Tuesday, January 04, 2011

புலத்து"இடதுசாரிகள்",போதும்-போதும்!

புலத்து"இடதுசாரிகள்",போதும்-போதும்!

லங்கைச் சிறுபான்மை இனங்களின்தேசியத் தன்மைகளைக் குலைக்க முனையும் அரசு-ஆளும்சக்திகள் எமது மக்களில் ஒருசாரர்களை,அவர்களது வர்க்க நலன்களுக்கிணங்கப் பயன்படுத்துகிறது.தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை-தேசிய அபிலாசைகளை தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைகளை அழிப்பதற்கெதிராகப் போராட முனையும் பரந்துபட்ட மக்களது அமைப்பாண்மையைச் சிதைப்பதில் நமது எதிரிகள்பலவடிவில் கூடுகிறார்கள்.நான் இதுவரை புலம்பெயர் சூழலுக்குள் இனங்காணும் அரசிலானது பற்பல கோணத்தில் மிகத் தந்திரமாக இயங்குகிறது. தம்மைத்தாமே உண்மையான மக்கள்சார் அமைப்பாக-குழுவாக முன்னிறுத்திவரும் புலம்பெயர் "இடதுசாரிகள்"அனைவரும் ஏதோவொரு ஆதிக்க நலனுக்குப் பலியாகிவிட்டு மீளவும், நமது மக்களுக்குத் தம்மைத்தாமே மேய்ப்பர்களாக-மக்கள் "விடுதலை" அமைப்பாக இனம் காட்டுவதில் கவனங் குவிக்கின்றனர்.தமது இருப்புக்கும்,தொடர் எஜமான விசுவாசத்துக்காவும் தாம் "அம்பலப்பட்டபோதும்" அதை மறந்து-மறுத்து மக்கள் சார் அரசியலைத் தாம் பேசுவதாக ஏமாற்றுகின்றனர்.


இன்றைய மிகக் கெடுதியான அரசியல் நடாத்தைக்கு இந்தக் குழுக்களே காரணமானவர்கள்!இவர்கள், ஒருபோதுமே ஓய்ந்துபோக விரும்பாதவர்கள்.தமது எஜமானர்களது படியளப்புக்கு விசுவாசமாக இவர்கள் இயங்க முனையும் தளம் பாதிக்கப்பட்ட-யுத்தத்தால் அழிவுக்குட்ட-அரச இனவொடுக்குமுறையால் சிதைந்துபோன தமிழ்பேசும் மக்களது எதிர்காலமாக இருக்கிறது! புலம்பெயர் தளத்தில் இடதுசாரிகள்-முற்போக்குவாதிகள் எனும் போர்வையில் எந்தக் குழுவுரையாட முனைகிறதோ அதைச் செருப்பால் அடித்தாகவேண்டும்.இந்தக் கயவர்கள் தமது குழு நலனுக்கான நிபந்தனையாகத் தொடர்ந்து நமது மக்களது எதிர்கால அரசியலை இல்லாதாக்கப் பல முனை வேடமணிகிறார்கள். இதுள்" இடதுசாரிய" வேடம் இவர்களுக்கெப்பவும் கைகொடுப்பதால் அதையே தொடர்ந்து அணிந்தபடி எல்லாவற்றும் "தீர்ப்பு"எழுதுவதில் தம்மை முற்போக்காளர்களாக்கி, அந்நிய ஆளும் வர்க்கங்களுக்கு நமது மக்களைக் காட்டிக்கொடுக்கிறார்கள்.இந்த "இடதுசாரிய"அராஜகவாதிகள் மிகக்கெடுதியான பிற்போக்கு முகாங்களது தயவிலேயே வாழ்வதென்பது உண்மையானது.எந்தவொரு புலம்பெயர் "இடதுசாரிகளும்-தேசிய,புலி-எலி வாதிகளும்"நம்பிக்கையற்ற கபட மனிதர்கள் என்பதே எனது அறுதியான நம்பிக்கை!இந்த நம்பிக்கையானது இவர்கள்மீது நம்பி ஏமாந்த எனது அநுபவத்தின்வழி ஏற்பட்டதல்ல.மாறாக இவர்களது அரசியற் பாத்திரத்தின்மீதான விமர்சனத்தின் வழி பெறப்பட்டதே!இவர்கள் அனைவரும் நாசகாரச் சக்திகள் என்பதே எனது துணிபு!இவர்களை நம்பி எந்தவொரு அரசியலும் செய்வதென்பது தம்மைத்தாமே தொலைப்பதற்கு ஏதுவானது.

இந்நிலையில், நமக்குள் பற்பல முரண்பாடுகளை அவ்வப்போது செயற்கையாக உருவாக்கி நமது இறைமையைச் சிதைப்பதில் தமிழ் மக்களின் எதிரிகளான இந்தப் புலம்பெயர்"இடதுசாரிகள்" விழிப்பாகவே இருக்கிறார்கள். இத்தகைய எதிரிகளை நாம் வலுவாக முறியடித்தாகவேண்டும்.அதற்கு நம்மிடமிருக்கும் அனைத்து வளங்களையும் நமது புலத்து மக்கள் பயன்படுத்தி,அதை அனைத்துச் சிறுபான்மை இன மக்களுக்குமான விடுதலையைத் தோற்றும் அரசியல் நகர்வாக முன்னெடுப்பதும் காலத்தின் அவசியமாகும்.


நம்மை,நமது வாழ்வைக் கேவலமாக்கும் கும்பல்களாக்க முனையுமிந்த அரசியல் பொறுக்கிகள், அற்ப சலுகைகளுக்காக நமது ஜனநாயக உரிமைகளை-வாழ்வாதார அடிப்படையுரிமைகளை, அந்நிய நாடுகளின் அரசியல்-பொருளியல் நலன்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் பொறிமுறைகளை "புரட்சிகர"கட்சிகள்-அமைப்புகள்,ஜனநாயகமெனும்போர்வையில் செய்து முடிக்கத் தயாராகியபடி. இவர்களே தனிநபர் துதிபாடி,கேவலமான பாசிஷ்டுக்களை(...) தமிழரின் பிரமுகர்களாகவும்- தலைவர்களாகவும்,மகாமேதைகளாகவும் ஒளிவட்டம் கட்டுகிறார்கள். இந்த வேலையில் தமிழரங்க வாசக வட்டமென்ற போர்வையில் இரஜாகரனது தளத்தில் கீறும் "அவர்களது" கைகளே"எங்கப்பன் குதிருக்குள் இல்லை"என்று அம்பலப்பட்டுப்போகிறது!

இவர்கள் எவருமே மக்களின் நலனுக்கான ஜனநாயக விழுமியத்துக்காகக் குரலிடவுமில்லை,போராடவுமில்லை.இவர்களிடம் பணப்பலமுண்டு.இதன்மூலம் நம்மைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வெறும் கொத்தடிமைகளாக்கும் அரசியலை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள். இவர்கள் கூறும் ஜனநாயம்-பாசிசத்துக்கு எதிரான"சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு ஆதரவு" என்பதெல்லாம் வெறும் ப+ச்சுற்றலாகும்.

ஒன்றுக்கொன்று மாறுபட்ட குதர்க்க அரசியல் மோடி வித்தையை "இராஜாகரன்"பெயரில் எழுதும் பல முகமூடி மர்ம மனிதர்கள் செய்துவருகின்றனர்.இதேபோன்ற இன்னொரு முகமாக,ஏலவே அம்பலப்பட்டுப்போன ஞானம்-தலித்துவ அமைப்புத் தேவதாசன்குழு,இலங்கை ஜனநாயகவொன்றிய இராகவன் குழு,சோபா சக்தி வட்டமென எல்லாவிதமான சர்ச்சைக் குரிய நபர்களும் மக்களது அரசியலைக் கையிலெடுத்துத் தமது இருப்பு நோக்கிக் கூடுகிறார்கள். இரஜாகரனுக்கோ "எதிரியின் எதிரி நண்பனென" எவரையும்-எதற்காவும் "ஆதரிக்கவும்-எதிர்க்கவும்" முடிகிறது. இப்படியொரு இழி அரசியலைச் செய்வதைவிடத் தூக்குப்போட்டுத் தொங்குவது மேலாக இருக்கும் என்று எப்பவுஞ் சொல்வேன்!

புலத்திலுள்ள மக்களைச் சுயவெழிச்சுக்குள் தள்ளி, அவர்களால் போராட்டத்தை முன்னெடுக்கத் தடையாகவுள்ள ஒவ்வொரு நாளியும் நமக்கு ஆபத்தே!புலத்து மக்கள் சுயமாகச் சிந்திக்க விடாது தடுத்துவருபவர்கள் மக்களின் விரோதிகள் என்பது எனது நிலைப்பாடாகவே இருக்கிறது.

இன்றோ இந்தக் கேடுகெட்ட"போலி இடதுசாரிய"மாபியாக்களிடமும்,ஓட்டுக்கட்சிப் பாராளுமன்றப் பாசிஸ்டுக்களிடமும் மாட்டப்பட்டிருக்கும் தமிழ்,முஸ்லீம் மக்களின் அரசியல் எதிர்காலமானது தத் தமது அரசியல்-பொருளியல் அபிலாசைகளோடு தனித்துவமான தேசிய முன்மொழிவுகளைக் கோரிக் கொண்டே இருக்கப் போகிறது. எனினும்,இந்த முன் மொழிவுகள் இனத்துவ அடையாளத்தை மையப்படுத்திய பேரெழிச்சியாக மாறாத வகையில் இலங்கை-இந்திய,சீனச் சதி அரசியல் நிலவரம் செறிவேற்றப்படுகிறது. இந்தச் செறிவேற்றலைச் செய்து முடிக்கும் இனவொடுக்குமுறையானது அப்பாவி மக்களை அழித்துத் துவசம் செய்யும்போது அங்கே அவர்களின் அத்துமீறிய வன்முறைகளை இந்தப் "போலி இடதுசாரிய" மற்றும் ஓட்டுக்கட்சிப் பாராளுமன்றப் பாசிஸ்டுகள் தமக்கேற்றபடி தகவமைத்து மக்களுக்குள் பரிசீலீத்துவருகிறார்கள்.சமீபத்தில் யாழ்மாவட்டத்தில் இடம்பெறும் இத்தகைய தாக்குதல்கள் ஒரு பரீட்சார்த்தமாகும்.

பண்டுதொட்டுத் தமிழ்பேசும்மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள்.ஆயுத முனையிலும்,கருத்தியல் முனையிலும் அவர்களின் உரிமைகள் ஏலம் விடப்படுகிறது.இந்த ஈனத்தனத்தை எல்லாக் குழுக்களும்-தனிநபர் பயங்கரவாதிகளும் திறம்படச் செய்துமுடிக்கிறார்கள்.இந்த மோசமான சூழலில் இத்தகைய மனிதவிரோதிகள் யாவருமே மக்கள் நலன்சார்ந்தவர்களாகத் தம்மை முன்நிறுத்தியபடி மக்களை வேட்டையாடுவதே பெரும் பயரகமானதாக இருக்கிறது.ஒரு இனவாதப் பாசிச அரசு இதன் மூலம் காப்பாற்றப்பட்டு, அது மக்கள் நல ஜனநாயக அரசெனும் படியை முன்னகர்த்திச் செல்வதே இதன்மூலம் சாத்தியமாகி வருகிறது.இது, சாதுரியமாக புலம்-நிலமென விரிகிறது.

தமிழரங்கமோ அல்லது மற்றைய அரச அனுதாபிகளோ"சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு"ஆதரவாகப் பைத்தியகாரத்தனமாகக் கருத்தாடி, நம்மக்களைக் கேவலமாகச் சுரண்டிக்கொள்ள முனைதல், மிகக் கேவலமானதாகும். தமிழரின் குருதியில் கும்மாளமடித்த காலங்களையெல்லாம் மறந்து- அவர்தம் கொஞ்சநஞ்ச அரசியல்-வாழ்வாதாரவலுவையும் தங்கள் தேவைக்கேற்றவாறு "அரசியல்"ஆக்கி,அதுள் தமது இருப்புகளைக் காக்க முனைதலென்பது மிகக் கெடுதியானது.இவர்களை இனங்காணுதலென்பது "நான் சொல்லியோ-எழுதியோ" அல்ல.மாறாக, இவர்களது அரசியல் நடாத்தையையும்,இவர்தம் செயற்பாட்டையும் இதுவரையான காலவோட்டுத்துள் சீர் தூக்கிப் பார்த்தும்,இதுள் எந்தப் பொழுதில் எவரை "எதிர்த்து-ஆதரித்து" இவர்கள் அரசியல் செய்வதென்பதை நோக்கியே இதைச் செய்தாகவேண்டும்-இனம் காணவேண்டுமெனச் சொல்வேன்!

