவும் அறியமுடியவில்லை!).

ஓய் மிஷ்டர் "நான்":




நாம் செயற்படும் தளமானது நமது சொந்த வாழ்வினது வட்டமில்லை,மாறாக இதுவொரு சமுதாயத்தினது தளத்தின் உள்ளகத்தில் நின்றுகொண்டு அதன் இதுவரையான செயற்பாட்டின் மீது விமர்சன ரீதியாக முன்வைக்கப்படும் எழுத்துக்களோடு நாம் வருகிறோம்.

இதற்கு வழிவழி வரும் தனிநபர் வாத உளப்பாங்கைக் கருவறுத்து உலகு தழுவிய நேசிப்பும்-எமக்கு முன் வாழ்ந்த எம் முன்னோர்கள் தந்த அறிவுப்பரப்பில் நின்று நிதானிக் முனையும் ஒருவர் நிச்சியாக தன்முனைப்பிழந்த "நாம்" என்ற சுட்டலுக்குள் வந்து விடுதல் தவிர்க்கமுடியாத இயக்கப்பாடாகவேயிருக்கும்.

ஒரு தனிநபர் தன்னால் முடிந்தது என்பது, அறிவுவாத புரிதற்பாடற்ற தன்முனைப்பினது நோயாகவே இது வரை நோக்கப் படுகிறது.இங்கே"நான்"க்கு முக்கியத்துவம் தன்னிலை இருப்பபுக்கு அவசியமெனப் பார்த்தால் தனிமரமானது தோப்பாகினாற்றான் தேருக்குதவும்- சூழலுக்கும் மிஞ்சும்!இது சகல மட்டங்களிலும் பரவாத நிகழ்வுப்போக்கால் நாம் இதன் தளத்தைத் தவிர்த்து விட்டுள்ளோம்.

எதற்கெடுத்தாலும்"நான் சொன்னேன்-நான் செய்தேன்,என்னால் முடிந்தது" என்பது தனிநபர் சார்ந்தவொரு செயற்பரப்புக்கு வேண்டுமானால் சரியாகலாம் ஆனால் அதுகூட இன்னொரு துணையின்றி நிகழ முடியாது!

இது ஒரு குழு வாழ்வு.குழுவென்றவுடன் பல்பத்துப்பேர்களோடு திட்டமிட்டவொரு செயற்பாங்கென்று கற்பனைசெய்தால் அது தப்பு. நான் என்பது வெறும் குறிப்பானாக இருக்குமானால் அதன் சுட்டல் சரிவரும் பரப்பு ஒற்றை மானிட வாழ்வுக்குப் பொருந்தும்.அதுவே கூட்டு வாழ்வாய் மலர்ந்து சமுதாயமாக நாம் வாழும் இன்றைய வாழ்சூழலில் நமது என்பது செத்து நான் என்பது வெறும் குறிப்பானாக இருக்காது "தனிநபர் வாத முனைப்பினது வெளிப்பாடாகவும் அதுவே "தான்" எனும் அகங்கார உளவியற் பரப்பிற்கு மானுடர்தம் வாழ்வைத் தள்ளி கூட்டுணர்வற்ற வெறும் காரியவாத உளபாங்கையும்,சர்வதிகார உச்சபச்ச அதிகாரத்துவத்தை நிறுவி விடும் அபாயத்தைத் தந்துவிடுகிறது. இதன் வெளிப்பாடு குடும்ப மட்டத்தில் துணைவனின் இழப்பில் துணைவியும் தன் வாழ்வு முடிந்ததாக எண்ணுவதும்,அது சமுதாயமட்டமானால் ஒரு குறிப்பிட்ட தலைவர் இல்லாது போனால் அவரின்றி அச் சமுதாயமே வழங்காதாகவும் பார்க்கப்படும் நிலையும் உருவாகிறது. இந்த வெளியில் சஞ்சரித்தலென்பது நம் கால சமுதாய வாழ்வில் அர்த்தமற்ற சமூக அச்சமாகவும் அதுவே செயலூக்கமற்ற-வியூமற்ற பொறிமுறையை உருவாக்கும் போது நாம் அளப்பெரிய உளவியற் தாக்கத்துக்குள் முடங்கி நமது வாழ்வை இன்னொருவரிடம் ஒப்படைக்க முனைகிறோம்.

இந்த "நான்" இழப்பினது அவசியமென்பது வெறும் கருத்துருவாக்க சொற் கோர்வையற்ற சமுக உளவியற்போக்குக்கும் அதன் வாயிலான கூட்டுமுயற்சிக்கும் அவசியமானதென்பதை நம் முன்னோர்கள் நன்றாகவே அறந்துள்ளார்கள்.இதற்கொரு உதாரணம் கூறுகிறோம்(கூறுகிறேன்):

பண்டைய தமிழகத்தில் மன்னனொருவன் ஒரு ஞானியைச் சந்திப்பதற்காக அந்த முனிவரின் குடிசை(பங்களாவல்ல) நோக்கிப் போகின்றான்.போனவன் அவர்தம் குடிசையின் கதவைத் தட்டுகிறான்.பதிலுக்கு ஞானி கேட்கிறார்"யார் அங்கே?",மன்னன் கூறுகிறான்" நான் வந்திருக்கிறேன் உங்களைப் பார்க்க". ஞானியின் பதிலோ"நான் இறந்த பின் வருக!" மன்னனுக்கு எரிச்சில் அதிகமாகி "நீர் இறந்த பின் எப்படி உம்மை த் தரிசிக்கிறது?" என்ற கடுகடுப்பு. ஞானியோ மௌனமாக.

இது எதைக் குறித்துரைக்கிறதென்பதை அந்த மன்னன் மட்டுமல்ல இன்றைய "நான்" களும்தாம்அறிந்துள்ளனரென்றாலும் அவர்தம் இருப்பு அவர்களை அதையொட்டிச் சிந்திக்கவிடுவதில்லை!

சமூக உணர்வினது வெளி மிகவுமொரு பின் தங்கிய நிலையில் சமுதாய ஆவேசமாக மாற்முறுவதற்குப் பதிலாக தலைமை வழிபாடாக முகிழ்க்கிறது.இதன் இன்றைய நிலை தமிழகத்தின் சினிமா நட்சத்திரங்களின் பின் தமிழ்பேசும் மக்களைத் தள்ளி "தலைவரே,தலைவரே" போடவைத்திருப்பதை நாம் காணலாம்.சமுதாயத்தின் எந்தப் பிரச்சனைக்கும் தனி நபர் சார்ந்த கண்ணோட்டமும் கூடவே அவரவர் வீரதீர செயற்களில் "சுப்பர் மேன்" கண்ணோட்டத்தையும் இது முன் வைக்கிறது.இத்தகையபோக்கால் நமது உயரிய அறிவு வாதப் பார்வைகள் செத்து நம்மைக் கோழைத்தனமாகத் தனிநபரை வழிபடத்தூண்டுகிறது.


"நானென்றும் தானென்றும்
நாடினேன்!நாடலும்
நானென்று தானென்று
இரண்டில்லை என்று
நானென்ற ஞான
முதல்வனே நல்கினான்
நானென்று நானும்
நினைப்பொழிந் தேனே" -என்கிறார் திருமூலர்

எனவேதாம் "நான்" சாகடிக்கப்பட்டு "நாம்","நாம்" பிறக்கிறது:



இப்போது,அதீதத் தனிநபர் வாதம் முன்வைக்கும் இன்னொரு கேள்வி:

"சுய விமர்சனஞ் செய்-மக்களுக்கு என்ன செய்தீர்? சுயநலமாகச் சிந்திப்பதைத் தவிர?"

புத்தகமும் கையுமாக,பேரெடுக்கும் மாணவர்களாகவும்,தமது குடும்பத்துக்கு-தனக்கு மட்டும் பொருள் தேடும் கனவோடு,பல்கலைக்கழகஞ் சென்று "பட்டம்" பெற்று நல்ல சீதனத்தில் பெண்ணெடுக்கும்"யாழ்ப்பாண நடுத்தர வர்க்க மனோபவமானது ஒரு பொழுதில் புழுதிதோய்ந்த கல்லொழுங்கை வழியாகப் பாய்ந்து காடுமேடெல்லாம் அலைந்தது.தனக்காக வாழ்ந்த இந்தத் தீவு வாழ்வைக் கிடுகு வேலி பிரித்து வெளியேறிப் புதியவுலகுக்காக மனமுவந்து கொடுக்க முன் வந்தது. இந்த மன இராச்சியத்தில் ஏற்பட்ட மாற்றஞ் சாதாரணமானதொன்றோ?-சொல்லுங்கள்! அங்கே,சுய நலமும் அதையொட்டிய குவிப்பு மனமும் இருந்ததா?எல்லாவற்றையுந் தாரவார்த்துக்கொடுத்து விட்டுத் தேசத்துக்காகச் செத்தவர்கள் பல்லாயிரம்பேர்கள்.அவர்களது உயிரைத் துஷ்பிரயோகஞ் செய்த இந்த இயக்க வாதமே மீளக் கேட்கிறது"சுய விமர்சனஞ் செய்- மக்களுக்கு என்ன செய்தீர்கள்?"-மக்களுக்காக என்ன செய்தீர்களென.

இந்தத் தனி நபர் வாதமானது தன்னைச் சுற்றிப் பாதுகாப்பு அரணைக் கட்டுவதற்கே இந்தக் கேள்வியோடு உலகைப் பார்த்துக் கொட்டாவி விடுகிறது.இன்றைய மக்களது அவலத்துக்கு அன்றைய தவறான தெரிவுகளே காரணமாகின.அந்தத் தவறான தெரிவுகளது எச்சம் மீளவும் மக்களது பெயரால் ஈனத் தனமாகப் புலம்புகிறது.இதைச் சுட்டிவதற்கு பற்பல காரணிகள் நமக்குள் நடந்துவிட்டன.எனினும், இந்தச் சுய பாதுகாப்பு அரண் அதீத தனிநபர் வாதத்துக்கு முண்டு கொடுப்பதற்கான தெரிவில் மக்களைச் சுட்டியே தமது இருப்பை உறுதிப்படுத்துகின்றன.இந்த இருப்பு எதற்காக?

இந்தக் கேள்வியே பிரதானமானது:

தத்தமது இருப்போடு நிகழ்த்தப்படும் இயக்கவாத மாயையானது எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒருகிணைவைத் தடுத்தே வருகிறது.அது கூட்டு வேலைக்குக் குறுக்கே நின்று கல்லெறிவது மட்டுமல்ல எல்லோரையும் சிதைத்துத் தமது தேவைக்கான அரசியலைப் பொதுவான மக்கள் நல அரசியலாகவேறு வற்புறுத்தி ஏற்க வைக்கப்படாதுபாடுபடுகிறது!

இந்தப் புள்ளியற்றாம் அனைவர்மீதும் அவதூறு விதைக்கப்படுகிறது.நான் அறியப் புலம் பெயர் தளத்தில் அரசியல் செயற்பாட்டிலுள்ள 99.999999 சத வீதமானவர்கள் அவதூறின்வழி கழிசடையாக்கப்பட்டனர்.இதுள் கணிசமானவர்கள் இதே சமூகச் சாக்கடையில்தாம் பிறந்தோம்.இந்தச் சமூகத்தின் அனைத்தும் எமக்குள் பிரதிபலிக்கின்றனவென்பதை இலகுவில் மறந்துவிடும் பொய் அரசியல்-"புரட்(டு)சீ"க்கு எத்தனை விதமான ஏமாற்று வித்தை தெரிந்திருக்கோ அத்தனையையும் அது "புரட்(டு)சீ"யால் செய்து முடிக்கத் துடிக்கிறது.

இதுவொரு தளத்தில் அம்பலப்பட்டு முட்டுச் சந்தியில் நின்றாலும் அதன் அடுத்த ஆட்டம் தொடராகவரும் "புரட்சிக் கீதத்தில்" தன்னைக் கழுவு முனையும்.இது,மீளவும் அதே குழிப் பறிப்பின் தொடராக விடப்போகும்"பீலா"எல்லோருக்குமான சவக் குழியை வெட்டி வைக்க முனையும்.ஆனால்,அது உண்மையாக மக்கள் அரசியலைப் பேசாது போலியாக நடிக்கும் "எதிர்ப் புரட்சியில்" எப்பவும் அம்பலப்படும். உண்மையான புரட்சிக்காரனுக்கு எந்தத் தொங்கு சதையும் தேவையற்றது.அவ்வண்ணமே, எந்தப் பக்க வாத்தியமும் தேவையற்றது.

நீதியும்,நேர்மையும் எமது விலங்கை நாமே ஒடிப்பதற்கான திசை வழியில் வார்க்கப்படும்போது "உன்னை" எந்தக் கொம்பனாலும்-குழுவாலும் எதுவுஞ் செய்துவிட முடியாது.

எனக்குள் நிகழ்வது உனக்குள்ளும்,உனக்குள் நிகழ்வது எனக்குள்ளும் நிகழ்வது இந்த வாழ்நிலைப் பயனே!வாழ்நிலைதாம் மொத்தமான மனிதநிலையையும் உருவகப்படுத்துகிறது அதிலிருந்து தாம் எனது ";இருப்பும்"என்னால் உணரப்படுகிறது.பருப்பொருள்-பருப்பொருள் என்று படாதபாடுபட்டுப் புரிந்துகொள்ள முனைகிறோமே அது நாம் உணரும் நிலையைக்கடந்து மொத்தமான முகிழ்ப்பில் அரும்புகிறது?

எனக்கு,என்னுடைய புலனுணர்ச்சிகளால் தரப்படுக்கின்ற புறநிலையான யதார்த்தத்தைக் குறிக்கின்ற "புரிதற்பாட்டு" வகையினமே பருப்பொருள் எனப்பகரப்பட்டும்.எனக்குமுன் விரிந்து கிடக்கும் புறநிலையான மெய்ப்பாட்டிலிருந்து சுதந்திரமாகத் திரண்டு புலனுணர்ச்சிகளால் பிரதியெடுக்கப்படும் இந்தப் படம் எப்படிப் பிரதிபலிக்கிறது?

நாம் திருமூலரிடம்போவோம்.அவரைக் கடாசியவர்களும் அவரது ஆன்ம விசாரணைகளில் சில பொருத்தமான புரிதல்கள் உலகவியத்துக்குத் தோதான வகையினத்துள் வருவதைக் கணக்கெடுகலாம்:

"மண்ணொன்று தான்பல
நற்கலம் ஆயிடும்
உண்ணின்ற யோனிகள்
எல்லாம் இறைவனே
கண்ணொன்று தான்பல
காணும் தனைக்காணா
அண்ணலும் அவ்வண்ணம்
ஆகிநின் றானே!" - திருமூலர் திருவாக்கு

பருப்பொருளுக்கு லெனின் கூறிய விளக்கத்தை இத்தோடு பொருத்திப்பார்த்தால் நமது வாழ்நிலையின் சமூக உணர்வு நிலை வடிவமைத்த பண்பு இன்னும் ஆழமாகப் புரிந்துபோகிறது.எனது உணர்வுக்கு வெளியே சர்வப் பொதுக் குணாம்சத்தைக் கொண்டியங்கும் இந்தப் புறவுலகு, எனக்குள் பொதுப்மைப்படும் சந்தர்ப்பத்தில், திருமூலர் சின்ன வரிக்குள் பல்லாயிரம் பக்க விளக்கத்தைக் கொட்டி வைத்திருக்கிறார்.இது,மனித முயற்சிகளது தெரிவில் மனிதர்கள் பொதுவான நிறை-குறைகளுக்கு அப்பாற்பட்டவர்களில்லை என்ற சிறிய புரிதல் விழிமுன் கொணரப்பட்டுத் தனி நபர்களது எல்லைகiளுயும் அதுசார்ந்த ஒழுக்கங்களையும் இந்தச் சமூகச் சாக்கடையில் உரைக்கச் சொல்கிறது.

எனவே,"நான்-நான்"மகா ராசாக்கள் மலிந்த இந்தக் காலக்கட்டத்தில்"நாம்-நாம்"கிடைப்பதற்கரிய அமிழ்தம் என்பதில் என்னதான் வேடிக்கை?

எனவே, நாம் நிற்கும் தளமானது ஒருமைத் தோற்றுவாயின் பன்மையான பயன்களே.இதுள் அவன் காசைப் பறித்தாலென்-இவன் பெண்டிரைப் புணர்ந்தாலென்ன?எல்லாம் இந்தச் சமுதாயச் சாக்கடையின் பிரதிபலிப்புத்தாம்.அதை மாற்றியமைப்பதறஇகு இந்தக் குறைபாடுடைய மனிதர்கள்தாம் முயற்று,முயன்று தம்மைத் தகவமைத்தபடி மேலே செல்லவேண்டும்.அதுவரையும்"நானும் பொய்யன்-நீயும் பொய்யன்"தாம்!

இதன் தாத்பரியம் "மாற்றானை நேசி மனமே" என்பதுதாம்.


இதுவன்றி வேறு மார்க்கம் மானுடர்கட்கு மகத்துவம் அளிப்பதில்லை.

கருத்துகட்கு மேலான மனிதநேசிப்பு மதங்களின் பால் மையங்கொண்ட மாயை அல்ல. இது மகத்துவமான அறிவின் வெளிப்பாடு.

ஆதலால், மனித மாண்புக்கு நிகராக எந்தக் கருதுகோளும்- தத்துவங்களும் எம்மை ஆட்கொள்ள முடியாது.

அப்படி ஆட்கொள்ளத்தக்க தத்துவங்களும்-தேச விடுதலைப் பரிமாணங்களும் நம்மிடமிருந்தால் காட்டுங்கள், அந்தக் கோட்டைக்குள்ளும் நுழைந்து மானுட மாண்பைப் பார்ப்போம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
06.10.2010

No comments: