Sunday, October 10, 2010

நானும்,எனது படைக் கலங்களும்...

நானும்,எனது படைக் கலங்களும்.

-என் சுயஞ் சொல்லும் என்சுயசரிதை.


பொதுவாக ஒன்றை ஏற்பதும்,ஏற்காததும் என்பதற்கு அப்பால் என்னால் ஒருவிடயம் பகரப்பட்டு நான் அதுள் தவறிழைத்திருப்பின் அதை ஒத்துக்கொள்வது-நியாயப்படுத்தலையுந்தாண்டி உண்மைகளை ஏற்பதென்றே கருதுவதில் தப்பிருக்க முடியுமா?

ஒன்றை நம்ப வைப்பதற்கு அல்லது ஏற்க வைப்பதற்கெடுக்கும் முயற்சியில் எத்தனையோ "சமூக நடாத்தைகள்" பொதுத் தளத்தில் ஒன்றோடொன்று பின்னப்பட்டுக் கதை எழுதுவது எதற்காக?

சமூகத்தில் நடப்பது அனைத்துக்கும் அந்தச் சமூக அமைப்பினதும் அதுசார்ந்து வாழும் ஒழுங்குகளுக்குமிடையிலான பொதுப்பண்பு(பொருளாதார முறைமை)சார்ந்த நெறியே காரணமாகிறதென்பதால் அனைத்தையும் அது சார்ந்து பார்ப்பது நியாயமானதுதாம்.என்றபோதும்,மொட்டாக்குக்கும் முழுங்காலுக்கும் முடிச்சுப்போட்டு என்னை நான் நியாயப்படுத்தும்போது எனது போலித்தனமும்,என் கேவலமான சதியும் நேர் எதிராக என்னைச் சிதைக்கிறது!

நான் நாணய வாதியாக என்னை உரைப்பதற்கு பல வழிகளிலும் எதையெதையோ பின்னிப் புனைகிறேன்.எதுவும்,எனது நேர்மையீனத்தை மறைப்பதற்கில்லை!நான் தப்புச் செய்யாத தூய தருணங்களைச் சொல்ல எனது பல்லக்கை மற்றவர்களும் சுமக்கக் கட்டளை-ஆலோசனை பகிர்கிறேன்.அவர்களும் எனது சமூக நடவடிக்கையும் அதுள் நான் கடந்த பாதைகளையும் எடுத்து தீர்க்கமான படம் வரைகிறார்கள்.அந்த ப்படத்துக்குப் போடப்படும் சட்டகம் "மக்களது விடுதலைக்கு-நலனுக்கானதெனச் சொல்லும்" குறிப்பானாக எனது சதிமிக்க அரசியற் பாத்திரம் புரட்சிக்கான காலவர்த்தமானத்தை நிர்ணயிக்கும் ஒரு சந்து பொந்தாகப் பகிரப்படுகிறது.இதை நானே வெறுத்தொதுக்க முனைகிறேன்.எனினும்,என் முகமூடி கிழிந்து சந்தியில் கோர முகத்தோடு நான் நிற்பது எனது எதிர்காலத்தையே கேள்விக்குட்படுத்துகிறது.இது,என்னைத் துரத்துகிறது.

"எங்கெங்கோ விழுந்து,எதிலெதிலோ பட்டுத் தெறிக்கும் மழை நீராக" நான் ஆட்டுவிக்கப்படுகிறேன்!என்னால் எனக்காகச் செயற்படுவதையும்விட என்னை ஆட்டுவிக்கும் புரவலர்களுக்காகத் தினமும் இணையங்களை உலாவந்து தகவலளிப்பதிலிருந்து வேறென்னத்தைப் பெரிதாகச் செய்தேன்?

நான் வெறும் குறிப்பான்!


எனது நாமத்தில் கோலமிடும் எல்லா வகைப் புனைவும் எனக்குள் முகிழ்த்திருப்பதெனவெவராவது யோசித்தால் எனது முழுவாழ்வில் "நாள்முழுதும்" கணினித்திரையியே இருக்க வேண்டும்.இந்தவுண்மையைக்கூடப் புரியாதவர்களது கூட்டுதாம் என்னை மீளத் தகவமைக்க முண்டுகளாக வரவேற்கப்படுகின்றன.இதன் தொடரில் பேணப்படும் தொடர் நாடகங்களை எவராவது உலுப்பியெடுக்க முன், அவர்களது தலையைக் கொய்வதற்கேற்ற படையணிகளை உசார்ப்படுத்துவது சாத்தியமாக இருக்கும்.

என்றபோதும்,என் இருப்பு எப்படியும்-எதானாலும் அழியுமா?

என்னால் இது குறித்தெப்போதும் சகிக்க முடிகிறதே இல்லை!

நான் யார்?-எனக்கும் மக்கள் திரள் போராட்டத்துக்கும் எந்த வகையில் உறவிருக்கிறது?

எனது நலன்களைக் காவும் ஏதோவொரு திசையில் மக்களுக்குள் நான் பிணைக்கப்பட்டேன்!எனது கடந்த காலத்தை உரைப்பதற்குத் தோதான தகவல்களை நானே சொல்லிவிட்டேன்.இது நானறியச் சொல்லப்பட்டதே இல்லை!நான் பொய்யன்.பொய்யனது எண்ணங்கள் செயற்பாடுகள் நீண்ட காலத்துக்கு உண்மைகளது திசையில் நிலைக்க முடியாதன்ற இயக்கப்பட்டில் எனது அத்தியாயம் முடிவுக்கு வருகிறது.

எனினும்,அதை புரட்டி மீளவும் என்னை முன் நிறுத்தியே தீருவேனென நான் முயல்கிறேன்.அது ஓரளவுக்கு மேலே என்னை மீளப் பொய்யனெப் பகரப்போகிறது.அது பலதரப்பட்ட தளத்தில் என்னை வலுவாகச் சிதைப்பினும் ஒரு குறிப்பட்ட வட்டத்திலாவது நான் நிலைக்க விரும்புகிறேன்.

அந்த வட்டம் எனக்கு நற்சான்றிதழ் தருவதற்காக எத்தனையோ ஆய்வுகளை கூறப்பட்ட வரிகளுக்குள்ளிருந்து புலனாய்வு செய்வதில் நீதியையும்-நியாயத்தையுங் குறித்து எந்த மனசாட்சியும் எனக்கு இல்லையென மீளப் பகர்வதை நான் உணர்வுரீதியாக ஏற்கமாட்டாது தடுமாறுகிறேன். என்னால் புணரப்படும் நியாயம் என்னைச் சுற்றிய அரசியல் வாழ்வில் என்னையே சவக் குழிக்குள் தள்ளும்போது அதையும் எனக்கேற்ற முறையில் மற்றவர்களுக்கும் பொருத்தி எனது நடாத்தைகளைச் சமூகத்தின் முதுகில் ஏற்றிவைக்கவே ஆசைப்படுகிறேன்!

நான் உண்மையானவனென என்னை நானே உரைத்துப்பார்க்க எனக்கு அவசியமென்ன?

பொய்யனாக இருப்பதில் அறிந்தே தொடரும் எனது உணர்வு நிலைக்குள் என்னை உரைப்பது கடினம்.என்னை நான் உரைக்காத தருணமே என்னை மற்றவர்கள் உரைத்துப் பார்ப்பதில் முடிந்துள்ளதென்றவுண்மையையும் நான் ஏற்க மறுக்கிறேன்!

இந்தப் புள்ளியே எனக்குள் சதா புனைவுகளைச் செய்யத் தூண்டுகிறது.

ஒன்றை மறைப்பதற்கு இன்னொன்றை அரங்குக் எடுத்துவருகிறேன்.அது இதற்குள்ளும்,அதற்குள்ளுமாக வேஷங்கட்டும்போது எனக்கு எந்த வெட்கமுமில்லை!ஏனெனில்,"தில்லு முல்லும் உள்ளமெல்லாம் எனக்குக் கல்லு முள்ளும்." இதுவென் சுயமாகமாறிய எனது சமூகப் பாத்திரமேவின்று எனது இருப்பை அசைக்கிறது.நான் இதிலிருந்து மீண்டுவிட முனைகிறேன்.எனது இருப்பை எப்பாடுபட்டாலுங் காப்பதற்கேற்ற எல்லா வகை அஸ்த்திரங்களையும் உபயோகிக்க எனது படையணிகளுக்கு ஆலோசனை முன் வைக்கிறேன்.அவர்களும் தமது அநுபவத்துக்கேற்ற தெரிவுகளில் அஸ்திரங்களை எய்கின்றனர்.இது,பரவலாக எல்லா நியாயங்களையும் என்னைச் சுற்றி மதிலெழுப்புவதில் மற்றவர்களுக்கும் எனது பணிபோன்றவொன்று இருக்கிறது.அதில் நானே முக்கியமானவனாக இருக்கிறேன் என்பதைச் சொல்லிச் செல்வதையும் கவனமாகக் கவனிப்பதில், நான் எப்போதும்போல செயலூக்கத்தோடு இருக்கிறேன்.இந்தச் செயலூக்கம் ஒரு தியான நிலையாக எனக்குள் பழக்கப்பட்டுவிட்டது.எனவே,நான் எதையிட்டுங் கவலையுறேன்.

இதை மறுத்து,பண்பு ரீதியாக மாற்றம் வர, அளவு ரீதியான மாற்றம் ஏற்பட்டாகவேண்டும்.எனக்குள் இருக்கும் அளவுகோல் மாறாதவரை எனது பண்பில் எந்தக்கொம்பரும் மாற்றங்கோர முடியாது-எந்தெதிரெழுத்தும் எனக்குள்ளிருக்கும் அளவை மாற்றமுடியாது.

ஏனெனில்,எனது வாழ்நிலையே எனது அளவைத் தீர்மானிப்பதால் அது புறத்திலிருந்து என்னக்கதை உருவாக்கி இயக்கிறது.எனது வாழ்நிலை மாறத்துடிக்கும் சமூகத்துக்குக் குறுக்கே நின்று கல்லெறிவதென்றால் அதை யாரால் மாற்றமுடியும்?

என் வாழ்நிலையோடு தீர்மானமாகும் எனது சமூகவுணர்வு எனக்குள் பேசப்படும் புரட்சிகர நடவடிக்கையென்பது என்னளவில் உணர்வுரீதியாக உள்வாங்க முடியாது. ஏனெனில்,நான் புரட்சிகர நடவடிக்கைகளை-முன் நிபந்தனைகளை எனக்குத் தோதாக மாற்றும்-பொருத்தும் தளத்தில் எனது புரிதற்பாட்டைச் சிதைக்கும் எந்தத் தரவையும் அதன் நியாயத்தன்மையில் வைத்து மாற்றி,மாற்றியமைக்கும் எண்ணங்களது தெரிவில் நான் இருப்புக் குறித்துச் சதா இயங்குவது எனது பண்பினது தொடர்.

இதைப் புரியாதவர்கள் எனக்குப் பாடம் நடாத்த முனைந்தால் அது அவர்களது தப்பில்லை.மாறாக, அது அவர்தம் அறியாவுலகம்.

அவ்வளவுதாம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
10.10.2010

No comments: