Sunday, January 30, 2011

தமிழக மீனவர்கள்-சிங்களப்படைத்தாக்குதல் :

தமிழக மீனவர்கள்-சிங்களப்படைத்தாக்குதல் : புரிதலும்,உரிமைகளும்!

நாம் பிரதிகளது தன்னிலைகள் குறித்தும், அதன்மீதான சுயதம்பட்டச் சீரலைச் சிதறல்களிலும் மாட்டுண்டுபோனோம்!உயிர்நிலைக் களன்களில் குதறப்படும் ஏதோவொருகணம் நோக்கிய தன்னிலைக் கோரல்களிலும் எந்தத் தோதானவொரு பொருத்தப்பாடுடைய தேடுதலைத்தானும் பகிர்ந்துகொள்ளத்தானும் எவருக்குமே துப்பில்லை.இருந்தும், பெருங்கதையாடற் புலமையும்,அதன் உள்ளார்ந்த நுட்பநோக்கும் பெருகக்பெற்றதான சுய புலம்பலே சினங்கொள்ளதக்கது.

மனித எச்சங்கள் மீது ஏறி நின்று, நோக்கப்படும் புதியதை நோக்கிய கட்டமைப்புகள் யாவுமே, வாழ்பவர்களக்கும் மண்ணோடு அள்ளுப்பட்டவருக்குமான தொடர்ந்த போராட்டமாகவே நிலைகொள்ளும் புதிய பொருளாதார ஆர்வத்தின்மீதான பொருத்தப்பாட்டைச் சுட்டுவதற்கு மேலாக, இந்த மீனவர் பிரச்சனையானது சாதராணச் சராசரி மீன்பிடி உழைப்பவர்தம் வயிற்றுப்பாட்டுக்கும்,சம்மாட்டி வடிவமாகப் புரிந்து,உணரப்பட்ட பெரு தொழில் வணிகக் கட்டமைப்புடைய தொழில்முறை ஜந்திரப்படகு கட்டும் "பெரு" வணிகத்துக்குமான வர்க்க உழைப்பு நிலைக் களன்கள் பிரத்தியேகமாகவேனும் புரிந்துணரப்படுவேண்டும்.

சாதாரணத்துக்கும்,அசாதாரணத்துக்குமிடையிலான வித்தியாசங்களை இவர்களது உழைப்பின்மீதான"பலம்-பலவீனம்"என்பதை பொருள் வளம்-வறுமைப்பட்ட ஏழை மீனவர்கள் எனும் தளத்தில்வைத்து, அணுகுவதற்கானவொரு புள்ளியைச் சுட்டியிருக்கிறான் மயூரன்.இது பரவலாக உணரப்பட்டதாகினும் அதைப் பேசுவதற்கான சூழல் மறுக்கப்பட்டிருந்த தேசியவாதக் கோரிக்கைகளது தார்ப்பாரில் எல்லாம் பூச்சியமாகக்"கருவாடு கரைந்து ஆணத்துக்க"என வாசிக்கப்பட்டது.இப்போது, இதன் ஆணிவேரைத் தொட முனைதல் வரவேற்கத் தக்கது.கடலுக்குச் செல்பவர்கள்மீதான அத்துமீறிய மறுப்பைக்கொண்டியக்கிய தமிழ்க் கொழும்புசார் வர்த்தகமானது இராணுவத்துக்குக் கப்பஞ்செலுத்தியபடி ஜப்பானிலிருந்து ரின் மீன் இறக்கிக்கொள்ளையடித்த தேசியவிடுதலைப்போர்ச் சூழலொன்றும் பலரால் புரிந்துகொள்ளப்பட்டதே.

பெரு வணிகமானது கப்பல் கட்டி,ஏழை மீனவனது வலையறுத்துக் கடற்கொள்ளையிடுவதைத்"தமிழ் மீனவன்"என்ற பொதுப் பதத்துள் உள்ளிழுத்து விவாதிக்கக் கூடியதாக மாற்றிய அரசியலையும் உடைத்துப்பார்க்க வேண்டும்.

எந்தத் துவித-துருவ எதிர்மறைகளிலுமேனும் இதைவைத்த சொற்பப் புரிதப்படானது குதறப்படும் நலிந்த-விளிம்பு நிலைகளை நோக்கிய பலம்தேடும்,பலமளிக்கும் வரைவுகளைத் தந்துவிடுவதான தேடுதலும்,ஒத்திசைவும் அந்தக் கோரிக்கைகளுக்குள் ஊசாலாடும் வயிற்றுத் தேவைமீதான அடிப்படை உரிமைப் பிரச்சனையாக ஏற்றுக்கொள்ளும் நிலையுள்,கொல்லப்படும் சாதரண தமிழ்நாட்டு மீன்பிடித் தொழிலாளியையும் இந்த அத்துமீறிய வர்த்தகக் காழ்புணர்ச்சி கொல்வதைத்தானும் தட்டிக் கழித்துவிட முடியுமா?

தென் கிழக்காசிய மீன் பிடித் தொழில்மீதான ஜந்திரப்படகு-ரோலர் வைத்துழைக்கும் பெரு மீன்பிடித்தொழிலுக்கும்,சிற்றுழைப்பு வடிவிலான மரபுசார் மீன்பிடித் தோணிக்குமான முரண்பாடுகள்,"வசதிபடைத்த அரசியற் செல்வாக்கு-மாபியாக் கட்டமைப்பு" என்ற தளங்களை அண்மித்துப் பார்க்காத எந்தத் தீர்ப்பும் சாதாரண மீன்பிடித் தொழிலாளிக்கு எதையும் விட்டுவைக்காது.

கடலில் சாகும் தமிழ்நாட்டு மீனவன்,பெரு வணிக-சம்மாட்டிக்குக் கீழ் பணிசெய்பவனாகினும் அந்தச் சாவைப் பெருவணிக ஆதிக்கத்துள் வைத்து அணுகுவதானது அத்தகைய நலிந்த உழைப்பாளியது இருப்பை மறுப்பதில் முடியும்.இந்தச் சிக்கலைப் புரிதலென்பது,இலங்கை-இந்தியக் கடல் எல்லை-உரிமைப் பிரச்சனையுள் வைத்து அரசியலாக்கஞ் செய்வதிலும் பார்க்க, மீன்பிடித் தொழிலுள் ஆதிக்கஞ் செய்யும் பெருவணிக-ரோலர்களது அத்துமீறிய கொள்ளை-மாபியாத் தனம் என வரைந்துகொண்டு,சாதாரண மீனவன் அதுள் தொழிலாளியாக-அடிமையாகப் பணிபுரியும் களத்தை அங்கீகரித்தால்"சாவு"சாதாரண-நலிந்த வர்க்கத்துக்கே நேர்கிறது.இதை மறுத்து ஒதுக்க எந்தத் துவித எதிர்மறைப்(சிங்கள இனவாதம்-தமிழன் இத்தயாதி புரிதல்வகையறா) புரிதலும் கைகொடுக்காது.

சம்மாட்டிகளதும்,அவர்களது எல்லைகடந்த வணிக வட்டத்தினதும்கடல்வளக் கொள்ளைக்கும்,சாதரணக் கரையோர மக்களது அடிப்படை உழைப்பின்மீதான ஆதிக்கத்துக்கும் இடையிலுள்ள இந்தச் சிக்கலானது, சிங்களக் கடற்படையினது மரபுசார்ந்த புரிதலுள்(பங்கு-கமிசன்)ஏற்படும் சிக்கலெனவும் விரிவதை எவரும் புரிந்திருக்க முடியுமாவெனவும் சந்தேகமே!

எனவே,தமிழக மீனவர்களது கொலைகளது அரசியலூக்கம் வெறும் இனவாரியான புரிதலையுந்தாண்டி வர்த்தக நலன்கள்-உழைப்புச் சந்தை,எனவிரியும் முனைகளில் புரிந்துணரப்பட்டுத் தீர்க்க வேண்டிய தேவையைப் பரந்துபட்ட மக்கள் தாம்சார் வலயத்துள் முன்மாதிரியாக அணுகுவதென்பது, அரசியல் கட்சிகளை விலத்திவைத்துப் பெருவணிகத்தின் மாபியாத் தனங்களைப் புரியந்தருணங்களே.அங்ஙனம் செயற்படும்போது இதுள் அரசுக்கும் பெருவணிக-சம்மாட்டி முறைகளுக்கும் உள்ள நீண்ட தொடர்புகள் அந்நியப்படுத்தப்பட்டுப் புரிய வாய்புகளுண்டு.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
30.01.11

1 comment:

filmics said...

உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.Share