எமது மக்களது வாழ்வு, பலவகைகளிலும் நாசமாக்கப்பட்டு,மனிதவுரிமைகளற்ற காட்டுமிராண்டித்தனமான சூழலிலெமது மக்களின்று வாழும்போது, அன்று,சிங்கள அரசின் அத்துமீறிய யுத்தங்கள் கிழக்கிலும் வடக்கிலும் அவர்களைக் காவுகொண்டு-அவர்தம் சமூகவாழ்வையே சின்னாபின்னாமாக்கியது.இந்த இருள்சூழ்ந்த அவலத்தை மறைத்து, இத்தகைய யுத்தம் புலிகளை-புலிகளின் பயங்கரவாதத்துக்கெதிரானதாகக் காட்டி உலகத்தை ஏய்த புலம்பெயர் தமிழ்குழுக்கள்-கட்சிகள் இந்தியாவின் எலும்புத்துண்டுக்காக நமது மக்களின் எதிர்காலத்தோடு தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காகப் பொறுக்கித்தனமாக அரசியல் செய்யும் இன்றைய சூழலாக இந்த "சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு" எமக்கு முன் விரிகிறது!இதைப் பாசிசத்துக்கு எதிரான நகர்வாகச் சொல்லும் இராஜகரனது அரசியல் இருப்பே இன்று இந்தப் போலிகளை "ஜனநாயகத்துக்கான செயற்பாட்டாளர்களாக்கி" ஆதரிப்பதால்மட்டும் சாத்தியமாகிறது! மாநாட்டை ஆதரிப்பதென்பது புலி எதிர்ப்பாகிறதாம்!புலியோ செத்துச் சிதைந்து எங்கோவொரு மூலையில் வர்த்தகஞ் செய்கிறபோதும் புலியே இவர்களுக்குப் பெரிய சக்தியாகவும்-முரண்பாடாகவும் இருக்கு!

ஈழப் போராட்டம்- போராட்டத்துக்குப் பின்பான அரசியல் மக்களின் இருப்பிடங்களை விட்டுத்துரத்தியடித்தபோது,அவர்களின் வாழ்வாதாரத்தச் சொத்தைத் திருடிக் குவித்துள்ள செல்வங்களும் அதிகாரங்களும் அதனூடாகப் பெறப்பட்ட-பெறப்படும் பதவிகளும் புலியெதிர்ப்பு முகாமெனக் கூறப்படும் சிங்கள அரசின் அடிவருடிகளிடம் பாரிய அதிகாரச் சுவையை நாக்கில் வீணியூறும் படியாக ஆசையாக்கி விட்டுள்ளது.இதன்வாயிலாகவெழும் அற்ப விருப்புகள் மக்களின் உரிமைகளையே பாசிச அதிகார மையங்களுக்கு அடகு வைத்துத் தமது நலனை அடைவதில் குறியாகவுள்ளது.இத்தகைய சூழலில்தாம் இன்று பற்பல புலம் பெயர் "இடதுசாரி-ஜனநாயக"மாபியாக்கள்இந்தச் சூழலில் தமது பங்கைக் குறித்து இயங்குகிறார்கள்.இவர்கள் போடும் பாசிசத்துக்கு எதிரான எழுத்தாளர் இயக்கம்-ஊக்கம் என்பதெல்லாம் தமது அம்பலப்பட்டுப்போன திசைவழியைத் தட்டிவைத்து மறைத்துக்கட்டி மக்களை ஏமாற்றிப் பிழைப்பதே!


இந்த இழி அரசியல்சூழலுக்குள் சிக்குண்ட புலத்து-நிலத்து மக்கள் தம் எதிர்காலத்தை இராணுவப் பாசிசவொடுக்குமுறைக்கு,ஆயுதக் குழக்களின் அராஜகத்துக்கு இரையாக்கி வருகிறார்கள். மக்களின் உயிருடன் விளையாடும் அதிகாரத்துவத்துக்கான போராட்டங்களால் ஆளும் வர்க்கங்கள் தத்தமது நலனைக்காத்துவரும் இந்த "மக்கள் விரோத அரசியலை" எங்ஙனம் முறியடிப்பது?


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
04.01.2011

No comments: