Tuesday, December 04, 2007

இலங்கை அரசின் அரச பயங்கரவாதமானது...

கொலைகளும்,அதைக்காரணமாக்கிய இராஜ தந்திருங்களும் அந்த இராஜ தந்திரத்தால் முன்னெடுக்கப்படும் மக்கள் விரோத யுத்தங்களும் ஈழத்தமிழ்பேசும் மக்களை உயிர்திருப்பதற்கான சாத்தியப்பாட்டிலிருந்து மெல்ல மெல்லப் பெயர்த்தெடுத்து கொலைக் களத்துக்குள் தள்ளி விடுகிறது. இதனால், இந்தச் சமுதாயத்தின் இருப்பை அசைத்துவிட முனையும் இனவாத அரசியலிலிருந்து, தமிழ் பேசும் மக்கள் விடுதலையடைதலென்பது மீளவும் பகற்கனவாகிறது.

சிங்களப் பாசிச அரசின் இன்றைய அடக்குமுறைப் போர்- அரசியல் நடவடிக்கைகளும்,புலிகளின் தாக்குதல்களும் தமிழ்பேசும் மக்களைக் காவுகொள்ளும் தந்திரத்தோடு நகர்கிறது.இங்கு தேசத்தின் விடுதலையென்பதற்கான அடிப்படைக் காரணமே மெலினப்பட்டுப்போகிறது.தேசமென்பதற்கான இருப்பே மக்களின் இடப் பெயர்வு-அழிவோடு இல்லாமற் செய்யும் பொறிமுறையோடு இந்திய-இலங்கைத் தந்திரங்கள் புலிகளை-மக்களை அண்மிக்கின்றன.

புலிகள் தமது இயக்க நலனுக்கான போரை முன்னெடுக்கும்போது சிங்கள அரசோ தமிழ் மக்களுக்கான "ஜனநாயகத்தை"க் கோரும் போராட்டத்தைத் தனது நலனோடு சேர்த்துத் தந்திர மாகப் புலிகளை-தமிழர்களை வென்று வருகிறது!இதற்கான சகல வழிகளிலும் தமிழ் மக்களுக்குள்ளிருக்கும் மாற்றுச் சக்திகளின் அனைத்து வளங்களையும் இலங்கை-இந்திய அரசியல் பயன் படுத்தி வருகிறது.தமிழ் மக்களுக்குள் இருக்கும் இத்தகைய சக்திகளைப் பயன்படுத்தித் தமிழ் மக்களின் தேசிய விடுதலையைச் சாதிக்க வக்கற்ற புலிகளால் சகல குறுங்குழுச் சக்திகளும் புலிகளுக்கு எதிரான சக்திகளாக மாற்றப்பட்டுள்ளார்கள்.


தமது இனத்துக்குள் ஜனநாயகப் பண்பை மறுக்கும் புலிகளால் இத்தகைய நேச சக்திகள் அன்னியமாகிப் போகிறார்கள்.புலிகள் தமது இருப்பை இத்தகைய சக்திகள் அசைத்துவிடுமெனக் கருதுவதுகூட பாசிச முனைப்பின் நோய்க்கூறுதான்.இதனால் இலங்கை அரசின் அரச பயங்கரவாதமானது தமிழ் மக்களை நோக்கியல்ல மாறாகப் "புலிப் பயங்கர வாதத்துக்கு" எதிரானதாகச் சித்தரிக்கும் நிலைக்கு சிங்களப் பாசிச அரசின் அடக்குமுறைப் போர் தயாராகிறது.


இலங்கை அரசோடு முன்னமே தமது பதவி நலனுக்காகச் சோரம் போன தமிழ்க் குழுக்கள் இன்றைக்குப் "புலிகளின் பயங்கரவாத" முனைப்பைச் சரியாகப் பயன்படுத்துவதால் அந்த இராஜதந்திரத்துக்குப் பலியாவது உண்மையான மாற்றுச் சக்திகளே.இவர்கள் புலிகளின் ஜனநாயக விரோதத்தை முதன்மைப்படுத்தும் நிலைக்குப் புலிகளின் நடவடிக்கைகள் தலைகால் தெரியாது தாண்டவமாடுவதால் எமது நிரந்தர எதிரியான ஆளும் சிங்களச் சியோனிச அரசு தமிழரின் முதன்மையான எதிரியெனும் நிலையை இழந்து தற்காலிகமாகத் தன்னை மறைக்கின்றது.இதனால் மாற்றுச் சக்திகள் புலிகளை வீழ்த்துவதே முதன்மையான பணியாகச் செயற்படும்போது இது இந்திய-இலங்கை அரசுகளின் நீண்ட நாள் திட்டத்தை வலுவாக்கிவிடுகிறது.


அப்பாவி மக்களைத் தமிழ்பேசும் மக்களென்ற ஒரே காரணத்துக்காக முன்றாம்தர மக்களாக அடக்கியொடுக்கிய இலங்கைச் சிங்கள அரசோ இன்று எமது மக்களின் ஜனநாயவுரிமைக்காகப் போராடுவதாக உலக அரங்கில் பரப்புரை செய்கிறது.இதன் உச்சக்கட்டமாகப் புலிகளின் ஜனநாயக மறுப்பு போராட்டத்துக்கு ஏற்ற கோசமாகவும் மாறுகிறது.இதன் செயற்பாடானது தமிழ்மக்களின் நேச சக்திகளை(மாற்றுக் கருத்தாளர்கள்,மாற்று இனங்கள்) இன்னும் அன்னியப்படுத்தி இலங்கையின் அரச பொறிக்குள் வீழ்த்தித் தமிழர்களின் உரிமைகளுக்கு எதிரான தளத்தில் அவர்களை நிறுத்துகிறது.

இத்தகைய சூழலைத் திட்டமிட்டு ஏற்படுத்திய இலங்கையின் அரச தந்திரமானது மிக நேர்த்தியாகத் தமிழரின் அரசியல் வாழ்வைப் படுகுழியில் தள்ளித் தமிழ்பேசும் மக்களை மீள முடியாத அரசியல் வறுமைக்குள் இட்டுள்ளது.


இந்த இராஜ தந்திமானது தமிழ்பேசும் மக்களின் அனைத்து வளங்களையும் நிர்மூலமாக்கும் பாரிய அழிப்பு அரசியலை முன்னெடுப்பதாக இருக்கிறது.இதன் உள்ளார்ந்த நடவடிக்கையாக அரசியற் கொலைகள் தாராளமாக நடைபெறுகிறது.இதைப் புலியின்பெயரால் செய்யக்கூடிய நிலையில் இலங்கை அரசியல் உள்ளது.மிக மூர்க்கமாக வான் தாக்குதல் மூலமாக மக்களைப்படாதபாடு படுத்தி அவர்களைப் போராட்ட உணர்விலிருந்து அன்னியப்படுத்துகிறது-அவர்களின் உயிர்களைக் கொன்று,வாழ்விடங்களை நிர்மூலமாக்கித் தாங்கொணாத் துன்பத்தைக் கட்டவிழ்து விடுகிறது.இது புலிகளின் அரசியல் திறமையற்ற போருக்கும்,பாசிச நடவடிக்கைகளுக்கும் கிடைத்த பாரிய அரசியல் பின்னடைவு.

இந்தப் பின்னடைவுக்குப் பின்பான காலம் தமிழ்பேசும் மக்களின் குறைந்த பட்ச ஜனநாயகக் கோரிக்கைகளுக்காக அரசியல் செய்யும் தலைமைகளை வலுவாக்கும்போது நமது உண்மையான சுயநிர்ணயக் கோரிக்கை,அதன் வாயிலான அரசியல் வாழ்வு கானல் நீராகப் போவதுதான் உண்மை.


இதனால் புலிகளுக்கு எதுவித நட்டமுமில்லை.

அவர்கள் தம்மிடம் ஒதுங்கிய பாரிய சொத்துக்களை-தமது பினாமிகளுடாக வெளிநாடுகளில் நிதியிட்டு நடாத்தப்படும் பெரு தொழிலகங்களோடு முதலீடு செய்து தப்பித்துக் கொள்வார்கள்,ஆனால், தமிழினத்தின் அரசியல் வாழ்வானது அதே இனவொடுக்குமுறை அரசியலாகவே இலங்கையரசால் முன்னெடுக்கப்பட்டு இந்த மக்கள் காணாமற்போவார்கள்.

இதை சமீப காலமாக நடைபெறும் கொலைகள் மூலம் நாம் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.இனிவரும் யுத்தம் தமிழ் பேசும் மக்களுக்கான விடிவைத் தருவதற்கானதாக இருக்கப் போவதில்லை.


இது தமிழ் பேசும் மக்களின் உண்மாயான சுயநிர்ணயப் போரைத் தமது இயக்க-வர்க்க நலனுக்காகக் கையிலெடுத்துத் தமிழரின் அப்பாவிக் குழந்தைகளைப் படையணியாக்கிய புலிகளுக்கும், அவர்களின் எஜமானர்களுக்குமான பேரத்தில் நமது மக்களின் குழந்தைகளை இழப்பதாகவும் அந்த இழப்பில் அடைய முனையும் அரசியல் "தீர்வு" எழிச்சியடைய முனையும் தமிழ் பேசும் உழைக்கும் வர்க்கத்தைப் வேரோடு பிடுங்கி எறியும் அரசியலைக் கொண்டிருப்பதற்கானவொரு படையணியாக்வும்-அதிகாரத்தைக் கைப்பற்றிய சக்தியாகவும் புலித் தலைமையை விட்டுவைக்க முனையலாம்.

கருணாநந்தன் பரமுவேலன்.

Saturday, December 01, 2007

இது சாணக்கியன் எனும்...

பாரீஸ் ஞானம் சொல்கிறார்:கிழக்கைக் கிழக்காக இருக்க விடுங்கள்!



"இது சாணக்கியன் எனும்
கெளடில்யனின் அரசியல்
தந்திர நெறிக்குட்பட்டதாகும்."

வணக்கம் வாசகர்களே,திரு.ஞானம் குறித்துரைக்கும் யாழ் மேலாதிக்கம் மற்றும் பிரதேசரீதீயான முரண்பாடானது சாரம்சத்தில் மிகவும் நிதர்சனமான உண்மையிலிருந்து குறித்துரைக்கப் படுகிறதென்றே நாமும் கருதுகிறோம்.கடந்தகாலத்தில் ஓட்டுக்கட்சி அரசியலில் தமிழர் விடுதலைக்கூட்டணிபோன்ற கட்சி கிழக்குமாகாண எம்.பி. இராசதுரைக்குச் செய்த குழிப்பறிப்புகளும் இதை உறுதிப்படுத்துகின்றன.இதைக் கடந்து,தமிழ் பிரதேசங்களை இலங்கை அரசியலில் வரலாற்றுரீதியாக ஆய்வுக்குட்படுத்த முனையும் ஒரு அரசியல்-பொருளியல் மாணவருக்கு மிக முக்கியமாக உண்மையாகும் இந்தச் சங்கதி எல்லோராலும் ஏற்கப்படவேண்டியது.இந்தப் பிரதேசரீதியான மேலாதிக்க மற்றும் அரசியலில் இரண்டாந்தரப்படுத்தும் போக்கை காலனித்துவத்துக்குப் பின்பு நவகாலனித்துவப் பொருளாதார ஆர்வங்களால்மிக நுணுக்காகக் கவனித்தவர்கள் அமெரிக்காவும்,இந்தியாவுமே.


கிழக்குமாகணத்தைக் கூறு போட்டுத் தமிழர்களைப் பிரித்தெடுத்துத் தனது நோக்கத்தை நிறைவுப்படுத்துவதற்காகவே செல்வநாயகத்தின் தலைமையில் கூட்டணி ஓட்டுக்கட்சியை அமெரிக்க ஏகாதிபத்தியம் நிதியளித்துக்காத்து வந்தது.இத்தகைய கட்சியின் செயற்பாடு இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாடு எந்தப் பொழுதிலும் தீர்ந்துவிடக்கூடாதென்பதில் அன்று மிகக் கவனமாகச் செயற்பட்டது.அதன் பாரம்பரியக் காட்டிக் கொடுத்தல்,குழிப்பறிப்புகளின் நீட்சி இன்றைய ஆனந்தசங்கரியாக நீள்கிறது.அன்று சிங்களக் கட்சிகளோடு செய்த ஒப்பந்தங்கள் முரண்பாடுகள் பின்பு அதையே சாட்டுவைத்து அவற்றைச் செயற்படுத்த முடியாத இனவாதச் செயற்பாடுகள்,மற்றும் தமிழ் பேசும் மக்களுக்குள் மிகக் கேவலமாகப் பிரதேசவாத ஒடுக்குமுறை,சாதிய மற்றும் பெண்ணடிமைத்தனத்தையும் மிக நேர்த்தியாக ஊன்றியபடி அந்நியர்களின் கட்டளைகளையேற்று நம்மைக் கழுத்தறுத்த வரலாறு உண்மையானதாகும். இதை; தொடர்ந்து இருத்தி வைப்பதற்காக இன்றுவரையும் இலங்கை அரசியலில் அமெரிக்கா மிகக் கவனமாகச் செயற்படுகிறது.இத்தகைய பார்வை அதன் வெளியுலக நீண்டகால நலன்களின் அடிப்படையிலானது.


அவ்வகையில் இந்தியாவினது பார்வையும் இத்தகையதே. ஆனால், அது தமிழ்பேசும் மக்களின் பிரச்சனையுள் மிக நெருங்கிய உறவுடைய நாடான இந்தியாவின் கபடத்தனமான பொருளாதார ஆர்வங்கள் இலங்கையைக் கூறுபோட்டுக் காரியமாற்றுவதல்ல.மாறாக, இனங்களின் -பிரதேசங்களின் முரண்பாடுகளைக்கூர்மைப்படுத்தி அந்தந்த இனத்தின் வீரியத்தை-படைப்பாற்றலை முழுமையாக அழித்து அந்தத் தேசத்தை முழுமையான தனது அரசியல் ஆதிக்கத்துக்குள் நிலைப்படுத்துவதே அதன் நோக்கமாகும்.இது சாணக்கியன் எனும் கெளடில்யனின் அரசியல் தந்திர நெறிக்குட்பட்டதாகும்.இந்தியாவின் மிக நெருங்கிய பாதுகாப்பு அரண்களில் ஒன்று இலங்கை என்பது சாணிக்கியனின் அரசியல் தந்திரத்தில் இருந்து நாம் இனம் காணத்தக்கதாகும்.


"சுடுசோற்றை மத்தியில் இருந்து அள்ளியுண்ணாது அதன் கரையிலிருந்து அள்ளித் திணிக்கும்போதே அனைத்தையும் உண்ண முடியுமெனுங்" கருத்து மிக எளியவகைச் சாணாக்கியனின் போராட்ட நெறியில் ஒன்று.


இன்று இந்தியாவுஞ் சரி அல்லது புலிகளுஞ்சரி கையாளும் இராஜ தந்திரம் சாணாக்கியன் வழிப்பட்டதாகும்.


இதுவரை நடக்கும் இலங்கை இனப் போராட்டத்தில் நடைபெறும் அரச தந்திரங்கள்-போராட்ட நெறிகள் யாவும் பாசிசப் போக்குடைய சாணி¡க்கியன் வழிப்பட்டதாகும்.இதை மிக இலகுவாகச் செயற்படுத்தும் இந்தியாவே நமது மக்களின் வாழ்வோடு மிகக் கேவலமாக யுத்தம் மற்றும் மனித விரோத அரசியலைக் கட்டி வளர்த்துவருகிறது.இதற்காக அமெரிக்காவும் மேற்குலகமும் ஒரு புறமும்,இந்தியாவும்,சீனாவும் ஒரு புறமாகக் காய் நகர்த்தி எமது தேசத்தை அந்நிய நலன்களின் வேட்டைக் காடாக்கியுள்ளது.


இதில் மக்களின் நலனை முன்னெடுப்பதாகச் சொல்லும் அந்நிய என்.ஜ:ஓ.க்கள் முதல் சிறு மற்றும் பெரும் ஆயுதக் குழுக்கள் அரசியல் நடுநிலைச் சிந்தனையாளர்கள் இணைத்தலைமை நாடுகள்,சமதானத்துக்கான பேச்சுவார்த்தையில் அனுசாரணையாளர்களெனுங் காட்டுமிராண்டிகள் என்று பற்பல முகமூடிகளில் இந்த நலன்கள் முன்னெடுக்கப் படுகின்றன.
பிரதேச முரண்பாடானது தனியே ஒரு முரண்பாடல்ல.இது தொழிலாளர்களுக்கும் பெரு மூலதன மற்றும் தரகு முதலாளியத்துக்குமான முரண்பாடாகவே மேலெழுகிறது.மக்கள் வாழும் பிரதேசங்களில் நிலவும் பொருளாதார-வேலைவாய்ப்பு ஏற்றதாழ்வான நிலைகளிலிருந்து மேலெழும் சிறப்பான அம்சங்கள் முரண்பாடுகளாக மாற்றப்படும்போது அவை பெண்ணடிமைத்தனமாகவும்,சாதிய ஒடுக்கு முறையாகவும்,பிரதேசவாதமாகவும் மக்கள் சமூகத்தில் மேலெழுகிறது.


இந்த முரண்பாடுகளை மிக நேர்த்தியாக நிலைப்படுத்தி அவைகளைக் கையகப்படுத்தி அவற்றினூடாக அழிப்பு அரசியலையாற்றும் இந்தியாவும் உலக ஏகாதிபத்தியங்களும் இன்றைய இந்த முரண்பாடுகளைத் தமக்குச் சாதகமாகவே பயன்படுத்துகின்றன.இவற்றைக் களைவதற்காகக் காரியமாற்றுவதாகவும்,சாசுபணம் உதவுவதாகவும்,பொருளாதார மேம்பாட்டுக்கான வழிமுறைகளைச் செய்வதுமாக மக்கள் அரங்குக்குள் நுழையும் இத்தகைய சக்திகள் தம்மை அரசுசார நிறுவனங்களாகக் காட்டுவதற்காக நமக்குள் இருக்கும் புத்தி ஜீவிகளைப் பயன்படுத்தவும் தவறவில்லை.இதிலிருந்து நாம் கற்றுக்கொள்வதென்ன?


நம்மைக் கருவறுக்க நமக்குள்ளேயே முரண்பாடுகளை வளர்த்து அவற்றைத் தமது அரசியல் அறுவடைக்காகக் காரியமாற்ற அந்நியர்கள் நமது மக்கள்சார்ந்து இயங்கும் அரசியலை அழித்துள்ளார்கள்.இதனால் நமக்குள் நிலவும் இத்தகைய முரண்பாடுகளைக்கூர்மைப் படுத்துகிறார்கள்.இதன் வாயிலாக நமது மக்களின் ஒருமைப்பாட்டைக் குலைத்துத் தனிமைப்படுத்தித் தம்மைப் பலப்படுத்துகிறார்கள்.இதன் வாயிலாக அதிகாரமையங்களைத் தமது அரசியல் நட்பு சக்திகளாக்கி இலங்கை மக்களின் முதுகில் குத்தி வேட்டையாட ஒரு புலியும் ஆயிரம் சிறுகுழுக்களும்-சிங்கள மக்களை ஏய்த்து அவர்களின் வயிற்றிலடிக்க ஒரு ஜே.வி.பீயும்,இரண்டு பெரும் ஓட்டுக்கட்சிகளும் ஓராயிரம் இனவாதக் கட்சிகளுமாக வளர்த்துத் தமிழர்களின்-மலையகத் தமிழ்மக்களின்,இஸ்லாமியர்களின் உரிமைகளைக் குதறி இலங்கையின் சுய வளர்ச்சியை முடக்கி அதன் அரசியலை மிக இழிவான பாசிச நிலைக்குள் இருத்திவைத்து மக்களின் சகல படைப்பாற்றலையும் கட்டுப்படுத்தித் தமது பொருள்களையும்,அத்தகைய பொருள்களை உற்பத்தி செய்யும் கூலிகளையும் இலங்கையில் பெற்றுக்கொண்டு கூடவே நீண்ட கால நோக்கில் இலங்கையைத் தமது இராணுவக் கேந்திரப் பாதுகாப்பாக்கு அரண் ஆக்குவதில் வெற்றீயீட்டி வருகிறது ஏகாதிபத்தியங்கள்.


இங்கே ஞானம் கொண்டிருக்கும் கருத்துக்கள்,முன் வைக்கும் வாதங்கள் இத்தகைய அரசியல் சூழ்ச்சிகளைப் புறந்தள்ள முடியாது.புலிகளினதும் மற்றும் ஆயுதக்குழுக்களினதும் அரசியலானது எப்பவும் உலக ஒடுக்கு முறையாளர்களோடு தொடர்புடையது.அவர்களினால் வளர்த்து நிதியளித்து வழிகாட்டப்படும் அரசியல் நெறியில் இப்போது ஞானம் முன்வைக்கும் இந்த வாதங்களும் அதுள் மையப்பட்ட அரசியலின் நீட்சியாக இருக்க முடியாது.எனவே,இதை மிக இலகுவாக இனம் கண்டு,தமிழ்பேசும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் அரசியல் இவற்றை நிவர்த்தி செய்யும் போராட்ட வியூகத்தையும் அரசியல் முன்னெடுப்பையும் செய்தாக வேண்டும்.
இன்றைய நிலையில் ஞானத்துக்கும் கருணாவுக்கும் உள்ள கருத்தியல் ஒற்றுமைகளின்(இத்தகைய கருத்தியலானது கிழக்கு மாகாணத்தின் உண்மையான சமூகப் பொருளாதார முரண்பாடுகளாகும்.இதைக் கருணா அந்நியர்களோடு பேரஞ் செய்து தனது மக்களை ஏமாற்றித் தனது வாழ்வை வளப்படுத்தியது வரலாறு.இது இந்தியாவின் பெரும் சூழ்ச்சிகளின் வியூகத்தில் ஒன்று.) நீட்சியாக ஞானத்தின்மீது வைக்கப்படும் குற்றச் சாட்டுக்களுக்காக ஞானம் தன்வரையில் நியாயமாகக் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.இதில் அவரது நாணயமே மக்களின் நம்பகத்தன்மையை வளர்த்துச் செல்லும்.மக்கள் சகலதையும் இழந்து உயிர்வாழ்வதற்கே போராடி வரும் இன்றைய வாழ் சூழலில் அவர்களின் உரிமைகளை அடைவு வைத்து எவரும் தமது அரசியல்-மற்றும் தனிப்பட்ட வாழ்வை வளப்படுத்த முடியாது.அங்ஙனம் ஆற்ற முனையும் இயக்கம்-கட்சி,தனி நபர்கள் மக்களின் எதிரிகள்,இத்தகைய சமூக விரோத அரசியலைத் தொடர்ந்து முன்னெடுக்கும் தரணத்தில் மக்களே இத்தகைய அரசியலைத் தோற்கடிப்பார்கள்.


கீழ்காணும் ஞானத்தின் தன் நிலை விளக்கப் பேட்டியை தேசம் இணையச் சஞ்சிகையின் ஆசிரியர் திரு.ஜெயபாலன் கண்டிருக்கிறார்.ஞானத்தின்மீதான குற்றச் சாட்டுக்களை வாசகர்கள் ஓரளவு புரிந்துகொள்ளவும்,அவர் கொண்டிருக்கும் அரசியலானது "தமிழீழத் தேசியப் பேராட்டம்" தந்த இன்றைய மக்கள் விரோத அரசியலின் விருத்தியென்பதும் கூடவே வரலாற்று ரீதியாகத் தமிழ்ப் பிரதேசங்களில் நிலவிய பொருளாதார ஏற்ற தாழ்வுகளின் அறுவடை என்பதையும் நாம் கவனத்தில் இருத்தியாக வேண்டும் என்பதற்காவும் நாம் மீள்பதிவிடுகிறோம்.


தேசம் சஞ்சிகைக்கு நமது நன்றி.ஞானத்தின் அரசியலில் நமக்கு உடன்பாடு கிஞ்சித்தும் கிடையாது.நாம் இலங்கையில் வாழும் மக்களினது முரண்பாடுகளுக்கு-இனங்களுக்கிடையிலான இன முரண்பாட்டிற்கு இலங்கையில் புரட்சிகரமான முறையில் பூர்ச்சுவா அரசைத் தூக்கியெறிந்து அதன் இடத்தில் தொழிலாள வர்க்கச் சர்வதிகாரத்தை நிறுவி வர்க்கப் பிரிவினையழிந்த மக்கள் சமுதாயத்தைக் காணவே முற்படுகிறோம்.இதுவே இலங்கையில் சாத்தியமான தீர்வாகவும்,வென்றெடுக்கக்கூடியதான போராட்டச் செல் நெறியாகும்.இதைக்கடந்து"தமிழீழம்"என்பது தமிழ்ச் சமுதாயத்திலுள்ள ஆளும் வர்க்கத்தின் நலனுக்கான கோசமென்பதும்,அது ஒருபோதும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் தகமையைக் கொண்டிருக்க முடியாதென்பதும்,புலிகள் பேசும்-செய்யும் போராட்டச் செல் நெறியில் தமிழீழம் எப்போதும் கானல் நீரென்பதற்கு நமது 30 ஆண்டுகளான போராட்டத்தின் இன்றைய அறுவடையே சாட்சி.


தோழமையுடன்,

கருணாநந்தன் பரமுவேலன்

01.12.2007


***



".. கிழக்கை கிழக்காக இருக்க விடுங்கள்." வட - கிழக்கு இணைப்பை நிராகரிக்கிறார் M.R.ஸ்ராலின் :த ஜெயபாலன்




நீண்டகாலமாக மாற்று அரசியல், இலக்கியத் தளங்களில் செயற்பட்டுவரும் எம்.ஆர்.ஸ்ராலின்
அவர்கள் «எக்ஸில்» சஞ்சிகையின் ஆசிரியர்களில் ஒருவராக இருந்தவர். முஸ்லிகள்,
மற்றும் தலித் அரசியல் குறித்து கூடிய கவனம் செலுத்தி வருபவர். தலித் சமூக
மேம்பாட்டு முன்னணியின் இயங்கு சக்திகளில் ஒருவராகவும், ஜனநாயகத்துக்கான
கிழக்கிலங்கை முன்னணியின் பிரதான செயற்பாட்டாளராகவும் இருந்துவருகிறார். அண்மையில்
அவர்குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளை ஒட்டியும், கிழக்கு மாகாண அரசியல் தொடர்பாக
அவர் முன்வைத்துவரும் கருத்துக்களை மேலும் புரிந்துகொள்ளும் நோக்கிலும் அவரை
தேசம்நெற் சார்பாக அணுகி அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். அவர் அதற்கு அளித்த
பதில்கள்



தேசம்நெற்: அண்மைக்காலமாக உங்களுடைய அரசியல் நிலைப்பாடு மிகவும் சர்ச்சைக்குரியதாக அமைந்து உள்ளது. இது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?



ஸ்ராலின்: ஒடுக்கப்படும் மக்கள் நலம் சார்ந்த அரசியல் என்பது எப்போதுமே சர்ச்சைக்குரியதாக இருந்து வருவதே வரலாறு. காரணம் மக்கள் நலம் சார்ந்த அரசியலானது எப்போதுமே அதிகார மையங்களுக்கு எதிரானதாகவும், அதிகார மையங்களை நோக்கி கலகம் செய்வதாகவும், அதிகார மையங்களின் நி~ஸ்டையை குலைப்பதற்கு முயற்சிப்பதாகவுமே காணப்படுகிறது. ஆகவே இதுபோன்ற செயற்பாடுகள் அதிகார மையங்களாலும் அதன் துதிபாடிகளாலும், இவர்களது பிரச்சார வழிமுறைகளினாலும் சர்ச்சைக்குரியதொன்றாகவே பார்க்கப்பட்டும், பரப்பப்பட்டும் வருகின்றது.


இதன் வழியில் நிலவுகின்ற எமது சமூகத்தின் அதிகார படிநிலையை, அதனை கட்டிக்காக்கும் கருத்தியலை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றவன் நான் எனும் வகையில்தான் எனது அரசியல் பயணிக்கின்றது. இதை இன்னும் விளக்கமாகச் சொன்னால் தமிழ் பேசும் சமூகத்தின் ஆதிக்கக் கூறுகள் மதரீதியில் வேறுபட்ட முஸ்லிம்களை ஒடுக்குகின்றது. சாதிய ரீதியில் தாழ்த்தப்பட்ட மக்களை இரண்டாம் பட்சமாக்கியுள்ளது. பிரதேச ரீதியிலான ஏற்றத் தாழ்வுகளை பாதுகாக்கின்றது.


இவை அனைத்துக்கும் அடிப்படையாக அமைந்திருக்கின்ற கருத்தியல் என்னவெனக் கேட்டால் அதுதான் யாழ் - மையவாத - சைவவேளாள கருத்தியலாகும். இக்கருத்தியலில் வழிவந்த தலைமைகளே துரதிஸ்ட வசமாக இதுவரை காலமும் தமிழ் சூழலில் ஆதிக்க சக்திகளாக இருந்து வந்திருக்கிறார்கள், இன்றும் இருக்கிறார்கள். இது அரசியல் ரீதியில் தமிழர் மகாசபையில் தொடங்கி இன்றைய புலிகள் மற்றும் தமிழ் தேசியவாத இயக்கங்கள் வரையிலும் தொடர்கிறது.



இந்த நிலையில் சுமார் 100 வருடங்களாக ஒற்றைத் தடத்தில் சேடம் இழுத்துக் கொண்டிருக்கும் தமிழ் தேசியவாதம் எனும் போலி முகம் கொண்ட அந்த யாழ் அதிகார மையமானது முஸ்லிம்கள் மீதான எனது அக்கறையை, தாழ்த்தப்பட்ட தலித் மக்களுக்காக ஒலிக்கும் எனது குரலை, கிழக்குமாகாண மக்களுக்கான எனது தனித்துவப் பார்வையை சர்ச்சைக்குரிய தொன்றாகவே வழிமொழியும், திரிபுபடுத்தும், சேறடிக்கும். இதன் வெளிப்பாடுதான் நீங்கள் கூறுகின்ற சர்ச்சை.


தேசம்நெற்: இலங்கை நடைமுறை அரசியலைப் பொறுத்தவரை உங்களுடைய அரசியல் நிலைப்பாடு என்ன ?

ஸ்ராலின்: முதலாவதாக இலங்கையின் அமைதியை குலைத்து வன்முறைகளுக்கு தூபமிட்டு பயங்காரவாதத்தை உருவாக்கியவர்கள் யார் எனும்போது நம் எல்லோர் பார்வையிலும் சிங்கள இனவாத தலைமைகளையே குற்றம் சுமத்துகின்றோம். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இலங்கையில் இனவாதத்தை வளர்த்தெடுத்ததில் சரிசமபங்கு அல்லது அதற்கும் மேலாக கடந்த கால தமிழ் தலைமைகளுக்கே உண்டு என்றே கருதுகின்றேன். இதற்கு இத்தலைமைகளை வழிநடத்திய யாழ் மையவாத கருத்தியலே பெரும் பங்குவகித்தது.


சர்வசன வாக்குரிமை மசோதாவிலும், சுயபாசைகளுக்கான சட்டமூல விவாதங்களின் போதும், இலவசக் கல்வி வழங்க முன்வந்தபோதும், நெற்காணிச்சட்ட மசோதாவிலும், மற்றும் தேசியமயமாக்கல் போன்ற சட்டமூலங்கள் ஏற்படுத்தப்பட்ட வேளைகளிலும் நமது தலைவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் எடுத்த நிலைப்பாடுகள் அப்பட்டமான மக்கள் விரோதிகளின் நிலைப்பாடுகளே. மலையக மக்களின் வாக்குரிமை பறிப்பிலும் கூட தமிழ் காங்கிரஸின் தலைமை எடுத்த முடிவுகள் படுகேவலமானவை.


இக்கடந்தகால தலைமைகளை வழிநடத்திய அதே கருத்தியலே இன்று புலிகளை பாஸிட்டுக்களாக்கி அவர்களையும் வழிநடத்துகின்றது. அதனால்தான் பொன். இராமநாதன் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீதான காழ்ப்பு இன்றுவரைத் தொடர்கின்றது. ஆறுமுகநாவலர் கொண்டிருந்த சாதிவெறி இன்றுவரைத் தொடர்கிறது.


இந்த நிலையில் இலங்கையில் புலிப்பாசிசம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது அரசியல் வேலைத்திட்டங்களில் முன்னுரிமைக்குரியது. இது வெறும் புலி எதிர்ப்புவாதம் அல்ல. யாழ் மையவாதம் ஆட்சிசெலுத்தும் நூற்றாண்டு காலத் தொடர்ச்சியின் இறுதி உதாரணம் புலிகளோடு முற்றுப்பெற வேண்டும் எனும் கருத்தியல் சார்ந்த நிலைப்பாடு. அதன் பின்னர்தான் வடமாகாணத்திலோ, கிழக்கு மாகாணத்திலோ, இலங்கையின் ஏனைய பிரதேசத்திலோ ஒரு ஜனநாயகச் சூழல் ஏற்பட முடியும்.


இலங்கை வாழ் மக்கள் அரசை நோக்கிய அதிகாரப் பகிர்வுகளையோ, பரவலாக்கங்களையோ ஜனநாயக வழிகளில் போராடிப் பெற்றுக்கொள்ளவும் அதற்கு தலைமை ஏற்க ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினர்களின் (பன்மைத்துவ) தலைமைகளை உருவாக்கிக் கொள்ளவும் ஏதுவான வழிகள் அப்போதுதான் சாத்தியமாகும். தென்னிலங்கையிலும் புலிகளைக் காட்டி இனவாத உணர்வைத் தக்க வைத்துக்கொண்டு சிங்கள மக்களை ஏமாற்றும் பிழைப்புவாத அரசியல்; தலைமைகளும் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அரசியல் குப்பைத் தொட்டிக்குள் சென்றடைய நேரிடும்.


தேசம்நெற்: நீங்கள் மனித உரிமைகள், ஜனநாயகம் பற்றியெல்லாம் பேசுகிறீர்கள் ஆனால் கருணா தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் (ரிஎம்விபி), கிழக்கு மாகாண மக்களின் நலன்களோடு ஒத்துப்போகின்ற புள்ளிகளில் கருணா அமைப்பை ஆதரிப்பதாகக் கூறுகிறீர்கள். ஆனால் ரிஎம்.வி.பி உடன் உங்களைத் தொடர்புபடுத்துவதை தவறு என்கிறீர்கள் ?

ஸ்ராலின்: முதலில் கருணாவின் வெளியேற்றத்தை வெறும் புலிக்குள் ஏற்பட்ட பிளவாக மட்டும் பார்க்கின்ற பார்வையானது ஒரு குறுகிய பார்வை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு பின்னால் நீண்டகாலமாக தமிழ் சமூகத்தினுள் புரையோடிப்போயிருக்கின்ற யாழ்ப்பாணம் - மட்டக்களப்பு என்கின்ற பிரதேச ரீதியிலான வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் இருக்கின்றது. ஆனால் இந்தப் பிரதேச வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு யாழ் மேலாதிக்கம் பற்றிய கருத்துக்களை கருணா எப்போது தெரிவித்தார், எதற்காக அதனைப் பயன்படுத்தினார் என்பதிலெல்லாம் எனக்கும் மாறுபட்ட கருத்துக்கள் உண்டு.


ஆனால் பகிரங்கமாக கருணா புலிகளை நோக்கி எழுப்பிய கேள்விகள் கிழக்கு மக்களின் நலன்கள் சார்ந்தவை. 32 துறைச் செயலாளருக்குமான நியமனங்களை புலிகள் வட பகுதிக்குள்ளே சுருட்டிக்கொண்டதென்பது பொய்யானதொரு தகவல் அல்ல. புலிகளது அந்த நியமனங்களில் காலா காலமாக தொடர்ந்து வருகின்ற யாழ் மேலாதிக்கம் இன்னுமொருமுறை பட்டவர்த்தனமானது. அந்த மேலாதிக்கத்திற்கு எதிரான கேள்விகள் கிழக்கு மக்களுடைய ஆழ்மனங்களின் பிரதிபலிப்பாகும்.

அந்த வகையில் கருணாவின் பிளவுடன் வெளிக்கிளம்பிய ரி.எம்.வி.பி. என்பது ஒடுக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களின் குரல்களில் இருந்து எழும்பிய அரசியல் உருவாக்கமாகும். தனது பிளவின் போது வீரகேசரிக்கு பேட்டி அளித்த கருணா தமிழீழம் எனும் கோதாவில் யாழ்ப்பாணத்தின் 90 வீதமான நலன்களே மறைந்திருந்தன என்றார். இந்த கருத்தாக்கத்தைத்தான் நான் சுமார் 1990 ஆம் ஆண்டுகளில் இருந்தே அடையாளம் கண்டு பேசியும் எழுதியும் வருகின்றேன். நான் இதை எழுத்து, உரையாடல், விவாதம் என்று கருத்தியல் ரீதியில் முன்வைத்து வருபவன். தமிழ் சமூகத்தில் வெளிக்கிளம்புகின்ற அரசியல் போக்குகளை ஒரு சமூகவியல் பார்வையில் ஆராய்ந்து ஒரு கருத்தியல் தளத்தில் செயற்பட்டு வருபவன்.

ஆனால் கருணாவோ இதனை ரீ.எம்.வி.பி.யின் உருவாக்கத்தின் ஊடாக நடைமுறை வேலைத்திட்டம் சார்ந்த களத்தில் முன்னெடுத்தார். இந்த கோட்பாட்டு ரீதியான ஒத்திசைவு என்பது இயல்பானது. இதற்காக என்னை ரி.எம்.வி.பி. எனும் அமைப்புடன் சம்பந்தப்படுத்துவது பொருத்தமற்றது. ஏனென்றால் கிழக்கு மாகாண மக்கள் நலன்சார்ந்து செயற்படுவதற்குரிய உரிமை கருணாவுக்கு மட்டுமோ, ரி.எம்.வி.பி. இற்கு மட்டுமோ தாரை வார்க்கப்பட்டு கொடுக்கப்பட்டதொன்றல்ல. அந்த உரிமை எல்லோருக்கும் உண்டு.


ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி என்பது 2002 இல் கிழக்கு மாகாணத்தில் புலிகளால் பிள்ளைபிடி நிகழ்தப்பட்டுக் கொண்டிருந்த வேளைகளில் எங்களால் அதற்கெதிராக உருவாக்கப்பட்ட ரகசிய பிரச்சார இயக்கமாகும். அப்போது கருணா புலிகளில் இருந்து வெளியேறி இருக்கவில்லை. அதன் அடிப்படையில்தான் எனது செயற்பாடுகள் எனது வழியில் அமைந்திருக்கின்றன.

நீங்கள் இப்படி கேட்கும் போது ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். வடக்கு கிழக்கு இணைப்பை புலிகள் தங்கள் உயிர் மூச்சாகக் கொண்டுள்ளார்கள் என்கிறார்கள். அதேவேளை எல்லாவிதமான தமிழ் தேசியவாத இயக்கங்களும் இந்த இணைப்பு விடயத்தில் புலிகள் கொண்டுள்ள கொள்கையையே பிரகடனப்படுத்துகிறார்கள். அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகிக்கும் ஈ.பி.டி.பி. யினர் கூட என்றும் பிரியாத வடக்கு கிழக்கு என்று உறுதியாக இருக்கின்றார்கள். இந்த வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் புலிகளின் அரசியலுடன் எல்லா இயக்கங்களுக்கும் இருக்கின்ற ஒற்றுமையை பார்த்தீர்களா?

மேலும் எந்த வித இயக்கங்களையும் சாராது அமைப்புகளுக்கு வெளியே இருக்கக் கூடிய சுதந்திரமான ஊடகவியலாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள், ஜனநாயக வாதிகள், அரசியல் ஆய்வாளர்கள், புத்திஜீவிகள் போன்ற எல்லோரும் இந்த இயக்கங்களுடன் தமிழ் மக்களின் உரிமை சார்ந்து ஒத்திசைவாகத்தானே செயற்படுகின்றார்கள். அதற்காக இவர்களை எல்லாம் எல்.ரி.ரி.ஈ என்றோ, ஈ.பி.டி.பி. என்றோ, புளொட் என்றோ கட்சி முத்திரை குத்த முடியுமா? அப்படி கட்சிமுத்திரை குத்துவது எவ்வளவு கேலிக்கூத்தானதாக இருக்க முடியும். புலிகளால் முன்வைக்கப்படும் அரசியல் கோரிக்கையுடன் (தமிழ்த்தேசியம்) இவர்களுக்கு எல்லாம் என்ன ஒத்திசைவு உண்டோ அந்த ஒத்திசைவுதான் கிழக்கு மாகாண மக்களின் நலன்களுடன் ரி.எம்.வி.பி. தன்னை அடையாளம் காட்டும் புள்ளிகளில் எனக்கும் உண்டு.


ஆகவேதான் கிழக்கு மக்களின் நலன்களுக்காக குரல் கொடுக்கின்ற என்னை ரி.எம்.வி.பி. சாயம் புசிப்பார்ப்பது உங்கள் பார்வைக் கோளாறு என்கின்றேன். சமூகம் சார்ந்த அரசியல் என்பதை கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும் மட்டுமே உரியதாக கருதுகின்ற வெகுளித்தனமான சமூகமாக தமிழ் சமூகம் இன்னும் இருப்பதும், சுதந்திரமான அரசியலாளர்களைக் கொண்டிருக்கும் பாரம்பரியமிக்க ஒரு சிவில் சமூகமான தமிழ் சமூகம் இன்னும் வளர்ச்சி அடையாதிருப்பதுமே இப்பார்வை கோளறுக்கு காரணம் என்பேன். என்ன செய்வது இன்னுமொரு பகுத்தறிவு பெரியாருக்காக எல்லோரும் காத்திருப்போம்.


தேசம்நெற்: இலங்கை அரசின் உளவுத்துறையின் கீழ் இயங்கும் ரி.எம்.வி.பி கிழக்கு மாகாண மக்கள் மீது என்ன அக்கறை கொண்டுள்ளது என்று நீங்கள் கருதுகிறீர்கள் ?


ஸ்ராலின்: முதலில் ரி.எம்.வி.பி. இலங்கை அரசின் உளவுத்துறையின் கீழ் இயங்குகிறது எனும் தீர்க்கமான முடிவுகளை கைவசம் வைத்துக்கொண்டே இக்கேள்விகளைக் கேட்கின்றீர்கள். ஆனால் இக்கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அல்லது குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய பல்வேறு அமைப்புகள் தமிழ் சூழலில் ஜனநாயக முகத்துடன் வலம் வருகின்றன. ஆனால் அவர்களை எல்லாம் நோக்கி நீங்கள் எப்போதும் இதுபோன்ற கேள்விகளை எழுப்புவதில்லை.



இலங்கை உளவுத்துறையுடன் மட்டுமல்ல இந்திய உளவுத்துறையுடன் கூட பல இயக்கங்கள் கொண்டுள்ள உறவுகள் அம்பலமானவை. ஏன் புலிகள் கூட தங்களின் இருப்பை பாதுகாத்துக் கொள்ள இத்தகைய அணுகுமுறைகளை கடந்து போனவர்கள் தான் என்பது வரலாறு.இன்றைய ஜனநாயக வழிக்குத் திரும்பிய தமிழ் தலைவர்களும், அகிம்சாவாதத் தமிழ் தலைவர்களும் அடங்கலாக எல்லா தமிழ் தலைமைகளுக்கும் புலிகளிடம் இருந்து பாதுகாப்பு கொடுப்பது இலங்கை உளவுத்துறைதான். ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுக்கள் இன்று நாலா புறமும் இருந்து ரி.எம்.வி.பி.யை மட்டுமே நோக்கி வருவது யாழ்ப்பாண ஆதிக்க மனோபாவத்துடனான அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதை இவ்வேளையில் பகிரங்கப்படுத்த விரும்புகிறேன்.



இதற்கு அப்பால் ரி.எம்.வி.பி. இலங்கை அரசின் உளவுத்துறையின் கீழ் வேலைசெய்கின்றதா? ரி.பி.சி. இலங்கை உளவுத்துறையின் பண உதவியுடன் இயங்குகின்றதா? ஈ.என்.டி.எல்.எவ். இந்திய உளவுத்துறையின் கீழ் இயங்குகின்றதா? என்பது பற்றிய கேள்விகள் அந்தந்த அமைப்புகளின் நடைமுறை, கட்சி வேலைத்திட்டங்களை நோக்கி எழவேண்டியவை.

நான் தமிழ் சூழலில் கட்டுண்டு கிடக்கும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள், அவற்றை ஆளும் ஆதிக்க கருத்தியல்கள், தமிழ் சமூகத்தின் அசைவியக்கமானது அக்கருத்தியலின் மீது ஏற்படுத்தி வரும் வெடிப்புகள் குறித்து கோட்பாட்டு ரீதியான ஆய்வு வேலைத்திட்டங்களைக் கொண்டவன். கட்சி வாதங்களுக்கும், இயக்க வாதங்களுக்கும் அப்பால் பட்டவன்.

அந்த வகையில் கருணாவினுடைய பிளவும் அதனூடாக உருவாகிய ரி.எம்.வி.பி. யினுடைய அரசியல் உருவாக்கமும் பல்லினச் சூழல் மிகுந்த கிழக்கு மாகாணத்தின் சமூக பொருளாதார அரசியல் காரணிகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக நான் கருதுகின்றேன்.


1) யாழ்ப்பாண ஆதிக்க சக்திகளின் நலன்களில் இருந்து உருவாகிய தமிழ் தேசியம் எனும் பெருங்கொடிய கதையாடலை கிழக்கு மாகாண மக்களிடம் அம்பலப்படுத்தி இருக்கின்றது. இந்த எழுச்சியானது கருத்தியல் ரீதியில் தமிழ் அரசியல் போக்கு அடைந்திருக்கும் வளர்ச்சிக்கட்டம் என நான் கருதுகின்றேன்.



2) ஆயிரமாண்டுகளுக்கு மேலாக தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களிடையே பேணப்பட்டு வந்த சமூக நல்லிணக்கம் குலைக்கப்படுவதற்கு காரணமாய் இருந்தது கிழக்கில் காலடி எடுத்து வைத்த தமிழ் தேசியத்தின் வரவேயாகும். ஆனால் கருணா முன்மொழிந்த கிழக்குத் தேசியமானது இன ஐக்கியத்தையும், பரஸ்பர சகிப்புத் தன்மையையும் வளர்த்தெடுக்க வேண்டிய பல்லினச் சூழலில் யதார்த்த நிலையை புரிய வைக்கத் தொடங்கியுள்ளது.


3) கிழக்கு மாகாண மக்களின் அனுமதியின்றி ஜனநாயக விரோதமான முறையில் 20 வருட காலமாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான இணைப்பு நீக்கப்பட்டு உள்ளது. இதனை கிழக்கு மாகாண மக்களின் பறிக்கப்பட்டு இருந்த இறைமையானது மீளக் கையளிக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாகவே நான் கருதுகின்றேன்.


4) இவை எல்லாவற்றுக்கும் மேலாக எந்தவொரு சக்தியாலும் அசைக்க முடியாத தலைமையெனும் பிரபாகரனின் கீழ் இயங்கிய பாசிசப்படைகள் இன்று கிழக்கு மாகாணத்தில் இருந்து துரத்தியடிக்கப்பட்டு இருக்கிறார்கள்.



இது வெறும் கேணல் கருணா எனும் இராணுவ வித்தகனுடைய பலத்தினால் மட்டும் சாத்தியமானதல்ல. கருணா முன்வைத்த தமிழ் தேசிய நிராகரிப்பும் கிழக்கின் சுயநிர்ணயம் எனும் புதியதொரு கருத்தாக்கம் கிழக்கு மாகாண மக்களிடையே ஏற்படுத்திய அரசியல் எழுச்சியினாலுமே சாத்தியமானதொன்றாகும்.

இவைகளெல்லாம் கிழக்கு மாகாண மக்களின் அக்கறை சார்ந்த விடயங்கள் இல்லை என நீங்கள் கூற முடியுமா?


தேசம்நெற்: இறுதியாக இடம்பெற்ற இலக்கியச் சந்திப்பில் கூட நீங்கள் ரி.எம்.வி..பிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்ற முற்பட்டு சலசலப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்படுகிறதே ?



ஸ்ராலின்: இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் வைப்பவர்கள் யார்? அவர்களது மூல நோக்கங்கள் என்ன? முகவரி இல்லாத கேள்விகளை தயவுசெய்து நீங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். கண்முன்னே நடந்த இலக்கியச் சந்திப்பு பற்றி இதுபோன்ற பொய்களை புழுகுமூட்டைகளை காவித்திரிகின்ற மர்ம நபர்கள் உங்கள் கேள்விகளின் உந்துசக்தியாக இருப்பது உங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் மீதான நம்பகத்தன்மையை பாதிக்கின்ற விடயம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தகவல்களை நாலாபுறமும் விசாரித்த பின்னரே அவற்றை குற்றச்சாட்டுகளாக அவைக்கு கொண்டுவர வேண்டும்.



அந்த நிகழ்வை தலைமையேற்று நடத்திய பரா மாஸ்ரர் அவர்களிடமோ, அங்கு கலந்துகொண்ட 100 மேற்பட்ட பார்வையாளர்களில் சில 10 பேர்களிடமோ நீங்கள் விசாரித்திருக்க முடியும். இருந்தாலும் கேள்வி என்று வந்த பின்னர் பதிலிறுக்க வேண்டிய பொறுப்பு எனக்குண்டு என்பதால் அங்கே நடந்த விடயத்தை ஒப்புவிக்கின்றேன்.


இலக்கியச் சந்திப்பில் போடப்பட்ட தலைப்பின்படி தீர்வுத்திட்டம் பற்றிய ஒரு பேச்சு திரு.சிவலிங்கம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதன்படி அவரது பேச்சு திஸ்ஸவிதாரண யோசனைகளின் அடிப்படையில் பல நல்ல அம்சங்கள் தமிழ் மக்களுக்கு இருப்பதை முன்னிறுத்தி அமைந்திருந்தது. அதையொட்டி திஸ்ஸவிதாரண யோசனைகளை இலக்கியச் சந்திப்பு ஆதரித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்கின்ற முன்மொழிவை அங்கு சிலர் ஆதரித்தனர்.

இந்த நிலையில் மேற்படி யோசனைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை மேலும் சிலர் சுட்டிக்காட்டினர். குறிப்பாக முஸ்லிம்களின் தனித்துவம் பற்றிய சில பார்வைகளை தொட்டுக்காட்டி பசீர் அவர்களும், தலித் மக்களுக்கு விசேட சிறப்புரிமைகள் வழங்க வேண்டிய திருத்தத்தை பிரான்ஸ் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரும், பெண்களின் நிலை தீர்வுத்திட்டங்களில் கவனம் கொள்ளப்படுவதில்லை என்பதால் அதுகுறித்த உபசரத்துக்களை பெண்களின் சார்பில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று உமா அவர்களும் குரல் எழுப்பினர். இதே போன்றுதான் வடக்கு, கிழக்கு இணைப்பு அல்லது பிரிப்பு தொடர்பாக திஸ்ஸவிதாரண யோசனைகளில் கிழக்கில் இருந்து வெளிவரும் எண்ணங்களும், ஆலோசனைகளும் கருத்தில் எடுக்கப்பட வேண்டும் என நானும் முன்மொழிந்தேன்.

அதாவது கிழக்கில் இருந்து மூன்று அமைப்புக்கள் இதுவரை தீர்வுத்திட்டம் குறித்த தமது கருத்துக்களை வெளியிட்டு இருப்பதை சுட்டிக்காட்டினேன். ரி.எம்.வி.பி. எனும் அமைப்பினது தீர்வுத்திட்டம் திஸ்ஸவிதாரணவிடம் நேரடியாக கையளிக்கப்பட்டு இருந்தது. கிழக்கு முஸ்லிம் குழுவினது தீர்வுத்திட்டம் ஊடகங்களில் பகிரங்கப்படுத்தப்பட்டது. அதே போன்று ஜனநாயகத்திற்கான கிழக்கிலங்கை முன்னணியினராகிய நாங்கள் கடந்த ஆண்டு ஸ்ருற்காட்டில் கிழக்கின் சுயநிர்ணயம் எனும் விரிவான தலைப்பில் ஆவணப்படுத்திய முடிவுகள் போன்றவை முக்கியமானவையாகும். கிழக்கில் இருந்து வெளியான குரல்கள் எனும் அடிப்படையில் திஸ்ஸவிதாரணவின் தீர்வுகளுடன் இணைந்து கிழக்கு மாகாண இணைப்பு பற்றிய விடயத்தில் முடிவுகளை எடுப்பதில் மேற்படி மூன்று அமைப்புகளினதும் ஆலோசனைகள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் என்று கூறினேன். இதுதான் நடந்தது.

முஸ்லிம்கள் சார்பிலும், தலித் மக்கள் சார்பிலும் பெண்கள் சார்பிலும், கிழக்கிலங்கை மக்கள் சார்பிலும் சில விசேட கவனங்களை கோருகின்ற எங்களது திருத்தங்கள் திஸ்ஸவிதாரண யோசனைகளை தீhமானமாக நிறைவேற்ற முயன்றவர்களுக்கு உவப்பளிக்கவில்லை. விவாதங்களை எதிர்கொள்ளாமலும் முன்திட்டமிடப்பட்ட வகையிலும் «திஸ்ஸவிதாரண யோசனைகளை ஏகமனதாக இலக்கியச் சந்திப்பு தீர்மானித்ததென்று» அறிக்கைவிடத் தயாராய் இருந்தவர்கள் எங்கள் கருத்துக்களை முதலில் நிராகரித்தனர். பின்னர் கவனத்தில் கொள்வதாக கூற முயன்றனர். இறுதியில் தீர்மானம் நிறைவேற்றும் முயற்சியைக் கைவிட்டு பின்வாங்கினர். இதுதான் நடந்தது.

எங்கேயோ யாராலோ திட்டமிடப்படுகின்ற, யாரினதோ அரசியல் அட்டவணைகளுக்காக வேலை செய்கின்ற முன்முடிவுகளுடன் வந்தவர்களுக்கு இலக்கியச் சந்திப்பின் விவாதக் கலாசாரத்திற்கும் பன்முகப் பார்வைகளைக் கொண்ட உரையாடல் பாரம்பரியங்களுக்கும் முகம்கொடுக்க முடியாமல் போனது என்பதுதான் அந்த நிகழ்வுகளின் சாரம். மற்றையோரின் கருத்துகளுக்காக உயிரைக்கொடுக்க வேண்டாம், மற்றையோரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவும் வேண்டாம், மற்றையோர் கருத்துச் சொல்லும் உரிமை அவர்களுக்கு உண்டு எனும் குறைந்தபட்ச முதலாளித்துவ ஜனநாயக பண்புகள் கூட அற்ற வக்கிரமான மனப்பான்மையில் இருந்துதான் நான் ரி.எம்.வி..பி. இற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்ற முயன்றதாக பொய்ப் பிரச்சாரங்கள் முளைத்தெழுகின்றது.

தேசம்நெற்: கருணாவுடைய பிளவின் ஆரம்பத்தில் ரிபிசி வானொலி கருணாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டிருந்தது. அப்போது நீங்களும் குமாரதுரை போன்றவர்களும் ரிபிசிக்கு உங்கள் பங்களிப்பை வழங்கி வந்தீர்கள். பிற்காலங்களில் கருணாவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளால் தாங்கள் கருணாவில் இருந்து அந்நியமானதாக ராம்ராஜ் கூறுகிறார். ரிபிசி உடனான உங்கள் முரண்பாட்டிற்கு என்ன காரணம் ?

ஸ்ராலின்: ரி.பி.சி. என்பது பாசிசத்திற்கெதிரான ஒரு ஜனநாயக குரல்களின் சங்கமிப்பு என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் எங்களின் பங்களிப்பு இருந்தது. இது எந்த ஒரு இயக்கத்தினதோ, கட்சியினதோ கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே நாங்கள் கருதியிருந்தோம். ஆனால் காலப்போக்கில் ரி.பி.சி.யின் பணிப்பாளராகிய ராம்ராஜ் அவர்கள் சார்ந்த கட்சியின் (ஈ.என்.டி.எல்.எவ்) மறைமுகமான கட்டுப்பாட்டுக்குள் ரி.பி.சி. இழுத்து செல்லப்படுவதையும், ரி.பி.சி.யில் பங்கெடுத்து வந்த ஜனநாய சக்திகளின் செல்வாக்கு ஈ.என்.டி.எல்.எவ். இன் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுவதையும் நாங்கள் அவதானித்தோம்.

அது மட்டுமல்ல ஒரு புறத்தில் ரி.பி.சி. யில் பாசிச எதிர்ப்புப் பிரச்சாரம் பண்ணிக்கொண்டு மறுபுறத்தில் தீப்பொறி என்கின்ற இணையத்தளத்தில் பாசிச எதிர்பாளர்களை கொச்சைப்படுத்தி, புலிகளின் நிதர்சனத்தின் தோழமை இணையத்தளமாக சுழியோடும் சுத்துமாத்து அரசியலையும் ரி.பி.சி.யின் பணிப்பாளராய் இருக்கின்ற ராம்ராஜ் அவர்கள் அரங்கேற்றி வருகின்றார். இந்த நிலையில் ரி.பி.சி. ஆனது யாருடைய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இயங்குகின்றது, எதைநோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்கின்ற கேள்விகள் இன்று எங்களிடம் மட்டுமல்ல பல தரப்பினரிடமும் எழும்பியுள்ளது. இதன் காரணமாகத்தான் ரி.பி.சி. மீதான பொதுமக்களின் நம்பகத்தன்மையும் இன்று பாரிய சரிவு கண்டிருக்கின்றது.

இந்த நிலையில் நீங்கள் ரி.பி.சி. யினுடைய தொடர்பை நிறுத்திக் கொண்டவர்களாக என்னையும் குமாரதுரை அவர்களையும் மட்டுமே சுட்டிக்காட்டி இருப்பது, எங்களது வெளியேற்றத்தை, ரி.பி.சி. யுடனான எங்களது முரண்பாட்டை கருணா பிரச்சனையுடன் சம்பந்தப்படுத்திப் பார்க்கின்ற தவறான பார்வையில் இருந்தே எழுகின்றது. ஆனால் இன்று ரிபி.சி. யின் முதுகெலும்பான அரசியல் விவாதங்களில் பங்கெடுத்து வந்த 90 வீதமானவர்கள் ரி.பி.சி. யுடன் முரண்பட்டு வெளியேறி இருப்பதை இட்டு நீங்கள் கேள்வி கேட்கவேண்டும்.


ரி.பி.சி யில் அரசியல் ஆய்வாளர்களாக கடமையாற்றிய ஜெயதேவன், பசிர், விவேகானந்தன் போன்றோரும், அரசியல் விவாதங்களில் பங்கெடுத்த கார்த்திக், நிமோ, சோலைய+ரான், ஜெமினி, கவி, யோகரெட்ணம், நவம், மற்றும் விஜி, சுதா …. என்று ஏராளமானோர் விலகிவருவதன் (விழித்துக்கொண்டதன்) காரணங்களை நீங்கள் தேடுங்கள். இவர்களோடெல்லாம் ஏற்பட்ட முரண்பாட்டுக்கு ரி.பி.சி. யின் பணிப்பாளராசிய ராம்ராஜ் அவர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்?



தேசம்நெற்: நீங்கள் கருணாவினுடைய நிதி பரிமாற்றங்களில் ஈடுபட்டு உள்ளதாகவும் அதிலிருந்து பெறப்பட்ட பணத்தில் வீடு வாங்கி உள்ளதாகவும் குற்றச்சாட்டப்பட்டு உள்ளது. உங்களுடைய மறுப்பறிக்கையில் நீங்கள் அதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. (நீங்கள் வாழும் வீடும் தற்போது வாங்கியதாகச் சொல்லப்பட்ட வீடும்) இக்குற்றச்சாட்டுப் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?



ஸ்ராலின்: கடந்த மாதம் 20 ஆம் திகதி நீங்கள் பாரிஸ் தலித் மாநாட்டுக்கு வந்திருந்தபோது இக்குற்றச்சாட்டு பற்றிய உங்கள் வினாவலுக்கு எனது தன்னிலை விளக்கத்தை அளித்திருந்தேன். «கருணாவின் வருகைக்கும், நிதி பரிமாற்றங்களுக்கும், எனக்கும் சம்பந்தமில்லை.» - ஸ்ராலின் மறுப்பு எனத் தலைப்பிட்டு அந்த செய்தியை தேசம் நெற் இணையத்தளத்தில் பிரசுரித்திருந்தீர்கள். அதன் பின்னரும் மேற்படி குற்றச்சாட்டுகளை முகவரி இல்லாத இணையத்தளங்கள் நிறுத்திக் கொள்ளாததன் காரணமாக ஒரு பகிரங்க மறுப்பை நானே முன்வந்தும் தெரிவித்திருந்தேன். «என்மீதான சேறடிப்புகளையும், குற்றச்சாட்டுகளையும் கடுமையாக மறுக்கிறேன்.» என்ற தலைப்பில் 26 ஒக்டோபர் மாதம் தேனி, விழிப்பு போன்ற இணையத்தளங்களில் அந்த மறுப்பு பிரசுரமாகியிருந்தது. அதனையும் உங்களது இணையத்தளத்தில் நீங்கள் மீள வெளியிட்டிருந்தீர்கள்.
இந்த எனது பகிரங்கமான மறுப்பில் பக்கம் பக்கமாக நான் எழுதியிருந்த விளக்கங்களின் இறுதியில் மீண்டுமொருமுறை எனது மறுப்பை தெளிவுபடுத்தி «என் மீதான இந்த சேறு ப+சல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை, அநீதியானவை என்று கூறி இவை அனைத்தையும் கடுமையாக மறுக்கின்றேன்.» என முடித்திருந்தேன்.

இவையனைத்துக்கும் பிறகு இந்தக் கேள்வியை மீண்டும் மீண்டும் எதற்காக எனை நோக்கி எழுப்புகின்றீர்கள்? மடியிலே கனமில்லாதவன் யாருக்கும் மண்டியிடத் தேவையில்லை என்பதற்கிணங்க அணுவளவு கூட உண்மையற்ற குற்றச்சாட்டுக்களுக்காக இத்தனை மறுப்புகளுக்கும் மேலாக நான் எனது தனிப்பட்ட வாழ்வு பற்றிய சுயவிபரங்களை விபரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை எனது சுயமரியாதைக்கு இழுக்காகக் கருதுகின்றேன்.
மாறாக குற்றச்சாட்டுகளை பரப்புகின்றவர்கள் தங்கள் சொந்த முகங்களுடன் வெளியே வரட்டும். அவர்கள் முகம் அற்;ற மனிதர்களாக அலைவதிலேயே உங்களுக்கு புரியவில்லையா?


இவையெல்லாம் ஆதாரமில்லாத பொறுப்பற்ற சேறடிப்புகள் என்று. இது வெறும் சேறடிப்பு மட்டுமல்ல இதில் மறைந்திருக்கின்ற சூழ்சியை நான் அம்பலப்படுத்தியே ஆக வேண்டும். நான் கொண்டுள்ள அரசியல் கருத்துகளுக்கு முகம் கொடுக்க முடியாத கோழைகள் என் கருத்துக்களை மட்டுமல்ல என்னையும் அழிப்பதற்கான ஒரு சதித்திட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். நேரடியாகச் சொன்னால் இது ஒரு கொலை முயற்சியாகும்.
கருணாவின் மீது புலிகள் கொண்டுள்ள பழி தீர்க்கும் படலத்தை லாவகமாக எனை நோக்கி திருப்பிவிட்டு புலிகளைக் கொண்டு என்னைக் கொலை செய்வதற்கான ஒரு திட்டமிட்ட சதி அரங்கேறிக்கொண்டிருப்பது என்பதையிட்டு ஒரு பொறுப்பு மிக்க பத்திரிகைத் துறையில் ஈடுபடுபவர்கள் எனும் வகையில், நீங்கள் கவனம் கொள்ள வேண்டும். எனது சொந்த விலாசத்தை எனது முழுப்பெயரை, இலங்கையில், எனது சொந்த முகவரியை, எனது நிழற்படத்தை தயார் செய்து போலிக் குற்றச்சாட்டுக்களுடன் புலிகளின் கொலைக் கருவியான நிதர்சனத்துக்கு அனுப்புபவன் கொலைவெறி கொண்டலைபவன் அன்றி வேறென்ன. இதுபற்றி கள்ள மௌனம் காத்துக்கொண்டிருக்கின்ற புகலிடத்து ஜனநாயக முகங்களையும் நீங்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

ஆகவே இப்போது ஒரு ஊடகம் எனும் வகையில் நான் உங்கடாக ஒரு வேண்டுகோளை விடுக்கின்றேன். என்மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம் என்ன?, குற்றங்களைச் சுமத்தியவர்கள் அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடப்பாட்டில் இருந்து தப்ப முடியாது. அதே போன்று அந்த ஆதாரங்களைப் பெற்று பகிரங்கப்படுத்த வேண்டிய பொறுப்பு இந்த கேள்விகளுடன் என்னை அணுகியவர்கள் எனும் வகையில் உங்களுக்கும் உரியது.


என்மீது நிதிக்குற்றச்சாட்டு செய்திகளைப் பரப்பிய அந்த முகவரி இல்லாத மர்ம நபர்கள் அதற்குரிய ஆதாரங்களை உடனடியாக வெளியிடுமாறு கோருகின்றேன். ஆதாரங்களை வெளியிட தாமதிக்கின்ற ஒவ்வொரு பொழுதுகளும் அவர்கள் என்மீதான கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் என்கின்ற எனது குற்றச்சாட்டு வலுவடைந்து கொண்டே இருக்கும். மாறாக தமது அநாகரிகமான செயற்பாடுகளை உணர்ந்து எனக்கு அநீதி இழைத்தமைக்காக இவர்கள் பகிரங்க மன்னிப்பு கோரியே ஆகவேண்டும்.



தேசம்நெற்: உங்கள் மறுப்பறிக்கையில் நீங்கள் ஒரு பிரதேசவாதியல்ல என்று குறிப்பிடுகிறீர்கள். ஆனால் வடக்கு – கிழக்கு இணைப்பை நீங்கள் கடுமையாக எதிர்க்கிறீர்கள். வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட வேண்டும் என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தீர்கள். இதில் நீங்;கள் வைக்கும் நியாயம் என்ன ?



ஸ்ராலின்: ஆம் நான் நிட்சயமாக பிரதேசவாதியல்ல. ஒரு பிரதேசத்தின் பெயரால் மற்றொரு பிரதேசத்தின் மீது ஆதிக்கம் செலுத்த முனைவதுதான் பிரதேச வாதம். கிழக்கு மாகாணமானது ஒருபோதும் யாரையும் அடிமை கொண்ட வரலாறோ, மேலாதிக்கம் செலுத்திய வரலாறோ அற்றதொன்றாகும். நாங்கள் எங்கள் பிரதேசத்தின் நிர்வாகம் எங்களிடம் இருக்க வேண்டும் என கோருவது எங்களது பிரதேச நலன் சம்பந்தப்பட்ட விடயம். எங்களது மக்களின் அரசியல் அபிலாசைகள் சம்பந்தப்பட்ட விடயம். அதைத்தாண்டி வேறு ஒரு பிரதேசத்தை தேடி அதை ஆக்கிரமிக்க, அதன் மேல் ஆட்சிசெலுத்த முனையும் போதுதான் அது பிரதேசவாதம் ஆகின்றது.
மட்டக்களப்பில் வாழுகின்ற யாழ்ப்பாணத்து வியாபாரிகளை மட்டக்களப்பை விட்டு துரத்த முயன்றால், அது அப்பட்டமான பிரதேசவாதம். தமது பிரதேசத்தில் வாழும் மற்றய பிரதேசத்து மக்களை இரண்டாம் தர பிரசைகளாக நடாத்த முனைவது நிட்சயம் பிரதேச வாதமாகத்தான் இருக்க முடியும்.

அதை விடுத்து நாங்கள் கிழக்குமாகாண மக்கள் தனிமாகாண, தனிநிர்வாக அந்தஸ்துக்குரியவர்கள் என குரலெழுப்புவது எங்களது பிரதேச நலன் சார்ந்த விடயம். இன்று தமிழர் தரப்பு அரசியல் வாதிகள் எல்லோரும் தமிழர்களுக்காக தனிநிர்வாகம் கோருவது என்பது இனவாதமாகுமா? இனத்தின் பெயரில் உரிமை கோருவது என்பதால் அது இனவாதம் ஆகிவிட முடியாது. ஆனால் தமிழர்களின் பெயரில் உரிமை கோரிக்கொண்டு தமிழர்களோடு வாழும் சிங்களவர்களையும், முஸ்லிம்களையும் அகற்றிவிட்டு தனித்தமிழ் நிலமாக வடகிழக்கை ஆக்க முனைவதுதான் அப்பட்டமான இனவாதமாகும்.

ஆகவே தமிழர்களது அதிகாரப் பகிர்வு கோரிக்கையில் இருக்கின்ற நியாயங்கள் தமிழர்களது சுயநிர்ணயம் சார்ந்த விடயம் என்கின்றோம் அல்லவா? அதைபோன்றுதான் கிழக்கு மாகாணம் தனித்து இயங்க வேண்டும் என்பதும் கிழக்கு மாகாண மக்களின் சுயநிர்ணயம் சார்ந்த விடயம். இதை யார் மறுக்க முடியும். ஒரு மக்கள் கூட்டம் எதை அடிப்படையாகக் கொண்டு ஒடுக்கப்படுவதாகக் கூறுகின்றதோ அந்த அடையாளத்தை வைத்தே தமது உரிமைகளைக் கோரும். அது மொழியாகவோ, இனமாகவோ, பிரதேசமாகவோ ஏன் சாதியாகவோ கூட இருக்கலாம்.


யாழ்ப்பாணத்து தமிழர்களிடையே காணப்பட்ட சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த எம்.சி.சுப்பிரமணியம் அவர்கள் 1970 களில் தாழ்த்தப்பட்ட தலித் மக்கள் ஒரு தனி தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முயன்றதை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஆகவே தமிழர்களின் உரிமைகளை கேட்கின்றவர்கள் கிழக்கு மக்களின் உரிமைகளைப் பற்றி பேசுகின்ற எங்களை எப்படி பிரதேசவாதி என்று சொல்ல முடியும். தமிழ் மக்களின் உரிமைகளை மறுக்கின்ற «சிஹல உறுமய» வை சிங்கள இனவாதிகள் என்று சொல்ல முடியும் என்றால் கிழக்கு மக்களின் உரிமைகளை மறுக்கின்ற எல்லாத் தலைமைகளையும் யாழ்ப்பாண பிரதேசவாதிகள் என்று சொல்ல முடியும்.
ஆம் நாங்கள் அல்ல பிரதேச வாதிகள். எங்களை பிரதேசவாதிகள் என்று சுட்டுகின்ற ஒவ்வொருவரும் யாழ்மேலாதிக்க மனோபாவம் கொண்ட பிரதேசவாதிகளேயாகும். கிழக்கு பிரியவேண்டும் என்பதற்கான நியாயங்கள் ஆயிரம் உண்டு. ஆனால் அவற்றையெல்லாம் ஒற்றைவரிக்குள் அடக்கிவிடலாம். அதுதான் சுயநிர்ணய உரிமை. (கிழக்கின் சுயநிர்ணயம் எனும் பெயரில் ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி சார்பில் வெளியிடப்பட்ட ஆவணக் கையேட்டைப் பார்க்கவும்)



ஆனால் கிழக்கு மாகாணம் தனித்து இயங்குவதற்கு நியாயங்களை முன்வைக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் நீண்ட நெடிய வரலாறு எங்கும் கிழக்கும் வடக்கும் ஒருபோதும் இணைக்கப்பட்டி ருக்கவில்லை. அறியப்பட்ட வரலாறுகளின் அடிப்படையில் உறுகுணை ராச்சியத்தின் (கண்டி) உபபிரிவாகவே கிழக்கு மாகாணம் என இன்று அழைக்கப்படுகின்ற பிரதேசங்கள் அனைத்தும் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இருந்து வந்தது. முதன் முதலாக மாகாண பிரிப்புகள் வெள்ளையரால் ஏற்படுத்தப்பட்ட போது 1832 ஆண்டு கோல்புறுக் -கமறூன் குழுவினரின் ஆலோசனைகளுக்கு இணங்க மாகாணங்கள் எனும் புதிய புவியியல் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டது.

அன்றில் இருந்து 1987 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தை அடாத்தாக வடக்குடன் இணைக்கும் வரை இன்னிலை நீடித்தது. அதற்காகத்தான் கிழக்கு மாகாணம் தனித்து இயங்க வேண்டும் என்பதல்ல இதன் அர்த்தம். வடக்குடன் கிழக்கை இணைக்கக் கோருபவர்கள்தான் அதற்கான நியாயங்களை முன்வைக்க வேண்டும். ஆம் - சவால் விடுகின்றோம், விவாதிக்கத் தயாராயிருக்கின்றோம், வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என்பதற்கு என்ன நியாயங்கள் உண்டு என்பதை முன்வையுங்கள். வடக்குடன் இணைவதால் கிழக்கு மாகாணத்துக்கு என்ன நன்மைகள் உண்டு? சேறடிப்புகளையும், கறைப+சல்களையும் விடுத்து நேர்மையான பகிரங்க விவாதத்துக்கு வாருங்கள் என அழைக்கிறோம்.

தேசம்நெற்: வடக்கு கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டால் கிழக்குத் தமிழர்கள் சிறுபான்மையினர் ஆவார்கள். அதனால் கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் அரசியல் லாபம் என்ன ?


ஸ்ராலின்: இது நீங்கள் மட்டுமல்ல பல தேசியவாத இயக்கங்களும் முன்வைக்கும் கேள்வியாகும். நாங்கள் எவ்வளவுதான் ஜனநாயகம் பேசினாலும், எவ்வளவுதான் மனித உரிமைகள் குறித்துப் பேசினாலும், எவ்வளவுதான் இன ஜக்கியம் பேசினாலும் தமிழ் நோக்கில் இருந்து வெளியேவர முடியவில்லை என்பதற்கு ஆதாரம் இக்கேள்விதான். உங்களுக்கு (இக்கேள்விகளுடன் அலைகின்ற எல்லோருக்கும்) தமிழர்களைப் பற்றியே கவலை. கிழக்கு மாகாணத்தின் பல்லின வரலாறு, பாரம்பரியம், சமூகப் பரம்பல் என்ற விடயங்கள் பற்றிய பரிட்சயம் அற்றவர்கள் இப்படித்தான் கேட்க முடியும்.

ஆனால் நாங்கள் தமிழர்கள் என்ற குறுகிய பார்வையுடன் மட்டும் பேசவில்லை. அக்குறுகிய பார்வையுடன் கிழக்கு மாகாணத்தை அணுவது சமூகவியல் ரீதியில் பொருத்த மற்றதொன்றாகும். ‘கிழக்கு மாகாணம் தமிழர்களுக்கு மட்டும் உரிய நிலம் அல்ல. அது தமிழர்களுக்கும் உரிய நிலம்.’ கூடவே முஸ்லிம்களுக்கும், சிங்களவர்களுக்கும், பறங்கியர்களுக்கும், ‘வேடர்கள்’ என்று சொல்லப்படுகின்ற வன சுதந்திர மனிதர்களுக்கும் உரிய நிலம். நாங்கள் கிழக்கு மாகணம் எனக் கூறும் போது வெறும் «தமிழ் நோக்கு அரசியல்» இங்கே பொருத்தமற்றது.

தமிழ் தேசியவாதத்தின் வரவே எங்களிடம் இனப்பகையை மூட்டியது. ஈராயிரம் ஆண்டு கால இன ஒற்றுமையும், சகிப்புத் தன்மையும், கூட்டு வாழ்க்கையும் கொண்டவர்கள் நாங்கள். ஒரு போதும் இனத்தின் பெயரில் ஒரு துளி இரத்தம் சிந்தியதாகக் கூடி வரலாறு இல்லை. இந்த தமிழ் அரசியல், தமிழ் தேசியவாதம் என்பவைகள் என்று கிழக்கில் காலடி எடுத்து வைத்ததோ அன்றில் இருந்துதான் இனங்களிடையே பரஸ்பர சந்தேகமும், இனமுரண்பாடுகளும், இன பகைமையும், கலவரங்களும் அங்கே உருவாகத் தொடங்கின.

ஒரு வரலாற்றுக் குறிப்பை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். 27-04-1977 ஆண்டு கனவான் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களுடைய சாம்பல் கிழக்கு மாகாணத்திற்கு கொண்டுவரப்பட்ட அன்றுதான் முதன் முதலாக வரலாற்றுப் பெருமைமிக்க கிழக்கு மாகாணத்தின் அமைதி குலைத்தெறியப்பட்டது. மூவினங்களும் சேர்ந்துவாழும் அற்புதமான எங்கள் திருகோணமலை இனக்கலவரத்தை அன்றுதான் கண்டது. அன்று தொடங்கிய இரத்தத் துளிகள் இன்றுவரை தொடர்கிறது.


ஆகவே எங்களை முன்புபோல் வாழ விடுங்கள் என்று கேட்கின்றோம். தமிழ் மண் எனும் ஒற்றை அடையாளம் எங்கள் பல்லினத்தன்மைக்கு எதிரானது. தமிழர்களாகவும், முஸ்லிம்களாகவும், சிங்களவர்களாகவும் எமது தனித்துவங்களுடன் நாங்கள் கிழக்கு மாகாணத்தின் மக்களாக வாழ விரும்புகின்றோம். கிழக்கை கிழக்காக இருக்க விடுங்கள்.

தேசம்நெற்: கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட வேண்டும் என்பது உங்களுக்கான அரசியல் அடையாளத்தை தேடும் ஒரு முயற்சியாக நோக்கப்படுகிறது அது பற்றிய உங்கள் கருத்து என்ன ?


ஸ்ராலின்: ஆம் அது எங்களுக்கான அரசியல் அடையாளத்தைத் தேடும் முயற்சியேதான். வடக்கில் இருந்து மொழியின் பெயரால் எம்மீது திணிக்கப்படுகின்ற ஒற்றை அடையாளத்தை நாம் மறுதலிக்கின்றோம். எங்கள் பன்முக அடையாளங்களை தேடியபடி இன்னும் இன்னுமாய் எங்கள் முயற்சி தொடரும்.

Sunday, November 11, 2007

விடுதலைப் புலிகளால் போர் மூலம்...

மக்களை முட்டாளாக்கி வருகிறது
இந்தியச் சாணாக்கியம்!


வணக்கம்,வாசகர்களே!இது தமிழ்ச்செல்வன் படுகொலை குறித்துப் பேராசிரியர்.டாக்டர் சி.சிவசேகரம் அவர்கள் எழுதிய சிறு குறிப்பு.இதுள் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய போராட்ட அணுகுமுறை குறித்த பார்வைகளை, இலங்கையிலிருந்தபடியே பேராசிரியர் பார்க்கின்றார்.இதைத்தான் நாமும் பல ஆண்டுகளாகச் சொல்லி வருகின்றோம்.இருந்தும், புலிகளின் போராட்ட முறைகளிலோ அன்றி மக்களுக்கும் அவர்களுக்குமான உறவுகளிலோ,அணிச் சேர்க்கையிலோ-வெஜனப்படுத்தல்களிலோ,உட்கட்சி ஜனநாயகப் பண்பிலோ இதுவரை மாற்றமில்லை.எனினும்,தொடர்ந்தும் நாம் எழுதியே வருகிறோம்!இங்கே,புலிகளின் போராட்டத்தைத் தீர்மானிக்கும் பிராதான சக்திகள் எவை?



மக்களா?



வெளிபுறச் சக்திகளா?



இந்தக் கேள்விக்கு நாம் ஏலவே பதிலைத் தந்திருக்கிறோம்.மக்களின் எந்தப் பங்களிப்புமின்றித் தம்மால்(புலிகள்) செய்யப்படும் போராட்டத்தால் அதே மக்களைப் பாதிப்படைய வைத்தபடி, அவர்களைக் கேடயமாக்கும் இந்தப் போராட்ட முறையானது சாரம்சத்தில் மக்களின் உரிமைக்கு-விடுதலைக்கெதிரானதென்பதை நாம் மீளவும் அறுதியிட்டுச் சொல்லும் அரசியல் விஞ்ஞானம் உண்மையானதென்பதை பேராசிரியர் சிவசேகரத்தின் கருத்துத்தான் நிறுவவேண்டுமென்பதல்ல.என்றபோதும,; பேராசிரியர் இலங்கை மண்ணில் இருந்தபடி இந்தப் போராட்டத்தை மிக நுணுக்கமாகப் பார்த்து வருபவர்.மக்களின் அழிவுக்குப் பின்பான பாரிய மானுட அவலத்துள் தமிழ் பேசும் மக்களின் சமூக சீவியம் தள்ளப்பட்டபின், மக்களின் ஆன்ம வலுக் குன்றியிருக்கிறது.வாழ்வின் எதிர்பாராத அழிவில் மானுடம் கூட்டுப்பலத்தையிழந்து தவிக்கிறது.மக்கள், போராட்டத்தோடு மானசீகமாகப் பிணையுறாதபோது இத்தகைய தடங்கல்கள் அவர்களையின்னும் போராட்டத்திலிருந்து அன்னியப்படுத்தும்.அதை நாம் இப்போது நேரிடையாகக் காணினும் நமது போராட்ட முறையில் எவ்வித மாற்றமும் நிகழ்ந்தபாடிலில்லை!


இது, எத்தகைய அரசியலை மக்கள் முன் வைத்திருக்கிறது?

மக்களே வரலாற்றைப்படைபவர்களென ஆயிரம் தடவை பட்டியல் போட்டுக் கூறும் புலிகளின் பிரசுரங்கள் அந்த மக்களைப் போராட்டத்திலிருந்து அன்னியப்படுத்தியபடி இதைச் செய்யும் அரசியல்தான் என்ன?

மக்களின் விடுதலையை,அவர்களின் அடிமைத்தனத்தை-தமிழ்பேசும் ஒரே காரணத்தால் அவர்களை ஒடுக்கிவரும் சிங்களப்பாசிச ஒடுக்குமுறையைத்தன்னும், அவர்கள்மீது திணிக்காதிருக்கும் ஒரு காத்திரமான வெகுஜனப் போரை முன்னெடுக்க முடியாது புலிகள் வெறும் இராணுவவாதத்துக்குள் மூழ்கிக்கிடக்கக்காரணம் என்ன?-தமது அதி முக்கியமான தலைவர்களை இழக்கக் காரணமென்ன?அவர்களது மரணத்தில் அரசியல் செய்ய முனையும் பிற்காரணங்கள் என்ன?,மக்களை வெறும் இனவாதத் தீயில் மூழ்கடிக்க முனையும் வியூகம் என்ன?,சிங்கள அரசு செய்யும் அதே காரியத்தைத் தமிழ் மக்கள் மத்தியில் புலிகள் செய்து முடிக்கும் அரசியலிலிருந்து நாம் என்ன அரசியலை எதிர் கொள்கிறோம்?

இங்கேதான் உண்மையொன்றுண்டு!

அதாவது, புலிகள் எந்தப் பொழுதிலும் மக்களின் பிரச்சனைகளிலிருந்து தமது போராட்டப் பாதையைத் தீர்மானிக்கவில்லை.மக்களின் விடுதலைக்காக, மக்களின் வெகுஜனப் போராட்டத்தால் மக்களே ஆயுதம் ஏந்திப் போராட்ட அணியாகமாறியவர்கள் அல்லப் புலிகள்.புலிகள் அன்னிய நலன்களின் அற்ப சலுகைகளுக்காக அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு ஆயுதக் குழுவென்பதற்கு இன்றைய பற்பல நிகழ்வுகள் சாட்சியாகின்றன.இதுவரை புலிகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்ட முன்னெடுப்புகள் யாவும் மக்களின் அழிவை மேன்மேலும் வலுப்படுத்தியதேயொழிய, மாறாக விடுதலையை அல்ல!இது எந்தவொரு விடுதலை அமைப்புக்குள்ளும் நிகழாத எதிர்மறை நிலையாகும்.

புலிகள் மக்களின் நலனைத் தமது எஜமானர்களுக்காக ஏலம்விட்டுப் போரைச் செய்து வருகிறார்கள்.இதிலிருந்து மக்கள் திசைமாறித் தமது விடுதலையைத் தாமே போராடித் தீர்மானித்துக்கொள்ள முடியாதவொரு சர்வதிகாரத்தனமான கருத்தியல் மற்றும் வன்முறைசார் ஜந்திரங்களால் மக்களின் அனைத்து வகை முன்னெடுப்பும் அடித்து நொருக்கப்பட்டுவருகிறது.இதனால் நாம் தொடர்ந்து அன்னிய சக்திகளாலும்,இலங்கைப் பாசிச சிங்கள அரசாலும் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு, திட்டமிட்டு அழிக்கப் படுகிறோம்.இதற்குடந்தையாகப் புலிகளின் அத்துமீறிய யுத்த ஜந்திரம் மிகத் தோதாகச் செயற்பட்டு,மக்களின் உண்மையான எழிச்சியை முடக்கி வருகிறார்கள் என்பதைப் பேராசிரியர் சொல்லாமற் சொல்லுகிறார்.

இதிலிருந்து மக்கள் விடுபடக்கூடிய சூழலை எந்தவொரு சக்தியும் ஏற்படுத்திவிட முடியாதபடி புலிகளினதும் மற்றும் உதிரிக்குழுக்களினதும் ஆனந்தசங்கரிகளினதும்,டக்ளசுகளினதும் எஜமானர்கள் கவனமாக இருக்கிறார்கள்.இதற்காக இவர்கள் தமிழ் மக்களுக்குள் பற்பல குழுக்களைத் திட்டுமிட்டு வளர்த்துவருகிறார்கள்.புலிகளைப் பிரித்துக் கூறுபோட்ட அன்னிய சக்திகள் தத்தமது பலப் பரீட்சையை இலங்கையில் பரிசீலித்துக் கொண்டபோது, இந்தியா தனது கைகளிலுள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி இலங்கையில் பற்பல பொறிகளை-வலையை விரித்து வைத்திருக்கிறது.அதன் தொடர்ச்சியாக இன்று புலம் பெயர்ந்த மண்ணில் ரீ.பீ.சீ. வானொலி, இராமராஜன்,மற்றும் புளட் ஜெகநாதன் போன்ற கிரிமினல்களைப் பயன்படுத்தியும் வருகிறது.இவர்களால் கொட்டப்படும் நச்சுக் கருத்துக்களும், புலிகளால் கொட்டுப்படும் தோட்டாக்களும் சாரம்சத்தில் ஒன்றாகவே இருக்கிறது.

ஆனால், புலிகளை இந்த இந்தியக் கைக்கூலிகள் எதிர்பதுபோன்று நடிக்க வைத்து, மக்களை முட்டாளாக்கி வருகிறது இந்தியச் சாணாக்கியம்.புலிகளுக்கெதிரான மக்களின் தார்மீகப் போராட்டமானது சுயவெழிச்சியோடு தமது போராட்டத்தைத் தாமே தீர்மானிக்கும் சூழலைத் தடுத்தபடி புலிகளுக்கெதிராகக் குரல் கொடுப்பதாக நடிக்கும் இந்தியாவின் கைக்கூலிகளிடம் மக்கள் மீளவும் வீழத் தகவமைக்கப்பட்ட பொறியில் மக்களைக் காவு கொள்ள இந்தியா முயல்கிறது.இந்தக் கைக் கூலிகளே,தமிழ்பேசும் மக்கள் இலங்கையின் ஓட்டுக் கட்சிகளோடு சமரசம் செய்து அதிகாரப் பகிர்வைப் பெறவேண்டுமென்று விவாதிக்க,அதையும் இராமராஜன் "ஆமா,ஆமா" என்றபடி ஆமோதிக்கும் "அரசியில்"கலந்துரையாடல்கள் வேறு மக்களிடம் கொட்டப்படுகிறது.இத்தகைய கபோதிகள் ஆயுதத்தை மறைத்து வைத்திருக்கும் புலிகள்தான்.இவர்கள் புலிகளை எதிர்பதுபோன்று நடித்தபடி மக்களைக் காவு கொள்ளும் இந்தியாவின் இன்னொரு வடிவம்.

இதையெல்லாம் புரிந்துகொண்டு மக்கள் தமது தலைவிதியைத் தாமே தீர்மானிக்கக் கூடியவொரு சூழலை எங்ஙனம் இனம் காட்ட முடியும்?


பேராசிரியரின் கட்டுரையில் இத்தகைய கேள்வி தொக்கி நிக்கிறது.


படித்துப்பாருங்கள்.

கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.கருத்துக்கள் மக்களை வலுப்படுத்தும்.ஒருமைப்படுத்தும்-உண்மைகளை இனம் காட்டும்.

அப்போது, மக்கள் தமது எதிரிகள் தமக்குள் எந்தெந்த வடிவத்திலிருக்கிறார்கள் என்று புரியும்போது,தமது விடுதலையைச் சாத்தியப்படுத்தும் வழியைத் தாமே கண்டடைவார்கள்.இதுவே, நம் முன் உள்ள இன்றைய மிக முக்கியமான பணி.


அன்புடன்,
பரமுவேலன் கருணாநந்தன்
11.11.2007




மறுபக்கம் :

//அரசாங்கத்தால் விடுதலைப் புலிகளைப் போரால் அழிக்க
முடியாது என்ற கருத்தையிட்டு மகிழுகிறவர்கள் விடுதலைப் புலிகளால் போர் மூலம்
மட்டுமே அரசாங்கத்தைத் தோற்கடித்து தமிழ் மக்களின் உரிமைகளை வெல்ல இயலாது என்ற
உண்மையையும் உணரவேண்டும்.//



-பேராசிரியர்.டாக்டர்.சி.சிவசேகரம்.


தமிழ்ச்செல்வனும் பிற விடுதலைப் புலி முக்கியஸ்தர்களும் குண்டு வீச்சில் கொல்லப்பட்டது பற்றிய கருத்துக்களில் எதிர்பார்க்கக்கூடிய விதமான தீவிர வேறுபாடுகள் காணப்பட்டன. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதில் வருத்தம் எதுவுமில்லையென்று யூ.என்.பி. பிரமுகர் எஸ்.பி.திஸாநாயக்கா சொல்லியிருந்தார். அவரது கோபம் யூ.என்.பி.வேட்பாளர் சென்ற சனாதிபதித் தேர்தலில் வெல்லத் தடையாக இருந்தவர் தமிழ்ச் செல்வன் என்பது பற்றியது. சகட்டு மேனிக்கு அவர் அமைதிப் பேச்சுவார்த்தைகளின்போது தமிழ்ச்செல்வன் கடும் போக்கைக் கடைப்பிடித்தார் என்ற விதமாக சொல்லியிருக்கிறார். அரசாங்கத்தையும் வான்படையையும் பொறுத்தவரை இது அநுராதபுர நிகழ்வுக்குப் பிரதியான ஒரு பதிலடி என்று பெருமைப்படுகிறார்கள். ஜே.வி.பி.யும், ஹெல உறுமயவும் எதிர்பார்த்த விதமாகவே மெச்சி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.




தம்மை எதிர்நோக்குங் கேள்விகளில் அடிப்படையானது இக் குண்டு வீச்சு அரசாங்கத்தின் தரப்பிற் கூறப்படுவதுபோல உளவுத் தகவல்களின் அடிப்படையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலா என்பது. அப்படியென்றால் ஆயுதம் தாங்காத எதிரிகள் மீதும் தொடுக்கப்பட்ட ஒரு தாக்குதலான இது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல என்பது என்னுடைய நிலைப்பாடு. மாறாக வேறு சிலர் சொல்வது போல, இது வழமைபோல் மக்கள் குடியிருக்கும் இடங்களிலும் பொதுக் கட்டிடங்களிலும் பொழியப்படும் குண்டுமழை என்றாலும், இது அதேயளவு தவறானது. அப்பாவிப் பொது மக்களும் போரில் நேரடியாகப் பங்கு பற்றாதவர்களும் இவ்வாறு கோழைத்தனமாகக் கொன்றொழிக்கப்படுவது ஏற்க இயலாது.
லெபனானில் இஸ்ரேலியக் குண்டுவீச்சாகட்டும் சில மாதங்கள் முன்னர் அமெரிக்கா சோமாலியாவில் நடத்திய குண்டுவீச்சாகட்டும், வியற்நாம் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பின்போது வியற்நாமிலும் லாவோஸிலும் காம்போஜத்திலும் நடந்த குண்டுவீச்சுகளாகட்டும் இன்று ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நடக்கிறவையாகட்டும் எல்லாமே நிபந்தனையற்ற கண்டனத்திற்குரியன. குறுகிய காலத்தில் அவை பெற்றுத்தருகிற நன்மைகளால் மகிழ்ச்சி பெற்றவர்கள் நீண்ட காலத்தில் பெரும் இழப்புக்களையும் தோல்விகளையே கண்டுள்ளனர்.


மாக்ஸியவாதிகள் இவ்விடயத்தில் எப்போதுமே தெளிவாக இருந்துள்ளனர். போர்களும் ஆயுதப்போராட்டங்களும் தவிர்க்க இயலாதவை என்று அவர்கள் கூறி வந்தபோது அதை ஏற்க இயலாது. இந்திய மதங்களும் பண்பாடும் வன்முறையை ஏற்க மாட்டா என்றும்; பவுத்தம் அகிம்சையைப் போதிப்பதால் இலங்கையில் வன்முறைக்கு வாய்ப்பேயில்லை என்று சொல்லப்பட்டது. இது எவ்வளவு தூரம் உண்மை என்பது இரண்டு நாடுகளிலும் சோதிக்கப்பட நீண்ட காலமாகவில்லை. அரச வன்முறை, மேலாதிக்க வாதிகளின் சாதிய வன்முறை, மதவாத வன்முறை என்பன இன்று நாளாந்த நிகழ்வாகிவிட்டன. அவற்றுக்கு எதிராக மக்கள் எழுச்சிகளும் தவிர்க்க இயலாமலே ஆயுத எழுச்சிகளாகிவிட்டன.


ஆயுதப் போராட்டம் என்பது குருட்டுத் தனமான வன்முறையல்ல. தனிமனிதப் படுகொலைகளால் விடுதலையை வென்றெடுக்க இயலாது. உயிரிழப்புகள் தவிர்க்க இயலாதன என்றாலும் தவிர்க்கக்கூடிய ஒவ்வொரு உயிரிழப்பும் தவிர்க்கப்படவேண்டும். இவை பற்றிய தெளிவும் உடன்பாடும் உள்ளவர்கள் தமது நிலைப்பாட்டில் தெளிவாகவும் தடுமாற்றத்திற்கு இடமில்லாமலும் நடந்துகொள்ளுகின்றனர். அரசியற் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் இவ்வாறான விடயங்களில் அறஞ்சார்ந்து கருத்துரைக்கின்றனர். உதாரணமாக கதிர்காமரின் கொலையை எவ்வளவு வன்மையாகக் கண்டிக்க முடிந்ததோ. அதேயளவு வன்மையுடன் ரவிராஜின் கொலையையும் கண்டிக்க முடிந்தது. ஒவ்வொரு பத்திரிகையாளரதுங் கொலையையுங் கண்டிக்க முடிந்தது. எந்தவொரு கொலையினதும் கண்டனமும் கொலை முயற்சி பற்றிய கண்டனமும் கொல்லப்பட்டவரது அரசியலையோ கொலை முயற்சிக்குட்பட்டவரின் அரசியலையோ பற்றிய கருத்தில் எவ்விதமான தளம்பலுக்கும் இடமளிக்கவில்லை.


நாடு பிரகடனம் செய்யப்படாத ஒரு போரினுள்ளும் நாளாந்தம் உக்கிரமடைந்துவரும் பொருளியல் நெருக்கடிக்குள்ளும் சிக்கித் தவிக்கின்ற ஒரு சூழலில் கிளிநொச்சிக் குண்டு வீச்சின் பின் விளைவுகள் நிம்மதிக்கு இடமளிப்பனவாகவே இருக்க முடியாது. எனவேதான், அது பற்றிய கண்டனம் அரசியல் கண்ணோட்டத்தில் முன்வைக்கப்பட வேண்டியுள்ளது. அது எவ்வகையான அரசியல் என்பது முக்கியமானது.


இப்போது விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுவோரின் கொலைகளைக் கண்டித்தவர்களில் எத்தனை பேர் கிளிநொச்சிக் குண்டு வீச்சை கண்டிக்க ஆயத்தமாயுள்ளனர்.? கண்டிக்காததுபோகட்டும் ஏதோ ஒரு பெரிய சாதனை என்று பேசுகிறார்களே. இவர்களில் எவருக்கும் எந்தப் படுகொலையும் கண்டிக்க என்ன யோக்கியம் உண்டு என்று யோசித்துப் பார்ப்போம். இவர்களில் எவருமே `சரி, பிழை' என்பதை `நாங்கள்- அவர்கள்' என்ற அடிப்படையிலேயே பார்க்கிறார்கள். எனவேதான் இவர்களில் எவருக்கும் எளிய உண்மைகள் நினைவுக்கு வருவதில்லை. சிறைப்பிடிக்கப்பட்ட ஜே.வி.பி. தலைமைப்பீடம் முழுவதும் யூ.என்.பி. ஆட்சியாளர்களால் கொன்று குவிக்கப்பட்டது. இதை ஜே.வி.பி. தலைமை தவறு என்று கருதுகின்றது என்பதைவிட ஒரு கொடிய கொலை, பாதகம் என்று கருதுவதாகச் சொல்வது அரசாங்கத்தினது பார்வையிலும் பிற கட்சிகள் சிலவற்றினதும் கண்களில் தெரிவதுபோலவும் பொருந்தும். பயங்கரவாதிகளாகவே நடந்துகொண்ட அந்தத் தலைப்பீடத்தின் படுகொலை நியாயமானதா? ஜே.வி.பி.யும் அரசாங்கமும் மோதிய அந்த இரண்டு ஆண்டுகளில் நடக்காத பயங்கரமா? செய்யப்படாத கொடுமைகளா? ஜே.வி.பி.தான் செய்த படுகொலைகளை நியாயப்படுத்தியதுபோல யூ.என்.பி. ஆட்சியாளர்களும் தாங்கள் செய்த படுகொலைகளை நியாயப்படுத்தினார்கள். இன்றுங்கூடத் தாங்கள் செய்த குற்றங்களை ஏற்கத் துணிவில்லாத கட்சிகள் தாம் இவை.


தமிழ் மக்களிடையிலும் இவ்வாறான ஒரு போக்கை நாம் காணலாம். இன்றுவரை எந்தவொரு படுகொலையையும் எந்த அரசியற் கட்சியுங் கண்டிக்கிறது என்றால் அக்கொலை அவர்களுக்கு உடன்பாடற்றவர்கள் செய்ததாயிருக்கும் என்று நம்பக்கூடியவாறே அவர்கள் நடந்துவந்துள்ளனர்.
ஒரு அடக்கு முறை ஆட்சிக்கு அறம் பற்றித் தெரியாமல் இருக்கலாம். அது தவறுக்கு மேல் தவறுசெய்துகொண்டு போகிறதற்கு அதற்கு அறம் இல்லாமை ஒரு முக்கிய காரணம். ஆனால், விடுதலைப் போராட்டங்களிற்கு அறங்கள் உள்ளன. அவற்றைப் புறக்கணிக்கிறபோது அவற்றின் நியாயம் பலவீனமடைகிறது.


ஒரு விடுதலைப் போராட்டம் தனது மக்களைச் சார்ந்து நிற்கும் வரை அதை யாருமே முறியடிக்க இயலாது. தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டம் இவ் விடயத்தில் தொடக்கத்திலிருந்தே பல தவறுகளைச் செய்து வந்துள்ளது. தமிழ் மக்களிடையே இருந்த மேட்டுக் குடிகளின் நலன்களை மட்டுமே கருத்திற்கொண்டு செயற்பட்ட தலைமையை மக்கள் நிராகரித்தபோது ஒரு வெகுசனப் போராட்டத்திற்கும் ஒரு வெகுசன அரசியலுக்குமான வாய்ப்பு ஏற்பட்டது. அது நடக்காத விதமாகத் தடுத்தது என்ன? இயக்கங்களின் அரசியல் சிந்தனை பழைய தலைமையின் தவறான சிந்தனைகள் பலவற்றை களையத் தவறியமையா? இயக்கத் தலைவர்களின் முதிர்ச்சியின்மையால் அவற்றினிடையே இருந்துவந்த போட்டி பொறாமைகளா? இயக்கங்களின் தலைமைகளின் பலவீனங்களை நன்கு அறிந்து அவற்றினிடையே போட்டியையும் பகைமையையும் ஊக்குவித்து தனது எடுபிடிகளாக அவற்றை மாற்றுகிற நோக்கிற் செயற்பட்ட ஒரு பிராந்திய வல்லரசினது சதி வேலைகளா? இவை எல்லாமே பங்களித்திருந்தாலும் மக்களே பிரதானமான வரலாற்றுச் சக்தி என்பதை இயக்கங்கள் அன்றுமுதல் இன்றுவரை ஏற்க மறுத்தமையே விடுதலைப் போராட்டத்தின் அடிப்படையான பலவீனமாகும். அண்மைய இழப்புக்களின் காரணங்களைத் துரோகங்கள் பற்றிப் பேசலாம். துரோகிகள் என்று கருதப்பட்டவர்களை அழிக்கலாம். துரோகங்கள் நிற்கப்போவதில்லை. அவை பெருகுமே ஒழியக் குறையா. போராளிகட்கும் துரோகிகட்கும் ஊட்டம் மக்கள் மத்தியிலிருந்தே கிடைக்கிறது. ஒரு விடுதலைப் போராட்டம் ஏகப் பெரும்பான்மையான மக்களைத் தன்பக்கம் திருப்புவதன் மூலம் துரோகிகளைத் தனிமைப்படுத்துகிறது. துரோகம் செய்த பலர் மனந்திருந்த வாய்ப்பேற்படுகிறது. புதிய துரோகிகள் உருவாகிறதற்கான வாய்ப்புக்களை இல்லாமற் செய்கிறது.


துரோகம் எது? துரோகிகள் யாரென்ற முடிவை மக்களே எடுக்க வேண்டும். யாரை எவ்வாறு தண்டிப்பதென்கிற முடிவு மக்களிடம்விடப்பட வேண்டும். இன்று தமிழ் மக்களுக்கு எதிரான மிலேச்சத்தனமான தாக்குதலில் அதிகளவிற் பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவி மக்களே. எத்தனையோ அப்பாவிகளைக் கொன்று குவித்து அதைவிடப் பெருந்தொகையானோரை வாழ வழியற்றோராக்கியுள்ள அரசாங்கம் ஒரு அரசியற் படுகொலையை வெற்றி என்று கொண்டாடுகிறது. இதன் மூலம் இதற்கு முன் விமானங்கள் இலக்கு வைத்துத் தாக்கியவை எல்லாம் போராளிகளின் வதிவிடங்களல்ல. மாறாக பொதுமக்களின் வாழ்விடங்களே என்ற உண்ைம வெளிவராமல் தடுக்கப்படுகிறது.


அரசாங்கத்தால் விடுதலைப் புலிகளைப் போரால் அழிக்க முடியாது என்ற கருத்தையிட்டு மகிழுகிறவர்கள் விடுதலைப் புலிகளால் போர் மூலம் மட்டுமே அரசாங்கத்தைத் தோற்கடித்து தமிழ் மக்களின் உரிமைகளை வெல்ல இயலாது என்ற உண்மையையும் உணரவேண்டும். அது விடுதலைப் புலிகளின் ஆயுத வலிமையோ போர்த்திறனோ பற்றிய அடிப்படையிலன்றிக் பிற உள்நாட்டு, வெளியுலக நிலவரங்களினதும் அடிப்படையும் நாம் வந்தடையக் கூடிய முடிவு.


போர் மட்டுமே போராட்டமல்ல என்பது பற்றியும் பொதுமக்களைப் போராட்டத்தின் பிரதான பகுதியாக்குவதன் தேவை பற்றியும் உலக வரலாறு நிறையவே கூறுகிறது. நாம் கற்பது எப்போது?


-பேராசிரியர்.டாக்டர்.சி.சிவசேகரம்


நன்றி:தினக்குரல்

Monday, November 05, 2007

விழுந்து கிடந்ததாகக் காணப்பட்ட பி.கே.கே. எவ்வாறு மீள எழுந்தது...

மறுபக்கம்


//தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் பலவேறு துரோகங்களால் இழப்புகளைச்
சந்தித்துள்ளது. அவற்றை தண்டிப்பதை விட முக்கியமானது அவ்வாறான தவறுகள் தொடராமல்
தடுப்பது. அது வெகுசன அரசியலாலேயே இயலுமானது. அதே அளவு முக்கியமானது விடுதலைக்கான
போராட்டங்கள் அனைத்திற்கும் உள்ள பொது எதிரிகளை தேசிய மட்டத்திலும் சர்வதேச
மட்டத்திலும் மக்களுக்கு அடையாளங்காட்டுவது. எதிரியைத் தனிமைப்படுத்துவது என்பது
ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்து செய்கிற காரியமல்ல. எதிர்த்து நின்றே அதைச் செய்ய
முடியும். //


பல வேளைகளிற் போர்கள் ஏன் தொடக்கப்பட்டன என்பது பற்றிய நினைவே அழிந்து போய்ப் போர்கள் தொடர்கின்றன. போருக்கு கற்பிக்கப்படுகிற காரணங்களும் வேறுபடுகின்றன. அமெரிக்கா ஈராக்கில் தொடக்கிய போர் ஈராக்கில் உள்ள பேரழிவுப் போர்க்கலங்களை இல்லாதொழிப்பதாகத் தொடங்கி ஈராக்கில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக என்று மாறி, இன்று பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பேரில் தொடருகிறது. அமெரிக்காவின் ஆள்வலிமையும் ஆயுதவலிமையும் போரை வெல்ல உதவவில்லை என்றால் அதற்கான காரணம் ஈராக்கோ சிரியாவோ அல்ல.



இரண்டு அடிப்படையான காரணங்களே முக்கியமானவை. அமெரிக்கப் படைகளின் இருப்பை ஈராக்கின் மக்கள் வெறுக்கின்றனர். விடுதலைப் போரை மக்கள் ஆதரிக்கின்றனர். அமெரிக்கா இதுவரை ஈராக்கின் மக்களைப் பிளவுபடுத்தி ஒருவரோடு ஒருவர் மோதவிடுவதிலும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு இடமே இல்லாத ஒரு மண்ணில் அவர்களுக்கு ஒரு இடத்தை உருவாக்கியதிலும் ஒரு வகையான வெற்றியைப் பெற்றிருக்கிறது. இவற்றைக் கொண்டு விடுதலைப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தவும் ஆக்கிரமிப்பை நீடிக்க ஒரு நியாயத்தைக் காட்டவும் இயலுமாக இருந்தது. ஆனாலும், அமெரிக்கா உருவாக்கிய பூதங்கள் அமெரிக்காவுக்குப் புதிய தலைவலிகளை ஏற்படுத்தியுள்ளன. இது எல்லா ஆதிக்கவாதிகளுக்கும் நடப்பது.



இன்று அமெரிக்காவுக்கு ஆதரவாக ஒரு சமூகம் ஈராக்கில் இருக்கிறதென்றால் அது ஈராக்கின் குர்திய சமூகம் தான். அமெரிக்கா 16 ஆண்டுகள் முன்னர் நடத்திய ஆக்கிரமிப்பை அடுத்து ஈராக்கின் வடக்கிலும் தெற்கிலும் ஈராக்கின் அரசாங்கத்தின் படைகளின் கட்டுப்பாடு இல்லாது போயிற்று. இதனைப் பயன்படுத்திக் குர்திய சமூகம் ஈராக்கின் வட பகுதியில் ஒருவாறான சுயாதிபத்தியத்தை அமெரிக்க உதவியுடன் மெல்லமெல்ல உருவாக்கிக் கொண்டது. அமெரிக்க ஆக்கிரமிப்பின் போது அமெரிக்காவுக்கு முழு ஆதரவாகக் குர்திய தேசிய இனத்தின் தலைமைகள் செயற்பட்டன.


//விழுந்து கிடந்ததாகக் காணப்பட்ட பி.கே.கே. எவ்வாறு மீள எழுந்தது என்று நாம்
சிந்திக்க வேண்டும். பி.கே.கே.நண்பனையும் எதிரியையும் வேறுபடுத்திக் காணுகிறது.
மாற்றுக் கருத்துடைய, குர்திய விடுதலைப் போராட்டத்தை ஆயுதமேந்தி முன்னெடுப்பதை
நிராகரிக்கிற, குர்தியர்களைக் கூட அது எதிரிகளாகக் காணவில்லை. அதேவேளை,
துருக்கியப்படையினருடன் குர்தியர்களின் அரசியல் நிறுவனம் எதுவும் ஒத்துழைக்காத
விதமாக அரசியற்பணிகளை வெகுசனத் தளத்தில் முன்னெடுக்கிறது. தனது தவறுகளிலிருந்து
கற்கிறது. துரோகிகளைத் தண்டிப்பதைவிடத் தனிமைப்படுத்துவதிற் கவனங்காட்டுகிறது.
//

எனவே, அவர்களை மகிழ்விக்கிற விதமாகவும் தனக்குள் ஒரே ஆதரவுத் தளத்தை வலுப்படுத்து முகமாகவும் அமெரிக்கா ஈராக்கின் ஆட்சி அதிகாரத்தில் குர்தியத் தலைமைகட்கு ஒரு கணிசமான பங்கையும் குர்தியப் பிரதேசங்களில் ஏறத்தாழ ஒரு சுயாட்சியும் உருவாக உதவியது.
ஈராக்கினுள் நுழைய இருந்த அடிப்படையானதும் அறிவிக்கப்படாததுமான அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறவில்லை. ஈராக்கின் எண்ணெய் வளத்தைத் தமதாக்கிக் கொள்ளக் காத்திருந்த அமெரிக்க எண்ணெய்க் கம்பனிகள் இப்போது குர்தியப் பகுதியிலுள்ள எண்ணெயைத் தமதாக்கிக் கொள்வதில் கவனங்காட்டின. அந்த நோக்குடன் செய்யப்பட்ட ஒரு உடன்படிக்கை இன்று ஈராக்கிய ஆட்சியாளர்களின் கடும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.

மறுபுறம் துருக்கியின் குர்திய சமூகத்தின் விடுதலை இயக்கமான குர்திய தொழிலாளர் கட்சியின் (பி.கே.கே.) தலைவரான ஒச்சலான் சிறைப்பிடிக்கப்பட்டதையடுத்தும் சோர்வு கண்டிருந்த பி.கே.கே. போராளிகள் துருக்கிய ஆட்சியாளர்களுடனான சமரசங்கள் பயனற்றுப்போன நிலையில் மீண்டும் ஆயுதமேந்திப் போராடத் தொடங்கியுள்ளனர். ஈராக்கின் குர்திய சமூகத்தினரிடையே ஆதரவுத்தளம் இல்லாதபோதும் வட ஈராக்கினுள் பி.கே.கே.போராளிகள் தஞ்சம் அடைவதையும் தளங்கள் அமைப்பதையும் அவர்கள் ஏற்றுக் கொண்டனர். இதனால் அவர்கட்கு எதிராக ஈராக்கிய அரசாங்கத்தாலோ ஈராக்கின் குர்தியத் தலைமைகளாலோ எதுவுமே செய்ய இயலவில்லை. இதனால் அமெரிக்காவின் நிலை `இரண்டு பெண்டாட்டிக்காரன் பாடு' என்கிற மாதிரி ஆகிவிட்டது. பி.கே.கே. தனது ஏகாதிபத்திய எதிர்ப்பால் எவ்வகையிலும் கட்டப்படவில்லை.



பி.கே.கே.என்றும் அமெரிக்காவுக்கு வேண்டாத ஒரு `பயங்கரவாத' இயக்கம். துருக்கிய ஆட்சியாளர்கள்' குறிப்பாகத் துருக்கிய இராணுவத்தினர் அமெரிக்காவின் மிக நெருங்கிய நண்பர்கள் . எனவே, ஒரு பொது எதிரியாக பி.கே.கே. உள்ளது. ஆனால், இன்று ஈராக்கில் அமெரிக்காவுக்கு எஞ்சியுள்ள ஒரே வெகுஜன ஆதரவுத்தளமும் அமெரிக்கப் படைகளுக்குப் பாதுகாப்பான பகுதியாகவும் உள்ளது. வட ஈராக்கின் குர்தியப் பகுதிகள். அவர்கள் தந்திரோபாயமாக வேனும் இன்று அமெரிக்காவுக்கு மிக அவசியமான நட்புச் சக்திகள் .


//அவர்கள் இன்னமும் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் மனந்திருந்தித் தமிழ்
மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் என்று எதிர்பார்ப்பவர்களாகவோ தேசிய இன
விடுதலையை ஒரு இடதுசாரி அமைப்பு முன்னெடுப்பதை விரும்பாதவர்களோ இருப்பார்களாயின்
அதில் வியக்க ஒன்றும் இல்லை. ஏனெனில், தமிழ்ச் சமூகத்திற் பெரும் பகுதி இன்னமும்
தனது பழமைவாதச் சிந்தனையிலிருந்து விடுபடவில்லை. இன்னமும் தமிழரின் வசதி படைத்த
வர்க்கத்தினரிடையே `வெள்ளைக்காரர் நியாயமானவர்கள்' என்கிற சிந்தனைப்போக்கு வலுவாகவே
உள்ளது. தமிழ் ஈழ விடுதலையையும் விடுதலைப் புலிகளையும் ஆதரிப்பதாகக் கூறிக் கொண்டே
நேபாள மாஓவாதிகள் பற்றிய வலதுசாரி அவதூறுகளைக் கிளிப்பிள்ளைகள் போலத்திருப்பிச்
சொல்வது நமது ஊடகங்களில் வழமையாகியுள்ளது. விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல
என்று பிரகடனஞ் செய்து கொண்டே நேபாள மாஓவாதிகளையும் பிற விடுதலைப் போராளிகளையும்
பயங்கரவாதிகள் என்று சொல்ல இயலுமாகிறது. இந்த இரண்டக நிலைக்குக் காரணம் அவர்களது
சமூகப் பார்வையே.//




பி.கே.கே.யை ஏற்காவிட்டாலும் அதற்கு எதிரான எந்த நடவடிக்கையையும் அம்மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். அதைவிடவும் ஈராக்கிய அரசாங்கம் ஈராக்கினுள் துருக்கியப் படைகள் விரும்பியபடி நுழைவதை ஏற்காது. எனவே, பி.கே.கே.யை துருக்கிய மண்ணில் மட்டுமே எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குள் துருக்கியப் படைகள் இருந்து வந்துள்ளன.


மீண்டும் வலுப்பெற்று வருகிற பி.கே.கே.அண்மையில் துருக்கியப் படையினருடன் மோதிப் படையினர் தரப்பில் கணிசமான உயிர்ச் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது துருக்கிய ஆட்சியாளர்கட்குச் சங்கடமாகியுள்ளது. துருக்கிய ஆட்சியாளர்கள் பி.கே.கே. மீதான தமது தாக்குதல்கட்கு ஈராக்கிய ஆட்சியாளர்களது சம்மதத்தைப்பெற வேண்டும். பேச்சுவார்த்தைகள் மூலம் உடன்பாடு காணப்பட்டாலும், துருக்கியப்படைகளின் இராணுவ நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதது. அத்துமீறல்கட்கே வழி செய்யும். எனவே, அமெரிக்காவின் நிலை மேலும் அந்தரமாகும்.
மறுபுறம், துருக்கியில் இராணுவத்தின் அதிகாரத்திற்கு எதிரான உணர்வுகள் வலுப்பெற்று வருகின்றன. ஒரு பக்கம் மதவாத அரசியல் வலுவடைகிறது. இன்னொரு பக்கம் மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகளின் குரல் வலுவடைகிறது. இரண்டும் இராணுவம் அரசின் அலுவல்களில் ஆதிக்கஞ் செய்வதை விரும்பாத போக்குக்களாகவே அமையும். அதைவிட அமெரிக்காவின் இஸ்லாமிய விரோதப் போக்கும் துருக்கிக்குள் புதிய எதிர்ப்புச் சக்திகளை உருவாக்கிவிடும்.


துருக்கிய இராணுவ நடவடிக்கைகள் வட ஈராக்கில் கொந்தளிப்பான சூழ்நிலைகட்கே வழி கோலும். எனவே, ஈராக்கின் பிற பகுதிகளில் தடுமாறி நிற்கிற அமெரிக்காவால் ஈராக்கில் ஐக்கியத்தைப் பேண முயன்றாலும் தொல்லைப்படும். தான் முன்பு திட்டமிட்ட படி பிளவுபடுத்தி மூன்று மாநிலங்களாக்கித் தன் ஆதிக்கத்தைச் செலுத்த முயன்றாலும் தொல்லைப்படும்.


சென்ற நூற்றாண்டின் இறுதியில் பி.கே.கே. முடிந்து விட்டது என்ற கருத்து பலரிடம் வலுவாக இருந்தது. அது பற்றி மகிழ்ச்சி அடைந்தோர் அமெரிக்க, துருக்கிய ஆட்சியாளர்களும் பிற மேலாதிக்கவாதிகளும் மட்டுமல்ல. தங்களைத் தமிழ்த் தேசிய இன விடுதலைக்கு ஆதரவானவர்களாகச் சொல்லிக் கொள்கிற சில ஆய்வாளர்களுந்தான். துருக்கிய கம்யூனிஸ்ற்றுக்களை வெறுப்பவர்களாகத் தொடங்கிச் சில காலப் போராட்ட அனுபவத்தின் பின்பு அவர்களுடைய நட்புச்சக்தியாக மாறித் துருக்கியில் சனநாயகத்திற்கும் மனித உரிமைகட்கும் ஏகாதிபத்திய எதிர்ப்புக்குமான போராட்ட அணியில் ஒரு அங்கமாகவும் குர்திய மக்களின் சுய நிர்ணயத்திற்கும் சமூக விடுதலைக்குமான ஒரு போராட்டச் சக்தியை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தைத் தீவிரமாக எதிர்த்து நிற்கிற ஒரு விடுதலை இயக்கத்தை, ஏன் அவர்கள் வெறுக்கின்றனர் என நாம் கவனிக்க வேண்டும்.



அவர்கள் இன்னமும் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் மனந்திருந்தித் தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் என்று எதிர்பார்ப்பவர்களாகவோ தேசிய இன விடுதலையை ஒரு இடதுசாரி அமைப்பு முன்னெடுப்பதை விரும்பாதவர்களோ இருப்பார்களாயின் அதில் வியக்க ஒன்றும் இல்லை. ஏனெனில், தமிழ்ச் சமூகத்திற் பெரும் பகுதி இன்னமும் தனது பழமைவாதச் சிந்தனையிலிருந்து விடுபடவில்லை. இன்னமும் தமிழரின் வசதி படைத்த வர்க்கத்தினரிடையே `வெள்ளைக்காரர் நியாயமானவர்கள்' என்கிற சிந்தனைப்போக்கு வலுவாகவே உள்ளது. தமிழ் ஈழ விடுதலையையும் விடுதலைப் புலிகளையும் ஆதரிப்பதாகக் கூறிக் கொண்டே நேபாள மாஓவாதிகள் பற்றிய வலதுசாரி அவதூறுகளைக் கிளிப்பிள்ளைகள் போலத்திருப்பிச் சொல்வது நமது ஊடகங்களில் வழமையாகியுள்ளது. விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல என்று பிரகடனஞ் செய்து கொண்டே நேபாள மாஓவாதிகளையும் பிற விடுதலைப் போராளிகளையும் பயங்கரவாதிகள் என்று சொல்ல இயலுமாகிறது. இந்த இரண்டக நிலைக்குக் காரணம் அவர்களது சமூகப் பார்வையே.



மேற்கூறியவாறான தமிழர் விடுதலை ஆதரவாளர்களது பார்வை குறுகலானது. அவர்களால் தமிழ்மக்களின் விடுதலையை உலக வரலாற்றில் வைத்து நோக்க இயலுவதில்லை. பிற ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கண்ணோட்டத்தில் நோக்க இயலுவதில்லை. தமிழ் மக்களிடையே உள்ள ஒடுக்குமுறைகளினதும் பலவேறு முரண்பாடுகளதும் முக்கியத்துவத்தை முன்வைத்து ஆராய இயலுவதில்லை.




விழுந்து கிடந்ததாகக் காணப்பட்ட பி.கே.கே. எவ்வாறு மீள எழுந்தது என்று நாம் சிந்திக்க வேண்டும். பி.கே.கே.நண்பனையும் எதிரியையும் வேறுபடுத்திக் காணுகிறது. மாற்றுக் கருத்துடைய, குர்திய விடுதலைப் போராட்டத்தை ஆயுதமேந்தி முன்னெடுப்பதை நிராகரிக்கிற, குர்தியர்களைக் கூட அது எதிரிகளாகக் காணவில்லை. அதேவேளை, துருக்கியப்படையினருடன் குர்தியர்களின் அரசியல் நிறுவனம் எதுவும் ஒத்துழைக்காத விதமாக அரசியற்பணிகளை வெகுசனத் தளத்தில் முன்னெடுக்கிறது. தனது தவறுகளிலிருந்து கற்கிறது. துரோகிகளைத் தண்டிப்பதைவிடத் தனிமைப்படுத்துவதிற் கவனங்காட்டுகிறது.


தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் பலவேறு துரோகங்களால் இழப்புகளைச் சந்தித்துள்ளது. அவற்றை தண்டிப்பதை விட முக்கியமானது அவ்வாறான தவறுகள் தொடராமல் தடுப்பது. அது வெகுசன அரசியலாலேயே இயலுமானது. அதே அளவு முக்கியமானது விடுதலைக்கான போராட்டங்கள் அனைத்திற்கும் உள்ள பொது எதிரிகளை தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் மக்களுக்கு அடையாளங்காட்டுவது. எதிரியைத் தனிமைப்படுத்துவது என்பது ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்து செய்கிற காரியமல்ல. எதிர்த்து நின்றே அதைச் செய்ய முடியும்.

பேராசிரியர்.சி.சிவசேகரம்

நன்றி:தினக்குரல்

Tuesday, October 23, 2007

மு.மயூரனின் கேள்வியை முன்வைத்துச் சில கருத்துக்கள்.

மு.மயூரனின் கேள்வியை முன்வைத்துச் சில கருத்துக்கள்.


"மக்கள் போராட்டம் என்றால் என்ன?"


//மக்கள் போராட்டம் என்றால் என்ன, அது எப்படி இருக்கும் என்று நீங்கள் யாராவது விளங்கப்படுத்தினால் நன்றாக இருக்கும். வெறுமனே அந்த சொல் எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அதன் ஆழம் யாருக்கும் புரிவதாயில்லை.//


இன்று, நிலவுகின்ற அமைப்பினால் மக்கள் இனங்களில் அதிகமான பகுதி மக்கள் உயிர்வாழ்வதற்காக ஓடாய் உழைத்து வாழவேண்டியிருக்கிறது.அப்படி உழைத்தாலும் சம்பாத்தியம் உயிர் வாழ்வுக்கான அதிமுக்கியமான மனிதாயத் தேவைகளைப்(உணவு,உடை,உறையுள்,மருத்துவம்,கல்வி,ஆன்மீக வளர்ச்சி)பூர்த்தி செய்வதற்கே முடியாத திண்டாட்டமாக இருக்கிறது.எனினும், "எனக்குக் கூலியைக் கொஞ்சம் கூட்டித் தாருங்கள"; என்று கேட்பது,நிலவுகின்ற விலைவாசிகளினதும்-பணவீக்கத்தினதும் விளைவுகள்தான் என்பதால் அது நியாயமாக இருக்கிறது.இது,இந்த அமைப்பில் வாழும் ஒருவருக்கு ஏற்படும் வாழ்வியல் யதார்த்தம்.ஒரு போராட்டம்-உழைப்பவர்கள் உழைப்பை வழங்கித் தமது உழைப்புக் கேற்ற ஊதியத்தைக் கோரும் உண்மையான முரண்பாடு இது.


இதைச் சுலபமாக விளங்கவே இப்படிச் சொல்லப்பட்டது.

இந்த முரண்பாடானது அந்தவுழைப்பையும்,அதனால் ஏற்படும் உபரி மதிப்பீட்டையும் சமுதாயத்தில் திருடுகிறவர்களை உடமையாளர்களாக்கியுள்ளது.


எனவே,மனித சமூகத்தில் உழைப்பவரும்,உழைப்பை அபகரிப்பவரும் என்ற இரண்டு வர்க்கம் தோன்றுகிறது.இது முதலாளியத்தில் தவிர்க்க முடியாத வர்க்க நிலை.எனவே மனிதர்கள் இப்போது வர்க்கமாகப் பிளவுண்டு போகிறார்கள்.இங்கே பற்பல முரண்பாடுகள் இனித் தோன்றும்.முதலாளியாக மாறியவருக்கும்,தொழிலாளிகளாக இருப்பவர்களுக்கும் சதா முரண்பாடுகள் முளைவிடும்.ஏனெனில், முதலாளிகள் தொழிலாளரின் உழைப்பைத் திருடுவதானால் மட்டுமே செல்வத்தைச் சேகரிக்க முடிகிறது. இயற்கையிலுள்ள கனிவளங்களைத் தொழிற்சாலைவரை எடுத்துவந்து,பின்பு அதைப் பொருளாக்குவதும் உழைப்புத்தான்-அது தொழிலாளியால்தான் முடிகிறது.


இங்கே, இரண்டு தளத்தில் முதலாளிகள் வருமானத்தைப் பெறுகிறார்கள்.ஒன்று அனைவருக்கும் பொதுவான புவிப்பரப்பிலுள்ள கனிவளம்,மற்றது அதை அகழ்ந்து பொருளாக்கும் மனித உழைப்பு.இது, முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுறை என்ற அமைப்பாண்மையால் சமுதாயத்தில் நியாயப்பட்ட அமைப்பாக இருக்கிறது.இந்த அனியாயமான திருட்டைப் பாதுகாக்க வன்முறைசார் கருத்துக்களும்,வன்முறைசாரக் கருத்துக்களாலும் அரச அமைப்பு ஒன்று தோன்றி,உழைப்பவரை அடக்குகிறது.அல்லது கூலி உயர்வு கேட்கும் அப்பாவிகளைச் சட்டம்,பொலிஸ் என்று ஏவி ஒடுக்கி வருகிறது.இங்கே உழைப்பவர்கள் ஒரு குடையுள் இணையப் பார்க்கிறார்கள்.தமது நியாயத்தைத் தட்டிக் கேட்பதற்காகத் தொடர்ந்து போராடுகிறார்கள்.



ஆனால்,உடமையுடையவர்கள் தொழிலாளிகளைப் பிளப்பதற்காக அவர்களுக்குப் பிரிவினைகள் இருக்கக் கூடிய உடல்-உள மற்றும் பிறப்பால் வந்த தோற்றங்களை வைத்து அவர்களைப் பிரித்தெடுகிறார்கள்.இது சாதி,மத,இன அடையாளமாகவும்,மொழி வழிச் சமுதாயங்களாகவும் பரிவுகளை ஊட்டி வளர்த்து உழைப்பவர்களை,ஒருவருக்குள் ஒருவரை மோதவிட்டுத் தமது உடமையையும்,செல்வத்தையும் தொடர்ந்து காப்பாற்றும் போது,அவை ஒரு கட்டத்தில் இனவொடுக்குமுறை,சாதியொடுக்குமுறை,மதப் போர் என்று தொடர் அடிமைப்படுத்தல்கள் நிகழ்கிறது.


இங்கே,உடமையாளர்கள் தம்மைப் பலப்படுத்தும் ஆயிரம் கருத்துக்களால்,கல்வியால் உழைப்பவரை ஒடுக்கி விடுகிறார்கள்.இப்போது மக்கள்"இதுவரை வாழ்ந்ததுபோல் இனி மேற்கொண்டு வாழ முடியாது"என்ற முடிவிற்குக் கோடிக்கணக்காக வரும்போது புரட்சிகள்(மக்கள் போராட்டம்)வருகிறது.இங்கே உண்மையில் நிகழ்வது என்னவென்றால்,இந்தப் புரட்சியின் அவசியம் சமுதாய வளர்ச்சியின்(மனிதர்கள் உயிர்வாழ உணவு தேடியபோது "வேடர்களாக"பின்பு தானியங்களைச் சேகரித்து வைத்து வாழும்போது நிலத்தை உடமையாக்கி நிலப்பிரபுக்களாக"ஆண்டான் அடிமைச் சமூகமாக,இது உற்பத்திச் சக்திகளின் தேவை-கண்டுபிடிப்போடு முதலாளியமாக...) புறவய விதிகளால் நிர்ணயிக்கப்படுகிறது என்பதே.
எனவே,புரட்சிகள்(மக்கள் போராட்டம்)கட்டளைப்படி நடக்க முடியாது என்றாகிறது.ஒரு குறிப்பிட்ட தரணத்தையொட்டி மக்கள் போராட்டம் நடப்பதற்கில்லை.ஆக,அவை(மக்கள் போராட்டம்)வரலாற்று வளர்சிப் போக்கின் இயக்கத்தோடு முதர்ச்சியடைகிறது.பல்வேறு உள்நாட்டு,வெளிநாட்டு அரசியல்-பொருளியல் காரணங்களைப் பொறுத்துப் புரட்சிகள்(மக்கள் போராட்டம்)உரிய நேரத்தில் வெடித்துக் கிளம்புகிறது.

வரலாற்று வளர்ச்சிப் போக்கில் குறிப்பிட்டவொரு கட்டத்திலுள்ள சமுதாயம்,தனக்கே உரித்தான தனியொருகுணமுடைய சமுதாயமாக நிலவுகிறது.இங்கே,வரலாற்றுக் கட்டத்தில் பல கட்ட பொருளாதாரப் புற நிலை நிகழ்வுகள் இருந்துள்ளன.இவைகள் தத்தமது குணவியல்புக்கு ஏற்ற சமுதாயத்தைக் கொண்டிருந்தது.ஆரம்பத்தில் மனிதர்கள் ஒரு கூட்டுச் சமூகமாக வாழ்ந்தார்கள், இதைப் புரதான கூட்டுச் சமுதாயம் என்றும் பின்பு இதுவே மாற்றப்பட்டுஅடிமை உடமைச் சமுதாயமாக மாறுகிறது.இங்கே, உழைப்பவர்களை அடிமையாக்கி வருத்தி அவர்களைப் பிழிந்தெடுத்தார்கள்.இதையும் மனிதர்களில் சிலர் பெரும் நிலத்தைப் பயிரிடும் பயன்பாட்டுக்குள் கொணர்ந்தபோது, நிலப்பிரபுத்துவம் தொடங்கி விடுகிறது.இதுவும் கூலிவிவாசாயிகளாக மாற்றப்பட்ட மக்களைக் கொடுமைப்படுத்திச் சுரண்டுகிறது.இது கொத்தடிமைகளாக்கிச் சமுதாயத்தக் கேடாக்கியபோது,சாட்சாத் முதலாளியம் தோற்றங்கண்டு மனிதருக்கு மகத்துவம் என்று அறைகூவித் தனிப்பட்டவரின் சுதந்திரத்தை வலியுறுத்தி அன்றைய பொழுதில் மிகப் பெரும் புரட்சியைச் செய்துகாட்டியது.இங்கே ஒவ்வொரு அமைப்புக்கும் ஒன்று முற்போக்காக வருகிறது.பின்பு, அதுவே உழைப்பவர்களை அடிமைப் படுத்துகிறது.

இது எதனால்?

மனிதரில் சிலருக்கு சமூகத்தை விஞ்ஞான பூர்வமாக அணுகும் பொருளாதார விஞ்ஞானம் தெரிகிறது.அங்கே,முடிவு தெரிகிறது!

அதாவது, சந்தைப் பொருளாதாரமாக இருக்கும் தனியுடமை முறையானது சமுகத்தில் பொதுவாக இருக்கும் இயற்கையையும் அதன் பயன்பாட்டிற்காய் உழைப்பாளியால் உருவாக்கப்பட்ட உற்பத்திச் சக்திகள்(ஜந்திர வகைகள்) தனியுடைமையாக இருப்பதே மனித சமூகத்தில் போட்டி,போர்கள் மலிகிறதாக இனம் காணப்பட்டபோது,இதை மாற்றிச் சமுதாயத்தில் உற்பத்தி ஆதாரங்களைப் பொதுவாக வைத்து அதன் வடிவில் உற்பத்தி உறவுகள் நிலைக்கும்போது மக்கள் சமாதானமாகவும்,உயிர்வாழும் அர்த்தத்துடனும் வாழ முடியுமென்று காணப்பட்டது.

இங்கேதான், தனியுடமைவாதிகள் தமது வர்க்கச் சிதைவையும்,தாமும் உழைத்துண்ண வேண்டிய நிலையையும் மறத்து அதற்கெதிராகப் போரிடுகிறார்கள்.இந்தப் போர் என்ன வடிவில் வந்தாலும் வரலாறு பூராகவும் வர்க்கங்களுக்கிடையிலான போராகவே வருகிறது-தொடர்கிறது.

இங்கே, நமது ஈழப்போராட்டதை உதாரணமாக எடுத்தால், அது என்ன நிலையில் தோன்றுகிறது-என்ன நிலையை அடைகிறது,எவரது நலன்களைக் காக்க முனைகிறதென்பதை ஆராய்ந்தால், மக்கள் போராட்டத்தின் தன்மை புரியும்.அங்கே, எவர் எந்தத் தளத்திலிருந்து போராட வேண்டுமென்று தீர்மானிப்பது வர்க்க உணர்வே.ஒருவர் கொண்டிருக்கும் வர்க்கத்தளமே அவரைத் தனது வர்க்கத்துக்காகப் போராட அனுமதிக்கிறது.இதை மறுத்து ஆளும் வர்க்கம் மொழிசார்ந்தும்,மதம்சார்ந்தும் உழைப்பவரைத் தனக்குள் இணைத்துத் தனக்குள் இருக்கும் முரண்பாடுகளைத் தீர்க்க முனைகிறது.உதாரணமாகப் பல்லினங்கள் வாழும் இலங்கைக்குள் இனங்களுக்கிடையிலான மூலதனத் திரட்சி,அதிகாரப் பகிர்வு,பங்கீடு,சந்தைப் பகிர்வு,உற்பத்தி வலு-ஊக்கம் என்பதுகளில் ஏற்பட்ட முரண்பாடுகளுக்குத் தீர்வுகாண்பதற்காக இனங்களுக்குள் இருக்கும் உடமை வர்க்கம் இனவாதத்தைக் கையிலெடுத்து மக்களை-உழைப்பவர்களை மொழிகளுக்கூடாகக் கோடுகிழித்துக் கூறுபோட்டுச் சண்டையிடுகிறது.இங்கே,தேசியயினங்களாக இருக்கும் ஒவ்வொரு இனமும் தத்தமது இன அடையாளங்களுக்கூடாகப் பிளவுபட்டுப் போரிடுவது இனங்களுக்குள் இருக்கும் ஆளும் வர்க்க(உற்பத்திச் சக்திகளை உடமையாக வைத்திருப்பவர்)நலன்களுக்கானதே.



உதாரணமாகத் தமிழீழம் ஒன்று உருவாகினாலும்(நேற்றைய அநுராதபுரத் தாக்குதல்போல் ஓராயிரம் தாக்குதல் நிகழ்வதற்கும் அப்பாவி மக்களின் குழந்தைகளே முயல வேண்டும்.அப்படி முனைந்தாலும் தமிழீழம் மலர வாய்ப்பு இல்லை என்பது வேறு விஷயம்) உழைக்கும் தமிழர்களுக்கும்,உடமைத் தமிழர்களுக்குமான வர்க்கப்போர் தொடரும்.


அப்போது இன்றைய தேசியவிடுதலைப் போராளிகள் நாளை நமக்குள் இருக்கும் பெருந்தொகையான கூலிகளை-உழைப்பவர்களை ஒடுக்குவார்கள்.நல்ல உதாரணம்: வடமாகாணத்தில் நடந்த வேலை நிறுத்தப் போராட்டம்-அதைப் புலிகள் எங்ஙனம் எதிர் கொண்டார்கள்?தமிழகத்தை இன்னொரு உதாரணத்துக்கு எடுத்தால்,தமிழகம் அண்ணளவாகத் தமிழர்களாலேயேதான் ஆளப்படுகிறது.எனினும், தமிழகத்துப் போலிசுகள் உழைக்கும் மக்களை-தமிழர்களை ஏன் ஒடுக்கிறது?தமிழக அரசு அனைத்துத் தமிழர்களுக்கும் நீதியானவொரு அரசாக இருக்கிறதா?-அங்கே உழைப்பவர்களுக்கும்,உடமை வர்க்கத்துகஇகுமான உறவு எப்படியுள்ளது?



இதே கதைத்தான் ஈழத்துக்கும்.



ஆகையினால்,இன்றே வர்க்கப் போரைச் செய்யும் உழைக்கும் மக்களுக்கான புரட்சிகர அதிகாரத்தையும்,அரசையும் நிறுவும் மக்கள் போராட்டப் பார்வை அவசியமாகிறது.இங்கே மக்கள் போராட்டம் என்பது இனம்,மொழி,மதம் தாண்டிய உழைப்பால் ஒன்றுபடும் மக்களின் போராட்டமாகும்.இது,இன்றைய இலங்கைக்குள் இன்னும் பலமுனை-வகை உப முரண்பாடுகளோடு இருப்பதால் குறைந்தபட்சமாவது தமிழ் பேசும் உழைக்கும் மக்கள் தமக்கானவொரு அதிகாரத்துக்கான புரட்சியைத் தமிழ்-சிங்கள ஆளும் வர்க்கத்துக்கெதிராக அணிதிரண்டு முன்னெடுக்கும்போது,இதன் உள்ளடக்கமே தவிர்க்க முடியாது இலங்கையிலுள்ள அனைத்து இன உழைப்பாளிகளோடும் நமது உறவைப் பலப்படுத்தி இலங்கையில் புரட்சியைச் சாதிக்கும்.


அந்த வலு இலங்கைப்பாட்டாளிய வர்க்கத்துக்குண்டு.இதைக் கண்ணுற்ற வெளிப்புறச் சக்திகள் நம்மை இனங்களாகப் பிளவுப்படுத்திக் குறுந்தேசிய வெறிக்குள் அமுக்கி,நமது போராட்டத்தைத் திசை திருப்புகிறார்கள்.


எனவே,நமது போராட்டப்பாதையில் பற்பல தோல்விகள் சில வெற்றிகளின் பின்னே மறைந்திருக்கிறது.இது தமிழ்பேசும் மக்களுக்குள் இருக்கும் உடமை-ஆளும் வர்க்கத்தின் முரண்பாடுகளை ஓரளவு தீர்க்க முனையும் சிங்கள ஆளும் வர்க்கத்தோடு கொள்ளும் உறவில் தனது போராட்டத்தை மட்டுப்படுத்தித் தவிர்க்க முடியாதாவொரு "தீர்வுக்கு"வரும்.அப்போது தமிழ் ஆளும் வர்க்கம் எதைச் சொல்கிறதோ, அதுவே முழு மொத்தத் தமிழரினதும் தீர்வாக இருக்கும்.அப்போது,மீளவும் தமிழ் பேசும் உழைப்பாளர்கள் தமது எஜமானர்களை சிங்களம் பேசாது தமது தாய்மொழியே பேசும் புற நிலையில் கண்டடைவார்கள்.



இது தேவையா?



இது குறித்துப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவான கட்டுரை எழுதுகிறோம்.



பரமுவேலன் கருணாநந்தன்
23.10.2007

Sunday, October 21, 2007

தமிழ் மக்கள்:மறுபக்கம்

அன்பு வாசகர்களே,வணக்கம்!

மீண்டுமொரு"மறுபக்கம்"பதிவோடு வருகிறோம்.இப்பதிவைத்தொடர்ந்தெழுதி வருபவர் ஒரு பேராசிரியர்.அவர் ஈழத் தமிழ்ச் சமூகத்துள் மிக முக்கியமான கல்வியாளர்.ஈழப்போராட்டமும்,இயக்கங்களும் கொலை செய்த கல்வியாளர்களெல்லாம் இப்போது மண்ணுக்குள் மண்ணாக.எஞ்சியிருக்கும் ஒரு சில ஈழத்துக் கல்வியாளர்களில் மிக முக்கியமானவர் பேராசிரியர்.டாக்டர்.திரு.சி.சிவசேகரம் ஆவார்.இவர் தன் சிந்தனையின் போக்கால் இடதுசாரி அறிஞராகவும் இனம் காணப்பட்டவர்.எனினும்,அவர் சிறந்த மனித நேயவாதியாகவும்,கல்வியாளராகவும், இன்றும் நம் போராட்டம் குறித்து ஆழமாகச் சிந்தித்து வருபவர்.தனது எண்ணங்களுக்கும்,மக்கள்சார்ந்த அரசியல் நோக்குக்கும் மிக இசைவாகவும்-அண்மையிலும் இருக்கிறார்.

இன்று படித்துப் பட்டம் பெற்றுவிட்டுப் பேராடும் பல்கலைக் கழகங்களுக்குள் இருக்கும் படிப்பாளிகள், மக்கள் நலன்சார்ந்து சிந்திக்காது,இயக்கவாத மாயைக்குள் இருந்தபடி ஏதேதோ அவிழ்க்கும்போது,பேராசிரியர் சிவசேகரமோ மக்களின் நலனிலிருந்து இயக்கத்தை,அதன் அரசியலை மற்றும் கட்சிகளை விமர்சிக்கிறார்.இது மிக ஆரோக்கியமான பார்வை.எமது மக்களின் நலன் சார்ந்த சிந்தனைகளை தோழர் இரயாகரனுக்கு அடுத்ததாகப் பேராசிரியர் சி.சிவசேகரமே முன் வைப்பவர்.இன்றுவரை தோழர் இரயாகரன் முன்வைத்த கருத்துக்களின் நியாயத் தன்மையைப் பேராசிரியரின் எழுத்துக்குள் அவதானிக்க முடியும்.

தேசிய விடுதலை,சுயநிர்ணயம் என்றெல்லாம் சொன்ன இயக்கங்கள், எப்படி மக்களை அடிமை கொண்டன-எங்ஙனம் மக்களை அழித்து அவர்களின் உரிமையைக் குழிதோண்டிப் புதைத்தன என்பதைத் தோழர் இரயாகரன் மிக நேர்த்தியாகவும்,விஞ்ஞானபூர்வமாகவும் தனது தளத்தில் ஆயிரக்கணக்கான பக்கங்களுக்கூடாக முன்வைத்திருக்கிறார்.அவரது கருத்துக்கு-முடிவுக்கு விஞ்ஞானத்தின் அடிப்படையே காரணமாக இருப்பதனால் அது உண்மையாக இருக்கிறது.அவ்வண்ணமே,இப்போது பேராசிரியர் சிவசேகரத்தின் கருத்துக்கும் அரசியல்-பொருளியில் விஞ்ஞானமே அடிப்படை.இக்கருத்துக்களின்படி நமது "தேசியவிடுதலை"ப் போராட்டத்தை முன்னெடுக்கும் புலிகளின் அரசியல் மற்றும் போராட்டச் செல் நெறியில் தவறிருப்பதையும்,அது தமிழ் பேசும் மக்களின் உண்மையான நலன்களோடு எந்தவிதத்திலும் சம்பந்தப்படவில்லையென்பதையும் பேராசிரியரின் இந்தச் சிறு கட்டுரையூடாக நாம் ஆழ்ந்துணர முடியும்.

வழமைபோலவே,இதையும் புலிகளின் விசுவாசிகள் நிராகரித்தபடி,தனிப் பெரும்"தலைவர் திரு.பிரபாகரனால் உலகை வெட்டி ஆளமுடியும்,தமிழருக்கு வழிகாட்ட முடியுமென"க் கூவும் ஒரு நிலை உருவாகலாம்.எனினும், நமது அரசியல் வங்குறோத்தானது இன்று நம்மை நடுத்தெருவுக்கு அழைத்து வந்து, பிச்சையெடுக்க விட்டிருப்பதை நாமெல்லோரும் உணர்வு பூர்வமாக உணர்வதால் புலி இயக்கவாத மாயை தகர்ந்து வருகிறது.இது நல்லதொரு சகுனம்,மக்களின் நோக்கிலிருந்து சிந்திப்பதற்கு.


இத்தகைய நோக்கிலிருந்து சிந்திக்கும்போதுமட்டும்தான் புதிய கோணத்திலான புரிதற்பாடுகள் முளைவிட ஆரம்பிக்கின்றன.இந்த ஆரம்பமே நமது விலங்கை நாமே போராடி உடைக்கும் புதிய புரட்சிகரமான பாதையை இனம் காட்டும்.இந்த, இனம் காணும் தரணங்களே எமது உரிமையின் உண்மை நிலையையும்,எது எமது உரிமை,எது சுய நிர்ணயம் என்பதையும் ஓங்கியடித்து எமது முகத்தினதும்,விழிகளினதும் முன் காட்சிப்படுத்தும்.இது மிக அவசியமானது- எமது சமுதாயத்துக்கு.நாம் புலிகளின் பொய்யுரைப்பால் எமது இளைய தலைமுறையையே கையாலாகச் சந்ததியாக மாற்றியபடி, தனிநபர் துதிபாடும் கூட்டமாக மாற்றி வருகிறோம்.இதிலிருந்து மீளவும்,நமது இலக்கை விஞ்ஞான பூர்வமாக விளங்கிப் போராட்டத்தை வர்க்கம் சார்ந்து முன்னெடுக்கவும் நாம் இன்னும் மிக நீண்டதூரம் சென்றாக வேண்டும்.எனினும், இக்கட்டுரையூடாகச் சில பொய்மைகள் அம்பலமாகின்றன.இதை வாசகர்கள் மிக இலகுவாக இனம் காணமுடியும்!

வழமைபோலவே,புலி இயக்கவாத மாயைக்குள் இருக்கும் அன்பர்கள் பேராசிரியர் சிவசேகரத்தின் கட்டுரையையும் "கோணங்கித்தனமானது,தமிழர் விடுதலைக்கு எதிரானது,எங்கள் தலைவர் பிரபாகரனுக்கு எல்லாம் அத்துபடி-அவர் எமக்கு விடுதலை பெற்றுத் தருவார்"என்று விவாதிக்க முனையலாம்.எனினும்,இவை விஞ்ஞானத்தின் அடிப்படையை மறுப்பவை என்பதை நாமும்,வாசகர்களாகிய நீங்களும் அறிவோம்-அறிவீர்கள்.


இந்நோக்கில், பேராசிரியர்.டாக்டர்.திரு.சிவசேகரத்தின் இக்கட்டுரையை மீள் பிரசுரிக்கிறோம்.இது இலங்கையின் முன்னணி நாளிதழான தினக்குரலிலிருந்து நன்றியோடு பிரசுரமாகிறது.

வாசியுங்கள்,சிந்தியுங்கள்-எதிர்க்கருத்தாடுங்கள்!,இவற்றால் ஆவது புதிய பாதைகள்.புதிய பாதைமட்டுமே தமிழர்களுக்கான அரசியற்பாதை என்பதை நாம் அன்றும்,இன்றும் கூறுவது உண்மையென்பது விஞ்ஞான அடிப்படை.


அன்புடன்,
கருணாநந்தன் பரமுவேலன்.
21.10.2007





மறுபக்கம்


தமிழ்த் தேசியவாதம் தமிழ்ச் சமூகத்தை எத்தகைய முட்டுச் சந்திற் கொண்டுவந்து விட்டிருக்கிறது என்பதைப் பற்றி நாம் ஆழச் சிந்திக்க வேண்டிய தருணங்கள் அடிக்கடி வருகின்றன. ஆனாலும் நாம் அதைச் செய்யத் தவறுகிறோம். தேசியமே அடிப்படையானது, மற்ற முரண்பாடுகள் இரண்டாம் பட்சமானவை என்று சிலர் புதிய தத்துவங்களை முன்வைத்துப் பதினைந்தாண்டுகள் கடந்துவிட்டன. இப்போது தேசியவாதத்தைவிடப் பிரதேசவாதத்தையே முன்னிறுத்துகிற போக்குக்களுக்கு முகங்கொடுக்க முயலாத நிலையில் தேசியவாதம் தடுமாறுகிறது. எத்தனையோ இயக்கங்கள் உருவாக்கப்பட்டு உள்மோதல்களாலும் இயக்கங்களிடையிலான மோதல்களாலும் தமிழ்ச் சமூகம் வீணான உயிரிழப்புக்களைச் சந்தித்திருக்கிறது. அன்று தமிழ் இடதுசாரிகளை மட்டுமன்றித் தமிழ் ஈழக் கோரிக்கைகளை நிபந்தனையின்றி ஏற்க மறுத்த எல்லாரையுமே துரோகிகள் என்று பட்டஞ் சூட்டிப் பழித்த தமிழ்த் தேசியவாத இளைஞர் குழுக்கள் இப்போது எங்கே போய் நிற்கின்றன? யாருடைய நிழலை நாடுகின்றன? யாருக்காகப் பணியாற்றுகின்றன?


எவரதும் மனமாற்றத்தை நியாயப்படுத்தக்கூடிய விதமாகத் தமிழ்மக்களின் வாழ்வில் மேம்பாடு ஏற்பட்டுள்ளதா? தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் வென்றெடுக்கப்பட்டுள்ளனவா? தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை ஏற்கப்பட்டுள்ளதா? தமிழ் மக்களின் வாழ்விடங்கள் மீது அவர்களது உரிமை மதிக்கப்பட்டிருக்கிறதா? இன்று தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தேசிய இனமொன்றின் மீதான தேசிய இன ஒடுக்கலாகவும் அதற்கெதிராக போராட்டம் சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வுக்கான போராட்டமாகவும் கருதப்படுவதற்கு மாறாக ஒரு மனித உரிமைப் பிரச்சினையாகவே பேசப்படுகிற ஒரு சூழ்நிலை எவ்வாறு உருவானது? அதை எவ்வாறு மாற்றுவது?
பதினெட்டாண்டுகட்கு முன்பு யாழ்ப்பாணத்தில் அன்னையர் முன்னணி ஒன்று, காணாமற் போன பிள்ளைகள் பற்றி எழுச்சியுடன் ஊர்வலம் போய் உரிமைக் குரல் எழுப்பியதை மனதில் இருத்தி, ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் மூலம் தங்கள் பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கேட்டுத் தாய்மார் ஒரு தமிழ் அரசியல்வாதியின் காலில் விழுந்து கேட்டுக் கொள்ளும் காட்சியை அதனுடன் ஒப்பிடும் போது தமிழ் மக்களின் விடுதலை உணர்வு எங்கே வந்து நிற்கிறது என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.


தமிழ் மக்களின் உரிமைப் போராட்டக் காலத்திலிருந்தே மீட்பர்களின் அரசியல் தான் இருந்து வருகிறது. அதற்கு முதல் மேட்டுக்குடி மேய்ப்பர்களின் அரசியல் இருந்து வந்தது. சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் ஆங்கிலத்தில் பேசி வென்று தருகிற தலைவர்களை நம்பி இருந்த சமூகம் பிறகு சத்தியாக்கிரகம் செய்து சமஷ்டி பெற்றுத்தர முடியும் என்கிற அரசியல் தலைமையை நம்பியது. தமிழ் பேசும் மக்கள் பற்றி நிறையவே பேசப்பட்டது. ஆனாலும், தமிழரைத் தமிழர் சாதியின் பேராலும் வம்சாவளியின் பேராலும் பிரதேசத்தின் பேராலும் ஏறி மிதிக்கிறது பற்றிக் கண்டுங் காணாமலே தமிழ்த் தேசியத் தலைமைகள் செயற்பட்டன.


முஸ்லிம்களின் தனித்துவம் பற்றியும் மலையக மக்களின் தனித்துவம் பற்றியும் எப்போதிருந்தோ சொல்லி வந்தவர்கள் தமிழ் மக்களைப் பிளவுபடுத்தப் பார்க்கிறார்கள் என்று நிந்திக்கப்பட்டனர். வடக்கு - கிழக்கு இணைந்த சமஷ்டியோ அதே அடிப்படையில் அமைந்த தமிழீழமோ எந்த வகையில் முஸ்லிம்களதும் மலையகத் தமிழரதும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கும் என்பது பற்றி எள்ளளவும் அக்கறையில்லாமலே சமஷ்டிக் கோரிக்கையும் தனிநாட்டுக் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டன. இவற்றை விமர்சித்தவர்கள் தமிழ்த் துரோகிகளாகக் காட்டப்பட்டனர்.
1976 ஆம் ஆண்டு தமிழீழத்தை வென்று தர உங்களிடம் என்ன வேலைத்திட்டம் இருக்கிறது என்று ஒரு பகிரங்க விவாதத்தின் போது கம்யூனிஸ்ற்றான சண்முகதாசன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தருமலிங்கத்தை நடுவர் ஒறேற்றர் சுப்பிரமணியத்தின் முன்னிலையிற் கேட்டபோது, தருமலிங்கம் கூறிய பதில் "அது எங்கள் இரகசியம்" என்பது தான். அந்த இரகசியமும் சிதம்பர இரகசியம் மாதிரி இல்லாத ஒரு இரகசியமே தான். தருமலிங்கத்தின் பதில் தப்பியோடப் போதுமானதாக இருந்ததே ஒழிய நேர்மையானதல்ல என்பதைப் பலரும் அறிவர். ஆனாலும், அந்தவிதமான இரகசியங்களாலேயே தமிழ் மக்கள் இன்னமும் வழிநடத்தப்படுகின்றனர்.


தமிழ் மக்கள் யார் யாரையோ எல்லாம் நம்புமாறு பல வழிகளிலும் வற்புறுத்தப்படுகின்றனர். இந்தியா பற்றிய நம்பிக்கை ஒரு வகையில் இல்லாவிட்டால் இன்னொரு வகையில், வளர்க்கப்பட்டே வருகிறது. கடைசியாக பாரதீய ஜனதா கட்சியை நம்பினால் காரியம் கைகூடும் என்கிற நம்பிக்கையை வளர்க்கிற முயற்சிகளில் வந்து நிற்கிறோம். இந்தியாவில் நாம் நம்புமாறு பரிந்துரைக்கப்படுகிற அரசியல் அமைப்புக்களதும் அரசியல் தலைவர்களதும் எண்ணிக்கை இந்து கடவுளரின் எண்ணிக்கையை எப்போது தாண்டும் என்று என்னாற் கூற இயலாது. ஆனால், என்றாவது தாண்டும் என்று தான் நினைக்கிறேன். அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய சமூகம், ஐ.நா. சபை, சர்வதேச சமூகம் என்று பலவேறு தெய்வங்களை வேண்டிக் கொள்ளுவதில் தான் தமிழ்த் தலைமைகளது கவனங் குவிந்திருக்கிறது.


பலஸ்தீன மக்கள் எவ்வாறு நாடகமாடி ஏய்க்கப்பட்டார்களோ அவ்வாறே தமிழ் மக்களும் நாடகமாடி ஏய்க்கப்பட்டு வருகின்றனர். ஹமாஸ் இயக்கம் அந்த நாடகத்தை நன்றாக அறிந்து அம்பலப்படுத்தியதால் அவர்கள் இஸ்ரேலினதும் அதன் எசமான நாட்டினதும் எசமான நாட்டின் கூட்டாளிகளாலும் கடுமையாகத் தண்டிக்கப்படுகிறது. எனினும், மக்கள் ஆதரவை அவ்வாறான தண்டனைகள் வலுப்படுத்துகின்றன. ஹமாஸ் எவ்வளவு தூரம் மக்களுக்கு நெருக்கமாகிறதோ அவ்வளவுக்கு அது தோற்கடிக்க இயலாத ஒரு சக்தியாக இருக்கும். பலஸ்தீன மக்கள் இன்னமும் இன்னல்களிடையிலும் இடிபாடுகளிடையிலும் அகதி முகாம்களிலும் வாழுகின்றனர். இருப்பிடங்களிலிருந்து விரட்டப்பட்டோரும் திரும்பி வருவது பற்றியும் தாயகம் பற்றியும் இன்னமும் பேசுகின்றனர். இந்த விடயத்தில் தமிழ் நடுத்தர வர்க்கத்தினரின் நிலையினின்று அவர்கள் ஆரோக்கியமான ஒரு வகையில் வேறுபடுகின்றனர்.


விடுதலை என்பது காலக்கெடு வைத்து சொல்லப்படுவதல்ல. விடுதலை என்பது எவரும் வந்து பெற்றுத் தருவதுமல்ல. எந்தவொரு அரசியல் போராட்டத் தலைமையும் வழிகாட்டலாமே ஒழிய ஒரு சமூகத்தின் ஏகப் பெரும்பான்மையான மக்கள் திரள் தனது தோள்கள் மீது விடுதலைப் போராட்டத்தை ஏற்றுச் சுமந்து முன்செல்லாத வரை விடுதலை வெல்லப்படக் கூடியதல்ல. ஒரு ஆயுதப் போராட்ட வெற்றியை எடுத்து அதை விடுதலையாக மாற்றுகிற பணி மக்களுடையது. எனினும், தமிழ்த் தேசியவாத அரசியல் மரபில், மக்கள் அரசியல், மக்கள் போராட்டம் என்கிற கருத்தாக்கங்கள் இன்று வரை வேரூன்றவில்லை. தமிழ் மக்களின் விடுதலையைக் குத்தகைக்காரர்கள் எவராலும் பெற்றுத்தர இயலாது என்கிற உண்மையை நாம் மறக்கவிடலாகாது.


தொண்டமான், சந்திரசேகரன் போன்றோரின் துரோகங்கள் பற்றிக் கசப்புடன் பேசப்படுகிறது. ஆனால், மலையகத் தமிழருக்கு அவர்கள் செய்து வந்துள்ள துரோகத்தைவிட அதிகமாக வடக்கு - கிழக்கின் தமிழர்கட்கு என்ன செய்துள்ளனர்? முஸ்லிம் தலைவர்களை நம்ப முடியாது என்று பேசப்படுகிறது. அவர்களை முஸ்லிம் மக்களே நம்ப இயலவில்லை. அதுபோகத், தமிழ்த் தலைவர்களைத் தமிழ் மக்கள் நம்ப முடிகிறதா?
இன்று தமிழ்த் தேசிய இனம் ஒரு அபாயகரமான திருப்புமுனையை நோக்கி நிற்கிறது. தமிழ் மக்களின் பிரச்சினை பற்றிச் சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்ப்பது என்ற போக்கின் வழியாகத் தமிழ் மக்களின் பிரச்சினையின் அடையாளத்தை மாற்றுகிற அபாயம் இன்று நிஜமான ஒரு சாத்தியப்பாடாகி வருகிறது. இது மிகவும் ஆபத்தானது. தமிழ் மக்களின் பிரச்சினை வெறுமனே ஒரு மனிதாபிமானப் பிரச்சினையாக, அகதிகள் பிரச்சினையாக, எல்லாரிடமும் கருணையை எதிர்பார்த்துக் கையேந்தி நிற்கிற ஒரு சமூகத்தின் மீதான கழிவிரக்கமாக ஒடுக்குகிற திசையை நோக்கி நாம் திரும்பிக் கொண்டிருக்கிறோம். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டியது.


உலகில் நீதியையும் நியாயத்தையும் மனித உரிமையையும் மதிக்கிற எல்லாரது நட்பும் தமிழ் மக்களுக்கு தேவையானதும் பயனுள்ளதும் என்பதில் மறுப்பில்லை. ஆனால், அந்த நட்பு ஈவோருக்கும் இரப்போருக்கும் இடையிலான உறவாக இருக்கக்கூடாது. அது சமத்துவத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். ஒடுக்குமுறை தொடர்பான எப்பிரச்சினையும் கருணையினால் தீர்க்கப்பட்டதில்லை.


என்.ஜி.ஓ.க்கள் கருணையின் பேரிலும் மனிதாபிமானத்தின் பேரிலும் மக்களை மேலும் மேலும் அடிமைத்தனத்திற்குள் அமிழ்த்துகின்றன. ஏகாதிபத்திய நாடுகள் என்.ஜி.ஓ.க்கள் மூலம் தமது கருமங்களை ஆற்றிக் கொள்ளுகின்றன. இந்த நாடு முழுவதையும் அடிமைப்படுத்த முனைப்பாக நிற்கின்றன அவையும் அவற்றின் ஏவலில் இயங்குகிற எந்த அரசாங்க நிறுவனமும் விடுதலைக்கு வழி செய்யப்போவதில்லை.


தமிழ் மக்கள் முழுமையாக அரசியல் விழிப்புப்பெறாமல் அவர்கட்கு விடுதலையும் இல்லை விமோசனமும் இல்லை. அதுவரை கருணையின் பேரால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருவர்.



பேராசிரியர்.டாக்டர்.திரு.சி.சிவசேகரம்


நன்றி:தினக்குரல்




Monday, October 08, 2007

அப்பட்டமான பொய்மை...

அப்பட்டமான பொய்மை வலைகளை முதலில் நாம் அறுத்தெறிய வேண்டாமா?


சேது சமுத்திரத் திட்டத்தால் தமிழகத்தின் ெபாருளாதாரம் பெரும் நன்மை பெறும் என்ற வாதத்தை முன்வைத்து, அத்திட்டத்தைத் தொடருவதற்கு ஆதரவாகப் பலவேறு தி.மு.க. தோழமைக் கட்சிகள் குரல் கொடுத்துள்ளன. அத்திட்டத்தால் ஒட்டுமொத்தமான பொருளாதார நன்மை உண்டா என்பது இன்னமும் ஐயத்துக்குரியது. ஆயினும், அதன் மூலம் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நோக்கங்கள், குறிப்பாக இலங்கை தொடர்பானவை, நிறைவேறும் வாய்ப்புக்கள் அதிகம். இவ்விடயத்தில் அகில இந்திய அரசியல் தளத்தில் கருத்து முரண்பாடுகள் வெடித்துள்ளன.


எனினும், அதிகமாகப் பேசப்படாத சில உண்மைகள் முக்கியமானவை. இத்திட்டத்தால் நிச்சயமாகத் தி.மு.க.வினர் சிலரதும் தி.மு.க. தலைமையில் உள்ள குடும்பத்தினதும் செல்வம் பெருகும். இங்கே மேல் கொத்மலைத் திட்டத்தின் மூலம் எத்தனை பேர் சம்பாதிக்கப் போகிறார்கள். எந்த மலையகக் கட்சிகளது தலைமைகள் தங்கள் துரோகத்திற்காகப் பலவாறான சன்மானங்களைப் பெற்றுள்ளனர் என்று தெரியுமானால், தமிழகத்தில் எவ்வளவு காசு கைமாறும் என்று ஊகிப்பது கடினமானதல்ல. இது தங்கப் புதையல் என்றால் அது தங்கச் சுரங்கம் - அள்ளப் போகிறவர்கட்கு.


சிங்களத் தீவினுக்கோர் பாலமமைக்கிற யோசனை ஏழு ஆண்டுகள் முன்பு எழுந்து பிறகு ஏனோ தானாகவே கைவிடப்பட்டது. பாலம் அமைப்பதானாலும் பள்ளந் தோண்டுவதானாலும் அவற்றுக்கான இராணுவ மேலாதிக்க நோக்கம் ஒன்றே. அது பற்றி எவரும் பேசப்போவதில்லை. ஆனாலும், எதையெதையோ பற்றியெல்லாம் விவாதங்கள் நடக்கின்றன. பொதுவாக அவற்றில் நேர்மையில்லை. அது இந்திய, தமிழக தேர்தல் அரசியலின் அடையாளம். இன்று இன்னொருமுறை ராமாயணமும் சேது சமுத்திரத்தால் அரசியலாகிவிட்டது.


ராமாயணம் வரலாறல்ல. அதற்கு வரலாறு கூறும் நோக்கம் இருந்ததுமில்லை யாரும் ரகுவம்சத்துக்கு வாரிசு உரிமை கோரியதுமில்லை. ராமாயணம் எல்லா இடத்தும் ஒரே விதமாகச் சொல்லப்பட்ட கதையுமல்ல. ராமாயணத்தின் மீது, அது எங்கு எப்போது கூறப்பட்டது என்பதைப் பொறுத்து, ஒரு அதிகார வர்க்க நலன் சார்ந்த பார்வை திணிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய சமூகத்தின் ஆதிக்கச் சிந்தனையும் அற விழுமியங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன. முரண்பாடுகள் கூர்மைபெற்ற சூழல்களில் அது ஒரு தரப்பின் நியாயத்தை எடுத்துரைக்கவும் பயன்பட்டுள்ளது. மகாபாரதத்தை விட அதிகமாகவே ஆணாதிக்கமும் சாதியமும் ராமாயணத்தில் நியாயப்படுத்தப்பட்டுள்ளன எனவுங் கூறலாம். தமிழுக்கு வந்த ராமாயணம் ஒரு பெண்ணை அயலவன் தொட்டாலே கற்பிற்குக் கேடு என்கிற கருத்தை வற்புறுத்துமளவுக்கு இராவணன் சீதையைத் தரையோடு பெயர்த்துக் கொண்டு சென்றதாக கூறுகிறது. ராமாயணம் ஒவ்வொன்றிலும் வருகிற பல விடயங்கள் பகுத்தறிவுக்கு முரணானவை மட்டுமல்ல. விஞ்ஞான அடிப்படையில் நோக்கினால் உண்மை சாராதவை. எனினும், இராமாயணம் தென்னாசியாவுக்கும் அப்பால் இந்தோனீசியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் வரை மக்களின் கவனத்தைப் பல நூற்றாண்டுகளாக ஈர்த்த ஒரு காவியம். அது கூறுகிற விழுமியங்களுடன் ஏதோ வகையில் அவர்கள் உடன்பாடு காணுகின்றனர். அந்தளவில் அதை நாம் மதிக்க வேண்டும்.


ராமாயணத்திற்கு அடிப்படையாக அமைந்திருக்கக்கூடிய ஒரு நிகழ்வு இருந்திருக்கலாம். ஆனால், அது கூறும் இடங்கள் எல்லாம் இன்று நாங்கள் அடையாளப்படுத்துகிற இடங்களல்ல.



அவையெல்லாம் ராமாயணத்துடன் தொடர்புடையன என்றால் புற்பக விமானத்தையும் அதனுடன் கடல் தாண்டப் பறந்ததையும் மட்டுமன்றி ராவணனுக்குப் பத்துத் தலைகள் என்பதையும் நாம் நம்பலாம். இலங்கைக்கும் ராமாயணத்துக்கும் கட்டப்பட்ட முடிச்சு, காலத்தாற் பிற்பட்டது. இராமாயணம் இந்தியாவின் தென்புறம் வந்த பின்பே இந்தத் தீவு இராமாயணங் கூறுகிற லங்காவுடன் தொடர்புபடுத்தப்பட்டது. ஆனாலும், தென்னாசியப் பண்பாட்டில் புராணப் புனைவுகட்கும் வரலாற்று உண்மைகட்குமிடையே தெளிவான வேறுபடுத்தல் கிடையாது. இது நிலவுடைமைச் சமுதாயச் சிந்தனைகள் சில நம் மீது இன்னமும் கொண்டுள்ள அழுங்குப்பிடி இது நெகிழக் காலமெடுக்கும். அதேவேளை, நவீன விஞ்ஞானத்தை ஆதாரங்காட்டி, மூட நம்பிக்கைகளை நியாயப்படுத்துமளவுக்கு நம்மிடையே சிந்தனையில் நேர்மைக் குறைபாடுள்ளது. கடவுளின் பேரால், மரபின் பேரால் ஆன்மிகவாதிகள் எனப்படுகிற பலர் மனமறியப் பொய்யுரைக்கிறார்கள். நம்புகிறதாகப் பாசாங்கு செய்கிறவர்களும் அதற்கு உடந்தையாகிறார்கள். எதை நம்புவது சிலருக்கு வசதியானதோ அதை நம்புமாறு பலரும் வற்புறுத்தப்படுகிறோம். சில சமயம் அவ்வாறு நம்புவது நமக்கும் வசதியாகிறது.


இவ்வாறான பொய்களின் விளைவுகளாக எத்தனை வழிபாட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன? எத்தனை இனக்கலவரங்கள் தூண்டிவிடப்பட்டுள்ளன? எத்தனை போர்கள் நடந்துள்ளன?


எதுவிதமான விஞ்ஞான ஆதாரமும் இல்லாமல் நமது வரலாறு நூற்றாண்டுகளால் மட்டுமல்ல, பல ஆயிரமாண்டுகளாலும் பின் நகர்த்தப்படுகிறது. புனைவுகளை ஆதாரமாகக் கொண்டு புதிய புனைவுகள் உருவாக்கப்படுகின்றன. வெட்கமில்லாமல் எழுதப்படுகிற பொய்களை அதைவிட வெட்கக் கேடாக நமது ஏடுகள் பிரசுரிக்கின்றன.

ராமர் பாலம் ஒரு அற்புதமான கற்பனை. அணிற் பிள்ளை கூட ஒரு கல்லை எடுத்துப் போட்ட கதை சுவையான கற்பனை. ஆனால், அவை உண்மைகளல்ல. அவை பற்றி நாம் விவாதிப்பதே வெட்கக் கேடானது. அதைவிடப் பூமி தட்டையா, உருண்டையா என்று விவாதிக்கலாம். அல்லது பூமியைச் சூரியன் சுற்றுகிறதா, சூரியன் பூமியைச் சுற்றுகிறதா என்று விவாதிக்கலாம். அவையே பயனற்றுப் போன விவாதங்கள். ஆனால், ஒரு கால்வாயை வெட்டுவது தேவையா இல்லையா என்பதை விவாதிக்க நமக்கு வேறு நல்ல நியாயங்களே இல்லையா?


கருணாநிதிக்குப் பகுத்தறிவு திரும்பியிருப்பது பற்றிச் சிலர் மகிழ்ச்சியடையலாம். பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்கிற விதமான ஞானம் இது. தேர்தல் அரசியலுக்காகத் தி.மு.க. எப்போதோ கைகழுவிவிட்ட விடயத்தை ஏன் இப்போது பேச வேண்டும்? ராமாயணம் என நாமறிந்த எந்தக் கதையுமே அப்படியே நடந்ததல்ல என்பதை இந்தியாவின் வரலாற்றாசிரியர்கள் மட்டுமன்றி இந்து அரசியலை முன்னெடுத்த பிரபல அரசியல் தலைவர்கள் பலரும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், ராமன் இருக்கவில்லை என்று எப்படி எவராலும் உறுதியாகக் கூற முடியும்? கம்பரதோ வால்மீகியினதோ துளசிதாசரதோ ராமன் இல்லாதிருக்கலாம். இன்று இருக்கிற ஒவ்வொரு ராமனும் ஒரு புனைவாக இருக்கலாம். ஆனால், அவற்றுக்கு ஏதோ ஒரு அடிப்படை இருந்தது. ஒவ்வொரு இராமனையும் ஏற்பவர்களது மனதைப் புண்படுத்தாமல் கருணாநிதியாற் பேசியிருக்க இயலும். ஆனாலும், அவரது பேராசை அவரை அவசரப்படுத்திவிட்டது.


ஆரிய - திராவிடப் பகை பற்றிப் பேசித் தமிழகத்தில் அரசியல் நடத்த இயலாமற் போனதற்கு எந்தப் பார்ப்பனச் சதியும் காரணமில்லை. திராவிட இயக்கத்தில் ஏற்பட்ட சீரழிவே அதற்குக் காரணம். இந்தியாவில், தலித்துக்கள், பழங்குடியினர், ஒடுக்குமுறைக்குட்பட்ட சிறிய தேசிய இனங்கள், நிலமற்ற விவசாயிகள் போன்றோருக்காகக் குரல்கொடுக்கிற விதமாகத் திராவிட இயக்கம் விரிவுபடுத்தப்படவில்லை. அது தமிழரிடையே சில சாதிப் பிரிவுகட்குரிய வசதி படைத்த பகுதியினரது நலன்களையே சார்ந்து இயங்கியது. எனவே, தான் சமூகத்தின் அடிநிலையிலிருந்த மக்களைப்பற்றி அதனாற் பேச முடியவில்லை. ஈ.வெ.ரா. பேசினார். ஆனால், அவரது பார்ப்பன எதிர்ப்பு அரசியல் காரணமாக, அவர் தமிழகத்தின் பிற சமூக ஒடுக்குமுறைகள் பற்றிக் காட்டியிருக்கக் கூடியளவு கவனத்தைக் காட்டத் தவறிவிட்டார். அவரது ராமாயண எதிர்ப்பு இயக்கமும் நீண்டகாலத்திற்குத் தொடரப்படவில்லை.

அவருக்கு ஒரு குறிப்பிட்ட காலத்தின் அரசியலின் தேவை, பிள்ளையார் சிலை உடைப்புக் கூட அப்படித்தான். அவருடைய வாரிசுகளாக வளர்ந்து பிரிந்து போன `கண்ணீர்த் துளிகளின்' கதை வேறு. அவர்கள் பூரணமான அரசியல் வணிகர்கள். எனவே, தான் அவர்களது விவாதங்கள் மக்கள் நலன் சாராத விடயங்களிற் கவனங்காட்டுகின்றன. அவர்கள் எக்கேடாயினும் கெடட்டும்.

சேது சமுத்திரம் நமது சுற்றுச் சூழலுக்கு எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றி நமது அறிஞர்களால் எழுத முடியாதா? தங்களுக்கு விளங்காத வரலாற்றையும் புவியியலையும் விஞ்ஞானத்தையும் பற்றிச் சில பேர் பக்கம் பக்கமாக விவாதிக்க நமது ஏடுகளின் கொட்டை எழுத்துத் தலைப்புக்களுட் வாராவாரம் இடமொதுக்கப்பட்டுள்ள அளவு சேது சமுத்திரத்தின் அரசியல் பற்றி ஆராய ஏன் எல்லோரும் பின் நிற்கிறார்கள்?
மக்களுடைய அறியாமையையே ஆதாரமாகக் கொண்டுதான் மதவாத, தேசிய வாத அரசியல் முன்னெடுக்கப்படுகிறது. நமக்குள் கேடான தேசியவாத, மதவாத அரசியலைக் கண்டிக்க நமக்கு இயலும். நமக்குச் சாதகமாக அமைகிறபோது நமக்கு அதைக் கண்டிக்க இயலாது. நாம் இவ்வாறான அவலத்தினின்று விடுபட வேண்டும்.

சரி பிழைகள் பற்றி நமக்கு நேர்மையான பார்வை வேண்டும். நமது நம்பிக்கைகளை நாம் மீளவும் மீளவும் கேள்விக்குட்படுத்துவதன் மூலமும் நேர்மையாகவும் பகுத்தறிவு சார்ந்தும் சிந்திப்பதன் மூலமுமே நாமும் நமது சமூகமும் உய்வும் உயர்வும் அடைய இயலும். நம்மைப் பிணித்துள்ள அப்பட்டமான பொய்மை வலைகளை முதலில் நாம் அறுத்தெறிய வேண்டாமா?


மறுபக்கம்

கோகர்ணன்

தினக்குரல், நன்றி.